PDA

View Full Version : கொடுங்கோல் உலகில் எனக்கானதொரு இருப்பிடம்



shibly591
14-10-2008, 09:35 AM
வலி நிறைந்த வாழ்வின் நயனங்கள்
பாலைவன மணல்வெளியில் நகரும்
ஒரு நத்தையென
என் சுவாச தருணங்கள் மீது
ஊர்ந்து கொண்டிருப்பதை பாரீர்..

வாசம் வழியும் பூக்காடொன்றில்
எனக்கான சுகந்தம்
எப்போது
எபபடி
யாரால்
களவாடப்பட்டது பற்றியெல்லாம்
யானறியேன்...! யானறியேன்..!

ஒரே ஒரு விடியலுக்கான என்
இரவின் நீட்சியின் முடிவில்
அடர்ந்த வனாந்தரத்தின்
ஏகாந்த இருள் கவிந்து கிடக்கிறது

பேரிரைச்சலாய்
என் நடுக்கங்களை பிளந்தபடி
அக்கினித்தனிமையில்
எனக்கான எல்லாமே
பிளம்புகள் தின்னும்
வேர்மரக்கிளைகளாய்
வெந்து போவதையும் பாரீர்..

ஒட்டுமொத்த துயரங்களை
ஒற்றை மனசில் ஆக்கிரமித்தபடி
கானலென மறையும்
இந்த கொடுங்கோல் உலகில்
எனக்கான இருப்பிடம்
எங்கிருக்கிறது..?எங்கிருக்கிறது..?

பூ வெடிக்கும் ஓசையென
பிரம்மாண்ட சப்தங்களாய்
எனக்குள்ளே
சீறிச்சிதறி சுருங்கிப்போகும்
எதிர்த்தல் பற்றிய
ஏராளக்குறிப்புக்களை
உரைக்கும் வழி தெரியாமல்
உறைந்து போகிறேன்..
உறங்கிப்போகிறேன்

சூனியங்கள் செதுக்கிக்கொண்டிருக்கும்
எனது நாளைய விடியலிலும்
தீர்க்கமற்ற தீர்வின் வெறுமைகளை
எப்போதும் போலவே
இப்போதும் காண்கிறேன்..

ரணங்களின் ஒற்றையடிப்பாதையில்
எனது வலி மிகைத்த பயணம்
இன்னுமின்னும் நீள்கிறது
ஆளரவமற்ற சுதந்திர வெளியொன்றை நோக்கி....!

இளசு
18-10-2008, 09:43 AM
ஆல்ப்ஸ் மலையில் நெல் விதைத்தால்?
பாலைமணலில் நத்தையை விட்டால்?

வன்புலப்பெயர்வு ஒரு பெருங்கொடுமை!

பாதகச் சூழலிலும் பரிமளிக்க வெளிப்படும் உள்திறமை!

வலி சொல்லும் கவிதைக்குப் பாராட்டுகள் ஷிப்லி..

பிளம்புகள் - சொற்பொருள் தருக.. நன்றி!

shibly591
19-10-2008, 04:17 AM
ஆல்ப்ஸ் மலையில் நெல் விதைத்தால்?
பாலைமணலில் நத்தையை விட்டால்?

வன்புலப்பெயர்வு ஒரு பெருங்கொடுமை!

பாதகச் சூழலிலும் பரிமளிக்க வெளிப்படும் உள்திறமை!

வலி சொல்லும் கவிதைக்குப் பாராட்டுகள் ஷிப்லி..

பிளம்புகள் - சொற்பொருள் தருக.. நன்றி!

நன்றி அண்ணா..

எரிமலைப் "பிளம்பு"

அதாவது அதி உக்கிரமான நெருப்பும் அதன் அனலும் என்று வரையறை செய்கிறது எனது சின்ன அறிவு

பின்னூட்டலுக்கு நன்றிகள்