PDA

View Full Version : ஆச்சி சொல்லாத கதை



நதி
14-09-2008, 06:36 PM
எனது கிராமத்தை துண்டாக்கி தார் ரோடு போகும். ரோட்டுக்கு அந்தப்பக்கம் தோட்டக்காணிகள் அதிகம். இந்தப்பக்கம் குடிமனை செறிந்திருக்கும். குடியானவர்களில் முக்கால்வாசிப்பேர் வேளாண்மையாளர்கள். சின்ன வெங்காயம் பெரும்போகமாகவும் தக்காளி, மிளகாய், இராசவள்ளி, மரவள்ளி, கத்தரி என காய்கறிகள் சிறுபோகமாகவும் செய்கை செய்யப்படும். எங்களைப் பொறுத்தமட்டில் வெங்காயம் பணப்பயிர்.

பங்குனி மாதம் என்றாலே வீட்டுக்கு வீடு வெஞ்காயப் பூ வறை கமகமக்கும். வெங்காயப்பூ மட்டுமல்லாமல் கிளப்பி வெச்ச ஈர வெங்காய நெடியில் ஊர் தினமும் குளிக்கும். உதிர்ந்த வெங்காயச் சருகுகள் காற்றினால் மீட்டப்பட்டு பரவும் சங்கீதம் பரவசம் தரும்..
எல்லாவற்றையும் அனுபவித்தபடி வெங்காய வெக்கையில் வேர்த்து விறுவிறுத்து வால் வெட்டி வெங்காயத்தை அழகுபடுத்துவார்கள் பெண்கள். அழகுபடுத்திய வெங்காயங்களை காற்றுப் போகக்கூடிய மூட்டைகளில் அடைத்து, அடுக்கி, குறிப்பிட்ட நாளில் கொழும்பிக்குப் போகும் லொறிகளில் ஏற்றி அனுப்புவர் ஆண்கள். கொழும்பிலுள்ள கொள்வனவாளர்கள் பெரிய சிட்டையில் சரைபண்ணிக் கொடுத்தனுப்பும் புத்தம்புதிய நோட்டு எங்கள் கைகளில் வந்துசேரவும் சித்திரை பிறக்கவும் சரியாக இருக்கும்.

புத்தாண்டுக் கொண்டாட்டம் முடிந்த கையோடு எங்கூர்க் குலசாமியான கண்ணகை அம்மனுக்கு திருவிழா தொடங்கும். முதலாம் நாளான முதல் மடை சின்னப் படையலுடன் தொடங்கும். அடுத்து வரும் ஆறு நாட்கள் வெறும் பூசைதான். ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் திருவிழா களைகட்டி இருக்கும். அக்கம் பக்கம் இருக்கும் நாலைந்து வீடுகள் சேர்ந்து பலகாரச் சூட்டில் தூள் பரத்துவார்கள். சூடான* வம்பு தும்புகள் செட்டைக் கட்டிப்பறக்கும்.. அவற்றை ஒற்றைக் காதால் சுவைத்தபடி அக்மார்க் கிராமத்து இரட்டை அர்த்த பகிடிகளை அள்ளி விடுங்கள் ஆண்சாதிப் பெருசுகள். அதை பொறுக்க நசிந்து நசிந்து ஆங்காங்கே மறைந்திருக்கும் பொடிசுகளின் காதைத் திருகி அவர்களை கலைப்பார்கள்.

இரவு பகல் என்ற வித்தியாசம் இல்லாமல் நடக்கும் இந்த தடல் புடல்களில் சில பல காதல்கள் அரும்புவதும், தடம் மாறுவதும், தடம் பிசகுவதும் நடக்கும். அதிலும் விடலைகள் பாடு சொல்லி மாளாது. கொஞ்சும் அழகான கொஞ்சம் படித்த வேறிடத்திலிருந்து மடைக்காக வந்த சொந்தங்களில் மச்சாள்மார் இருந்து விட்டால்... ஏற்கனவே லொறி ரைவர்களிடம் சொல்லிவிச்சு வாங்கிய கொழும்புச் சட்டையை போட்டு, மட்டமான சென்டை அடித்து, அவர்கள் பார்வையில் படும் விதமாக நடந்து, என்னமோ மடையே தன் தலையில்தான் என்னும்படியாக செய்யும் அலப்பறை இருக்கே. அப்பப்பா! வடிக்க வார்த்தைகள் கிடையாது.

அவனுகளைப் பார்க்க என்றே வந்து, அதை வெளிக்காட்டாமல் மடைப் படையல் சமைக்க ஒத்தாசை செய்வதாக பாவ்லா காட்டிக்கொண்டு கடைக்கண்ணால் மச்சானை மேஞ்சபடி அந்த மைனாக்களும் மடைக்கு அழகு சேர்க்கும். நீட்டி முழக்கி கொக்கி போடும் சாடைப் பேச்சுகளால் இருவரும் நெருங்கி ஜோடி அமைத்து கிடைக்கும் இடைவெளியில் சாமான்கள் எடுக்கப் போகும் மறைவுகளில் கிராமத்து மணம் கமழும் காதல் குறும்புகளை கட்டவிழ்த்து விடுவார்கள். அதைப் பாக்குறதுக்காகவே கண்கொத்திப் பாம்பாக கூட்டளிக்குள் சாடையால் பேசிக்கொண்டு தமது ஜாகை பார்க்கும் பொடிசுகள். ஒவ்வொன்றும் கோடி கவிதைகள் எழுதும்.

எங்கள் வீட்டிலும் இதே களேபரங்கள்தான்.. கூடுதலாக எங்கள் ஆச்சி. கால்களின் இயக்கம் நின்று விட கட்டிலிலேயே குடித்தனம் செய்வாள். எங்கள் வீட்டில் எல்லாருக்கும் அவள் மேல் பாசம் அதிகம். ஆனாலும் சிலவேளைகளில் ஆச்சியின் வாய் அடைபட்டிருக்கலாம் என்று எண்ணம் வெளிப்படுத்துவார்கள். அந்தளவுக்கு பினாத்துவாள். ஆச்சியும் பாவம். முதலாவது பேரனிலிருந்து பன்னிரண்டாவது பேரன்வரை கதை சொல்லி, பாட்டுப்பாடியும் ஓயாமல் நாலாவது கொள்ளுப் பேரனான எனக்கும் கதை சொல்லி பாட்டுப் பாட்டியவள். அவளால் எப்படி கதைக்காமல் இருக்க முடியும்.

மடைக்காலம் தொடங்கினால் அவளுடைய புலம்பலும் அதிகரிக்க தொடங்கி விடும். வேறெதுக்காகவோ அவள் இருக்கும் பக்கம் யாரும் போனால் "இப்படித்தான்.. அப்பு இருக்கேக்க" என்று அவள் ஆரம்பித்தால் அடுத்த கணம் அங்கே யாரும் இருக்க மாட்டார்கள். நான் கூட அப்படித்தான். இந்தளவுக்கும் மற்றவர்களை விட அவளுக்கு என்மேலும் எனக்கு அவள் மேலும் கொள்ளைப் பாசம். அவளது அலட்டல்களை எல்லாம் கதை கேட்பது போல ம் கொட்டிக் கேப்பேன். ம் கொட்டாவிட்டாலும், வேறெங்காவது பார்க்கும் போதும் நாடியைப் (மோவாயை) பிடித்து திருப்புவாள். அவளாக நீ போய்ப் படிடா, விளையாடடா என்று சொல்லும் வரை கேட்பேன். ஆனால் மடைக்காலத்தில் மட்டும் அவள் சொல்லும் அப்புவின் கதையை கேட்பதே இல்லை. அவளும் மடைக்காலம் முடிந்த பிறகு அந்தக் கதையை எடுப்பதே இல்லை.

ஊரை விட்டு வெளியேறும் கடைசி வருட மடைமலர்க் காலம் வழக்கம் போலவே மலர்ந்தது. எட்டாம் நாள் மடைய*ன்று கண்ணகை அம்மன் கோவில் முன்றலில் மிக நீண்ட மடை. பால் ரொட்டி, பயிற்றம் பணியாரம், சீனி அரிதரம் என வகை வகையான பலகாரங்கள். மா, வாழை, பலா, மாதுளை, கொய்யா என ரக ரகமான பழங்கள். எல்லாத்துக்கும் மேலாக கோயிலேலேயே அடுப்பு மூட்டி சமைத்த சோறும் கறிகளும். கற்பூரச்சட்டிகள் எரிந்து மணத்தையும் கரும்புகையையும் காற்றில் கலந்தது. உடுக்கும் பறையும் ஒத்திசைத்து ஆட்டம் போட வைத்தது. உருவேறிய ஆடவரும் மங்கையும் சாமியாடினர். இதெஇ எல்லாம் இரசிக்கும் நிலையில் நான் இல்லை.

என்னோட்ட பெடியளுடன் விளையாடிக்கொண்டு, என் ஜாரிப் பெட்டை ஒன்றை சைட் அடித்துக்கொண்டிருந்தேன். அப்போது எல்லாம் முடிந்து எல்லாரும் கூடியிருந்து சாப்பிட்டனர். சின்னப் பையன் என்னை ஆச்சிக்கு சாப்பாடு கொடுக்க அனுப்பினர். என் வேலையைக் குழப்பியதில் செம கோபம் எனக்கு. மனதுக்குள் கண்டபடி கெட்டவார்தைகளால் திட்டியபடி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க வீட்டை போனேன். ஆச்சி சாப்பிடும் வரைக்கும் இருந்துட்டி வா என்ற கட்டளை வேற கடுப்பாக்கியது. "இனி இந்த மனுசி வேற இப்படித்தான் அப்பு இருக்கேக்க என்று அலட்டும்" எனச் சினந்தபடி ஆச்சிக்குப் பக்கத்தில் சாப்பாட்டை வைச்சுட்டு தண்ணி எடுக்கப் அடுப்படிக்குப் போனேன். எடுத்துக்கொண்டு வந்து விட்டு ஆச்சியை தட்டி எழும்பினேன். கன தரம் தட்டியும் ஆச்சி எழும்பவே இல்லை.

இளசு
14-09-2008, 09:57 PM
பாராட்டுகள் ரவுத்திரன்..

கிராமம், அதன் மனிதர்கள், அவர்களின் இன்ப-துன்பங்கள், தினசரி- திருவிழாக் காட்சிகள் என..
விவரணத்தில் நுணுக்கமும் ரசனையுமாய் அசத்திவிட்டீர்கள்.

இன்னொசன்ஸ் எனப்படும் அந்த '' பால்மனம்'' எப்போது நாம் இழக்கிறோம்?
அதை இழந்து எதை எதை எல்லாம் இழக்கிறோம்/பெறுகிறோம்?

டீன் ஏஜ் எனப்படும் அந்த துன்பமான இன்பப் பருவத்தைக் கடந்து வந்த
நம் எல்லாருக்குமே இப்படியான சம்மட்டி அனுபவங்கள் இருக்கும்!

அதில் ஒன்றை நேர்த்தியாய்ப் பதிவு செய்த வளமைக்கு வாழ்த்துகள்!

பாரதி
14-09-2008, 10:38 PM
யாழ்த்தமிழின் இனிமையை இங்கே காண முடிந்தது.

கிராமங்களில் விழாக்காலங்களில் நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் எல்லா இடத்திலும் ஒன்றுதான் போலும்!

விரும்பாத போது இருப்பதும், விரும்பும் போது இல்லாததும் துக்கத்தை அதிகப்படுத்தக்கூடிய ஒன்றுதான்.

mukilan
15-09-2008, 12:18 AM
பாராட்டுக்கள் ரவுத்திரன். கோபமான பெயரைக் கொண்ட நீங்கள் நெகிழவைக்கும் கதை படைத்த விதம் அழகு.

வெங்காயம் விற்றுப் புதுப்பணத்தை வாங்கி, ஊர் கூடி சித்திரையில் சிறப்பு செய்யும் அந்த திருவிழா எனக்கும் என் கிராமத்து மண்ணை நினைவு படுத்தியது. என்ன வெங்காயத்திற்கு பதிலாக மிளகாய்தான் எங்கள் பணப்பயிர். கிராமத்து மக்களுக்கேயுரிய அந்த வெகுளித்தனமான சந்தோஷத்தை வெளிபடுத்திய விதம் அழகு.

ஈழத்தில் செய்யப்படும் தி்ன்பண்டங்கள் பெயர் கொடுத்ததற்கு நன்றி.