PDA

View Full Version : இதுதான் (இதுவும்) காதலா?!!!



poo
04-04-2003, 05:33 PM
அவசர காலை..
அளவில்லா கூட்டம்..அரசுப் பேருந்து..

படியில் பயணம் நொடியில் மரணம்..
விதிப்படி நடந்தால்
விடியலில்தான் கல்லூரி சேர்வேன்..
விதிப்படி நடக்கட்டுமென
வெளியில் தொங்கியபடி..

கையிலே நாட்குறிப்பு-கல்லூரியில்
கவிதை மட்டுமே எழுதுவதால்..

வெளிக்காற்றை சுவாசித்தேன்..
உள்காற்றை வெளியேவிட்டு விடுவோமோவென்ற
உதறலோடு.. விரல்களால் பயணம்..

என் வாழ்க்கை சக்கரத்தின்
தற்போதைய அச்சாணி
ஐந்து விரல்கள் மட்டுமே..

அந்த விரல்களுக்கிடையில்
விவரம் புரியாமல்
விளையாடியபடி நாட்குறிப்பேடு..

விழப்போகும் வினாடியை
வழுக்கி வழுக்கி
விழுங்கிக் கொண்டிருந்தன விரல்கள்..

விடியலாய் ஓர் கை..
வளையல் குலுங்க விரல்களை பற்றியது..

பற்றிய வினாடியில் பற்றிக் கொண்டது-
எனக்குள்ளும்..

என்னவென சொல்லத் தெரியாத வித்தியாச உணர்வுகள்..

அந்த பிடி இறுகியது..

இறுகிய பிடியில்
அவளது இளகிய இதயத்தின்
ஈரம் உணர்ந்தேன்..

வளையல் குலுங்கலில்
அவள் கண்களில் தவழும்
பரிதவிப்பை படமெடுத்தேன்..

அவள் முகம் கொஞ்சமும் பார்க்கவில்லை..
மனம் முழுதும் பார்த்துவிட்டேன்..

அவள் பற்றுதலின் பதற்றத்தில்
என் நெஞ்சம் ஆசுவாசமானது..
உயிரின் விலையறிந்த
அந்த விசுவாசியின்மேல் நேசம்
பற்றிக் கொண்டது..

தீவிரமாய் முயன்றேன்..
அவள் முகத்தை தீண்டமுடியாமல்
திண்டாடின என் தீயான கண்கள்..

அடுத்த ஸ்டாப்பில் பஸ் நின்றது.
என் துடிப்பும்தான் - துணையாய் இருந்த
அவள் கை விவாகரத்து வாங்கிக் கொண்டதால்..

ஏராள கன்னிகள் கலர் கலராய் இறங்கினர்..
ஆனாலும் கன்னியவள் யாரென
கண்டெடுக்க முடியாமல்
கலங்கி நின்றேன்..

கையை மட்டுமே
கடவுச் சொல்லாய் கொண்டு
கண்கள் விசாரித்ததில்
விடை தெரியாமல்
வெடித்து சிதறிய விண்கலமாய் ஆனது நெஞ்சம்..
அவளைக் காணமுடியாமல் கணக்கிலா சோகம்
தஞ்சம்..

அன்று என் சுவாசம் காத்தவள்
என் சுவாசமாய் வந்திடக் கூடாதாவென
இன்றுவரை படியில்தான்
பயணிக்கிறேன்..

உன் தாக்கத்தால் உணர்வுகளில்
உயிரியல் மாற்றம்..
என் மூச்சுக் காற்றே நீ வெளியே வந்தால்தான்
நான் உயிர் வாழ்வேன்!!!..

வினாடியில் வந்த அந்த உணர்வுதான்
காதல் என சொல்லாமல் சொல்லியது
என் உணர்வுச் செல்கள்!!!

இளசு
04-04-2003, 05:58 PM
அந்த விரல்களுக்கிடையில்
விவரம் புரியாமல்
விளையாடியபடி நாட்குறிப்பேடு..








அன்று என் சுவாசம் காத்தவள்
என் சுவாசமாய் வந்திடக் கூடாதாவென
இன்றுவரை படியில்தான்
பயணிக்கிறேன்..

உன் தாக்கத்தால் உணர்வுகளில்
உயிரியல் மாற்றம்..
என் மூச்சுக் காற்றே நீ வெளியே வந்தால்தான்
நான் உயிர் வாழ்வேன்!!!..

!!!



கையெனும் கடவுச்சொல் மீண்டும் கிடைத்து
முகக் கணினி திரை கண்டு
முழுதகவல் அறிந்துவிடு....

உயிரியல் மாற்றம்
மூச்சுக்காற்று வெளிவந்து
வெளிக்காற்று உள் புகுந்து
நல்லபடி நடக்கட்டும்....
நல்லா படி தாண்டி நீ உள்ளே போனபின் நடக்கட்டும்!!

மன்மதன்
23-11-2004, 03:03 PM
கதை மாதிரியே ஒரு கவிதை.. இதமாய் சொன்னது ஒரு புயல்.. அது சரி.. பேருந்துகளில் தொங்குபவர்கள் உயிரை பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை.. ஆனால் பூ கவலைப்பட்டிருக்கிறார்..
அன்புடன்
மன்மதன்

manitha
13-12-2004, 03:13 AM
முத்தான சொற்கள்
தேனினும் இனிய சுவை
பெண்ணின் மனதைப்போன்ற ஆழமான அர்த்தங்கள்

மிகவும் அருமையாக வடித்திருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்...