PDA

View Full Version : வறண்ட இதயங்கள்



leomohan
14-10-2008, 11:01 AM
என்னுடைய முந்தைய நிறுவனத்தின் முதலாளியை பார்த்த போது எனக்கு அழுகை வந்துவிட்டது. என்ன மாதிரி இருந்த மனிதர் ஏன் இப்படி ஆகிவிட்டார் என்று தோன்றியது.

வழக்கமான சம்பாஷணைகளை தவிர்த்து ஏன் சார்? என்னாச்சு என்று கேட்டே விட்டேன்.

அட ராஜாவா. வாப்பா. நல்லாயிருக்கியா? எங்கே வேலை செய்யறே என்று அன்பாக கேட்டார். அவருடைய பழைய டாட்டா சீயேராவில் இருந்து இறங்கியவாறே.

நான் நல்லா இருக்கேன் சார். இப்போ ஒரு பெரிய கம்பெனியில் பொது மேலாளராக இருக்கேன். நீங்க ஏன் இப்படி ஆயிட்டீங்க சார் என்று கேட்டேன்.

நான் எடுத்த முடிவெல்லாம் ஒரு காலத்துல சரியா போய்கிட்டு இருந்தது இல்லையா. இப்ப சமீப காலத்திலே எடுத்து ஒன்னு ரெண்டு முடிவு கொஞ்சம் நஷ்டத்தை ஏற்படுத்திடுத்து என்று விவரித்தார். நம்பிக்கையானவர்கள் அவரை ஏமாற்றிய கதை.

பேசிக் கொண்டே நடந்த போது தேனீர் கடையின் அருகில் இருந்த ஒரு சிறிய வீட்டிலிருந்து அழுகை குரல் வந்தது. ஒரு பெண்மணி ஓடி வந்து என் கொழந்தைய காப்பாதுங்களேன் என்று அழுதவாறு எங்களை பார்த்து கதறினாள்.

நான் ஆமா சென்னையில் வழிபோக்கர்களை ஏமாற்ற புது புது வழிகளை கண்டுபிடித்தவாறே இருக்கிறார்கள் என்று நினைத்து சலித்துக் கொண்டேன். பசி என்று யாராவது பணம் கேட்டால் பணம் தராமல் அவர்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுக்கும் பழக்கம் எனக்கு. பணம் தான் வேணும் சாப்பாடு வேண்டாம் என்று கேட்டவர்களை பார்த்து அப்புறம் ஏன் பசிக்குதுன்னு பொய் சொல்றே என்று சாடுவேன்.

இவ்வாறு நினைத்துக் கொண்டே உள்ளே ஓடிச் சென்று பார்த்தோம். ஒரு குழந்தை வாயில் நுரை தப்பிக் கிடந்தது. என் முதலாளி அவனை தூக்கிக் கொண்டு வண்டியை நோக்கி ஓடி வர, நான் கதவை திறந்துவிட்டு ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தேன். அந்த பெண்மணி பின் இருக்கையில் அமர்ந்துக் கொண்டாள்.

இங்கே ஆஸ்பத்திரி எங்கே இருக்கு என்று பதட்டத்துடன் அந்த பெண்மணியை கேட்டேன்.

ரெண்டு தெரு தள்ளி லக்ஷ்மி நர்ஸிங்க ஹோம் இருக்கு சார் என்றாள் அழுதவாறே.

வண்டியை அருகிலிருந்த மருத்துவ மனைக்கு ஓட்டினேன்.

சுமார் 10,000 செலவானது. ஆனால் அவரிடம் 6000 தான் இருந்தது. நான் மீது 4000 கொடுத்தேன். அவர் வருத்தத்துடன் என்னை பார்த்தார்.

சார் கவலை படாதீங்க சார். யாரையும் நம்பற மாதிரி இல்லே இந்த காலத்துல. நாங்க உங்க கிட்டே வேலை செய்த போது யாரையும் நம்பாம இருந்தீங்க. அப்பெல்லாம் சே இவருக்கு யார் மேலும் நம்பிக்கையே வராதான்னு நினைச்சு வருத்தப்பட்டிருக்கோம். ஆனா வியாபாரம் பெருகினதும் சில பேரை நம்ப ஆரம்பிச்சீங்க. அவங்க உங்க கழுத்தறுத்துட்டாங்க என்றேன் ஆறுதலாக.

மருத்துவர் குழந்தையை பரிசோதனை செய்து மருந்து கொடுத்த பிறகு அந்த பெண்மணியின் வீட்டிற்கு சென்று அவர்களை இறக்கிவிட்டோம்.
அந்த பெண், ரொம்ப நன்றி சார். சமயத்துல வந்து கொழந்தைய காப்பாத்திட்டீங்க. ஆனா கொடுக்கறதுக்கு என்கிட்ட ஒரு பைசா கூட இல்லை என்றார்.

கவலை படாதீங்க அம்மா என்று கூறிவிட்ட மீண்டும் வண்டியை நோக்கி நடந்தோம்.

வண்டிக்கு வந்த பிறகு தான் என் முதலாளி கண்ணாடியை அந்த வீட்டிலேயே விட்டதை உணர்ந்தார். வாப்பா போய் கண்ணாடி எடுத்து வரலாம் என்று சொல்லி திரும்பி நடந்தார். நானும் தொடர்ந்தேன்.
அங்கே கேட்ட பேச்சு எங்கள் இருவரையும் திக்குமுக்காடச் செய்தது. அப்படியே சில நிமிடங்கள் உறைந்து நின்றுவிட்டோம்.

"ஆமா டாக்டர். 5000 கொடுத்திடுங்க. கொழந்தைக்கு விட்டாமின் மாத்திரை தானே கொடுத்தீங்க. பாவம் நல்லவங்க போலிருக்கு ஏமாந்துட்டாங்க. இன்னும் இரண்டு நாள் கழிச்சி வேற முட்டாளுங்க மாட்டறாங்களான்னு பாக்கறேன்".
***

சிவா.ஜி
14-10-2008, 11:36 AM
நீண்ட நாட்களுக்குப் பிறகு மோகனின் கதை மன்றத்தில். மிக்க மகிழ்ச்சி. ஏமாற்றங்கள் சிறிதோ பெரிதோ.....ஆனால் அவை தரும் வலி கொடுமையானது. அதுவும் திட்டமிட்டு ஏமாற்றுபவர்களிடம் ஏமாந்துபோகும்போது உதவி செய்வதில் வெறுப்பு ஏற்பட்டுவிடுகிறது.

நல்ல நடையில், நல்ல கதை. பாராட்டுக்கள் மோகன்.

Keelai Naadaan
14-10-2008, 02:08 PM
அடப்பாவமே... இப்படி கூடவா ஏமாற்றுவார்கள்...?
இவர்களை போன்றோர் மனம் திருந்தாவிட்டால் நல்ல நிலை அடையமாட்டார்கள்

பாரதி
14-10-2008, 02:36 PM
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் என்பதை நிரூபிக்கிறது இக்கதை. வறண்டு போகாத இதயங்களை சுரண்டிப்பார்க்கும் சொறித்தவளைகளைப் போன்ற இவர்களால்தான் உண்மையிலேயே பாதிக்கப்படுபவர்களைக்கூட நாம் சந்தேகக்கண்ணோடுடனே பார்க்க வேண்டியதிருக்கிறது.

எச்சரிக்கை உணர்வைத்தந்த கதையைத் தந்தமைக்கு பாராட்டு மோகன்.

தீபா
14-10-2008, 02:43 PM
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் என்பதை நிரூபிக்கிறது இக்கதை. வறண்டு போகாத இதயங்களை சுரண்டிப்பார்க்கும் சொறித்தவளைகளைப் போன்ற இவர்களால்தான் உண்மையிலேயே பாதிக்கப்படுபவர்களைக்கூட நாம் சந்தேகக்கண்ணோடுடனே பார்க்க வேண்டியதிருக்கிறது.

எச்சரிக்கை உணர்வைத்தந்த கதையைத் தந்தமைக்கு பாராட்டு மோகன்.

உண்மைதான்.

நல்ல கரு, அருமையான நடை.

வாழ்த்துக்கள் மோகன் சார்.

poornima
14-10-2008, 03:07 PM
அன்புள்ள லியோமோகன்

உங்கள் இந்த பதிவைப் பார்த்தபிறகு உங்கள் கையெழுத்து வரிகளை
மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ளவே தோன்றுகிறது..

பென்ஸ்
14-10-2008, 05:40 PM
மோகன்...
நல்ல கருத்து, ஒரு முறை நினைவுகளை அசை போட வைத்தது....

சில நேரங்களில் தெரிந்தே ஏமாளியாய் இருந்திருக்கிறேன்.
அதில் ஒருவராவது உண்மையாகவே பயன்பட்டிருந்திருக்கலாம் என்ற எண்ணத்துடன்....

ஒருமுறை எங்கள் ஊர் பஸ் நிலையத்தில்,
ஒரு வயதானவர் வாயில் நுரை தள்ளியபடி படுத்து கிடக்க
அவரை சுற்றி பெரிய கூட்டம், ஒருவன் எலிமிச்சை தண்ணி வாங்க போக,
நாலுபேர் அவரை நிமிர்த்து இருந்த,
ஆஸ்பத்திரிக்கு வந்த போது இப்படியாகிவிட்டதாகவும், தன்னிடம் இருந்த காசை யாரோ எடுத்து சென்றதாகவும் சொல்ல,
அனைவருக்கும் பரிதாபமாயிற்று...
களவு என்றதும் ஒருத்தன் போயி நடத்துனர் ஓய்வறை பக்கத்தில் நின்றிருந்த போலிசை கூப்பிட்டு வர....

அட அதுல இருந்த அந்த நோயாளியை காணோமப்பா...!!!!

அந்த ஒரு ஏமாத்துகாரனுக்கு மட்டும் தான் நான் காசு கொடுத்திருந்திருக்கவில்லை :frown:

அமரன்
15-10-2008, 08:56 AM
பாரதி அண்ணா சொன்னதை போல் ஈரம் சுரக்கும் இருதயங்கள் வறண்டு போக இவர்களும் காரணம். களவு கொடுத்தவருக்கு ஆறுதல் சொல்லும் நேரத்தில் நாம் களவு போகும் யதார்த்தத்தை கிளைப்பாதையாக கொண்டுள்ளமை கதைக்கு மேலும் சிறப்பு.

வாழும் தெய்வங்கள் என்று வந்தனை செய்யப்பட்டும் வைத்தியர்களை இந்த மாதிரி சித்திரிப்பதை நான் விரும்புவதில்லை. ஆனாலும் அப்படி நடக்கும் ஒரு சிலரால் இப்படி எழுதுவதை தவிர்க்கவும் முடிவதில்லை.

நீண்ட நாளின் பின் நீளும் ஒரு சம்பவக் கருவினை கதையாக்கிய மோகனுக்கு பாராட்டுகள்.

shibly591
15-10-2008, 09:16 AM
வித்தியாசமான பாணி..சொன்ன விதம் இரண்டுமே ஓ போட வைக்கிறது

சிந்திக்கவும் வைக்கிறது

வாழ்த்துக்கள்

Maruthu
15-10-2008, 11:02 AM
மோகன் சார்,

அந்த தொழில் தர்மம் அறிந்த மருத்துவர் இப்பொழுதும் தன் சேவையில் இருக்கிறாரா? ...


அன்புடன்...
மருது.

இளசு
16-10-2008, 08:07 PM
படிப்பினை கதை..

பாரதியின் ரௌத்திரமான விமர்சனம் ஒரு முறுக்கையும்
ஒருவனாவது உண்மையில் பயன்படலாம் என்ற பென்ஸின் வரி முறுவலையும்
வரவைத்தன..

பாராட்டுகள் மோகன்..

உங்களுக்கு எழுத இன்னும் நேரம் அமைய வாழ்த்துகிறேன்...

leomohan
17-10-2008, 03:21 AM
படித்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.

இதை படித்த ஒரு நண்பர் இது உன்னுடைய வழக்கமான நடை போல இல்லையே என்று கேட்டார். இங்கு பலருக்கும் அது தோன்றியிருக்கலாம்.

இது நான் பதித்த அன்று காலை எனக்கு ஏற்பட்ட கனவு. பெரும்பாலும் கனவுகள் வருவதில்லை. இது அரிதாக நடந்தது.

ஏன் இது போன்ற ஒரு கனவு வந்தது என்று தெரியவில்லை.

அதை இலக்கியப்படுத்த முயலாமல் வர்ணனைகளை கூட்டாமல் அப்படியே எழுதினேன். இருந்தும் கனவில் ஏற்பட்ட அதிர்ச்சியை காட்ட முடியவில்லை வரிகளில்.

:-(

இறைநேசன்
17-10-2008, 05:09 AM
கதை என்பதால் நன்றாக இருக்கிறது மோகன் அவர்களே!

ஆனால் இது போன்ற கதைகள் உண்மையில் ஆபத்தில் தவிக்கும் ஒருவரை காப்பாற்ற நினைப்பவரை திசை திருப்பும் என்பதை சற்று கருத்தில் கொள்ள வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன்!

ஆயிரம் பேரிடம் இதுபோல் நாம் ஏமாறலாம், ஆகினும் நாம் என்ன நினைத்து இந்த உதவியம் செய்தோம் என்பதற்கு ஏற்ற பிரதி பலன் நிச்சயம் நமக்கு கிடைக்கும்!. ஆனால் ஒரே ஒரு உண்மை ஆபத்தில் உள்ளவனை நடிக்கிறான் என்று நினைத்து நாம் உதவி செய்யாமல் விடுவது கூட குற்றமாக கருதப்படும்

மேலும் உதவி செய்யும் மன நிலையில் இருக்கும் ஒருவரை செய்ய விடாமல் தடுப்பது மிகப்பெரிய குற்றமாக கருதப்படும் என்றே கருதுகிறேன்!

எனக்கு மனதில் தோன்றியதை எழுதினேன். நன்றி!
இறைநேசன்

Maruthu
17-10-2008, 09:39 AM
படித்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.
இது நான் பதித்த அன்று காலை எனக்கு ஏற்பட்ட கனவு. பெரும்பாலும் கனவுகள் வருவதில்லை. இது அரிதாக நடந்தது.

ஏன் இது போன்ற ஒரு கனவு வந்தது என்று தெரியவில்லை.

:-(


கதையல்ல நிஜம் என்றிருந்தேன் ஆனாலும் நிஜத்தின் தாக்கம் இருந்தது.

ஒருவேளை மருத்துவரால், நீங்கள் எப்பொழுதேனும் பாதிக்கப்பட்டிருந்தால் இது போன்ற கனவுகள் வருவது சாத்தியமே!...


அன்புடன்...
மருது.