PDA

View Full Version : சினிமாவின் கண்சிமிட்டலில்…தீபன்
18-09-2008, 06:05 AM
சினிமாவின் கண்சிமிட்டலில்……..

(நீண்டகால சினிமா தடை 1996 இல் எமது பிரதேசத்தில் (யாழ்ப்பாணத்தில்) விலகிய போது பாடசாலை மாணவர்களாயிருந்த எம்மிடையே ஏற்பட்ட சீரழிவைக்குறித்து 12 ஆண்டுகளுக்குமுன் எழுதியது.)

ஆறுவருட கடுந்தளை அறுந்தது-பதி
னாறு வயது பயிர்களில் களை படர்ந்தது!-ஒழுக்
காறு பாய்ந்த விடத்தில் கொலை நிகழ்ந்தது!-அழுக்
காறு கொண்டு மனம் களையிழந்தது!

ஆம்!
சினிமா எனும் சிங்கார சித்திரத்தில்
சிறியோர் முதல் சிந்தனையாளர் வரை சிரத்தை கொண்டார்!
சில மணிநேர சிற்றின்பத்திற்காய்
சிரமிழந்து சிறுமைப்படும் அவஸ்தை கண்டார்!

புற்றீசல் புறப்பட்டது போல், புயற்காற்று வீசியது போல்
பூத்தன பல மனப் புதைகுழிகள்!
மினிசினி பெயரில் பணம் பறி நோக்கில்
தொடங்கின பல மனங்கவர் மன்றங்கள்!

இதனால்,

பாடவேளையில் படம் பார்ப்பதுவும்
படவேளையில கடன் கேட்பதுவும்
இன்று எம் வழக்கமாகிவிட்டது!

வகுப்பறையில் படமோடுவதும்
படமோடுகையில் பாடலிசைப்பதும்
இப்போதெம் பழக்கமாகிவிட்டது!

முன்னர் பக்திப் படம் பின்னர் யுத்தப்படம்
நேற்று காதல்படம் இன்று ஆங்கிலப்படம்
இந்நிலையில் போனால் எம் சிந்தையில்
நாளை என்ன படம்? நாறிடும் எங்கள் நிலம்!

மதியிழந்தது எம் மானிட சமூகம்
மதங்கொண்டது எம் மாணவ சரீரம்
பட்டியும் தொட்டியும் “மினிசினி”சீராய்
பள்ளியும் கல்வியும் ஆனது பாழாய்!

தோழர்களே,
வாழ்விலிணையா வளங்கெட்ட கதைகளை-பலர்
வாழ்க்கைப் பிழைப்பிற்காய் வார்த்தெடுத்த படங்களை
வசந்த கால வாயிலில் நிற்கும் வாலிபர் நாம்
வயங்கெட்டு வண்ணமிழந்து ரசிக்கலாகுமா?

காதலும் மோதலும் சாதலும் தான் சினிமா
காளையர் நாம் கனவுகாண்பது இனியும் சரியா?
கண்ணொப்ப நேரத்தை மின்னொப்ப கடத்தும் வழியா? -நம்
விண்ணொப்ப ஆற்றலை மண்ணுக்குள் ஆழ்த்துவது முறையா?

சினிமா அரக்கனின் இருட்கரங்கள்
சிறிது சிறிதாய் எம்மை சிதைக்கிறது!

விரைவாய் விழிப்போம் -இல்லையேல்
வருங்காலத்தில் முழிப்போம்!:eek:

poornima
18-09-2008, 07:35 AM
சினிமா பற்றிய பாலகுமாரன் கருத்து ஒன்று நினைவாடலில் தீபன்
வாங்குவதற்கென்று நல்லதும் கெட்டதும் கலந்துதான் கிடைக்கும் கடைகளில்
எதை வாங்குவது என்பதை நாம்தான் தீர்மானிக்கவேண்டும்..
பாம்புக்கும் - கீரிக்கும் சண்டைவிடுவதாய் கதைவிடும் கொரளி வித்தைக்காரனை
ரசிப்பதோடு போய்விடவேண்டும்.பின் நின்றால்தான் அவனை தீவிரமாக தொடர்ந்தால்தான் தாயத்து - இரத்தம் கக்கி சாவாய் போன்ற மிரட்டல்களுக்கு
ஆளாக கூடும்..

ஆயிரம் தான் நினைவுபடுத்தினாலும் சினிமா நியாயப்படுத்தக்கூடிய ஒன்றல்ல
என்பதுதான் என் கருத்தும்..ஆனால் சாப்பாட்டில் உப்பு போல் நம் வாழ்வில் இன்றியமையாமல் கலந்துவிட்ட ஒன்று..

அளவோடு இருந்தால் எதுவுமே தப்பில்லை..

தீபன்
19-09-2008, 01:14 AM
சினிமா பற்றிய பாலகுமாரன் கருத்து ஒன்று நினைவாடலில் தீபன்
வாங்குவதற்கென்று நல்லதும் கெட்டதும் கலந்துதான் கிடைக்கும் கடைகளில்
எதை வாங்குவது என்பதை நாம்தான் தீர்மானிக்கவேண்டும்..
பாம்புக்கும் - கீரிக்கும் சண்டைவிடுவதாய் கதைவிடும் கொரளி வித்தைக்காரனை
ரசிப்பதோடு போய்விடவேண்டும்.பின் நின்றால்தான் அவனை தீவிரமாக தொடர்ந்தால்தான் தாயத்து - இரத்தம் கக்கி சாவாய் போன்ற மிரட்டல்களுக்கு
ஆளாக கூடும்..

ஆயிரம் தான் நினைவுபடுத்தினாலும் சினிமா நியாயப்படுத்தக்கூடிய ஒன்றல்ல
என்பதுதான் என் கருத்தும்..ஆனால் சாப்பாட்டில் உப்பு போல் நம் வாழ்வில் இன்றியமையாமல் கலந்துவிட்ட ஒன்று..

அளவோடு இருந்தால் எதுவுமே தப்பில்லை..(நீண்டகால சினிமா தடை 1996 இல் எமது பிரதேசத்தில் (யாழ்ப்பாணத்தில்) விலகிய போது பாடசாலை மாணவர்களாயிருந்த எம்மிடையே ஏற்பட்ட சீரழிவைக்குறித்து 12 ஆண்டுகளுக்குமுன் எழுதியது.)

நிச்சயமாக நான் சினிமாவுக்கு எதிராக எதுவும் சொல்லவில்லை. என் குறிப்பை பாருங்கள்... எந்த பருவத்தினர்க்கு அதை சொல்லியுள்ளேனென... கடையில் நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும். நாம்தான் பார்த்து வாங்க வேண்டுமென்பது விபரம் வந்தவர்களுக்குதான் சரி. விடலை பருவத்தவர்களுக்கில்லை.

நன்றி பூர்ணிமா உங்கள் பின்னூட்டத்திற்கு.

shibly591
20-09-2008, 04:14 AM
தொடருங்கள்...

பழைய கவிதைகள் எழுத்துக்களை படிப்பதும் ஒரு ஆனந்டம்தானே.................

rajatemp
20-09-2008, 04:36 AM
சினிமா என்பதே பொய்யின் ஆரம்பம்

உதாரணத்திற்கு எத்தனை பேருக்கு திருட்டுகாதல் செய்ய தெரியும்
சினிமாவில் வருவதற்கு முன்பு

எத்தனை பேருக்கு சுடிதாரை பற்றி தெரியும்
சினிமாவில் வருவதற்கு முன்பு

எத்தனை பேருக்கு ஜீன்ஸ் பற்றி தெரியும்
சினிமாவில் வருவதற்கு முன்பு

ஒரு நிமிடம் தலையை பிளீச் செய்யும் நடிகனுக்காக காலம் முழுக்க
பிளீச் செய்யும் ரசிகர்கள் இருக்கிறார்கள்

தலையை பிளீச் செய்யும் நடிகன் பொய்
ரசிகன் உண்மை

தீபன்
21-09-2008, 02:19 PM
அந்த நாள் ஞாபம்...நெஞ்சிலே வந்ததே...நண்பனே..!
நன்றிகள்.

நன்றி நண்பரே. மறக்ககூடிய நினைவுகளா அவை....

தொடருங்கள்...

பழைய கவிதைகள் எழுத்துக்களை படிப்பதும் ஒரு ஆனந்டம்தானே.................
ஆமாம், புதிதாக எழுதுவதைவிட பளையவற்றை கிளறுகையில் கிடைப்பது பழையது மட்டுமல்ல... பசுமை நினைவுகளுமல்லவா.. நன்றி ஷிப்லி.

சினிமா என்பதே பொய்யின் ஆரம்பம்

ஒரு நிமிடம் தலையை பிளீச் செய்யும் நடிகனுக்காக காலம் முழுக்க பிளீச் செய்யும் ரசிகர்கள் இருக்கிறார்கள்

என்ன நண்பரே, இவ்வளவு கோபம்... ஆனாலும் நீங்கள் சொல்வது சரிதான். :icon_ush:

இளசு
22-09-2008, 09:39 PM
கதை, இசை, நடிப்பு, சண்டை, ஒளிப்பதிவு, கலை அலங்காரம் - என பலக் கூறுகள் ஒட்டுமொத்தமாய் சங்கமமாகிவிட்ட கதம்பம் - சினிமா..

பலரைப் படைக்கவும், மிகப்பலரை ரசிக்கவும் ஆகர்ஷிக்கும் ராட்சதனாகிவிட்டது சினிமா..

அளவோடு பொழுதுபோக்கவும், தனக்குப் பிடித்த ரசனைகளைச் சாணைபிடிக்கவும்
பூர்ணிமா சுட்டிய பாலகுமாரன் மேற்கோள்போல் -
தேர்ந்து வரையறைத்து நிற்பது நம் கையில்..

அப்படி ஒரு கோடு போட இயலாப் பலரால் -
வான்கோழியை மயிலென எண்ணி மயங்கும் நிலை..

கடந்தகாலச் சுவடு - இக்கவிதை!
எதிர்காலத்திலும் நிகழலாம்.

தனிமனிதர் சிந்தனை வீச்சு மட்டுமே தற்காக்கும்!

கவிதைக்குப் பாராட்டுகள் தீபன்!

தீபன்
23-09-2008, 02:28 AM
நன்றி அண்ணா காத்திரமான உங்கள் பின்னூட்டத்திற்கு.

1991ஆரம்பம் முதல் 1995 இறுதி வரை எமது பிரதேசத்தில் மின்சாரம் இல்லை. மேலும் தென் இந்திய சினிமா பார்ப்பதற்கு தடை இருந்தது. பின் இராணுவ ஆட்சிக்கு கைமாறியபோது திடீரென மின்சார வசதி, பல சுக போகங்கள் ஏற்பட்டன. (மது, சிகரெட் பாவனை, நீலப்பட விவகாரம்...). இளைஞர்கள் இப்படியான வளிகளில் திசைதிரும்பினால் தங்களுக்கு அனுகூலமென ஆட்சிபீடமும் இதை ஊக்குவித்தது.
இரண்டுங் கெட்டான் வயதிலிருந்த பலர் இந்த மோகங்களுக்கு அளவுக்கதிகமாகவே ஆளாயினர்... இல்லாமலிருந்த ஒன்று திடீரென கிடைப்பதானது தொடர்ந்து கிடைக்கும் ஒன்றிலிருந்து எம்மை கட்டுப்படுத்துவதிலும் பார்க்க கொஞ்சம் சிரமமானதுதானே..
அத்தகைய ஒரு சூழ்நிலையில் விழிப்புணர்வுக்காக பள்ளியில் எழுதி வாசித்தது இது. உண்மையில் இங்கு சினிமாவில் எந்த தப்பும் இல்லை. அன்றைய சூழ்நிலை அப்படி.

மறத்தமிழன்
23-09-2008, 08:28 AM
சமாதான காலத்தில் எமது கலாச்சாரம் முற்றாகவே அழிக்கப்பட்டுவிட்டது. படையினரின் தான்தோன்றித்தனமான செயல்களால் குறிப்பாக இளம் மாணவர்கள் பாதிக்கப்பட்டார்கள். அவர்களது நோக்கம் ஏறக்குறைய நிறைவேறிய காலம் அது. அந்த புண்ணியவான்கள் வராவிட்டால் எம்மை அழித்தே இருப்பார்கள். ஊரடங்கு வேளைகளில் சும்மா திரிபவர்களை போட்டு அடித்திருக்கிறார்கள். ஆனால் குடித்துவிட்டு வருபவர்களுக்கு எதுவும் இல்லை. இப்படித்தான் கலாசாரம் வளர்க்கப்பட்டது. நல்லது, கெட்டது என்று தெரியும் வயது அது அல்ல. அதை வென்றவன் முன்னோக்கி போகிறான். தோற்றவன் அழிகிறான். சமூக சூழல் அவனை மாற்றுகிறது. அருமையான கவிதை. உணர்ந்து உருவாக்கப்பட்டது போல. வார்த்தைகளில் அதன் பரிமாணம் தெரிகிறது.

பிச்சி
23-09-2008, 10:09 AM
நானும் பல சினிமா பார்ப்பதே இல்லை. அருமையான் கவிதை அண்ணா

தீபன்
23-09-2008, 11:11 AM
சினிமா ரசனை தப்பில்லை. சினிமா மோகம்தான் தவறு. நன்றி பிச்சி.

அமரன்
26-09-2008, 08:39 AM
சொல்லாட்சி மிக்க கவிதை. அழகு அமைய வேண்டும் என்றால் நீட்டல் மடக்கல் அவசியந்தான். அதுவே அலுப்புத் தட்ட வைக்கும் அபாயமும் உண்டு.

இனத்தின் அடையாளங்களில் கலை கலாச்சாரமும் ஒன்று. சினிமாக்கலை என்று அழைக்க ஏதுவான சினிமாகளும் உண்டு. சினி மாக்களும் உண்டு.

1996 ஆம் ஆண்டுக்கு பிறகு யாழ்ப்பாணத்தில் மலிவாகக் கிடைத்தவை கஞ்சா, ஹெராயின், இரண்டாம் தர சிகரெட்டுகள், திரைப்படங்கள், ஆடைச் செலவு அறவே அற்ற திரைப்படங்கள், போன்றன. இன்னும் பல சபையில் சொல்லத்தகாத விடயங்களும் உள்ளன.

யாழ்ப்பாண தமிழ் மக்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்த ஸ்ரீலங்கா அரசு திட்டமிட்டுச் செய்த இனவழிப்புகளில் இவையும்... இவைகளில் தென்னிந்திய திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம் குறைவென்பேன்..

அங்கிருந்த பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி இரத்தக் கொதிப்பை அதிகரிக்க செய்யும்..

பட்டினி கிடப்பவனுக்கு குப்பைத் தொட்டியில் கிடந்தாலென்ன.. கோயிலில் கிடைத்தாலென்ன.. அப்படியே சாப்பிடுவான்... யாழ்ப்பாணத்தில் நடந்ததும் அதுதான்.

1996 ஆம் ஆண்டுக்கு முன்பும் பின்பும் விரதமிருந்தவர்கள் தப்பித்துக்கொண்டார்கள்.. இல்லையில்லை அவர்களால் தப்பித்துக்கொண்டது தமிழினம்.

யாழ்ப்பாணத்து நிலைமையின் விபரீதம் தீவிரம் அடைந்தபோது வன்னியில் தணிக்கை செய்யப்பட்டு திரைப்படங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மினித்திரையரங்குகள் நிறுவப்பட்டது...

நன்றி தீபன்.

தீபன்
26-09-2008, 03:20 PM
நன்றி அமரன்... என் ஆக்கத்திலிருந்து அன்றைய காலகட்ட சம்பவங்கள் பற்றி ஒரு சிறு ஆய்வுரையையே வழங்கிவிட்டீர்கள்.
உண்மைதான், சினிமாவால் நேரடி தாக்கங்கள் ஏனையவற்றிலும் பார்க்க குறைவுதான். ஆனால் மறைமுகமாகா அதன் தாக்கம் அதிகமே.
இளம்பராயத்தினரின் வ்லிமையான நேரங்களை கறையான்போல் அரிக்கும் விடயம் சினிமா.
பாராட்டுக்களுக்கு நன்றி அமரன்.