PDA

View Full Version : காலத்தின் கையில் அது இருக்கு..!!!



தாமரை
06-10-2008, 03:35 PM
அவர் எட்டாங் கிளாஸ் வாத்தியாரு. பேரு? யாருக்குத் தெரியும்.. நினைவு தெரிஞ்ச காலத்திலிருந்தே அவரை சி.ஐ.டி வாத்தியாருன்னுதான் பசங்க கூப்பிட்டுக் கிட்டு இருக்காங்க. ஏனா? எதோ தெரியாத மாதிரி கேட்கறீங்களே?

பின்ன பசங்க எப்படியெல்லாமோ பிட்டை ஒளிச்சு மறைச்சு எடுத்து வந்தாலும் வெளிய எடுக்கிற நேரம் பார்த்து லபக்குன்னு பிடிச்சா..

பசங்க பெல் அடிச்சு சூபர்வைசர் உள்ளே போற வரைக்கும் வகுப்புக்கு போகாம யார் வர்ராங்கன்னு பார்த்துட்டு பிட்டை எடுத்து வீசிட்டு வருவாங்கன்னா அவர் எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தி இருப்பார்னு பாருங்க,,,

இல்லைங்க நான் மாட்டலை.. அவரோட மகன் சவுண்டப்பன் என்னோட வகுப்புத் தோழன். பழமொழிக்கேத்த மகன். பத்தாம் வகுப்பு. இறுதித் தேர்வு..

எங்கப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள், நன்றி உணர்ச்சி அதிகம் இருக்கறவங்கன்னு சொன்னா நம்பணும். படிக்கிற தம்பி தங்கைகளுக்காக அவங்களை கேள்வித்தாளை அவுட் பண்ணச் சொல்லி, எல்லாவற்றிற்கும் சரியான பதில்களை பியூன் மூலமாக, சன்னல் வழியாக இப்படிப் பலவகையில் கொடுத்து பள்ளியோட பர்செண்டேஜ் குறையாமப் பார்த்துக்குவாங்க..

தமிழ் முடிஞ்சது.. இங்கிலீஷும் முடிஞ்சது. கணக்குப் பரிட்சை அப்பதான் அது நடந்தது,

திடீர்னு பள்ளியைச் சுத்தி ஃபிளையிங் ஸ்குவாட். ஒருத்தனும் வகுப்புகள் பக்கமே வரமுடியலை.. பல பசங்களோட மூஞ்சியில ஈயாடலை, சில பசங்க எல்லாம் நமுட்டுச் சிரிப்போட எழுதிகிட்டு இருந்தோம்.

சவுண்டப்பன் முகத்தைப் பாக்கவே பரிதாபமா இருந்தது. எனக்கு பக்கத்தில் தான் இருந்தான்.

சரின்னு என்னோட விடைத்தாளில் முதல் நான்கு பக்கம் மட்டும் அவனுக்கு கொடுத்தேன். 20 இரண்டு மார்க் விடைகள். 40 மதிப்பெண்கள். பாஸ் பண்ணிருவான். பரவால்லே.. பாஸ் பண்ணட்டும்,

பரீட்சை எல்லாம் முடிஞ்ச பின்னால வீட்டுக்குப் போக வரும்பொழுதுதான் கவனித்தேன். சில வாத்தியாருங்களும் பசங்களும் கூட்டமா இருந்தாங்க.. எட்டிப் பாத்தேன்.

சி.ஐ.டி வாத்தியாருதான். கண்கள் பணிக்க பேசிகிட்டு இருந்தாரு. சவுண்டப்பன் எல்லாம் சொல்லி இருப்பான் போல.,

இனிமே பொதுத்தேர்வுகளில் பசங்களை டார்ச்சர் பண்ண மாட்டேன்.. அவங்க வாழ்க்கையே கெட்டுப் போய்டும் அப்படின்னு சொல்லிகிட்டு இருந்தாரு..

எனக்கு அது நல்லதா கெட்டதா புரியலை. பசங்களுக்குக் கொஞ்சம் சந்தோசம். ஆனா .. ஆனா..

அதுவே பிளஸ் டூ படிச்சப்ப பிட் அடிச்சு 5 பேர் பிடிபட காப்பியிங் செண்டர் என முத்திரை குத்தப்பட்டு எல்லோருக்கும் மார்க் குறைஞ்சப்ப

அது தவறு மாதிரி தெரிஞ்சது..

ஆனால்.. இப்போ அதையே திரும்ப நினைச்சுப் பார்க்கிறப்ப,

சவுண்டப்பனுக்கு சுயதொழில் கடனுக்கு அவனது பத்தாம் வகுப்பு மார்க் ஷீட் தான் உதவியது..

நானும் நல்ல பள்ளி என்ற பெயர் இருந்திருந்தா எதாவது ஒரு அரசு கல்லூரியில் படிச்சு, தமிழை விட்டு ரொம்ப தூரம் போயிருப்பேன். வாழ்க்கைத் தரம் இன்னும் உயரமா இருந்திருக்கலாம்.. ஆனா... இந்த உறவுகள்? அனுபவங்கள்? கஷ்டம்தான்..

இப்படித்தான்.. காலம் மாற மாற ஒவ்வொரு விஷயமும் வர்ணம் மாறிப்போகுது.. இதில எப்படிங்க, இது நல்லதா நடந்தது.. இது தப்பா நடந்தது என்று எப்படிங்க பிரிச்சுப் பார்க்கறது.

சிவா.ஜி
07-10-2008, 05:15 AM
இப்படித்தான்.. காலம் மாற மாற ஒவ்வொரு விஷயமும் வர்ணம் மாறிப்போகுது.. இதில எப்படிங்க, இது நல்லதா நடந்தது.. இது தப்பா நடந்தது என்று எப்படிங்க பிரிச்சுப் பார்க்கறது.

ரொம்ப நியாயமான கேள்வி. வாழ்க்கையின் பல சந்தர்பங்கள்ல தப்பு சரியாகறதும், சரி தப்பாகறதும் நடந்துக்கிட்டுதான் இருக்கு. உங்களைப்போலவே என் கல்லூரிக் காலத்தில் கணித தேர்வில் என் நன்பன் பேப்பர் கொடுத்து உதவியதால் என்னால் தேர்வடைய முடிந்தது. அந்த நேரத்தில் அது தவறுதான்(இப்போதும்தான்..)..ஆனால் காலம் கடந்த இன்று, அந்த செயல் என்னை முன்னேற்றியிருக்கிறது என்று நினைக்கும்போது அதன் வர்ணம் மாறிவிடுகிறது.

சிந்திக்க வைக்கும் பதிவு. நன்றி தாமரை.

பாரதி
07-10-2008, 06:43 AM
எந்த செயலும் அந்த செயல் நடக்கும் காலம், சுற்றுப்புறச்சூழல், மனநிலை ஆகியவற்றை கொண்டே வண்ணம் தீட்டப்படுகிறது. எல்லோருக்கும் எப்போதும் சரி என நினைக்கும்படி நடப்பது இயலாததுதான் என்று தோன்றுகிறது.

நல்ல பதிவு தாமரை.

தாமரை
07-10-2008, 06:52 AM
எந்த செயலும் அந்த செயல் நடக்கும் காலம், சுற்றுப்புறச்சூழல், மனநிலை ஆகியவற்றை கொண்டே வண்ணம் தீட்டப்படுகிறது. எல்லோருக்கும் எப்போதும் சரி என நினைக்கும்படி நடப்பது இயலாததுதான் என்று தோன்றுகிறது.

நல்ல பதிவு தாமரை.

அதற்கும் சற்று மேலே போய்..

ஒரே காட்சி ஒவ்வொரு காலத்திற்கேற்ப வர்ணம் பூசப்படுகிறது என்று சொல்ல மூற்பட்டிருக்கிறேன் பாரதி... பல வர்ணங்கள்.. நடந்த அந்தக்காலம் மட்டுமல்ல. சில நாட்கள் கழித்து காட்சிகள் மாறும் பொழுது பழைய நிகழ்வைப் பற்றிய நம் கருத்தும் மாறுகிறது.

காலவெள்ளத்தில் வர்ணம் மாறி முக்கியத்துவம் இழந்து சிறு துகளாய் எலக்ட்ரானிலும் சின்னதாய் மாறி மறையப்போகிற சில விஷயங்களுக்கு அந்த வினாடியில் எத்தனை உணர்ச்சி வசப்படுகிறோம் இல்லையா?

இறைநேசன்
07-10-2008, 07:50 AM
எந்த செயலும் அந்த செயல் நடக்கும் காலம், சுற்றுப்புறச்சூழல், மனநிலை ஆகியவற்றை கொண்டே வண்ணம் தீட்டப்படுகிறது. எல்லோருக்கும் எப்போதும் சரி என நினைக்கும்படி நடப்பது இயலாததுதான் என்று தோன்றுகிறது.


எல்லோரும் எப்போதும் சரி என்று நினைக்கும் படி நடக்க முடியாதுதான் ஏனெனில் திருடுபவனுக்கு அதை தட்டி கேட்கும் நல்லவனை பிடிப்பது கிடையாது. ஆனால் நம் மனசாட்சி தவறு என்று தீர்க்கமாய் சொல்வதை அசட்டை பண்ணி ஒரு செயலை செய்வது நம்மை நிச்சயம் தண்டனைக்கு நேராகவே வழி நடத்தும்.

நாம் இன்று நன்மை என்று செய்யும் ஒரு காரியத்தின் நாளைய பலன் என்ன என்பதை யாராலும் தீர்மானிக்க முடியாது. அப்படி இருக்கும் பட்சத்தில் நேர்மை எதுவோ சத்தியம் எதுவோ அதையே செய்வது தான் நல்லது. ஏனெனில் சத்யம் ஒரு நாளும் தோற்ப்பது இல்லை அதனால் ஒருவேளை பல தீமை துன்பம் வந்தாலும் நம் மனதுக்கு நாம் நேர்மையாக நடந்தோம் என்ற நிறைவைதான் தரும்.

சிக்னலில் சிகப்பு விளக்கு எறிந்த பொது அதை மீறி கடந்து வந்ததால் நீங்கள் சரியான நேரத்துக்கு அலுவலகம் வந்து சேர்ந்திருக்க முடியும் ஆனால் இந்த மீறலில் விளைவு வேறு எங்காவது ஒரு இடத்தில் மிக மோசமாக பிரதிபலிக்கும். அதுதான் உலகமும் அதன் நடப்பும். அப்பொழுது நாம் நான் எந்த தவறும் செய்யவில்லையே எனக்கு என் இப்படி நடக்கிறது என்று நினைப்போம்.

இந்த உலகில் எந்த ஒரு மனிதனுக்கும் மேலான அதிகாரம் நிச்சயம் இருக்கும் அந்த மேலான அதிகாரத்துக்கும் சட்ட திட்டங்களுக்கும் கீழ் படிந்து நடக்க வேண்டியது மனிதனின் கடமை. அதை மீறுவதால் இன்று நன்மைகள் பல நடக்கலாம் ஆனால் அதன் பாதிப்பை என்றாவது ஒருநாள் நிச்சயம் அனுபவிக்க வேண்டியது வரும் என்பது எனது அனுபவ பாடம்.
அன்புடன்
இறைநேசன்

அன்புரசிகன்
07-10-2008, 07:58 AM
அவர் ஏன் அழுதார்? தன் மகனுக்காகவா அல்லது மற்றவர்களுக்காகவா???

(என் மரமண்டைக்கு சற்று விளக்கமாக சொல்லணும்... :D :D :D )

தாமரை
07-10-2008, 09:19 AM
அவர் ஏன் அழுதார்? தன் மகனுக்காகவா அல்லது மற்றவர்களுக்காகவா???

(என் மரமண்டைக்கு சற்று விளக்கமாக சொல்லணும்... :D :D :D )

அது ஒரு மாதிரியான உணர்வு அன்பு.

எது தவறுன்னு அவர் கண்டிச்சுகிட்டு இருக்காரோ அதே தவறு அவரோட மகனை பரீட்சையில் பாஸ் பண்ண வைத்தது.

ஒண்ணு கொள்கை. இன்னொன்னு பையன் ஃபெயிலாகி இருந்தா, மத்தவங்க கிண்டலுக்கு ஆளாக நேரிடலாம்.

அவர் அழுதது தனக்காகவாகவும் இருக்கலாம்.:eek:

ஓவியன்
11-11-2008, 07:01 AM
சரியா, தப்பா..??, எனக் குழம்ப வேண்டியதில்லை என நினைக்கிறேன் செல்வண்ணா, தப்பு எப்போதுமே தப்புத்தான், ஆனால் தப்புக்களும் சில இடங்களில் தேவைப்படுகிறது என்பதே உண்மை.

நமக்குத் தேவைப்படுகின்றமையால் தப்பு ஒரு போதும் சரியாகிவிடாதென்பது என் பணிவான கருத்து...

arun
22-12-2008, 07:21 PM
எல்லோருக்கும் எல்லா நேரமும் எல்லா விஷயங்களும் சரி அல்லது தவறு என்று தெரிவதில்லை இது அனுபவ பூர்வமான உண்மை

shibly591
23-12-2008, 12:20 AM
தாமரை அவர்களுக்கு முதலில் நன்றிகள்..

அழகான விதத்தில் ஆழமான சில கருத்துக்களை அள்ளித்தெளித்திருக்கிறீர்கள்..

பிட் அடிப்பது தவறுதான்..எங்கள் கல்லூரியில் பிட் அடித்து மாட்டினால் இரண்டு வருடங்கள் பரீட்சைத்தடை விதிப்பார்கள்...அப்படி தப்புச்செய்த மாணவர்களை பார்க்க தண்டனை வழங்கியவர்களுக்கே பாவமாயிருக்கும்..

அது சரி பரீட்சை என்பது நமது திறமையை சோதிக்கும் ஒரு விசயம்..எப்படி பிட் அடிக்கிறோம் என்பதற்காக அல்ல...

எது எப்படியோ..தவறுகள் சில நேரங்களில் நன்மையாகிவிடும்..தவறல்லாதவைகள் சில நேரங்களில் தீமையிலும் முடியும்..

உங்கள் அனுபத்தை பகிர்ந்தமைக்கு நன்றிகள்

ஆதவா
23-12-2008, 04:42 AM
நீங்கள் சொல்வது உண்மைதான்.. நேற்று சரியென்று நினைத்துக் கொண்டிருந்த்தெல்லாம் இன்று தவறாக மாறிவிடுகிற்து.. எனது அனுமானங்கள் எல்லாமே விளிம்பிலேயே நின்று கொண்டிருக்கிறது. இப்படியோ, அப்படியோ தாண்டிவிடலாம் என்ற ஜோடனையில்.

உங்க தலைப்பு மாதிரிதான்... காலத்தின் கையிலதான் இருக்கு.. நாம் மாறுவதும் மாறாததும்.. நமக்குப் பின்னைய நல்லதும் கெட்டதும்..