PDA

View Full Version : காத்திருந்து காத்திருந்து (இரு வார சிறுகதை)ஐரேனிபுரம் பால்ராசய்யா
18-10-2008, 01:47 PM
சடையன்குழி சகாயமாதா கோவில் திருப்பலி முடிந்து கூட்டத்தோடு கலந்து வெளியேறிய ஆக்னஸ் மேரியை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்த்தான் சகாயம். அவனது பார்வை தன்னை ஊடுருவதை உணர்ந்து தலை தாழ்த்தி சாலையின் ஓரம் தனது அக்கா மகளோடு நடக்க ஆரம்பித்தாள்.

சூரியன் மெல்ல சுடத்தொடங்கியிருந்தான். சகாயம் தன்னை பின்தொடர்கிறானோ என்று லேசாய் தலை திருப்பி திரும்பி பார்த்தாள். அவள் எதிர்பார்த்தது போல் சகாயம் பின் தொடர்ந்து வந்துகொண்டிருந்தான். ஆக்னஸ்க்கு இதயம் லேசாய் படபட்க்கத் துவங்கியது .


தனது நடையில் வேகத்தை கூட்டினாள். வழியிலிருந்த அரவை மில்லை தாண்டிய போது தனக்கு இணையாக நடந்து வந்துகொண்டிருந்தான் சகாயம்.

“இன்னும் எத்தனை நாள் தான் இப்பிடியே இருப்ப, உன்ன பெண் பார்க்க வந்துட்டு போய் ஆறு மாசத்துக்கு மேல ஆகிப்போச்சு, என்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கிறேன்னு ஒரு வார்த்த சொல்ல மாட்டேங்கற, இப்பவும் செத்துபோன அந்த பீட்டர நினச்சுகிட்டு உன்னயே நீ ஏமாத்திகிட்டு இருக்க!” தனது மனதை குடைந்துகொண்டிருந்த விசயத்தை பட்டென்று போட்டு உடைத்தான் சகாயம்.

அவன் இப்படி கேட்பது இது முதல் முறை அல்ல, பலமுறை கேட்டும் அவளிடமிருந்து பதில் மட்டும் வருவதில்லை. சகாயம் ஒரு முடிவோடு தான் வந்திருக்கிறான் என்பதை உணர்ந்து மெல்ல வாய் திறந்தாள் ஆக்னஸ்.

''நான் உயிருக்குயிரா காதலிச்ச பீட்டர் இப்போ உயிரோட இல்லாம க்கலாம், ஆனா அவரோட நினைவுகள் இன்னமும் என் மனசுல உயிரோடதான் இருக்கு, அவரோட முகம் என் கண்ண விட்டு இன்னும் மறையல, எப்போ அவரோட நினைவுகள் என் மனச விட்டு விலகுதோ, எப்போ அவரோட முகம் என் கண்ண விட்டு மறையுதோ அப்பதான் என் கல்யாணத்தப் பற்றி நான் யோசிப்பேன் அதுக்கு ரொம்ப வருசமாகும் வீணா என் பின்னால சுத்துறத விட்டுட்டு வேற யாரையாவது கல்யாணம் ப்ண்ணிகுங்க’’ அவளது பதிலைக்கேட்ட சகாயம் துளியும் வருந்தாமல் மெல்லிய புன்னகை மலர சொன்னான்.

''இது போதும் ஆக்னஸ், உன் மனசு எப்போ மாறுதோ அப்போ எனக்கு சொல்லியனுப்பு உன்ன வந்து கல்யாணம் பண்ணிக்கறேன் அதுவரைக்கும் உனக்காக காத்துகிட்டு இருப்பேன்’’ சொல்லிவிட்டு விறுவிறுவென்று நடந்தான் சகாயம்.

தன்னை விட்டு அகன்று சென்ற சகாயத்தை ஆச்சரியமாக பார்த்தாள் ஆக்னஸ். ஒரு நாள் ச்சீ ச்சீ இந்த பழம் புழிக்கும் என்று என்னை விட்டுடப்போறான். ஆக்னஸ் மனதிற்குள் நினைத்தவாறே வீடு வந்து சேர்ந்தாள்.

வீட்டில் தனது தம்பி சிலுவையும் பீட்டரும் இணைந்து எடுத்த போட்டோ சுவரில் தொங்க பீட்டரின் விழிகளை பார்த்ததும் தனது விழிகளில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டே தனது அறைக்குள் ஓடி தலையணையில் முகம் புதைத்து அழ அரம்பித்தாள்.

காற்று அதன் திசை தெரியாமல் அலைந்து கொண்டிருந்தது. ஒரு பூவின் இதழ்கள் மெல்ல விரிவதைப்போல பீட்டரைப்பற்றிய நினைவுகள் மெல்ல விரிய இறுகியிருந்த மனசு இயல்பு நிலைக்கு வந்து கண்களிலிருந்து கண்ணீர் வருவது குறைந்திருந்தது.

பீட்டர் அறடி உயரமிருந்தான் கரிய நிறம், முடிகள் சுருண்டு நெற்றியில் விழுந்து கிடப்பது பார்க்க படு ரம்மியமாக இருக்கும். கட்டுமரத்துடன் கடலுக்குள் சென்றால் ஒரு வாரம் கழித்து அதிக மீன்களுடன் கரை திரும்புவான். அலையின் போக்கும் அதன் சுளுவும் அவனுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. படிப்பறிவு கொஞ்சமும் இல்லாத அவனை பிளஸ் டூ வ்ரை படித்த ஆக்னஸ்க்கு மிகவும் பிடித்திருந்ததுதான் அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது.

பீட்டர் தூரத்து சொந்தமென்றாலும் தனது தம்பி சிலுவையுடன் நெருங்கிய நண்பனாகப் பழகியதில் ஆக்னஸ்க்கு அவன் மீது அறியாமலேயே காதல் வந்து விழுந்தது. கடலைத் தவிர யாரும் அவள் காதலுக்கு மறுப்பு சொல்ல்வில்லை.

அன்று வானம் மேகங்கள் சூழ்ந்து இருண்டு கிடந்தது. கொடுங்காற்றின் இரைச்சல் சத்தத்துக்கிடையில் துணிந்து சிலுவையோடும் மூன்று நண்பர்களோடும் கட்டுமரமேறினான் பீட்டர்.

காற்று சுழன்று வீசி பெரும் புயலாய் மாறியிருந்தது. கட்டுமரத்திலேறிய சிலுவையும் இரண்டு நண்பர்களும் மறுநாள் பிணமாக கரை ஒதுங்கினார்கள். பீட்டரும் இன்னொரு நண்பரும் காணாமல் போய் அவர்கள் உடுத்திருந்த ஆடைகள் கரை ஒதுங்கி அவர்கள் உயிரோடு இல்லை என்பதை உறுதிபடுத்தியது.

ஊரே கூடி நின்று ஒப்பாரி வைத்தது. ஆக்னஸ்சுக்கு மட்டும் அவன் எங்கோ ஒரு மூலையில் உயிருடன் இருப்பதாய் ஒரு உணர்வு அடிக்கடி வந்து போனது. மனசு அவன் சாகவில்லை என்று திடமாய் நம்பியது. நாட்கள் நகர நகர நம்பிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாக மனதிலிருந்து நகர ஆரம்பித்தது.

பீட்டர் கடலுக்குள் போய் இரண்டு வருடம் ஓடியிருந்தாலும் அவன் நினைவுகள் மட்டும் அவளை விட்டு விலகாமலேயே இருந்தது. ஆக்னஸ் பற்றிய முழு விவரமும் தெரிந்துகொண்டு அவளை பெண் பார்க்கச் சென்றான் சகாயம், ஆனால் அவளோ பிடி தராமல் காலம் கடத்துவதில் குறியாக இருந்தாள்.

ஐந்து வருடங்கள் ஓடிப்போனதே தெரியவில்லை. அன்று ஆக்னஸ் திருப்பலி முடிந்து வெளியேறியபோது வழக்கம்போல் வந்து நிற்கும் சகாயத்தை காணவில்லை. அவள்து விழிகள் சகாயத்தை தேடி சலித்துப்போனது. தன் மனதில் குடியிருந்த பீட்டர் கொஞ்சம் கொஞ்சமாய் வெளியேறி போனதை சகாயத்திடம் சொல்லி திருமணத்துக்கு நாள் பார்க்க சொல்லலாம் என எண்ணி வந்தவளுக்கு அவன் வராமல் போனது பெரும் கவலையைத் தர சகாயத்தை நினைத்தபடி வீட்டுக்கு நடந்தாள்,

வீட்டுக்கு வந்தவளுக்கு ஆச்சரியம் காத்திருந்தது . அக்கம் பக்கத்தார் வீட்டில் கூடியிருக்க திருமண பேச்சு காதில் வந்து விழுந்தது. சகாயம் தனது மனமாற்றத்தை அறிந்து தனக்கு முன்பே வீட்டுக்கு வந்து திருமண பேச்சை ஆரம்பித்திருப்பானோ என்று எண்ணியவாறே வீட்டுக்குள் நுழைந்தவள் அதிர்ச்சியில் சிலையானாள்.
- தொடரும்.

தமிழ் ரசிகன்
18-10-2008, 03:53 PM
அருமையான கதை. எதிர்பார்ப்பை ஏற்படுத்தி காக்க வைத்து விட்டீர்கள். சீக்கிரம் தொடருங்கள். காத்திருக்கிறோம் படிக்க. இந்த கதையை படிக்கும் போது ஏனோ இயற்கை படம் ஞாபகம் வந்தது. இதிலும் அப்படித்தான் கடலில் தொலைந்த நாயகனுக்காக நாயகி காத்திருப்பாள். அவளுக்காக இன்னொரு நாயகன் காத்திருப்பான். நாயகி மனம் மாறி இன்னொரு நாயகனை காதலிக்க ஆரம்பிக்க எண்ணும் போது பழைய நாயகன் வந்து சேருவான். நாயகி பழைய காதலனையே கைப்பிடிப்பது போல் கதை.

ஐரேனிபுரம் பால்ராசய்யா
24-10-2008, 04:43 AM
வீட்டில் சகாயம் உட்கார்ந்து இருக்க அவருக்கு பக்கத்தில் பீட்டர் அமர்ந்திருந்தான். அடர்ந்து வளர்ந்த தாடியும், ஒட்டிய முகமும், அழுக்கு பனியனும் லுங்கியும் அணிந்து தனது சுய அடையாளங்களை இழந்து அம்ர்ந்திருந்தான்.

ஆக்னஸ்சுக்கு வார்த்தைகள் எங்கு ஓடிமறைந்ததோ தெரியவில்லை தொண்டைக்குழியை விட்டு வரமறுத்தது. ஓடிச்சென்று அவன் கரம் பற்றினாள்.”பீட்டர்…..” அதற்கு மேல் அவளால் ஒரு வார்த்தையும் சொல்ல முடியாமல் ஓவென்று அழ ஆரம்பித்தாள்.

``இவ்வளவு நாளும் நீஙக எங்க இருந்தீங்க, நீஙக செத்துப்போயிட்டாதா நாங்க எல்லாரும் ந்மபியிட்டோம் சொல்லுங்க பீட்டர் நீங்க எங்க இருந்தீங்க?’’ அழுகையினூடே மெல்லக் கேட்டாள் ஆக்னஸ்.

``ஆக்னஸ், அவர அதிகம் தொந்தரவு பண்ண வேண்டாம் அவர் எங்கிட்ட் சொன்னத நானே சொல்லியிடுறேன், கடல்ல மீன் பிடிக்கப்போனப்போ புயல்காற்று வீசி திசை மாறி பாகிஸ்தான் ஓரமா கரை ஒதுங்கியிருக்கிறாரு, அந்த நாட்டு போலீஸ்காரங்க இவர பிடிச்சு ஜெயில்ல போட்டுட்டாங்க, அதிகம் படிக்காதனாலயும், அவங்க மொழி தெரியாம தடுமாறி கடைசியா இந்திய தூதரகம் மூலமா விடுதலை செஞ்சுட்டாங்க, நேற்று சென்னைக்கு வந்து அப்பறமா இன்னைக்கு காலையுல நம்ம ஊருக்கு வந்தவர பாத்து நான் தான் உன் வீட்டுக்கு கூட்டி வந்தேன். எப்பிடியோ நீ ஆசப்பட்ட பீட்டர் உனக்கு திரும்ப கிடைச்சுட்டான் இபப சந்தோசம் தானே’’ சகாயம் அவளது முகம் பார்த்து சொன்னபோது ஆக்னஸ்சுக்கு அது என்னவோ போலிருந்தது. பீட்டரின் கைகளைப்பற்றி இழுத்து தனது அறைக்குள் நுழைந்து கதவை தாழிட்டாள்.

சகாயத்துக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது, அவளது காதலில் இருந்த உறுதி கண்டு ஒருகணம் ஆச்சரியப்பட்டாலும் மனசுக்குள் எதையோ இழந்தது போன்ற உணர்வு எழுந்து அடங்கியது. ``வீணா என் பின்னால சுத்துறத விட்டுட்டு வேற யாரையாவது கல்யாணம் ப்ண்ணிகுங்க’ என்று அன்று சொன்ன அவளது வார்த்தை இன்று பலித்துவிட்டதை உணர்ந்து இறுகிய முகத்துடன் வீட்டை விட்டு வெளியேறத் தயாரானான்.

``என்ன அதுக்குள்ள கிளம்பியிட்டீங்க, இருந்து கல்யாணத்துக்கு நாள் குறிச்சு குடுத்துட்டு போங்க’’ பீட்டரின் மகிழ்சியான குரல் கேட்டு மனதுக்குள் சிரித்தான் சகாயம். இருவரும் சேர்ந்துவிட்டார்கள் இனி நான் எதற்கு என்று மனசு கேட்டுக்கொண்டது, சரி கொஞ்சம் நேரம் இருந்துவிட்டு போகலாம் என்று அமர்ந்தான்.

”என்ன மாப்பிள்ள சோகமா இருக்கீங்க? “ பீட்டர் தன்னைப்பார்த்து கேட்டபோது ஒருகணம் அதிர்ந்து திரும்பி பார்த்தான் சகாயம்.

`` ஆக்னஸ் எல்லாத்தையும் எங்கிட்ட சொல்லிட்டா, நீஙக அவள பொண்ணு பார்த்துட்டு போனது, அவ மனசு மாறுற வரைக்கும் நீங்க அவளுக்காக காத்திருந்தது எல்லாத்தையும் சொன்னா, அவ மனசுலயிருந்து கொஞ்சம் கொஞ்சமா என்னோட நினைவுகள் மறைஞ்சு உங்களப்பற்றி நினைக்க ஆரம்பிச்சுட்டா, இந்த நேரத்துல நான் வந்துட்டதால அவ மனசு மாறுமுன்னு நீங்க நென்ச்சிருப்பீங்க, அவ இப்போ உங்களத்தான் கல்யாணம் பண்ணிக்க விரும்பறா அவள கட்டிக்க சம்மதம் தானே’’ பீட்டர் கேட்டபோது என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அக்னஸ்சைப் பார்க்க அவள் நாணத்தில் தலைகுனிந்தாள். வானம் மேகங்கள் தொலைந்து பிரகாசமாக இருந்தது சகாயத்தின் மனதைப்போல.

சிவா.ஜி
24-10-2008, 07:33 AM
பெண்மையின் மேன்மையை மிக நன்றாக உணர்த்துகிறது இந்தக் கதை. சகாயம் போன்ற நல்ல மனசுக்காரர்களின் மனம் உடையாமல் காப்பாற்றப்பட்டது ஆறுதலைத் தந்தாலும்....அந்த பழையக்காதலின் மேல்...உறுதியின் மேல் சற்றே சந்தேகம் எழுகிறது.

ஆக்னஸ் பீட்டரை மறக்கமுடியாமல் தவித்து வந்ததை அழுத்தமாய் சொல்லிய கதை சகாயத்தின் பால் ஈர்ப்பு தோன்றியதை அத்தனை அழுத்தமாய் சொல்லவில்லையோ எனத் தோன்றுகிறது.

கதை சொல்லிய விதம் அருமை. வாழ்த்துகள் ஐ.பா.ரா.

பாரதி
24-10-2008, 11:22 AM
எனக்குத்தோன்றியதை ஏற்கனவே சிவா கூறிவிட்டார்.

விடாமுயற்சியும், நல்ல மனமும் கொண்ட மனிதர்கள் இன்னும் பூமியில் உலாவத்தான் செய்கிறார்கள் என்பதை உறுதி செய்யும் விதமாக கதை சொல்லியதற்கு பாராட்டு பால் இராசையா.