PDA

View Full Version : தெரு நாய்கள்எஸ்.எம். சுனைத் ஹஸனீ
19-10-2008, 10:02 AM
வகுந்தெடுத்த நீள் பாதையில்
திசை பிணக்கின்றித் தொடர்ந்தாக வேண்டுமென்ற
சீரிய நெறிக் கோட்பாடுகளெல்லாம்
தெரு நாய்களுக்கில்லை

கண்கள் விரிய விரிய முறைத்து
நல்லவன் அல்லவன் பேதமின்றி
எதற்கெடுத்தாலும் குரைத்து வைக்க
எளியவனைத் தேடியோடித் திரிகிறது

குட்டையிலூறும் தன்னையொத்தவர்களை
நிறம் திடம் சுவையென
ஏக பொருத்தம் பிடித்து
இரவென்றும் பகலென்றும்
ஜனரஞ்சகப் பாதைகளென்றெல்லாம்
பொருட்படுத்தல்களின்றி துவக்கி விடுகின்றன
தங்கள் வாய்ப்பாட்டுக்களை கூட்டமாக

சீவிச் சிங்காரித்தல்களில் ஜம்மென்றிருக்கும்
முறைப் பாங்கான வளர்த்தல்களில் கூடிய
வீட்டு நாய்களுக்கும் அதற்கும்
எப்பொழுதும் ஏழாம் பொருத்தமே.

வீசியெறியப்படும் எச்சில் துண்டுகளுக்காக
பழித்துரைக்கப்படும் ஏசல்களையும்
விட்டெறியப்படும் செருப்புகளையும்
உதிர்த்து விட்டமர்ந்து விடுகின்றன
ஒவ்வொரு முறையும்

அரவமற்ற நடுநிசிகளில்
பெரும்பான்மையொன்றைத் தேற்றி விடுகையில்
பாதை கடக்கும் பாதசாரியெவனையும்
பதம் பார்க்கத் தயங்குவதில்லை

கூட்டமே கூடி குரைத்துத் துரத்திய
எல்லை மீறிச் சேர்ந்த
தூரப்பட்ட பகுதி நாய்களுடன்
அடுத்த நாளே பின்னிப் பிணைந்து திரிவது
அவைகளின் அதீத குணமொன்று

எள்ளளவும் உபயோகமில்லையென்றாலும்
எப்பொழுதாவது உபயோகமளிக்கலாமென்ற
எட்டாக் கனி ஆசையில்
உணவிட்டு வைக்கிறது தெரு ஜனம்.

எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ.

இளசு
19-10-2008, 10:57 AM
அண்மையில் வாசித்தது -

விலங்குகளிடம் மனிதன் கண்டு அதிசயிக்கும் இரு குணங்கள் -
ஆபத்து வருமே என அஞ்சி நடுங்காதது
அடுத்தவர் என்ன நினைப்பார் என எண்ணி மருகாதது..

------------------------------------------------

காட்டில் இயல்பாய் திரியும் விலங்குகளுக்கு இவை பொருந்தும்..

முதல் குணத்தை மாற்றியமைக்கு பாவ்லோவின் நாய் சாட்சி..
இரண்டாவது குணம் ஏற்றலாம் - வீட்டில் வைத்து வளர்க்கப்படும் விலங்குகளுக்கு..

மனிதன் domesticate செய்த விலங்குகளில் மாடு, நாய், பூனை, குதிரை முக்கியமானவை..

பொறுப்பெடுத்து வீட்டு விலங்காக்கிடத் துணிந்த மனித இனம் -
அதிகம் அநாதைகளை உருவாக்கியது நாயினத்தைத்தான்..

காப்பேன் என ஒட்டுமொத்த உறுதிகொடுத்துச் சறுக்கிவிட்டபின் -
தெருவில் அலையும் இனத்துக்கு தனி குணங்கள் வந்ததில் வியப்பென்ன?

அது நாய்களானாலும் ..
அதனினும் கீழாய் அலையும் அநாதரவு மனிதர்களாயினும்..

பாராட்டுகள் ஜூனைத்!

shibly591
20-10-2008, 09:09 AM
சுனைத்தின் கவிதை வரிகளில் சொக்கிப்போய் முடிவற்குள் இளசு அண்ணாவின் சிந்தனையை தூண்டும் பின்னூட்டம் நிறையவே சிந்திக்கவைத்தது..

தொடருங்கள் சுனைத்..

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
21-10-2008, 12:21 PM
நான் தொட்டு வைத்தேன் இளசு அண்ணா நீங்கள் சுட்டு வைத்து விட்டீர்கள். மிக்க நன்றி.

ஷிப்லீ அவர்களின் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி.

பிச்சி
21-10-2008, 01:39 PM
நாய்களுக்கும் கூட கவிதை எழுத முடியுமா? ஆச்சரியப்படவைக்கிறீர்கள் அண்ணா.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
22-10-2008, 09:44 AM
மிக்க நன்றி பிச்சி. நான் இந்தக் கவிதையில் நாய்களை பற்றி மட்டுமே குறிக்க வேண்டும் என்பது என் நோக்கமல்ல. என் நோக்கத்தை யாருமே புரிந்து கொள்ள வில்லையா?

தீபா
22-10-2008, 10:06 AM
இளசு அவர்கள் புட்டு வெச்சதுக்கு அப்பறம் வேறு என்ன சொல்ல?

கவிதை அருமைங்க..

தென்றல்.

Ravee
20-09-2009, 01:04 AM
இறைவன் இப்படி ஒரு பிறவி கொடுத்த பின்னும் நம்மில் பலர் ஓநாயாக வாழ்கிறார்களே என்ன செய்வது. நாய் பொழப்பு என்று சொல்வார்களே அதை வாழ்ந்து பார்த்தால் தான் தெரியும் அதன் கொடுமை .எந்த நோக்கமும் இல்லாமல் சோறுகண்ட இடமே சொர்க்கம் அது இல்லை என்றால் பட்டினி இரண்டு சந்து முடிவிலேயே அவைகளின் தேசிய எல்லை கோடுகள் முடிந்து விடும் . நாய் வாழ்க்கை ஒன்றும் எளிது இல்லை நண்பர்களே.

கீதம்
20-09-2009, 09:52 PM
தாங்கள் மறைபொருளாய்ச் சொன்னதை இளசு அவர்களின் பின்னூட்டம் எளிதாய் விளக்கிவிட்டது. யாரும் புரிந்துகொள்ளவில்லையோ என ஆதங்கப்படவேண்டாம் நண்பரே!
அருமையான கவிதை வரிகளுக்கும் கருப்பொருளுக்கும் என் மனமார்ந்த பாராட்டு. அன்புடன் கீதம்.