PDA

View Full Version : கவிதை பிறந்த நேரம்.



அமரன்
20-10-2008, 09:47 AM
நெடுநாட்களின் பின்
காகிதத்தை விரித்து
கவிதையெழுத
ஆயத்தமாகின்றேன்.

உலகை வாசித்து
இதயச்சுவரில் வரைந்து வைத்த
ஓவியங்களை கரைத்தாயிற்று.
பேனாவிலும் நிரப்பியாயிற்று.

காகிதத்தில் வழியவிட முனைய
திரண்டு வந்து
முட்டுக்கட்டை போடுகின்றன
புத்தகப் பரத்தைகளை
புரட்டிப்பார்த்த நேரங்கள்.

சமரும் சமரசமுமாய்
அவைகளை சமாளித்து
விட்டதை தொடர முயல
பின்னால் வந்து
கழுத்தில் தொங்குகின்றன
முன் பிறந்த என் கவிக்குழந்தைகள்.

மீண்டும் மீண்டும்
முயன்றும் முடியாத போதிலும்
கவிஞனென இறுமாற
எனக்காக தலைகுனியும் பேனா
சிந்துகிற துளிகளால்
உயிர்பெறுகிறது காகிதம்.

shibly591
20-10-2008, 09:51 AM
மீண்டும் மீண்டும்
முயன்றும் முடியாத போதிலும்
கவிஞனென இறுமாற
எனக்காக தலைகுனியும் பேனா
சிந்துகிற துளிகளால்
உயிர்பெறுகிறது காகிதம்.

ரசிக்கும்படியான இயல்பான வரிகள்..

நிரம்பவே ரசிக்க வைத்தமைக்கு பாராட்டுக்கள் அமரன் அவர்களே..

தொடருங்கள் இன்னும் இதுபோல ஏராளமாய்..

வாழ்த்துக்கள்

பிச்சி
20-10-2008, 10:32 AM
கவிதைகள் என்பது உயிரோடு உணர்வை உருவியெடுப்பதாகும். அந்த பாதகத்தை நீங்கள் நன்றாக செய்திருக்கிறீர்கள் அண்ணா

இளசு
20-10-2008, 04:23 PM
சொல்புதிது தேடிய பாரதிக்கும் தோன்றியிருக்கும் இப்படி எல்லாம்..

கவிஞர்களின் பிரத்தியேக வலி..

அழகாய்ப் பதிவு செய்த அமரனுக்கு வாழ்த்துகள்..

பென்ஸ்
20-10-2008, 08:50 PM
"பிரசவ வலி "....
மன்றத்தில் யாரோ கவிதை எழுத வரும் நேரங்களில் வார்த்தை வராமல் இருப்பதை சொல்லும் வார்த்தை...
இந்த வலிதான் எத்தனை அழகு...
ஒரே வலிதான், அனுபவித்த விதம் தனி, கண்ட பார்வை தனி...

கவி இன்னும் இன்னும் வலியில் துடிக்க வாழ்த்தும் ரசிகன்...

பென்ஸ்
20-10-2008, 08:51 PM
கவிதைகள் என்பது உயிரோடு உணர்வை உருவியெடுப்பதாகும். அந்த பாதகத்தை நீங்கள் நன்றாக செய்திருக்கிறீர்கள் அண்ணா
வாம்மா குழந்தை...
மன்றத்தில் உன் வரவு குறைந்துள்ளதே....

ஷீ-நிசி
21-10-2008, 01:14 AM
கவிதை பிறந்த நேரம், சொன்ன விதம் அழகு...

ஆனால் கடினப்பட்டு பெற்றெடுக்கும் கவிதைகளில் ஜீவன் இருப்பதில்லை..

வாழ்த்துக்கள் அமரன்!

அனாமிகா
21-10-2008, 03:29 AM
மின்சாரம் இல்லாத மழைக்கால முன்னிரவு
தாளுக்கோ கோளுக்கோ துளியும் வேலையில்லை,
சுகமாகவே பிரவிக்கிறது கவிதை,
வெகுநாள் கழித்து மழை பட்டுத் தெறிக்கும்
தாழ்வாரத்து குரோட்டன் இலையின் மடியில்...
இது நல்ல நேரமா?
யாரைக் கேட்பது?
பிறந்த கவிதை சிணுங்கி அழுகிறது...
அம்மாவின் அறியாமையை நினைத்து!!!

பென்ஸ்
21-10-2008, 03:38 AM
மின்சாரம் இல்லாத மழைக்கால முன்னிரவு
தாளுக்கோ கோளுக்கோ துளியும் வேலையில்லை,
சுகமாகவே பிரவிக்கிறது கவிதை,
வெகுநாள் கழித்து மழை பட்டுத் தெறிக்கும்
தாழ்வாரத்து குரோட்டன் இலையின் மடியில்...
இது நல்ல நேரமா?
யாரைக் கேட்பது?
பிறந்த கவிதை சிணுங்கி அழுகிறது...
அம்மாவின் அறியாமையை நினைத்து!!!


நல்வரவு அனாமிகா....

முதல் பதிவே முத்தாய்....
உங்கள் கவிதை மழையில் எங்களை நனைத்திடுங்கள்...

அப்படியே உங்களை பற்றி ஒரு அறிமுகம் தரலாமே...

பாபு
21-10-2008, 07:27 AM
அருமையான வரிகள். கவிதை எழுதுவது சுலபம் அல்ல. கடைசி வரிகள் மிகவும் அருமை.

வாழ்த்துக்கள் !!

அமரன்
21-10-2008, 08:00 AM
"ஒவ்வொரு கணத்திலும் கவிதை கொட்டி இருக்கு. ஒவ்வொரு கணமும் கவிதை சொட்டி இருக்கு".
கணங்களை நான் கவனிப்பது குறைவு. அதனால் என்னிடம் ஜீவனில்லை. இது எனக்காக எழுதிய கவிதை. கவிதையில்...???

செதுக்கிய அனைத்து உள்ளங்களும் நன்றி.

poornima
21-10-2008, 09:53 AM
எப்போது பிறந்திருக்க கூடும்
ஒரு நல்ல கவிதை..?

நினைத்த மாத்திரத்திலா
தாள் தேடிய தருணத்திலா
பேனா திறந்த பொழுதுகளிலா
இப்படியேனும் செதுக்கப்படும்
கவிதைகளை
எழுதும்போது
அப்படியே எழுதுகிறோமா..

நினைக்கும் கவிதைக்கும்
பிரசவிக்கும் கவிதைக்கும்
வித்தியாசங்கள் இருப்பதாலேயே
பிரகாசிக்க முடிவதில்லை
சில கவிதைகள்..

//எனக்காக தலைகுனியும் பேனா
சிந்துகிற துளிகளால்
உயிர்பெறுகிறது காகிதம்.
//

பேனா தலைகுனிவது
எண்ணங்கள் தலைநிமிர்வதற்கே

பாராட்டுகள் அமர்..