PDA

View Full Version : முகாரி ராகம் வழியே நீளும் போர்ப்பாடல்



shibly591
08-10-2008, 06:48 AM
முகாரி ராகம் வழியே
நீள்கின்றன போர்ப்பாடல்களும்
அதனூடே கிழியும் மனித மனங்களின்
கூக்குரல் இசைச்சந்தமும்....

ஒன்றில்லை இரண்டில்லை
எண்ணற்ற குரல்கள் இசைக்கும்
ஒரே பாடல் போர்ப்பாடல்தான்..

எத்திசைக்காற்றிலும்
ஏதோ ஒரு வடிவில் மிதந்து வரும்
அந்தப்பாடல் செவிகளைத்தாண்டி
எல்லோர் மனங்களிலும் நச்சென்று பதிந்துபோகிறது...

மரண ஓலம்
கண்ணீர் அறைகூவல்
மௌன நடுக்கங்கள்
கற்பழிப்புக்கதறல்கள்
அடங்கிப்போகும் அவலங்கள்
என
வகை வகையான போர்ப்பாடல்கள்
ஒலித்துக்கொண்டேயிருக்கின்றன

ஆயுதங்களும் வெடிகுண்டுகளும்
இசையற்ற பாடல் நிரப்ப இசை மழை பொழிவதை
எப்போது நிறுத்துமோ...???

இப்போதெல்லாம் எங்கள்
குழந்தைகளை தாலாட்டுவது
இந்தப்பாடல்தான்...

ராகம் தாளம்
சுருதி சந்தம்
எந்தத்தேவையுமின்றி எங்குமே ஒலித்துக்கொண்டிருக்கும்
இந்தப்போர்ப்பாடலின் குரல்வளை
என்று நெரிக்கப்படுமோ
அன்று பாடுவோம் நமது தேசங்களின் சுதந்திரப்பாடலை.....

இளசு
17-10-2008, 07:34 PM
மனித இனம் மறுத்தொழிக்கவேண்டிய பாடல் - போர்ப்பாடல்..

ஈழத்திலும், இன்னும் அவனி எங்கிலும்
என்றும் ஒலிக்காமல் இப்பாடல் ஒழிந்துபோவதாக..

இனி குழந்தைகள் ஏனைய பாடல்கள் மட்டுமே கேட்கக் கடவதாக..


கவிதைக்குப் பாராட்டுகள் ஷிப்லி..

shibly591
20-10-2008, 09:39 AM
உங்கள் சாபமே இப்போதைய எங்கள் வரம்..

நன்றிகள் இளசு அண்ணா.

அமரன்
24-10-2008, 08:47 AM
ஷிப்லி சொல்லும் போர்பாடல்
இல்லாதொழிய
நாமும் பாடுவோம் போர்ப் பாடல்
தமிழிசைக் கருவியெடுத்து.

shibly591
24-10-2008, 04:49 PM
ஷிப்லி சொல்லும் போர்பாடல்
இல்லாதொழிய
நாமும் பாடுவோம் போர்ப் பாடல்
தமிழிசைக் கருவியெடுத்து.

நாமெல்லாம் நாற்றிசை முழங்க ஒலிப்போம் போர்க்கெதிரான பாடலை..

நன்றிகள் அமரன்..