PDA

View Full Version : மனித சோதனை



kulirthazhal
14-09-2008, 11:38 AM
மனித சோதனை

எத்தனை நிகழ்வுகள்
என்னை
தொட்டுச்சென்றாலும்,
எத்தனை அதிர்வுகள்
என்னை
அசைத்துப்பார்த்தாலும்,
எத்தனை உறவுகள்
என்னை
மோதிக்கடந்தாலும்,
என் இருக்கையின்மேல்
படரும் உலகினில்
ஒரு
உணர்ச்சிகள் இயலாத
பொம்மை..,

தேவைகள்
கைக்கிட்டியும்
புன்னகை பூவாத,
இழப்புகள்
கட்டியணைத்தும்
கண்ணீர் மலராத
மாமிசமாய்.....,

புகழும்,
கெளரவமும்,
கல்லரைச்சுவற்றில்
காற்றிற்கு இடம்கொடாத
சுண்ணாம்புப்பூச்சு,
உணர்ச்சிகளுக்கான
அலங்கார சவப்பெட்டி..,

மனமின்னல் கீற்றுகளில்
கருதரித்து
பிரபஞ்சம்வரை படரும்
சிரிப்பினை தராத
இறைவனை வேண்டித் தோற்றேன்,

கடைநுனி நரம்புவரை
போர்செய்யும் குருதியை
கசக்கி
கண்ணீராய் செய்யும்
சாத்தானே,
நீயேனும்
என்னை சேர்.,
என்
மனிதத்தை
சோதிக்க வேண்டும்..,

-குளிர்தழல்.

(உயர் பதவிகளில் சிக்கிக்கொண்டு மனிதத்தை மறந்துபோன பெரிய மனிதர்களின் உள்மனங்களின் புலம்பல்...)

இளசு
14-09-2008, 10:27 PM
வழிகாட்டும் துருவநட்சத்திரங்களுக்கு சில விதிகள் உண்டு..
சில இழப்புகள் இல்லாமல் இவ்வகைச் சிறப்புகள் இல்லை!

ஊர் - உலக நன்மைக்காக,
ஏற்றக் கடமை தந்த பாரங்களால்
சிரிக்க மறந்த உள்ளங்களுக்கு
சாமான்யனின் வந்தனைகள்!


குளிர்தழலின் கவிதைக்குப் பாராட்டுகள்..
புதிய தளங்களில், புதியக் கட்டமைப்பில் சஞ்சரிக்கும் உங்கள்
படைப்புகள் வசீகரிக்கின்றன.. வாழ்த்துகள்!