PDA

View Full Version : பழையனவைகள்



எஸ்.எம். சுனைத் ஹஸனீ
13-10-2008, 09:17 AM
நெஞ்சாங்கூட்டுக் குழியில்
அமிழ்ந்து இறுகிப் போயிருக்கின்றன
பசையிழக்கா பழைய காட்சிகள்

தசை நார்கள் குறுகிச் சுருங்கி
மயிர் நரைத்துதிர்ந்து
உடல் மூப்புத் தட்டிய பின்னும்
அக் காட்சிகளுக்குண்டான இளமை
தறிபட்டுத் தங்கிப் போயுள்ளன இன்னமும்

பச்சையங்கள் வடிந்து கொட்டும்
வசந்த கால அந்திமக் காட்சிகளை
அகற்ற முயன்று களைத்துத் திரும்புகின்றன
இலையுதிர் காலங்கள்

அனல் தெறிக்கும் உச்சிப் பொழுதுகளும்
மகரந்தம் வீசும் மாலைப் பொழுதுகளும்
மறையாமல் அப்படியே நிற்கிறது

பெருகி வழியும் நீர்நிலைகளும்
அரவமற்ற தார்ச் சாலைகளும்
பழையன மாறாமல் அப்படியே

விரல் பற்றி நடை பயின்ற சிறார்கள்
இன்னுமிருக்கிறார்கள் கற்றபடியே

காற்றில் கானமிட்டுச் செல்லும்
வரப்போர வானம்பாடிகள் கூட
வாயசைத்தபடியே இன்னமும்

காயும் வடகம் சுற்றிய காக்கைகளை
இன்னும் விரட்டியபடியமர்ந்திருக்கிறாள்
செல்லாயிப் பாட்டி

விடலைகள் கூடிச் சுட்ட
ஏரிக் கெளுத்தியின் கவுச்சை மணம்
இப்பொழதும் நாசி விட்டகலாமல்

கூடிச் சிரித்து குதூகலிக்கும்
வெம்பி நொந்து பரிதவிக்கும்
சிலேடை கூறிச் சிலாகிக்கும்
இன்ப நண்பர் பட்டாளமொன்று
கூடிக் கலைந்த படி
அரச மர நிழல்களில்

அப்படியே எல்லாமும் எல்லாமுமாயிருக்கும்
என்னிதய வழி காட்சிப் பொருள்களில்
எதுவும் மாறா என்னை மட்டும்
தேடித் தோற்றுத் திரும்புகிறேன்.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

gans5001
13-10-2008, 10:23 AM
அழகான கவிதை. சா.கந்தசாமியின் தொலைந்து போனவர்களை மீண்டும் நினைவுப்படுத்தியது. மனம் மெல்ல நண்பர்களுடான வசந்தகாலத்திற்கு சிறகடிக்கத் தொடங்கியிருக்கிறது

தீபா
13-10-2008, 12:48 PM
எனக்கு மனம் அழுகிறது சார். இந்தக் கவிதை படித்து என்னை நான் நினைத்துக் கொண்டேன்.

வாழ்த்துக்கள்.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
14-10-2008, 09:09 AM
மிக்க நன்றி gans.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
14-10-2008, 09:12 AM
அப்படியா தென்றல். கர்சீப் வேணுமா?

shibly591
14-10-2008, 09:25 AM
நன்றாய் இருக்கிறது கரு..

தொடருங்கள் நண்பரே

தீபா
14-10-2008, 10:11 AM
அப்படியா தென்றல். கர்சீப் வேணுமா?

முடிஞ்சா அனுப்பி வையுங்க.. :D

இளசு
15-10-2008, 05:47 PM
பிறழ்வு நிலை...?

எல்லாம் மாறாமல்
அவன் மட்டும் மாறிவிட்டான்!

உறைந்த காட்சிகள் நடுவே
உருகி ஒடுங்கியவன்..
பொருந்தாச் சித்திரம்!

அருமை கண்ஸை - விமர்சனத் திலகம் என்பேன்..
இங்கே இருவரிகளில் அது நிதர்சனம் ஆகக் கண்டேன்..

கவிதைக்கு வாழ்த்துகள் ஜூனைத்!

பழையன - என்றாலே பன்மை வந்துவிடாதா?

களைந்த என்பது கலைந்த என வந்திருக்க வேண்டுமோ?

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
16-10-2008, 09:04 AM
மிக்க நன்றி இளசு அவர்களே. திருத்தி விட்டென்.நீங்கள் சொல்லுவதும் சரிதான். பழையனவற்றில் பன்மை வந்து விட்டது.
கூட்டங்கள் சாரல்களைப் போன்று பன்மையடக்கிய பன்மை வாக்கியம். தவறென்றால் மீண்டும் திருத்திக் கொள்கிறேன்.