PDA

View Full Version : கானல் நாரைகள்....!!சிவா.ஜி
03-10-2008, 08:06 AM
பகல் முடிந்த வேளையில் என்
பலகனியில் நின்றுகொண்டு,
உலகின் உயர்ந்த கட்டிடம்
உருவாவதைக் காண்கிறேன்
பேரரசாய் அந்த பெருங்கட்டிடம்
சிற்றரசுகளாய் மற்றுள்ள கட்டிடங்கள்
அண்ணாந்து பார்த்து
கழுத்து முதல் இடுப்புவரை நோகிறது...
குனிந்து பார்த்தாலோ...
இதயம் வலிக்கிறது.....!

பரம்பரைப் பிழைக்க
பாட்டன் விட்டுச் சென்ற
பாதி ஏக்கரை பணயம் வைத்து
திரைகடல் ஓடி திரவியம் தேட
வளைகுடா வந்த தமிழன்
தெருக்குப்பைத் தொட்டிகளை
தூர்த்துக் கொட்டுகிறான்!

வேதனை வெளிக்காட்டாத
அலைபேசி பேச்சு....
பாதி ஏக்கரை மீட்க மட்டுமே
அவன் விடும் மூச்சு...

விதைத்து விளைந்தால்
புதைத்த பொக்கிஷம் தரும் பூமி
நசிந்த நல்குலப்பெண்ணாய்
வட்டிக்காரனிடம்
வைப்பாட்டியாய் இருக்கிறது...!

நிலத்தை மீட்க முனைந்து
குலத்தை மறந்த தமிழன்
குப்பை வாருகிறான்....
சந்தனமாய் வாழ்ந்தவன்...இங்கே
சாக்கடையாய் நாறுகிறான்!

பாருக்கே படியளக்கும் பரம்பரை
பாழாய்ப் போகுது....
ஊருக்கே உழைப்புணர்த்திய குலம்
உள்ளே சோகம் வைத்து
உரைக்குது பொய்நலம்!

என்ன வளம் இல்லை என் திருநாட்டில்
ஏன் கையை ஏந்துது இவ் வெளிநாட்டில்?
அரசியல் வேசிகள் செய்யும் விளையாட்டில்
அரிசி இல்லா வேதனை இவர் வீட்டில்!

நல்லதோர் வீணை செய்து
நலங்கெட புழுதியில் எறிந்துவிட்டனர்
நயவஞ்சக ஆட்சியாளர்....
நஞ்சையிலும், புஞ்சையிலும்
நலமாய் வாழ்ந்தோர் இன்று
நஞ்சினில் வாழ்கிறாரே...
நாளையேனும் மாறுமா இவர் நிலை?

பாரதி
03-10-2008, 08:47 AM
வளைகுடாக்களில் வதங்கிக்கொண்டிருக்கும் சகோதரர்களைக் கண்டால் உண்மையிலேயே மிகவும் வேதனைதான் சிவா. மனக்குமுறலை கவிதையாக்கிய விதம் நன்று.

அமரன்
03-10-2008, 09:01 AM
அருமையான தலைப்பு..
ஓடைக்கரையில் நாரைகள் நிற்கக் கண்டிருக்கிறேன்.
கானலோடையாக வெளிநாடு.. இரைதேடி வந்தவர்கள் நாரைகள்.
நிரந்தரமின்மைக் குணவுவமை பலே..
கானலிலும் நாரைகளுக்கு இரை கிடைக்கிறது.

மனைவியைப் பிரிந்த தமிழ்க்கவி
யாருமற்ற தனிமை வாட்ட
நாரையை தூதனுப்பினாராம்
இலக்கியம் சொல்கிறது...

இந்த நாரைகள்
யார் விட்ட தூது?


எங்கள் நாட்டிலும் குப்பை உள்ளது. அதை அள்ளினாலும் சம்பளமுண்டு. ஆனாலும் எல்லாரும் செய்வதில்லை.
அதையே ஏன் வெளிநாட்டில் செய்கிறோம். வெளிநாட்டில் கிடைக்கும் some பலங்கள்.. இது போலப் பல தொழில்கள்.

பழக்கத்திலிருக்கும் இழிதொழிலாளர்களெனும் பதம் பதம் பார்ப்பது.
கிடைக்கும் ஊதியம் போதியதாக இல்லாமை.
தோட்டக்காரனாக வாழமுடியாத நாட்டு நிலை..
....
......
கடைசீயாக வெளிநாட்டையும் நாட்டவரையும் பார்த்து அதிசயிக்கும் பாங்கு..

இவை போன்றன இல்லாதொழிந்தால்
வாடகை நாட்டு வாழ்க்கையும் இல்லாதொழியும்.
நம்நாட்டில் இன்னும் வளங்கொழிக்கும்..

பல பாடுகள் பட்டு வந்து
பலவாய்ப் பாடுபட்டு
வாழ்க்கைப் பாட்டை பார்ப்போர்
பாடுபொருளாக வேதனைப்படுத்த
பாடிய விதம் தேனாய்ப்படுகிறது..

வட்டிக்கடைக்காரன் வைப்பாட்டியாய் நிலம் என்னமோ செய்கிறது..

வைஃப்-ஆட்டிப்படைப்பதால் வைப்பாட்டி வந்தாலென்று சொல்லவும் கேட்டிருக்கிறேன்.:)
வைஃபை ஆட்டிப்படைப்பவளும் வைப்பாட்டிதானாம்.. படங்கள் பலவற்றில் சொல்கிறார்கள்.:)
வைஃப் வேறு லைஃப் வேறில்லையே..
வைஃப் லைஃபின் வேரல்லவா?

சிவா.ஜி
03-10-2008, 09:24 AM
தினம் காணும் காட்சிதான் பாரதி. இங்கேயுள்ள நிலையறியாது வந்து மாட்டிக்கொள்ளும் அப்பாவிகள் பாவம். நன்றி பாரதி.

kavitha
03-10-2008, 09:27 AM
நல்ல கவிதை அண்ணா.
வழியை வலி தரும் வதைப்பவரிடத்தில் தேடலாமா?

சிவா.ஜி
03-10-2008, 09:30 AM
ஒரு சாதாரணக் கவிதைக்கு அசாதாரணமான பின்னூட்டம். அசத்துறீங்க அமரன். ஒவ்வொரு வரியும் அருமை. அதிலும் someபலங்கள் அசத்தல்.

கடைசியாய் வைஃப் ஐ வைத்து நீங்கள் ஆடிய சொல்லாட்டம் சூப்பர்.

அடகு வைக்கப்பட்ட நிலத்தை அதற்கு ஒப்பிட்டது, அந்த நிலம் அந்த வட்டிக்கடைக்காரனால் அப்படிப் பயன்படுத்தப்படுமென்று சொல்வதற்காகவேதான் அமரன். அடகு வைக்குமுன் நல்குலப்பெண்ணாய் பாதுகாத்து வந்த நிலம், அடகு வைத்தபின் இப்படியாகிவிடுவதாகச் சொன்னேன்.


அருமையானதொரு பின்னூட்டத்துக்கு மனம் நிறைந்த நன்றிகள் அமரன்.

சிவா.ஜி
03-10-2008, 09:33 AM
வழியை வலி தரும் வதைப்பவரிடத்தில் தேடலாமா?

அன்புத் தங்கை கவிதாவுக்கு முதலில் வரவேற்புகள். வந்தவுடன் இட்ட பின்னூட்டத்தில் ஒற்றை வரியானாலும் சக்தி மிகுந்த வரியைக் கண்டதும்...ஆஹா...இதுதான் தங்கையின் பஞ்ச் என்று ஆனந்தித்தேன். நன்றிம்மா.

இளசு
03-10-2008, 05:57 PM
கானல் நாரைகள் - தலைப்பே ஒரு க(வி)தை!

சிவாஜியின் கவியா
அமரனின் அலசலா..

இரண்டுமே ஒன்றை ஒன்று விஞ்சி...

அசத்தலான பதிவுகளுக்கு பாராட்டுகள் - இருவருக்கும்!

சிவா.ஜி
03-10-2008, 07:12 PM
நாரைகளின் தண்ணீர்க் கனவு நாளையேனும் நிஜமாகட்டும் என்ற ஆதங்கத்தில் விளைந்த வரிகள் இவை இளசு. தலைப்பிலேயே அதை அடையாளம் கண்டுகொண்ட உங்களுக்கு நெஞ்சார நன்றி கூறுகிறேன்...அசத்தலான பின்னூட்டம் தந்த அமரனின் சார்பிலும்.