PDA

View Full Version : கழுவப்பட்ட களங்கங்கள்(சிறுகதை)



சிவா.ஜி
28-09-2008, 04:01 AM
அந்த மாதிரி தெருவுக்குள் நுழையவே சஞ்சீவுக்கு சங்கடமாக இருந்தது. நாளைக்காலை அலுவலக வேலையாய் மொஹலாலி போக வேண்டும். அலுவலக ஓட்டுநர் அந்தத் தெருவில் இருந்ததால் அவரிடம் இடத்தையும், நேரத்தையும் சொல்ல வேண்டியிருந்ததால் அங்கு வந்திருந்தான். ஓட்டுநரின் அலைபேசி எண் இருந்திருந்தாலாவது அதிலேயே தகவலை சொல்லியிருக்க முடியும். அதுவும் தெரியவில்லை. இப்போதுதான் பேசிவிட்டு அலைபேசி எண்னையும் வாங்கிக்கொண்டு வந்திருந்தான். சின்னச் சின்னப் பெட்டிக்கடைகளின் மறைவில் மாமாக்கள் வாடிக்கையாளர்களை வரவேற்று வீடுகளுக்குள் அனுப்பிக்கொண்டிருந்தார்கள். சிலர் நெடுநாள் பழகிய விதத்தில் பயமின்றியும், சிலர் புதிய அனுபவத்தில் முகத்தில் லேசான குழப்பத்துடன் சென்றுகொண்டிருந்தார்கள்.

எப்படி இந்தத் தெருவில் குடும்பங்களும் வசிக்கின்றன என்று விளங்கவில்லை. எவனாவது நேரங்கெட்ட நேரத்தில் கதவைத் தட்டுவானே..? வாங்கும் சம்பளத்தில் குறைந்த வாடகைக்கு இந்த நகரத்தில் இப்படிப்பட்ட இடங்களில்தான் வீடு கிடைக்கிறது போலுள்ளது. கணினித் துறை வளர்ச்சியால் இந்த ஹைதராபாத் நகரத்திலும் வீட்டு வாடகை விண்ணைத் தொட்டுவிட்டது. சாமானிய மக்களுக்குத்தான் பெரும் சங்கடம். ஏதேதோ எண்ணங்களுடன் தெருவோரமாக நடந்து வந்து கொண்டிருந்தவன் ஒரு சிறுமி சாலையைக் கடப்பதைப் பார்த்துவிட்டு, வேகமாக வந்துகொண்டிருந்த ஆட்டோவையும் கவனித்ததும் பதறிப்போய் வேகமாகச் சென்று அந்த சிறுமியை வாரி எடுத்துக்கொண்டு தடுமாறியதில் ஓரமாய் சென்று விழுந்தான். ஆனால் அந்த சிறுமியை பத்திரமாக தன்னுள் பொதிந்துகொண்டு அடி பட்டுவிடாமல் காப்பாற்றினான்.

மூன்று வயதிருக்கும் அந்த சிறுமிக்கு. அழகான உருண்டை முகம். பளபளக்கும் கண்கள். பயந்து போனதில் நீர் கோர்த்துக்கொண்டு மேலும் பளபளத்தது. உடம்பு உதறிக்கொண்டிருந்தது. எதையோ அரற்றிக்கொண்டிருந்தாள். சஞ்சீவ் குனிந்துக் கேட்டான். ”அம்மாட்ட போகனும்....அம்மாட்ட போகனும்” என்று சொல்லிக்கொண்டிருந்தாள். தமிழ் குடும்பத்தை சேர்ந்தவள் போலிருக்கிறது.

“சரி..சரி அழாத குட்டி. அங்கிள் உன்னை அம்மாட்ட கூட்டிட்டுப் போறேன். எங்கருக்கு உங்க வீடு?” என்று கேட்டதும், அதே வரிசையில் ஒரு வீட்டைக் காட்டினாள்.

மெல்லிய பூவை சுமப்பதைப்போல அவளை தூக்கி தோளில் சாய்த்துக்கொண்டு நடந்தபோது ஒரு இனம்புரியாத நிம்மதி மனதில் தோன்றியதை அவனால் உணர முடிந்தது. இதுவரை அவனுக்குக் கிட்டாத அந்த நிம்மதியும், ஒரு பரவசமும் அந்த சின்னக் குழந்தையைச் சுமந்தபோது கிடைத்தது. நான்கு வயதில் அனாதையாக்கப்பட்டு, பொறியியல் படிப்பை முடிக்கும்வரை அனாதையாய் வளர்ந்தவன் சஞ்சீவ். இப்படிப்பட்ட உறவுகள், அந்யோன்யம் என எதுவுமே கிடைக்கப் பெறாதவன். வீட்டைத் தாண்டி போய்க்கொண்டிருந்தவனை காலரைப் பிடித்து இழுத்து நிறுத்தினாள் அந்தக் குழந்தை.

“இதான் மாமா எங்க வீடு”

கதவைத் தட்டினான். மிக இளம் வயதில் ஒரு பெண், இந்தக் குழந்தையின் முகச் சாயலோடு கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தாள். தோளில் இருந்த தன் மகளைப் பார்த்ததும் பதறிக் கொண்டு வாங்கிக்கொண்டவாறே..தெலுங்கில் ”என்ன ஆச்சு” என்று இவனைக் கேட்டாள்.

“ஒண்ணுமில்ல. ரோடக் கிராஸ் பண்றப்ப ஆட்டோ இடிக்க இருந்திச்சி. அதுக்குள்ள நான் பிடிச்சிட்டேன். பயந்துட்டா அவ்ளவுதான்” என்று தமிழில் சொன்னவனை நன்றியோடும், கொஞ்சம் சந்தோஷத்தோடும் பார்த்தாள்.

“ரொம்ப நன்றிங்க. ரொம்ப நாளைக்கப்புறமா தமிழ் பேசறவங்களைப் பாக்கும்போது சந்தோஷமா இருக்கு. உள்ள வாங்க...” என்று சொல்லிவிட்டாளேத் தவிர, உடனடியாக முகம் மாறினாள். “இல்ல வேணாங்க. நான் பாத்துக்கறேன். ரொம்ப நன்றி” அவசரமாக சொல்லிவிட்டு கதவை அடைத்துக்கொண்டாள்.

அவளின் பதட்டத்தைப் பார்த்து எதுவும் விளங்காமல் திரும்பி நடக்கத் தொடங்கியவனை ஒருவன் வழி மறித்தான்.

“ஏம் பாபு...ஏன் திரும்பிப்போறே...பிடிக்கலையா? இல்லன்னா சொல்லு நம்மக்கிட்ட வேற மால் இருக்கு.” என்று தெலுங்கில் சொன்னவனைப் பார்த்தாலே தெரிந்தது அவன் ஒரு பிம்ப் என்று.

எதுவும் சொல்லாமல் திரும்பி நடந்தவனை கையைப் பிடித்து இழுத்து நிறுத்தினான். அந்த அநாகரீக செயலை விரும்பாத சஞ்சீவ் ஆத்திரமாய் அவனை நோக்கித் திரும்பினான். சட்டென்று கோபத்தைத் தணித்துக்கொண்டு, சுற்றுமுற்றும் மோசமான ஆட்கள் இருப்பதைக் கவனித்துவிட்டு அவனிடம் மெல்லிய குரலில்,

“இல்லப்பா...இன்னைக்கு வேணாம் இன்னொரு நாளைக்கு வரேன்” என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.

“புதுசு போலருக்கு...கொஞ்சம் பயம் தெளிஞ்சு வரட்டும். வராமலா போயிடப்போறான்” என்று அந்த தரகன் தன் மற்றொரு சகாவிடம் தெலுங்கில் சொல்லிக்கொண்டிருந்தது லேசாய் காதில் விழ, அருவெறுப்புடன் நடையின் வேகத்தைக் கூட்டினான் சஞ்சீவ்.

அடுத்தநாள் அலுவலகப் பணிநேரம் முடிந்ததும் அவனையறியாமல் அந்தக் குழந்தையின் முகம் மனதில் வந்து போனது. உடனே அவளைப் பார்க்கவேண்டுமென்ற ஆவல் தோன்றியது. ஆட்டோவைப் பிடித்து அந்தத் தெருவுக்குப் போகச் சொன்னவனை அந்த ஓட்டுநர் ஒரு நமுட்டுச் சிரிப்புடன் பார்த்துவிட்டு வண்டியை ஓட்டத் தொடங்கினான்.

மீண்டும் அந்த வீட்டுக்கு வரும்போது நன்றாக இருட்டிவிட்டிருந்தது. கதவு சாத்தியிருந்தது. தட்டினான். திறக்கவில்லை. மீண்டும் தட்டியும் திறக்காததால் சற்றுநேரம் காத்திருக்கலாம் என நினைத்து அருகிலிருந்த மரப்பெட்டியின் மீது அமர்ந்துகொண்டான். சற்று நேரமாகிவிட்டதால், கதவைத் திரும்ப்பிபார்த்துக்கொண்டிருக்கும்போதே எட்டி உதைக்கப்பட்டான். தடுமாறி கீழே விழுந்தவன், நிமிர்ந்து பார்த்தான். அன்று அவனை அழைத்த அதே தரகன் கோபத்தோடு நின்று கொண்டு தெலுங்கில் தாறுமாறாக வசை பாடிக்கொண்டே, மீண்டும் இவனை எட்டி உதைக்கக் காலைத் தூக்கிக்கொண்டு வந்தான். சட்டென்று சுதாரித்துக்கொண்ட சஞ்சீவ் எழுந்த வேகத்தில் அந்தக் காலைப் பிடித்து இழுத்துக் கீழே தள்ளினான். ஏற்கனவே குடியில் தள்ளாடிக்கொண்டிருந்தவன் தடாலென்று கீழே விழுந்தான்.

உடனே லபோ திபோ என்று அலறிக் கூட்டத்தைக்கூட்டிவிட்டான். அவன் தெலுங்கில் சொன்னவைகளின் சாராம்சம்..”இந்த நாய் எனக்குக் கமிஷன் கொடுக்காமல் நேரடியாக தன் காரியத்தை முடித்துக்கொள்ள நினைக்கிறான். அதை தடுத்த என்னை எட்டி உதைத்துவிட்டான்.இவனை சும்மா விடக்கூடாது” என்பதுதான். அவன் சொன்னதைக் கேட்ட சஞ்சீவ் தான் அதற்காக வரவில்லை எனச் சொல்ல வாயைத் திறந்த அதே சமயம் அந்த வீட்டின் கதவுத் திறந்தது. வாடிக்கையாளன் ஒருவன் வெளியேறியதும் அந்தப்பெண் வெளியே வந்தாள். உள்ளிருந்து இங்கு கேட்டக் கூச்சல்களை வைத்து நிலைமையைத் தெரிந்துகொண்டவள் அந்த தரகனிடம் இவர் புதியவராகையால் வழக்கம் தெரியவில்லை. மன்னித்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டு சஞ்சீவைப் பார்த்து ”அவன்கிட்ட அம்பது ரூபாயைக் குடுத்துட்டு வாங்க” என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டாள். தான் அதற்காக வரவில்லை என சொல்லவும் சந்தர்ப்பம் கொடுக்காமல் அவள் உள்ளே போய்விட்டதும் வேறு வழியில்லாமல் ஐம்பது ரூபாயை அந்தத் தரகனிடம் கொடுத்துவிட்டு உள்ளேச் சென்றான்.

“இதை அப்பவே கொடுத்திருக்க வேண்டியதுதானே...வீணா எதுக்கு ஒதை வாங்கனும்” என்று முனுமுனுத்துக்கொண்டே அவன் நகர்ந்து சென்றுவிட்டான்.

உள்ளேச் சென்றவனைப் பார்த்து “உக்காருங்க.” என்றாள். தயக்கத்துடன் தான் வந்தக் காரணத்தை சொல்ல வாயெடுத்தவனைப் பார்த்து,

“எனக்குத் தெரியும் நீங்க அதுக்காக வரலங்கறது. அனாவசியமா பிரச்சனையை வளக்க வேணாமேன்னுதான் உங்களை அவன்கிட்ட காசு கொடுக்கச் சொன்னேன். இந்தாங்க “ என்று அந்த ஐம்பது ரூபாயை அவனிடம் நீட்டினாள்.

அவளது அந்த செயல் சஞ்சீவை மிகவும் காயப்படுத்தியது. லேசான பதட்டத்துடன்...

“என்னங்க இது...? நான் பாப்பாவைப் பாத்துட்டுப் போகத்தான் வந்தேன். வந்த இடத்துல இப்படி நடந்துப்போச்சி. இதுக்காக அந்தப் பணத்தைத் திருப்பிக்கொடுத்து என்னை அவமானப்படுத்திட்டீங்களே..?” என்று அடிபட்டக் குரலில் அவன் சொன்னதைக்கேட்டதும் அவளுக்கே சங்கடமாகிவிட்டது.

“சரி விடுங்க. தேன்மொழிக்கு நல்ல காய்ச்சல். நேத்து ராத்திரியிலருந்தே கொதிச்சது. மாத்திரைக் கொடுத்தேன். அப்பவும் குறையல. டாக்டர்கிட்டக் கூட்டிட்டுப் போகனும்.”

சொல்லிக் கொண்டிருந்தவளைப் பார்த்துவிட்டு அவன் பார்வை கலைந்திருந்த படுக்கைக்குச் சென்று திரும்பியதைக் கவனித்தவள், வேதனையோடு சிரித்துவிட்டு,

“டாக்டருக்கு குடுக்க காசு வேணுமே..”

அதைக் கேட்டதும், துக்கத்தில் மனம் வெதும்ப,

“நீங்க இருங்க. பாப்பாவை நான் கூட்டிட்டுப் போய் டாக்டர்கிட்ட காமிச்சிட்டு வரேன்.” சொல்லிவிட்டு அவளது அனுமதிக்குக்கூட காத்திராமல் தேன்மொழியை அள்ளியெடுத்துக்கொண்டு மருத்துவரிடம் விரைந்தான்.

மருத்துவர் கொடுத்த மருந்துகளால் காய்ச்சல் லேசாகக் குறைய அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள் தேன்மொழி. இருக்கையில் சஞ்சீவ் அமர்ந்திருக்க, வனிதா தன் கதையை சொல்லிக்கொண்டிருந்தாள்.

“எங்க கிராமத்துல பத்தாவது வரைக்கும்தான் இருந்தது. ப்ளஸ் ஒன் படிக்க எங்க சித்திவீட்டுக்கு அனுப்பினாங்க. அடிக்கடி வந்து பாத்துட்டுப் போவாங்க. அங்க படிக்கும்போதுதான் அந்த நாயைச் சந்திச்சேன். இனிப்பா பேசி என் வாழ்க்கையையே கசப்பாக்கிட்டான். என்னைவிட பத்துவயசு பெரியவன். எப்படியோ அவன் வலையில விழுந்துட்டேன். ஒருநாள் அவனுக்குப் பொண்ணுபாக்க ஆரம்பிச்சிட்டாங்கன்னும், உடனே நாம கல்யாணம் பண்ணிக்கறதைத் தவிர வேற வழியில்லைன்னும் சொல்லி, என்னை சம்மதிக்க வெச்சு திருப்பதிக்கு கூட்டிக்கிட்டு வந்து தாலியைக் கட்டிட்டு இந்த ஹைதராபாத்துல அவங்க சொந்தக்காரங்க இருக்காங்க, கொஞ்சநாளைக்கு அவங்க கிட்ட இருந்துட்டு அப்புறமா உங்க வீட்டுக்குப் போய் உங்க அப்பா அம்மா கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்டுக்கலான்னு சொன்னான்.

அவன் சொன்னதையெல்லாம் கேட்டேன். என் வயசு எதையும் சிந்திக்க விடலை. அந்தளவுக்கு என்னை அவன் மயக்கி வெச்சிருந்தான். இங்க வந்து மூணுமாசம் என்கூட குடும்பம் நடத்தினான். அந்த மூணு மாசத்துலயே அவனோட போக்கு சரியில்லங்கறது கொஞ்சங்கொஞ்சமா எனக்குப் புரிய ஆரம்பிச்சுது. என்னை என் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகச் சொல்லி நச்சரிச்சேன். அவன் ஆத்திரப்பட்டு அடிச்சான். அதுக்குள்ள தேன்மொழி என் வயித்துல உருவாகத் தொடங்கியிருந்தா. அதைக் கலைக்கச் சொல்லி என்னை வற்புறுத்தினான். நான் முடியவே முடியாதுன்னு அடம் பிடிச்சப்போ என்னைத் தாறுமாறா அடிச்சிட்டு வெளியே போயிட்டான். அதுக்கப்புறம் வரவேயில்லை. பாஷை தெரியாத இந்த ஊர்ல ரொம்பவே கஷ்டப்பட்டேன். வீட்டு ஓனர் வேற தொல்லைக் கொடுக்க ஆரம்பிச்சிட்டார். பணத்துக்குப் பதிலா என்னையேக் கேட்டார். வீட்டு வேலைக்காவது போய் உங்க வாடகைப் பணத்தைக் கொடுத்துடறேன்னு சொல்லிட்டு வேலைக்குப் போனேன். அங்கயும் சிலர் என்னைத்தான் கேட்டார்கள்.

வேற வழியில்லாம இந்தத் தொழில்ல இறங்கிட்டேன். இப்ப தேனுக்காக எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டிருக்கேன்” விசும்பலுடன் தன் கதையை முடித்தாள் வனிதா.

சஞ்சீவின் மனம் பாரமாகியிருந்தது.அவளுக்கு ஆறுதல் சொல்லக்கூடத் தோன்றாமல் சட்டென்று எழுந்து சென்றுவிட்டான்.

அடுத்தநாள் அவனுடைய மேலாளர் அவனை அழைத்து அவனைக் கல்கத்தாவுக்கு மாற்றியிருப்பதாகச் சொன்னார். இன்னும் ஒரு வாரத்தில் அந்த கிளையில் சேரும்படிச் சொல்லிவிட்டு, அதற்கான கடிதத்தையும் கொடுத்தார். அன்று மாலை தன் அறையில் அமர்ந்து, அந்தக் கடிதத்தையே பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு நேற்று இரவு அழுதுகொண்டிருந்த வனிதாவின் விசும்பல் சத்தம் காதுகளில் ஒலித்தது. சட்டென முடிவெடுத்து நேராக வனிதாவின் வீட்டுக்கு வந்தான். நேரடியாக அவளைப் பார்த்து,

“வனிதா...நீ உன்னைப் பத்தி எல்லாத்தையும் சொல்லிட்ட. நான் யாருன்னு உனக்குச் சொல்லவேயில்ல. நானும் தேன்மொழியைப் போலத்தான். எங்கம்மா எனக்கு நாலுவயசாகும்போது அந்தத் தொழிலுக்கு கிடைக்கும் பரிசான வியாதியில் போய்ச் சேர்ந்துட்டா. அனாதையான என்னை வளர்த்தது ஒரு இல்லம்தான். என்னை மாதிரி ஒரு அனாதையா நம்ம தேனு வளரவேண்டாம். இன்னைக்கே அவளை என் மகளா ஏத்துக்கறேன். அதுக்குக் கடவுள் சாட்சியோ, இல்லை அரசாங்க சாட்சியோ தேவையில்லை. நம்ம மனசாட்சி போதும். உன்னை மனப்பூர்வமா என்னோட மனைவியா நான் ஏத்துக்கறேன். என்ன சொல்ற?”

தன்னைப் பற்றி எல்லாம் தெரிந்தவன், அதுமட்டுமில்லாமல், என் குழந்தையிடம் உண்மையான பாசம் வைத்திருப்பவன். இந்த சாக்கடையிலிருந்து வெளியேற ஒரு சந்தர்ப்பம் அளிக்கிறான். ஏன் நான் சம்மதிக்கக்கூடாது என தன்னையேக் கேட்டுக்கொண்டவள், தன் சம்மதத்தைத் தெரிவித்தாள்.

பிறகு தனக்கு கல்கத்தாவுக்கு மாற்றலாகியிருக்கும் விஷயத்தை சொல்லிவிட்டு, அங்கு நாம் நம் புதிய வாழ்க்கையைத் தொடங்கலாமென்று சொன்னதும், மனதார மகிழ்ந்தாள். நீண்ட நாட்களுக்குப் பிறகு மலர்ச்சியோடு சிரித்தாள். ஆனால் அவன் அடுத்து சொன்னதைக் கேட்டதும் அவளுக்குத் தூக்கிவாரிப்போட்டது.

“கல்கத்தா போறதுக்கு முன்னால நாம உங்க அப்பா அம்மாவைப் பாக்கப்போறோம்”

வனிதா அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள்.

“பயப்படாதே. உன்னை ஏமாத்தினவன் யாருன்னு உன்னைத் தவிர அங்க யாருக்கும் தெரியாது. நான்தான் உன்னைக் கூட்டிக்கிட்டுப் போனவன்னு சொல்லு. இத்தனை நாள் நாங்க ஒண்ணாத்தான் குடும்பம் நடத்தினோன்னு சொல்லு. எங்க மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு சாட்சியா இந்த தேன்மொழி இருக்கான்னு சொல்லு. உன்னோட கடந்தகாலம் என்னன்னு அவங்களுக்குத் தெரிய வேண்டாம். மத்ததெல்லாம் நான் பாத்துக்கறேன்.”

சம்மதத்துடன் தன் பொருட்களை கட்டத் தொடங்கினாள்.

கிராமத்துக்கு வந்து வனிதாவின் வீட்டுமுன்னால் நின்றதும், அவளுடைய தந்தை அரிவாளைத் தூக்கிக்கொண்டு ஆவேசத்துடன் வந்தார்.

“ஓடிப்போனவ அப்படியே எங்காவது செத்து தொலைச்சிருக்க வேண்டியதுதான...ஏண்டி திரும்பி வந்த? இருக்கிற கொஞ்ச நஞ்ச மானத்தையும் குழிதோண்டி பொதைக்கறதுக்கா? உன்னை வெட்டிக் கூறு போட்டாத்தான் என் மனசு ஆறும்” என்று சொல்லிக் கொண்டே அரிவாளை ஓங்கியவரைத் தடுத்தான் சஞ்சீவ். அவனை வெறுப்புடன் பார்த்தவர்,

“விட்றா கையை. உன்னை வெட்டப் போறதில்ல...என் பொண்ணு பல்லை இளிச்சிக்கிட்டு உன்கூட வந்ததுக்கு நீ என்னப் பண்ணுவ.”

”நீங்க தப்பா யோசிக்கிறீங்க. இதுல அவளோட தப்பு என்ன இருக்கு? படிச்சிக்கிட்டிருந்த பொண்ணோட மனசைக் கலைச்சு அவளை என்னோட அழைச்சிட்டுப்போனது நான்தான். அதுக்கு நீங்க என்னைத்தான் தண்டிக்கனும். ஆனா...நீங்களா ஒரு மாப்பிள்ளைப் பாத்து கல்யாணம் பண்ணி வெச்சாலும், உங்க மக நல்லா சந்தோஷமா வாழனுன்னுதான் நினைப்பீங்க. அதே மாதிரிதான் இவ இப்பவும் வாழ்ந்துக்கிட்டிருக்கா. எங்க சந்தோஷமான தாம்பத்யத்துக்கு அடையாளமா இந்த அழகான தேவதை இருக்கா. எனக்கு அப்பா அம்மா இல்லை. அதனாலத்தான் உங்களைத் தேடி வந்தேன். எனக்குன்னு சொல்லிக்க உறவுகள் வேணும்.....” சொல்லி நிறுத்தியவன், தேன் மொழியை இழுத்து அணைத்துக்கொண்டே,

“எங்க மகளுக்கு தாத்தா பாட்டி, மாமா, சித்தின்னு உறவுகள் கிடைக்கனுன்னுதான் உங்கக்கிட்ட வந்திருக்கேன். மத்தபடி சொத்துலயோ, உரிமையிலயோ சொந்தம் கொண்டாட வரலை. நான் எஞ்ஜினியரா இருக்கேன். நல்லபடியா சம்பாதிக்கறேன். உங்க மகளையும், பேத்தியையும் சந்தோஷமா வெச்சிருப்பேன். எங்களுக்குத் தேவையெல்லாம், எங்க தவறை மன்னிச்சு நீங்க ஏத்துக்கனும்ங்கறதுதான்.

ஓடிப்போனவங்கற எண்ணத்தைக் கொஞ்சம் மறந்துட்டு உங்க மகளா இவளைப் பாருங்க. நீங்களா பாத்துக் கட்டி வெச்சவன் மோசமானவனா இருந்திருந்தா, உங்க மகளோட வாழ்க்கையை நினைச்சு நீங்க வேதனைப் படறதைத் தவிர உங்களால என்ன செய்ய முடியும். அப்ப இந்த சமுதாயம் உங்க மகளோட நல்ல வாழ்க்கையை திரும்பக்கொடுக்க முன்வருமா? தயவுசெஞ்சி எங்க தப்பை மன்னிச்சு ஏத்துக்குங்க”

“நிச்சயமா...முடி...” சொல்ல வந்தவரை ஓரத்திலிருந்து கேட்டுக்கொண்டிருந்த வனிதாவின் அண்ணன் தடுத்து,

“சுத்தியிருக்கிற சமூகத்துக்காக நாம எத்தனைநாள்தான் பயந்துகிட்டு வாழறதுப்பா? தப்புப் பண்ணிட்டா....ஒத்துக்கறேன். ஆனா இப்ப வாழ்க்கையில ஜெயிச்சு வந்திருக்காங்க. இவர் பேசினதிலிருந்து நான் இவரைப் பத்தி நல்லா தெரிஞ்சிக்கிட்டேன். நாம தேடியிருந்தாலும் இப்படி ஒரு நல்ல மனுஷனை நாம தேர்ந்தெடுத்திருக்க முடியாது. என்னைப் பொறுத்தவரை நான் என் தங்கையை மன்னிச்சுட்டேன். இவரை என் மைத்துனனாக ஏத்துக்கிட்டேன். இனி உங்க விருப்பம்”

இளைய தலைமுறையின் தெளிவான சிந்தனையோடு பேசிய தன் மகனை ஆச்சர்யத்துடன் பார்த்த வனிதாவின் அப்பா, மெல்ல கோபம் தனிந்து முதல் முறையாக தன் மகளையும் பேத்தியையும் பாசத்தோடு பார்த்தார்.

தன் களங்கங்களையெல்லாம் கழுவிவிட்டு தன்னை மீண்டும் தன் பெற்றோருக்கு மகளாக்கிய சஞ்சீவை கண்ணீர் மல்க பார்த்துக்கொண்டே இருந்தாள் வனிதா.

சுகந்தப்ரீதன்
28-09-2008, 04:55 AM
அருமையான நெஞ்சை நெகிழவைத்த படைப்பு..!! வாழ்த்துக்கள்..!!

தங்களின் கையெழுத்துக்கும் இந்த கதைக்கும் கரு ஒன்றுதான் சிவா அண்ணா..!!

சிவா.ஜி
28-09-2008, 06:02 AM
நன்றி சுபி. கண்ணீர் துடைக்கும் விரலாக இருக்க நினைத்தாலே பலரின் சோகங்கள் துடைக்கப்படும்.

இளசு
28-09-2008, 08:10 AM
அன்பு சிவா,

கதையின் முதல் பாதி கரு - பரிச்சயமானதென்றாலும்
1) குழந்தைப்பாசம் முதலில் வந்து, அதனால் அது தாய் வரை நீள்வதும்
2) நாயகனின் தாய், அவன் வளர்ப்பு இந்நிகழ்வின் பின்புலமாய் திகழ்வதும்

புத்தம்புதிது!

அதையும் விஞ்சிய புதிது -
அவள் இல்லம் வரை சென்று முன்னம் விழுந்த கறை கழுவியது!

கூட்டல் எண்ணங்கள் கூட்டும் கதை!

வாழ்த்துகள், பாராட்டுகள்!

அமரன்
28-09-2008, 08:12 AM
அண்ணன் சொன்னது போல் பல புதிதுகள் கதையில்..:icon_b:

பழக்கப்பட்ட களம்.. இப்படிச் சொல்றதால இவன் அந்தமாதியான ஆளோ என்று ஒருத்தருக்காவது தோன்றும். ஒருத்தர் பலராவார்.. ஆனால் உண்மை.. அதுவும் இப்படித்தான் பிணையமாகிறது. உண்மையா? பொய்யா? என்ற எண்ணமின்றி ஒரு சாரார். சமூகத்திலோடி இருக்கும் சாதிபுரையை விட இந்தப் பிளவு மோசமானது. ஆராய்ந்தறியும் சமூகத்தை நோக்கி ஒவ்வொருவரும் நடைபோடத் தொடங்குவோம். தேவை எனில் எதுவானாலும் சரி.

வனிதாவின் ஓடிப்போனவள் என்ற புறக்களங்கம் துடைக்கப்பட்டு விட்டது.
இந்த சமூகத்திலிருந்து வந்த அவளால் அவளுடைய மனதில் சுமக்கப்படும் களங்கம்?
அந்த தெருவில் நுழைய சஞ்சீவ் ஏன் சங்கப்பட வேண்டும்?
அப்படிச் சங்கப்பட்டவனால் எப்படி வனிதாவுடன் நேர்மையாக வாழ முடியும்?

இப்படியும் சில கேள்விகள்.. அதற்கான பதில்களின் தேடுபொறியாக இந்தக்கதை இருக்குமானால் கூடுதல் சந்தோசம்.

அன்புரசிகன்
28-09-2008, 08:22 AM
ஒருவரின் வாழ்க்கையை சீர் படுத்திய சீரிய மனிதன் அவன்... முடிவில் அண்ணன் கூறுவது போல நிஜங்களும் இருந்தால் சமூகத்திற்கு இன்னும் சிறப்பு...

உங்களின் சிறப்புக்கதைகளில் இன்னொன்று... வாழ்த்துக்கள் அண்ணா...

சிவா.ஜி
28-09-2008, 09:01 AM
பொதுவாகவே முதல் முறை அப்படிப்பட்ட இடங்களுக்குப் போவோர், கதை கேட்பதும், கதையின் முடிவில் உணர்ச்சிவயப்பட்டு திருமணத்திற்கு கோரிக்கை வைப்பதும்....கண்டதும், கேடதும்தான். இதில் அதன் அடுத்த பரிணாமத்தைக் காட்ட நினைத்தேன். முயற்சியில் சிறிதேனும் வெற்றி பெற்றிருப்பதை உங்கள் பின்னூட்டம் தெரியப்படுத்துகிறது இளசு.

மிகவும் மகிழ்ந்தேன். மனம் நிறைந்த நன்றிகள்.

சிவா.ஜி
28-09-2008, 09:08 AM
அந்த தெருவில் நுழைய சஞ்சீவ் ஏன் சங்கப்பட வேண்டும்?
அப்படிச் சங்கப்பட்டவனால் எப்படி வனிதாவுடன் நேர்மையாக வாழ முடியும்?

இப்படியும் சில கேள்விகள்.. அதற்கான பதில்களின் தேடுபொறியாக இந்தக்கதை இருக்குமானால் கூடுதல் சந்தோசம்.

மிக நல்ல கேள்வி அமரன். எழுதிவிட்டு மீண்டும் வாசித்த எனக்குத் தோன்றியதும் இதுவே. சஞ்சீவ் பரத்தையர்களை வெறுக்கவில்லை. தான் அவ்விதம் அவர்களை நாடி செல்லுபவனாக இருப்பதை விரும்பவில்லை. அப்படிச் செல்லுபவர்களைத்தான் அருவெறுப்புடன் நோக்குகிறான்.

எனவே, வனிதாவுடன் முழு மனதோடு வாழ்வதில் அவனுக்கு எந்தவித சங்கடங்களும் தோன்றப்போவதில்லை. அவளுக்கும் குற்ற உணர்ச்சியும், நன்றியுணர்ச்சியும் தொந்தரவாக இருக்கக்கூடாது என்பதால்தான், பெற்றோரும், உறவினரும் அவளை ஏற்க வைக்கச் செய்கிறான். அது அவளுக்கு மன தைரியத்தைக் கொடுக்கும்.

வெறுமனே நான் அவளுக்கு வாழ்க்கைக் கொடுத்தேன், அவள் என்னிடம் எப்போதும் ஒருவித நன்றியுணர்ச்சியோடு இருப்பாள் என்று எதிர்பார்த்தால் அவன் மிகச் சாதாரணமானவன்தான். நாயகனாக முடியாது.

தெளிவான உங்கள் பின்னூட்டம் என்னையும் மிக சிந்திக்க வைத்தது. மிக்க நன்றி அமரன்.

சிவா.ஜி
28-09-2008, 09:17 AM
ஒருவரின் வாழ்க்கையை சீர் படுத்திய சீரிய மனிதன் அவன்... முடிவில் அண்ணன் கூறுவது போல நிஜங்களும் இருந்தால் சமூகத்திற்கு இன்னும் சிறப்பு...

உங்களின் சிறப்புக்கதைகளில் இன்னொன்று... வாழ்த்துக்கள் அண்ணா...

நிச்சயமாய் அன்பு. நிஜத்தில் இவ்வகை நிகழ்வுகள் நிகழுமானால், சமுதாயம் மேம்படுகிறது எனக் கொள்ள*லாம். நிகழும் என நம்புவோம்.

பின்னூட்ட ஊக்கத்துக்கு நன்றி அன்பு.

அமரன்
28-09-2008, 08:15 PM
சரிதான் சிவா..
அந்த தெருவில் நடக்க அவனுக்கு கூசியதென்றால்..
அவன் சமூகத்துக்குப் பயப்படுகின்றான் என்று அர்த்த்ப்படுத்திவிட்டேன்..
அதனால் சிறு சலனம்.. படித்த நிலை வேறு பதட்டமான நிலை..
உங்கள் ஆக்கங்களை சுடச்சுட சுவைத்து விட வேண்டும் என்ற பேரவாதான் காரணம்..
இனிமேல் பதட்டமான நிலையில் படிப்பதில்லை என்று முடிவெடுத்து விட்டேன்..

மதி
29-09-2008, 04:00 AM
முன் பின்னூட்டமிட்ட அனைவரும் சொன்னமாதிரி... முடிவு வித்தியாசமாய் இருந்தது. பாராட்டுக்கள் அண்ணா..

சிவா.ஜி
29-09-2008, 04:54 AM
பின்னூட்ட ஊக்கத்துக்கு மிக்க நன்றி கிஷோர்.

மிக்க நன்றி மதி.

தீபன்
29-09-2008, 12:28 PM
பண்பட்டவர்களுக்கான கதையல்ல இது. பண்படவேண்டியவர்களுக்கான எடுத்துக்காட்டு.. ஏன் இங்கு பதிந்தீர்கள் சிவாண்ணா?
சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் சில அபத்தமான எண்ணங்களிலிருந்து மீள்வதற்கு பலருக்கும் வளிகாட்டக்கூடிய கதையை சிறப்பாக படைத்துள்ளீர்கள். கதையை படித்து முடிக்கையில் ஆத்மார்த்தமான ஒரு திருப்தி, சீர்திருத்தப்பட்ட சமூகமே அமைந்துவிட்டதைப்போல..!

சிவா.ஜி
01-10-2008, 09:06 AM
எடுத்துக்கொண்ட கருவில், காட்டும் சில இடங்களும், காட்சிகளும் இங்கு பதிக்க வேண்டியவை என்று நினைத்ததால் இங்கு பதிந்தேன் தீபன். நிர்வாகத்தினர் அனுமதித்தால் சிறுகதை பகுதியில் மாற்றலாம்.

நிச்சயமாக நம் எல்லோர் எண்ணமும் வேண்டுவது, நாம் கனவு காணும் அந்த சீர்திருந்திய சமூகம் தானே தீபன்? வாசிப்பவர்கள் ஒரு நொடியேனும் சிந்தித்தாலே படைப்புக்கு கிடைக்கும் வெற்றிதானே? உங்கள் பின்னூட்டம் மிகுந்த மனத் திருப்தியளிக்கிறது. மிக்க நன்றி தீபன்.

mukilan
01-10-2008, 07:09 PM
இன்றுதான் அண்ணா இந்தக் கதையை படிக்க முடிந்தது. சற்றும் எதிர்பாராத திருப்பங்கள். நான் அந்தப் பெண்ணுக்கு அறிவுரை சொல்வான் என நினைத்திருந்தேன் ஆனால் அவனுக்கும் அப்படி ஒரு சோகமான பின்புலம் இருந்ததனால் அந்தப் பெண்ணை ஏற்றுக் கொண்டான் என்பது புதுமையாக இருக்கிறது. அது போல பின்புலம் இல்லையென்றாலும் அந்தப் பெண்ணை ஏற்றுக் கொள்ள முடியுமா? புதிய கோணம், வரைவின் மகளிர் யாரும் அந்த தொழிலை விரும்பி ஏற்பதில்லை என்பது எத்தனையோ முறை நிரூபிக்கப் பட்டுக்கொண்டே இருக்கிறது. வனிதாக்களும் வாழட்டும்.

சிவா.ஜி
02-10-2008, 07:22 AM
நன்றி முகிலன். சஞ்சீவைப் போன்றவர்கள் வாழ்க்கையை அதன் மிக மோசமான கோணத்தில் அருகிருந்து பார்த்தவர்கள். எனவே அப்படிப்பட்ட பின்புலம் இல்லையென்றாலும், வனிதாவை ஏற்கத் தயங்கியிருக்க மாட்டான். உறவுகளே இல்லாமல் வளர்ந்தவனுக்கு, தேன்மொழி எனும் பிஞ்சு உறவு கிடைக்காது கிடைத்தப் புதையலைப் போன்றது.

வேறு பெண்ணை திருமணம் செய்ய நினைத்திருந்தாலும், அவனது அனாதையென்ற அடையாளம் அதற்குத் தடையாக இருந்திருக்கும். இப்போதும் இந்த சமுதாயம் அப்படியேத்தானே இருக்கிறது.

வனிதாக்களின் வலியறிந்து வருடிக்கொடுக்கும் உள்ளங்கள் இன்னும் வரவேண்டும். நல்லதொரு பின்னூட்டத்துக்கு நன்றிகள் முகிலன்.

Keelai Naadaan
02-10-2008, 05:09 PM
மீண்டும் ஒரு நல்ல கதையை தந்திருக்கிறீர்கள்.
ஒவ்வொரு முறையும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுப்பது வியக்க வைக்கிறது. வாழ்த்துக்கள்.

சில வருடங்களுக்கு பிறகு சந்திக்கும் அப்பா இன்னும் அதே கோபத்துடன் இருப்பது போல் காட்டப்பட்டுள்ளது மட்டும் கொஞ்சம் நெருடுகிறது.

சிவா.ஜி
03-10-2008, 05:28 AM
மீண்டும் ஒரு நல்ல கதையை தந்திருக்கிறீர்கள்.
ஒவ்வொரு முறையும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுப்பது வியக்க வைக்கிறது. வாழ்த்துக்கள்.

சில வருடங்களுக்கு பிறகு சந்திக்கும் அப்பா இன்னும் அதே கோபத்துடன் இருப்பது போல் காட்டப்பட்டுள்ளது மட்டும் கொஞ்சம் நெருடுகிறது.

மிக்க நன்றி கீழைநாடான். சமீபத்தில் ஒரு செய்தியை படித்தேன். ஓடிப்போன மகளை நான்கு வருடமாகத் தேடிக் கண்டுபிடித்து கொன்றிருக்கிறார் ஒரு கிராமத்து தந்தை. அவளால் போன மானத்தை அவளைக் கொன்றதுமூலம் திரும்ப அடைந்துவிட்டாராம். இப்படிப்பட்டவர்களும் இருக்கிறார்கள்.

இந்த அப்பாவும் கிராமத்து அப்பாதான். ஆனாலும் வெறிபிடித்த அப்பா அல்ல. கோபம் உள்ள அப்பா. மீண்டும் உங்கள் பின்னூட்ட ஊக்கத்துக்கு மிக்க நன்றி கீழைநாடான் அவர்களே.

Keelai Naadaan
10-10-2008, 03:23 PM
மிக்க நன்றி கீழைநாடான். சமீபத்தில் ஒரு செய்தியை படித்தேன். ஓடிப்போன மகளை நான்கு வருடமாகத் தேடிக் கண்டுபிடித்து கொன்றிருக்கிறார் ஒரு கிராமத்து தந்தை. அவளால் போன மானத்தை அவளைக் கொன்றதுமூலம் திரும்ப அடைந்துவிட்டாராம். இப்படிப்பட்டவர்களும் இருக்கிறார்கள்.
நன்றிகள் சிவா அவர்களே.
கதாசிரியர்கள் யதார்த்தங்களை தான் கதைகளில் வடிக்கிறார்கள் எனபதை உறுதிபடுத்திவிட்டீர்கள்.
நம்மால் நம்ப முடியாதது எத்தனையோ நடந்து கொண்டுதானிருக்கிறது.
விளக்கம் தந்தமைக்கு நன்றிகள்.

மகள் ஓடிப்போன பிறகு தற்கொலைக்கு முயற்சி செய்து, பலர் அதை தடுத்து, ஊரெல்லாம் அவமானப்பட்டு, பிறகு அந்த பையனுக்கே கட்டி வைத்த ஒரு அன்பான தந்தையை மனதில் நினைத்து அந்த விமர்சனத்தை எழுதினேன்.

வசீகரன்
11-10-2008, 04:34 AM
ரொம்ப நாளைக்கு பிறகு அண்ணனின் கதையை படித்தேன்..! சில இடங்களில் இதயம் நெகிழ்ந்து விட்டது... கல்கத்தா போகிறோம்... என்று சஞ்சீவ் சொன்னபோது... ஒரு நிமிடம் பயந்தேன்... அவனும் வனிதாவின் கணவன் போலவோ என்று ...!! ஆனால் இறுதிவரை அவன் கதையின் நாயகனாக இருந்தது மகிழ்ச்சி அளித்தது... முடிவு மிக நெகிழ்ச்சியாக இருந்தது... நிறைவையும் தந்தது..
நல்ல படைப்பு சிவாண்ணா.. கதை சொல்லி இருக்கும் விதம் மணிரத்னம் படம்
பார்ப்பது போல் இருந்தது.... அருமை... அருமை...!

சிவா.ஜி
11-10-2008, 05:05 AM
நீண்ட நாளைக்குப் பிறகு வசீகரனின் அன்பான பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி. ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி வசீ.

MURALINITHISH
08-01-2009, 08:07 AM
எப்போதோ படித்த கதை எப்படி பின்னூட்டம் இடாமல் போனேன் என்றே தெரியவில்லை இந்த மாதிரியான ஆண்கள் இருந்தால் பெண்களுக்கு ஏன் கவலை ஆனால் இப்படி ஒரு ஆண் இருக்கவே அந்த மாதிரியான ஆண்கள்தானே காரணமாய் இருக்கிறார்கள்

Mathu
08-01-2009, 08:45 AM
குறுகி விட்ட உலகில் இளையோரின் மன ஒட்டத்துக்கு
புதிய பாதை போட்டிருக்கும் சிவா,
குறுகி இருந்த எம் மன ஒட்டங்கள் இன்றய உலகில் மெல்ல
பரந்து செல்கிறது.
முடிவு இன்னும் உச்சம், எதிர்கால வாழ்வுக்கு கடந்த கால கறை களைவது

சிவா.ஜி
17-01-2009, 08:41 PM
நன்றி முரளி. நீங்கள் சொன்னதைப்போல பல ஆண்கள் அப்படித்தானிருக்கிறார்கள். ஆனால் அவர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதை விட, நல்ல உள்ளம் கொண்டவர்களை வெளிக்காட்டுவதுதானே சிறந்தது.

சிவா.ஜி
17-01-2009, 08:42 PM
குறுகி விட்ட உலகில் இளையோரின் மன ஒட்டத்துக்கு
புதிய பாதை போட்டிருக்கும் சிவா,
குறுகி இருந்த எம் மன ஒட்டங்கள் இன்றய உலகில் மெல்ல
பரந்து செல்கிறது.
முடிவு இன்னும் உச்சம், எதிர்கால வாழ்வுக்கு கடந்த கால கறை களைவது

மன்றத்தின் மூத்த உறுப்பினரின் பாராட்டுக் கிடைத்தது எனது பாக்கியமே. மனம் நிறைந்த நன்றி மது அவர்களே.

இளசு
17-01-2009, 10:12 PM
வாருங்கள் சிவா..

நலமா?

உங்கள் மறுவரவு எதிர்பார்த்திருந்து
மகிழும் ரசிகர்களில் ஒருவன் ..

சிவா.ஜி
17-01-2009, 10:27 PM
மிக்க நலம் இளசு. தினமும் வந்துகொண்டுதானிருக்கிறேன். ஆனால் பதிவிட ஒரு தயக்கம். இன்று அந்த தயக்கம் களைந்தேன். நமது குடும்பத்தில் எதற்குத் தயக்கம்?

தங்களின் அன்பான விசாரிப்புக்கு மனம்நெகிழ்ந்த நன்றி.

இளசு
17-01-2009, 10:33 PM
நமது குடும்பத்தில் எதற்குத் தயக்கம்?



மிகச் சரி சிவா..

இந்த உணர்வு ஒன்றினால்தான், ஒன்றியிருக்கிறோம்..
மன்றம் உயிர்ப்போடிருக்கிறது!

பணி, குடும்பம், நேரிடைவாழ்வு இவை தாண்டி
நேரம் கிடைக்கும்போதெல்லாம் இளைப்பாற, பகிர
இவ்விடம் போல் வேறு எனக்கில்லை..

நீங்களும் என்னைப்போலவே.. சரிதானே சிவா?

சிவா.ஜி
17-01-2009, 10:50 PM
நீங்களும் என்னைப்போலவே.. சரிதானே சிவா?

மிக மிக சரிதான் இளசு.:icon_b:

ரங்கராஜன்
18-01-2009, 06:04 AM
மிக்க நலம் இளசு. தினமும் வந்துகொண்டுதானிருக்கிறேன். ஆனால் பதிவிட ஒரு தயக்கம். இன்று அந்த தயக்கம் களைந்தேன். நமது குடும்பத்தில் எதற்குத் தயக்கம்?

தங்களின் அன்பான விசாரிப்புக்கு மனம்நெகிழ்ந்த நன்றி.

வாங்க வாங்க சிவா அண்ணா
நீங்கள் வந்து (i am back) என்று சொல்வீங்கனு எதிர்பார்த்துக் கொண்டு இருந்தேன், வந்ததில் மனம் மகிழும் உங்கள் தம்பிகளில் ஒருவன்.