PDA

View Full Version : ஓவியம் செய்வேன்



kulirthazhal
05-10-2008, 04:36 PM
ஓவியம் செய்வேன்

அழகாய் அந்த
ஓவியம் செய்வேன்,
அலைகளுக்கிடையே
இடைவெளிசெய்வேன்,

உச்சந்தலை சூரியனை
உள்ளே கொஞ்சம்
அழுந்தச்செய்வேன்,

அங்கங்கே பரவி
அலையும் நாரைகளை
அடுக்குக்படிபோல்
அமரச்செய்வேன்,

அலையை ரசிக்கும்
தனியொரு குழந்தையை
முழங்கால்கட்டி
அமரச்செய்வேன்,

கீதம் பேசும்
ஈரக்காற்றை
குழந்தை தலையை
கோதச்செய்வேன்,

மேலே விடுபடும்
தூரல் துளிகளை
அலைகளின் முகடினில்
கரையச்செய்வேன்,

வலையை தேடும்
நண்டுப்பிள்ளைக்கு
வரைபடம் தந்து
வழியைச்செய்வேன்,

தனிமையில் கரையும்
மனிதக்கவலையை
மறுபுறம் மறைத்து
மாயம் செய்வேன்,

இடைவெளிபேசும்
பாதச்சுவடுகளை
அருகினில் நெறுக்கி
காதல் செய்வேன்,

தொலைவினில் தோன்றும்
மயங்கும் விளக்கிற்கு
மின்மினிப்பூச்சியின்
உயிரைச்செய்வேன்,


இன்னும் வேண்டும்
உலகைச்செய்வேன்,
எல்லா உறுப்பிற்கும்
உயிரைச்செய்வேன்.


கனவு கலைந்ததும்,
கண் இமை உயிர்த்ததும்,
ஓவியம் தேடி
கரையச்செய்வேன்.
கடலையும் தாண்டி
அலைய(யை)ச்செய்வேன்.

அலைவேன்!, அலைவேன்!,
ஆறுதல் வரும்வரை.....

- குளிர்தழல்.

இளசு
17-10-2008, 08:28 PM
கனவு மெய்ப்பட வேண்டும்... எனச் சொல்லச்சொல்லும்
அழகிய தேடல்கள்..

தேர்ந்த கவிஞனின் சொல்லாளுமை..

பாராட்டுகள் குளிர்தழல்..

( நண்டுப்பிள்ளை தேடுவது வளையை - வலையை அன்று..
முன்னது மறைந்து தப்பிக்க, பின்னது சிக்கி அகப்பட..)