PDA

View Full Version : மேன்மை துடிப்புகள்



kulirthazhal
17-09-2008, 02:37 PM
மேன்மை துடிப்புகள்

மூடிய விழிகளுக்குள்
இன்பம் செய்யும்
வண்ணங்கள் போல,

தேடும் பாதையெங்கும்
அழுத்தமின்றி மிதந்துசெல்லும்
வாசம் கொண்ட
காற்றுக்குமிழ் போல்,

எண்ணங்களில் சிக்காத,
சிந்தனையில் உயிர்க்காத,

அனிச்சையாய் சிலநேரம்
அழகான இன்பம் செய்யும்
தவத்தினில் உயிர்ப்புபெரும்
"ஞானத்தின்"
மொழிதேடி....,


மனதிற்கும்,
இறுக்கத்திற்கும்,
ஓர்
உறவை உணர்வதோ
ஞானம்...

எதையும் தேடாமல்
எல்லாவற்றையும்
ஏற்றுக்கொள்வதோ
ஞானம்...

நம்பிக்கைகளை நம்பாமல்
நம்புவதை
நம்பிக்கையாய் கொள்வதோ
ஞானம்...

கர்மத்தில்
கவனம் மிதக்காமல்
கவனத்தை
கர்மமாய் கொள்வதோ
ஞானம்...

வெற்றியென்பதை
புள்ளியாய் புரிந்துகொள்ளாமல்
வாழ்க்கையினை
வெற்றியாய் வழிசெய்வதோ
ஞானம்...

உணர்ச்சிகளுக்கு
உயிரோட்டம் தராமல்
உயிரினை
உணர்ந்துகொள்வதோ
ஞானம்...

அறிவினை
பாதையாய் பார்க்காமல்
ஊர்தியாக்கி
பிரபஞ்சத்தில் படர்வதோ
ஞானம்...

விளைவுகளில்
முடிவுகளை தேடாமல்
முடிவுகளில்
விளைவுகளை பெறுவதோ
ஞானம்...

முடிவுநிலை "ஓய்வு"என்று
சிந்தனை வண்ணம்கொண்டு
கவிதைசெய்த ஓவியத்திற்கு
ஓய்வு தருவதோ
ஞானம்.....,

-குளிர்தழல்.

பிச்சி
26-09-2008, 12:51 PM
ஆஹா அண்ணா. அழகு அழகு.. ஞான வரையறை மிக்க அழகு.

அன்புடன்
பிச்சி