PDA

View Full Version : ஆத்தென்ஸ் தப்பியது.......!!!!



சிவா.ஜி
04-10-2008, 02:51 PM
ஆத்தென்ஸ் ராஜ்ஜியம். கி.மு 12 ஆம் நூற்றாண்டுக்கு முன் பயிர்த் தொழிலுக்கு பிரயோஜனமில்லாத அந்த தீபகற்பத்தில் சுத்தமான காற்று மக்களை ஆரோக்கியமாய் வாழ வைத்துக்கொண்டிருந்தது. நாளாவட்டத்தில் விவசாயத்தையும் விருத்தி செய்து விட்டார்கள் வேறு தேசத்திலிருந்து வந்த குடியேறிகள்.

நமது கதையின் நாயகன் கோட்ரஸ் மன்னன் 7-ஆம் நூற்றாண்டில் ஆட்சிக்கு வருவதற்கு முன், இந்த ராஜ்ஜியம் பல சோதனைகளுக்கு ஆளாகி, புகழ்பெற்ற தீஸுஸ் என்ற சுத்த வீரனால் அன்றைய காலத்திலேயே, அரசாட்சியில் பொதுமக்களும் பங்குபெறும் வகையில் சட்டதிட்டங்கள் இயற்றப்பட்டு, அட்டிக்கா என்ற அந்த ராஜ்ஜியம், அதன் பிரதான நகரமான ஆத்தென்ஸின் பெயராலேயே அழைக்கப்பட்டது.

தீஸுஸுக்குப் பிறகு, சக்தி வாய்ந்த நிலப்பிரபுக்களால் நிர்மாணிக்கப்பட்ட அரியோகபஸ் என்ற பிரபுக்கள் சபையிலிருந்த பலரால், அரசனையும் மீறிய இவர்களின் இடையூறுகளால், அல்லல் பட்ட ஆத்தென்ஸ் கோட்ரஸின் ஆட்சிக் காலத்தில்தான் நிம்மதிப்பெருமூச்சு விட ஆரம்பித்திருந்தது.
கோட்ரஸுக்கு நம்பிக்கைக்குரிய ஒற்றர்கள் இருந்தார்கள். அவர்களின் உதவியால் தங்கள் நாட்டைச் சூழ்ந்திருந்த எதிரி நாடுகளிடமிருந்து தாக்குதல்களை முன்கூட்டியே, தெரிந்துகொண்டு, அப்படி எந்தப் போரும் நடந்துவிடாமல் தவிர்த்துவந்தான் கோட்ரஸ். தன் பிரஜைகளின் மேல் மிகுந்த பாசத்தை வைத்திருந்தான். போரில் வெற்றி கிட்டுவது அவனுக்கு இரண்டாம்பட்சமாக இருந்தது. மக்கள் கொல்லப்படக்கூடாது என்பதே அவனது முதல் விருப்பமாய் இருந்ததால், போர்களைத் தவிர்த்துவந்தான்.

ஒரு மன்னன் என்னதான் சமாதான விரும்பியாக இருந்தாலும் சில நேரங்களில் போரை சந்திக்க வேண்டிய சூழலைத் தவிர்க்க முடியாது. போரை எதிர்கொண்டே ஆகவேண்டுமென்ற கட்டாயம் உருவானது. ஆத்தென்ஸைப் போலவே பலம்பொருந்திய மற்ற ராஜ்ஜியமான ஸ்ப்பார்ட்டாவால் அந்த நிர்பந்தம் ஏற்பட்டது. ஸ்ப்பார்ட்டாவும், மற்ற சில சில்லரை நாடுகளும் சேர்ந்து ஆத்தென்ஸை தாக்கத் திட்டமிடுவதாக கிடைத்த செய்தியைக் கேட்டதும் அவசரமாய் தன் படைத்தளபதியை வரவழைத்தான் கோட்ரஸ்.

அரிஸ்ட்டைடிஸ் ஒலிம்பிக்ஸ் வீரன். ஒழுக்கம் நிறைந்தவன். அவனது திறமையை கண்டுகொண்ட கோட்ரஸ் அவனை தன் தலைமைப் படைத்தளபதியாய் நியமித்திருந்தான்.

“அரிஸ்ட்டைடிஸ், எதிரிகள் ஒன்று சேர்கின்றனர். ஸ்ப்பார்டாவினர், மற்றவர்களுடன் சேர்ந்து நமது ராஜ்ஜியத்தின் மீது தாக்குதல் நடத்தவுள்ளதாக செய்தி வந்துள்ளது. உன்னுடைய கருத்து என்ன?”

“மன்னா....இதில் கருத்து சொல்ல என்ன இருக்கிறது. இத்தனைக் காலமும் போர் வேண்டாமென்று நினைத்து பல வழிகளிலும் சமாதானத்தையே நிலைநாட்ட நீங்கள் முயன்று வந்துள்ளீர்கள். ஆனால் இந்த முறை தாங்கள் அருள்கூர்ந்து என் வாளை உறையினின்றும் வெளியெடுக்க அனுமதியளிக்க வேண்டும். அந்த ஸ்ப்பார்டாவினரின், குருதிகுடித்து தன் நீண்டநாள் தாகத்தை என் உடைவாள் தீர்த்துக்கொள்ள வேண்டும்...”

உணர்ச்சியில் உடல் நடுங்க அவனின் அந்த ஆவேச நிலை கண்டு கோட்ரஸ் பெருமிதமடைந்தான். இருப்பினும் தன் கொள்கையின் காரணமாகவும், தனது நாட்டுமக்களின் மேலிருந்த பாசத்தாலும் இந்தப் போரைத் தவிர்க்கவே நினைத்தான்.

“அரிஸ்ட்டைடிஸ், உன் வீரத்தை இத்தனைநாளும் கட்டிவைத்ததை நினைத்து வேதனையடைகிறேன். ஆனாலும், ஸ்பார்ட்டாவின் பிரம்மாண்ட படையும், மற்ற நாடுகளின் படைகளும் சேர்ந்தால், அழிவு அதிகமாக இருக்கும். நம்மால் வெல்லமுடியாது என்றில்லை. நான் கோழையுமில்லை. உன் வீரத்தில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. கணக்கிலடங்காத உயிர்பலியைத் தவிர்க்கவே நான் விரும்புகிறேன்.”

மன்னனின் பிரஜாபாசத்தை நினைத்து ஒரு கணம் நெக்குருகி நின்றான் தளபதி. இருப்பினும் சற்றே ஏமாற்றமடைந்தான். அதை வெளிக்காட்டாதிருக்க முயன்றான். இருப்பினும் அவனது முக மாற்றத்தைக் கண்டுபிடித்துவிட்ட கோட்ரஸ் அவனை சமாதானப் படுத்தும் விதமாக,

“அரிஸ்ட்டைடிஸ்....எப்போதும் போல இந்தமுறை சமாதானமேற்பட சாத்தியக்கூறுகள் குறைவாகவே இருப்பதாய்த் தான் தோன்றுகிறது. முயற்சித்துப் பார்ப்போம். முடியாதெனில்...வெளிவரட்டும் உன் வீரவாள்....எதிர்க்கின்ற தலைகளை உதிர்க்கட்டும் உன் உடைவாள்...”

அப்போதே களம் கண்டுவிட்ட மகிழ்ச்சியில் தன் உடைவாளை உருவி ஆத்தென்ஸ் ராஜ்ஜியத்துக்கு ஆஹாகாரம் எழுப்பி மன்னனின் முன் மண்டியிட்டான்.

மாலை நேரம். தனது அரச பரிபாலனத்திலிருந்து சற்றே விடுபட்டு அந்தப்புரத்தின் தோட்டத்தில் அமர்ந்திருந்தான் கோட்ரஸ். அழகான நந்தவனம் அது. இயற்கையாகவே நல்ல நிலமானதால் பலவகைப் பூக்களும், செடிகளுமாய் நிறைந்திருந்தது. மலர்ந்திருந்த மலர்களில் தேனெடுக்க வண்ணத்துப்பூச்சிகளுக்கும், ராணித்தேனியின் கட்டளைப்படி வந்திருந்த வேலைக்கார தேனிகளுக்கும் போட்டாபோட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தது. மலர்கள்தான் பாவம் யாருக்குத் தன் அதரங்களைத் தருவது என்று குழம்பிப்போய் இருந்தன. தன் பட்டத்துராணி அருகில் அமர்ந்திருக்க, அவனையறியாமல் அவன் மூளை சிந்தனையில் சிறையுண்டு, ஆழ்ந்த யோசனையில் இருந்தான்.


“ ஸ்ப்பார்ட்டாவைக் குறித்து கவலைப் படுகிறீர்களா அரசே...?”

“இல்லை....என் மக்களை நினைத்துதான் கவலை ராணி...இத்தனை நாள் அடங்கியிருந்த பிரபுக்கள் சபையின் சில உறுப்பினர்கள், இந்த இக்கட்டான சூழலை பயன்படுத்தி நாட்டில் குழப்பம் விளைவிக்க முயன்றுவருகிறார்கள். இவர்களால் ஏதேனும் உள்நாட்டுக் குழப்பம் ஏற்பட்டால், படைகளின் ஒரு பகுதியை அதற்குப் பயன்படுத்த வேண்டி வரும். போர் நிச்சயமாகிவிட்டால், மீதியுள்ள படைகளால், எதிரில் திரண்டு வரும் பிரம்மாண்ட படைகளை எதிர்கொள்ளமுடியுமா என நினைத்து சற்றே குழப்பமாக இருக்கிறது”

“அரியோகபஸ் மீண்டும் தொல்லைக் கொடுக்கத் தொடங்கிவிட்டதா..? இவர்களின் உள்நாட்டுக் குழப்பத்தை முதலில் ஒடுக்குங்கள். வேண்டிய படைபலத்தை அதற்குப் பயன்படுத்துங்கள். போர் தொடங்க இன்னும் தாமதமாகலாம். ஏனெனில் இதுவரை ஸ்ப்பார்ட்டாவினர் குறிகேட்க டெல்பி கோவிலுக்குப் போகவில்லை.”

ராணியின் ராஜ்ஜிய நிர்வாகத்தைக் குறித்த ஆழ்ந்த அறிவைப் பார்த்து மன்னன் பூரித்தான். ராணி சொல்வதும் சரிதான். கிரேக்க வழக்கப்படி டெல்பி கோவிலில் குறி கேட்காமல் அடுத்த நடவடிக்கையை யாரும் எடுப்பதில்லை. ஆனால் அவர்களுக்கு என்ன குறி சொல்லப்பட்டது எனத் தெரிந்துகொண்டால், அதற்கேற்றார்போல நமது வியூகத்தை அமைக்கலாம். எப்படித் தெரிந்துகொள்வது? ஒற்றரை அனுப்பினால்...கோவிலுக்குள் அனுமதிக்க மாட்டார்கள்....

மன்னனின் முகம் அவன் சிந்தனையில் சுற்றும் உணர்வுகளால் பல வடிவங்களில் மாறுவதைக் கவனித்த மகாராணி,

“தங்கள் உள்ளத்தில் ஓடும் யோசனைகளை சற்று என்னிடமும்தான் சொல்லுங்களேன்...என் சிற்றறிவிற்கு ஏதாவது தோன்றுகிறதா என்று பார்க்கிறேன்...”

லேசாய் சிரித்துக்கொண்டே தான் நினைத்ததைச் சொன்னான் மன்னன்.

சற்றே யோசித்த ராணி....

“கவலையை விடுங்கள். நான் போகிறேன் டெல்பி கோவிலுக்கு. அவர்கள் குறிகேட்க வரும் நாளைக்கு முன்னதாகவே சென்று, எப்படியாவது அவர்களுக்குக் கிடைக்கும் வாக்கை தெரிந்துகொள்கிறேன். நமது ஒற்றர்களை பணித்து, ஸ்ப்பார்ட்டர்கள் கோவிலுக்கு செல்லும் நாளை அறிந்துவரச் சொல்லுங்கள்.”

ராணியால் இந்தக் காரியத்தை நிகழ்த்திக் காட்ட முடியுமென்றாலும், ஆபத்தான காரியத்தில் அவளை ஈடுபடுத்த சற்றே தயக்கமாய் இருந்தது கோட்ரஸ் மன்னனுக்கு.

அவனது தயக்கத்தைக் கண்ட ராணி அவனை சமாதானப் படுத்தி சம்மதிக்க வைத்தாள்.

திறமையான ஒற்றர்களை ஸ்ப்பார்ட்டாவுக்கு அனுப்பி கோவிலுக்குச் செல்லும் தேதியறிந்து வரச் சொன்னான் மன்னன். அதற்குள் அரிஸ்ட்டைடிஸின் தலைமையில் பிரச்சனை செய்யத் துணிந்த பிரபுக்களை அடக்கப் படையை அனுப்பினான்.

இங்கு இந்தப் பிரபுக்களைப் பற்றி சில விஷயங்களை சொல்லியாகவேண்டும். ஆத்தென்ஸ் ராஜ்ஜியத்தின் பொதுமக்கள் மூன்றுபிரிவாய் பிரிக்கப்பட்டிருந்தனர்.

சொந்தமாக குதிரைகள் வத்திருப்பவர்கள் முதல் பிரிவு, ஒரு ஜோடி எருதுகளும் சில போர்க்கருவிகளும் வைத்திருப்பவர்கள் இரண்டாவது பிரிவினர், கூலிகள் மூன்றாம் பிரிவினர். இந்த மூன்று பிரிவுகளுக்கெல்லாம் மேலானதாய் உள்ள பிரிவினர் ‘யூப்பாட்ரிட்டுகள்'. இவர்களிடம்தான் நாட்டின் பெரும்பாலான விவசாய நிலமும், செல்வமும் நிறைந்திருந்தன. தங்கள் நிலத்தைக் கூலியாட்களுக்கு குத்தகைக்கு விட்டு, அவர்களிடமிருந்து பணம் பெற்று வந்தார்கள்.

விவசாயம் பொய்த்தாலும், கொடுக்க வேண்டியப் பணத்தைக் கொடுத்துவிட வேண்டும். தவறினால், அந்தக் குடும்பத்தினரை, அடிமைகளாக விற்றுவிடும் அதிகாரம் இந்த பிரபுக்களுக்கு இருந்தது. அப்படிப்பட்ட சூழலில்தான், மன்னன் கோட்ரஸால் அதிகாரம் ஒடுக்கப்பட்ட இந்தப் பிரபுக்கள் தங்கள் கூலியாட்களின் துணையுடன் மன்னனை எதிர்த்துக் கலகம் செய்ய தக்கத் தருணத்தை எதிர்பார்த்திருந்தனர்.

சரியான வாய்ப்பாக ஸ்ப்பார்ட்டாவின் படையெடுப்பு செய்தியும் வந்ததில், இந்த சந்தர்ப்பத்தை நழுவவிடக்கூடாது எனத் தீர்மானித்தார்கள். ஆனால் மன்னனின் சமயோசிதத்தால், அரிஸ்ட்டைட்டிஸின் தலைமையிலான படை, கலகம் ஏற்படுமுன்னமே அதைத் தடுத்துவிட்டது.

ஸ்பார்ட்டாவினர் கோவிலுக்கு செல்லும் தேதியைக் குறித்த சேதியும் வந்தது. மகாராணியும் கோவிலுக்குச் சென்றாள்.

எதிரிகள் கோவிலுக்குள் நுழைவதற்க்குள்ளாகவே ராணி அந்தக் கோவிலுக்குள் நுழைந்து, தலைமைப் பூசாரியை(இவர்தான் குறி சொல்பவரும் கூட. அந்தக் காலத்து பங்காரு அடிகளார்)சந்தித்து தன் பூசையை முடித்துக்கொண்டாள். பூசாரியிடமிருந்து விடை பெற்றுக்கொண்டு வெளியேறிப் போவதைப் போல போக்குக் காட்டிவிட்டு கோவிலின் தெய்வமான அப்போலோ சிலையின் பின்புறமாகச் சென்று மறைந்து கொண்டாள்.

ஸ்ப்பார்ட்டாவின் மன்னனும் அவன் குடும்பத்தாரும் கோவிலுக்குள் பிரவேசித்துக் கும்பிட்டுவிட்டு, தங்கள் ஆத்தென்ஸ் ராஜ்ஜியத்தின் மீதானப் படையெடுப்பு வெற்றி தருமா எனக் குறிகேட்டார்கள். தலைமைப் பூசாரி உடலை சிலிர்த்துக்கொண்டு....

“ஆத்தென்ஸ் மன்னனைக் கொல்லாதிருக்கும் பட்சத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்..” என உரத்த குரலில் சொன்னது ராணியின் செவிகளில் தேனாகப் பாய்ந்தது. தன் கணவனுக்கு ஆபத்தில்லை என்று ஆனந்தப்பட்டாள்.

குறிசொல்லியின் வாக்கைக் கேட்ட ஸ்ப்பார்ட்டா மன்னன்,
“கோட்ரஸின் உயிரைவிட அந்த ராஜ்ஜியம்தான் நமக்கு முக்கியம். அதனால் தைரியமாகப் படையெடுப்போம். அவனை யாரும் கொல்லவேண்டாம். அடிமையாய் நம் காராக்கிருகத்தில் அடைத்துவிடலாம்..” என்று தன் படைத்தலைவர்களிடம் சொன்னான்.

படையெடுப்பு உறுதியாகிவிட்டது. இந்த செய்தியை உடனே மன்னனிடம் சொல்ல வேண்டும் என்று பரபரப்பாய் வெளியே வந்தாள். குறி சொன்னக் களைப்பில் பூசாரி மயக்கமாகிக் கிடந்தான். கோவிலுக்கு வெளியே வந்ததும் தன்னுடன் அழைத்து வந்திருந்த ஒற்றனிடம் தான் கேட்ட செய்தியைச் சொல்லி உடனே சென்று மன்னனிடம் சொல்லுமாறு அனுப்பினாள்.


ராணி அனுப்பிய செய்தியும், ஸ்ப்பார்ட்டாவின் படைகள் வந்து ராஜ்ஜியத்துக்கு வெளியே முகாமிட்டிருந்த செய்தியும் ஒருசேர மன்னன் கோட்ரஸை வந்தடைந்தது. போர் மூண்டுவிட்டது உறுதியாகிவிட்டது. தான் மட்டும் உயிர் வாழ்ந்து தன் மக்களை ஸ்ப்பார்ட்டாவின் அடிமைகளாக்க அவன் விரும்பவில்லை. உடனடியாக ஒரு முடிவெடுத்தான்.

ஆத்தென்ஸ் நகரத்துக்கு வெளியே கடல் போன்ற படைகள் முகாமிட்டிருந்தன.
பெரும்பகுதிப் படைகளின் முகாமுக்கு முன்னதாக காவல் கூடாரங்கள் அமைக்கப் பட்டிருந்தன. காவலுக்கு இரண்டு வீரர்கள் ஆயுதம் தாங்கி நின்றுகொண்டிருந்தனர்.

தூரத்தில் ஒரு விறகுவெட்டி தோளில் கோடரியை தாங்கிக்கொண்டு கூடாரத்தை நோக்கி வந்து கொண்டிருந்தான். அதைக் கவனித்த ஒரு வீரன், இவன் ஏன் இந்தப் பக்கம் வரவேண்டும்? ஒருவேளை ஒற்றனாக இருப்பானோ? வரட்டும் விசாரிப்போம் என்று எண்ணிக்கொண்டு உடைவாளின் மீது ஒரு கையை அழுத்தமாக வைத்துக்கொண்டு காத்திருந்தான்.

அருகில் வந்த அந்த விறகு வெட்டியைத் தடுத்தான். மேற்கொண்டு போக அனுமதி கிடையாது என்று சொன்னதும், எங்கள் நாட்டில் எனக்கு சுதந்திரமாக நடமாட அனுமதியில்லை எனச் சொல்ல நீங்கள் யார் என்று வாக்குவாதம் செய்தான் அந்த விறகுவெட்டி.

அவனது வாதத்தை ரசிக்காத அந்த வீரன் ஆத்திரமடைந்து தன் வாளை ஆவேசத்துடன் உருவினான். பதிலுக்கு அந்த விறகுவெட்டியும் தன் கோடரியை உயர்த்தினான். வாளின் வேகத்தைவிட கோடரியின் வேகம் அதிகமாயிருந்தது. வீரனை அதே வேகத்தில் வெட்டியது. தலை துண்டாகி விழும் தன் சக வீரனைப் பார்த்ததும் ஆத்திரத்தில் ஓடிவந்த அந்த மற்றொரு வீரன், விறகுவெட்டியைத் தாக்கினான்.

சில வினாடிகள் மட்டுமே நீடித்த அந்த சண்டையின் முடிவில் விறகுவெட்டியின் தலை துண்டானது. ரத்த சகதியில் துடிக்கும் அந்த உடலைப் பார்த்து வெறிபிடித்தவனைப் போல ஓங்காரமிட்டான் அந்த ஸ்ப்பார்ட்டா வீரன்.

சத்தம் கேட்டு அங்கு வந்த படைத்தளபதி இறந்துகிடக்கும் விறகுவெட்டியை பார்த்தான். தனியாகக் கிடந்த தலையை கூர்ந்து நோக்கியவன் அதிர்ந்தான்......இது.....இது ஆத்தென்ஸ் ராஜ்ஜியத்தின் மன்னன் கோட்ரஸ் அல்லவா....

உடனடியாக அங்கிருந்து விலகி ஸ்ப்பார்ட்டாவின் மன்னனிடம் தகவலைச் சொன்னான். அதிர்ந்த அந்த மன்னன், ஒரு கணம்....கோட்ரஸின் தியாகத்தை எண்ணி ஆச்சர்யமடைந்தான். குறி சொல்லி சொன்ன வாக்கு எப்படியோ இவனுக்குத் தெரிந்திருக்கிறது. தன் நாட்டைக் காப்பாற்ற தன்னையே அழித்துக்கொள்ள* முடிவு செய்து இங்கே தலை வேறு முண்டம் வேறாகக் கிடக்கிறான். வாழ்க அவனது தியாகம் என மனதார வாழ்த்திவிட்டு, வீரர்களை அழைத்து அந்த உடலை ராஜமரியாதையுடன் ஆத்தென்ஸுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தான்.

இனி நமக்கு வெற்றி கிடைக்காது என முடிவு செய்து தன் படைகளை திரும்ப போகச் சொல்லிக் கட்டளையிட்டான் ஸ்ப்பார்ட்டாவின் மன்னன். ஆத்தென்ஸ் தப்பித்தது.

தான் நேசித்த தன் ராஜ்ஜியத்து மக்களின் நலத்துக்காக தன் உயிரையே பலி கொடுத்த கோட்ரஸ் மன்னன், தனக்கடுத்து அந்த ராஜ்ஜியத்தை ஆள வாரிசு எதுவும் விட்டுச் செல்லவில்லையானாலும் தன் அழியாப் புகழை அந்த நாட்டு மக்களின் மனதில் என்றென்றைக்குமாய் விட்டுச் சென்றான்.

குறிப்பு: நான் வாசித்த கிரேக்க சரித்திர நூலில் கண்ட சிறு சம்பவத்தை அடிப்படையாக வைத்து, மீதியைக் கற்பனையில் கதையாக்கினேன். மன்னன் கோட்ரஸ் தன்னைப் பலி கொடுத்து ஆத்தென்ஸைக் காப்பாற்றினான் என்பது மட்டும்தான் அந்த நூலில் நான் கண்டது. மற்ற சம்பவங்கள் என் கற்பனை.தவறேதுமிருந்தால் பொறுத்துக்கொள்ளவும். இது எனது முதல் சரித்திரக் கதை.

செல்வா
04-10-2008, 08:06 PM
முதல்ல வாழ்த்துக்கள் அண்ணா..... ரொம்ப நாளாச்சு நல்ல ஒரு சரித்திரக்கதை படித்து.

ஒரு சிறுபொறியை வைத்துக்கொண்டு ஊதிப்பெருதாக்கி நெருப்பாக்கி சமைத்து விருந்தளித்துள்ளீர்கள். முதல் சமையலே அருமை.... இன்னும் தொடர்ந்து பல விருந்துகள் தர அன்பு வேண்டுகோள்.

கதை ஒரே சீராகச் செல்கிறது.... சில நேரங்களில் காட்சியமைப்புகளை மாற்றி சிறிய சிறிய மர்மங்கள் வைத்துச் சொல்லும் போது... இன்னும் விறுவிறுப்பாக கொடுத்திருக்க முடியும் எனத்தோன்றுகிறது.

உதாரணமாகச் சொன்னால் மன்னன் என்ன செய்யப் போகிறான் என்பதை நேரடியகச் சொல்லாமல் அந்த வீரர்களின் பார்வையிலிருந்து கதையை நகர்த்தியிருந்தால் அந்த குறிகேட்கும் பகுதியில் தொற்றிய விறுவிறுப்பு இறுதிவரை தொடர்ந்திருக்கலாம் என்பது எனது எண்ணம்.

உண்மையிலேயே ஒரு சிறிய வாக்கியத்தை வைத்துக் கொண்டு அதைச் சம்பவமாக்குபவது பெரிய விடயம் தான் அண்ணா.... சிறப்பான சிந்தனைத்திறன் இருக்கிறது உங்களிடம். தொடர்ந்து பலப்பல எதிர்பார்க்கிறோம் தங்களிடமிருந்து...

தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்.

சிவா.ஜி
05-10-2008, 04:30 AM
ரொம்ப நன்றி செல்வா. எப்போதும்போல ஆரோக்கியமான விமர்சனம். நீங்கள் சொன்ன அந்த பாகத்தை சற்றே மாற்ற முயற்சிக்கிறேன்.

மதி
05-10-2008, 04:47 AM
செல்வாக்கு தோன்றிய அதே எண்ணம் தான் எனக்கும்.

சரித்திரக் கதை எழுதுவது ரொம்ப நல்ல விஷயம். ஆயினும் ஏனோ இது சம்பவ விவரிப்பு மாதிரி இருந்ததே தவிர யார் பார்வையும் இல்லை. ஏறக்குறைய வரலாற்று புத்தகங்கள் படிக்கற மாதிரி. அதை சற்று மாற்றி உங்கள் பார்வையும் சற்று செலுத்தியிருந்தால் இன்னும் மெருகேறியிறுக்கக் கூடும். சுவாரஸ்யமாக்கியிருக்கலாம். சொல்ல வந்தது புரியும் என்று நம்புகிறேன். உங்களின் மேலான படைப்பினை எதிர்நோக்கி..

அன்புரசிகன்
05-10-2008, 05:47 AM
நீண்டகாலத்திற்கு பின்னர் பொறுமையாக படித்த இவ்வகையான கதை... ஏதொ தொக்கு நிற்பது போல் பிரமை... வாழ்த்துக்கள் அண்ணா...

சிவா.ஜி
05-10-2008, 06:31 AM
நன்றி மதி. உங்கள் கருத்துக்களை கவனத்தில் கொள்ளுகிறேன். அடுத்தமுறை உங்களை திருப்தி படுத்துமாறு இருக்கும்.

நன்றி அன்பு. மதிக்கு சொன்னதைப்போல அந்த தொக்கு இனி இல்லாமல் பார்த்துக்கொள்கிறேன்.

rajatemp
05-10-2008, 12:13 PM
அருமையிலும் அருமை
மிக நன்றாக உள்ளது. கண்முன் காண்பது போல் ஓர் உணர்வு.


கல்கி மாதிரி ஒருவர் பார்வையில் கதையை நகர்த்தினால் உங்களை அடித்துக்கொள்ள ஆளே இல்லை.

தொடருங்கள்

சுட்டிபையன்
06-10-2008, 04:34 AM
ஆகா அருமையான சரித்திரம், அழகன கதை நன்றி

சிவா.ஜி
06-10-2008, 04:37 AM
அருமையிலும் அருமை
மிக நன்றாக உள்ளது. கண்முன் காண்பது போல் ஓர் உணர்வு.


கல்கி மாதிரி ஒருவர் பார்வையில் கதையை நகர்த்தினால் உங்களை அடித்துக்கொள்ள ஆளே இல்லை.

தொடருங்கள்

மிக்க நன்றி ராஜாடெம்ப். உங்கள் கருத்தை ஏற்று இன்னும் முயற்சிக்கிறேன். ஆதரவுக்கு நன்றி.

சிவா.ஜி
06-10-2008, 04:38 AM
[ஃஊஓடே=சுட்டிபையன்;385209]ஆகா அருமையான சரித்திரம், அழகன கதை நன்றி[/ஃஊஓடே]

ஊக்கத்துக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி சுட்டி.

இளசு
18-10-2008, 10:13 AM
மிக மிக வித்தியாசமான மன்னன் கோட்ரஸ்..

தான் மட்டும் கொல்லப்படமாட்டோம் என்ற சுயநலச் சேதியை
மக்கள்நலத்துக்கு மடைமாற்றிய பெரிய மனம் அவனுக்கு..

அந்த வகைப் பேரிதயம்தான் - தலைவனுக்கான தகுதிகளில் தலையானது!

ஒரு உண்மையான மக்கள் தலைவன் கதையை
வரலாற்றுக் குறிப்புகளோடு சுவையாக வழங்கிய சிவாவுக்குப் பாராட்டுகள்..

சிறுபொறியை நல்ல கதையாக்கிய உங்கள் திறமையைப் பாராட்டிய
மன்ற சொந்தங்கள் வரிசையில் நானும் இணைகிறேன்...

ஆக்கபூர்வ விமர்சனங்களும், அதை இன்முகத்துடன் ஏற்கும் சிவாவும்
மன்றத்தின் தனிமாண்புக்கு தக்க சான்றுகள்.. மகிழ்கிறேன்!

சிவா.ஜி
19-10-2008, 05:34 AM
அந்த தனித்தன்மைதான் என்னைக் கவர்ந்தது இளசு. தலைவனின் இலக்கணத்துடன் ஒரு மன்னன் வாழ்ந்திருக்கிறான், ஆனால் இன்றோ தலைவர்களெல்லாம் மன்னராக வாழ்கிறார்கள்.

சுவையான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.