PDA

View Full Version : திரு. வரதராசன் அவர்களின் பேட்டி - நிறைவு.பாரதி
19-10-2008, 08:22 PM
அன்பு நண்பர்களே,

சில மாதங்களுக்கு முன்பு நமது மன்றத்தில் திரு. ராஜா அவர்கள் கொடுத்த தகவல் இது.முழுத்தகவலுக்கு கீழே உள்ள சுட்டியைத் தட்டுக:
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15233

அதில் உள்ள செய்தியை மிகச்சுருக்கமாக பார்த்தால் "ஒரு யூனிட் மின்சாரத்தில் இருந்து பத்து யூனிட் மின்சாரம் தயார் செய்ய முடியும்" என திரு. வரதராஜன் அவர்கள் அதில் கூறி இருந்தார்.

அதன் தொடர்ச்சியாகவும், சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் பொருட்டும் திரு. வரதராஜன் அவர்களை இரு தினங்களுக்கு முன்பாக சந்தித்தேன். நமது மன்றத்திற்காக ஒரு நேர்காணலை அவருடன் எடுத்தேன். அந்த பேட்டியை தட்டச்சி வருகிறேன். ஓரிரு தினங்களில் முழுமை செய்ய முயற்சி செய்கிறேன். இந்த நேர்காணல் அசைபடமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. வாய்ப்பு கிடைக்குமெனில், சரியான முறையில் இணையத்தில் பதிவேற்ற முடியுமெனில் அதையும் செய்ய முயற்சிப்பேன்.

--------------------------------------------------------------
திரு . வரதராஜன் அவர்களுடன் ஒரு நேர்காணல்:

http://http://www.tamilmantram.com/vb/album.php?albumid=23&pictureid=63

கேள்வி: ஐயா.. முதல்ல உங்களைப்பத்தி சொல்லுங்க - நீங்க பிறந்தது, வளர்ந்தது, படிச்சது.. இதப்பத்தி சொல்லுங்க.

வரதராஜன்: நான் தேனியில்தான் பிறந்தேன். படிச்சது கான்வெண்ட் பள்ளிக்கூடத்தில். குடும்பம் எல்லோரும் இங்கேதான் இருக்காங்க. எனக்கு பூர்வீகம்னு கேட்டா தேனின்னுதான் சொல்வேன்.மூதாதையர் எல்லாம் ராமநாதபுரத்துப்பக்கம். எங்க பாட்டனாரப் பெத்தவங்க காலத்திலேயே நாங்க தேனிக்கு வந்துட்டோம். எங்களுக்கு பூர்வீகத்தொழில்னா பரம்பரையா பிரிண்டிங் தொழில்.

நான் சிறுவயசிலேயே தாய்தகப்பனை இழந்துட்டதால படிக்க முடியாம போச்சு. அதனால உறவினர்களோட உதவியால நான் படிக்க விரும்பல. மதுரைக்கு போயி ஆட்டோமொபைல் தொழிலுக்கு போயி சேர்ந்துட்டேன். அங்கேயே ஒரு பதினாறு வருசம் இருந்தேன். நெறய தொழில கத்துக்கணும் - கல்வி வாய்ப்பத்தான் இழந்துட்டோம்னு அனுபவ ரீதியா நெறய தொழிலக் கத்துகிட்டேன். இங்க வந்து 41 வருசமாகுது. மாடர்ன் டைப் சல்லடை பண்றோம். அதுக்கு ஊடால மக்களுக்குத் தேவையான மார்கெட்டில இல்லாத சில மெஷினரிகளை நாங்களே டிசைன் பண்ணி செய்றோம், உதவி செய்யணும்கிற மனப்பான்மைதான்.

கேள்வி: உதாரணத்திற்கு அப்படி செய்த எந்திரங்கள் ஏதாவது சொல்ல முடியுமா?

பதில்:பருத்தி அரைக்கிற ஜின்னிங் மெஷின் புதுமையா செஞ்சோம். அதே மாதிரி நூல் நூக்கிற ஸ்பின்னிங் மெஷின் அதப் பண்ணோம். எனக்கு வசதி வாய்ப்பு இல்லாததால உதவுறதுக்கு ஆளுக இல்ல. ரெண்டாவது, நாங்க கவர்ன்மெண்ட்ட நாடி உதவி பெறுறதில்ல. ஏன்னா படிக்காதவங்கிற போது கொஞ்சம் அசட்டை பண்ணுறாங்க. அதனால கொஞ்ச மனவருத்தம்.

அதனால என்னால முடிஞ்ச வரைக்கும் நானா சம்பாரிக்க, சில சொத்துகளை சம்பாரிச்சத வித்து இத புதுமையா பண்ணுவோம் அப்படீன்னு, மின்சாரங்கிறது நாட்டுக்குத்தேவையானதுதான் அப்படீன்னுட்டு பண்ணுணோம்.

இது உலக அளவுல, மைக்கேல் பாரடே கண்டுபிடிச்ச விதி ; அதுதான் ஏ.ஸி. மின்சாரம். அதுக்கு பிரைமூவர் வந்து கூட. இதுவரைக்கும் அப்படித்தான் நடந்துகிட்டு இருக்கு. ஒரு மடங்கு சக்திய வச்சு இன்னோரு மடங்கு சக்தி எடுக்க முடியாது. அத மாற்றி அமைக்கணும் அப்படீங்கிறதுக்காக குறஞ்ச சக்திய வச்சு கூடுதல் சக்தி எடுக்கணும்; அதாவது எலக்ட்ரிக்கல் எனர்ஜி வேணும் அப்படீன்னு சொல்லி எண்பத்து ஆறில் இருந்து ஆராய்ஞ்சு இது வரைக்கும் ஒன்பது மெஷின் செஞ்சிருக்கோம். பல மாடல்கள்ல பண்ணோம். கொஞ்சம் கொஞ்சமாக சக்தியக்கூட்டி, இது இப்ப ஒன்பதாவது மாடல். பத்தாவது மாடல் - அதுதான் பூர்த்தியாகுது. அத டிசைன் பண்ணனும்.

கேள்வி: அப்படீன்னா இதுக்கு முன்னாடி செய்ததெல்லாம்...?

பதில்: இதுக்கு முன்னாடி செஞ்சதெல்லாம் மின்சாரம்னா என்ன.. அதனுடைய ஆற்றல் என்ன அப்படீங்கிறத பாக்கிறதுக்காக பல ஆல்ட்டர்னேட்டர்களை (ஜெனரேட்டர்) செஞ்சிருக்கேன் - கம்பெனி ஆல்ட்டர்னேடர்களை மாத்திரம் நம்பி இல்லாம அப்படியே செஞ்சு, கொஞ்சம் கொஞ்சமா எனர்ஜியக்கூட்டி, இது ஒன்பதாவது மாடலா இருக்கு. இத இந்த இ.பி (எலக்ட்ரிசிட்டி போர்டு - மின்வாரியம்) அதிகாரிக வந்து பார்த்துட்டு ஒண்ணுக்கு பத்து அப்படீங்கிறது ரொம்ப பெரிய எனர்ஜி; அதெல்லாம் அவ்வளவு சிரமம் எல்லாம் படாதீங்க. ஒண்ணுக்கு மூணுன்னாலே ஏராளமான லாபம் அப்டீன்னு சொல்லி அதைக்குறைங்க அப்படீன்னாங்க.

இப்ப அதைக்குறைச்சிருக்கோம். குறைச்சிட்டு,ஒண்ணுக்கு மூணு ஆக்கிட்டோம். அஞ்சு ஆம்பியர் பிரைமூவர் எடுக்குதுன்னா, பதினஞ்சு ஆம்பியர் அவுட்புட் கிடைக்குது. அதை அந்த அளவுக்கு பண்ணியிருக்கோம். அத அப்படியே மல்ட்டிபிளை பண்ணிகிட்டே போகலாம்.

கேள்வி: உங்கள் கணிப்பில் அப்படி செய்வது என்றால் அதிக பட்சமாக எந்த அளவு செய்ய முடியும்?

பதில்: எவ்வளவு வேணாலும் அதிகமாக்கிகிட்டே போகலாம். ஏன்னு கேட்டா, ஹைட்ராலிக் மெஷின் பல வகையான, பல நூத்துக்கணக்கான மெஷின் பல வேலைகளுக்கு தயார் பண்ணி இருக்கேன். அதுல ஒரு கிலோவுக்கு நூறு கிலோ சமம்னு ஆக்கலாம். அதே ஒரு கிலோ எடைய ஆயிரம் கிலோ எடைக்கும் சமமாக்கலாம். எந்திரலாபங்களை கூட்டிகிட்டே போய்கிட்டிருக்கலாம். ஆனா அந்த வேகம் மட்டும் குறையும்.

கேள்வி: வேகம்னு நீங்க சொல்றது எதை?

பதில்: வேகம்னா.... இப்ப ஒரு கிலோ வைக்கிறோம் ஒரு சிலிண்டர்லன்னா, அது ஒரு பத்து மில்லி மீட்டர் தூக்குது, ஒரு ரேம்ம அப்படீன்னா... அதே இத நூறு கிலோ சமமாக்குனோம்னா அது கொஞ்சம் குறையும்; அந்த உயரம் குறையும். அதுதான் வேறுபாடு. ஆக இயந்திரவியல்ல எவ்வளவு வேணும்னாலும் கூட்டலாம். அதுக்கு வாய்ப்புக்கள் ரொம்ப ரொம்ப இருக்கு. அத அனுபவரீதியா படிச்சுகிட்டேன். ஆனா அத, படிப்பறிவு இல்லாததால மத்தவங்களுக்கு புரியுற மாதிரி எடுத்து சொல்ல முடியல.

இனி உதவுறதுக்கு வந்து எலக்ட்ரிசிட்டி போர்டு அதிகாரிகள் எல்லாம் வந்து சொல்றாங்க, நாங்க வேணும்னா உதவுறோம், நீங்க வேணும்னா பண்ணுங்க அப்டீன்னு. ஆனா நான் என்ன நினைக்கிறேன்னா... நம்மளோ புதுசா செய்யுறோம். ஒரு சிறு வேறுபாடு வந்தாக் கூட, அவச்சொல் வந்திரும் அப்டீங்கிறதுக்காக நான் அந்த உதவிய எதிர்பார்க்கல இதுவரைக்கும். யாரோட உதவியயும் எதிர்பார்க்கல.

அப்புறம் சில பேரு வராங்க.... அது என்ன புதுமையா இருக்கு! சமமாவே கொண்டு வர முடியாதே? ஒரு குதிரைசக்தி பிரைமூவர் போட்டு, ஒரு குதிரை சக்தி மின்சாரமே உருவாக்க முடியாது. அது இயற்கைக்கு விரோதமானது அப்டீன்னு சொல்றாங்க படிச்சவங்க.

கேள்வி: ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது அப்டீங்கிறதப் பத்தி?

பதில்: அதாவது அணுவை ஆக்கவும் முடியாது, அழிக்கவும் முடியாது அப்டீங்கிறது விதி. ஆற்றலை ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது அப்டீங்கிறதும் விதி.

ஆனா நான் என்ன சொல்றேன் உங்களுக்கு, ஒரு வகை ஆற்றலை இன்னோரு வகை ஆற்றலா மாற்றலாம். அதுவும் விதிதான். அத சிலரு ஏத்துக்க மாட்டேங்கிறாங்க.

அதனால நான் என்னவோ பொய்யயே சொல்றேனோ அப்டீன்னு நினச்சு, கொஞ்சம் இதா பேசுறாங்க. அப்ப எனக்கு கொஞ்சம் பயம் இருக்கு, ஒரு தொழிலுக்கு வினை வச்சிரக்கூடாது அப்டீன்னு.
இத காமிச்சு, வித்தக்காரன் மாதிரி காமிச்சு, உதவின்னு வந்துட்டா, அவங்களோட பேச்சுக்கு ஆளாகணும். அது வேணாம். ஏன்னா எனக்குன்னு ஒரு கொள்கை இருக்கு. உழைக்கணும் - பிழைக்கணும். நான் லாட்டரி டிக்கெட் வாங்குறவனுமில்ல; கீழ கெடந்தா எடுக்குறவனுமில்ல. ஆண்டவனேன்னு, விதிய இல்லாத ஆண்டவன் மேலே போடுறதும் கிடையாது.

ஏன்னா மனுசன் என்ன என்னத்தயோ உருவாக்குனானோ அது மாதிரி ஆண்டவனையும் அவன் தான் உருவாக்குனான். அதனால இல்லாத ஒண்ண, எனக்குத் தெரியத ஒண்ண நான் வழிபடுறதும் இல்ல. .... நான் சொல்றதுல சிலத நீங்க சென்ஸார் பண்ணனும்னா பண்ணிக்கோங்க.

அது மாதிரி ஒரு வகை எனர்ஜிய இன்னோரு வகை எனர்ஜியா மாத்த முடியும்; அந்த எனர்ஜிய கூட்டவும் முடியும். நான் சொல்றது அனுபவரீதியானது. யார் சொல்லியும் நான் செய்யல. அனுபவ ரீதியா கண்டுபிடிச்சிருக்கேன்.

அத எடுத்து சிலருக்கு புரிய வைக்க முடியல. பலதை எடுத்துச்சொன்ன பிறகு, அதிகாரிகள், சில படிச்ச எஞ்சீனியர்கள் ஒப்புக்கொள்றாங்க.
சமீபத்துல இந்தப் பத்திரிக்கைல வெளியிட்ட பிறகு மெட்ராஸ் போயிருந்தேன். ஒரு பத்துப்பதினோரு எஞ்சீனியர்களை சந்திச்சேன்; என்னய வந்து பாக்க வந்தாங்க. எல்லோரும் வாக்குவாதம் பண்ணுனாங்க - இது முடியவே முடியாது அப்டீன்னு. அப்ப நான் சொன்னேன், எனக்கு விவரம் தெரிஞ்ச காலத்துல இருந்து நான் பொய் பேசுறதில்லீங்க. எனக்குன்னு சில கொள்கைகள் இருக்கு. அடுத்தவங்கள ஏமாத்தி சாப்பிடுறது... அது எனக்குப்பிடிக்கிறதில்ல ; எதையும் நான் மிகைப்படுத்தி சொல்றதுமில்ல. எனக்குத்தெரிஞ்சத மாத்திரம்தான் சொல்வேனே ஒழிய எதையும் மிகைப்படுத்திச் சொல்றதில்ல, அந்தப்பழக்கம் எனக்கில்ல.

அதனால என்ன நீங்க நம்பலேன்னா, இத நீங்க ஆராய்ந்து பார்த்துக்கலாம். செஞ்ச பொருள ஆராய்ந்து பார்த்துக்கலாம் அப்டீன்னு சொன்னேன்.

ஏன்னா மொழி தெரியாதவன் எப்படி ஊமையோ அது மாதிரி படிப்பறிவில்லாதவனும் ஊமைதான். ஏன்னா விளக்கிச் சொல்லமுடியாதில்லீங்களா...? அது மாதிரி நான் கண்டுபிடிச்சத சரியான முறையில சொல்லமுடியலயேன்னு வேதனை இருக்கு.
அப்ப என்னய மாதிரி ஆளு என்ன செய்ய வேண்டியிருக்கு; புரூப் பண்ண வேண்டியிருக்கு.

அப்ப நான் செஞ்சு காண்பிக்கிறேன், என்னால விளக்க முடியல அப்படீன்னேன். சில ஆளுங்க புரிஞ்சிக்கிறாங்க, சரி.. இருக்கலாம் அப்டீன்னு. சிலர் வந்து அவங்களும் குழம்பி என்னயும் குழப்புறாங்க. அப்டி இருக்கும் போது நான் யாரோட உதவியையும் நாடிப்போகவும் முடியல.

இத பேடண்ட் ரெஜிஸ்ட்ரேஷன் பண்ணனும் அப்டீன்னு சிலர நாடிப்போகும் போது, ரொம்ப வேண்டியவங்களே அந்த ஃபார்முலா அறியணும் அப்டீன்னுதான் விரும்புறாங்க. இது பெரிய ஃபார்முலா எல்லாம் ஒண்ணும் இல்ல. ரொம்ப ரொம்ப சின்னது, ரொம்ப சிம்பிளா பண்ணியிருக்கேன். அப்டீங்கிற போது, ஃப்பூ இவ்வளவுதானா...அப்டீங்கிற மாதிரி போயிரும். அது மூடி இருக்கிற வரைக்கும்தான் ப்ராஜெக்ட்.

இத செஞ்சதோட நோக்கம் என்னன்னா, பல ஆயிரம் கோடி மெஷின்கள் வேணும் இந்த உலகத்துக்கு; ஒரு ஆளோ ஒரு ஸ்தாபனமோ இத செஞ்சி வெளிய வச்சி எல்லோரும் பயன்படுத்த முடியாது. அப்ப அந்த ஃபார்முலாவ வெளியிட்டோம்னா, அவங்கவங்க தங்களோட தேவைகளுக்கு, தொழிற்சாலைகளுக்கு, வீடுகளுக்கு அவங்களே மின்சாரம் தயாரிச்சுக்கலாம் எளிய முறையில. இந்த கவர்ன்மெண்ட்ட போட்டு தொந்தரவு பண்ணிகிட்டு இருக்கணுகிற அவசியம் இல்ல. அந்த நோக்கத்தோடு இத செஞ்சிருக்கோம்.
இன்னும் பலத செய்யலாம். எனக்கு, உதவுறதுக்கு, பொருளதவி பண்றதுக்கு ஆளு இல்ல. ஒரு உதாரணத்துக்கு ஆல்ட்டர்னேட்டர் புதுமையா வேணும் அப்டீன்னு வையுங்களேன், மார்க்கெட்ல நான் போயி வாங்க முடியாத நிலமை இருக்குன்னா , நான் என்ன செய்வேன்னா அத கொஞ்சம் கொஞ்சமா உருவாக்குறது. ரொம்ப உழைப்பேன். அளவில்லாம உழைச்சேன். அப்படி உருவாக்குறது, அத நானு தெளிவு பண்ணிகிட்டு, சரிதான் ,இது சரிதான் அப்டீன்னு தெளிவு பண்ணிகிட்டு அழிச்சிற்றது. அழிச்சிட்டு அடுத்தது செய்யுறது.
அப்படி இது வரைக்கும் செஞ்சது ஒன்பது மெஷின். இனி ஒரு மெஷின் செய்யணும்; பத்தாவது மெஷின் - அதுதான் கடைசி. அப்புறம் ரெஜிஸ்ட்ரேஷனுக்குப் போக வேண்டியதுதான். அந்த மெஷின இன்னும் கொஞ்சம் மூடி மறைச்சு செய்யணும்னு நினைக்கிறேன்; இன்னும் கொஞ்சம் எனர்ஜியக்கூட்டணும்னு நினைக்கிறேன்.

http://http://www.tamilmantram.com/vb/album.php?albumid=23&pictureid=64

கேள்வி: மூடி மறைச்சு செய்யணும்னு நீங்க சொல்றதுக்கு என்ன காரணம்?

பதில்: என்னான்னா, பேடண்ட் ரெஜிஸ்ட்ரேஷன் ஆகுற வரைக்கும். என்னோட நோக்கம், அதுக்குப்பின்னாடி எல்லாரும் அதை செய்யணும்கிறதுதானே...

கேள்வி: இந்த ஒன்பதாவது மெஷின நீங்க எப்படி வடிவமைச்சிருக்கீங்க?

பதில்: நீங்களே பார்க்கலாமே அதை..! இப்ப கரண்டு இல்ல..!! இருந்தா ஓட்டிக்காண்பிக்கலாம்.இது ஒரு மூணு ஹெச்.பி மோட்டார். ஏறத்தாழ ஒரு நாலரை ஆம்பியர்; ஒரு ரெண்டரை யூனிட் மின்சாரம் செல்வாகும் ஒரு மணி நேரத்துக்கு. இந்த மோட்டார் அந்த கியர்பாக்ஸ சுத்துது. கியர்பாக்ஸ்ல இருந்து ஆல்ட்டர்னேட்டருக்கு கனெக்ஷன் இருக்கு. இது 10 கே.வி.ஏ (KVA) ஆல்ட்டர்னேட்டர். கிட்டத்தட்ட 10 கே.வி.ஏ..ன்னாலும் அதன் திறன் - எஃபீசியன்ஸி எட்டு ஹெச்.பி வரைக்கும் ஓடும் - இதுல மின்சாரம் எடுத்தா.
மூணு ஹெச்.பி பிரைமூவருக்கு (மோட்டாருக்கு) கொடுக்குறோம்; அது மூல சக்தி. எட்டு ஹெச்.பிக்கு, எம்-முக்கா ஆறாயிரம் வாட்ஸ். கிட்டத்தட்ட ஆறு யூனிட் மின்சாரம் இதுல உருவாகும்னு வைங்களேன். கிட்டத்தட்ட பதினாலு ஆம்பியர் பதினஞ்சு அம்பியர் மின்சாரம் கிடைக்கும். மூணு ஃபேஸ், 440 வோல்ட். அத எடுத்து ஒரு 10 ஹெச்.பி இண்டக்சன் மோட்டார் இழுக்குற மாதிரி பண்ணியிருக்கோம்.இப்ப இந்த மோட்டார லோடு கொடுத்துப்பாக்குறதுக்கு எங்ககிட்ட எந்த மெசினும் இல்ல.

கேள்வி: அப்ப லோடு கொடுக்காம வெறும் மோட்டார மாத்திரம் ஓட்டிப்பார்த்தீங்களா?

பதில்: இத அழுத்தம் கொடுத்தோம்னு சொன்னா, ஆம்பியர் மீட்டர், வோல்ட் மீட்டர் நாங்க வச்சிருக்கோம். அப்ப வோல்ட்டேஜ் (voltage) நிலையா இருக்கு, ஃபிரிக்குவென்ஸி (frequency) நிலையா இருக்கு.

ஆம்பியர் மீட்டரும் வச்சிருக்கோம். அதுல 10 ஆம்பியர் வரைக்கும் லோடு கொடுத்து பார்க்க முடியும். மோட்டார் மேக்ஸிமம் 15ஆம்ப்ஸ் எடுக்கும் அப்டீங்கிறது என் கணிப்பு.

ஒரு நாலு நாளக்கி முந்தி ஒரு இன்ஞீனியரிங் காலேஜில இருந்து ஒரு புரபசரு, அதிகாரிக எல்லாம் வந்தாங்க. வந்து பார்த்துட்டு, நீங்க ஓட்டிக்காண்பிக்கிறீங்க. ஏதாவது ஒரு மெஷின்ல ஓட்டிக் காண்பிங்க; நாங்க நம்புறோம் அப்டீன்னாங்க. யாரும் நம்பி எனக்கொன்னும் ஆகப்போறதில்ல. ஆனாலும் நான் நம்புறேன்.நீங்க ஓட்டிக்காண்பிங்க அப்டீன்னு சொல்லிட்டுப்போயிருக்காங்க. இதுக்கு ஏதாவது வழி பண்ணனும். இத வழி பண்ணுவமா.. இல்லை பத்தாவது மெஷின முடிச்சிருவோமா... அப்டீங்கிறதில இருக்கேன். அதுதான் கடைசி மெஷின்.

http://http://www.tamilmantram.com/vb/album.php?albumid=23&pictureid=61

கேள்வி: கியர்பாக்ஸுக்கும் ஆல்ட்டர்னேட்டருக்கும் எப்படி தொடர்பு ஏற்படுத்தி இருக்கீங்க?

பதில்: அது ஜாயிண்ட் போட்டிருக்கோம்; மோட்டார்ல இருக்குற ஜாயிண்ட் மாதிரி. இது என்ன வேகத்துல ஓடுதோ அதப்பொறுத்துதான் பிரிக்குவென்ஸி. ஆல்ட்டர்னேட்டர் 1500 ஆர்.பி.எம் போகும். இதுல ஸ்பீடு குறஞ்சா எந்த மோட்டார்ல நாம மின்சாரத்த கொடுக்குறமோ அதனோட ஸ்பீடும் குறையும்.

ஆனா மின்சாரத்துக்காக மாத்திரம் இத நாங்க பண்ணல. டீசல், பெட்ரோம் இல்லாம வெகிக்கிள்ஸ் ஓட்டணும் அப்டீங்கிறது எங்களோட நோக்கம். இந்த எனர்ஜிய உபயோகப்படுத்தி அப்படி ஓட்டலாம்; அதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கு.

ஆனா வேணுங்கிற சாதனங்கள வாங்கி, உடனே செய்யுறதுக்கு எங்களால முடியல. சம்பாரிச்சு சம்பாரிச்சு சொத்துக்கள வித்து, இப்படியே செஞ்சிகிட்டு வர்றோம்.

கேள்வி: இத செய்யுறதுக்கு உங்களுக்கு எவ்வளவு செலவு ஆகி இருக்குங்கய்யா?

பதில்: கிட்டத்தட்ட எண்பத்திஆறில் இருந்து செஞ்சிட்டு வர்றேன். கோடிக்கணக்கில் செல்வாகி இருக்கும். ஏன்னா நிறைய சொத்துக்களை வித்துருக்கேன். இருந்தத எல்லாம் வித்துட்டு... இப்ப என்ன இருக்கு? இந்த ஃபேக்டரி மாத்திரம்தான் இருக்கு, இதுவும் கடனில் இருக்கு. நிறைய கடன் வாங்கிப்போட்டு இத செஞ்சிருக்கோம்.

கேள்வி: குறிப்பா இந்த மெஷின மாத்திரம் இப்ப செய்யுறதுன்னா எவ்வளவு செலவாகும்னு நினைக்கிறீங்க?

பதில்: ஒரு மூணு லட்ச ரூபா இருந்தா செஞ்சிரலாம். இனிமே செய்திரலாம் - ஏன்னா இத எல்லாம் கண்டுபிடிச்சிட்டோம்; இல்லீங்களா?இனிமே செய்யுறது எளிது.

கேள்வி: இப்ப மூணு ஹெச்.பிக்கு பதிலா, கூடுதல் ஹெச்.பி இருக்குற மோட்டார உபயோகப்படுத்தினா கூடுதலான மின்சாரம் எடுக்க முடியுமா?

பதில்:ஆமா.. இப்ப இதுல மூணு கொடுத்து பத்து எடுக்கறோம். ஏன் அஞ்சே எடுக்கறோம்னு வைங்க. அப்படீன்னா 2000 வாட்ஸ் பிரைமூவர், 5000 வாட்ஸ் அவுட்புட் எடுக்கறோம்னு வச்சுக்கோங்க, அந்த 5000 வாட்ஸ்க்கு ஒரு மோட்டாரப் போட்டு அதை 15000 வாட்ஸ் ஆக்கிறலாமுல்ல. மல்ட்டிப்பிளை பண்ணிகிட்டே போகலாம்.

கேள்வி: அப்ப நீங்க சொல்றதப் பார்த்தா ஒரு யூனிட் மின்சாரத்த வச்சுகிட்டு, கிட்டத்தட்ட உலகத்துக்கே மின்சாரம் தரமுடியும் அப்டீங்கிற மாதிரியில்ல ஆகுது?

பதில்: ஆமாங்க. ஒரு 1000 கே.வி.ஏ அளவுக்குப் போயிட்டோமுண்ணா ஒரு குக்கிராமத்துக்கு, ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தள்ளி இருந்து வருது இல்லீங்களா... தூத்துக்குடி... அப்புறம்... கன்னியாகுமரி... இந்த காற்றாலை மின்நிலையங்கள் இருக்குன்னா, அதை அங்கே இருந்து கொண்டு வந்து, பல சேதாரங்களாகி, அதைக்கொண்டு வந்து ஊருக்குள்ள ட்ரான்ஸ்பார்மர்கள் எல்லாத்தையும் நிறுவி, நிறைய கண்டக்டர்கள் பயன்படுத்தி, ஆளுகளப்போட்டு செஞ்சி வரும் போது செலவீனங்கள் கூடுது. இந்த பார்முலாப்படி அங்கங்க கிராமங்கள்ல எத்தனை ஆயிரம் கே.வி.ஏ வேணுமோ அதப் பண்ணிக்கலாம்.

http://http://www.tamilmantram.com/vb/album.php?albumid=23&pictureid=60

கேள்வி: வீடுகளில் உபயோகிக்கிற மாதிரி செய்தா இன்னும் எளிதா இருக்குமே?

பதில்: செய்யலாமே.. இப்ப வீட்ல 200 வாட்ஸ் மின்சாரத்தை வச்சுகிட்டு கிட்டத்தட்ட 1000 வாட்ஸ் மின்சாரம் தயார் பண்ணிடலாம். அதேது 400 வாட்ஸ் மின்சாரத்தை வச்சுகிட்டு 2000 வாட்ஸ் மின்சாரம் எடுக்கலாம். டி.வி, ஃபிரிட்ஜ், ஏன் எலக்ட்ரிக்கல் அடுப்பு கூட வச்சுக்கலாம். கேஸ் வேண்டியதில்ல. சரி... இப்ப மின்சாரம் இல்லன்னு வச்சுக்கோங்க.. சாதாரண 12 வோல்ட்ஸ் பேட்டரி வச்சு, இந்த இன்வர்டர்..ன்னு இருக்கு பாருங்க - அத வச்சு உற்பத்தி பண்ணிக்கலாம். பேட்டரிய சார்ஜ் போட்டுக்கலாம். அது சார்ஜ் ஆகிகிட்டு இருக்கும். அதனால இதுல நிறைய இருக்கு.

கேள்வி: அந்த பேட்டரியக்கூட சூரியஒளியிலிருந்து தயாரிக்கிற மின்சாரத்த வச்சு சார்ஜ் பண்ணிக்கலாமே.. இல்லையா?

பதில்: ஆமா.. அப்படியும் செய்யலாம்.

கேள்வி: இந்த ஒன்பதாவது மெஷின் சம்பந்தமா மேற்கொண்டு ஏதாவது விளக்கணும்னு ஆசைப்படுறீங்களா?

பதில்: ஆமா. ஒரு ஏ.ஸி சொன்ன மாதிரி, ஒண்ணுக்குப் பத்துன்னா நிறைய சாதனங்கள், நிறைய செலவு பண்ண வேண்டியதிருக்கு. அதனால இத ஒண்ணுக்கு மூணு அப்படீங்கிற மாதிரி சுருக்கிட்டோம்.

கேள்வி: இப்படி சுருக்குறதால உற்பத்திச்செலவு குறையுமா..?

பதில்: ஆமாங்க. குறையும். அதுக்கப்புறம் அதுல இருந்தே மின்சாரத்தப் பெருக்கிகிட்டே போகலாம்.

கேள்வி: இந்தக்கண்டுபிடிப்பு ஏன் அதிகமான மக்கள்கிட்டே போய் சேரலைன்னு நீங்க நினைக்கிறீங்க?

பதில்: முதல்ல இது ஒரு அதிசயம். நம்ப மறுக்குறாங்க முதல்ல. அதெப்படி சாத்தியம்? சூரியன் அங்கிட்டு உதிச்சாலும் ஆகாதே? இப்ப ஒரு இஞ்சீனியரிங் காலேஜ்ல இருந்து ஒரு பிரின்ஸிபால் வர்றாரு. 'இந்த மோட்டரத் தொட்டா நின்னுக்கிரும் -ஓடாது. மின்சாரத்துல ஒண்ணுக்கு ஒண்ணே சமமில்ல' அப்டீங்கிறார். அவர் படிச்சவர்.

இத வச்சு அதப்பெருக்கி, அத வச்சு இதப்பெருக்கி மின்சாரம் செஞ்சிடறோம்னு ஒரு குருட்டுக்கணக்கு எல்லாம் இல்ல. மின்சாரம்னா என்னான்னு அடிப்படையிலேயே ஆராய்ஞ்சுதான் இறங்குறோம்.

ஆனா.. அதை வெளிப்படையா சொல்றதுக்கு முடியாம.... இந்த ஊமைன்னு வச்சுக்கோங்களேன்.

கேள்வி: என்ன செய்தா இது பிரபலமாகும்னு நீங்க நினைக்கிறீங்க? அரசாங்கத்த விடுங்க... ஒரு தனிப்பட்ட நபர் அல்லது ஒரு சிறிய தொழிலதிபர் உதாரணமா ஒரு லட்சம் அல்லது இரண்டு லட்சம் முதலீடு செய்ய தயாரா இருக்கிறாங்கன்னா.. அவங்க என்ன செய்தால் உங்களுக்கு உதவியா இருக்கும்னு நீங்க நினைக்கிறீங்க?

பதில்: என்னைப்பொறுத்த வரைக்கும் ஒரு லட்சம், இரண்டு லட்சம் அப்படீங்கிறது ரொம்ப கம்மியான தொகை. உதவுறதுக்கு சில பேரு வந்தாங்க. ஆனா ஒரு அவநம்பிக்கையோட வர்றாங்க. இது சாத்தியம்தானா..? வரதராஜன் பொய்புரட்டு சொல்றாரா...அப்டீன்னு நினச்சு வராங்க. அப்ப நமக்கே ஒரு பயம் இருக்கு. என்னான்னா.. அவங்க நம்பிக்கைப்படணும்னா நாம தயார்நிலையில இருக்கணும். சுவிட்சப் போட்டுக் காண்பிக்கணும். இந்தாப்பாத்துக்கோங்க....அப்டீன்னு காண்பிக்கணும்.

ஒரு பிரின்ஸிபால் சொல்றேன்னு சொன்னாங்க... இந்த ஆம்பியர் மீட்டர் இருக்கு... பாத்துக்கோங்க.. இது இன்புட்டு, இது அவுட்புட்டு... மின்சாரதக்கண் கொண்டும் பார்க்க முடியாது... தொட்டும் அறிய முடியாது.. இல்லீங்களா? மீட்டர்தான்... அதப்பாத்துக்கோங்க சார் அப்டீன்னு சொன்னா.... இல்ல.... நீங்க எனர்ஜிய புரூவ் பண்ணுங்க அப்படீங்கறார். வேற ஒரு எந்திரத்துல கொடுத்து பண்ணுங்க... அப்படீங்கறார். அப்ப வேற எந்திரத்துக்கு நான் எங்க போறது? அப்ப ஒண்ணு வேற எந்திரம் செய்யணும்... இல்லன்னா வாங்கணும்.

கேள்வி: நான் இப்படி நினைக்கிறேன்.. நீங்க தயார் செய்திருக்கிற மோட்டார வச்சி, ஒரு பெல்ட் போட்டோ... அல்லது ஏதாவது ஒரு முறையில ஒரு பம்ப், லேத், கம்பரெஸ்ஸர் .. இப்படி ஏதாவது ஒண்ணை ஓட்டிக்காண்பிக்கணும் அப்படீன்னு அவர் சொல்லி இருப்பார்னு நினைக்கிறேன்.

பதில்: இருக்கலாம். அப்படி இருக்கலாம். எங்ககிட்டே இருக்குற மெஷினுக.... நான் எந்த மெசின செஞ்சாலும் அதோட ஹார்ஸ்பவரக் குறைக்கிறது வழக்கம். நான் பத்து வயசுலே இருந்து தொழில் செய்யுறேன். பதினாலு வயசுலே இருந்து சொந்தத்தொழில் செய்யுறேன். நான் பல தொழில் படிச்சுருக்கேன் அனுபவரீதியா. அப்போ ஆட்டோமொபைல், ரேடியோ மெக்கானிஸம்... அப்படீன்னு எது அத்தியாவசியமோ அதப்பூரா படிச்சு வந்திருக்கேன். கொல்லு வேலையிலிருந்து அத்தனையும் படிச்சு வந்திருக்கேன். யாரோட உதவியையும் நான் நாடுனதில்ல. ஏன்னா நான் செஞ்சா... என் கைப்பட எதச் செஞ்சாலும் மட்டசுத்தமா செய்வேன்.

இவன் என்னோட ரெண்டாவது பையன்.. டை மேக்கர். புதுமையான டை எல்லாம் பண்ணுவான்.

ஆனாலும் அத சொல்லிக்கொடுக்குறது நானு; இத இப்படி செய்ப்பா... அவன் அப்படியே செஞ்சிடுறான். ஆனாலும் என்னோட கைவாகு, அனுபவங்கள்... அவனுக்கு வயசு கம்மி.. அதனால வர்றதில்ல. அது எனக்கே கொஞ்சம் திருப்திப்படுறதில்ல. நானே செய்யணும்னு நினைக்கிறவன். அப்படித்தான் ஒண்ணொண்ணும் செஞ்சிட்டு வர்றேன். ஹார்ஸ்பவர் குறைச்சே பலவகைப்பட்டமெஷின் பண்ணிருக்கோம்.

இங்கே நாங்க கனெக்ட் பண்ணி இருக்குற லோடே ஆறு ஹெச்.பி..தான். இப்ப இந்த மெஷின ஓட்டறதுக்கு மூணு எடுத்துட்டோம்னா... மீதி மூணுதான் மிச்சம். அப்ப மூணுக்கு மூணு அப்படீன்னுதானே காண்பிக்கணும்.. அதான் பிராப்ளம்.
இப்ப கனெக்டேட் லோடு கூட இருக்குன்னு வச்சுக்கோங்க... கூட இருந்தா காண்பிக்கலாம்.

நாங்க 96..ல ஒரு மெஷின் பண்ணுனோம். அது ஒரு ராட்சஸ மெஷின். என்னத்தவிர யாரும் அந்த மெஷின்கிட்ட போக மாட்டாங்க. அவ்வளவு பயம் இருக்கும். அந்த மெஷின் ஓடும்... அது ஒரு குதிரைசக்தி பிரைமூவர். அப்ப இங்க இருக்குற போர்டுல கனெக்சன் போடுணோம்னா... ஒரு அஞ்சு ஹெச்.பி எடுக்கலாம் அப்படீன்னு வச்சுக்கங்க. சின்ன சின்ன மோட்டார்கள் எல்லாம் இருக்கு லோடுக்கு. அப்ப... கனெக்சன் போடுப்பா அந்த மெஷினுக்கு அப்படீன்னு இவன்கிட்டதான் சொன்னேன். இந்தப்பையன் போட்டான்.
அந்த மெஷின நாங்க போட்டதே ஆர்.பி.எம் கம்மியா பண்ணோம். 750 ஆர்.பி.எம். இங்க இருக்குற மோட்டார்கள் எல்லாம் 4போல் மோட்டார். அப்ப 1500 ஆர்.பி.எம். கொடுத்து அந்த ஆல்ட்டர்னேட்டர சுத்தும் போது எல்லாம் அதே ஸ்பீடில் ஓடும்.

அந்த மெஷின 750 ஆர்.பி.எம் வச்சு சுத்தும் போது எல்லா மெஷினும் ஓடுது. ஆனா ஸ்பீடு... கம்மியா ஓடுது. அப்ப.... 14 ஆம்பியர் வரைக்கும் எடுக்க முடியும் அப்படீங்கறதால, வெல்டிங் மெஷினுக்கு கனெக்சன் போடலாம்ணு நினச்சேன். இந்த ஆர்.பி.எம் குறைக்கறதால, அனுபவ ரீதியா கரண்ட் கூடுதா அப்படீங்கிற தெரிஞ்சுக்கலாம்னு கனெக்சன் கொடுக்க சொன்னேன்.

இப்ப நான் சொல்றது முக்கியமானதுங்க. 96..ல இதப்பண்றோம். ஒரு குதிரைசக்தி மோட்டார்தான்.... அந்த மெஷின் ஓடுது.. ஆனா பூமியெல்லாம் அதிருது. இங்க இருக்குற மோட்டார் எல்லாம் ஓடுது. வெல்ட்டிங் மெசின்ல போட்டு மேக்ஸிமம் எத்தனை ஆம்பியர் எடுக்க முடியும்னு அனுபவ ரீதியா பாத்திருவோம்னு... முடிவு பண்ணோம்.

அப்படி போட்டு பார்த்ததில 10கேஜி(kg) ராடு எரிஞ்சிச்சு. 10கேஜி ராடு மெல்ட் ஆகுன்னு சொன்னா குறஞ்சது 15 ஆம்பியர் எடுக்கணும்... ஆச்சுங்களா? அப்ப 8கேஜி ராடு போடுன்னு சொன்னேன். போட்டுப்பாத்தா அதுவும் எரிஞ்சது. சரி... இது வேணாம்.. கட்டிடக்கம்பி... ஆறு எம்.எம்(mm - millimeter) ராடு இருக்கா... அதப்போட்டுப் பாரு...ன்னு சொல்லி அதையும் போட்டுப்பார்த்தோம். அதுவும் எரிஞ்சது. வழக்கமா வெல்டிங் ராட் உருகணும்னா ஃபிளக்ஸ் (flux) வேணும்.. ஆனா இப்ப ஃபிளக்ஸே இல்லாம வெறும் கம்பியப் போட்டு எரிக்கிறேன்... அதுவும் எரியுது..! அப்ப ஆல்ட்டர்னேட்டர்ல பரபர..னு வைபரேஷன்(vibration). அது கெட்டுப்போனாலும் பரவாயில்ல..ன்னு, கட்டிடக்கம்பி 10எம்.எம் கட்டிட முறுக்குக்கம்பி அத சப்பைதட்டி ஹோல்டரில் மாட்டி அதை எரிக்கறோம். அதுவும் எரியுது!

இங்க சில எஞ்சீனியர்கள் இருக்காங்க - 'ஆணுக்கு ஆண் பிள்ளை பிறக்காதுங்க வரதராஜன். நீங்க பூமி உருண்டைல நின்னுகிட்டு அதை கடப்பாரை போட்டு நெம்புறீங்க. அது நடக்காது' அப்படீன்னாங்க.

நான் இந்த கோள்ல நின்னுகிட்டு இன்னோரு கோளை நெம்புறேன் அப்படீன்னு சொன்னேன்.ஒத்துக்கிற மாட்டேன்னுட்டாங்க.

சரிப்பா... கண்டுபிடிச்சாச்சு... இனி நமக்கு கவலை இல்ல. யாரும் அதைப்பாத்து ஆஹா... ஓஹோ..ன்னு புகழ்பாடணுகிறது நமக்கு அவசியமில்ல. நம்ம அறிவுக்கு இது எட்டுது. ஆர்.பி.எம் குறைச்சிக்கொடுக்கறதுனால ஆம்பியர் கூடுது; அபரிமிதமாக் கூடுது. அப்டீன்னுட்டு அதோட பிரிச்சிருங்கப்பா அந்த மெசின அப்படீன்னுட்டேன்.

97-ல் ஒரு ஆக்ஸிடெண்ட்ல என் ரெண்டுகாலும் ஒடஞ்சு போச்சு. ரெண்டு வருசம் ஓய்வுல இருந்தேன். அந்த தொடர்ச்சி போயிருச்சி.

http://http://www.tamilmantram.com/vb/album.php?albumid=23&pictureid=62

கேள்வி: அந்த மெசின ஏன் பிரிக்க சொன்னீங்க? நீங்களே உங்க லேத்துக்கு அதை உபயோகப்படுத்தி இருக்கலாமே?

பதில்: அதாவது தனித்தனியா.. கூரை ஷெட்டு போட்ட மாதிரி..... இருந்துச்சு.. ஒரே இயந்திரமா இல்ல.

அடுத்து என்ன பண்ணேன்? ஒரு ஒன்பது இடத்துல வீட்டுக்கு, ஏழு ஏக்கர் சொச்சம்... ஒன்பது இடத்துல பூமியெல்லாம் வாங்கி வச்சிருந்தேன் - வீட்டுக்கு, பேக்டரிக்கு.....அப்படீன்னு; ஒரு வீடு வச்சிருந்தேன் ஃபாரஸ்ட் ரோடுல. எல்லாத்தையும் வித்து வித்து செஞ்சேன், ஒண்ணு செய்ய அதை பிரிச்சிறறது...

கேள்வி: அதை ஏன் நீங்க பிரிச்சிடுறீங்க? அதுல உங்களுக்கு திருப்தி இல்லையா?

பதில்: இல்ல.. இல்ல,,, அடுத்து.... மேற்கொண்டு என்ன செய்றது... அப்படீங்கற கத்துக்குறதுக்காக... அறிவைப் பெறணும். அடுத்தவங்க பாக்கெட்ல கைய வச்சு இல்ல...

நான் ஏழை - பத்து வயசுல இருந்து உழைக்கிறேன்னு வச்சுக்கோங்களேன். இப்ப 67 வயசாச்சு... இன்னும் உழைக்கிறேன். நம்ம காச சேதாரம் பண்ணலாம். அடுத்தவங்க காச சேதாரம் பண்ண முடியாது. சொல்லுக்குக் கட்டுப்பட்டவன் நானு... சொன்னா சொன்னதுதான். அப்படி ஒரு குணம். மாத்தி பேசுறது எனக்குப்பிடிக்காது. சொன்ன சொல்லுக்கு வேல்யூ இருக்கும். ஏன்னா என்னோட ஆசான் பெரியார்..!

அப்புறமா ஒருத்தர் வந்தாரு... 'நீங்க கமர்ஷியலா பண்ணுங்க, வியாபார ரீதியா பண்ணுங்க... உங்களப்பத்தி நானு நிறைய கேள்விப்பட்டேன். பேப்பரு பத்திரிக்கையிலும் பார்த்தேன். கஷ்டப்படுறீங்கன்னு சொன்னாங்க... பெரிய குடும்பம்னு சொன்னாங்க... நிறைய கடன் பட்டிருக்கீங்கன்னு சொன்னாங்க' அப்படீன்னாரு.

ஆமா... எல்லாமே உண்மைதான். கஷ்டப்படுறதும் உண்மைதான். ஆர்வத்துல நஷ்டப்பட்டு செஞ்சிகிட்டே இருக்கோம் அப்படீன்னு சொன்னேன்.

ஏன் அத வியாபார ரீதியா பண்ணினா என்ன? அப்படீன்னாரு. வியாபார ரீதியா பண்ணலாம்னா ஒரே ஆளா இருந்தே கோடிக்கணக்கான மெஷின தயார் பண்ண முடியாது. பார்முலா கொடுத்தா அவங்க அவங்களே செஞ்சுக்குவாங்க. இது ரொம்ப எளிமையானதுதான். அதனால இத பேடண்ட் ரெஜிஸ்ட்ரேஷன் பண்ணிகிட்டு பண்ணலாம்னு நினைக்கிறோம். பேடண்ட் ரெஜிஸ்ட்ரேஷன் ஏன் பண்ணலைன்னா இன்னும் ஒரு பார்முலா இருக்கு. அதுதான் அந்த பத்தாவது மெசினு. அத செஞ்சு முடிச்சுகிட்டு... பேடண்ட் ரெஜிஸ்ட்ரேசனுக்கு தேவையான வேலைய செய்யலாம்னு நினைக்கிறேன்.

கேள்வி: அதுக்கு இன்னும் எவ்வளவு காலம் பிடிக்கும்னு நினைக்கிறீங்க?

பதில்: காலம் என்னங்க காலம்? பணம் வந்துட்டா உடனே காலம்தான். இனி கடன் வாங்க முடியாத நிலையில நான் இருக்கேன். ஏங்குடும்பம் ரொம்பப்பெரிய குடும்பம். 23 பேரு இருந்தாங்க. 25 வயசுல இந்தத் தொழிற்பேட்டைக்குள்ள நுழஞ்சேன்.எனக்கு இப்ப ஏழு புள்ளைங்க, ஒம்போது பேரன் பேத்திக. எனக்கு சல்லி இல்லைன்னவுடனே என் புள்ளைகள வற்புறுத்தி படிக்க வச்சேன்.
அவங்களும் சிலர் +2, ஒருத்தன் பி.காம்... அந்த அளவுல நிறுத்திகிட்டாங்க. ரெண்டு பேரனுங்க பி.ஈ... என் கடைசி பையன் எம்.ஏ... மெட்ராஸில உத்தியோகம் பாக்குறான். அவன் தான் அதிகமான ஆர்வத்துல இருக்கான். அப்துல்கலாமுக்கு எல்லாம் எழுதுனானாம். அங்க இருந்து போன் வந்திச்சு. உங்க நம்பர் குடுத்துருக்கேன், நீங்க விளக்கம் சொல்லணும் அப்படீன்னு. அப்ப நான் சொன்னேன்... பொறுப்பா....ஏன் அவசரப்படுற....? எல்லாத்தையும் முடிச்சுகிட்டு... எனக்கு நல்லா திருப்தி ஆனதுக்குப் பிறகு அதைச்செய்வோம் அப்படீன்னுட்டேன்.

இப்ப அதைப் பேடண்ட் பண்ணனும். பண்ணிட்டா எந்த தொந்தரவும் இல்ல. யாருக்காவாது கொடுக்கலைன்னா கவர்ன்மெண்டுக்கு கூட கொடுத்திடுறோம்.

வேற ஒண்ணும் வேணாம். காற்றாலை மின்நிலையங்கிறது இதே பார்முலாதான். நீர்மின்நிலையமும் சரி, அனல்மின்நிலையமும், அணுமின்நிலையமான்னாலும் சரி, காற்றாலை மின்நிலையமானாலும் சரி... மின்சாரம் எல்லாமே.... ஒரு வீச்சு ஆற்றலில்தான் ஓடுது. எல்லாத்துக்குமே டர்பைன் உண்டு.

கேள்வி: இந்த இயந்திரத்திலும் டர்பைன் இருக்கா?

பதில்: இதுல வீல் போட்டிருக்கோம். இதுவும் ஒரு வீச்சு ஆற்றல்தான்.
அணைக்கட்டுல தண்ணி இருக்கும் போதுதான் நீர்மின்நிலையம் வேலை செய்யும்.... காற்றாலை காத்து அடிக்கிற இடத்துலதான் வைக்க முடியும்.. சோலார் பேட்டரி பரப்பளவு கூட...செலவீனங்கள் கூட அப்படீன்னு கேள்விப்பட்டிருக்கேன். இது வந்து செலவீனங்கள் கம்மி. மின்சாரம் இல்லாத இடத்துல கூட ஒரு 12 வோல்ட் பேட்டரி அல்லது 24 வோல்ட் பேட்டரி, ஒரு இன்வெர்ட்டர் இருந்தாப்போதும்.

கேள்வி: இப்ப நீங்க எலக்ட்ரிசிட்டி போர்டுல இருந்து மின்சாரம் வாங்காம.... சோலார் மூலமா ஒரு பேட்டரியப்போட்டு, நீங்க கண்டுபிடிச்ச மெசின வச்சே உங்க லேத்துல வேலை பார்க்கலாமே?

பதில்: சோலார் எனர்ஜிக்கு பரப்பளவு கூட வேணும்னு சொல்றாங்க, அதப்பத்தி கேள்விப்பட்டிருக்கேன். செலவும் கூட ஆகும் சொல்றாங்க. ஆனாப்படிச்சதில்ல.

கேள்வி: நீங்க அப்படி செய்தால், வெளிய இருந்து மின்சாரமே வாங்காம என் லேத்துல வேலை பாக்குறேன்னு வர்றவங்களுக்கு எளிதா நிரூபிச்சிடலாமே?

பதில்: நிரூபிக்க வேணும்னுல்லாம் நான் முதல்ல நினைக்கல. நமக்கு புரிஞ்சிக்கணும் அப்படீன்னே இருந்தேன் கொஞ்ச நாள். ஓரளவுக்கு அது புரிஞ்சிச்சி. அடுத்தாப்ல இத நாட்டுக்கு பயன்படுத்தணும்னு நினைச்சேன். இதுக்கு நடுவுல உலகமெங்கும் பெட்ரோல் விலை கூடுது, அப்படீன்னு பத்திரிக்கைகளில் படிச்சதும், இனி எண்ணெய் கிடைக்காது போலருக்கு; சரி... நாம ஏன் இத வச்சி வாகனங்களை ஓட்டக்கூடாதுன்னு நோக்கம் அங்கிட்டுப் போச்சு. ஆனா அதுக்கான வசதி வாய்ப்பு நமக்கு இல்லாமப் போச்சு. சரி.. அதப்பாத்துக்கிருவோம்.. அப்படீன்னு நெனச்சு... இந்த இயந்திரத்தில இன்னும் மெக்கானிசத்தைக் குறைச்சு, இன்னும் எளிமைப்படுத்தணும்னு நினைக்கிறேன். அதுதான் கடைசி பார்முலா.

ஆக விஞ்ஞானத்துல எத்தனையோ அறிஞர்கள் வந்து எத்தனையோ கண்டுபிடிச்சுட்டுப் போயிட்டாங்க. அவங்க வழி வகுத்துக்கொடுத்துட்டுப் போயிருக்காங்க.

ஒரு பி.ஈ. படிச்ச எலக்ட்ரானிக்ஸ் எஞ்சீனியர் ஒருத்தர் வந்தார். ' நீங்க சும்மா சொல்றீங்க; நீங்க சொல்றது சாத்தியமே இல்ல' அப்படீன்னார். அப்ப நான் பொறுமையா சொன்னேன் - ' நான் பொய் சொல்றவன் இல்ல; எதையும் கண்டறியாம பேச மாட்டேன். அது என்னுடைய வழக்கம். நீங்க படிச்சிருக்கலாம், எஞ்சீனியரா இருக்கலாம். ஆனா மின்சாரம் தயாரிப்பைப் பத்தி படிச்சிருக்கீங்களான்னு கேட்டேன். மின்சாரம் கொடுத்தா அதை ஏ.ஸிய டி.ஸி.. ஆக்குவீங்க.. டி.ஸிய ஏ.ஸி ஆக்குவீங்க. ஆனோடும்பீங்க... கேத்தோடும்பீங்க... மின்சாரத்தை உற்பத்திப் பண்ணுவீங்களா? அப்படீன்னு கேட்டேன். அதுக்கு அவரால பதில் சொல்ல முடியல.

உலகத்துல நாமும் ஒரு மூலையில இருந்து சிலருக்கு உதவணும் அப்படீன்னு ஒவ்வொருத்தரும் நினைக்கணும். எழுத்தாளர் இருக்காங்க.... சிறுகதை, பெரிய கதை, வரலாறு எல்லாம் எழுதுவாங்க. அதுவும் ஒரு வகைத்தொண்டுதான். தையல்காரர் இருக்காரு அவரும் ஒரு வகைத்தொண்டுதான் செய்யுறார். செருப்புத்தைக்கிறவரும் ஒரு தொண்டுதான் செய்யுறார். வியாபாரிங்க கூட... எங்கேயோ இருக்குறத வாங்கிட்டு வந்து மக்களுக்கு விநியோகம் பண்றாங்க. அதுவும் ஒரு வகைத்தொண்டுதான். அது மாதிரி இதுவும் ஒரு வகைத் தொண்டுதான்.

இதை ஏன் தேர்ந்தெடுத்திருக்கீங்கன்னு கேட்கிறீங்கன்னா... எலக்ட்ரானிக்ஸ், ரேடியோ மெக்கானிஸம், கம்ப்யூட்டர் இதுக்கெல்லாம் போறதுக்கு நிறைய ஆளுக இருக்காங்க. வர்ற மாணவர்களும் நிறைய பேரு இருக்காங்க. யாரும் எதை எடுக்கலியோ அதை நான் எடுத்துருக்கேன்.

பெரியாரப்பார்த்து ஒரு நிருபர் கேக்குறார் - ஏன் இந்த கடினமான தொண்டினைத் தேர்ந்தெடுத்தீங்க - ன்னு. பெரியார் சொல்றார் - யாரும் தேர்ந்தெடுக்கல.. அதனால நான் எடுத்தேன் - அப்படீன்னு! இது விளங்கும்னு நினைக்கிறீங்களா அப்படீன்னு நிருபர் கேட்டதுக்கு, நான் சொல்றத சொல்லுவேன் - என் கருத்தை சொல்லுவேன். எடுத்துக்குறவங்க எடுத்துக்கட்டும் ; எடுத்துக்காதவங்க தள்ளிக்கங்க அப்படீன்னு பெரியர் சொன்னார்.

அது மாதிரி, இது அத்தியாவசியத்தொண்டு அப்படீன்னு நானு நினைக்கிறேன். மக்களுக்குத் தேவையான தொண்டு அப்படீன்னு நினைக்கிறேன்.

சரி... மின்சாரத்தை நீங்க கண்டுபிடிக்கலை... மைக்கேல் ஃபாரடே நூறு வருசத்துக்கு முன்னாடியே கண்டு பிடிச்சுட்டுப் போயிட்டார். அந்த மின்சாரத்த வச்சு பல்பு கண்டுபிடிச்சாரு எடிசன். அவரு பண்ண தியாகம் நெறைய. அவர நாம நினச்சு, பல்பு கண்டு பிடிச்சதுக்கு பல்பு உபயோகப்படுத்துற ஆளுக எல்லாம் வருசத்துக்கு ஒரு பைசா கொடுக்கணும்னு நினச்சாலும் பல ஆயிரம் கோடி அவருக்கு ராயல்ட்டி போகும். மக்களும் அத செய்யல; அவங்களும் அதை விரும்புறதில்ல. அதனால இது ஒரு அரிய தொண்டு. இப்ப நான் செய்யுறது டீசல், பெட்ரோலே தேவையில்ல... அப்படீங்கிற அளவுக்கு கொண்டு போயிருவேன். அதுதான் என்னுடைய நோக்கம்.

அப்படி நான் வச்சு காரு ஓட்டிகிட்டு இருக்கப்போறதில்ல. ஆனா நிச்சயமா.... சொன்னா அதைச் செய்வேன். அந்த ஆற்றல் எனக்கு இருக்குன்னு நான் நம்புறேன்.

http://http://www.tamilmantram.com/vb/album.php?albumid=23&pictureid=59

கேள்வி: உங்களுக்கு தூண்டுகோல் எது அல்லது மானசீகமாக இவரைப்போல நாம் ஆகணும்னு நீங்க யாரையாவது நினைச்சிருக்கீங்களா?

அது பத்து வயசுல எனக்கு கல்வி போச்சு. நான் படிச்ச கான்வெண்ட் அஞ்சாவது வரைக்கும்தான். அதுக்கு அப்புறம் பொம்பளை பிள்ளைகளுக்கு மாத்திரம்தான். அந்த கான்வெண்ட் மதர் கூப்பிட்டு, 'நீ நல்ல மாணவன். எல்லாத்துலயும் நூத்துக்கு நூறு வாங்குற. இந்த ஒரு வருசம் அஞ்சாவது வகுப்பை முடிச்சிரு. முடிச்ச உடனே நேரே நம்ம கொடைக்கானல் பிரான்ச் ஸ்கூல் இருக்கு. அங்கே அனுப்பிருவோம். அங்க மூணு வருசம். அப்புறம் நேரே லண்டன். நீ பெரிய படிப்பு படிச்சி இந்தியா திரும்பலாம்டா' அப்படீன்னு சொன்னாங்க. அவங்க ஆங்கிலத்துல சொல்ல, ஒரு சிஸ்டர் மொழிபெயர்த்து சொன்னாங்க.
அப்ப நான் சொன்னேன். நான் பெரிய குடும்பத்துல பிறந்தவன். எங்க அப்பா அம்மா தவறிட்டாங்க. எங்கப்பா மெசின்ல கைய விட்டு ரத்தம் சிந்தி இறந்து போயிட்டார்.

எங்கப்பாவோட கொள்கை என்னான்னா... "யாருக்கும் உதவணும். யார்கிட்டேயும் உதவி பெறக்கூடாது; அடுத்தவங்களுக்கு துன்பமா வாழக்கூடாது" அப்டீங்கிறவர் என் தகப்பன். அப்படி கொள்கை உள்ளவர். அதனால நான் யாருக்கும் துன்பம் கொடுக்க விரும்பல.

இந்தக்கல்வி மேல அளவில்லாத பற்றுதல் உண்டு. ஆனா ஓஸியில் படிக்க விருப்பம் இல்ல. ரெண்டு பாட்டனார் இருந்தாங்க ; அப்பாவைப்பெத்தவர், அம்மாவைப் பெத்தவர்ன்னு. உதவின்னு நான் அவங்ககிட்ட போகல. யாரு பந்துக்கள் வீட்டுல போயி ஒரு வேளை ஓஸிச்சாப்பாடு சாப்பிட்டதும் இல்ல. யாருடைய உழைப்பையும் நான் பயன்படித்திக்கல.

அப்ப எனக்கு தொழில் மேல ஆசை. படிப்பு இல்லன்னா தொழில். அருந்தொழில் படிக்கணும் அப்படீன்னு சொல்லிட்டு நான் வெளிய வந்தேன். ஆட்டோ மொபைல் போனேன். அதப்படிச்சேன். அதைக் குப்பைன்னு சொல்லிட்டேன். போர்மனுக்கும் எனக்கும் சண்டை - அதெப்படி நீ குப்பைன்னு சொல்லலாம்? - அப்படீன்னு. அப்ப நான் ' என்ன இருக்கு இதுல அறிவுக்கு?' அப்படீன்னேன். யாரோ செஞ்ச மோட்டார், யாரோ செஞ்ச ஸ்பேர் பார்ட்ஸ் - நாம என்ன செய்யுறோம்? தொடச்சு தொடச்சு ஆயில் போட்டு மாட்டுறோம். தொடச்சு மாட்டுறதுக்கு பேரு அறிவா? அப்படீன்னுட்டேன்.
சின்ன வயசு... பதினாலு வயசுல.

என் தேடுதலுக்கான விடை அதுல இல்லை.. காரணம் என்னான்னா மெக்கானிக்கும் சரி, பிரிட்ஜ் ரிப்பேர் பண்ற ஒரு மெக்கானிக்கும் சரி; தரையில நடக்க மாட்டாங்க. அப்பெல்லாம் ஆட்டோ கிடையாது. ஒண்ணு சைக்கிள் ரிக்ஷா இல்லாட்டி குதிர வண்டியிலதான் வருவோம். ஏன்னா வானத்துல இருந்து குதிச்சவங்க; அந்தத் தொழிலப் போட்டு மூடி மறைக்கிறது.

ஆட்டோமொபைல்லயும் அந்த 'டைமிங்' அப்படீங்கிறத மூடி மறைப்பான். அப்ப காலேஜில இருந்து படிச்சுட்டு ஸ்டூடன்ஸ் எல்லாம் நேரா ஆட்டோமொபைலுக்குத்தான் வருவாங்க, அதுல என்னமோ இருக்குன்னு! ஆனா நான் நினச்ச மாதிரி அதுல ஒண்ணுமில்ல. அவங்க 'டைமிங்'ன்னா என்னாம்பாங்க. சொல்லுவேன்.. அத நான் இப்படி இப்படின்னு சொல்லித்தருவேன். எப்படி வேணா செய்யலாம்னு; அது இந்த போர்மனுகளுக்கெல்லாம் பிடிக்காது. ஏன்னா தொழில வெளிப்படுத்துறான்னு.

தொழில மூடி மறைப்பாங்க; எனக்கு அந்த மூடி மறைக்கிறது பிடிக்கிறதில்லை. என் சர்வீஸ்ல பல ஆயிரம் பேரு இங்க ஆளாகி போயிருக்காங்க வெளியில. 'நல்லாருப்பா... போயிட்டு வா' அப்படீன்னுருவேன். சொல்லிக்கொடுத்து அனுப்புவேன். தொழில்ல யாரும் படிச்சுகிட்டு வரல ; மேல இருந்து குதிக்கல. எல்லாரும் ஒருத்தர வச்சுதான் ஒருத்தர். அதனால நல்லாப்படிச்சுக்கோ அப்படீன்னு சொல்லுவேன். இது என்னோட வழக்கம். ஆக தொழில்னு நான் தேர்ந்தெடுத்துப் போனது அதுல ஒண்ணும் இல்ல. அப்படியே அந்த ஆட்டோமொபைல விட்டுட்டு வந்துட்டேன். அதுல சின்ன சின்ன மெக்கானிசம், தொழில்நுட்பங்கள் தெரிஞ்சிக்கலாம், அவ்வளவுதான்.

ஆக மொத்தம் நாம எதுவும் செய்யறதில்ல அதில. ஒரு குண்டூசி கூட ராவி அதில போடுறதில்ல. அதுவும் கூட கம்பெனியில் இருந்து வரும். அத தொடச்சி மாட்டுறதுல என்ன இருக்கு?

அப்புறமா மதுரையில பாத்திரங்கள் தயார் பண்ற கம்பெனிகளுக்காக வேலை செஞ்சேன். ஜப்பானில் இருந்து மொத்தமா ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வாங்கி பாம்பே..ல அமுக்கி தடாக்கி இருக்குறத வாங்கிட்டு வந்து பாத்திரங்கள் செய்வாங்க. அப்ப நான் யோசிச்சேன். ஏன் பாம்பேகாரன்தான் செய்யணுமா? நாம் செய்யக்கூடாதா அப்படீன்னு யோச்சிச்சு இங்கேயே அதை செஞ்சு காண்பிச்சேன். யாரு எது முடியாதுன்னு சொல்றாங்களோ அதை முடியும்னு சொல்லி செஞ்சி காண்பிக்கிறவன் நானு.

எல்லோரும் சொன்னாங்க பள்ளிக்கூடத்த விட்டுட்டான்.. பள்ளிக்கூடத்த விட்டுட்டான்னு.. பள்ளிக்கூடத்த விட்ட பின்னாடி குண்டு விளையாடல, பம்பரம் விளையாடல நானு. பத்து வயசுல இருந்து வேலைக்கும் போவேன், லைப்ரேரிக்கும் போவேன். பல நூல்களைப் படிச்சேன். பல நூல்களை வாங்குனேன். எனக்கு கல்வியில அவ்வளவு ஒரு வெறி. என் காலத்தையும் நேரத்தையும் நான் வீணாக்கினதில்லை. ஒண்ணு வேலை செய்வேன்... இல்லைன்னா சிந்தனை பண்ணுவேன், அடுத்து என்ன செய்யலாம்னு. இப்படியே போயிருச்சு என் காலம். ரொம்ப சீக்கிரமா போயிருச்சு.

25 வயசுல, 67..லில இந்த இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டுக்குள்ள நுழஞ்சேன். இன்னிக்கு எனக்கே வயசு 67 ஆகிப்போச்சு.

நானு கண்ணு இடுங்கி, பல்லு போயி, உருவம் சிதஞ்சு ஆகிப்போயிட்டேன். ஆனா இந்த ஆர்வம் இருக்கு பார்த்தீங்களா - 25 வயசுல இருந்த ஆர்வம் - அது இன்னும் என்னைய விட்டுட்டுப் போகல. உடல் நசிஞ்சுப் போச்சு. ஆனா அந்த இருதயம் இன்னும் அப்படியேதான் சுறுசுறுப்பா இருக்கு. நான் சோம்பல் பட மாட்டேன்.

அதிகமா சாப்பிடறவனும் கிடையாது. பல வேளைகளில பட்டினி கிடந்திருக்கேன். இருந்தாலும் பட்டினி, இல்லைன்னாலும் பட்டினி. என்னுடைய குறிக்கோள் எல்லாம் தொழில் பார்க்கணும். புதுமை செய்யணும். பல புதுமைகளை செஞ்சேன். அதுல சிலது வெளிய வரல. ஏன்னா சம்பாத்தியக் கண்ணோட்டங்கிறது எனக்கு இல்ல.

இதுவந்து உலகப்புதுமை; பலகோடி பேருக்குப் பயன்படும். இப்ப நான் நெனச்ச மாதிரியே மின்சாரப்பற்றாக்குறை ஆகி ஆளாளுக்கு கொடியத் தூக்குறாங்க. ஒரு நாடு பணக்கார நாடா இருக்கணும், வல்லரசு நாடா இருக்கணும் அப்படீன்னா அதுக்கு என்ன அளவு கோல்? மின்சாரம்தான் அளவு கோல். எவ்வளவுக்கெவ்வளவு மின்சாரம் இருக்கோ அவ்வளவுக்கவ்வளவு அந்த நாடு வளர்ச்சி அடையும். பணக்கார வல்லரசு நாடா ஆகும்.

இதே மாதிரிதான் இந்த பெட்ரோலியப்போருட்கள் எல்லாம்... இன்னும் கொஞ்ச வருசம்தான் வரும்னு சொல்றாங்க. நான் படிக்கிற காலத்துல, இங்க இருக்குற பெட்ரோல் பங்குல இம்பீரியல் கேலன் அப்படீன்னு சொல்வாங்க. இப்ப இருக்குற கேலனுக்கு கிட்டத்தட்ட ஆறு லிட்டர் வரும்னு வைங்களேன். அந்த இம்பீரியல் கேலன் பெட்ரோல் மூணு ரூபா விலை! இன்னைக்கு ஒரு லிட்டர் 50 ரூபாய்க்கு..!!

அந்தளவுக்கு எண்ணெய், விலைவாசி எல்லாம் உயர்ந்து போச்சு. மக்கள் தொகை கூடிப்போச்சு... வாகனங்கள் கூடிப்போச்சு... நாம அதுக்கு ஏதாவது பண்ணனும். அதனால புதுமையா செய்யணும்னு நினைச்சேன்.

அப்படி செய்யறதால நான் ஆயிரம் வருசம் வாழப்போறதோ, அல்லது கண்டுபிடிச்சத தலையில தூக்கி வச்சுகிட்டு ஆடப்போறதில்ல. இப்ப மோட்டார் எப்படி ஓடும் கேக்குறாங்க. என்னய மாதிரி ஆளுங்க ஊமைதானே. இத தூக்கி அங்க வச்சு...அங்க இருக்குறத இங்க வச்சா ஓடும்னு என்னால விளக்க முடியாது. அப்படியே சொன்னாலும் ஒரு கேள்விய கேப்பாங்க.

இந்த மக்கள் இமயம் தாழ்ந்துச்சு; குமரி தூக்கிச்சுன்னு சொன்னா நம்புவாங்க.. ஆனா அறிவியல்னு வந்துட்டா அது எப்படீன்னு கேள்வி கேட்பாங்க. அதே கேள்விய ஏன் எல்லாத்துக்கும் கேக்குறதில்ல?

அதிகாரிகள், கல்விமான்கள் நிறைய பேரு என்னை புண்படுத்தி இருக்காங்க. ஆனா தொடச்சிட்டு, போறாங்க, அவங்களுக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்... அப்படீன்னு இருப்பேன். இடுக்குக்கேள்வி, கிடிக்கிப்பிடி கேள்வி கேட்பாங்க.

கேள்வி: இதுவரைக்கும் கண்டுபிடிச்சிருக்கிற விதிகளை வச்சு, அதுதான் உண்மை அப்படீன்னு நிரூபிக்கப்பட்டதால அதிலிருந்து வரக்கூடிய கேள்விகளா இருக்கும்னு நான் நினைக்கிறேன்.

பதில்: ம்ம்... இருக்கலாம். அதுல சிலரு ஆணித்தரமா கேட்டாங்க. இது முடியும்னா இது வரைக்கும் விஞ்ஞானிகள் கண்டு பிடிக்காம இருந்திருப்பாங்க அப்படீன்னு நினைக்கிறீங்களா? அப்படீன்னு கேட்டாங்க. முடியாதுன்னுல்லாம் ஒண்ணும் இல்ல.. ஏன் விஞ்ஞானிகள் இது பத்தி ஆராயல அப்படீன்னா.... எந்த ரூபமாவோ... மின்சாரம் கிடைச்சிருச்சு. அந்த மின்சாரத்த வச்சு என்ன செய்ய முடியும்னு சோதனை பண்ணி செயற்கைக்கோள் வரைக்கும் போயிட்டாங்க. இப்படி கண்டுபிடிச்ச மின்சாரத்த வச்சு என்ன என்ன செய்யலாம்கிறதுல அவங்க கவனம் போயிட்டதே ஒழிய, ஏன் இந்த மின்சாரத்தை இவ்வளவு கடினமா எடுக்குறோம், அதை எளிமைப்படுத்துவோமேன்னு யாரும் அந்த வேலைக்குப் போகலீங்க. அதனாலதான் நான் அதைப் பண்ணேன்.

இப்பப்படிச்சுட்டு நிறைய பேரு வர்றாங்க. ஆனா முத்திரை குத்தி வச்சுட்டாங்க. கூடுதல் ஆற்றலைக்கொடுத்து குறைந்த ஆற்றல்தான் தயார் பண்ண முடியும் - இது விதி. மாற்ற முடியாததற்குப் பேரு விதி. அத நம்புறாங்க. அப்புறம் விதியை மதியால் வெல்லலாம் அப்படீன்னும் சொல்லிக்கிறாங்க.

விதியை வெல்லணும்கிறது என்னோட நோக்கம் இல்ல. ஒருத்தர் வந்தாரு - பேடண்ட் செய்யுறதுக்கு உதவுறோம்னு. வந்தவர்... நீங்க எப்படி ஆல்ட்டர்னேட்டர் செஞ்சிருக்கீங்கன்னு எல்லாத்தையும் பிரிச்சு பார்க்கணும்னு... அப்ப நான் சொன்னேன்.. இத நான் செஞ்சேன்.. ஓட மாட்டேங்குது, எப்படி செஞ்சா ஓடும் அப்படீன்னு சொன்னா... நீங்க அதைப் பிரிச்சி.. இதுல எங்க பிரச்சினைன்னு கண்டுபிடிச்சி, இதுல தப்பு இருக்கு, அதில தப்பு இருக்குன்னு சொல்லலாம். நான் அப்படியெல்லாம் கேட்கல.

பார்முலா வந்து எளிய பார்முலா. அத நானே பத்திரிக்கையில விளம்பரம் பண்ணுவேன். அப்படி இல்லைன்னா டி.வி காரங்க வந்தாங்க.. அவங்ககிட்ட பார்ட்பார்ட்..டா எல்லாத்தையும் விளக்கிச் சொல்லுவேன். ஆனா அதுக்கு முன்னாடி பேட்டண்ட் ரிஜிஸ்ட்ரேசன் பண்ணனும்.

கேள்வி: அதை ரெஜிஸ்டர் செய்யறதுக்கான முயற்சி எந்த அளவில இருக்கு?

பதில்: மெட்ராஸில இருக்குற பையன் அதப் பார்த்துகிட்டுதான் இருக்கான். அண்ணா யுனிவர்சிட்டியிலேயே அந்த ஒரு பிரிவு இருக்குன்னு கேள்விப்பட்டேன். நாம இவ்வளவு பணம் கட்டணும்.. நம்பர் வாங்கணும்.. அப்படீன்னு பையன் சொன்னான். இன்னும் சில பேரு பேடண்ட் ரெஜிஸ்ட்ரேசன்கிறது கடினம். பண்ணுவோம்னு சொல்வாங்க,,, ஆனா போனா ரொம்ப கஷ்டம் இருக்குங்க. அத்தனையும் விளக்கி பைல் தயார் பண்ணிக்கொடுக்கணும்... அப்படீன்னு சிலர் சொல்றாங்க.... இந்த விஞ்ஞானம் புதுமையா இருக்குறதால..

ராமர்பிள்ளைங்கிறவரு பெட்ரோல் கண்டுபிடிச்சேன்.. மூலிகைச்சாறு அப்படீன்னு சொன்னாருன்னு பத்திரிக்கையில படிச்சேன். அதை ஒருத்தர் புகழ்ந்துகிட்டு இருந்தாரு. அப்ப நான் சொன்னேன் அது சாத்தியமில்ல.. அப்படீன்னு. அந்த நண்பர் ஏத்துக்கல... ராமர்பிள்ளையும் மோட்டார்சைக்கிள் எல்லாம் ஓட்டிக்காண்பிச்சாரு... அப்புறம் ரிசர்ச் சென்டர்ல காண்பிச்சாராம். அப்ப விஞ்ஞானிகள் சொன்னாங்களாம். நீங்க கொண்டு வந்த குடுவைய தனியா வச்சிடுங்க. நாங்க குடுக்குற குடுவையில கலக்கிக் காண்பிங்க... அப்படீன்னு. இது உள்கூடு ரகசியம் - மோடி வித்தை கணக்கா... அது அப்படி.. ஆனா இந்த விஞ்ஞானம் அப்படி இல்ல. நானே சொல்றேன். இது ரொம்ப ரொம்ப எளிமை.

சரி.. இத ஏன் பேடண்ட் செஞ்சிட்டு காண்பிக்கிறோம்னு சொல்றேன். இந்த விசயம் அல்லது இதே பார்முலா வெளிநாடுகளுக்குப் போயிடாதா? நம்ம இந்திய நாட்டை பாதிக்காதா? பாதிக்கும்.

எனக்கு இப்போதைய தேவை பொருளாதாரம்தான். என்னுடைய காலமும் நேரமும் வீணாகிட்டு இருக்குன்னு நினைக்கிறேன். நிறைய கடன்பட்டு, சட்ட சிக்கல் ஏற்பட்டு, போலீஸ்காரங்களால தொல்லைப்பட்டு ரொம்ப அழுந்தி ஜெயிச்சு வந்திருக்கேன். ஆனாலும் இன்னும் என் பொருளதாரக் கஷ்டம் தீரல. பொருளாதாரக் கஷ்டம் தீரலைன்னா... வாங்கி உக்காந்து சாப்பிடணுங்கிறதில்ல என்னோட நோக்கம். எங்க குடும்பத்துக்கு தேவையான வேலைய நாங்க பாத்துகிட்டு இருக்கோம். என் பையன் பாத்துகிட்டு இருக்கான். எனக்கு அதுல எல்லாம் பஞ்சமில்ல. நான் எதை செய்யணும்னு நினைக்கிறேனோ அதுக்கு பொருளுதவி கிடைக்கல. வர்றவங்ககிட்ட உதவி பெறலாம்னா அதுல எனக்கு விருப்பம் இல்ல.. என்னான்னா... வந்து கேள்வி கேக்குறவங்களே, பெரிய ஆளுங்களே... இது ஓடுமா....? அத எப்படி நம்புறது? அப்படீங்கிற மாதிரி கேக்குறாங்க. அது மனசுல சஞ்சலத்துல இருக்கு. மீடியாவப் பொறுத்த வரைக்கும் நிறைய பேரு வராங்க. ராஜ் டி.வி, சன் டி.வி, தினகரன் பத்திரிக்கை நிருபர்க வர்றாங்க. நாங்க விளம்பரப்படுத்துறோம்னு சொல்றாங்க...

நான் சொன்னேன். கொஞ்சம் பொறுங்க. என்னுடைய கடைசி மெசினும் முடியட்டும். அதை வெளியிட்டிருவோம். ஏன் இதை தாமதப்படுத்துறீங்க அப்படீன்னு கேக்குறாங்க... சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும். இல்லீங்களா...?

ஒவ்வொண்ணுக்கும் உழைச்சு, பணம் தேடி, அந்த பொருளை வாங்கி அல்லது அந்த பொருளை செஞ்சு அப்படி பண்ண வேண்டியிருக்கு, பொருளுதவின்னு நான் இதுவரைக்கும் யார்கிட்டேயும் கேட்கல.

எங்க தொழிலுக்காக நிறைய கடன் வாங்குவோம்; வட்டி கட்டுவோம். அதுல நிறைய நஷ்டப்பட்டிருக்கோம். இருந்த சொத்துக்களை எல்லாம் வித்தாச்சு. இருக்குறது இந்த ஒரு ஃபேக்டரிதான். இத 86..ல கவர்ன்மெண்டுல இருந்து வாங்குனேன். இது பேருலயும் கிட்டத்தட்ட ஒரு பதினேழு லட்ச ரூபா கடன். வாங்குனது கொஞ்சம்தான்... ஆனா எழுதிக்கொடுத்தது கூட - ஆர்வத்துல. எழுதிக்கொடுத்துட்டோம். அந்த கடன் சிக்கல்ல இருக்கோம். நான் செஞ்சுகிட்டதுல இன்னும் ஒரு பார்முலா பாக்கி இருக்கு. அது எனக்கு இராத்திரியும் பகலும் தூக்கம் வர மாட்டேங்குது. எப்ப முடிக்கப்போறோம்னு... அது மனசயும் கொஞ்சம் பாதிக்குது.

பத்திரிக்கைக்காரங்ககிட்ட என்னோட கண்டுபிடிப்ப விளம்பரம் பண்ணுங்க அப்படீன்னு வேணா கேக்கலாமே ஒழிய, வேற என்ன உதவிய எதிர்பார்க்க முடியும்?

என்னோட கடைசி தேவை என்னோட விஞ்ஞானத்துக்கு பொருளதவி. நேரம் போயிட்டிருக்கு; காலம் போயிட்டிருக்கு அப்படீங்கிற வேதனை ஜாஸ்தி இருக்கு. இதுவரைக்கும் வெளி இடத்துல பெரிய பெரிய ஆளுக சந்திச்சதில, நான் தெரிஞ்சுகிட்டது - இது இயற்கைக்கு விரோதமானது. சூரியன் வேற பக்கம் உதிச்சாலும் சக்திய கொண்டு வர முடியாது அப்படீன்னு ஆணித்தரமா நிறைய பேரு வாதாடி இருக்காங்க. அதுல நான் நிறைய நொந்துட்டேன். ஆனா என்னோட முயற்சிய நான் விடவே இல்ல.

கேள்வி: ஒருத்தர், ரெண்டு பேரு இல்ல... வர்றவங்க எல்லோருக்கும் உங்க கண்டுபிடிப்பு மேலே சந்தேகம் இருக்கும் போது, ஏன் அதை நீங்க ஓட்டிக்காட்டி அந்த சந்தேகத்தை நிவர்த்தி பண்ணக்கூடாது?

பதில்: அவங்களால நமக்கு என்ன ஆகப்போகுது?

கேள்வி: ஒண்ணும் ஆகப்போறதில்லதான்.. ஆனா உங்க கண்டுபிடிப்பு மக்கள்கிட்ட போய் சேர வேண்டாமா?

பதில்: பொருள் போய் சேரணும்.. உண்மைதான். நான் பலருடைய கண்காணிப்புல இருக்குறவன். நான் எந்த புதுமைய செஞ்சாலும் சரி... எல்லோருடைய கண்காணிப்பிலயும் நான் இருக்கேன். ஒவ்வொண்ணையும் ரொம்ப உன்னிப்பா கவனிப்பாங்க. இத மாத்திரம் கொஞ்சம் தள்ளி இருந்து பாக்குறாங்க. காரணம் என்னான்ன இது புரியல அவங்களுக்கு. நான் எந்த மெசின செஞ்சாலும் வெளிய அதை செய்வான். நான் பல மெசினுகளை செஞ்சிருக்கேன். குறிப்பா பஞ்சிங் மெசின். ஒரு மார்வாடி கூட்டிட்டுப்போயி காண்பிச்சாரு. இத பஞ்சாபிக ஒன்பது பேரு மூணு வருசமா செஞ்சாங்க. 30குதிரைச்சக்தி மோட்டார் போட்டு கால் இஞ்சு பிளேட்டத்தான் ஓட்டப்போறாங்க. இது மாதிரி மெசின செஞ்சு எங்களுக்குத் தர முடியுமா..? இப்ப சல்லடையெல்லாம் ஜப்பான்ல இருந்து இறக்குமதி பண்றோம். ஆர்டர் போட்டா உடனே கிடைக்க மாட்டேங்குது, பிரச்சினையா இருக்கு. உங்களால செஞ்சு தர முடியுமா?ன்னு கேட்டார்.

அப்படியா...? சிம்பிளா செஞ்சிருவோம்னு சொன்னேன். 25000 ரூபாய்க்கு டிராப்ட் எடுத்துக்கொடுத்தாங்க. வந்து ஒரு குதிரைச்சக்தி மோட்டார போட்டு மெசின செஞ்சோம்.

அவங்களோட 30குதிரை சக்தி மெசின்ல, ஒரு ஷிப்டுக்கு மூன்றரை சல்லடை பஞ்ச் பண்ணாங்க.

நான் செஞ்ச ஒரு குதிரைசக்தி மெசின்ல, மணிக்கு 12 சல்லடை பஞ்ச் பண்ணோம். ஒரு ஷிப்டுக்கு 96 சல்லடை ஆச்சு. அந்த மெசின செஞ்சு ஏத்தி விட்டேன். எல்லோரும் சொன்னங்க.. வரதராஜன் பைத்தியக்காரன்..அப்படீன்னு. தொழில் பரவட்டுமே. எனக்கு கட்டுபடியாகுது, செய்றேன். நல்லாருக்கட்டும்.

அவரே ஜப்பானில் இருந்து புளூபிரிண்ட் வாங்கிக் கொடுத்து புதுமாதிரி சல்லடை செஞ்சுக்கொடுங்கன்னு சொன்னார். 50 ரூபா சார்ஜ் பண்ண வேலைக்கு 25 ரூபா கொடுத்தாங்க. கட்டுபடியாகுது; செய்வோம்.. அப்படீன்னு செய்தேன்.

அதே ஆளு சம்பாரிச்ச பிறகு நன்றி இல்லாம பேசுறார். நன்றி இல்லைங்கிற போது தள்ளிப்போயிருவேன் நானு. என் தாயார் படிக்காதவங்க.. ஆனா ஒரு சொல்லு சொல்லி இருக்காங்க. நன்றிய எந்த நேரத்திலும் மறக்கக்கூடாது மகனே.. நன்றி மறந்தவன மன்னிக்கக் கூடாது... விலகிப்போயிரு. எதுலயும் துரோகம் பண்ணக்கூடாது... அப்படீன்னு படிக்காத தாயார் எனக்கு சொல்லிக்கொடுத்த பாடம். அத இன்னைக்கும் நான் என் மனசுல வச்சுருக்கேன். அது படியே நடந்துகிட்டு இருக்கேன்.

பலருக்கும் பலதும் செய்து கொடுத்திருக்கேன். ஆனா எல்லோரும் அறிவ மட்டும் பெறணும். அன்னப்பட்சி மாதிரி பால மாத்திரம் குடிக்கணும்; தண்ணிய விட்டுரணும் அப்படீங்கிற மாதிரி வரதராஜனோட அறிவை நாம பெறணும் அப்படீன்னு மாத்திரம் நினைக்கிறாங்க.

உள்ளூர் பிரமுகர்கள பத்தி ஒரு எஞ்சீனியர் வந்து சொன்னாரு.. தினமும் உங்க பேச்சுத்தான்... வரதராஜனுக்கு வாய்ப்பு மாத்திரம் கொடுத்த நம்பர் ஒண்ணு ஆயிருவாரு. அப்புறம் நாம எல்லாரும் அவருக்கு பின்னாடி கைய கட்டிகிட்டுப் போகணும்..அப்படீன்னு பேசிகிட்டாங்கன்னு.

நான் அப்படி ஒண்ணும் அகந்தை உள்ளவனும் இல்ல. மத்தவங்கள் மட்டம் தட்டுறவனும் இல்ல. நான் யாரையும் துன்புறுத்தவோ, இன்சல்ட் பண்ணவோ மாட்டேன். அது எனக்குப் பிடிக்காது. நமக்கு இருக்குற உணர்வு எல்லாருக்கும் உண்டு.

நடு ரோட்டில ஆட்கள் நின்னு பேசிகிட்டு இருந்தாலும் ஒதுங்கிப் போறவன் நானு. ஒதுங்குங்க... அப்படின்னு சொல்ல மாட்டேன். ஆனால் என்னை இடறினா பெரிய அதிகாரி ஆனாலும் விட மாட்டேன். மானம் பெரிசுன்னு நினைக்கிறவன் நானு. அப்படியே சில கொள்கைகள் - அப்படியே வாழ்ந்துட்டேன்.

ஒருத்தர் வந்தார் - நான் எம்.பி அனுப்பி வந்தேன், உங்களுக்கு உதவுறதுக்கு அப்படீன்னு வந்தார். நான் சொன்னேன் உதவின்னு கேட்டதுக்கு அப்புறமா செஞ்சாதான் கேக்குறவங்களும் நல்லது - கொடுக்குறவங்களுக்கும் மரியாதை. நீங்க சொல்வரு யாருன்னே எனக்குத்தெரியாது, நான் உதவியும் கேட்கலயே அப்படீன்னு சொன்னேன். வரதராஜன் பொழைக்கத் தெரியாத ஆளுன்னு சொல்லிட்டுப்போயிட்டாரு. தானா வர்ற உதவிகள நான் ஏத்துக்கிறதில்ல.

உதவின்னா கேட்டுப்பெறணும். ஆனா இந்த மெசின பொறுத்த மட்டும் என்னால அந்த மாதிரி செய்ய முடியல.

சிலரு சொல்றாங்க - சர்வசாதரணமா பார்முலாவ கண்டுபிடிச்சுட்டீங்க வரதராஜன். நீங்க கண்டு பிடிச்சது எவ்வளவு பெரிசு தெரியுமா? பங்கு மார்க்கெட் எல்லாம் விழுந்து போகும்யா..

சர்வ சாதாரணமா மின்சாரத்த கண்டுபிடிச்சுட்டேன்னு சொல்றீங்க! இது எவ்வளவு பெரிய விசயம் தெரியுமா? அப்படீன்னு ஒருத்தர் சொல்றார். இங்கேயே ஒரு ஆல்ட்டர்னேட்டரை நிறுவினீங்கன்னா இங்க இருக்குற பேக்கடரிக்கெல்லாம் நீங்களே தாராளமா கரண்ட் சப்ளை பண்ணலாம். ஈ.பி..யில இருந்து ஒரு யூனிட் மின்சாரம் ரெண்டரை ரூபாய்க்கு வாங்குறோம். உங்களுக்கென்னா பத்து பைசா வரும் - ஒரு யூனிட் மின்சாரத்துக்கு. ஒரு மணி நேரத்துக்கு ஆயிரம் யூனிட் மின்சாரம் தயார் பண்ண முடியும். ஒரு மணி நேரத்துக்கு ஊர்ப்பட்ட பணம்! அப்படி சம்பாதிக்கலாமே...? எளிய முறைதானே..? அதான் எஞ்சின கண்டுபிடிச்சிட்டீங்கள்ள... எளிதா செய்திடலாம்தானே அப்படீன்னு ஒரு அதிகாரி சொல்றார். நல்ல யோசனதான். நான் யார்கிட்டே....பேங்குல போயி லோனு கேக்கலாமா? அதை நம்புவாங்களா? நம்ப மாட்டாங்க.

ரெண்டாவது என்னோட அடிப்படை நோக்கம் என்னன்னா எல்லா மக்களும் அதனால பயனடையணும். நம்ம படிச்சது அடுத்தவங்களுக்குப் போயி சேரணும். அதே நேரம் நல்லவங்க எல்லாரும் பயனடையணும். யாருக்கு எங்க வேணுமோ அங்க அவங்களே உற்பத்திப்பண்ணிக்கலாம். ஹும்... நோக்கம் என்னவோ நல்ல நோக்கம்தான். ஆனால் எல்லாத்துக்கும் மேல கொடுமை - இந்த வறுமை, கால தாமதம்.. இதுதான். பத்தாவது மெசின முடிச்சுப்புடணும்னு வெறி பிடிச்ச மாதிரி இருக்கேன். அத நெனச்சே தூக்கம் வரமாட்டேங்குது, சாப்பாடு செல்ல மாட்டேங்குது, முடிச்சிரணும். அது இன்னும் எளிய முறையா இருக்கணும். மெக்கானிசம் குறைவா இருக்கணும். சக்தி கூட்டறதுன்னா கூட்டிக்கலாம்.

கேள்வி: நீங்க எல்லாமே அலுவலகங்களுக்கு உபயோகிக்கிற மாதிரி த்ரீ பேஸ் மெசின் தான் தயார் செய்திருக்கிறீங்களா..? அதையே வீடுகளுக்கு உபயோகிக்கிற மாதிரி செய்திருக்கலாமே..?

பதில்: த்ரீ பேஸ் மெசின்லேயே தனித்தனியா பிரிச்சி வீடுகளுக்கும் கொடுத்திடலாம். இல்ல வேணும்னா சிங்கிள் பேஸாவே கூட தயார் செய்திடலாம். அது ஒண்ணும் பெரிய விசயம் இல்ல. நீங்க சொன்னதுக்கு பின்னாடி எனக்கு என்ன தோணுதுன்னா - இத எதுக்கு இண்டஸ்ரியல் மெசின் மாதிரி பெரிசா செய்யணும்? சின்னதா வெட்கிரைண்டர் மாதிரி வீடுகளுக்கு உபயோகிக்கிற மாதிரி சின்னதா செய்திருக்கலாமேன்னு தோணுது. அத பரப்புறதுக்கு வேணா லேசா இருக்கும். காப்பி செய்யறவன் ஈஸியா பண்ணிட்டுப் போயிடுவான். ஏன்னா இதுல பெரிசா மெக்கானிசம் ஒண்ணும் இல்ல. பெரிய மெக்கானிசமோ அறிவுக்கு வேலையோ அதுல ஒண்ணும் இல்ல. ஓடுற வரைக்கும் என்னமோ மாதிரித்தெரியும். ஆனா பிரிச்சுப் பார்த்துட்டா ..ஃபூ..இம்புட்டுத்தானா..? அப்படீன்னு சொல்லுவீங்க.

கேள்வி: உங்கள் கண்டுபிடிப்ப விளக்காமல் ஒரு வரியில எதன் அடிப்படையில் இந்த ஆல்ட்டர்னேட்டர் வேலை பாக்குதுண்ணு சொல்லச் சொன்னா நீங்க என்ன சொல்வீங்க?

பதில்: காற்றாலை மின்நிலையம் எப்படியோ, அதேதான் இது.

கேள்வி: ஒரே வரி..!

பதில்: ஆமா. தத்துவம் என்னான்னு பாத்தீங்கன்னா காந்தம் மின்சாரத்தை உண்டாக்கும்; மின்சாரம் காந்தத்தை உண்டாக்கும். இப்படியே மாறி.. மாறி.... அப்ப இந்த மின்சாரத்தை உண்டாக்குறதுக்கு சுத்துறதுக்கு பிரைமூவர்ன்னு பேரு. ஒரு அடிப்படையில ஒரு சக்தி வேணும். அந்த அடிப்படை சக்திய கொண்டு வர்றதுக்கு நீர், அனல், அணு, காற்று மின்நிலையம்னு உண்டாக்கி இருக்காங்க. டர்பைனை எது கொண்டாவது சுத்தணும். சுத்துனா அதோட இருக்குற ஆல்ட்டர்னேட்டர்ல மின்சாரம் வரும். விஞ்ஞானிகள் பலதையும் கண்டுபிடிச்சுட்டு போயிருக்காங்க. ஆனா அத முடிவான முடிவல்ல ; இது யூகமே அப்படீன்னு சொல்லிட்டுப் போயிருக்காங்க. அப்ப நான் எதுல நின்னு யோசிக்கிறேன்னா... காத்து இல்லன்னா காத்தாலை நின்னு போயிரும். தண்ணி இல்லைன்னா நீர்மின்நிலையம் நின்னு போயிரும். எரிபொருள் இல்லைன்னா அனல்மின்நிலையம் நின்னு போயிரும்.

இதுல இந்த அனல்மின்சாரம் இருக்கு பாருங்க; இதை கடற்கரைப்பிரதேசத்துலதான் உண்டாக்கணும். ஏன்னா கப்பல்ல
நிலக்கரி வந்துகிட்டே இருக்கணும். வர்ற நிலக்கரிய நொறுக்கி, சுத்தப்படுத்தி, வடிகட்டி எரிச்சு மின்சாரத்த உண்டாக்குனதுக்குப் பின்னாடி வர்ற சாம்பல் இருக்கு பாருங்க... நெய்வேலியில மட்டும் ஒரு நாளைக்கு 150 லாரி சாம்பல் அள்ளுறாங்களாம்! அந்த சாம்பலால சுகாதாரக்கேடு வேற.

இப்ப பல லட்சம் கோடிக்கு அரபு நாடுகள்ல இருந்து பெட்ரோல், எண்ணெய் வாங்குறாங்க. இங்க ஒரு வாகனத்துல பார்த்தா ரேடியேட்டர்.. எஞ்சினு... அது.. இதுன்னு எல்லாத்தையும் பிரிச்சு கீழ போட்டுட்டு இதே மாதிரி ஒரு டி.ஸி மெசின வச்சி மாத்திட்டோம்னா வேணும்கிற மாதிரி செய்யலாம். சத்தமில்லாம, தூசியில்லாம, அனலும்
இல்லாம ஈஸியா பண்ணிடலாம்.

அப்படி ஒண்ண செஞ்சு, நம்ம பஞ்சம் தீரணும்னு வைங்க... கவர்ன்மெண்டுக்கு கொடுத்துட்டு, அய்யா.. இத வச்சுங்க... இதான் பார்முலா... ராயல்டி மாத்திரம் என் குடும்பத்துக்கு கொடுத்திருங்கன்னு சொல்லிட்டா உலகத்துல இருக்குற கார் கம்பெனியில் எல்லாம் நம்ம ஃபார்முலா உபயோகத்துல வரும். அப்படி வறதுல பத்து பெர்சண்ட் வாங்குனா போதும். பத்துல ஒன்பதை நீங்க வச்சுக்கோங்க. ஒரு பர்சண்ட் எனக்கு போதும்.

இது எண்ணெய் வள நாடுகளை பாதிக்கும் அப்படீன்னு எல்லாரும் சொல்றாங்க. ஆமா... இமயமலைக்கு குளிருதுன்னு கம்பளி போட்டு பொத்த முடியுமா? எண்ணெய் வள நாடுகளை பாதிக்கும் என்பதுக்காக
விஞ்ஞானத்தை நிறுத்த முடியுமா? பல கோடி மக்களுக்கு பயனுள்ள விஞ்ஞானம். வெட்கிரைண்டர் கணக்கா சின்னதா, ஒரு 200 வாட்ஸ் பிரைமூவர், 2000 வாட்ஸ் அவுட்புட் வச்சுக்குவோம். கேஸ் எதுவும் வேண்டியதில்லை.

இது சர்வ சாதாரணமான சமாச்சாரம் அப்படீன்னு அசட்டை பண்ணிறக் கூடாதுன்னு நினைக்கிறேன். சரி.. உங்க மாதிரியானவங்ககிட்ட நான் எதை எதிர்பார்க்க முடியும்? பொருளுதவின்னு ஒருத்தர்கிட்ட வாங்கினா "எனக்கென்ன தருவ?" அப்படீங்கிற கேள்வி இருக்கு? நானே எல்லாத்தையும் அனுபவிக்கப்போறேனா... இல்ல... என்னை சேர்ந்தவங்களும் பயனடையணும். நான் விட்டுட்டு சாப்பிடுற ஆள் கிடையாது. என்னைய நம்புனவங்க எல்லாருமே பயனடையணும். அந்த நோக்கம் எனக்கு உண்டு.

கேள்வி: அது மாதிரி ஏதாவது நிறுவனங்கள் வந்து கேட்டிருக்காங்களா உங்ககிட்ட? பார்முலாவ எங்ககிட்டகொடுங்க... நாங்க பண்றோம்னு..?

பதில்: ஒரு நிறுவனம் வந்தது மெட்ராஸிலிருந்து. ஏன்னா அவங்களுக்கு ஒரு நாளைக்கு ஆயிரம் யூனிட் மின்சாரம் தேவையாம். எனக்கு நண்பர்கள் இருக்காங்க.. சிவகாசியில எல்லாம் ஒரு நாளைக்கு அஞ்சு லட்ச ரூபா மின்சாரம் வாங்குறவங்கல்லாம் இருக்காங்க. ஆனா என்ன செய்வாங்க?

நண்பர் ஒருத்தர் ஒரு வக்கீல் இருக்கார் - ரொம்ப பெரிசுபடுத்தி இருக்கீங்க.. உங்களால முடியாதுன்னால்லாம் ஒண்ணும் இல்ல. உங்களால முடியும். ஏன்னா உங்கள் பத்தி ஏ டூ இசட் தெரிஞ்சவன். உங்களால முடியும் அப்படீன்னு சொன்னார்.

ஆனா வெளியில பிரமுகர்கள் எல்லாம் என்ன நினைப்பாங்க? தொழில் முனைவோர், தொழில் செய்யறவங்க எல்லாம்... வரதராஜன் சாதாரண சட்டை, கைலி கட்டுன சாதாரண ஆளு. அஞ்சு கோடி பத்து கோடிங்கிறது ஏராளம் அப்படீன்னு. ஆனா அவங்க எல்லாருக்கும் ஆயிரம்கோடி அவங்களுக்கே வேணும் அப்படீன்னுதான் நினைப்பாங்க. அதனால பார்முலாவ வித்துரலாம். ஆனா நோக்கம் எல்லாரும் பயனடையணும் அப்படீங்கிற நோக்கம் இருக்கட்டுமே!

எடிசன் காதடச்சு சவ்வு எல்லாம் போச்சு. 89 பொருட்களை கண்டுபிடிச்சு பதிவு செஞ்சு ராயல்டி வாங்குனாரு... இல்லையா? நேரு புத்தகம் எழுதி ராயல்டி வாங்குனாரு. ஏன் அவங்ககிட்ட இல்லாத
கோடியா? அது மாதிரி பலன மக்களும் அடையணும். என் குடும்பம் - குட்டி, என் சந்ததிகளும் பலனடையட்டுமே.

--------------------------------------------------------------

நீண்ட நேரம் அவர் பேசுவதை பதிவாக்கிக்கொண்டே கேட்டுக்கொண்டிருந்தேன். அவரிடம் அனுமதி பெற்றுக்கொண்டு அவரது கண்டுபிடிப்பின் சில புகைப்படங்களையும் எடுத்தேன். எந்த முன்னேற்பாடுகளும் இல்லாமல் சென்றதால் என்னால் சரியான முறையில் கேள்விகளை கேட்க முடியவில்லை. இனிமேல் அவ்விதம்
செல்ல வேண்டுமெனில் சற்றேனும் முன்னேற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும் என்பதை இதிலிருந்து கற்றுக்கொண்டேன்.

பதிவு செய்யாமல் வெறுமனே பேசிக்கொண்டிருந்த போது, அவரது உழைப்பையும் அதன் மேல் அவருக்கிருக்கும் நம்பிக்கையையும் அறிய முடிந்தது. இந்தக்கண்டுபிடிப்பை அவரது மகன்களுக்கு கற்றுத்தந்திருக்கிறீர்களா என்று கேட்டதற்கு "மொதல்ல, பேசுனா பேசுறத நின்னு கேக்கணும் இல்லீங்களா?" என்று வறட்சியாக புன்னகைத்துக்கொண்டே சொன்னார்.

எத்தனையோ ஏமாற்றுக்காரர்கள் மத்தியில், மக்களுக்கு பலனளிக்கட்டுமே என்ற உந்துதலில், தான் அறிந்ததை வைத்து முயற்சி செய்து, வெற்றி பெற்று விட்டதாக நம்பும் அவரின் முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. நான் பேசிய வரையில் அவர் பொய்யுரைப்பதாக எனக்குத்தோன்றவில்லை.

நான் சென்ற நேரத்தில் மின்சாரம் தடைபட்டிருந்தது...! அவரிடம்... சூரியஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் முறையைக் கையாண்டு அவரது தொழிலுக்குத் தேவையான மின்சாரத்தை அவரே உற்பத்தி செய்து அவரது தொழிலை நடத்தி வந்தாலே போதுமே, அவரது கண்டுபிடிப்பு நீருபிக்கப்பட்டதாகி விடுமே என்ற போது, அவர்
சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்கு நிறைய இடம் வேண்டும் என்றும், அதற்கு மூலதனம் அதிகம் ஆகும் என்றும் கேள்விப்பட்டதாகக் கூறினார்.

இப்போதைய குடும்ப வாழ்க்கையை நடத்த, உலோகச்சல்லடைகள் தயாரிக்கும் பணிதான் உதவி வருவதாக கூறினார். தனது கண்டுபிடிப்பு கூடிய விரைவில் நடைமுறைக்கு வரவேண்டும் என்ற ஆர்வமும், ஏக்கமும் அவரது பேச்சிலும் கண்களிலும் தெரிந்தது. தான் நலமாக இருக்கும் போதே அது நடந்து விட வேண்டும் என்ற தவிப்பும் புரிந்தது.

இந்தக்கண்டுபிடிப்பு உண்மையா, இல்லையா..? உண்மையானால் உலக மக்களுக்கு எல்லாம் நல்லது. அல்லது கண்டுபிடிப்பு உண்மை இல்லையெனில் அதையும் உலகுக்கு தெரிவித்து விடலாம். மத்திய, மாநில அரசுகளுக்கு அதற்கான செலவு ஒன்றும் சுமையாக இருக்காது. ஆனால் அதை அரசுகள் செய்யுமா?

இந்த பேட்டியின் போது மெலிதாக பெய்து கொண்டிருந்த மழை அடைமழையாக மாறி கொட்ட ஆரம்பித்திருந்தது. எல்லோரும் சொன்னது போல "அந்த இயந்திரத்தை பிரித்துக்காண்பியுங்கள்" அல்லது "அந்த பார்முலா என்ன?" என்ற கேள்விகளை மட்டும் கடைசி வரை கேட்க மனம் வரவில்லை.

இந்த இயந்திரம் உண்மையானதா... இல்லையா என்று கண்டறிய வேண்டும் என்ற எண்ணத்தில் சென்ற நான், நினைத்ததை கண்டறிய முடியவில்லை என்பது உண்மையே. ஆனால் அப்படி யோசிப்பதை விட... இந்த மனிதரின் கண்டுபிடிப்பு உண்மையானதாக வேண்டுமே என்ற எண்ணம் மட்டுமே மனதில் கடைசியில் மேலோங்கி நின்றது.

===============================================================
பேட்டியில் வரும் சில பதங்களைக் குறித்து:

யூனிட் - Unit மின்சாரத்தின் பயன்பாட்டை அளவிட உள்ள அலகு

ஆர்.பி.எம் - RPM (Rotation Per Minute) குறிப்பிட்ட இயந்திரத்தின் சுழலும் பகுதி ஒரு நிமிடத்தில் எத்தனை முறை சுழன்றது என்பதைக் குறிப்பது

போல் - Pole - இதை இப்போதைக்கு விளக்க முடியவில்லை.. இரண்டு, நான்கு, எட்டு, ..... என தயாரிக்கும் போதே இதை முடிவு செய்வர். இதனைப்பொறுத்தே இயந்திரத்தின் வேகம் இருக்கும். உதாரணமாக இரண்டு போல் எந்திரம் எனில் வேகம் சாதாரணமாக 2800 ஆர்.பி. எம்மாகவும், நான்கு போல் எனில் சாதாரணமாக 1500 ஆர்.பி.எம் ஆகவும் இருக்கும்.

குதிரைச்சக்தி - H.P (Horse Power)ஒரு இயந்திரத்தின் சக்தி - ஆங்கில முறைப்படி.

வாட்ஸ் - Watts ஒரு இயந்திரத்தை உபயோகித்தால் எவ்வளவு மின்சாரம் செலவாகும் என்பதை குறிப்பதற்கான அளவு - தற்கால முறைப்படி.

Kilo - Thousand மின்னியலில் ஆயிரம் என்பதைக்குறிக்கக்கூடியது.
உதாரணமாக ஒரு கிலோ வாட் என்று சொன்னால் 1000 வாட்ஸ் என்று பொருள்படும்.

கே.வி.ஏ - KVA (Kilo Volt Ampere) மின்சார உற்பத்தியை அளப்பதற்கான மற்றுமொரு அளவீடு.

வோல்ட்ஸ் - Volts மின்னழுத்தம்

ஆம்பியர் - Ampere மின்னோட்டம்

வாட்ஸ் - Watts மின்சாரம் எவ்வளவு செலவாகும் அல்லது உற்பத்தி செய்யப்படும் என்பதைக்குறிக்க பயன்படும் அளவு.

ஆல்ட்டர்னேட்டர் - Alternator (AC Generator) பொதுவாக வீடுகளில் உபயோகிக்கப்படும் மாறுநிலை மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இயந்திரத்தின் பெயர்; வழக்கத்தில் ஜெனரேட்டர் என்றும் கூறுவர். ஜெனரேட்டர் என்பதை சரியாக கூற வேண்டுமெனில் நேர்நிலை மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய (மின்கலன் போன்று ) இயந்திரம் எனக் கொள்ளலாம்.

இன்வெர்டர் - Inverter மின்னியலில் நேர்மின்சாரத்தை மாறுநிலை மின்சாரமாக மாற்றக்கூடிய சாதனம்.

ஏ.ஸி - Alternating current மாறுநிலை மின்சாரம்.

டி.ஸி - Direct current நேர் மின்சாரம்.

எஃபீசியன்ஸி - Efficiency தரக்கூடிய சக்திக்கும் பெறக்கூடிய சக்திக்கும் உள்ள விகிதாச்சாரம்
----------------------------------------------------------------------
தட்டச்சியதில் பிழைகள் இருப்பின் பொறுத்தருள்க.

mukilan
19-10-2008, 11:02 PM
பேட்டிக்கு நன்றி அண்ணா. படிக்க ஆர்வமிருந்தும் சரியான வசதி இல்லாததால் திரு.வரதராஜன் அவர்களால் படிக்க முடியவில்லை என்பது வருத்தமான தகவல். அரசு அவர் படிக்காததால் அலட்சியம் செய்வது துரதிர்ஷ்டம்தான். இனி வரும் பேட்டியில் இதன் விலை என்ன, வீடுகளுக்கு பயன்படுத்த முடியுமா என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என நம்புகிறேன்.

செல்வா
19-10-2008, 11:50 PM
நல்ல காரியம் தான்....
இது சாத்தியமா என ஒரு விவாதமே நடந்த ஞாபகம்.
தொடருங்கள் தொடர்கிறோம்.தட்டச்சியதில் பிழைகள் இருப்பின் பொருத்தருள்க.

ஹா....ஹா...... பிழை கண்டுபிடிச்சுட்டேனே... :D:D:D

பாரதி
20-10-2008, 04:12 AM
கருத்துக்களுக்கு நன்றி முகிலன், செல்வா.
-----------------------------------------------------------------------
கேள்வி: வேகம்னு நீங்க சொல்றது எதை?

பதில்: வேகம்னா.... இப்ப ஒரு கிலோ வைக்கிறோம் ஒரு சிலிண்டர்லன்னா, அது ஒரு பத்து மில்லி மீட்டர் தூக்குது, ஒரு ரேம்ம அப்படீன்னா... அதே இத நூறு கிலோ சமமாக்குனோம்னா அது கொஞ்சம் குறையும்; அந்த உயரம் குறையும். அதுதான் வேறுபாடு. ஆக இயந்திரவியல்ல எவ்வளவு வேணும்னாலும் கூட்டலாம். அதுக்கு வாய்ப்புக்கள் ரொம்ப ரொம்ப இருக்கு. அத அனுபவரீதியா படிச்சுகிட்டேன். ஆனா அத, படிப்பறிவு இல்லாததால மத்தவங்களுக்கு புரியுற மாதிரி எடுத்து சொல்ல முடியல.

இனி உதவுறதுக்கு வந்து எலக்ட்ரிசிட்டி போர்டு அதிகாரிகள் எல்லாம் வந்து சொல்றாங்க, நாங்க வேணும்னா உதவுறோம், நீங்க வேணும்னா பண்ணுங்க அப்டீன்னு. ஆனா நான் என்ன நினைக்கிறேன்னா... நம்மளோ புதுசா செய்யுறோம். ஒரு சிறு வேறுபாடு வந்தாக் கூட, அவச்சொல் வந்திரும் அப்டீங்கிறதுக்காக நான் அந்த உதவிய எதிர்பார்க்கல இதுவரைக்கும். யாரோட உதவியயும் எதிர்பார்க்கல.

அப்புறம் சில பேரு வராங்க.... அது என்ன புதுமையா இருக்கு! சமமாவே கொண்டு வர முடியாதே? ஒரு குதிரைசக்தி பிரைமூவர் போட்டு, ஒரு குதிரை சக்தி மின்சாரமே உருவாக்க முடியாது. அது இயற்கைக்கு விரோதமானது அப்டீன்னு சொல்றாங்க படிச்சவங்க.

கேள்வி: ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது அப்டீங்கிறதப் பத்தி?

பதில்: அதாவது அணுவை ஆக்கவும் முடியாது, அழிக்கவும் முடியாது அப்டீங்கிறது விதி. ஆற்றலை ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது அப்டீங்கிறதும் விதி.

ஆனா நான் என்ன சொல்றேன் உங்களுக்கு, ஒரு வகை ஆற்றலை இன்னோரு வகை ஆற்றலா மாற்றலாம். அதுவும் விதிதான். அத சிலரு ஏத்துக்க மாட்டேங்கிறாங்க.

அதனால நான் என்னவோ பொய்யயே சொல்றேனோ அப்டீன்னு நினச்சு, கொஞ்சம் இதா பேசுறாங்க. அப்ப எனக்கு கொஞ்சம் பயம் இருக்கு, ஒரு தொழிலுக்கு வினை வச்சிரக்கூடாது அப்டீன்னு.
இத காமிச்சு, வித்தக்காரன் மாதிரி காமிச்சு, உதவின்னு வந்துட்டா, அவங்களோட பேச்சுக்கு ஆளாகணும். அது வேணாம். ஏன்னா எனக்குன்னு ஒரு கொள்கை இருக்கு. உழைக்கணும் - பிழைக்கணும். நான் லாட்டரி டிக்கெட் வாங்குறவனுமில்ல; கீழ கெடந்தா எடுக்குறவனுமில்ல. ஆண்டவனேன்னு, விதிய இல்லாத ஆண்டவன் மேலே போடுறதும் கிடையாது.

ஏன்னா மனுசன் என்ன என்னத்தயோ உருவாக்குனானோ அது மாதிரி ஆண்டவனையும் அவன் தான் உருவாக்குனான். அதனால இல்லாத ஒண்ண, எனக்குத் தெரியத ஒண்ண நான் வழிபடுறதும் இல்ல. .... நான் சொல்றதுல சிலத நீங்க சென்ஸார் பண்ணனும்னா பண்ணிக்கோங்க.

அது மாதிரி ஒரு வகை எனர்ஜிய இன்னோரு வகை எனர்ஜியா மாத்த முடியும்; அந்த எனர்ஜிய கூட்டவும் முடியும். நான் சொல்றது அனுபவரீதியானது. யார் சொல்லியும் நான் செய்யல. அனுபவ ரீதியா கண்டுபிடிச்சிருக்கேன்.

அத எடுத்து சிலருக்கு புரிய வைக்க முடியல. பலதை எடுத்துச்சொன்ன பிறகு, அதிகாரிகள், சில படிச்ச எஞ்சீனியர்கள் ஒப்புக்கொள்றாங்க.
சமீபத்துல இந்தப் பத்திரிக்கைல வெளியிட்ட பிறகு மெட்ராஸ் போயிருந்தேன். ஒரு பத்துப்பதினோரு எஞ்சீனியர்களை சந்திச்சேன்; என்னய வந்து பாக்க வந்தாங்க. எல்லோரும் வாக்குவாதம் பண்ணுனாங்க - இது முடியவே முடியாது அப்டீன்னு. அப்ப நான் சொன்னேன், எனக்கு விவரம் தெரிஞ்ச காலத்துல இருந்து நான் பொய் பேசுறதில்லீங்க. எனக்குன்னு சில கொள்கைகள் இருக்கு. அடுத்தவங்கள ஏமாத்தி சாப்பிடுறது... அது எனக்குப்பிடிக்கிறதில்ல ; எதையும் நான் மிகைப்படுத்தி சொல்றதுமில்ல. எனக்குத்தெரிஞ்சத மாத்திரம்தான் சொல்வேனே ஒழிய எதையும் மிகைப்படுத்திச் சொல்றதில்ல, அந்தப்பழக்கம் எனக்கில்ல.

அதனால என்ன நீங்க நம்பலேன்னா, இத நீங்க ஆராய்ந்து பார்த்துக்கலாம். செஞ்ச பொருள ஆராய்ந்து பார்த்துக்கலாம் அப்டீன்னு சொன்னேன்.

ஏன்னா மொழி தெரியாதவன் எப்படி ஊமையோ அது மாதிரி படிப்பறிவில்லாதவனும் ஊமைதான். ஏன்னா விளக்கிச் சொல்லமுடியாதில்லீங்களா...? அது மாதிரி நான் கண்டுபிடிச்சத சரியான முறையில சொல்லமுடியலயேன்னு வேதனை இருக்கு.
அப்ப என்னய மாதிரி ஆளு என்ன செய்ய வேண்டியிருக்கு; புரூப் பண்ண வேண்டியிருக்கு.

அப்ப நான் செஞ்சு காண்பிக்கிறேன், என்னால விளக்க முடியல அப்படீன்னேன். சில ஆளுங்க புரிஞ்சிக்கிறாங்க, சரி.. இருக்கலாம் அப்டீன்னு. சிலர் வந்து அவங்களும் குழம்பி என்னயும் குழப்புறாங்க. அப்டி இருக்கும் போது நான் யாரோட உதவியையும் நாடிப்போகவும் முடியல.

இத பேடண்ட் ரெஜிஸ்ட்ரேஷன் பண்ணனும் அப்டீன்னு சிலர நாடிப்போகும் போது, ரொம்ப வேண்டியவங்களே அந்த ஃபார்முலா அறியணும் அப்டீன்னுதான் விரும்புறாங்க. இது பெரிய ஃபார்முலா எல்லாம் ஒண்ணும் இல்ல. ரொம்ப ரொம்ப சின்னது, ரொம்ப சிம்பிளா பண்ணியிருக்கேன். அப்டீங்கிற போது, ஃப்பூ இவ்வளவுதானா...அப்டீங்கிற மாதிரி போயிரும். அது மூடி இருக்கிற வரைக்கும்தான் ப்ராஜெக்ட்.

இத செஞ்சதோட நோக்கம் என்னன்னா, பல ஆயிரம் கோடி மெஷின்கள் வேணும் இந்த உலகத்துக்கு; ஒரு ஆளோ ஒரு ஸ்தாபனமோ இத செஞ்சி வெளிய வச்சி எல்லோரும் பயன்படுத்த முடியாது. அப்ப அந்த ஃபார்முலாவ வெளியிட்டோம்னா, அவங்கவங்க தங்களோட தேவைகளுக்கு, தொழிற்சாலைகளுக்கு, வீடுகளுக்கு அவங்களே மின்சாரம் தயாரிச்சுக்கலாம் எளிய முறையில. இந்த கவர்ன்மெண்ட்ட போட்டு தொந்தரவு பண்ணிகிட்டு இருக்கணுகிற அவசியம் இல்ல. அந்த நோக்கத்தோடு இத செஞ்சிருக்கோம்.
இன்னும் பலத செய்யலாம். எனக்கு, உதவுறதுக்கு, பொருளதவி பண்றதுக்கு ஆளு இல்ல. ஒரு உதாரணத்துக்கு ஆல்ட்டர்னேட்டர் புதுமையா வேணும் அப்டீன்னு வையுங்களேன், மார்க்கெட்ல நான் போயி வாங்க முடியாத நிலமை இருக்குன்னா , நான் என்ன செய்வேன்னா அத கொஞ்சம் கொஞ்சமா உருவாக்குறது. ரொம்ப உழைப்பேன். அளவில்லாம உழைச்சேன். அப்படி உருவாக்குறது, அத நானு தெளிவு பண்ணிகிட்டு, சரிதான் ,இது சரிதான் அப்டீன்னு தெளிவு பண்ணிகிட்டு அழிச்சிற்றது. அழிச்சிட்டு அடுத்தது செய்யுறது.
அப்படி இது வரைக்கும் செஞ்சது ஒன்பது மெஷின். இனி ஒரு மெஷின் செய்யணும்; பத்தாவது மெஷின் - அதுதான் கடைசி. அப்புறம் ரெஜிஸ்ட்ரேஷனுக்குப் போக வேண்டியதுதான். அந்த மெஷின இன்னும் கொஞ்சம் மூடி மறைச்சு செய்யணும்னு நினைக்கிறேன்; இன்னும் கொஞ்சம் எனர்ஜியக்கூட்டணும்னு நினைக்கிறேன்.

-----பேட்டி தொடரும்-----

பாரதி
20-10-2008, 09:29 AM
கேள்வி: மூடி மறைச்சு செய்யணும்னு நீங்க சொல்றதுக்கு என்ன காரணம்?

பதில்: என்னான்னா, பேடண்ட் ரெஜிஸ்ட்ரேஷன் ஆகுற வரைக்கும். என்னோட நோக்கம், அதுக்குப்பின்னாடி எல்லாரும் அதை செய்யணும்கிறதுதானே...

கேள்வி: இந்த ஒன்பதாவது மெஷின நீங்க எப்படி வடிவமைச்சிருக்கீங்க?

பதில்: நீங்களே பார்க்கலாமே அதை..! இப்ப கரண்டு இல்ல..!! இருந்தா ஓட்டிக்காண்பிக்கலாம்.இது ஒரு மூணு ஹெச்.பி மோட்டார். ஏறத்தாழ ஒரு நாலரை ஆம்பியர்; ஒரு ரெண்டரை யூனிட் மின்சாரம் செல்வாகும் ஒரு மணி நேரத்துக்கு. இந்த மோட்டார் அந்த கியர்பாக்ஸ சுத்துது. கியர்பாக்ஸ்ல இருந்து ஆல்ட்டர்னேட்டருக்கு கனெக்ஷன் இருக்கு. இது 10 கே.வி.ஏ (KVA) ஆல்ட்டர்னேட்டர். கிட்டத்தட்ட 10 கே.வி.ஏ..ன்னாலும் அதன் திறன் - எஃபீசியன்ஸி எட்டு ஹெச்.பி வரைக்கும் ஓடும் - இதுல மின்சாரம் எடுத்தா.
மூணு ஹெச்.பி பிரைமூவருக்கு (மோட்டாருக்கு) கொடுக்குறோம்; அது மூல சக்தி. எட்டு ஹெச்.பிக்கு, எம்-முக்கா ஆறாயிரம் வாட்ஸ். கிட்டத்தட்ட ஆறு யூனிட் மின்சாரம் இதுல உருவாகும்னு வைங்களேன். கிட்டத்தட்ட பதினாலு ஆம்பியர் பதினஞ்சு அம்பியர் மின்சாரம் கிடைக்கும். மூணு ஃபேஸ், 440 வோல்ட். அத எடுத்து ஒரு 10 ஹெச்.பி இண்டக்சன் மோட்டார் இழுக்குற மாதிரி பண்ணியிருக்கோம்.இப்ப இந்த மோட்டார லோடு கொடுத்துப்பாக்குறதுக்கு எங்ககிட்ட எந்த மெசினும் இல்ல.

கேள்வி: அப்ப லோடு கொடுக்காம வெறும் மோட்டார மாத்திரம் ஓட்டிப்பார்த்தீங்களா?

பதில்: இத அழுத்தம் கொடுத்தோம்னு சொன்னா, ஆம்பியர் மீட்டர், வோல்ட் மீட்டர் நாங்க வச்சிருக்கோம். அப்ப வோல்ட்டேஜ் (voltage) நிலையா இருக்கு, ஃபிரிக்குவென்ஸி (frequency) நிலையா இருக்கு.

ஆம்பியர் மீட்டரும் வச்சிருக்கோம். அதுல 10 ஆம்பியர் வரைக்கும் லோடு கொடுத்து பார்க்க முடியும். மோட்டார் மேக்ஸிமம் 15ஆம்ப்ஸ் எடுக்கும் அப்டீங்கிறது என் கணிப்பு.

ஒரு நாலு நாளக்கி முந்தி ஒரு இன்ஞீனியரிங் காலேஜில இருந்து ஒரு புரபசரு, அதிகாரிக எல்லாம் வந்தாங்க. வந்து பார்த்துட்டு, நீங்க ஓட்டிக்காண்பிக்கிறீங்க. ஏதாவது ஒரு மெஷின்ல ஓட்டிக் காண்பிங்க; நாங்க நம்புறோம் அப்டீன்னாங்க.
யாரும் நம்பி எனக்கொன்னும் ஆகப்போறதில்ல. ஆனாலும் நான் நம்புறேன்.நீங்க ஓட்டிக்காண்பிங்க அப்டீன்னு சொல்லிட்டுப்போயிருக்காங்க. இதுக்கு ஏதாவது வழி பண்ணனும். இத வழி பண்ணுவமா.. இல்லை பத்தாவது மெஷின முடிச்சிருவோமா... அப்டீங்கிறதில இருக்கேன். அதுதான் கடைசி மெஷின்.

கேள்வி: கியர்பாக்ஸுக்கும் ஆல்ட்டர்னேட்டருக்கும் எப்படி தொடர்பு ஏற்படுத்தி இருக்கீங்க?

பதில்: அது ஜாயிண்ட் போட்டிருக்கோம்; மோட்டார்ல இருக்குற ஜாயிண்ட் மாதிரி. இது என்ன வேகத்துல ஓடுதோ அதப்பொறுத்துதான் பிரிக்குவென்ஸி. ஆல்ட்டர்னேட்டர் 1500 ஆர்.பி.எம் போகும். இதுல ஸ்பீடு குறஞ்சா எந்த மோட்டார்ல நாம மின்சாரத்த கொடுக்குறமோ அதனோட ஸ்பீடும் குறையும்.
ஆனா மின்சாரத்துக்காக மாத்திரம் இத நாங்க பண்ணல. டீசல், பெட்ரோம் இல்லாம வெகிக்கிள்ஸ் ஓட்டணும் அப்டீங்கிறது எங்களோட நோக்கம். இந்த எனர்ஜிய உபயோகப்படுத்தி அப்படி ஓட்டலாம்; அதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கு.

ஆனா வேணுங்கிற சாதனங்கள வாங்கி, உடனே செய்யுறதுக்கு எங்களால முடியல. சம்பாரிச்சு சம்பாரிச்சு சொத்துக்கள வித்து, இப்படியே செஞ்சிகிட்டு வர்றோம்.

கேள்வி: இத செய்யுறதுக்கு உங்களுக்கு எவ்வளவு செலவு ஆகி இருக்குங்கய்யா?

பதில்: கிட்டத்தட்ட எண்பத்திஆறில் இருந்து செஞ்சிட்டு வர்றேன். கோடிக்கணக்கில் செல்வாகி இருக்கும். ஏன்னா நிறைய சொத்துக்களை வித்துருக்கேன். இருந்தத எல்லாம் வித்துட்டு... இப்ப என்ன இருக்கு? இந்த ஃபேக்டரி மாத்திரம்தான் இருக்கு, இதுவும் கடனில் இருக்கு. நிறைய கடன் வாங்கிப்போட்டு இத செஞ்சிருக்கோம்.

கேள்வி: குறிப்பா இந்த மெஷின மாத்திரம் இப்ப செய்யுறதுன்னா எவ்வளவு செலவாகும்னு நினைக்கிறீங்க?

பதில்: ஒரு மூணு லட்ச ரூபா இருந்தா செஞ்சிரலாம். இனிமே செய்திரலாம் - ஏன்னா இத எல்லாம் கண்டுபிடிச்சிட்டோம்; இல்லீங்களா?
இனிமே செய்யுறது எளிது.

கேள்வி: இப்ப மூணு ஹெச்.பிக்கு பதிலா, கூடுதல் ஹெச்.பி இருக்குற மோட்டார உபயோகப்படுத்தினா கூடுதலான மின்சாரம் எடுக்க முடியுமா?

பதில்:ஆமா.. இப்ப இதுல மூணு கொடுத்து பத்து எடுக்கறோம். ஏன் அஞ்சே எடுக்கறோம்னு வைங்க. அப்படீன்னா 2000 வாட்ஸ் பிரைமூவர், 5000 வாட்ஸ் அவுட்புட் எடுக்கறோம்னு வச்சுக்கோங்க, அந்த 5000 வாட்ஸ்க்கு ஒரு மோட்டாரப் போட்டு அதை 15000 வாட்ஸ் ஆக்கிறலாமுல்ல. மல்ட்டிப்பிளை பண்ணிகிட்டே போகலாம்.

கேள்வி: அப்ப நீங்க சொல்றதப் பார்த்தா ஒரு யூனிட் மின்சாரத்த வச்சுகிட்டு, கிட்டத்தட்ட உலகத்துக்கே மின்சாரம் தரமுடியும் அப்டீங்கிற மாதிரியில்ல ஆகுது?

----- பேட்டி தொடரும் -----

பாரதி
20-10-2008, 11:49 AM
பதில்: ஆமாங்க. ஒரு 1000 கே.வி.ஏ அளவுக்குப் போயிட்டோமுண்ணா ஒரு குக்கிராமத்துக்கு, ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தள்ளி இருந்து வருது இல்லீங்களா... தூத்துக்குடி... அப்புறம்... கன்னியாகுமரி... இந்த காற்றாலை மின்நிலையங்கள் இருக்குன்னா, அதை அங்கே இருந்து கொண்டு வந்து, பல சேதாரங்களாகி, அதைக்கொண்டு வந்து ஊருக்குள்ள ட்ரான்ஸ்பார்மர்கள் எல்லாத்தையும் நிறுவி, நிறைய கண்டக்டர்கள் பயன்படுத்தி, ஆளுகளப்போட்டு செஞ்சி வரும் போது செலவீனங்கள் கூடுது. இந்த பார்முலாப்படி அங்கங்க கிராமங்கள்ல எத்தனை ஆயிரம் கே.வி.ஏ வேணுமோ அதப் பண்ணிக்கலாம்.

கேள்வி: வீடுகளில் உபயோகிக்கிற மாதிரி செய்தா இன்னும் எளிதா இருக்குமே?

பதில்: செய்யலாமே.. இப்ப வீட்ல 200 வாட்ஸ் மின்சாரத்தை வச்சுகிட்டு கிட்டத்தட்ட 1000 வாட்ஸ் மின்சாரம் தயார் பண்ணிடலாம். அதேது 400 வாட்ஸ் மின்சாரத்தை வச்சுகிட்டு 2000 வாட்ஸ் மின்சாரம் எடுக்கலாம். டி.வி, ஃபிரிட்ஜ், ஏன் எலக்ட்ரிக்கல் அடுப்பு கூட வச்சுக்கலாம். கேஸ் வேண்டியதில்ல. சரி... இப்ப மின்சாரம் இல்லன்னு வச்சுக்கோங்க.. சாதாரண 12 வோல்ட்ஸ் பேட்டரி வச்சு, இந்த இன்வர்டர்..ன்னு இருக்கு பாருங்க - அத வச்சு உற்பத்தி பண்ணிக்கலாம். பேட்டரிய சார்ஜ் போட்டுக்கலாம். அது சார்ஜ் ஆகிகிட்டு இருக்கும். அதனால இதுல நிறைய இருக்கு.

கேள்வி: அந்த பேட்டரியக்கூட சூரியஒளியிலிருந்து தயாரிக்கிற மின்சாரத்த வச்சு சார்ஜ் பண்ணிக்கலாமே.. இல்லையா?

பதில்: ஆமா.. அப்படியும் செய்யலாம்.

கேள்வி: இந்த ஒன்பதாவது மெஷின் சம்பந்தமா மேற்கொண்டு ஏதாவது விளக்கணும்னு ஆசைப்படுறீங்களா?

பதில்: ஆமா. ஒரு ஏ.ஸி சொன்ன மாதிரி, ஒண்ணுக்குப் பத்துன்னா நிறைய சாதனங்கள், நிறைய செலவு பண்ண வேண்டியதிருக்கு. அதனால இத ஒண்ணுக்கு மூணு அப்படீங்கிற மாதிரி சுருக்கிட்டோம்.

கேள்வி: இப்படி சுருக்குறதால உற்பத்திச்செலவு குறையுமா..?

பதில்: ஆமாங்க. குறையும். அதுக்கப்புறம் அதுல இருந்தே மின்சாரத்தப் பெருக்கிகிட்டே போகலாம்.

கேள்வி: இந்தக்கண்டுபிடிப்பு ஏன் அதிகமான மக்கள்கிட்டே போய் சேரலைன்னு நீங்க நினைக்கிறீங்க?

பதில்: முதல்ல இது ஒரு அதிசயம். நம்ப மறுக்குறாங்க முதல்ல. அதெப்படி சாத்தியம்? சூரியன் அங்கிட்டு உதிச்சாலும் ஆகாதே? இப்ப ஒரு இஞ்சீனியரிங் காலேஜ்ல இருந்து ஒரு பிரின்ஸிபால் வர்றாரு. 'இந்த மோட்டரத் தொட்டா நின்னுக்கிரும் -ஓடாது. மின்சாரத்துல ஒண்ணுக்கு ஒண்ணே சமமில்ல' அப்டீங்கிறார். அவர் படிச்சவர்.

இத வச்சு அதப்பெருக்கி, அத வச்சு இதப்பெருக்கி மின்சாரம் செஞ்சிடறோம்னு ஒரு குருட்டுக்கணக்கு எல்லாம் இல்ல. மின்சாரம்னா என்னான்னு அடிப்படையிலேயே ஆராய்ஞ்சுதான் இறங்குறோம்.

ஆனா.. அதை வெளிப்படையா சொல்றதுக்கு முடியாம.... இந்த ஊமைன்னு வச்சுக்கோங்களேன்.

கேள்வி: என்ன செய்தா இது பிரபலமாகும்னு நீங்க நினைக்கிறீங்க? அரசாங்கத்த விடுங்க... ஒரு தனிப்பட்ட நபர் அல்லது ஒரு சிறிய தொழிலதிபர் உதாரணமா ஒரு லட்சம் அல்லது இரண்டு லட்சம் முதலீடு செய்ய தயாரா இருக்கிறாங்கன்னா.. அவங்க என்ன செய்தால் உங்களுக்கு உதவியா இருக்கும்னு நீங்க நினைக்கிறீங்க?

பதில்: என்னைப்பொறுத்த வரைக்கும் ஒரு லட்சம், இரண்டு லட்சம் அப்படீங்கிறது ரொம்ப கம்மியான தொகை. உதவுறதுக்கு சில பேரு வந்தாங்க. ஆனா ஒரு அவநம்பிக்கையோட வர்றாங்க. இது சாத்தியம்தானா..? வரதராஜன் பொய்புரட்டு சொல்றாரா...அப்டீன்னு நினச்சு வராங்க. அப்ப நமக்கே ஒரு பயம் இருக்கு. என்னான்னா.. அவங்க நம்பிக்கைப்படணும்னா நாம தயார்நிலையில இருக்கணும். சுவிட்சப் போட்டுக் காண்பிக்கணும். இந்தாப்பாத்துக்கோங்க....அப்டீன்னு காண்பிக்கணும்.

ஒரு பிரின்ஸிபால் சொல்றேன்னு சொன்னாங்க... இந்த ஆம்பியர் மீட்டர் இருக்கு... பாத்துக்கோங்க.. இது இன்புட்டு, இது அவுட்புட்டு... மின்சாரதக்கண் கொண்டும் பார்க்க முடியாது... தொட்டும் அறிய முடியாது.. இல்லீங்களா? மீட்டர்தான்... அதப்பாத்துக்கோங்க சார் அப்டீன்னு சொன்னா.... இல்ல.... நீங்க எனர்ஜிய புரூவ் பண்ணுங்க அப்படீங்கறார். வேற ஒரு எந்திரத்துல கொடுத்து பண்ணுங்க... அப்படீங்கறார். அப்ப வேற எந்திரத்துக்கு நான் எங்க போறது? அப்ப ஒண்ணு வேற எந்திரம் செய்யணும்... இல்லன்னா வாங்கணும்.

கேள்வி: நான் இப்படி நினைக்கிறேன்.. நீங்க தயார் செய்திருக்கிற மோட்டார வச்சி, ஒரு பெல்ட் போட்டோ... அல்லது ஏதாவது ஒரு முறையில ஒரு பம்ப், லேத், கம்பரெஸ்ஸர் .. இப்படி ஏதாவது ஒண்ணை ஓட்டிக்காண்பிக்கணும் அப்படீன்னு அவர் சொல்லி இருப்பார்னு நினைக்கிறேன்.

பதில்: இருக்கலாம். அப்படி இருக்கலாம். எங்ககிட்டே இருக்குற மெஷினுக.... நான் எந்த மெசின செஞ்சாலும் அதோட ஹார்ஸ்பவரக் குறைக்கிறது வழக்கம். நான் பத்து வயசுலே இருந்து தொழில் செய்யுறேன். பதினாலு வயசுலே இருந்து சொந்தத்தொழில் செய்யுறேன். நான் பல தொழில் படிச்சுருக்கேன் அனுபவரீதியா. அப்போ ஆட்டோமொபைல், ரேடியோ மெக்கானிஸம்... அப்படீன்னு எது அத்தியாவசியமோ அதப்பூரா படிச்சு வந்திருக்கேன். கொல்லு வேலையிலிருந்து அத்தனையும் படிச்சு வந்திருக்கேன். யாரோட உதவியையும் நான் நாடுனதில்ல. ஏன்னா நான் செஞ்சா... என் கைப்பட எதச் செஞ்சாலும் மட்டசுத்தமா செய்வேன்.

இவன் என்னோட ரெண்டாவது பையன்.. டை மேக்கர். புதுமையான டை எல்லாம் பண்ணுவான்.

ஆனாலும் அத சொல்லிக்கொடுக்குறது நானு; இத இப்படி செய்ப்பா... அவன் அப்படியே செஞ்சிடுறான். ஆனாலும் என்னோட கைவாகு, அனுபவங்கள்... அவனுக்கு வயசு கம்மி.. அதனால வர்றதில்ல. அது எனக்கே கொஞ்சம் திருப்திப்படுறதில்ல. நானே செய்யணும்னு நினைக்கிறவன். அப்படித்தான் ஒண்ணொண்ணும் செஞ்சிட்டு வர்றேன். ஹார்ஸ்பவர் குறைச்சே பலவகைப்பட்டமெஷின் பண்ணிருக்கோம்.

இங்கே நாங்க கனெக்ட் பண்ணி இருக்குற லோடே ஆறு ஹெச்.பி..தான். இப்ப இந்த மெஷின ஓட்டறதுக்கு மூணு எடுத்துட்டோம்னா... மீதி மூணுதான் மிச்சம். அப்ப மூணுக்கு மூணு அப்படீன்னுதானே காண்பிக்கணும்.. அதான் பிராப்ளம்.
இப்ப கனெக்டேட் லோடு கூட இருக்குன்னு வச்சுக்கோங்க... கூட இருந்தா காண்பிக்கலாம்.

நாங்க 96..ல ஒரு மெஷின் பண்ணுனோம். அது ஒரு ராட்சஸ மெஷின். என்னத்தவிர யாரும் அந்த மெஷின்கிட்ட போக மாட்டாங்க. அவ்வளவு பயம் இருக்கும். அந்த மெஷின் ஓடும்... அது ஒரு குதிரைசக்தி பிரைமூவர். அப்ப இங்க இருக்குற போர்டுல கனெக்சன் போடுணோம்னா... ஒரு அஞ்சு ஹெச்.பி எடுக்கலாம் அப்படீன்னு வச்சுக்கங்க. சின்ன சின்ன மோட்டார்கள் எல்லாம் இருக்கு லோடுக்கு. அப்ப... கனெக்சன் போடுப்பா அந்த மெஷினுக்கு அப்படீன்னு இவன்கிட்டதான் சொன்னேன். இந்தப்பையன் போட்டான்.
அந்த மெஷின நாங்க போட்டதே ஆர்.பி.எம் கம்மியா பண்ணோம். 750 ஆர்.பி.எம். இங்க இருக்குற மோட்டார்கள் எல்லாம் 4போல் மோட்டார். அப்ப 1500 ஆர்.பி.எம். கொடுத்து அந்த ஆல்ட்டர்னேட்டர சுத்தும் போது எல்லாம் அதே ஸ்பீடில் ஓடும்.

அந்த மெஷின 750 ஆர்.பி.எம் வச்சு சுத்தும் போது எல்லா மெஷினும் ஓடுது. ஆனா ஸ்பீடு... கம்மியா ஓடுது. அப்ப.... 14 ஆம்பியர் வரைக்கும் எடுக்க முடியும் அப்படீங்கறதால, வெல்டிங் மெஷினுக்கு கனெக்சன் போடலாம்ணு நினச்சேன். இந்த ஆர்.பி.எம் குறைக்கறதால, அனுபவ ரீதியா கரண்ட் கூடுதா அப்படீங்கிற தெரிஞ்சுக்கலாம்னு கனெக்சன் கொடுக்க சொன்னேன்.

இப்ப நான் சொல்றது முக்கியமானதுங்க. 96..ல இதப்பண்றோம். ஒரு குதிரைசக்தி மோட்டார்தான்.... அந்த மெஷின் ஓடுது.. ஆனா பூமியெல்லாம் அதிருது. இங்க இருக்குற மோட்டார் எல்லாம் ஓடுது. வெல்ட்டிங் மெசின்ல போட்டு மேக்ஸிமம் எத்தனை ஆம்பியர் எடுக்க முடியும்னு அனுபவ ரீதியா பாத்திருவோம்னு... முடிவு பண்ணோம்.

----- பேட்டி தொடரும் ----

பாரதி
20-10-2008, 02:18 PM
அப்படி போட்டு பார்த்ததில 10கேஜி(kg) ராடு எரிஞ்சிச்சு. 10கேஜி ராடு மெல்ட் ஆகுன்னு சொன்னா குறஞ்சது 15 ஆம்பியர் எடுக்கணும்... ஆச்சுங்களா? அப்ப 8கேஜி ராடு போடுன்னு சொன்னேன். போட்டுப்பாத்தா அதுவும் எரிஞ்சது. சரி... இது வேணாம்.. கட்டிடக்கம்பி... ஆறு எம்.எம்(mm - millimeter) ராடு இருக்கா... அதப்போட்டுப் பாரு...ன்னு சொல்லி அதையும் போட்டுப்பார்த்தோம். அதுவும் எரிஞ்சது. வழக்கமா வெல்டிங் ராட் உருகணும்னா ஃபிளக்ஸ் (flux) வேணும்.. ஆனா இப்ப ஃபிளக்ஸே இல்லாம வெறும் கம்பியப் போட்டு எரிக்கிறேன்... அதுவும் எரியுது..! அப்ப ஆல்ட்டர்னேட்டர்ல பரபர..னு வைபரேஷன்(vibration). அது கெட்டுப்போனாலும் பரவாயில்ல..ன்னு, கட்டிடக்கம்பி 10எம்.எம் கட்டிட முறுக்குக்கம்பி அத சப்பைதட்டி ஹோல்டரில் மாட்டி அதை எரிக்கறோம். அதுவும் எரியுது!

இங்க சில எஞ்சீனியர்கள் இருக்காங்க - 'ஆணுக்கு ஆண் பிள்ளை பிறக்காதுங்க வரதராஜன். நீங்க பூமி உருண்டைல நின்னுகிட்டு அதை கடப்பாரை போட்டு நெம்புறீங்க. அது நடக்காது' அப்படீன்னாங்க.

நான் இந்த கோள்ல நின்னுகிட்டு இன்னோரு கோளை நெம்புறேன் அப்படீன்னு சொன்னேன்.ஒத்துக்கிற மாட்டேன்னுட்டாங்க.

சரிப்பா... கண்டுபிடிச்சாச்சு... இனி நமக்கு கவலை இல்ல. யாரும் அதைப்பாத்து ஆஹா... ஓஹோ..ன்னு புகழ்பாடணுகிறது நமக்கு அவசியமில்ல.நம்ம அறிவுக்கு இது எட்டுது. ஆர்.பி.எம் குறைச்சிக்கொடுக்கறதுனால ஆம்பியர் கூடுது; அபரிமிதமாக் கூடுது. அப்டீன்னுட்டு அதோட பிரிச்சிருங்கப்பா அந்த மெசின அப்படீன்னுட்டேன்.

97-ல் ஒரு ஆக்ஸிடெண்ட்ல என் ரெண்டுகாலும் ஒடஞ்சு போச்சு. ரெண்டு வருசம் ஓய்வுல இருந்தேன். அந்த தொடர்ச்சி போயிருச்சி.

கேள்வி: அந்த மெசின ஏன் பிரிக்க சொன்னீங்க? நீங்களே உங்க லேத்துக்கு அதை உபயோகப்படுத்தி இருக்கலாமே?

பதில்: அதாவது தனித்தனியா.. கூரை ஷெட்டு போட்ட மாதிரி..... இருந்துச்சு.. ஒரே இயந்திரமா இல்ல.

அடுத்து என்ன பண்ணேன்? ஒரு ஒன்பது இடத்துல வீட்டுக்கு, ஏழு ஏக்கர் சொச்சம்... ஒன்பது இடத்துல பூமியெல்லாம் வாங்கி வச்சிருந்தேன்.. வீட்டுக்கு, பேக்டரிக்கு.....அப்படீன்னு, ஒரு வீடு வச்சிருந்தேன் ஃபாரஸ்ட் ரோடுல. எல்லாத்தையும் வித்து வித்து செஞ்சேன், ஒண்ணு செய்ய அதை பிரிச்சிறறது...

கேள்வி: அதை ஏன் நீங்க பிரிச்சிடுறீங்க? அதுல உங்களுக்கு திருப்தி இல்லையா?

பதில்: இல்ல.. இல்ல,,, அடுத்து.... மேற்கொண்டு என்ன செய்றது... அப்படீங்கற கத்துக்குறதுக்காக... அறிவைப் பெறணும். அடுத்தவங்க பாக்கெட்ல கைய வச்சு இல்ல...

நான் ஏழை - பத்து வயசுல இருந்து உழைக்கிறேன்னு வச்சுக்கோங்களேன். இப்ப 67 வயசாச்சு... இன்னும் உழைக்கிறேன். நம்ம காச சேதாரம் பண்ணலாம். அடுத்தவங்க காச சேதாரம் பண்ண முடியாது. சொல்லுக்குக் கட்டுப்பட்டவன் நானு... சொன்னா சொன்னதுதான். அப்படி ஒரு குணம். மாத்தி பேசுறது எனக்குப்பிடிக்காது. சொன்ன சொல்லுக்கு வேல்யூ இருக்கும். ஏன்னா என்னோட ஆசான் பெரியார்..!

அப்புறமா ஒருத்தர் வந்தாரு... 'நீங்க கமர்ஷியலா பண்ணுங்க, வியாபார ரீதியா பண்ணுங்க... உங்களப்பத்தி நானு நிறைய கேள்விப்பட்டேன். பேப்பரு பத்திரிக்கையிலும் பார்த்தேன். கஷ்டப்படுறீங்கன்னு சொன்னாங்க... பெரிய குடும்பம்னு சொன்னாங்க... நிறைய கடன் பட்டிருக்கீங்கன்னு சொன்னாங்க' அப்படீன்னாரு.

ஆமா... எல்லாமே உண்மைதான். கஷ்டப்படுறதும் உண்மைதான். ஆர்வத்துல நஷ்டப்பட்டு செஞ்சிகிட்டே இருக்கோம் அப்படீன்னு சொன்னேன்.

ஏன் அத வியாபார ரீதியா பண்ணினா என்ன? அப்படீன்னாரு. வியாபார ரீதியா பண்ணலாம்னா ஒரே ஆளா இருந்தே கோடிக்கணக்கான மெஷின தயார் பண்ண முடியாது. பார்முலா கொடுத்தா அவங்க அவங்களே செஞ்சுக்குவாங்க. இது ரொம்ப எளிமையானதுதான். அதனால இத பேடண்ட் ரெஜிஸ்ட்ரேஷன் பண்ணிகிட்டு பண்ணலாம்னு நினைக்கிறோம். பேடண்ட் ரெஜிஸ்ட்ரேஷன் ஏன் பண்ணலைன்னா இன்னும் ஒரு பார்முலா இருக்கு. அதுதான் அந்த பத்தாவது மெசினு. அத செஞ்சு முடிச்சுகிட்டு... பேடண்ட் ரெஜிஸ்ட்ரேசனுக்கு தேவையான வேலைய செய்யலாம்னு நினைக்கிறேன்.

கேள்வி: அதுக்கு இன்னும் எவ்வளவு காலம் பிடிக்கும்னு நினைக்கிறீங்க?

பதில்: காலம் என்னங்க காலம்? பணம் வந்துட்டா உடனே காலம்தான். இனி கடன் வாங்க முடியாத நிலையில நான் இருக்கேன். ஏங்குடும்பம் ரொம்பப்பெரிய குடும்பம். 23 பேரு இருந்தாங்க. 25 வயசுல இந்தத் தொழிற்பேட்டைக்குள்ள நுழஞ்சேன்.எனக்கு இப்ப ஏழு புள்ளைங்க, ஒம்போது பேரன் பேத்திக. எனக்கு சல்லி இல்லைன்னவுடனே என் புள்ளைகள வற்புறுத்தி படிக்க வச்சேன்.
அவங்களும் சிலர் +2, ஒருத்தன் பி.காம்... அந்த அளவுல நிறுத்திகிட்டாங்க. ரெண்டு பேரனுங்க பி.ஈ... என் கடைசி பையன் எம்.ஏ... மெட்ராஸில உத்தியோகம் பாக்குறான். அவன் தான் அதிகமான ஆர்வத்துல இருக்கான். அப்துல்கலாமுக்கு எல்லாம் எழுதுனானாம். அங்க இருந்து போன் வந்திச்சு. உங்க நம்பர் குடுத்துருக்கேன், நீங்க விளக்கம் சொல்லணும் அப்படீன்னு. அப்ப நான் சொன்னேன்... பொறுப்பா....ஏன் அவசரப்படுற....? எல்லாத்தையும் முடிச்சுகிட்டு... எனக்கு நல்லா திருப்தி ஆனதுக்குப் பிறகு அதைச்செய்வோம் அப்படீன்னுட்டேன்.

இப்ப அதைப் பேடண்ட் பண்ணனும். பண்ணிட்டா எந்த தொந்தரவும் இல்ல. யாருக்காவாது கொடுக்கலைன்னா கவர்ன்மெண்டுக்கு கூட கொடுத்திடுறோம்.

வேற ஒண்ணும் வேணாம். காற்றாலை மின்நிலையங்கிறது இதே பார்முலாதான். நீர்மின்நிலையமும் சரி, அனல்மின்நிலையமும், அணுமின்நிலையமான்னாலும் சரி, காற்றாலை மின்நிலையமானாலும் சரி... மின்சாரம் எல்லாமே.... ஒரு வீச்சு ஆற்றலில்தான் ஓடுது. எல்லாத்துக்குமே டர்பைன் உண்டு.

---- பேட்டி தொடரும் -----

இளசு
20-10-2008, 07:56 PM
பாரதி

முதலில் உனக்குப் பாராட்டுகள்..

மன்றத்தில் வந்த செய்தியை உள்வாங்கி
உன் நேரம் ஒதுக்கி, நீண்ட பேட்டி - நிறைய அறிவார்ந்த கேள்விகள் கேட்டு - எடுத்து,
அதன் ஒலி-ஒளி பதிந்து
மெனக்கெட்டு தட்டச்சி..

இங்கே மன்றத்தில் நல்ல அறிவார்ந்த நேர்காணலைப் பதிந்தமைக்கு
மனமார்ந்த பாராட்டுகள்..

எனக்கு இயற்பியல் - குறிப்பாய் மின்னாற்றல் பற்றிய ஆழறிவு இல்லாததால்
பெரியவர் வரதராஜன் அவர்கள் சொல்லும் அறிவியல் சூட்சுமங்களைப்
புரிந்துகொள்ள இயலவில்லை..

நண்பர் நண்பன் இதில் தேர்ந்தவர்..

பாரதியும் மற்ற நண்பர்களும் இச்சாதனை முயற்சி பற்றி என்ன சொல்கிறார்கள்
என அறிய விரும்புகிறேன்..

பல்லாண்டு உழைப்பு, முனைப்பு, பள்ளிக்கல்வி குறைந்தாலும் பட்டறிவில் மூத்தவர்,
சுயமரியாதை சிந்தனை - இவற்றால் வரதராஜன் அவர்கள்பால்
நன்மதிப்பு வருகிறது..

மக்கள்நலன் அளிக்கும் இத்திட்டம் உண்மையில் நன்மையில் வெற்றியில் முடிந்தால்-
நினைக்கவே இனிக்கிறது..

(அமெரிக்க அணு ஒப்பந்தம் கூடத் தேவையில்லை அல்லவா????)

பாரதி
21-10-2008, 07:47 AM
கருத்துக்களுக்கு நன்றி அண்ணா....
========================================================================

கேள்வி: இந்த இயந்திரத்திலும் டர்பைன் இருக்கா?

பதில்: இதுல வீல் போட்டிருக்கோம். இதுவும் ஒரு வீச்சு ஆற்றல்தான்.
அணைக்கட்டுல தண்ணி இருக்கும் போதுதான் நீர்மின்நிலையம் வேலை செய்யும்.... காற்றாலை காத்து அடிக்கிற இடத்துலதான் வைக்க முடியும்.. சோலார் பேட்டரி பரப்பளவு கூட...செலவீனங்கள் கூட அப்படீன்னு கேள்விப்பட்டிருக்கேன்.
இது வந்து செலவீனங்கள் கம்மி. மின்சாரம் இல்லாத இடத்துல கூட ஒரு 12 வோல்ட் பேட்டரி அல்லது 24 வோல்ட் பேட்டரி, ஒரு இன்வெர்ட்டர் இருந்தாப்போதும்.

கேள்வி: இப்ப நீங்க எலக்ட்ரிசிட்டி போர்டுல இருந்து மின்சாரம் வாங்காம.... சோலார் மூலமா ஒரு பேட்டரியப்போட்டு, நீங்க கண்டுபிடிச்ச மெசின வச்சே உங்க லேத்துல வேலை பார்க்கலாமே?

பதில்: சோலார் எனர்ஜிக்கு பரப்பளவு கூட வேணும்னு சொல்றாங்க, அதப்பத்தி கேள்விப்பட்டிருக்கேன். செலவும் கூட ஆகும் சொல்றாங்க. ஆனாப்படிச்சதில்ல.
கேள்வி: நீங்க அப்படி செய்தால், வெளிய இருந்து மின்சாரமே வாங்காம என் லேத்துல வேலை பாக்குறேன்னு வர்றவங்களுக்கு எளிதா நிரூபிச்சிடலாமே?

பதில்: நிரூபிக்க வேணும்னுல்லாம் நான் முதல்ல நினைக்கல. நமக்கு புரிஞ்சிக்கணும் அப்படீன்னே இருந்தேன் கொஞ்ச நாள். ஓரளவுக்கு அது புரிஞ்சிச்சி. அடுத்தாப்ல இத நாட்டுக்கு பயன்படுத்தணும்னு நினைச்சேன். இதுக்கு நடுவுல உலகமெங்கும் பெட்ரோல் விலை கூடுது, அப்படீன்னு பத்திரிக்கைகளில் படிச்சதும், இனி எண்ணெய் கிடைக்காது போலருக்கு; சரி... நாம ஏன் இத வச்சி வாகனங்களை ஓட்டக்கூடாதுன்னு நோக்கம் அங்கிட்டுப் போச்சு. ஆனா அதுக்கான வசதி வாய்ப்பு நமக்கு இல்லாமப் போச்சு. சரி.. அதப்பாத்துக்கிருவோம்.. அப்படீன்னு நெனச்சு... இந்த இயந்திரத்தில இன்னும் மெக்கானிசத்தைக் குறைச்சு, இன்னும் எளிமைப்படுத்தணும்னு நினைக்கிறேன். அதுதான் கடைசி பார்முலா.
ஆக விஞ்ஞானத்துல எத்தனையோ அறிஞர்கள் வந்து எத்தனையோ கண்டுபிடிச்சுட்டுப் போயிட்டாங்க. அவங்க வழி வகுத்துக்கொடுத்துட்டுப் போயிருக்காங்க.

ஒரு பி.ஈ. படிச்ச எலக்ட்ரானிக்ஸ் எஞ்சீனியர் ஒருத்தர் வந்தார். ' நீங்க சும்மா சொல்றீங்க; நீங்க சொல்றது சாத்தியமே இல்ல' அப்படீன்னார். அப்ப நான் பொறுமையா சொன்னேன் - ' நான் பொய் சொல்றவன் இல்ல; எதையும் கண்டறியாம பேச மாட்டேன். அது என்னுடைய வழக்கம். நீங்க படிச்சிருக்கலாம், எஞ்சீனியரா இருக்கலாம். ஆனா மின்சாரம் தயாரிப்பைப் பத்தி படிச்சிருக்கீங்களான்னு கேட்டேன். மின்சாரம் கொடுத்தா அதை ஏ.ஸிய டி.ஸி.. ஆக்குவீங்க.. டி.ஸிய ஏ.ஸி ஆக்குவீங்க. ஆனோடும்பீங்க... கேத்தோடும்பீங்க... மின்சாரத்தை உற்பத்திப் பண்ணுவீங்களா? அப்படீன்னு கேட்டேன். அதுக்கு அவரால பதில் சொல்ல முடியல.

உலகத்துல நாமும் ஒரு மூலையில இருந்து சிலருக்கு உதவணும் அப்படீன்னு ஒவ்வொருத்தரும் நினைக்கணும். எழுத்தாளர் இருக்காங்க.... சிறுகதை, பெரிய கதை, வரலாறு எல்லாம் எழுதுவாங்க. அதுவும் ஒரு வகைத்தொண்டுதான்.
தையல்காரர் இருக்காரு அவரும் ஒரு வகைத்தொண்டுதான் செய்யுறார். செருப்புத்தைக்கிறவரும் ஒரு தொண்டுதான் செய்யுறார். வியாபாரிங்க கூட... எங்கேயோ இருக்குறத வாங்கிட்டு வந்து மக்களுக்கு விநியோகம் பண்றாங்க. அதுவும் ஒரு வகைத்தொண்டுதான். அது மாதிரி இதுவும் ஒரு வகைத் தொண்டுதான்.

இதை ஏன் தேர்ந்தெடுத்திருக்கீங்கன்னு கேட்கிறீங்கன்னா... எலக்ட்ரானிக்ஸ், ரேடியோ மெக்கானிஸம், கம்ப்யூட்டர் இதுக்கெல்லாம் போறதுக்கு நிறைய ஆளுக இருக்காங்க. வர்ற மாணவர்களும் நிறைய பேரு இருக்காங்க.
யாரும் எதை எடுக்கலியோ அதை நான் எடுத்துருக்கேன்.

பெரியாரப்பார்த்து ஒரு நிருபர் கேக்குறார் - ஏன் இந்த கடினமான தொண்டினைத் தேர்ந்தெடுத்தீங்க - ன்னு. பெரியார் சொல்றார் - யாரும் தேர்ந்தெடுக்கல.. அதனால நான் எடுத்தேன் - அப்படீன்னு! இது விளங்கும்னு நினைக்கிறீங்களா அப்படீன்னு நிருபர் கேட்டதுக்கு, நான் சொல்றத சொல்லுவேன் - என் கருத்தை சொல்லுவேன். எடுத்துக்குறவங்க எடுத்துக்கட்டும் ; எடுத்துக்காதவங்க தள்ளிக்கங்க அப்படீன்னு பெரியர் சொன்னார்.

அது மாதிரி, இது அத்தியாவசியத்தொண்டு அப்படீன்னு நானு நினைக்கிறேன். மக்களுக்குத் தேவையான தொண்டு அப்படீன்னு நினைக்கிறேன்.
சரி... மின்சாரத்தை நீங்க கண்டுபிடிக்கலை... மைக்கேல் ஃபாரடே நூறு வருசத்துக்கு முன்னாடியே கண்டு பிடிச்சுட்டுப் போயிட்டார். அந்த மின்சாரத்த வச்சு பல்பு கண்டுபிடிச்சாரு எடிசன். அவரு பண்ண தியாகம் நெறைய.
அவர நாம நினச்சு, பல்பு கண்டு பிடிச்சதுக்கு பல்பு உபயோகப்படுத்துற ஆளுக எல்லாம் வருசத்துக்கு ஒரு பைசா கொடுக்கணும்னு நினச்சாலும் பல ஆயிரம் கோடி அவருக்கு ராயல்ட்டி போகும். மக்களும் அத செய்யல; அவங்களும் அதை விரும்புறதில்ல. அதனால இது ஒரு அரிய தொண்டு. இப்ப நான் செய்யுறது டீசல், பெட்ரோலே தேவையில்ல... அப்படீங்கிற அளவுக்கு கொண்டு போயிருவேன். அதுதான் என்னுடைய நோக்கம்.

அப்படி நான் வச்சு காரு ஓட்டிகிட்டு இருக்கப்போறதில்ல. ஆனா நிச்சயமா.... சொன்னா அதைச் செய்வேன். அந்த ஆற்றல் எனக்கு இருக்குன்னு நான் நம்புறேன்.

கேள்வி: உங்களுக்கு தூண்டுகோல் எது அல்லது மானசீகமாக இவரைப்போல நாம் ஆகணும்னு நீங்க யாரையாவது நினைச்சிருக்கீங்களா?

அது பத்து வயசுல எனக்கு கல்வி போச்சு. நான் படிச்ச கான்வெண்ட் அஞ்சாவது வரைக்கும்தான். அதுக்கு அப்புறம் பொம்பளை பிள்ளைகளுக்கு மாத்திரம்தான். அந்த கான்வெண்ட் மதர் கூப்பிட்டு, 'நீ நல்ல மாணவன். எல்லாத்துலயும் நூத்துக்கு நூறு வாங்குற. இந்த ஒரு வருசம் அஞ்சாவது வகுப்பை முடிச்சிரு. முடிச்ச உடனே நேரே நம்ம கொடைக்கானல் பிரான்ச் ஸ்கூல் இருக்கு. அங்கே அனுப்பிருவோம். அங்க மூணு வருசம். அப்புறம் நேரே லண்டன். நீ பெரிய படிப்பு படிச்சி இந்தியா திரும்பலாம்டா' அப்படீன்னு சொன்னாங்க. அவங்க ஆங்கிலத்துல சொல்ல, ஒரு சிஸ்டர் மொழிபெயர்த்து சொன்னாங்க.
அப்ப நான் சொன்னேன். நான் பெரிய குடும்பத்துல பிறந்தவன். எங்க அப்பா அம்மா தவறிட்டாங்க. எங்கப்பா மெசின்ல கைய விட்டு ரத்தம் சிந்தி இறந்து போயிட்டார்.

எங்கப்பாவோட கொள்கை என்னான்னா... "யாருக்கும் உதவணும். யார்கிட்டேயும் உதவி பெறக்கூடாது; அடுத்தவங்களுக்கு துன்பமா வாழக்கூடாது" அப்டீங்கிறவர் என் தகப்பன். அப்படி கொள்கை உள்ளவர். அதனால நான் யாருக்கும் துன்பம் கொடுக்க விரும்பல.

இந்தக்கல்வி மேல அளவில்லாத பற்றுதல் உண்டு. ஆனா ஓஸியில் படிக்க விருப்பம் இல்ல. ரெண்டு பாட்டனார் இருந்தாங்க ; அப்பாவைப்பெத்தவர், அம்மாவைப் பெத்தவர்ன்னு. உதவின்னு நான் அவங்ககிட்ட போகல. யாரு பந்துக்கள் வீட்டுல போயி ஒரு வேளை ஓஸிச்சாப்பாடு சாப்பிட்டதும் இல்ல. யாருடைய உழைப்பையும் நான் பயன்படித்திக்கல.

அப்ப எனக்கு தொழில் மேல ஆசை. படிப்பு இல்லன்னா தொழில். அருந்தொழில் படிக்கணும் அப்படீன்னு சொல்லிட்டு நான் வெளிய வந்தேன். ஆட்டோ மொபைல் போனேன். அதப்படிச்சேன். அதைக் குப்பைன்னு சொல்லிட்டேன். போர்மனுக்கும் எனக்கும் சண்டை - அதெப்படி நீ குப்பைன்னு சொல்லலாம்? - அப்படீன்னு. அப்ப நான் ' என்ன இருக்கு இதுல அறிவுக்கு?' அப்படீன்னேன். யாரோ செஞ்ச மோட்டார், யாரோ செஞ்ச ஸ்பேர் பார்ட்ஸ் - நாம என்ன செய்யுறோம்? தொடச்சு தொடச்சு ஆயில் போட்டு மாட்டுறோம். தொடச்சு மாட்டுறதுக்கு பேரு அறிவா? அப்படீன்னுட்டேன்.
சின்ன வயசு... பதினாலு வயசுல.

----பேட்டி தொடரும்----

பாரதி
21-10-2008, 12:30 PM
என் தேடுதலுக்கான விடை அதுல இல்லை.. காரணம் என்னான்னா மெக்கானிக்கும் சரி, பிரிட்ஜ் ரிப்பேர் பண்ற ஒரு மெக்கானிக்கும் சரி; தரையில நடக்க மாட்டாங்க. அப்பெல்லாம் ஆட்டோ கிடையாது. ஒண்ணு சைக்கிள் ரிக்ஷா இல்லாட்டி குதிர வண்டியிலதான் வருவோம். ஏன்னா வானத்துல இருந்து குதிச்சவங்க; அந்தத் தொழிலப் போட்டு மூடி மறைக்கிறது.

ஆட்டோமொபைல்லயும் அந்த 'டைமிங்' அப்படீங்கிறத மூடி மறைப்பான்.
அப்ப காலேஜில இருந்து படிச்சுட்டு ஸ்டூடன்ஸ் எல்லாம் நேரா ஆட்டோமொபைலுக்குத்தான் வருவாங்க, அதுல என்னமோ இருக்குன்னு! ஆனா நான் நினச்ச மாதிரி அதுல ஒண்ணுமில்ல. அவங்க 'டைமிங்'ன்னா என்னாம்பாங்க. சொல்லுவேன்.. அத நான் இப்படி இப்படின்னு சொல்லித்தருவேன். எப்படி வேணா செய்யலாம்னு; அது இந்த போர்மனுகளுக்கெல்லாம் பிடிக்காது. ஏன்னா தொழில வெளிப்படுத்துறான்னு.

தொழில மூடி மறைப்பாங்க; எனக்கு அந்த மூடி மறைக்கிறது பிடிக்கிறதில்லை. என் சர்வீஸ்ல பல ஆயிரம் பேரு இங்க ஆளாகி போயிருக்காங்க வெளியில. 'நல்லாருப்பா... போயிட்டு வா' அப்படீன்னுருவேன். சொல்லிக்கொடுத்து அனுப்புவேன். தொழில்ல யாரும் படிச்சுகிட்டு வரல ; மேல இருந்து குதிக்கல. எல்லாரும் ஒருத்தர வச்சுதான் ஒருத்தர். அதனால நல்லாப்படிச்சுக்கோ அப்படீன்னு சொல்லுவேன். இது என்னோட வழக்கம். ஆக தொழில்னு நான் தேர்ந்தெடுத்துப் போனது அதுல ஒண்ணும் இல்ல. அப்படியே அந்த ஆட்டோமொபைல விட்டுட்டு வந்துட்டேன். அதுல சின்ன சின்ன மெக்கானிசம், தொழில்நுட்பங்கள் தெரிஞ்சிக்கலாம், அவ்வளவுதான்.

ஆக மொத்தம் நாம எதுவும் செய்யறதில்ல அதில. ஒரு குண்டூசி கூட ராவி அதில போடுறதில்ல. அதுவும் கூட கம்பெனியில் இருந்து வரும். அத தொடச்சி மாட்டுறதுல என்ன இருக்கு?

அப்புறமா மதுரையில பாத்திரங்கள் தயார் பண்ற கம்பெனிகளுக்காக வேலை செஞ்சேன். ஜப்பானில் இருந்து மொத்தமா ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வாங்கி பாம்பே..ல அமுக்கி தடாக்கி இருக்குறத வாங்கிட்டு வந்து பாத்திரங்கள் செய்வாங்க. அப்ப நான் யோசிச்சேன். ஏன் பாம்பேகாரன்தான் செய்யணுமா? நாம் செய்யக்கூடாதா அப்படீன்னு யோச்சிச்சு இங்கேயே அதை செஞ்சு காண்பிச்சேன். யாரு எது முடியாதுன்னு சொல்றாங்களோ அதை முடியும்னு சொல்லி செஞ்சி காண்பிக்கிறவன் நானு.

எல்லோரும் சொன்னாங்க பள்ளிக்கூடத்த விட்டுட்டான்.. பள்ளிக்கூடத்த விட்டுட்டான்னு.. பள்ளிக்கூடத்த விட்ட பின்னாடி குண்டு விளையாடல, பம்பரம் விளையாடல நானு. பத்து வயசுல இருந்து வேலைக்கும் போவேன், லைப்ரேரிக்கும் போவேன். பல நூல்களைப் படிச்சேன். பல நூல்களை வாங்குனேன். எனக்கு கல்வியில அவ்வளவு ஒரு வெறி. என் காலத்தையும் நேரத்தையும் நான் வீணாக்கினதில்லை. ஒண்ணு வேலை செய்வேன்... இல்லைன்னா சிந்தனை பண்ணுவேன், அடுத்து என்ன செய்யலாம்னு. இப்படியே போயிருச்சு என் காலம். ரொம்ப சீக்கிரமா போயிருச்சு.

25 வயசுல, 67..லில இந்த இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டுக்குள்ள நுழஞ்சேன். இன்னிக்கு எனக்கே வயசு 67 ஆகிப்போச்சு.

நானு கண்ணு இடுங்கி, பல்லு போயி, உருவம் சிதஞ்சு ஆகிப்போயிட்டேன்.
ஆனா இந்த ஆர்வம் இருக்கு பார்த்தீங்களா - 25 வயசுல இருந்த ஆர்வம் - அது இன்னும் என்னைய விட்டுட்டுப் போகல. உடல் நசிஞ்சுப் போச்சு. ஆனா அந்த இருதயம் இன்னும் அப்படியேதான் சுறுசுறுப்பா இருக்கு. நான் சோம்பல் பட மாட்டேன்.

அதிகமா சாப்பிடறவனும் கிடையாது. பல வேளைகளில பட்டினி கிடந்திருக்கேன். இருந்தாலும் பட்டினி, இல்லைன்னாலும் பட்டினி. என்னுடைய குறிக்கோள் எல்லாம் தொழில் பார்க்கணும். புதுமை செய்யணும். பல புதுமைகளை செஞ்சேன். அதுல சிலது வெளிய வரல. ஏன்னா சம்பாத்தியக் கண்ணோட்டங்கிறது எனக்கு இல்ல.

இதுவந்து உலகப்புதுமை; பலகோடி பேருக்குப் பயன்படும். இப்ப நான் நெனச்ச மாதிரியே மின்சாரப்பற்றாக்குறை ஆகி ஆளாளுக்கு கொடியத் தூக்குறாங்க.
ஒரு நாடு பணக்கார நாடா இருக்கணும், வல்லரசு நாடா இருக்கணும் அப்படீன்னா அதுக்கு என்ன அளவு கோல்? மின்சாரம்தான் அளவு கோல். எவ்வளவுக்கெவ்வளவு மின்சாரம் இருக்கோ அவ்வளவுக்கவ்வளவு அந்த நாடு வளர்ச்சி அடையும். பணக்கார வல்லரசு நாடா ஆகும்.

இதே மாதிரிதான் இந்த பெட்ரோலியப்போருட்கள் எல்லாம்... இன்னும் கொஞ்ச வருசம்தான் வரும்னு சொல்றாங்க. நான் படிக்கிற காலத்துல, இங்க இருக்குற பெட்ரோல் பங்குல இம்பீரியல் கேலன் அப்படீன்னு சொல்வாங்க. இப்ப இருக்குற கேலனுக்கு கிட்டத்தட்ட ஆறு லிட்டர் வரும்னு வைங்களேன். அந்த இம்பீரியல் கேலன் பெட்ரோல் மூணு ரூபா விலை! இன்னைக்கு ஒரு லிட்டர் 50 ரூபாய்க்கு..!!

அந்தளவுக்கு எண்ணெய், விலைவாசி எல்லாம் உயர்ந்து போச்சு. மக்கள் தொகை கூடிப்போச்சு... வாகனங்கள் கூடிப்போச்சு... நாம அதுக்கு ஏதாவது பண்ணனும். அதனால புதுமையா செய்யணும்னு நினைச்சேன்.

அப்படி செய்யறதால நான் ஆயிரம் வருசம் வாழப்போறதோ, அல்லது கண்டுபிடிச்சத தலையில தூக்கி வச்சுகிட்டு ஆடப்போறதில்ல. இப்ப மோட்டார் எப்படி ஓடும் கேக்குறாங்க. என்னய மாதிரி ஆளுங்க ஊமைதானே. இத தூக்கி அங்க வச்சு...அங்க இருக்குறத இங்க வச்சா ஓடும்னு என்னால விளக்க முடியாது. அப்படியே சொன்னாலும் ஒரு கேள்விய கேப்பாங்க.

இந்த மக்கள் இமயம் தாழ்ந்துச்சு; குமரி தூக்கிச்சுன்னு சொன்னா நம்புவாங்க.. ஆனா அறிவியல்னு வந்துட்டா அது எப்படீன்னு கேள்வி கேட்பாங்க. அதே கேள்விய ஏன் எல்லாத்துக்கும் கேக்குறதில்ல?

அதிகாரிகள், கல்விமான்கள் நிறைய பேரு என்னை புண்படுத்தி இருக்காங்க. ஆனா தொடச்சிட்டு, போறாங்க, அவங்களுக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்... அப்படீன்னு இருப்பேன். இடுக்குக்கேள்வி, கிடிக்கிப்பிடி கேள்வி கேட்பாங்க.

-----பேட்டி தொடரும்-----

பாரதி
22-10-2008, 02:34 PM
கேள்வி: இதுவரைக்கும் கண்டுபிடிச்சிருக்கிற விதிகளை வச்சு, அதுதான் உண்மை அப்படீன்னு நிரூபிக்கப்பட்டதால அதிலிருந்து வரக்கூடிய கேள்விகளா இருக்கும்னு நான் நினைக்கிறேன்.

பதில்: ம்ம்... இருக்கலாம். அதுல சிலரு ஆணித்தரமா கேட்டாங்க. இது முடியும்னா இது வரைக்கும் விஞ்ஞானிகள் கண்டு பிடிக்காம இருந்திருப்பாங்க அப்படீன்னு நினைக்கிறீங்களா? அப்படீன்னு கேட்டாங்க. முடியாதுன்னுல்லாம் ஒண்ணும் இல்ல.. ஏன் விஞ்ஞானிகள் இது பத்தி ஆராயல அப்படீன்னா.... எந்த ரூபமாவோ... மின்சாரம் கிடைச்சிருச்சு. அந்த மின்சாரத்த வச்சு என்ன செய்ய முடியும்னு சோதனை பண்ணி செயற்கைக்கோள் வரைக்கும் போயிட்டாங்க. இப்படி கண்டுபிடிச்ச மின்சாரத்த வச்சு என்ன என்ன செய்யலாம்கிறதுல அவங்க கவனம் போயிட்டதே ஒழிய, ஏன் இந்த மின்சாரத்தை இவ்வளவு கடினமா எடுக்குறோம், அதை எளிமைப்படுத்துவோமேன்னு யாரும் அந்த வேலைக்குப் போகலீங்க. அதனாலதான் நான் அதைப் பண்ணேன்.

இப்பப்படிச்சுட்டு நிறைய பேரு வர்றாங்க. ஆனா முத்திரை குத்தி வச்சுட்டாங்க. கூடுதல் ஆற்றலைக்கொடுத்து குறைந்த ஆற்றல்தான் தயார் பண்ண முடியும் - இது விதி. மாற்ற முடியாததற்குப் பேரு விதி. அத நம்புறாங்க. அப்புறம் விதியை மதியால் வெல்லலாம் அப்படீன்னும் சொல்லிக்கிறாங்க.

விதியை வெல்லணும்கிறது என்னோட நோக்கம் இல்ல. ஒருத்தர் வந்தாரு - பேடண்ட் செய்யுறதுக்கு உதவுறோம்னு. வந்தவர்... நீங்க எப்படி ஆல்ட்டர்னேட்டர் செஞ்சிருக்கீங்கன்னு எல்லாத்தையும் பிரிச்சு பார்க்கணும்னு... அப்ப நான் சொன்னேன்.. இத நான் செஞ்சேன்.. ஓட மாட்டேங்குது, எப்படி செஞ்சா ஓடும் அப்படீன்னு சொன்னா... நீங்க அதைப் பிரிச்சி.. இதுல எங்க பிரச்சினைன்னு கண்டுபிடிச்சி, இதுல தப்பு இருக்கு, அதில தப்பு இருக்குன்னு சொல்லலாம். நான் அப்படியெல்லாம் கேட்கல.

பார்முலா வந்து எளிய பார்முலா. அத நானே பத்திரிக்கையில விளம்பரம் பண்ணுவேன். அப்படி இல்லைன்னா டி.வி காரங்க வந்தாங்க.. அவங்ககிட்ட பார்ட்பார்ட்..டா எல்லாத்தையும் விளக்கிச் சொல்லுவேன். ஆனா அதுக்கு முன்னாடி பேட்டண்ட் ரிஜிஸ்ட்ரேசன் பண்ணனும்.

கேள்வி: அதை ரெஜிஸ்டர் செய்யறதுக்கான முயற்சி எந்த அளவில இருக்கு?

பதில்: மெட்ராஸில இருக்குற பையன் அதப் பார்த்துகிட்டுதான் இருக்கான். அண்ணா யுனிவர்சிட்டியிலேயே அந்த ஒரு பிரிவு இருக்குன்னு கேள்விப்பட்டேன். நாம இவ்வளவு பணம் கட்டணும்.. நம்பர் வாங்கணும்.. அப்படீன்னு பையன் சொன்னான். இன்னும் சில பேரு பேடண்ட் ரெஜிஸ்ட்ரேசன்கிறது கடினம். பண்ணுவோம்னு சொல்வாங்க,,, ஆனா போனா ரொம்ப கஷ்டம் இருக்குங்க. அத்தனையும் விளக்கி பைல் தயார் பண்ணிக்கொடுக்கணும்... அப்படீன்னு சிலர் சொல்றாங்க.... இந்த விஞ்ஞானம் புதுமையா இருக்குறதால..

ராமர்பிள்ளைங்கிறவரு பெட்ரோல் கண்டுபிடிச்சேன்.. மூலிகைச்சாறு அப்படீன்னு சொன்னாருன்னு பத்திரிக்கையில படிச்சேன். அதை ஒருத்தர் புகழ்ந்துகிட்டு இருந்தாரு. அப்ப நான் சொன்னேன் அது சாத்தியமில்ல.. அப்படீன்னு. அந்த நண்பர் ஏத்துக்கல... ராமர்பிள்ளையும் மோட்டார்சைக்கிள் எல்லாம் ஓட்டிக்காண்பிச்சாரு... அப்புறம் ரிசர்ச் சென்டர்ல காண்பிச்சாராம். அப்ப விஞ்ஞானிகள் சொன்னாங்களாம். நீங்க கொண்டு வந்த குடுவைய தனியா வச்சிடுங்க. நாங்க குடுக்குற குடுவையில கலக்கிக் காண்பிங்க... அப்படீன்னு. இது உள்கூடு ரகசியம் - மோடி வித்தை கணக்கா... அது அப்படி.. ஆனா இந்த விஞ்ஞானம் அப்படி இல்ல. நானே சொல்றேன். இது ரொம்ப ரொம்ப எளிமை.

சரி.. இத ஏன் பேடண்ட் செஞ்சிட்டு காண்பிக்கிறோம்னு சொல்றேன். இந்த விசயம் அல்லது இதே பார்முலா வெளிநாடுகளுக்குப் போயிடாதா? நம்ம இந்திய நாட்டை பாதிக்காதா? பாதிக்கும்.

எனக்கு இப்போதைய தேவை பொருளாதாரம்தான். என்னுடைய காலமும் நேரமும் வீணாகிட்டு இருக்குன்னு நினைக்கிறேன். நிறைய கடன்பட்டு, சட்ட சிக்கல் ஏற்பட்டு, போலீஸ்காரங்களால தொல்லைப்பட்டு ரொம்ப அழுந்தி ஜெயிச்சு வந்திருக்கேன். ஆனாலும் இன்னும் என் பொருளதாரக் கஷ்டம் தீரல. பொருளாதாரக் கஷ்டம் தீரலைன்னா... வாங்கி உக்காந்து சாப்பிடணுங்கிறதில்ல என்னோட நோக்கம். எங்க குடும்பத்துக்கு தேவையான வேலைய நாங்க பாத்துகிட்டு இருக்கோம். என் பையன் பாத்துகிட்டு இருக்கான். எனக்கு அதுல எல்லாம் பஞ்சமில்ல. நான் எதை செய்யணும்னு நினைக்கிறேனோ அதுக்கு பொருளுதவி கிடைக்கல. வர்றவங்ககிட்ட உதவி பெறலாம்னா அதுல எனக்கு விருப்பம் இல்ல.. என்னான்னா... வந்து கேள்வி கேக்குறவங்களே, பெரிய ஆளுங்களே... இது ஓடுமா....? அத எப்படி நம்புறது? அப்படீங்கிற மாதிரி கேக்குறாங்க. அது மனசுல சஞ்சலத்துல இருக்கு. மீடியாவப் பொறுத்த வரைக்கும் நிறைய பேரு வராங்க. ராஜ் டி.வி, சன் டி.வி, தினகரன் பத்திரிக்கை நிருபர்க வர்றாங்க. நாங்க விளம்பரப்படுத்துறோம்னு சொல்றாங்க...

நான் சொன்னேன். கொஞ்சம் பொறுங்க. என்னுடைய கடைசி மெசினும் முடியட்டும். அதை வெளியிட்டிருவோம். ஏன் இதை தாமதப்படுத்துறீங்க அப்படீன்னு கேக்குறாங்க... சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும். இல்லீங்களா...?

ஒவ்வொண்ணுக்கும் உழைச்சு, பணம் தேடி, அந்த பொருளை வாங்கி அல்லது அந்த பொருளை செஞ்சு அப்படி பண்ண வேண்டியிருக்கு, பொருளுதவின்னு நான் இதுவரைக்கும் யார்கிட்டேயும் கேட்கல.

எங்க தொழிலுக்காக நிறைய கடன் வாங்குவோம்; வட்டி கட்டுவோம். அதுல நிறைய நஷ்டப்பட்டிருக்கோம். இருந்த சொத்துக்களை எல்லாம் வித்தாச்சு. இருக்குறது இந்த ஒரு ஃபேக்டரிதான். இத 86..ல கவர்ன்மெண்டுல இருந்து வாங்குனேன். இது பேருலயும் கிட்டத்தட்ட ஒரு பதினேழு லட்ச ரூபா கடன். வாங்குனது கொஞ்சம்தான்... ஆனா எழுதிக்கொடுத்தது கூட - ஆர்வத்துல. எழுதிக்கொடுத்துட்டோம். அந்த கடன் சிக்கல்ல இருக்கோம். நான் செஞ்சுகிட்டதுல இன்னும் ஒரு பார்முலா பாக்கி இருக்கு. அது எனக்கு இராத்திரியும் பகலும் தூக்கம் வர மாட்டேங்குது. எப்ப முடிக்கப்போறோம்னு... அது மனசயும் கொஞ்சம் பாதிக்குது.

பத்திரிக்கைக்காரங்ககிட்ட என்னோட கண்டுபிடிப்ப விளம்பரம் பண்ணுங்க அப்படீன்னு வேணா கேக்கலாமே ஒழிய, வேற என்ன உதவிய எதிர்பார்க்க முடியும்?

என்னோட கடைசி தேவை என்னோட விஞ்ஞானத்துக்கு பொருளதவி. நேரம் போயிட்டிருக்கு; காலம் போயிட்டிருக்கு அப்படீங்கிற வேதனை ஜாஸ்தி இருக்கு. இதுவரைக்கும் வெளி இடத்துல பெரிய பெரிய ஆளுக சந்திச்சதில, நான் தெரிஞ்சுகிட்டது - இது இயற்கைக்கு விரோதமானது. சூரியன் வேற பக்கம் உதிச்சாலும் சக்திய கொண்டு வர முடியாது அப்படீன்னு ஆணித்தரமா நிறைய பேரு வாதாடி இருக்காங்க. அதுல நான் நிறைய நொந்துட்டேன். ஆனா என்னோட முயற்சிய நான் விடவே இல்ல.

கேள்வி: ஒருத்தர், ரெண்டு பேரு இல்ல... வர்றவங்க எல்லோருக்கும் உங்க கண்டுபிடிப்பு மேலே சந்தேகம் இருக்கும் போது, ஏன் அதை நீங்க ஓட்டிக்காட்டி அந்த சந்தேகத்தை நிவர்த்தி பண்ணக்கூடாது?

பதில்: அவங்களால நமக்கு என்ன ஆகப்போகுது?

------ பேட்டி தொடரும் -----

aren
22-10-2008, 04:36 PM
இன்னும் நிறைய படிக்கனும் இதில். படித்துவிட்டு பின்னர் பின்னூட்டம் இடுகிறேன்.

இந்த முயற்சிக்கு பாரதி அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.

இப்படி அதிக மின்சாரம் சாத்தியம் என்றால் உலகின் மின்சாரப்பிரச்சனை அனைத்தும் தீர்ந்துவிடும் என்பது நிச்சயம்.

இது உண்மையாக நடக்கவேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்.

வெங்கட்
22-10-2008, 11:30 PM
படிக்க பிரமிப்பாக உள்ளது. திரு.வரதராஜன் அவர்களின் கடின முயற்சிக்கு நல்ல ஆதரவு கிடைத்து அவரது கண்டுபிடிப்பு மக்களுக்கு உதவிட இறைவன் அருள் புரிய வேண்டும். பாரதி அவர்களுக்கு எனது நன்றிகள் பல.

rajatemp
23-10-2008, 05:26 PM
விலைக்கு கிடைத்தால் நாமும் பயன்படுத்திபார்க்கலாமே
உலகிற்கே இந்தியா மின்சாரம் வழங்கலாமே

பாரதி
04-11-2008, 02:12 PM
கருத்துக்களுக்கு மிக்க நன்றி ஆரென், வெங்கட், ராஜா.
--------------------------------------------------------------
கேள்வி: ஒண்ணும் ஆகப்போறதில்லதான்.. ஆனா உங்க கண்டுபிடிப்பு மக்கள்கிட்ட போய் சேர வேண்டாமா?

பதில்: பொருள் போய் சேரணும்.. உண்மைதான். நான் பலருடைய கண்காணிப்புல இருக்குறவன். நான் எந்த புதுமைய செஞ்சாலும் சரி... எல்லோருடைய கண்காணிப்பிலயும் நான் இருக்கேன். ஒவ்வொண்ணையும் ரொம்ப உன்னிப்பா கவனிப்பாங்க. இத மாத்திரம் கொஞ்சம் தள்ளி இருந்து பாக்குறாங்க. காரணம் என்னான்ன இது புரியல அவங்களுக்கு. நான் எந்த மெசின செஞ்சாலும் வெளிய அதை செய்வான். நான் பல மெசினுகளை செஞ்சிருக்கேன். குறிப்பா பஞ்சிங் மெசின். ஒரு மார்வாடி கூட்டிட்டுப்போயி காண்பிச்சாரு. இத பஞ்சாபிக ஒன்பது பேரு மூணு வருசமா செஞ்சாங்க. 30குதிரைச்சக்தி மோட்டார் போட்டு கால் இஞ்சு பிளேட்டத்தான் ஓட்டப்போறாங்க. இது மாதிரி மெசின செஞ்சு எங்களுக்குத் தர முடியுமா..? இப்ப சல்லடையெல்லாம் ஜப்பான்ல இருந்து இறக்குமதி பண்றோம். ஆர்டர் போட்டா உடனே கிடைக்க மாட்டேங்குது, பிரச்சினையா இருக்கு. உங்களால செஞ்சு தர முடியுமா?ன்னு கேட்டார்.

அப்படியா...? சிம்பிளா செஞ்சிருவோம்னு சொன்னேன். 25000 ரூபாய்க்கு டிராப்ட் எடுத்துக்கொடுத்தாங்க. வந்து ஒரு குதிரைச்சக்தி மோட்டார போட்டு மெசின செஞ்சோம்.

அவங்களோட 30குதிரை சக்தி மெசின்ல, ஒரு ஷிப்டுக்கு மூன்றரை சல்லடை பஞ்ச் பண்ணாங்க.

நான் செஞ்ச ஒரு குதிரைசக்தி மெசின்ல, மணிக்கு 12 சல்லடை பஞ்ச் பண்ணோம். ஒரு ஷிப்டுக்கு 96 சல்லடை ஆச்சு. அந்த மெசின செஞ்சு ஏத்தி விட்டேன். எல்லோரும் சொன்னங்க.. வரதராஜன் பைத்தியக்காரன்..அப்படீன்னு. தொழில் பரவட்டுமே. எனக்கு கட்டுபடியாகுது, செய்றேன். நல்லாருக்கட்டும்.

அவரே ஜப்பானில் இருந்து புளூபிரிண்ட் வாங்கிக் கொடுத்து புதுமாதிரி சல்லடை செஞ்சுக்கொடுங்கன்னு சொன்னார். 50 ரூபா சார்ஜ் பண்ண வேலைக்கு 25 ரூபா கொடுத்தாங்க. கட்டுபடியாகுது; செய்வோம்.. அப்படீன்னு செய்தேன்.

அதே ஆளு சம்பாரிச்ச பிறகு நன்றி இல்லாம பேசுறார். நன்றி இல்லைங்கிற போது தள்ளிப்போயிருவேன் நானு. என் தாயார் படிக்காதவங்க.. ஆனா ஒரு சொல்லு சொல்லி இருக்காங்க. நன்றிய எந்த நேரத்திலும் மறக்கக்கூடாது மகனே.. நன்றி மறந்தவன மன்னிக்கக் கூடாது... விலகிப்போயிரு. எதுலயும் துரோகம் பண்ணக்கூடாது... அப்படீன்னு படிக்காத தாயார் எனக்கு சொல்லிக்கொடுத்த பாடம். அத இன்னைக்கும் நான் என் மனசுல வச்சுருக்கேன். அது படியே நடந்துகிட்டு இருக்கேன்.

பலருக்கும் பலதும் செய்து கொடுத்திருக்கேன். ஆனா எல்லோரும் அறிவ மட்டும் பெறணும். அன்னப்பட்சி மாதிரி பால மாத்திரம் குடிக்கணும்; தண்ணிய விட்டுரணும் அப்படீங்கிற மாதிரி வரதராஜனோட அறிவை நாம பெறணும் அப்படீன்னு மாத்திரம் நினைக்கிறாங்க.

உள்ளூர் பிரமுகர்கள பத்தி ஒரு எஞ்சீனியர் வந்து சொன்னாரு.. தினமும் உங்க பேச்சுத்தான்... வரதராஜனுக்கு வாய்ப்பு மாத்திரம் கொடுத்த நம்பர் ஒண்ணு ஆயிருவாரு. அப்புறம் நாம எல்லாரும் அவருக்கு பின்னாடி கைய கட்டிகிட்டுப் போகணும்..அப்படீன்னு பேசிகிட்டாங்கன்னு.

நான் அப்படி ஒண்ணும் அகந்தை உள்ளவனும் இல்ல. மத்தவங்கள் மட்டம் தட்டுறவனும் இல்ல. நான் யாரையும் துன்புறுத்தவோ, இன்சல்ட் பண்ணவோ மாட்டேன். அது எனக்குப் பிடிக்காது. நமக்கு இருக்குற உணர்வு எல்லாருக்கும் உண்டு.

நடு ரோட்டில ஆட்கள் நின்னு பேசிகிட்டு இருந்தாலும் ஒதுங்கிப் போறவன் நானு. ஒதுங்குங்க... அப்படின்னு சொல்ல மாட்டேன். ஆனால் என்னை இடறினா பெரிய அதிகாரி ஆனாலும் விட மாட்டேன். மானம் பெரிசுன்னு நினைக்கிறவன் நானு. அப்படியே சில கொள்கைகள் - அப்படியே வாழ்ந்துட்டேன்.

ஒருத்தர் வந்தார் - நான் எம்.பி அனுப்பி வந்தேன், உங்களுக்கு உதவுறதுக்கு அப்படீன்னு வந்தார். நான் சொன்னேன் உதவின்னு கேட்டதுக்கு அப்புறமா செஞ்சாதான் கேக்குறவங்களும் நல்லது - கொடுக்குறவங்களுக்கும் மரியாதை. நீங்க சொல்வரு யாருன்னே எனக்குத்தெரியாது, நான் உதவியும் கேட்கலயே அப்படீன்னு சொன்னேன். வரதராஜன் பொழைக்கத் தெரியாத ஆளுன்னு சொல்லிட்டுப்போயிட்டாரு. தானா வர்ற உதவிகள நான் ஏத்துக்கிறதில்ல.

உதவின்னா கேட்டுப்பெறணும். ஆனா இந்த மெசின பொறுத்த மட்டும் என்னால அந்த மாதிரி செய்ய முடியல.

சிலரு சொல்றாங்க - சர்வசாதரணமா பார்முலாவ கண்டுபிடிச்சுட்டீங்க வரதராஜன். நீங்க கண்டு பிடிச்சது எவ்வளவு பெரிசு தெரியுமா? பங்கு மார்க்கெட் எல்லாம் விழுந்து போகும்யா..

சர்வ சாதாரணமா மின்சாரத்த கண்டுபிடிச்சுட்டேன்னு சொல்றீங்க! இது எவ்வளவு பெரிய விசயம் தெரியுமா? அப்படீன்னு ஒருத்தர் சொல்றார். இங்கேயே ஒரு ஆல்ட்டர்னேட்டரை நிறுவினீங்கன்னா இங்க இருக்குற பேக்கடரிக்கெல்லாம் நீங்களே தாராளமா கரண்ட் சப்ளை பண்ணலாம். ஈ.பி..யில இருந்து ஒரு யூனிட் மின்சாரம் ரெண்டரை ரூபாய்க்கு வாங்குறோம். உங்களுக்கென்னா பத்து பைசா வரும் - ஒரு யூனிட் மின்சாரத்துக்கு. ஒரு மணி நேரத்துக்கு ஆயிரம் யூனிட் மின்சாரம் தயார் பண்ண முடியும். ஒரு மணி நேரத்துக்கு ஊர்ப்பட்ட பணம்! அப்படி சம்பாதிக்கலாமே...? எளிய முறைதானே..? அதான் எஞ்சின கண்டுபிடிச்சிட்டீங்கள்ள... எளிதா செய்திடலாம்தானே அப்படீன்னு ஒரு அதிகாரி சொல்றார். நல்ல யோசனதான். நான் யார்கிட்டே....பேங்குல போயி லோனு கேக்கலாமா? அதை நம்புவாங்களா? நம்ப மாட்டாங்க.

ரெண்டாவது என்னோட அடிப்படை நோக்கம் என்னன்னா எல்லா மக்களும் அதனால பயனடையணும். நம்ம படிச்சது அடுத்தவங்களுக்குப் போயி சேரணும். அதே நேரம் நல்லவங்க எல்லாரும் பயனடையணும். யாருக்கு எங்க வேணுமோ அங்க அவங்களே உற்பத்திப்பண்ணிக்கலாம். ஹும்... நோக்கம் என்னவோ நல்ல நோக்கம்தான். ஆனால் எல்லாத்துக்கும் மேல கொடுமை - இந்த வறுமை, கால தாமதம்.. இதுதான். பத்தாவது மெசின முடிச்சுப்புடணும்னு வெறி பிடிச்ச மாதிரி இருக்கேன். அத நெனச்சே தூக்கம் வரமாட்டேங்குது, சாப்பாடு செல்ல மாட்டேங்குது, முடிச்சிரணும். அது இன்னும் எளிய முறையா இருக்கணும். மெக்கானிசம் குறைவா இருக்கணும். சக்தி கூட்டறதுன்னா கூட்டிக்கலாம்.

கேள்வி: நீங்க எல்லாமே அலுவலகங்களுக்கு உபயோகிக்கிற மாதிரி த்ரீ பேஸ் மெசின் தான் தயார் செய்திருக்கிறீங்களா..? அதையே வீடுகளுக்கு உபயோகிக்கிற மாதிரி செய்திருக்கலாமே..?

பதில்: த்ரீ பேஸ் மெசின்லேயே தனித்தனியா பிரிச்சி வீடுகளுக்கும் கொடுத்திடலாம். இல்ல வேணும்னா சிங்கிள் பேஸாவே கூட தயார் செய்திடலாம். அது ஒண்ணும் பெரிய விசயம் இல்ல. நீங்க சொன்னதுக்கு பின்னாடி எனக்கு என்ன தோணுதுன்னா - இத எதுக்கு இண்டஸ்ரியல் மெசின் மாதிரி பெரிசா செய்யணும்? சின்னதா வெட்கிரைண்டர் மாதிரி வீடுகளுக்கு உபயோகிக்கிற மாதிரி சின்னதா செய்திருக்கலாமேன்னு தோணுது. அத பரப்புறதுக்கு வேணா லேசா இருக்கும். காப்பி செய்யறவன் ஈஸியா பண்ணிட்டுப் போயிடுவான். ஏன்னா இதுல பெரிசா மெக்கானிசம் ஒண்ணும் இல்ல. பெரிய மெக்கானிசமோ அறிவுக்கு வேலையோ அதுல ஒண்ணும் இல்ல. ஓடுற வரைக்கும் என்னமோ மாதிரித்தெரியும். ஆனா பிரிச்சுப் பார்த்துட்டா ..ஃபூ..இம்புட்டுத்தானா..? அப்படீன்னு சொல்லுவீங்க.

கேள்வி: உங்கள் கண்டுபிடிப்ப விளக்காமல் ஒரு வரியில எதன் அடிப்படையில் இந்த ஆல்ட்டர்னேட்டர் வேலை பாக்குதுண்ணு சொல்லச் சொன்னா நீங்க என்ன சொல்வீங்க?

பாரதி
08-11-2008, 01:46 PM
பதில்: காற்றாலை மின்நிலையம் எப்படியோ, அதேதான் இது.

கேள்வி: ஒரே வரி..!

பதில்: ஆமா. தத்துவம் என்னான்னு பாத்தீங்கன்னா காந்தம் மின்சாரத்தை உண்டாக்கும்; மின்சாரம் காந்தத்தை உண்டாக்கும். இப்படியே மாறி.. மாறி.... அப்ப இந்த மின்சாரத்தை உண்டாக்குறதுக்கு சுத்துறதுக்கு பிரைமூவர்ன்னு பேரு. ஒரு அடிப்படையில ஒரு சக்தி வேணும். அந்த அடிப்படை சக்திய கொண்டு வர்றதுக்கு நீர், அனல், அணு, காற்று மின்நிலையம்னு உண்டாக்கி இருக்காங்க. டர்பைனை எது கொண்டாவது சுத்தணும். சுத்துனா அதோட இருக்குற ஆல்ட்டர்னேட்டர்ல மின்சாரம் வரும். விஞ்ஞானிகள் பலதையும் கண்டுபிடிச்சுட்டு போயிருக்காங்க. ஆனா அத முடிவான முடிவல்ல ; இது யூகமே அப்படீன்னு சொல்லிட்டுப் போயிருக்காங்க. அப்ப நான் எதுல நின்னு யோசிக்கிறேன்னா... காத்து இல்லன்னா காத்தாலை நின்னு போயிரும். தண்ணி இல்லைன்னா நீர்மின்நிலையம் நின்னு போயிரும். எரிபொருள் இல்லைன்னா
அனல்மின்நிலையம் நின்னு போயிரும்.

இதுல இந்த அனல்மின்சாரம் இருக்கு பாருங்க; இதை கடற்கரைப்பிரதேசத்துலதான் உண்டாக்கணும். ஏன்னா கப்பல்ல
நிலக்கரி வந்துகிட்டே இருக்கணும். வர்ற நிலக்கரிய நொறுக்கி, சுத்தப்படுத்தி, வடிகட்டி எரிச்சு மின்சாரத்த உண்டாக்குனதுக்குப் பின்னாடி வர்ற சாம்பல் இருக்கு பாருங்க... நெய்வேலியில மட்டும் ஒரு நாளைக்கு 150 லாரி சாம்பல் அள்ளுறாங்களாம்! அந்த சாம்பலால சுகாதாரக்கேடு வேற.

இப்ப பல லட்சம் கோடிக்கு அரபு நாடுகள்ல இருந்து பெட்ரோல், எண்ணெய் வாங்குறாங்க. இங்க ஒரு வாகனத்துல பார்த்தா ரேடியேட்டர்.. எஞ்சினு... அது.. இதுன்னு எல்லாத்தையும் பிரிச்சு கீழ போட்டுட்டு இதே மாதிரி ஒரு டி.ஸி மெசின வச்சி மாத்திட்டோம்னா வேணும்கிற மாதிரி செய்யலாம். சத்தமில்லாம, தூசியில்லாம, அனலும்
இல்லாம ஈஸியா பண்ணிடலாம்.

அப்படி ஒண்ண செஞ்சு, நம்ம பஞ்சம் தீரணும்னு வைங்க... கவர்ன்மெண்டுக்கு கொடுத்துட்டு, அய்யா.. இத வச்சுங்க... இதான் பார்முலா... ராயல்டி மாத்திரம் என் குடும்பத்துக்கு கொடுத்திருங்கன்னு சொல்லிட்டா உலகத்துல இருக்குற கார் கம்பெனியில் எல்லாம் நம்ம ஃபார்முலா உபயோகத்துல வரும். அப்படி வறதுல பத்து பெர்சண்ட் வாங்குனா போதும். பத்துல ஒன்பதை நீங்க வச்சுக்கோங்க. ஒரு பர்சண்ட் எனக்கு போதும்.

இது எண்ணெய் வள நாடுகளை பாதிக்கும் அப்படீன்னு எல்லாரும் சொல்றாங்க. ஆமா... இமயமலைக்கு குளிருதுன்னு கம்பளி போட்டு பொத்த முடியுமா? எண்ணெய் வள நாடுகளை பாதிக்கும் என்பதுக்காக
விஞ்ஞானத்தை நிறுத்த முடியுமா? பல கோடி மக்களுக்கு பயனுள்ள விஞ்ஞானம். வெட்கிரைண்டர் கணக்கா சின்னதா, ஒரு 200 வாட்ஸ் பிரைமூவர், 2000 வாட்ஸ் அவுட்புட் வச்சுக்குவோம். கேஸ் எதுவும் வேண்டியதில்லை.

இது சர்வ சாதாரணமான சமாச்சாரம் அப்படீன்னு அசட்டை பண்ணிறக்கூடாதுன்னு நினைக்கிறேன். சரி.. உங்க மாதிரியானவங்ககிட்ட நான் எதை எதிர்பார்க்க முடியும்? பொருளுதவின்னு ஒருத்தர்கிட்ட வாங்கினா "எனக்கென்ன தருவ?" அப்படீங்கிற கேள்வி இருக்கு? நானே எல்லாத்தையும் அனுபவிக்கப்போறேனா... இல்ல... என்னை சேர்ந்தவங்களும் பயனடையணும். நான் விட்டுட்டு சாப்பிடுற ஆள் கிடையாது. என்னைய நம்புனவங்க எல்லாருமே பயனடையணும். அந்த நோக்கம் எனக்கு உண்டு.

கேள்வி: அது மாதிரி ஏதாவது நிறுவனங்கள் வந்து கேட்டிருக்காங்களா உங்ககிட்ட? பார்முலாவ எங்ககிட்டகொடுங்க... நாங்க பண்றோம்னு..?

பதில்: ஒரு நிறுவனம் வந்தது மெட்ராஸிலிருந்து. ஏன்னா அவங்களுக்கு ஒரு நாளைக்கு ஆயிரம் யூனிட் மின்சாரம் தேவையாம். எனக்கு நண்பர்கள் இருக்காங்க.. சிவகாசியில எல்லாம் ஒரு நாளைக்கு அஞ்சு லட்ச ரூபா மின்சாரம் வாங்குறவங்கல்லாம் இருக்காங்க. ஆனா என்ன செய்வாங்க?

நண்பர் ஒருத்தர் ஒரு வக்கீல் இருக்கார் - ரொம்ப பெரிசுபடுத்தி இருக்கீங்க.. உங்களால முடியாதுன்னால்லாம் ஒண்ணும் இல்ல. உங்களால முடியும். ஏன்னா உங்கள் பத்தி ஏ டூ இசட் தெரிஞ்சவன். உங்களால முடியும் அப்படீன்னு சொன்னார்.

ஆனா வெளியில பிரமுகர்கள் எல்லாம் என்ன நினைப்பாங்க? தொழில் முனைவோர், தொழில் செய்யறவங்க எல்லாம்... வரதராஜன் சாதாரண சட்டை, கைலி கட்டுன சாதாரண ஆளு. அஞ்சு கோடி பத்து கோடிங்கிறது ஏராளம் அப்படீன்னு. ஆனா அவங்க எல்லாருக்கும் ஆயிரம்கோடி அவங்களுக்கே வேணும் அப்படீன்னுதான்
நினைப்பாங்க. அதனால பார்முலாவ வித்துரலாம். ஆனா நோக்கம் எல்லாரும் பயனடையணும் அப்படீங்கிற நோக்கம் இருக்கட்டுமே!

எடிசன் காதடச்சு சவ்வு எல்லாம் போச்சு. 89 பொருட்களை கண்டுபிடிச்சு பதிவு செஞ்சு ராயல்டி வாங்குனாரு... இல்லையா? நேரு புத்தகம் எழுதி ராயல்டி வாங்குனாரு. ஏன் அவங்ககிட்ட இல்லாத
கோடியா? அது மாதிரி பலன மக்களும் அடையணும். என் குடும்பம் - குட்டி, என் சந்ததிகளும் பலனடையட்டுமே.
--------------------------------------------------------------

நீண்ட நேரம் அவர் பேசுவதை பதிவாக்கிக்கொண்டே கேட்டுக்கொண்டிருந்தேன். அவரிடம் அனுமதி பெற்றுக்கொண்டு அவரது கண்டுபிடிப்பின் சில புகைப்படங்களையும் எடுத்தேன். எந்த முன்னேற்பாடுகளும் இல்லாமல் சென்றதால் என்னால் சரியான முறையில் கேள்விகளை கேட்க முடியவில்லை. இனிமேல் அவ்விதம்
செல்ல வேண்டுமெனில் சற்றேனும் முன்னேற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும் என்பதை இதிலிருந்து கற்றுக்கொண்டேன்.

பதிவு செய்யாமல் வெறுமனே பேசிக்கொண்டிருந்த போது, அவரது உழைப்பையும் அதன் மேல் அவருக்கிருக்கும் நம்பிக்கையையும் அறிய முடிந்தது. இந்தக்கண்டுபிடிப்பை அவரது மகன்களுக்கு கற்றுத்தந்திருக்கிறீர்களா என்று கேட்டதற்கு "மொதல்ல, பேசுனா பேசுறத நின்னு கேக்கணும் இல்லீங்களா?" என்று வறட்சியாக புன்னகைத்துக்கொண்டே சொன்னார்.

எத்தனையோ ஏமாற்றுக்காரர்கள் மத்தியில், மக்களுக்கு பலனளிக்கட்டுமே என்ற உந்துதலில், தான் அறிந்ததை வைத்து முயற்சி செய்து, வெற்றி பெற்று விட்டதாக நம்பும் அவரின் முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. நான் பேசிய வரையில் அவர் பொய்யுரைப்பதாக எனக்குத்தோன்றவில்லை.

நான் சென்ற நேரத்தில் மின்சாரம் தடைபட்டிருந்தது...! அவரிடம்... சூரியஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் முறையைக் கையாண்டு அவரது தொழிலுக்குத் தேவையான மின்சாரத்தை அவரே உற்பத்தி செய்து அவரது தொழிலை நடத்தி வந்தாலே போதுமே, அவரது கண்டுபிடிப்பு நீருபிக்கப்பட்டதாகி விடுமே என்ற போது, அவர்
சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்கு நிறைய இடம் வேண்டும் என்றும், அதற்கு மூலதனம் அதிகம் ஆகும் என்றும் கேள்விப்பட்டதாகக் கூறினார்.

இப்போதைய குடும்ப வாழ்க்கையை நடத்த, உலோகச்சல்லடைகள் தயாரிக்கும் பணிதான் உதவி வருவதாக கூறினார். தனது கண்டுபிடிப்பு கூடிய விரைவில் நடைமுறைக்கு வரவேண்டும் என்ற ஆர்வமும், ஏக்கமும் அவரது பேச்சிலும் கண்களிலும் தெரிந்தது. தான் நலமாக இருக்கும் போதே அது நடந்து விட வேண்டும் என்ற தவிப்பும் புரிந்தது.

இந்தக்கண்டுபிடிப்பு உண்மையா, இல்லையா..? உண்மையானால் உலக மக்களுக்கு எல்லாம் நல்லது. அல்லது கண்டுபிடிப்பு உண்மை இல்லையெனில் அதையும் உலகுக்கு தெரிவித்து விடலாம். மத்திய, மாநில அரசுகளுக்கு அதற்கான செலவு ஒன்றும் சுமையாக இருக்காது. ஆனால் அதை அரசுகள் செய்யுமா?

இந்த பேட்டியின் போது மெலிதாக பெய்து கொண்டிருந்த மழை அடைமழையாக மாறி கொட்ட ஆரம்பித்திருந்தது. எல்லோரும் சொன்னது போல "அந்த இயந்திரத்தை பிரித்துக்காண்பியுங்கள்" அல்லது "அந்த பார்முலா என்ன?" என்ற கேள்விகளை மட்டும் கடைசி வரை கேட்க மனம் வரவில்லை.

இந்த இயந்திரம் உண்மையானதா... இல்லையா என்று கண்டறிய வேண்டும் என்ற எண்ணத்தில் சென்ற நான், நினைத்ததை கண்டறிய முடியவில்லை என்பது உண்மையே. ஆனால் அப்படி யோசிப்பதை விட... இந்த மனிதரின் கண்டுபிடிப்பு உண்மையானதாக வேண்டுமே என்ற எண்ணம் மட்டுமே மனதில் கடைசியில் மேலோங்கி நின்றது.

- முற்றும்.

Keelai Naadaan
15-01-2009, 03:34 AM
இன்னும் முழுவதும் படிக்கவில்லை.
சிரத்தை எடுத்து பகிர்ந்தமைக்கு மிக நன்றி

இளந்தமிழ்ச்செல்வன்
04-12-2009, 08:33 PM
மிக்க நன்றி பாரதி.

சில மாதங்களுக்கு முன்பே இதனை படித்து பதில் தட்டச்சு செய்து முடிக்கும் முன் கணிணி மக்கர் செய்த்ததால் பதிவிட முடியாமல் போனது.

உங்களின் கடைசி வரிகள் மனதில் கனத்தை சேர்த்தது, உங்கள் அக்கறையும் தெரிகிறது. எனக்கும் அதே ஆவல்தான்.

இளந்தமிழ்ச்செல்வன்
04-12-2009, 08:49 PM
சென்ற முறைபோல ஆகிவிடக் கூடாது என்று முதலில் நன்றி கூறி பின் இதனை எழுதுகிறேன்.

இவரின் முயற்ச்சிக்கு எனது உளங்கனிந்த பணிவான வணக்கங்கள்.

கல்லூரி முடிக்கும் போது எனக்கும் இதே எண்ணம் தோண்றியது உண்டு. வீட்டில் மின் விசிறி, கிரைண்டர், மோட்டர் ஓடும் போதெல்லாம் தவறாமல் இந்த சிந்தனை எழும். பிறகு இதற்க்காகவே ஒவ்வொரு வீட்டிலும் தனி ஜெனரேட்டர் வைத்துக் கொள்ளவேண்டும் என்று தோன்றும்.

ஹாப்கின்சன் ஆய்வு என்று நடைமுறை சோதனை ஒன்று மின்னியல் மாணவர்களுக்கு உண்டு. அதில் இவர் கூறியதை போலவே ஒரு மோட்டாரை கொண்டு ஒரு ஜெனரேட்டரை இயக்கி அதிலிருந்து மின் உற்பத்தி செய்து அதில் ஒவ்வொரு பேசிற்க்கும் சீகுவன்ஸ் சோதனை செய்து கடைசியில் ஜெனரேட்டரை இயக்கும் மோட்டரை உற்பத்தியாகும் மின்சாரத்தில் இயக்க வேண்டும்.

தெருவில் பாம்பிற்க்கும் கீரிக்கும் சண்டை காட்டுவதாக கூறி கடைசிவரை சண்டையே காட்டாமல் பெட்டி கட்டுவதைப் போல, ஒரு படத்தில் வடிவேலு கடைசி வரைக்கும் எதுக்கு லாயக்கில்லன்னு சொல்லவே இல்லையே என்பது போல “ஆய்வுகூடத்தில் அந்த ஒரு சிவிட்சை மட்டும் ஆன் செய்யவே மாட்டாங்க......”. கடைசி வரைக்கும் அந்த மோட்டரை அதன் மூலம் உற்பத்தி செய்த மின் சக்க்தியில் இயக்காமலேயே படிப்பை முடித்து வெளிவந்தாகிவிட்டது.

ஆனாலும் மனதில் அப்படி செய்தால் என்ன? மற்றவர்கள் கூறுவதைப் போல இழப்பை (ஆற்றல் மாற்றத்தினால் ஏற்படும் இழப்பை) உற்பத்தியில் ஈடு செய்து (அதிகம் உற்பத்தி செய்து) முயல எண்ணம் ஏற்பட்டுக்கொண்டே இருந்தது.

இவரின் முயற்ச்சியை பார்க்கும் போது சாத்தியம் சற்று தூரத்தில் தான் என்ற எண்ணம் தோண்றுகிறது.

பாரதி அவர்களின் முயற்ச்சிக்கும் சிரத்தைக்கும் வாழ்த்துக்கள். அடுத்த முறை தேனி சென்றால் அவரை சந்திக்கிறேன்.

குணமதி
05-12-2009, 02:27 AM
****இந்த இயந்திரம் உண்மையானதா... இல்லையா என்று கண்டறிய வேண்டும் என்ற எண்ணத்தில் சென்ற நான், நினைத்ததை கண்டறிய முடியவில்லை என்பது உண்மையே. ஆனால் அப்படி யோசிப்பதை விட... இந்த மனிதரின் கண்டுபிடிப்பு உண்மையானதாக வேண்டுமே என்ற எண்ணம் மட்டுமே மனதில் கடைசியில் மேலோங்கி நின்றது. *****

எண்ணங்கள் நல்லனவாக இருப்பது நன்றே.

நடைமுறையில் மெய்ப்பிக்காதவரை நாம் என்ன சொல்ல முடியும்?

மெய்ப்பித்துக்காட்டுமாறு அவருக்கு ஊக்கம் தரலாம்.

நீங்கள் மேற்கொண்ட முயற்சிக்கும் ஈடுபாட்டுக்கும் நன்றி.

பாரதி
02-01-2010, 03:05 PM
கருத்துகளுக்கு நன்றி கீழைநாடன், இ.த.செ, குணமதி.

karikaalan
19-09-2010, 04:08 PM
பாரதிஜி

இரண்டாண்டுகளுக்குப்பின் இந்த தங்களது நேர்காணல் படித்தேன். வியக்க வைக்கிறது வரதராஜன் அவர்களின் சோதனை. அதைவிட வியக்க வைக்கிறது தங்களது பதிப்பு.

தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் ஒரு லட்சம் மெகாவாட்டுகள் தயாரிக்க அடுத்த 5 ஆண்டுகளில் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன, சுமார் 5 லட்சம் கோடி ரூபாய்கள் செலவில்.

திருச்சியில் இருக்கும் பிஎச்இல் ஏன் இதைப் பற்றி எந்த ஆர்வமும் காட்டவில்லை? சூப்பர் க்ரிடிகல் எனப்படும் புதிய தொழில் நுட்பத்தை இந்த ஆண்டு முதல் பெரும் பொருட்செலவில் பயன்படுத்தத் துவங்கி இருக்கிறார்கள். என் டி பி சியும் இந்த கண்டுபிடிப்பை ஒரு பொருட்டாக எண்ணவில்லையே? ஏன்?

===கரிகாலன்