PDA

View Full Version : அன்றும்..தீபா
12-09-2008, 04:52 AM
எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே அப்பா ஒரு மனநோயாளிதான். மனநோய் என்றாலே எப்போதும் சிரித்துக்கொண்டும், தலையை சொரிந்து கொண்டும் இருப்பதாக ஒவ்வொருவருடைய மனதிலும் சித்தரிக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் எனக்கு அப்படியல்ல. அப்பா ஏதாவது ஒரு சிந்தனையில் மூழ்கியிருப்பார். நெடுநேரமாக அவர் என்னதான் சிந்திக்கிறார் என்பது தெரியாது. பெரும்பாலும் தலையைத் தூக்கியவாறே அமர்ந்திருப்பார். அவ்வளவாகப் பேசமாட்டார். பேசினாலும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் முட்டி மோதி வெளியே வரும். அவருக்கு என்னையையும் என் தங்கையையும் தெரியுமா என்பது கூட எனக்குத் தெரியாது. எங்களைக் கண்டு ஒரு சிறு புன்னகை கூட அவர் மலரச்செய்தது கிடையாது. தானுண்டு தன் இருப்பிடமுண்டு என்று ஓரிடத்திலேயே அடங்கி ஒடுங்கி அமர்ந்திருப்பார்.

பல நாட்கள் அம்மாவிடம் கேட்டிருக்கிறேன். அப்பாவுக்கு எப்படி பைத்தியம் பிடித்தது என்று. ஒவ்வொரு முறை கேட்கும்போதெல்லாம் அம்மா அழுவாளேயொழிய பதில் வராது. சரி சொல்லும்போது சொல்லட்டும் என்று பேசாமல் விட்டுவிடுவேன். ஏதோ ஒரு காரணம் இருக்கக் கூடும். ஆனால் அது என்ன என்று எனது இத்தனை வயது வரைக்கும் என்னால் அறியமுடியவில்லை. என்னைக்கேட்டால் இவர்கள் இருவருக்குள்ளும் ஏதாவது ஒரு பெரும் நிகழ்ச்சியோ, சண்டையோ நடந்து அதன் காரணமாக அப்பாவுக்கு மனநோய் பீடித்திருக்கலாம். எங்கள் சிறுவயதில் நடந்த நிகழ்ச்சியாக இருக்கலாம். அதனால்தான் எங்களுக்குத் தெரியவில்லை. அல்லது வேறெந்த காரணம் என்றும் தெரியவில்லை.

அப்பாவை மனநோய் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் இல்லை. அந்த சமயங்களிலெல்லாம் அம்மா எங்களுடன் வரமாட்டார். அழுதுகொண்டே வீட்டில் அமர்ந்துவிடுவார். மருத்துவர்களும் சில மாத்திரைகள் கொடுத்து அனுப்பிவிடுவார்கள். யாரிடமும் எந்த வம்பும் அவர் வைத்துக் கொள்வதில்லை என்பதால் ஒரு சாத்வீக நோயாளி என்று அடிக்கடி சொல்வார். தினமும் நான் அவரை வாக்கிங் அழைத்துச் செல்வேன். எந்தவித எதிர்ப்பும் இன்றி கிளம்புவார். வாசல் வந்ததும் சாலையைப் பார்த்து வெறித்தவாறு நிற்பார். வாகனங்கள் சென்றால் முறைத்துப் பார்ப்பார். எனக்கு முன்போ பின்போ குழந்தை பிறந்து அது, விளையாடிக்கொண்டிருக்கும்போது வாகனங்களில் அடிபட்டு இறந்திருக்குமோ என்று சிலசமயங்களில் எனக்குத் தோன்றும். சிறிது தூரம் நடந்த பிறகு அவருக்குக் கால் வலிக்கும். ஆனால் அதை சொல்லமாட்டார். அல்லது சொல்லத் தெரியாதோ என்னவோ. அவரது முகமெல்லாம் கடுகடுத்துப் போயிருக்கும். சிறிது நேரம் அமர்ந்துவிட்டு மீண்டும் நடப்போம். அவருக்குப் பல் தேய்ப்பதிலிருந்து மலம்கழிப்பதுவரையிலும் அம்மாதான் செய்வாள். கொஞ்சம் கூட முகம் சுழிக்க மாட்டாள். எனக்கு அப்படியெல்லாம் செய்யமுடியாதப்பா. என்னதான் மகன் என்றாலும் மனைவியைப் போல் வராது இல்லையா?

சில சமயங்களில் அப்பாவைப் பார்க்க வெறுப்பாக இருக்கும். இவர் ஏன் பிறந்து தொலைந்தார்? எதனால் இப்படி ஆனார்? நினைத்துப் பார்க்கும்போதெல்லாம் எரிச்சல் கிளம்பும். அதிலும் அவர் பேசாதவரையிலும் எந்த பிரச்சனை இல்லை. பேச ஆரம்பித்தால் வாய் குழறும். வார்த்தைகள் ஒன்றோடொன்று ஒட்டி புதிய மொழியில் பேசுகிறாரோ என்று ஐயப்பட வைக்கும். அந்த சமயங்களில் என்னதான் சொல்லவருகிறார் என்று தெரியாமல் எல்லாருமே முழிப்போம். சிறிதுநேரத்தில் அவர் பேசுவதை விடுத்து, மூலையில் அமர்ந்து விட்டத்தைப் பார்ப்பார்.. சிலசமயங்களில் அம்மா "இவர் பெரிய ஞானி, விட்டத்தைப் பார்த்து அப்படியே சாதிச்சுட்டாரு பாரு " என்று எரிச்சலோடு கூறுவார். அவர் சொல்வது நியாயம் தானோ என்று எனக்கும் தோன்றும்.

கொஞ்ச நாட்களிலெல்லாம் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. படுக்கையிலேயே கிடந்தார். இருவரையும் என் தங்கையே கவனித்து வந்தாள். நான்கூட அம்மாவை சிலசமயம் கவனிப்பேன். ஆனால் இதுநாள் வரையிலும் அப்பாவை வாக்கிங் தவிர வேறெப்போதும் சீண்டியதில்லை. அம்மா தன் அந்திமக்காலம் நெருங்கிவிட்டதை உணர்ந்தாரோ என்னவோ, இறுதிக் காலத்தில் அப்பாவை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள் என்று மட்டும் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார். தன் கணவன் மீது இத்தனை பாசமும் காதலும் வைத்திருக்கும் ஒரு மனைவியை நான் கண்டதில்லை. எனக்குத் தெரிந்து சுமார் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் சுயநினைவோடு இருவரும் வாழ்ந்திருக்கலாம். அந்த காலகட்டத்தில் எத்தனை காதல் அவர் செலுத்தியிருக்கக்கூடும்? அந்த அன்பின் விளைவினால் மூன்று வருட பந்தம் இந்த முப்பது வருடம் வரையிலும் சுளிப்பின்றி தொடருமா? நினைக்க நினைக்க ஆச்சரியம் தான்.

அம்மா இறந்துவிட்டாள். இறந்த சடலம் சுற்றியும் அழுதபடி பெண்கள். ஆனால் அப்பா மட்டும் இன்னும் விட்டத்தைப் பார்த்தவாரே திண்ணையில் அமர்ந்திருந்தார். எனக்கு சரியான கோபம். நேரே அவரிடம் சென்று சட்டையைக் குலுக்கி அழுதேன். கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்தேன். அவர் பதிலுக்கு எதுவும் சொல்லவில்லை. அவரிடம் பேசுவது வீண் என்று தெரிந்த சிலர் என்னை அவரிடமிருந்து விலக்கினார்கள். அம்மாவின் சடலத்தை எரித்துவிட்டு வீடு திரும்பினோம். அப்போதும் அப்பா அப்படியேதான் அமர்ந்திருந்தார். அம்மாவின் இறப்பிலாவது அவர் தெளிவடைவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது ஆனால் அது தவிடுபொடியாகும்படி எந்த சொரணையுமின்றி அமர்ந்திருந்தார். அவரை ஒரு பூச்சியைப் போல பார்த்துவிட்டு வீட்டுக்குள் சென்றேன். கரிநாள் முடிந்து வந்த உறவினர்கள் எல்லாம் அவரவர் வீடு திரும்பினார்கள். துக்க சோகத்திலும் என் தங்கை அப்பாவைக் கவனிக்க மறுக்கவில்லை. அத்தனை உறவினர்கள் மத்தியிலும் அவருக்கு மலம் கழுவி விடுவதாகட்டும், மூத்திரம் பெய்ய அழைத்துச் செல்வதாகட்டும், என் அம்மாவைப் போலவே சுளிப்பின்றி செய்தாள்.

மறுநாள் எப்போதும்போல அவரை வாக்கிங் அழைத்துச் செல்ல ஆயத்தமானேன்.

தீபன்
12-09-2008, 06:16 AM
தென்றல் தொடர்ந்து வீசுகிறது... மீண்டும் அதே பாணியில் ஒரு விவரணம். ஆனால் இம்முறை கருவில் அழுத்தம் காணாததுபோலொரு உணர்வு..! கதை சொல்லும் விதம் சிறப்பாக இருந்தாலும் சொல்லும் விடையத்தை இன்னும் ஆழமாக்கியிருக்கலாமோ...?
முடிவற்ற தன்மை தொனிக்கும் கதைக்கு ஒரு முடிவையும் சொல்லி முற்றுப்புள்ளி வைத்திருந்தால் இன்னும் சிறப்பாயிருந்திருக்கும்.
வீசட்டும் தென்றல் தொடர்ந்து....
பாராட்டுக்கள்.

தீபா
12-09-2008, 06:31 AM
தென்றல் தொடர்ந்து வீசுகிறது... மீண்டும் அதே பாணியில் ஒரு விவரணம். ஆனால் இம்முறை கருவில் அழுத்தம் காணாததுபோலொரு உணர்வு..! கதை சொல்லும் விதம் சிறப்பாக இருந்தாலும் சொல்லும் விடையத்தை இன்னும் ஆழமாக்கியிருக்கலாமோ...?
முடிவற்ற தன்மை தொனிக்கும் கதைக்கு ஒரு முடிவையும் சொல்லி முற்றுப்புள்ளி வைத்திருந்தால் இன்னும் சிறப்பாயிருந்திருக்கும்.
வீசட்டும் தென்றல் தொடர்ந்து....
பாராட்டுக்கள்.

மிக்க நன்றி திரு.தீபன். கதைக்கான ஆழம் வரை இன்றுவரையிலும் எந்த படைப்பும் படைத்ததில்லை. அந்த வகையில் இதுவும் ஒரு படைப்பே! அவ்வளவுதான்.

முடிவற்ற தன்மைதான் இக்கதைக்கான முடிவு... இயல்பாக சென்றுகொண்டிருக்கும் நீரில் ஒருகையளவு எடுப்பது போல, வாழ்க்கையின் ஒருபகுதியைமட்டுமே கொடுத்திருக்கிறேன். மனநோய் எந்த சூழ்நிலையிலும் தீரப்போவதில்லை.. ஆனால் அதற்காக அப்பாவை விட்டுவிடவும் முடியாது. மீண்டும் வேலைகள் தொடர்கின்றன. ஏனெனில் இக்கதையில் நம்மை அறியாமலே ஒரு பாசம் இழைந்தோடும்.

இந்த பாசம் குறித்து வேறொரு கதை எழுதி வைத்திருக்கிறேன். ஒரிருநாட்களில் தருகிறேன்...

நன்றி திரு.தீபன்

தீபன்
12-09-2008, 06:51 AM
நல்லது. முடிவற்ற நிலையையே முடிவாக சொல்லும் உத்தி கதைகளில் கையாளப்படுவதுதான். அது வாசிப்பவரின் சிந்தனைக்கு முடிவை விட்டுவிடும் போக்கு. ஆனால் இக் கதையில் முடிவற்ற நிலையென நான் சொல்வது அத்தகையதல்ல... நீங்கள் சொன்னதுபோல் ஓடும் நீரில் ஒரு கை அள்ளியதுபோல்தான்... ஆனால் அந்த கை அள்ளப்பட என்ன காரணம் என்பது படிப்பவருக்கு ஏதாவதொரு வகையில் புலப்படுத்தப்பட்டிருந்தால் கதை பூரணமடைந்திருக்குமென்பதையே சொல்ல வந்தேன்.
விரைவில் அடுத்த கதையை வீசுங்கள்.

(அப்பாடா... பெரியவர் என்ற நிலையிலிருந்து திரு வரைக்கும் வந்தாச்சு... )

Keelai Naadaan
15-09-2008, 03:26 PM
மீண்டும் ஒரு அருமையான கதையை தந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்
உடலுக்கு முன் புத்தி மரித்தல், சிலரது வாழ்வில் நிகழ்ந்து விடுகிறது. அந்த வலியை உனர்த்தும் கதை.
மனைவி இருக்கும் வரை தான், தன் வேலைகளை செய்ய இயலாத மனிதனுக்கு மதிப்பு.

பென்ஸ்
16-09-2008, 01:32 AM
உடலுக்கு முன் புத்தி மரித்தல், சிலரது வாழ்வில் நிகழ்ந்து விடுகிறது

இதைதான் நானும் சொல்லியிருப்பேன்.

கதையை வாசிக்க வாசிக்க என்ன முடிவோ... என்ன முடிவோ... என்று முடிவேயில்லாத முடிவை தேடுபவர்கள் மத்தியில் நானும்...

தென்றல்.. அடுத்தடுத்து இரண்டு கதைகள் ஒரே வகையில் தெரிகிறதே...