PDA

View Full Version : எனது நான்காவது நூலின் முன் வாசிப்புshibly591
11-10-2008, 02:42 PM
மன்ற நண்பர்களே....

இதோ எனது நான்காவது நூலிற்காக நான் தொகுத்திருக்கும் 90 வீதமான கவிதைகளை உங்களுக்கு தருகிறேன்...

இதன் கவிதை வடிவங்கள் குறைகள் பொருத்தமான நூற்தலைப்பு மற்றும் உங்கள் அபிப்பிராயங்களை தாழ்மையுடன் வேண்டுகிறேன்..

நன்றிகள்

விரைவில் வெளிவரவிருக்கும் எனது நூலிற்காக நான் தொகுத்த எனது கவிதைகள்----------நிந்தவூர் ஷிப்லி

முதல் கவி என் ப்ரிய அன்னைக்கே....
அவள் மரணத்தின் முகவரியை
முத்தமிட்டுத்திரும்பியபோதே
எனது முகவரி எனக்குக்கிடைத்தது..

அவள் குருதியின் முகவரிகளே
எனது சுவாசம்...

கருணையின் முகவரி
அவள் கண்களில் உறைகிறது
பொறுமையின் முகவரி
அவள் மௌனத்துள் நிறைகிறது..

எனதுபெயரின் முதல்வரியை
அப்பா எடுத்துக்கொண்டபோதும்
என் பெயர், உயிர் ,பேச்சு, மூச்சு
எதிலும் நிறைந்திருக்கிறாள் நிரம்ப நிரம்ப...

வலிக்க வலிக்க
உன் தொப்புள் கொடி அறுத்த கொடியவன் எனக்கு
அடுத்த கணம் பசி தீர்க்க மார் நீட்டிய
உன் சிறப்பின் முகவரியை எங்கனம் உரைப்பது???

என் ப்ரிய அம்மா...
எத்தனை முகவரிகள் தாண்டுகிறேன்
பட்டங்களால்
பதவிகளால்
பெருமைகளால்...
அத்தனைக்கும் கர்த்தா உன் காலடியில்
எனது ஆத்மாவின் முகவரி சமர்ப்பணம்...
என் தேசத்தில் இது கிளையுதிர்காலம்...

இலையுதிர் காலம் முடிந்து
இப்போது இங்கே
கிளையுதிர்காலம்...

தினமும் இயற்கை மரணத்தை விட
செயற்கை மரணம் மலிந்து போன
மண் இது...

சுவாசப்பைகளும்
இருதயத்துடிப்பும்
பலவந்தமாய் பிதுங்கியெறியும் கைகளை
குலுக்கிக்கொண்டிருக்கின்றன
சில ராட்சசக்கைகள்..

எம்மண்ணுமே இங்கே
செம்மண்தான்
குருதித்துகள்கள்
கலந்து போனதால்...

குழந்தைகள்
தாலாட்டு
தொட்டில்
மூன்றும் தலைகீழாகி இப்போது
சடலங்கள்
ஒப்பாரி
பாடை

எங்கள் ரணங்களை
உங்களுக்கெல்லாம் புரிய வைக்க
எந்த உவமைகளை தேடிப்பிடிப்பது...?

ஆயுதங்களும்
ஆயுதங்களும் மோதுகின்றன..
அப்பாவிகளை இடைநடுவில் நிறுத்திக்கொண்டு...

அவர்கள் கூற்றுப்படி இது
சமாதானத்துக்கான போராட்டமாம்..
இவர்கள் கூற்றுப்படி இது
வன்முறைக்கெதிரான போராட்டமாம்...
எங்கள் கூற்றை யார் கேட்கிறார்கள்...?

எனது தேசத்தின் வரலாறு
சிதறி விழும்
மனித உயிர்களின்
குருதியினால் தத்ரூபமாக வரையப்பட்டுக்கொண்டிருக்கிறது..

எப்போதோ ஓர் நாளில்
இங்கு சமாதானம்
மலரத்தான் போகிறது.
எல்லோரும் இறந்து போன பின்......

கிளையுதிர்காலம் முடிந்து
இன்னும் சில நாட்களில்
தோன்றக்கூடும் வேரறுகாலம்....

அப்போது
எலும்புக்கூடுகளும்
மண்டையோடுகளுமே
எஞ்சியிருக்கும்....


யாரிடம் போய்ச்சொல்லி அழ..
யார் செய்த சூழ்ச்சியிது?
யாரிடம் போய்ச்சொல்லுவது?
யாழ் மண்ணின் வீழ்ச்சியினை
யாரிடம் போய்ச்சொல்லுவது?


கனவுகளை காணவில்லை
கண்ணிரண்டில் கண்ணீர் மழை
இடம்பெயர்ந்த நாள் முதலாய்
இன்றுவரை உறக்கமில்லை


உடையிழந்தோம் உறைவிடமிழந்தோம்
உயிர் சுமந்து உணர்விழந்தோம்
உறவிழந்தோம் உணவிழந்தோம்
உடன் பிறந்தோர் பலரிழந்தோம்


புயலழித்த பூவனமாய்
புலமபெயர்ந்தோர் நாமானோம்
உதிர்ந்த விட்ட பூவினிலே
உறைந்து போன தேனானோம்


நிலம் வீடு பிளந்ததம்மா
நூலகமும் எரிந்ததம்மா
பள்ளிகளும் கோயில்களும்
பாழ்நிலமாய்ப்போனதம்மா....


காற்தடங்கள் பதிந்த இடம்
கண்ணிவெடியில் புதைந்ததம்மா
கனிமரங்கள் துளிர்த்த இடம்
கல்லறையாய் போனதம்மா


அங்கொன்றும் இங்கொன்றாய்
உறவெல்லாம் தொலைந்ததம்மா
நிம்மதியின் நிழல் இழந்து
நெடும் பயணம் தொடர்ந்ததம்மா...


அகதி என்ற பெயர் எமக்கு
அறிமுகமாய் ஆனதம்மா
பனிமழையில் நனைந்த வாழ்க்கை
எரிமலையாய்ப்போனதம்மா


யார் செய்த சூழ்ச்சியிது?
யாரிடம் போய்ச்சொல்லுவது?
யாழ் மண்ணின் வீழ்ச்சியினை
யாரிடம் போய்ச்சொல்லுவது?


இந்த மெல்லிய இரவில் --------------------------
தூக்கம் இருண்டுபோன
இந்த மெல்லிய இரவில்
விழித்திருக்கும் என்
உணர்வுகளைச்சுட்;டி
எதைப்பற்றி நான்
பாடப்போகிறேன்…?

பாசம், மனசு, நட்பு
எல்லாமே பொய்யாகிவிட்ட
வாழ்க்கையை இனியும்
வாழ்ந்து எதை
சாதிக்கப்போகிறது
எனது எதிர்காலம்..

வலிக்கிறது
என் விரல்களும் இதயமும்..

கருகிப்போன கனவுகளை
மீண்டும் யாசிக்கிறது
என் கண்கள்..
உருகிப்போன நினைவுகளை
மீண்டும் தாகிக்கிறது
என் கணங்கள்…

வலிகளில் நிறைந்து போன
என் விழிகளைப்பற்றி
ரணங்களில் புதைந்து போன
என் ஆத்மார்த்தம் பற்றி
துயரப்பாடல்கள் உச்சரிக்கும்
என் பேனா பற்றி
காயங்களின் சுவடுகளை ஏந்தி நிற்கும்
என் பாவப்பட்ட இதயம் பற்றி
இனிப்பேச யாருமில்லையா…?

உலுக்கி எடுக்கும்
அதிர்வுகளைத்தாங்கி
வாழ்தல் மீதான பயணம்
நீள்வது அத்தனை எளிதில்லை

இனியும் என்ன இருக்கிறது?

சேரத்து வைத்த ஆசைகள்
அநாதையான பின்பும
நம்பியிருந்த உறவுகள்
சுக்கு நு}றான பின்பும்
தேக்கி வைத்த நம்பிக்கை
வேரிழந்த பின்பும்

இனியும் என்ன இருக்கிறது?

காலியாகிப்போன பாசப்பைகளில்
இனி நான் இடப்போவதில்லை
சில்லறை மனிதர்களை..

எல்லா இதயங்களிலும்
போர்வைகள்..
எல்லா முகங்களிலும
முகமூடிகள்..
எல்லா புன்னகைகளிலும்
விஷங்கள்..
எல்லா பார்வைகளிலும்
வக்கிரங்கள்..

உறவென்னும் தேசத்தில்
அகதியாக்கப்பட்டவன் நான்

மனிதர்களைத்தேடிய
என் நித்திய பயணத்தில்
எப்போடு நிகழும்
திடீர் திருப்பம்?

யாரையும் குற்றம் சாட்டவில்லை
காரணம் முதல் குற்றவாளி
நான்தானே…?

தூக்கம் இருண்டுபோன
இந்த மெல்லிய இரவில்
விழித்திருக்கும் என்
உணர்வுகளைச்சுட்;டி
இன்னும்
எதைப்பற்றி நான்
பாடப்போகிறேன்…?

எனக்குப் பின்னால் இன்னொரு துப்பாக்கி

எனக்கு முன்னால் துப்பாக்கி
ஒன்று நீட்டப்பட்டுக்கொண'டிருக்கிறது...
எப்போது வெடிக்கும் என்பது பற்றி
எனக்குத்தெரியவில்லை..
அந்தத்துப்பாக்கி ஏந்தப்பட்ட
கரங்களுக்கும் அது தெரிந்திருக்காது...
பேசினால்
தூக்கப்பட்டிருக்கும் என் கைகளை
நான் கீழிறக்கினால்
அழுதால்
ஏன் சிரித்தாலும் கூட அது வெடிக்கச் செய்யப்படலாம்..
அது நிஜ துப்பாக்கிதானா..
உள்ளே குண்டுகள் நிரப்பப்பட்டிருக்குமா
என்பது பற்றி யாரிடம் நான் விசாரிப்பது..?
இந்தத் துப்பாக்கி
எத்தனை உயிர்களை தின்று தீர்த்ததோ யான் அறியேன்..
அசைவற்ற சிலையாக
எவ்வளவு நேரம் நான் நிற்பது?
சடுதியாக பின்னால் ஓடத்திரும்புகிறேன்..
எனக்குப் பின்னால்
எனது பின்மண்டையை குறிபார்த்தபடி
இன்னொரு துப்பாக்கி...

அவன் ஒரு காமுகன்

அவன் ஒரு காமுகன்
சுருக்கமாகச்சொன்னால்
பெண் பித்தன்....

அழகான என்றில்லை
எல்லாப்பெண்களையும்
தொட்டுப்பார்க்கும் வெறி
எப்படியோ அவனுக்குள்
வேரூன்றிக்கொண்டது.

சிற்றின்பம் பற்றியே
தொடர்ந்து
சிந்தித்துக்கொண்டிருக்கிறான்...

கனவுகளில் நிர்வாணப்பெண்கள்
அவர்களின் முகம் மட்டும்
சரியாகத்தெரிவதில்லை

விரசம்
முத்தம்
ஸ்பரிசம்
மோகம்
இவைகள்தான்
அவனுகுப்பிடித்த வார்த்தைகள்...

யாரும் அவனை
முறைத்துப்பார்க்க வேண்டாம்
ஏன்
மகா கெட்டவன்
என்று முத்திரையும்
குத்த வேண்டாம்

ஏனெனில்
இங்கே பலபேர்
அவனை விட படுமோசம்
அதை வெளிச்சொல்லும்
தைரியம் அவனுக்கு மட்டுமே
வாய்த்திருக்கிறது...

அவன் ஒரு காமுகன்
சுருக்கமாகச்சொன்னால்
பெண் பித்தன்....

மரணத்தின் குரூரப்பிடியில் இதோ என் ஆயுள்

01)
நினைவுகள்
மெல்ல மெல்ல
இருளத்தொடங்கி
எனது சுயம்
எங்கோ விழுங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
அவனது கைத்துப்பாக்கியால்தான்
இது நேர்ந்திருக்கக்கூடும்.
மனைவிக்கு மருந்து வாங்கப்போன
வழியில்தான் இப்படியாயிற்று.
பாவம் எனது இரண்டு வயதுப்பெண்பிள்ளை.
நேற்று ஜோசியக்காரன் சொன்னது நினைவில் விரிகிறது..
"எனக்கு கெட்டியான ஆயுள் ரேகையாம்"

02)
அண்மித்துக்கொண்டிருக்கும்
மரணம்
இருதயத்துடிப்பையும்
சுவாசப்பைகளையும்
சதுதியாய் பிடுங்க்துடிக்கிறது.
யார் யாரோவெல்லாம்
என்னைச்சூழ்ந்து புலம்புகிறார்கள்
"தலையில்தான் குண்டு"
"பாவம் இளம் வயது"
"இது நமது நண்பனின்...."
"சுட்டவனை யாரேனும் பார்த்தீர்களோ..?"
"அந்தப்பக்கமாய் ஒருத்தன் ஓடினான்"
எனக்காக வாதாடும் குரல்களின்
முகங்களைக்காண முடியாமல்
எனது கண்கள் மூடப்பட்டுவிட்டன.

03)
வாழ்வின் கடைசி நிமிடங்கள்
என்னை குரூரமாய் அணைத்துக்கொள்கிறது.
எனது கடைசி சுவாசத்தை நோக்கி
நானே வேகமாய் விரைகிறேன்.
கைகளும் கால்களும்
அசைவற்ற நிலையின் வாசலில்..
கண்களின் வழியே கண்ணீரும்
உடலின் வழியே இரத்தமும்
கொட்டிக்கொண்டேயிருக்கிறது.
ஒரு மரணத்தை எதிர்கொள்ளும் வலி
இதைப்படிக்கும் உங்களால்
உணரமுடிவது சாத்தியமற்றது.

04)
கடைசியாய் இதயம் துடித்தடங்கிய போது
மனைவியின் முகமும் குழந்தையின்
எதிர்காலமும் கேள்விக்குறியாய் கீறிக்கிழித்தது.
வாழ்வின் கடைசி நிமிட குரூர அணைப்பில்
எனது ஆத்மா கலக்கிறது.
"உயிர் போய்விட்டது"
என்று யாரேனும் அடையாளம் காண்பான்
அதுவரை நானும் ஒரு அநாதைப்பிணம்

05)
நேற்றுவரை கமகமத்த
என் உடல் வழியே
பிணநெடி வீசத்தொடங்கிவிட்டது..
செத்த பிறகும்
கொட்டிக்கொண்டேயிருக்கிறது
குருதியாற்றின் மத்தியில்
உடல் மிதக்கிறது படகாய்..
"இனந்தெரியாதோரால்
இளம் தகப்பன் படுகொலை"
என நாளை அச்சேறப்போகிறது
பத்திரிகைகளில் எனது மரணம்.
எதற்காக நான் கொல்லப்பட்டேன்?
என்னைச்சுட்டுப்பொசுக்கிய கரம் யாருடையது?
எந்த விடையும் என் போலவே
யாருக்கும் தெரியாது..
எனது ஆத்ம சாந்திக்காக
எல்லோரும் பிரார்த்திப்பார்கள்.
நேற்று யாருக்கோ நிகழ்ந்ததே
இன்று எனக்கு நிகழ்ந்நது..
இன்று எனக்கு நிகழ்ந்ததே
நாளை யாருக்கோ நிகழப்போகிறது
மரணம் என்பது சில்லறையாய்
மலிந்து போன இத்தேசத்தில்.....

நிழலா..? நிஜமா..?முன்புபோலவே
இப்போதும்
தூங்க முடிவதில்லை எம்மால்

இடையில் யாரோ
அடையாள அட்டை கேட்டு
மிரட்டுவதான பிரமை
இன்னும் தொடர்கிறது

பின்னிரவில்
விமானக்குண்டு வீச்சும்
கண்ணி வெடிச்சத்தமும்
காதுகளைப் பிளந்து
உணர்வுகளை உலுக்குகின்றன

சிதறிக்கிடக்கும்
இரத்த்துளிகளுக்கும்
எலும்புக்கூடுகளுக்கும் நடுவில்
சாவின் வாசற்படியில்
கால்கள் வேர்பிடித்து நிற்பது
நிழலா..? நிஜமா..?

இழந்து போன உறவுகளின்
கதறும் குரல்கள்
நினைவுகளின்
வெற்றிடங்களை தின்றபடி

முகவரியில்லாத ஏதோ ஒரு
தேசத்தின்
மூலையொன்றில்
புலம்பெயர்ந்து வந்து
ஆண்டுகள் பல கரைந்து போயின

இருந்தும்
ஈழமண்ணில்
தூக்கமின்றி தத்தளித்தது போலவே
இப்போதும்
தூங்க முடியவில்லை எம்மால்....

எனக்கே எனக்கான வலிகள்

சடுதியாக என்
முகம் மோதிப்போகும்
எவருக்குமே
எனக்குள் உறைந்து கிடக்கும்
வலிகளின் ஆணிவேர் தெரியப்போவதில்லை

நசுங்கிப்போன
எதிர்காலம் மீதான கனவுகளை
பசியடங்கிய பின்னும்
தின்று தீர்த்ததே வாழ்க்கை?

வினாடி தோறம்
சிலுவையில் அறையப்படும்
என் உயிரில்
எரிமலைப்பிழம்புகளின் மாநாடு

உங்கள் ஒரு சொட்டுக்கருணைக்காக
என் மனச்சிதைவுகளின்
காட்சிப்படிமங்களை
விளம்பரம் செய்வது
அர்த்தமற்ற ஆலிங்கனம்

எரிந்து
சிதைந்து
வெந்து
கருகி
துகள் துகளாய்
தூர்ந்து போனதே
எனது சுயம்

விழுங்கப்படும் உரிமைகளும்
சுதந்திரத்தின் மீதான
ஆதிக்க அழுத்தங்களும்
எனக்குள் வெறியேற்றும்
பிரயளத்தை கொஞ்சம் கொஞ்சமாய்
விதைத்தக் கொண்டிருக்கிறது

விரைவில் வெகுண்டெழப்போகும்
எனது ஆழ்கடல் ஏகாந்தம்
மனம் தின்னும் வலிகளைப்போலவே
யாராலும்
அடையாளம் காண முடியாதவை

நிறமற்ற கனவுகள்
மிக மிகப்பயங்கரங்களை
வலிகளின் புதைமணலில்
திணித்துக்கொண்டிருப்பது
முற்றுப்புள்ளியின் பக்கத்தில்தான்

விரைவில்
ஒட்டுமொத்த வலிகளைத்திரட்டி
உங்கள் மீது
எறிகணையாய் எறியப்போகிறேன்

பின்
மெல்ல மெல்ல நீங்களும்
உணரத்தொடங்குவீர்கள்
எனக்கே எனக்கான
வலிகளின் உள்ளார்ந்தங்களை

அப்போது
வலிகளற்ற வானவெளியில்
எனது சிறகுகளுக்கு
களைப்பேயிராது....!

வாழ்வின் துயர் நிறை தருணங்கள் ________________________________________
வாழ்வின் துயர் நிறை
விகார தருணங்கள் மீது
எனது ஆயுள்
ஒரு பறவையைப்போல அமர்ந்துகொண்டிருக்கிறது.....

சிறகொடிந்த அப்பறவைக்கு
அடுத்த திசைநோக்கிப்பறக்கும் வீரியம்
துளியேனும் கிடையாது..

விரிந்திருக்கும் வான்பரப்பில்
அதற்கான கனவுகளை மட்டும்
சிறகடிக்க விட்டு விட்டு
தனித்தலையும் ரண மழையில்
கொட்டக்கொட்ட நனைந்து கொண்டிருக்கிறது...

வலி மிகைத்த கவிதையொன்றின்
கண்ணீர் அறைகூவலை
எப்போதும் அதன் சோகம் கவிந்த
கண்களில் நீங்கள் காணக்கூடும்...

மீளமுடியாத
கனவுகளற்ற அதன் வாழ்வியல் கோலங்கள்
தவறாக வாழப்பட்ட
அல்லது
வாழ்தலில் நேர்ந்த தவறாக
ஏதோ ஒரு பிரளயத்தை
சாற்றி நிற்கிறது..

வாழ்வின் துயர் நிறை
விகார தருணங்கள் மீது
எனது ஆயுள்
ஒரு பறவையைப்போல அமர்ந்துகொண்டிருக்கிறது

இரத்த சாசனம் ________________________________________
இரத்தம்
இரத்தம்
இரத்தம்

எங்கும் இரத்தம்
எதிலும் இரத்தம்
அங்கும் இரத்தம்
அதிலும் இரத்தம்

எந்த வகை இரத்தமென்று
எவருக்கும் தெரியவில்லை
வழிந்தோடும் குருதியாற்றில்
மதபேதம் எதுவுமில்லை

இரத்தம்
இரத்தம்
இரத்தம்

குண்டுவெடித்த இரத்தம்
கொள்ளையடித்த இரத்தம்
கொலை செய்த இரத்தம்
கற்பரித்த இரத்தம்

எங்கும் இரத்தம்
எதிலும் இரத்தம்
அங்கும் இரத்தம்
அதிலும் இரத்தம்

முடிவிலியாய் தொடர்கிறது
தினமும் இங்கே இரத்தவேட்டை
கோடி உயிர் பறிகொடுத்தோம்
மீட்பதெங்கே இந்த நாட்டை

இரத்த ஆறு
இரத்த வீழ்ச்சி
இரத்த வெள்ளம்
இரத்த பூமி
இரத்த மழை..

போரின் கோரப்பசி
எவ்வளவு இரத்தம் குடித்தும்
இன்னுமா நிற்கவில்லை...?

திரண்டோடும் இரத்த ஆற்றில்
நாளை கலக்கப்போகிறது
உனது இரத்தம்
எனது இரத்தம்
அவன் இரத்தம்
அவள் இரத்தம்

சத்தமிட்டுக்கதறியழ
எவர்க்குமிங்கு உரிமையில்லை
யுத்தத்தால் யார்க்குமிங்கு
தத்தம் இரத்தம் சொந்தமில்லை

இரத்தம்
இரத்தம்
இரத்தம்

எங்கும் இரத்தம்
எதிலும் இரத்தம்
அங்கும் இரத்தம்
அதிலும் இரத்தம்

எந்த வகை இரத்தமென்று
எவருக்கும் தெரியவில்லை
வழிந்தோடும் குருதியாற்றில்
மதபேதம் எதுவுமில்லை

கண்களில் வழியும்
இரத்தக்கண்ணீர்வழியே
எங்கள் வரலாறு
இரத்த சாசனமாய் எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது

குண்டுவெடிப்பில் இறந்துபோன அவன்...
________________________________________நேற்று மாலை சந்தையில் வெடித்த
குண்டுவீச்சில் அவனும் இறந்துபோனான்...
அவனோடு சேர்த்து
மூன்று குழந்தைகள்
எட்டு பெண்கள்
நான்கு வயோதிபர்கள்
ஏழு ஆண்கள்...

குண்டை வெடிக்க வைத்ததே அவன்தானாம்...
அவன் ஒரு தீவிரவாதியாம்
போலிஸ் வலைவிரித்த முக்கிய புள்ளியாம்
இதுவரை பலகொலைகள் செய்தவனாம்...
இவைகளை உண்மையென்றே நானும் நம்புகிறேன்...

அவனை நல்லவனென்றவர்கள்
அவன் சடலத்தின் மீது
கல்லையும் மண்ணையும் எறிந்துகொண்டேயிருக்கின்றனர்..
எனது பங்கிற்கு நானும் இரண்டு கற்கள்

சிலவேளை அவன் குற்றமற்றவனாகக்கூட இருக்கலாம்..
என்ன செய்ய....
பதற்ற சூழலில் எல்லாமே நம்பவேண்டும்..

அவன் பற்றி எனக்கு இன்றுதான் தெரியும்

பலமுறை கண்டிருக்கிறேன்
ஓரிரு முறை பேசியதாகவும் ஒரு ஞாபகம்...
சடங்கிற்காக அவன் பெயர் கேட்டு
பின் சடுதியாய் மறந்து போன எனக்கு
அவன் பற்றி இன்றுதான் தெரியும்..

படிப்பை பாதியில் விட்டுவிட்டு
கடையொன்றில் கூலி வேலை செய்தவன்
விசுவாசமாவென்று அவன் முதலாளி அடிக்கடி
சொல்லக்கேட்டிருக்கிறேன்..
பெரிய உயரமில்லை
சற்று கறுப்பு
பார்ப்போர்களை வசீகரிக்கும் காந்தக்கண்கள்
இவை தவிர்த்து இன்னபிற இன்றுதான் அறிந்துகொண்டேன்...

சந்திகளில் நின்று சிகரெட் பிடித்தவனில்லை
பெண்களை கண்டால் எள்ளி நகைத்தவனில்லை
அவனைத்திட்டும் எவருக்குமே
அவன் இன்சொல் சொன'னதில்லை

அந்தக்கூட்டத்தில் வேறு யாரேனும்
குண்டு வைத்திருக்கலாம்
அல்லது குண்டு வைத்தவன் தப்பித்து ஓடியிருக்கலாம்...
எது எப்படியோ
அவன்தான் குற்றவாளியென்று எல்லோரும்
சொல்வதை நானும் நம்புகிறேன்...

அவன் பற்றி எனக்கு இன்றுதான் தெரியும்..

இனி அவனை மறந்து விடுவோம்

கதவு தட்டப்படும் சப்தம்...
________________________________________
பக்கத்து வீட்டுக்கதவு தட்டப்படுகிறது...
நீணட நேர தட்டலுக்குப்பின்
கதவு உடைக்கப்படுகிறது...

குழந்தைகளின் கூக்குரல்
பெண்களின் கதறல்
சில ஆண் குரல்களின் அதட்டல்
எல்லாமும் ஒரு சில துப்பாக்கி வேட்டுக்கள்
தீரக்கப்படும் சப்தத்தின் பின்
அடங்கிப்போனது..

சிறிது நேரம் நகர்ந்திருக்கும்..

இப்போது
எனது வீட்டுக்கதவு தட்டப்படுகிறது..

அகதிகள்-சில கண்ணீர்க்குறிப்புகள்..
________________________________________
1)
ஊர். விட்டு ஊர்
நாடு விட்டு நாடு
கண்டம் விட்டு கண்டம்
கடைசியில்
உலகம் விட்டு....???????

2)
உறவை இழந்தவன் பெயர்
அநாதையாம்...
ஊரை இழந்தவன் பெயர்
அகதியாம்..
இதற்கெல்லாம் மூலமான
மனச்சாட்சியை இழந்தவனை எப்படி அழைப்பது...?

3)
இப்போதும் தேசம்
விடிகிறது
எங்களுக்கும் விடிகிறது..
உண்மை விடியல் சூரியனில் இல்லை

4)
நேற்று கேள்விக்குறியாய் முடிந்து போனது
இன்று கேள்விக்குறியாய் நகர்ந்து கொண்டிருக்கிறது
நாளையும் கேள்விக்குறியா..????
இதுதான் இப்போதைய எங்கள் கேள்விக்குறி....

5)
எங்கள ஊர் மண்வாசம்
காங்கிறீட் வீதிகளில்
எப்படி கிடைக்கும்..?

6)
அப்பா எங்கென்றே தெரியவில்லை
அம்மா செம்மண்ணில்
அண்ணா ஆஸ்திரேலியாவில்
அக்கா கனடாவில்
தம்பி சுவிற்சிலாந்து
தங்கை இந்தியா
நான் கொழும்பபில்
அப்போது நாங்கள் ஆடிய கண்ணாமூச்சி ஆட்டத்தை
இப்போது சற்றிங்கில் ஆடுகிறோம்..

7)
பத்தாண்டு கழித்து
தாய் மண்ணில் கால் பதிக்கிறேன்..
கதறக்கதற அப்போது துரத்தப்பட்போதான
அதே வலி இன்னும் கால்களில் ஒட்டிக்கொண்டிருக்கிறது..

8)
தாய்மண்ணை தினமும் நூறு முறை
தொட்டுப்பார்க்கிறேன்
தேசப்படத்தில்...

9)
இலங்கை சுதந்திர தின வைரவிழா கொண்டாடுகிறது...
எங்கள் சுதந்திரத்தை பீடுங்கி விட்டு....

10)
இடம்-டென்மார்க்
ஆண்டு-2100

குழந்தை கேட்கிறது
நம்ம தாத்தா எங்கே அப்பா..?

தந்தையின் பதில் (ஆங்கிலத்தில்)
முன்னொரு காலத்தில்
இலங்கை என்றொரு நாடு இருந்தது..
இப்போது யுத்தத்தால் அழிந்த விட்டது..
..........
..........
அங்குதான் தாத்தா இறந்து போனார்.....

11)
புழுதிக்காற்று
பனை நிழல்
வயல்வெளி
எப்படி விளங்க வைப்பது
எனது குழந்தைக்கு...?

12)
சொந்த மண்ணில்
அகதிகளாய் அலைபவனின் வலி
சொந்த மண்ணில்
அகதிகளாய் அலைபவனுக்கே தெரியும்..

13)
நான் எத்தனை
உள்ளாடைகள் வைத்திருக்கவேண்டும் என்பதை
யார் யாரோ (!) தீர்மானிக்கிறார்கள்..

14)
பலகோடி வலிகளைச்சுமந்து கொண்டு
இன்னம் எங்கள் உயிர் ஊசலாடுகிறதே..
நாளை விடிவு வரும்
என்கிற ஒரே ஒரு துளி நம்பிக்கையால்தான்...

15)
நாங்கள் வந்துவிட்டோம்
பாவம்
செல்லடிகள் வாங்கிக்கொண்டு
இப்போதும் தனித்திருக்கக்கூடும்
பூர்விகம் சுமந்த எங்கள் வீடு...!!!!!!!!


எனக்கு எத்தனை முகங்கள் ________________________________________
எனக்கு எத்தனை முகங்கள்
என்று எனக்கே தெரியவில்லை

இரண்டு முகங்கள் இருப்பதாக
நண்பர்கள் குழப்புகிறார்கள்
எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது
பேரூந்துகளில்
பெண்களை நெருங்கும்போது
மூன்றாவது முகமொன்றை
மெல்லமாய் கண்டுகொள்கிறேன்

கடன்பட்ட பிறகு
நான்காவது முகத்தை
நானே அடையாளம் கண்டேன்

தனிமையில் ஐந்தாவது
அழுகையில் ஆறாவது
அலைபேசியில் ஏழாவது
இணையத்தில் எட்டாவது
இப்படி நீண்டுகொண்டே போகின்றன
எனது முகங்கள்....

நானாக விரும்பி
எதையும் அணிவதில்லை
அவ்வப்போது அந்தந்த முகங்கள்
என்னை உள்வாங்குகின்றன.

இவைகள் முகங்களாக அன்றி
முகமூடிகளாகக்கூட
இருக்கலாம்.

என்ன ஒரு வேடிக்கை...
யோக்கியன் என்று உலகம்
நம்பிக்கொண்டிருக்கும் எனக்குள்
அயோக்கியன் ஒருவன்
நிரந்தரமாய் தங்கியிருக்கிறான்....

சிரிக்கிறேன்
கோபப்படுகிறேன்
தாகிக்கிறேன்
சலனம் கொள்கிறேன்
பொய் பேசுகிறேன்
துரோகமிழைக்கிறேன்
காதல் செய்கிறேன்
முத்தமிடுகிறேன்
கவிதை வரைகிறேன்
அடேயப்பா
எனக்குள் இன்னும் எத்தனை முகங்களோ..?

பாருங்கள்
எனக்கு ஒரே ஒரு முகம்
என்பது எத்துணை பெரிய பொய்...!?

எனக்கு எத்தனை முகங்கள்
என்று எனக்கே தெரியவில்லைமுகாரி ராகம் வழியே நீளும் போர்ப்பாடல்

முகாரி ராகம் வழியே
நீள்கின்றன போர்ப்பாடல்களும்
அதனூடே கிழியும் மனித மனங்களின்
கூக்குரல் இசைச்சந்தமும்....

ஒன்றில்லை இரண்டில்லை
எண்ணற்ற குரல்கள் இசைக்கும்
ஒரே பாடல் போர்ப்பாடல்தான்..

எத்திசைக்காற்றிலும்
ஏதோ ஒரு வடிவில் மிதந்து வரும்
அந்தப்பாடல் செவிகளைத்தாண்டி
எல்லோர் மனங்களிலும் நச்சென்று பதிந்துபோகிறது...

மரண ஓலம்
கண்ணீர் அறைகூவல்
மௌன நடுக்கங்கள்
கற்பழிப்புக்கதறல்கள்
அடங்கிப்போகும் அவலங்கள்
என
வகை வகையான போர்ப்பாடல்கள்
ஒலித்துக்கொண்டேயிருக்கின்றன

ஆயுதங்களும் வெடிகுண்டுகளும்
இசையற்ற பாடல் நிரப்ப இசை மழை பொழிவதை
எப்போது நிறுத்துமோ...???

இப்போதெல்லாம் எங்கள்
குழந்தைகளை தாலாட்டுவது
இந்தப்பாடல்தான்...

ராகம் தாளம்
சுருதி சந்தம்
எந்தத்தேவையுமின்றி எங்குமே ஒலித்துக்கொண்டிருக்கும்
இந்தப்போர்ப்பாடலின் குரல்வளை
என்று நெரிக்கப்படுமோ
அன்று பாடுவோம் நமது தேசங்களின் சுதந்திரப்பாடலை.....


போர்க்கரங்கள் வழியே ஒரு காதல் கடிதம்

ஷெல் சப்தங்களின்
உக்கிரங்களுக்கும்
உஷ்ணங'களுக'கும் நடுவே
எழுதிக்கொண்டேயிருக்கிறேன்
உனக்காக ஒரு காதல்கடிதம்...

இம்மடல் உன் கரம்
சேரும் தறுவாயில்
எனது உயிர் எனக்குச்சொந்தமற்றுப்போகலாம்
அல்லது
உனது உயிர் உனக்குச்சொந்தமற்றுப்போகலாம்..

சுவாசிக்கக்கூட சுதந்திரமற்ற
உலகில்
நமக்கான உதய சூரியன் அஸ்தமித்ததே கிழக்கில்தானே...?

இற்றுப்போன கனவுகள் பற்றியோ
துருப்பிடித்த நமது முத்தங்கள் பற்றியோ
பரிமாறிய மௌன வார்த்தைகளின்
ஏகாந்த வலிகள் பற்றியோ
வாழவே நிராதரவற்ற நிர்ப்பந்தத்தில்
எப்படி மனக்கண்ணில் நிறுத்தி வைத்திருப்பேன்..??

உன் எழில் முகம்
கனவில் விரியும்போதெல்லாம்
காது கிழிக்கும் வன்முறைச்சப்தங்கள்
எனது தூக்கத்தையும் துளியூண்டு நிம்மதியையும்
துகள் துகளாய் தூர்த்தெறியும்..

இருள் சூழ்ந்த வாழ்க்கை
பேயறையும் தனிமை
உணர்வு தின்னும் வலி
உருக்குலைந்த நிம்மதி
இன்னும்
இன்னும்
இன்னும்
வேறெதனை மடல் வழியே உனக்குரைப்பேன்...?

படுகொலை செய்யப்பட்ட
இருத்தலின் நீட்சி குறித்து
நீயும்
எதனையும் தர்க்கிக்க வேண்டாம்..

நிர்க்கதியான வினாடிகளின்
கானல் நம்பிக்கையில்
உனக்கான என் காதல் கடிதம் எழுதி முடிக்கப்பட்டாயிற்று

இப்போதுதான் அந்தக்கேள்வி எனக்குள் எழுகிறது..
இதை
எந்த முகவரிக்கு அஞ்சலிடுவது?
இப்போது நீ எங்கிருக்கிறாய்..?
ஏலவே எழுதப்பட்ட காதல் மடல்களின்
குப்பைக்கூடையில் இதுவும் சேரப்போகிறதோ...??
உன் கரம் கிட்டாமலே........


நீண்ட ஒரு நாவலும் நீளும் ரணங்களும்

அது ஒரு நீண்ட நாவல்

இரண்டு தசாப்தங்கள் தாண்டியும்
இன்னும் முடிவதாயில்லை

பாதியில்தான் நான் படிக்கத்துவங்கினேன்
முழுக்கதையும் தொடர்ந்து படிப்பவர்கட்கே
சரி வர புரிவதாயில்லை

நாவலின் ஒவ்வொரு வலியிலும்
உயிர் துளைக்கும் உண்மை வலிகளின்
தத்ருபம் நிரம்பி வழிகிறது...

துண்டுச்சீட்டில் எழுதிவிடக்கூடிய
தம்மாத்துண்டு கதை அது...

ஒரு சிறுவனை ஒரு பெரியவன்
அடக்கத்துவங்கும்போது நேரும்
படிமுறைச்சிக்கல்கள் ஒவ்வொரு பக்கத்திலும்
பயங்கர விஞ்ஞாபனமாய் விரிந்து செல்கிறது..

இடையில் இன்னொரு சிறுவன்
வேண்டுமென்றே சீண்டப்படுகிறான்..

சிறுவன் சிறுவர்களாக
பெரியவன் பெரியவர்களாக
உரிமைக்கான போராட்டமொன்று பீறிடத்தொடங்குகிறது

இடையில்
பேச்சுவார்த்தை
வன்முறை நிறுத்தம்
உடன்படிக்கை என்று
நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை..

சீணடப்பட்ட மற்றைய சிறுவர் கூட்டம்
காரணிமின்றி
கொல்லப்படுகிறது
கொளுத்தப்படுகிறது
அடக்கப்படுகிறது
முடக்கப்படுகிறது

இந்த நாவலை சிலர்
அவ்வப்போது படிக்கிறார்கள்
சிலர் படிப்பதேயில்லை

வாசகர் வட்டம் பற்றிய எந்தக்கரிசனையுமின்றி
தொடர்ந்துகொண்டேயிருக்கிறது நாவல்

ஆயுதங்களே பிரதான பாத்திரங்கள்
எல்லாப்பக்கத்திலும்
கொலைச்செய்தியும்
இரத்த வாடையும் விரவிக்கொண்டேயிரக்கின்றன..

மர்ம நாவல் என்று சிலர் சொல்வதை
ஏற்க முடியவில்லை

முதலில் சிறுகதையாகத்தான் துவங்கியிருக்கும்
வலுக்கட்டாயமாக நாவலானதா
என்பது பற்றி எனக்கொன்றும் தெரியாது..

உடன்பாடுகளின்றி முரண்பாடுகளில்
வளர்ந்து செல்லும் அந்நாவலை
ஒற்றுமையாக்கி யாராவது சுபம் போடுங்களேன்..

இன்னும் இதன் பயணம் நீண்டால்
நாவலை படிக்கக்கூட யாருமிலர்

இவ்வளவு சொல்லிவிட்டேன்
நாவலின் பெயரைச்சொல்லவும் வேண்டுமா...???


தீர்வின் அவசரம் சொல்லும் கரையொதுங்கிய சடலம்

கரையோரக்காற்றின்
குளுமைகளைத்தாண்டி
அலையென மிதந்து வந்த
அந்தச்சடலம் பற்றி
ஏதோவொரு கவிதை
எழுதுவேனென்ற எந்தச்சலனமும்
நேற்றுவரை எனக்குள் இருககவில்லை

மீன் புசித்த விழிகள்
கடலரித்த தேகம்
சுளிக்க வைக்கும் வாடை
நிறைய இரத்தக்காயங்கள்
இவைகளை வைத்து
யாரென அடையாளம் காண்பது?

தற்கொலைக்கான
எந்தத்தடயமும்
அவன் சரீரத்தில் இல்லவே இல்லை

வேடிக்கை பார்க்கவென
குழுமிய கூட்டத்தில்
எனது கண்களும் இறுமாந்து போனது..

எப்படிச்செத்திருப்பான்
என்பதை ஊகிக்க முடிந்த
என்போல பலரும்
ஊமையாய் நிற்கிறார்கள்

சூழவும் பேசப்பட்ட
ஆயிரம் வதந்திகளில்
ஏதோவொன்றை
எப்படியோ நம்பிக்கொண்டு
பரிதாப வார்த்தைகளை மிதக்கவிட்டு
வீடு சேர்கிறார்கள்..

வாய்திறந்த நிலையில்
உயிர் பிரிந்தபோது
யார் பெயரை உச்சரித்திருப்பான்?
என்னதான் நிகைத்திருப்பான்?

கூப்பியபடி வளைந்து கிடைக்கும்
அவன் கரங்கள்
அவனது கடைசிக்கணப்போராட்டங்களை
ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கிறது

இப்படித்தான்
கரையொதுங்கும் சடலங்களில்
சில அடையாளங்காணப்படும்
சில அடையாளமிழந்து போகும்
சில எரிக்கப்படும்
சில புதைக்கப்படும்

நாளை இன்னொரு உடலும்
இதே கடல் வழியே மிதந்து வரக்கூடும்

நேர்ந்தது எங்கனம்
என்னும் ஆராயச்சிகளை
கிழித்தெறிந்து விட்டு
இனி நேராதிருக்க என்ன வழி
என்பதே இனி நமது வேள்வி..
அது தொடங்கும்வரை இதுபோல்
சடலங்கள் மாரி மழையாய்
எல்லாத்திசைகளிலும் சிதறிக்கொண்டேயிருக்கும்
எனது கிராமம் அன்றும் இன்றும்

1)
தேவதைகள் நடைபயின்ற
இந்த வீதிகளில்
பிசாசுகளின் பிறாண்டல்களை இப்போது நீங்கள்
காணலாம்...

2)
அதோ
தென்னை மரம்
வயல் வெளிகள்
கட்டிடங்கள்
எல்லாமும் இருக்கின்றன
வேரறு விழுந்தபடியும்
கீறலாய் சிதைந்தபடியும்

3)
நேற்று
திருவிழா கலகலப்பு
இன்று
மயான அமைதி
நாளை
யாருக்குத்தெரியும்..?

4)
இளவேனில் காலம்
உதிர்ந்து போனது
இலையுதிர்காலம்
துளிர்த்துக்கொண்டேயிருக்கிறது

5)
ஊர் ஒதுக்குப்புறத்தில்
கல்லறை ஒன்று இருந்தது..
கல்லறைகளின் ஒதுக்குப்புறத்தில் ஊர் இருக்கிறது

6)
இலைகளில் தேன்துளிகள்
சருகுகளில் கண்ணீர்த்துளிகள்

7)
வரவேற்று விருந்தளித்தோம்
எச்சரித்து துரத்தப்பட்டோம்

8)
மாறாப்புன்னகை
மனசிலும் முகத்திலும்
ஆறாக்காயம்
உடலிலும் உணர்விலும்..கொடுங்கோல் உலகில் எனக்கானதொரு இருப்பிடம்

வலி நிறைந்த வாழ்வின் நயனங்கள்
பாலைவன மணல்வெளியில் நகரும்
ஒரு நத்தையென
என் சுவாச தருணங்கள் மீது
ஊர்ந்து கொண்டிருப்பதை பாரீர்..

வாசம் வழியும் பூக்காடொன்றில்
எனக்கான சுகந்தம்
எப்போது
எபபடி
யாரால்
களவாடப்பட்டது பற்றியெல்லாம்
யானறியேன்...! யானறியேன்..!

ஒரே ஒரு விடியலுக்கான என்
இரவின் நீட்சியின் முடிவில்
அடர்ந்த வனாந்தரத்தின்
ஏகாந்த இருள் கவிந்து கிடக்கிறது

பேரிரைச்சலாய்
என் நடுக்கங்களை பிளந்தபடி
அக்கினித்தனிமையில்
எனக்கான எல்லாமே
பிளம்புகள் தின்னும்
வேர்மரக்கிளைகளாய்
வெந்து போவதையும் பாரீர்..

ஒட்டுமொத்த துயரங்களை
ஒற்றை மனசில் ஆக்கிரமித்தபடி
கானலென மறையும்
இந்த கொடுங்கோல் உலகில்
எனக்கான இருப்பிடம்
எங்கிருக்கிறது..?எங்கிருக்கிறது..?

பூ வெடிக்கும் ஓசையென
பிரம்மாண்ட சப்தங்களாய்
எனக்குள்ளே
சீறிச்சிதறி சுருங்கிப்போகும்
எதிர்த்தல் பற்றிய
ஏராளக்குறிப்புக்களை
உரைக்கும் வழி தெரியாமல்
உறைந்து போகிறேன்..
உறங்கிப்போகிறேன்

சூனியங்கள் செதுக்கிக்கொண்டிருக்கும்
எனது நாளைய விடியலிலும்
தீர்க்கமற்ற தீர்வின் வெறுமைகளை
எப்போதும் போலவே
இப்போதும் காண்கிறேன்..

ரணங்களின் ஒற்றையடிப்பாதையில்
எனது வலி மிகைத்த பயணம்
இன்னுமின்னும் நீள்கிறது
ஆளரவமற்ற சுதந்திர வெளியொன்றை நோக்கி....!தொலைந்த என் முகவரி

எனது தெருவிலேயே
தேடிக்கொண்டிருக்கிறேன்
எனது முகவரியை...

எப்படித்தொலைத்திருப்பேன்?
தூக்கத்தில்..
தனிமையில்..
காதலில்..
நினைவில் இல்லை

யாரேனும் களவாடியிருக்கவும் கூடும்

போகப்போக புரிந்து கொண்டேன்
முகவரியை மட்டுமல்ல
முகத்தைக்கூட நான் தொலைத்திருக்கிறேன்.

எல்லோரிடமும் விசாரித்துப்பார்க்க
எத்தனித்தபோது அதிர்ந்து போனேன்..

என்போலவே எல்லோரும்
அவரவர் தெருக்களில்
அவரவர் முகவரியையும் முகத்தையும்
தேடிக்கொண்டேயிருக்கிறார்கள்..

இப்போது புரிகிறது
மனிதநேயத்தின் முகவரியை மனிதன்
சுட்டெரித்த தினத்தன்றுதான்
காணாமல் போயிருக்கும்
மனிதம் என்னும் முகவரி...

சுதந்திரம்
ஆடலாம்
பாடலாம்
சுற்றலாம்
சுழலலாம்
வட்டத்துக்குள் மட்டும்

அடக்குமுறை அறுத்தெறிவோம் -------------------------------------

புதிய நாள் புலர்கையிலே
புதிது புதிதாய் கற்பனைகள்
அந்தி மாலை மலர்வதற்குள்
அடுத்தடுத்து படுகொலைகள்

மூபத்து அகவைகளாய்
மூடப்பட்ட உரிமைகள்
எல்லோர்க்கும் சொல்வதற்கு
இல்லை இங்கே உவமைகள்

வலிகளுக்குள் உறைந்து போனோம்
வழிகளற்ற பயணமடா !
அடுத்த திசை மறந்து போனோம்
அநேகம் அத மரணமடா !

அவலங்களும் அழுகைகளும்
எஞ்சி நிற்கும் சொத்தாச்சு
சத்தமிட்டு கதறியழும்
சுதந்திரமும் ரத்தாச்சு

நாய்களும் பேய்களும்
நல்லவராய் நடிக்கிறது
உப்பிலிருந்து கற்பு வரை
அத்தனையும் கடிக்கிறது

பத்தோடு பதினொன்றாய்
பயந்த காலம் கொளுத்திடுவோம்
கைகளெல்லாம் துணிந்தபின்னே
கயவர் தலை அறுத்திடுவோம்

பொறுமைகள் கொதித்தெழுந்தால்
பூமியினி தாங்காது
சிறுமைகள் களைத்தெறிவோம்
சிலுவைகள் இனியேது ?

தடையுடைத்து புறப்படுவோம்
தடுமாற்றம் தேவையில்லை
அடக்குமுறை அறுத்தெறிவோம்
அதன்பின்னே வேலையில்லை

வெகுண்டெழுவோம் நண்பர்காள்
வாருங்கள் ஒன்றிணைவோம்
இழந்துவிட்ட உரிமைகள்
அத்தனையும் அன்றே அடைவோம்


நிந்தவூர் ஷிப்லி
தென்கிழக்குப்பல்கலை
இலங்கை