PDA

View Full Version : நிறம் மாறிய பூக்கள் - V



மதி
08-09-2008, 03:37 PM
“எப்படிடா வெட்கங்கெட்டுப் போய் அவ வீட்டுல உன்னால தின்ன முடிஞ்சுது? அந்த ஊரில நல்ல சாப்பாடு கிடைக்காதுன்னா நாக்க தொங்கப் போட்டுட்டு திங்க போய்டுவியோ?”

எதிர்பார்த்தது தான் என்றாலும் சற்றே அதிர்ந்து தான் போனேன். நல்ல நாள் அதுவுமா காலையிலே அர்ச்சனை. அதுவும் அப்பாவிடமிருந்து.

நான் விக்னேஷ். இருப்பத்தேழு வயது நிரம்பிய இளைஞன். ஆண்களுக்கே உரிய கம்பீரமான உருவம். முரட்டுத் தோள்கள். தினமும் காலை ஒரு மணிநேரத்துக்கும் மேலாக உடற்பயிற்சி நிலையம் சென்று கிண்ணென்று வைத்திருந்த உடம்பு. பரந்த மார்பு. விரிந்த தோள்கள். பார்க்கும் பெண்களின் கண்களை விட்டு அகல மறுப்பவன். கடந்த சில மாதங்களாக ரொம்பவே முயற்சி செய்து ஆறு பேக்குகளை வயிற்றில் தாங்குபவன்.

கட்டை பிரம்மச்சாரி. நண்பர்களுடன் சேர்ந்து தங்கியிருக்கிறேன். நான் தான் இப்போது திட்டு வாங்கியிருக்கிறேன். அதுவும் அப்பாவிடம்.
ஒரு நிமிஷம். அதிகமா கற்பனையெல்லாம் பண்ணிக்காதீங்க. நீங்க நினைக்கற மாதிரி நான் இந்தக் கதையின் கதாநாயகன் இல்லை.

நாளை நல்ல முகுர்த்த நாள். ஏற்கனவே தோழி ஒருத்தியின் கல்யாணத்திற்கு செல்ல வேண்டும். எட்டு ஒன்பதுக்கு கல்யாணம். போகவில்லையென்றால் பின்னி எடுத்துவிடுவாள். பெங்களூர் வந்தபிறகு தோழின்னு சொல்லிக்கறது அவள் ஒருத்தியை மட்டும் தான். போனில் பேச ஆரம்பித்தால் அவள் காதல் கதை புராணம் கேட்கவே சரியா இருக்கும். அப்பாடா.. ஒருவழியா அவள் அவன்கிட்ட காதலை சொல்லி இதோ அவள் திருமணம். ஒருவிதத்துல ரொம்பவே நிம்மதியா இருந்தது. இனி அவள் புலம்பலைக் கேட்கவேண்டாமே. இதைப் படித்தால் கோவித்துக் கொள்ளப் போகிறாள்.

அப்போது தானா அது நடக்க வேண்டும். இரவு தேன்மொழியிடமிருந்து போன். இதுவரை போன் பண்ணாதவள் எதற்கு இப்போது போன் செய்கிறாள். தேன்மொழி எனது இரண்டாவது பெரியம்மா மகள். சமீபத்தில் தான் திருமணமாகி இருந்தது.

என்னுடன் தங்கியிருந்த மற்றொரு பெரியம்மா மகன் கணேஷ் சொல்லித் தான் அவளும் அவர்கள் இருக்கும் பகுதியிலேயே வீடு பார்த்திருக்கிறாள் என்று தெரியும். அந்தளவுக்கு நெருங்கிய சொந்தங்கள் நாங்கள். அவள் திருமணத்திற்கும் நான் போகவில்லை. அவள் என்னைக் கூப்பிடாததும் ஒரு காரணம். அவளது நம்பரை சேமிக்காததால் யாருடைய நம்பர் என்று தெரியாமல் எடுத்துவிட்டேன்.

“விக்னேஷ், நான் தேன் பேசறேன்”

அவள் குரல் கேட்டு வருடங்களாயிருந்தது. அதே குரல். அவளா இப்படி மாறினாள்?

“ம்ம்..”

“நாளைக்கு வீட்ல நாங்க பால் காய்ச்சறோம். நீ இருக்கற ஏரியாவுல தான். காலைல அஞ்சு மணிக்கு. அம்மாவும் மாமாவும் வந்திருக்காங்க. கணேஷ் கூட மாமா அங்க வந்துட்டு இருக்கார். முடிஞ்சா வந்துடு”
“சரி. முடிஞ்சா வந்துடறேன்”

ஆயிரம் கோபங்கள் இருந்தாலும் அடக்கிக் கொண்டு என்னிடமிருந்து பதில் வந்தது. கொஞ்ச நேரத்தில் மாமா கணேஷுடன் வந்தார். மூவரும் சேர்ந்து இரவு உணவை முடிக்க சென்றனர். அப்போது மாமா,

“தம்பி.. தேன் போன் பண்ணிருந்தாளாப்பா..?”

“ஆமா..மாமா”

“என்ன சொன்னா…?”

“முடிஞ்சா நாளைக்கு வர சொன்னா…”

“அடிப்பாவி.. இதுலேயும் பொடி வச்சு தான் பேசறாளா? ம்ம்.. நடத்தட்டும். தாய் மாமனா இல்லாட்டியும் ஒரு தம்பியா என் அக்காவுக்காக தான் நான் இங்க வந்தேன்”

அவர் குரலில் ஏகத்துக்கும் வருத்தம். இதையெல்லாம் மீறி ஏனோ அடுத்த நாள் எனக்குத் தோன்றியது. அவள் வீட்டுக்குப் போய் பார்த்தாலென்ன.

காலையில் கிளம்பிய கணேஷிடம்

“இருடா. நானும் வர்றேன்.”

ஆச்சர்யமாய் பார்த்தான் கணேஷ். “நீயுமா?...சரி வா”

எனக்கும் ஆச்சர்யம் தான். எப்படி நான் போனேன்.

வீடு பெரியதாய் இருந்தது. பெரியம்மா இருவரையும் வரவேற்றாள். தேன் வந்து”வாடா” என்றாள். அவள் முகத்தைக் கூட பார்க்காமல் மற்றவர்களை கவனிக்கலானேன். மாமாவுடன் பேசிக் கொண்டிருக்கையில் அவர் வந்தார். அக்காவின் கணவன்.

“ஹாய். நான் மதன்.”

“ஹாய். நான் விக்னேஷ்”

அவ்வளவு தான். பெரிய சம்பாஷணைகள் இல்லை. என்ன பேசுவதென்று தெரியவில்லை. அமைதியாக சாப்பிட்டுவிட்டு கிளம்புகையில் பெரியம்மா சொன்னாள்

“டேய் சாயந்திரம் சீக்கிரம் வந்துடு..”

உடனே திரும்பி,

“ஏற்கனவே என் ப்ரண்ட் கல்யாணத்துக்கு காலையில போகல. சாயந்தரம் வரவேற்புக்காவது போகணும். என்னாலெல்லாம் வர முடியாது”

பளிச்சென்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன். அவள் வீட்டுக்குச் சென்றதை அப்பாவிடம் எப்படியும் சொல்லிவிட வேண்டும். இல்லையென்றாலும் அவருக்குத் தெரிந்துவிடும். அவரைக் கூப்பிட்டு விஷயத்தை சொல்லியபோது அவர் சொன்னது தான் கதையின் முதல் இரண்டு வரிகள். கொஞ்சம் அதிர்ந்து தான் போனேன். ஆனாலும் அவர் சொல்வதிலும் தப்பில்லை. எனக்கே இவ்வளவு கோபமும் வருத்தமும் இருக்கும் போது அவருக்கு எவ்வளவு வருத்தமும் கோபமும் ஆதங்கமும் இருக்கும். அவர் சொல்வதும் நியாயம் தானே? இப்படி எல்லோரும் தேன்மொழியின் மீது ஏகத்துக்கும் வருத்தத்துடன் இருப்பதற்கு ஒரு காரணம்… அவளுடையது காதல் திருமணம்.

- இன்னும் நிறங்கள் மாறும்

mukilan
08-09-2008, 04:30 PM
மதியாரே! மதுரமான கதை!

சிறுகதையில் உங்கள் நடை நன்றாக மெறுகேறிக் கொண்டே செல்கிறது. ஆறு பேக்குகள் - நக்கல் நகைச்சுவை நன்றாக இருக்கிறது.

பெற்றோர்கள் என்றும் பெற்றோர்கள்தான். நன்கு யோசித்துப் பாருங்கள். மற்ற முன்னேறிய நாடுகளுக்கு ஒப்பான கல்வியறிவு உள்ள நாடு நம் நாடு. இயற்கைவளங்களும் அப்படி ஒன்னும் மோசமாகிப் போய்விடவில்லை. ஆனால் பிரதமருக்கும், முதல்வருக்கும் தீர்த்து வைக்க வேண்டிய அல்லது கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான விசயத்தில் மதக் கலவரம் இருக்கிறது. மதக்கலவர மேலாண்மை என்ற தனிப் படிப்பு வந்தாலும் ஆச்சர்யமில்லை. ஒருநாடு வளர முற்படுகையில் எத்துனை பிரச்சினைகள். எல்லாவற்றிற்கும் தீர்வாய் இல்லாவிட்டாலும், கொஞ்சமேனும் தீர்வாய் காதல் திருமணங்கள். அப்படியான மனமாற்றம் நம்மிடமும், நம் பெற்றோர்களிடமும் வரும் வரை அப்துல் கலாமின் கனவு பலிக்கப் போவதில்லை.

மதி
09-09-2008, 01:51 AM
மிக்க நன்றி முகிலாரே..!
நீங்கள் சொல்வது உண்மை தான். காதல் திருமணங்கள் ஒரு வகையில் தீர்வு தான். ஆனால் யாரும் காதலை குற்றம் சொல்லுவதற்கில்லை. காதலிப்பவர்களைத் தான். காதல் என்னும் சொல் எப்படி சிலரை தன்னலமுள்ளவர்களாக்குகிறது என்பது தான் ஆதங்கமே.. இன்னும் வரும். ஏறக்குறைய என் புலம்பல்கள். :)

முகிலன்...
நினைக்கையில் ஆச்சர்யமாகத் தான் இருக்கிறது. இப்போதெல்லாம் நான் எழுதுவது வேறு வழியில்லாமல். :) நேற்று நல்ல மழை. அலுவலகத்தை விட்டு வெளியே வர முடியவில்லை. அதனால் என்ன செய்வதென்று தெரியாமல் இதை எழுதினேன்.

Keelai Naadaan
09-09-2008, 04:28 PM
கதை சுவாரஸ்யமாய் செல்கிறது. முழுக்கதையையும் படிக்க ஆவல்.

பென்ஸ்
10-09-2008, 02:59 AM
தொடரா....!!! தொடர வாழ்த்துகள்...

poornima
10-09-2008, 07:05 AM
ஏதோ சாதாரண கதையாய் துவங்கிய அந்த கதையின் ட்விஸ்ட் அதன் நிறைவுப் பகுதியில் இரட்டை வார்த்தைகளாய்..

நிறங்கள் மாறட்டும்.. தன்மை இழக்காது...

ஐரேனிபுரம் பால்ராசய்யா
10-09-2008, 12:22 PM
அறிவு நிலவான மதிக்கு

கதை காதலை மையப்படுத்தியிருந்தாலும் சமுதாய உணர்வுகளின் முகம் கதை முழுக்க பரவி அடுத்த பதிவை ஆவலுடன் எதிர் பார்க்க வைத்தது. பாராட்டுக்கள். கதையை சுயமாக எழுத முடிவு செய்த பின் நான் விக்னேஷ் என்ற பெயர் அறிமுகமும் வர்ணனையும் தவிர்த்திருக்கலாம்

மதி
10-09-2008, 01:01 PM
கதை சுவாரஸ்யமாய் செல்கிறது. முழுக்கதையையும் படிக்க ஆவல்.
நன்றி கீழை நாடன். விரைவிலேயே பதிக்க முயல்கிறேன்

தொடரா....!!! தொடர வாழ்த்துகள்...
வாழ்த்துக்கு நன்றிங்கண்ணா...

ஏதோ சாதாரண கதையாய் துவங்கிய அந்த கதையின் ட்விஸ்ட் அதன் நிறைவுப் பகுதியில் இரட்டை வார்த்தைகளாய்..

நிறங்கள் மாறட்டும்.. தன்மை இழக்காது...
நிறங்கள் தன்மை இழக்கக்கூடாது என்று தான் நானும் விரும்புகிறேன் பூர்ணிமா.

அறிவு நிலவான மதிக்கு

கதை காதலை மையப்படுத்தியிருந்தாலும் சமுதாய உணர்வுகளின் முகம் கதை முழுக்க பரவி அடுத்த பதிவை ஆவலுடன் எதிர் பார்க்க வைத்தது. பாராட்டுக்கள். கதையை சுயமாக எழுத முடிவு செய்த பின் நான் விக்னேஷ் என்ற பெயர் அறிமுகமும் வர்ணனையும் தவிர்த்திருக்கலாம்
பால்ராசைய்யா அவர்களே.. சில நேரங்களில் என்ன எழுதுகிறேன் என்று தெரியாமல் எழுதுவதுண்டு. அப்படித் தான் இதுவும். உண்மை என்னவென்றால் வேர்ட்டில் தட்டச்சும் போது இந்தப் பகுதி குறைந்தது மூன்று பக்கங்களுக்குக் குறையாமல் வர வேண்டும் என்ற ஆவலில் நீட்டி முழக்கிவிட்டேன். :)
உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

தீபன்
11-09-2008, 02:48 AM
ஜனரஞ்சக எழுத்து நடை. தொய்வில்லாத கதைப்போக்கு. கலக்குறிங்க... தொடருங்கள்.

மதி
11-09-2008, 03:31 PM
“என்னம்மா சொல்ற? மீனாட்சிக்கு கல்யாணமா?”

இப்படி தான் கத்தினேன் ஐந்து வருஷங்களுக்கு முன்.

“தம்பி… ஊருக்கெல்லாம் போக வேண்டாம். பாட்டி வீட்டுக்கு வா. மீனாட்சிக்கு கல்யாணம்..”

அம்மா இப்படி சொன்னதும் தடுமாறித்தான் போனேன். ‘மீனாட்சிக்கு கல்யாணமா’ எப்போ மாப்பிள்ளை பார்த்தார்கள். திடீர்னு கல்யாணம்னு சொல்றாங்களே?

“ஆமாண்டா. அடுத்த புதன் கல்யாணம். அதனால இங்க வந்துடு..”
“மா..மாப்பிள்ள யாரு?”

“அவ ப்ரண்டு தான். சரவணன்.”

கொஞ்சம் கொஞ்சமாய் தெளிவு வந்தது. சரவணன் அவள் கூட கல்லூரியில் படித்த நண்பனின் உறவாயிற்றே. ஓ அப்போ காதல் கல்யாணமா…?

இதுவரை காதல் கல்யாணங்களை சினிமாவிலும் புத்தகங்களிலும் பார்த்து கேட்டிருந்த எனக்கு இது புதிதாய் இருந்தது. என்ன உணர்வென்றே தெரியவில்லை? சந்தோஷமா..இல்லை அவள் மேல் கோபமா என்று. பேருந்தில் பாட்டியின் ஊருக்குப் பயணமானேன்.

ஊருக்குப் போய் சேர்வதற்குள் சில விஷயங்களை சொல்லி விடுகிறேன். என் அம்மாக்கு இரு அக்காக்கள், இரு தங்கைகள், இரு அண்ணன்கள். கொஞ்சம் பெரிய குடும்பம் தான். எல்லோருக்கும் தலா இரண்டு வாரிசுகள்னு மொத்தம் பதினாலு பேரன் பேத்திகள். இதில் என் பெரிய பெரியம்மா பெண் தான் மீனாட்சி. எல்லோரும் அநேக பாசத்துடன் வளர்க்கப்பட்டதால ஒவ்வொரு முழு ஆண்டு விடுமுறையும் யாராவது ஒருத்தர் வீட்டில் தான் இருப்போம். அப்போ எங்களை மேய்க்க படாத பாடு படுவாங்க.

மீனாட்சி பி.காம் முடித்து பின் எம்.காம் முடித்து கோவையில் ஏதோ ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கிறாள். பெரியம்மாவும் பெரியப்பாவும் அவளுடன் தான் இருக்கிறார்கள். நான் பொறியியல் முடித்துவிட்டு அந்த வாரம் தான் பயிற்சியாளனாக சேர்ந்திருந்தேன். வீட்டை விட்டு முதல் முறை பிரிந்து வந்திருந்ததால் அந்த வாரமே அம்மாவை பார்க்க போகலாம் என்று திட்டமிட்டுருந்த நேரத்தில் அம்மாவிடமிருந்து போன். இதோ பயணமாகிக் கொண்டிருக்கிறேன்.

பாட்டியின் வீட்டுற்குள் நுழைந்தால் கல்யாண ஆரவாரமே இல்லை. எல்லோரும் ஒரு மாதிரி முழித்தார்கள். பெரியம்மாக்கள், சித்திகள் எல்லோரும் அங்க தான் இருந்தார்கள். கொஞ்ச நேரம் கழித்து தான் உணர்வு வந்த மாதிரி,

“விக்கி.. இந்த வாரம் தானே கம்பெனியில சேர்ந்த.. எப்படி இருக்கு கம்பெனி. வேலை கஷ்டமா இருக்கா?”

அப்பாடி ஒருவழியா நாம வந்திருப்பதை தெரிஞ்சுக்கிட்டாங்க.

அம்மா முகமும் கொஞ்சம் இறுகித் தான் போயிருந்ததே தவிர யாரும் எதுவும் சொல்லவில்லை. ஆனா ஏதோ மட்டும் தப்பா நடந்திருக்குன்னு புரிந்தது. மீனாட்சியையும் காணவில்லை.

ஒருவழியா ஆசுவாசப்படுத்திக்கிட்டு உட்கார்ந்து இருக்கறப்ப தான் அப்பா வந்தார். முகம் முழுக்க கோவம். என்னைப் பார்த்ததும் நலம் விசாரிக்க ஆரம்பித்துவிட்டார். எனக்கும் அப்பாக்கும் உள்ள அலைவரிசையே வித்தியாசமானது. ஏகப்பட்ட விஷயங்களை அலசியிருக்கிறோம்.

கொஞ்சம் கொஞ்சமாய் விஷயத்துக்கு வந்தோம்.

“என்னப்பா மீனாட்சிக்கு கல்யாணம்னு சொல்றாங்க..? அவ எங்க?”

“அவளைப் பத்தி மட்டும் கேக்காதடா.. அவ செஞ்ச காரியத்துக்கு அவளை அங்கே வெட்டி போட்டிருக்கணும். சம்பந்தம் பேசிட்டு வந்தோமே என்னை சொல்லணும்..”

“ஏங்க… வேணாம். இதையெல்லாம் போய் பையன்கிட்ட சொல்லிக்கிட்டு…” அம்மா நடுவில் வந்து தடுத்தாள்.

“இருக்கட்டும்டி. எல்லாம் எல்லோருக்கும் தெரியணும். நம்ம பொண்ணு லட்சணம் ஊருக்கே தெரியும் போது பசங்களுக்கு தெரிஞ்சா என்ன..?” அப்பா நிறையவே கோபத்தில் இருக்கிறார் என்று மட்டும் புரிந்தது.
“டேய்.. உங்கக்காக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு… இப்போ நடக்கப் போறது இரண்டாம் கல்யாணம். ஊருக்காக…”

“என்னங்க…வேண்டாம்…” அம்மா மறுபடியும் தடுத்தாங்க. அப்பா மதிக்காமல் தொடரவே அப்புறம் பேசவில்லை.

“ஊருக்காகத் தாண்டா இரண்டாவது கல்யாணம். போன வாரம் நீ வேலைக்கு சேர போனதும் எல்லோரும் நம்ம சொந்த காரங்க கல்யாணத்துக்குப் போனோம். அங்க தான் அந்த சேதி வந்துச்சு. உங்கக்கா தாலி கட்டிக்கிட்டு அவன் கூட வேற வீட்டுக்கு குடித்தனம் போயிட்டாளாம். ரெஜிஸ்டர் கூட பண்ணியாச்சாம்.

எல்லாத்துக்கும் காரணம் உன் பெரியப்பா தான். ஏற்கனவே அவன் அவருகிட்ட வந்து பொண்ணு கேட்டுருக்கான். ப்ரண்டா பழகிகிட்டு இருந்தவன் தான். ப்ரண்டுன்னே நெனச்சுட்டாங்க. பொண்ணு கேட்டதும் அதெல்லாம் முடியாதுன்னு சும்மா இருந்துட்டான். போதாதக் குறைக்கு உங்கக்காவ வேற போட்டு அடிச்சிருக்கான். என்ன காதல் கேக்குதோன்னு…! இவ்வளவும் பண்ணிட்டு எங்க யாருக்கிட்டேயும் சொல்லல. இந்த லட்சணத்துல பொண்ண வீட்டுல விட்டுட்டு கல்யாணத்துக்கு வந்திருக்கான். பொண்ணு ஏற்கனவே ஒரு வீடு பார்த்து வச்சிருக்கு. அன்னிக்கு அந்த பையன் கூட தனிக்குடித்தனம் போயிடுச்சு.”
ஏதோ அலைபாயுதே படம் பார்க்கற மாதிரி இருந்துச்சு. அக்கா மேல கோவம் கோவமா வந்துச்சு. ஊமைக் கோட்டான் மாதிரி இருந்துட்டு இவ்வளவையும் பண்ணி இருக்கா பாரு.”

“அப்புறம்…?” கதைக் கேட்கும் ஆர்வத்தில் நான்.

“அப்புறம் என்ன.. உங்க பெரியப்பனுக்கு செமயா டோஸ் விட்டுட்டு. நானும் உங்க பெரிய மாமாவும் சின்ன பெரியம்மாவும் கிளம்பி கோவையில் அந்த பையன் வீட்டுக்குப் போய் பேசினோம். அவங்க வேற சாதி. பையனோட அக்கா புருஷன் பொண்ணு பணத்துக்கு ஆசப்பட்டு தான் பையனை மடக்கிட்டான்னு கத்துனான். அவங்க அப்பா பரவாயில்லை. நிலைமைய புரிஞ்சுக்கிட்டாரு. சரி. வெள்ளம் தலைக்கு மேல போயாச்சு. இனி என்ன பண்ணன்னு அடுத்த புதன்கிழமை கல்யாணம் வச்சுட்டோம். ஊருக்கு சொல்லியாகணும்ல. இன்னும் இரண்டு மாசத்துல வயித்த தள்ளிக்கிட்டு வந்தான்னா… எல்லாரும் தூக்குல தான் தொங்கணும். ஆனாலும் உன் அக்காளுக்கு ரொம்ப தான் நெஞ்சழுத்தம். அதே ஊரிலே இருக்கோம்னு தெரிஞ்சும் அவ வர மாட்டேனுட்டா. நாங்க பேசிக்கிட்டு இருக்கறப்போ உன் பெரியம்மா தான் போய் அவளை பாத்துட்டு வந்தா. எங்ககிட்ட கூட சொல்லல.”

கேட்க கேட்க அதிர்ச்சியாக இருந்தது. வீட்டில் அப்பா ஒத்துக்கவில்லைன்னதும் இப்படியா முடிவு எடுப்பாள். யாருக்காவது பிரச்சனை என்றதும் எல்லோருக்குமே தெரிவிச்சு தான் முடிவு எடுப்பாங்க. இது மாதிரி ஏகப்பட்ட முறை பண பரிமாற்றமெல்லாம் நடந்திருக்கு. சித்தப்பா இல்ல மாமாக்கிட்ட எங்கக்கா சொல்லிருக்கலாம். இல்லை என் பெரியப்பாவாவது இதை சொல்லிருக்கலாம். ஏதோ இந்த விஷயத்துல மட்டும் அவங்க குடும்பம்னு பிரிச்சு பாத்துட்டார். ஆனா கடைசியா குடும்ப மானமில்ல அந்தரத்தில தொங்குது.

கோபம் கோபமாய் வந்தது. மீனாட்சி அக்கா மேல.. என் பெரியப்பா மேல.. எல்லாம் தெரிஞ்சும் எல்லாமே தெரியாத மாதிரி ஒரு மூலைல நின்னுட்டு இருக்கற என் பெரியம்மா மேல. ‘ஏன் காதல் பண்றது தப்பா?’ தெரியல ஆனா காதல் பண்ணிட்டோம்னு வீட்டை விட்டு போனது பெரிய தப்பு. அப்பா புரிஞ்சுக்கலேன்னா வீட்டுல அடுத்த பெரியவங்களே இல்லையா. மாமாகிட்ட சொல்லிருக்கலாமே. இதுவரை குடும்பம்னாலே ஏழு குடும்பத்தையும் சேர்த்து தானே பார்த்தோம். ஏனோ சில கேள்விகளுக்கு மட்டும் விடைகளே கிடைப்பதில்லை.


- இன்னும் நிறங்கள் மாறும்

மதி
11-09-2008, 03:33 PM
ஜனரஞ்சக எழுத்து நடை. தொய்வில்லாத கதைப்போக்கு. கலக்குறிங்க... தொடருங்கள்.
மிக்க நன்றி தீபன்.

இந்தக் கதை எழுதுவது கத்தி மேல நடப்பது போலுள்ளது. ஆனால் நான் இதுவரை எழுதிய எதையுமே பற்றி கருத்து சொல்லாத என் அப்பா.. நல்லாருக்கு. தொடர்ந்து எழுதுன்னு சொன்னது தான் நான் தொடர்ந்து எழுத காரணம். :)

செல்வா
11-09-2008, 03:46 PM
முழுக்க படிச்சு முடிச்சுட்டு பதில் சொல்லலாம்னு தான் நெனச்சேன் ஆனா... ஆர்வத்தை அடக்க முடியல....

ரொம்ப நல்லாருக்கு மதி....(குட்டி தல... :) )

இரண்டாவது அத்தியாயத்தின் ஆரம்பம் அதிரடி....

சரளமான நடை........

உணர்வைக் காட்சிப் படுத்துதலுக்கேற்ற நல்ல களம்.....
எழுத்து நிறைய மெருகேறுது... தொடர்ந்து எழுதுங்க....

மதி
11-09-2008, 03:51 PM
முழுக்க படிச்சு முடிச்சுட்டு பதில் சொல்லலாம்னு தான் நெனச்சேன் ஆனா... ஆர்வத்தை அடக்க முடியல....

ரொம்ப நல்லாருக்கு மதி....(குட்டி தல... :) )

இரண்டாவது அத்தியாயத்தின் ஆரம்பம் அதிரடி....

சரளமான நடை........

உணர்வைக் காட்சிப் படுத்துதலுக்கேற்ற நல்ல களம்.....
எழுத்து நிறைய மெருகேறுது... தொடர்ந்து எழுதுங்க....

ஆஹா உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி சின்ன தல :)
நல்ல வேளை இப்போவே பதில் போட்டீங்க... ஏன்னா இந்தக் கதை எப்படியெல்லாம் போகப் போகுதுன்னு எனக்கு சத்தியமா தெரியாது. நேத்து வரை மனதில வச்சிருந்த இரண்டாம் பாகம் வேற. இன்னிக்கு எழுதினது வேற. ;););)

ஆனா எப்படியாவது முடிச்சுடறேன்... :D:D:D
சத்தியமா இதுவும் ஒரு காதல் கதை தாங்க... ஹிஹி

mukilan
11-09-2008, 07:31 PM
வாவ்! உங்கள் எழுத்தின் மற்றொரு பரிமாணத்தை ஏன் இவ்வளவு நாட்களாக மறைத்து வைத்திருந்தீர்கள் மதி! அருமை! உரையாடல் நடையாகட்டும் உட்புகுத்தும் உங்கள் கருத்துக்களாகட்டும், அதோடு சேர்ந்தெழும்பும் கேள்விகளாகட்டும் அருமை,அருமை, அருமையை தவிர வேறொன்றுமில்லை.

காதல் பண்ணிட்டோம்னு வீட்டை விட்டுப் போறது தப்புதான். அது எப்போ? காதலர்கள் தங்கள் பெற்றோர்களிடம் சொல்லாமல் போனால். ஆனால் முறையாகச் சொல்லியும் அதை செவி மடுக்காத அந்த பழைய தலைமுறையின் வற்புறுத்தலுக்கு இணங்கவா முடியும்?

பிள்ளைகள் மரியாதை கொடுத்தால் அந்த பையன் நல்லவனா இல்லையா என்பதை ஆராய்வதோடு நில்லாமல் அவர் வீட்டில் கிருஸ்ணனைக் கும்பிடுகிறார்களா? கிறிஸ்துவை கும்பிடுகிறார்களா என்ற ஆராய்ச்சியும், அதனினும் ஒரு படி மேலே போய், எந்த சாதி? எனப் பார்த்து வேண்டாம் என்று சொன்னால் என்ன செய்யலாம்? என்னை பொறுத்த வரை கதையில் கூறப் பட்டுள்ள மீனாட்சி அக்காவின் முடிவு தெளிவானது, தீர்க்கமானாது.

மதி
12-09-2008, 01:41 AM
வாவ்! உங்கள் எழுத்தின் மற்றொரு பரிமாணத்தை ஏன் இவ்வளவு நாட்களாக மறைத்து வைத்திருந்தீர்கள் மதி! அருமை! உரையாடல் நடையாகட்டும் உட்புகுத்தும் உங்கள் கருத்துக்களாகட்டும், அதோடு சேர்ந்தெழும்பும் கேள்விகளாகட்டும் அருமை,அருமை, அருமையை தவிர வேறொன்றுமில்லை.

காதல் பண்ணிட்டோம்னு வீட்டை விட்டுப் போறது தப்புதான். அது எப்போ? காதலர்கள் தங்கள் பெற்றோர்களிடம் சொல்லாமல் போனால். ஆனால் முறையாகச் சொல்லியும் அதை செவி மடுக்காத அந்த பழைய தலைமுறையின் வற்புறுத்தலுக்கு இணங்கவா முடியும்?

பிள்ளைகள் மரியாதை கொடுத்தால் அந்த பையன் நல்லவனா இல்லையா என்பதை ஆராய்வதோடு நில்லாமல் அவர் வீட்டில் கிருஸ்ணனைக் கும்பிடுகிறார்களா? கிறிஸ்துவை கும்பிடுகிறார்களா என்ற ஆராய்ச்சியும், அதனினும் ஒரு படி மேலே போய், எந்த சாதி? எனப் பார்த்து வேண்டாம் என்று சொன்னால் என்ன செய்யலாம்? என்னை பொறுத்த வரை கதையில் கூறப் பட்டுள்ள மீனாட்சி அக்காவின் முடிவு தெளிவானது, தீர்க்கமானாது.

நன்றி முகிலன்... இதில் சரி தவறு என்ற வாதத்திற்கே வரவில்லை நான். எல்லா சம்பவங்களுக்கும் நமது எல்லா முடிவுகளுக்கும் நாம் வைக்கும் பெயர் 'சூழ்நிலை அப்படி'. :)

குடும்பம் என்ற சூழ்நிலையில் தன் அப்பா..அம்மா மட்டும் என்றிருந்தால் நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி. ஒரு பெரிய குடும்பமே இருக்கையில் அடுத்தக் கட்டமாக வீட்டில் அடுத்த பெரியவரிடம் சொல்லி இருக்கலாமே...

ஏன்னா.. காதல்ங்கறது தன்னலம் ஒன்றையே பார்த்து முடிவு எடுக்க வைக்குது. தான் தனக்குப் பிடித்தவனுடன் வாழ வேண்டும் என்ற முடிவு சரி. அதற்காக இத்தனை வருடம் தன்னை பெற்றவர் வளர்த்தவர் மானம் காற்றில் பறக்கும் என்பது தெரியாமலேயா போய்விடும்? :D:D

பென்ஸ்
16-09-2008, 01:38 AM
மதி எழுத்து நன்றாக வருகிறது... அப்படியே பிசிறு இல்லாமல்...

ஆனால் சுவரிசியம் குறைவு மற்றும் ஒவ்வொரு பகுதிக்கும் இடையில் வரும் அதிக படியான இடைவேளி கதையை இன்னும் குறைத்துவிடுகிறது...

மதி
16-09-2008, 03:26 AM
மதி எழுத்து நன்றாக வருகிறது... அப்படியே பிசிறு இல்லாமல்...

ஆனால் சுவரிசியம் குறைவு மற்றும் ஒவ்வொரு பகுதிக்கும் இடையில் வரும் அதிக படியான இடைவேளி கதையை இன்னும் குறைத்துவிடுகிறது...
பென்ஸ்...
தங்களின் உண்மையான விமர்சனத்திற்கு மிக்க நன்றி...

நீங்கள் சொல்வது உண்மை தான். Documentary போன்ற முயற்சியே இது. மேலும் எழுதியவுடன் பதிவதால் அடுத்த பாகங்கள் எழுத நேரம் எடுக்கிறது. உங்கள் கருத்துப் படி எழுத முயற்சிக்கிறேன். :)

மதி
16-09-2008, 04:21 AM
“முடியாது… முடியாது.. என்னால லீவெல்லாம் போட முடியாது”

கோபத்தில் இப்படித் தான் கத்தினேன். வீடே கல்யாண வீடு மாதிரியில்லை. எல்லோர் முகத்திலும் ஏதோ சோகக்கலை. வீட்டில் முதன் முதல் நடக்கும் திருமணம். எல்லோருக்கும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தன. தடபுடலாக விமரிசையாக செய்ய வேண்டுமென்று. எனக்குத் தெரிந்து மீனாட்சி அக்காவிற்கு ரொம்ப நாளாவே மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஜாதகத்தில் இப்போ நேரம் சரியில்லை. அப்போ நேரம் சரியில்லை என்றே இழுத்தடித்துக் கொண்டிருந்தனர். ஒருவேளை நல்லதொரு ஜோசியக்காரரிடம் போய் காட்டியிருந்தால் இந்தப் பொண்ணுக்கு காதல் திருமணம் தான். தேவையில்லாமல் நேரத்தை வீணடிக்கவேண்டாம் என்று சொல்லியிருப்பாரோ? இதனால் எல்லா சொந்தக்காரங்களுக்கும் மூன்று வருஷத்துக்கும் மேலாய் அலைச்சல் மிச்சமாயிருக்கும்.

என்னமோ தெரியல. ஏகத்துக்கும் கோபம் கோபமாய் வந்தது. ‘அதான் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களே அப்புறம் என்ன இன்னொரு கல்யாணம். இதுல நான் வேற லீவ் போட்டுட்டு வரணுமாம். வேலைக்கு சேர்ந்தே ஒரு வாரம் தான் ஆகுது. இதுல லீவ் கேட்டா குடுப்பாங்களோ இல்லை அப்படியே போயிடுன்னு துரத்துவாங்களோ தெரியாது’. அம்மாவின் சோகமான முகம் வேறு பாடாய் படுத்தியது.

ஒருவழியாய் கிளம்பி வேலையிடம் வந்து பயிற்சியாளரிடம் அக்காவிற்கு திருமணம் என்றும் போகவேண்டும் என்றும் சொன்னேன். ஆச்சர்யமாய் பார்த்தார். திடீரென்று சொல்கிறானே என்ற எண்ணமாய் இருக்கலாம். எனக்கும் இது திடீர் செய்தி தானே. ‘போய் வா’ என்றார். அன்றிரவே மறுபடி புறப்பட்டுவிட்டேன். மனதில் சந்தோஷம் இல்லாமல் ஒரு விசேஷத்தில் கலந்துக் கொள்ள போகிறேன். ஆச்சு. கோயிலில் ஏற்பாடு செய்திருந்தபடி அவளது திருமணமும் நடந்தது. ‘அவள் முகத்தைக் கூட பார்க்க விரும்பவில்லை. அவளிடம் ஒரு முறை கூட பேசவில்லை.’

எல்லாம் முடிந்து அவசர அவசரமாகக் கிளம்பி வேலைக்கு மறுபடி வந்துவிட்டேன். நேரடியாக தொடர்பு இல்லையென்றாலும் அந்த ரணம் மட்டும் ஆறவில்லை. அதனாலேயே ஏதேனும் விசேஷத்துக்கு எப்போது வீட்டுக்குப் போனாலும் அவர்களை பார்க்காமல் போய்விடுவேன். இப்படித் தான் ஒருமுறை சரவணன், மீனாட்சி கணவர், ஒரு முறை என்னிடம் வந்து ‘ஏன் எங்களிடம் பேச மாட்டேங்கறீங்க. வீட்டில எல்லோரும் எங்ககிட்ட பேசறாங்க. நீயும் உன் தம்பியும் மட்டும் கண்டும் காணாம போறீங்க. அவ்வளவு அன்னியமாயிட்டோமா நாங்க’னு கேட்டார்.

கோபம் இருந்தாலும் சம்பிரயதாயமாக பேச ஆரம்பித்தேன். அதற்கு என் அம்மாவும் காரணம். யாராலும் முடியாததை சில நேரம் அம்மாவின் கண்ணின் ஓரம் எட்டிப் பார்க்கும் கண்ணீர் சாதித்துவிடும். ஆயிற்று ஐந்து வருஷங்கள். இப்போது அவர்களுக்கு ஒரு பையன். பெரியம்மாவும் பெரியப்பாவும் அநேகமாய் எல்லாவற்றையும் மறந்து விட்டனர். பேரனைக் கொஞ்சுவதிலேயே இன்பம் அவர்களுக்கு.
அப்பாவின் கோபம் ஏனோ இன்னும் போகவில்லை. முன்னே நின்று அவள் திருமணத்தை நடத்தியவர் தான். ஆயினும் அவர் மனம் பெரிதும் புண்பட்டிருந்தது. காலம் என்றைக்கேனும் பதில் சொல்லுமா பார்ப்போம்.

வீட்டில் முதல் முதலாக நடந்த திருமணத்தால சம்பந்தமேயில்லாமல் பெரிதும் பாதிக்கப் பட்டது என் முதல் சித்தி பெண். என் தங்கை வீணா. என் சித்தி வீடும் என் பாட்டி வீட்டிற்கு அருகிலேயே இருந்தது.

சித்தப்பா கொஞ்சம் முன்கோபக்காரர். எதற்கெடுத்தாலும் பதட்டப்படுவார்.
மீனாட்சி திருமணத்தால் அவரும் இடிந்துப் போயிருந்தார். அவரின் நம்பிக்கைப் படி அளவுக்கு அதிகமாக அக்காளைப் படிக்க வைத்தது தான் காரணம் என்று முழுமையாக நம்பினார். விளைவு தன் பொண்ணை கல்லூரியில் சேர்ப்பதற்கே தயங்கினார். பன்னிரண்டாவது முடித்து இஞ்சினீயரிங் கல்லூரியில் சேர விண்ணப்பித்திருந்தாள் வீணா. படித்து பெரிய வேலைக்குப் போக வேண்டும் என்பது அவள் கனவு. கனவின் அடிப்படையே தகர்ந்து போகுமளவிற்கு நடந்த சம்பவங்கள் இருந்தன.

ஒருவழியாக அப்பா சித்தப்பாவிடம் பேசி எங்கள் ஊருக்கு அருகிலிருந்த கல்லூரியிலேயே சேர்த்துவிட்டார். அதற்கு அவர் எடுத்த பிரயத்தனங்கள் தான் எத்தனை எத்தனை? மீனாட்சி அக்காளுக்கு நடந்த காதல் கல்யாணம் எத்தனை பேர் வாழ்க்கையில் வினையாய் அமைந்துவிட்டது. அப்பா மட்டும் இல்லையேல் வீணாவின் கனவுகள் கருகியிருக்கும். ஒரு வழியாய் அவள் கல்லூரி முடித்து வந்தாலும் அவளை மேற்படிப்புக்கோ இல்லை வேலை பார்க்கவோ சித்தப்பா அனுமதிக்கவில்லை. காரணம் காதல் பயம். இதோ அவசர அவசரமாக அவளுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கிறார். அவள் வீட்டில் சமைத்துக் கொண்டிருக்கிறாள்.

இனி தேன்மொழி கதை…

- நிறங்கள் இன்னும் மாறும்

சிவா.ஜி
16-09-2008, 07:40 AM
வாவ்....அட்டகாசமான, சரளமான நடை. நல்லாருக்கு மதி. முடிச்சுகளும், திருப்பங்களும் சுவாரசியமாய் இருக்கிறது. அன்பான குடும்பத்தில் நிகழும் அதிர்ச்சியான சம்பவங்களின் போது ஏற்படுகிற உரையாடல்கள், பாத்திரங்களின் எண்ண வெளிப்பாடுகள் எல்லாமும் அழகாக இருக்கிறது. பாராட்டுக்கள் மதி. கலக்குங்க.

poornima
16-09-2008, 08:06 AM
நதியென பிரவாகமாய் உங்கள் நடை..

அங்கிங்கு தறிகெட்டு அளவோடு பயணிக்கும் கதையோட்டம்
ஒவ்வொரு பாத்திரங்களும் இயல்பு கெடாமல் அப்படியே பிரதிபலிக்கிறார்கள்
தம் நிஜ(ற)ங்களை..

இப்போதுவரை வண்ண வண்ண பூக்களாய்..

தேன்மொழி பற்றி சேதி அறிய காத்திருக்கிறேன்..

பாராட்டுகள் மதி

மதி
16-09-2008, 09:29 AM
வாவ்....அட்டகாசமான, சரளமான நடை. நல்லாருக்கு மதி. முடிச்சுகளும், திருப்பங்களும் சுவாரசியமாய் இருக்கிறது. அன்பான குடும்பத்தில் நிகழும் அதிர்ச்சியான சம்பவங்களின் போது ஏற்படுகிற உரையாடல்கள், பாத்திரங்களின் எண்ண வெளிப்பாடுகள் எல்லாமும் அழகாக இருக்கிறது. பாராட்டுக்கள் மதி. கலக்குங்க.
நன்றி அண்ணா... எல்லாம் பார்த்த கேட்ட விஷயங்களின் கலவை தான்.

நதியென பிரவாகமாய் உங்கள் நடை..

அங்கிங்கு தறிகெட்டு அளவோடு பயணிக்கும் கதையோட்டம்
ஒவ்வொரு பாத்திரங்களும் இயல்பு கெடாமல் அப்படியே பிரதிபலிக்கிறார்கள்
தம் நிஜ(ற)ங்களை..

இப்போதுவரை வண்ண வண்ண பூக்களாய்..

தேன்மொழி பற்றி சேதி அறிய காத்திருக்கிறேன்..

பாராட்டுகள் மதி

மிக்க நன்றி பூர்ணிமா. நானும் ஆவலோடு தான் இருக்கிறேன்.

சுகந்தப்ரீதன்
18-09-2008, 11:43 AM
காட்சிகள் கண்முன் தோன்றும் வகையில் வார்த்தைகளை கையாளுவது அருமை மதி..!! எதையோ சொல்ல முயல்கிறீர்கள் என்று மட்டும் தெளிவாக தெரிகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்.. வானவில்லில் எத்தனை வண்ணங்களென்று..??

செல்வா
18-09-2008, 12:00 PM
மூன்றாவது அத்தியாயம் அருமையிலும் அருமை...
வேறே குறைத்தோ கூட்டியோ சொல்ல எதுவும் தோன்றவில்லை...
ரொம்ப நல்லாருக்கு மதி...

மதி
18-09-2008, 12:23 PM
காட்சிகள் கண்முன் தோன்றும் வகையில் வார்த்தைகளை கையாளுவது அருமை மதி..!! எதையோ சொல்ல முயல்கிறீர்கள் என்று மட்டும் தெளிவாக தெரிகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்.. வானவில்லில் எத்தனை வண்ணங்களென்று..??
எதையும் சொல்ல வரவில்லை சுகந்தண்ணே..! காதல் பற்றி என் பார்வை. அவ்வளவே! :)

மூன்றாவது அத்தியாயம் அருமையிலும் அருமை...
வேறே குறைத்தோ கூட்டியோ சொல்ல எதுவும் தோன்றவில்லை...
ரொம்ப நல்லாருக்கு மதி...
நன்றி செல்வா... சில சமயம் உங்கள மாதிரி ஆட்கள் இருக்கறதால தான் நானும் தைரியமா மொக்கையா எழுத ஆரம்பிச்சுடறேன். :D:D:icon_ush:

மதி
22-09-2008, 02:46 PM
“என்னாலெல்லாம் அங்க வர முடியாது”

அடித்தொண்டையில் தேன்மொழி கத்தியதும் வழக்கமாய் தான் நினைத்தனர் அவள் பெற்றோர். என் சின்ன பெரியம்மா, பெரியப்பா. அவளும் பொறியியல் முடித்துவிட்டு சில ஆண்டுகள் ஒரு கம்ப்யூட்டர் செண்டரில் வேலை பார்த்து பின் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் சேர்ந்து சென்னைக்கு வந்துவிட்டாள். அவள் வந்த சில மாதங்களிலேயே அவளது தம்பிக்கும் சென்னையிலேயே பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்கவும் என் பெரியப்பா ஓய்வு பெறவும் குடும்பத்தோடு சென்னைக்கு குடி பெயர்ந்து விட்டனர். இதற்கிடையில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த தங்கையும் திவ்யாவும் சென்னையிலேயே ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் இணைந்துவிட்டாள். ஒரு வழியாய் குடும்பம் தலை நிமிர்ந்ததென்று சந்தோஷப்பட்டார்கள் என் சின்ன பெரியம்மா.

அதற்கும் ஒரு காரணமுண்டு. பெரியப்பாவிற்கு அவ்வளவு சூதுவாது தெரியாது. அவர் பஞ்சாயத்து அலுவலகத்தில் க்ளார்க்காக பணியாற்றி வந்தார். சம்பளமும் குறைவு. மூன்று குழந்தைகள் வேற. எல்லோரும் நல்லாவே படிக்கும் குழந்தைகள். அவர்கள் படிப்பில் மண் அள்ளி போட்டுவிடக்கூடாதென்பதற்காக என் இரண்டு மாமாக்களும் ஏனைய சித்தப்பா பெரியப்பாக்களும் என் அப்பாவும் வருஷா வருஷம் அவர்களின் படிப்பு செலவுக்கு பணம் குடுத்து வந்தனர். எங்கள் வீட்டில் இரண்டு பையன்கள் பொறியியல் படித்து வந்தாலும் எப்படியோ கஷ்டப்பட்டு அப்பா அவர்கள் படிப்பு செலவுக்கும் பணம் கொடுத்து வந்தார். கடனாக அல்ல.

இப்படி குடும்பத்திலுள்ள அனைவரின் ஒத்துழைப்பிலும் அனைவரும் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து வேலை கிடைத்து குடும்பத்தின் பொருளாதாரமும் கொஞ்சம் கொஞ்சமாக உயர ஆரம்பித்தது.
ஏறக்குறைய ஓராண்டு இருக்கும். தேன்மொழி எனக்கு அக்கா. அவளுக்கும் வயதாகிக் கொண்டே போகிறதென்று வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள். வழக்கம் போல் வீட்டை விட்டு போக அடம் பிடிக்கும் பெண் போல தான் அவளும் அடம் பிடிப்பதாக முதலில் நினைத்தார் என் பெரியம்மா. இருந்தாலும் நல்லதாய் ஒரு இடம் அமையவும் வீட்டில் எல்லோரும் கோயிலுக்குப் போய் அங்கேயே பெண் பார்க்கும் படலம் நடப்பதாகத் திட்டம்.

மாப்பிள்ளையை என் பெரியம்மாவிற்கு ஏற்கனவே பிடித்திருந்ததால் எப்படியும் இந்த சம்பந்தத்தை முடித்துவிட வேண்டும் என்பதில் குறியாய் இருந்தனர். இந்த பெண் பார்க்கும் படலத்திற்காக என் இரு மாமாக்களும் என் அம்மாவும் என ஒரு பெரிய பட்டாளமே சென்னைக்குச் சென்று காத்திருந்தது. அப்போது தான் முதல் வரியில் சொன்னபடி தான் கோயிலுக்கு வர முடியாதென்று தேன்மொழி அடம்பிடித்தாள்.

எப்போதுமே சாந்தமாக இருக்கும் தேன்மொழி இப்படி வெறிபிடித்தவள் போல் கத்தியது எல்லோருக்கும் ஆச்சர்யம் அளித்தது. ஆனால் போகப் போக எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்லி எல்லோரும் ஆட்டோ பிடித்து கோயிலுக்குச் சென்றனர்.

சென்னையில் அழகான பிரதேசத்தில் அமைந்த கோயில் அது. நிரம்பவே அமைதியாய் இருக்கும். அங்கே ஏற்கனவே மாப்பிள்ளை வீட்டார் வந்து காத்துக் கொண்டிருந்தனர். எங்கள் வீட்டினர் சென்றதும் பரஸ்பர பேச்சுப் பரிமாற்றங்கள். தேன்மொழியை மாப்பிள்ளை வீட்டாருக்கு குறிப்பாக மாப்பிள்ளைக்கு ரொம்பவும் பிடித்து விட்டது. மேற்கொண்டு பேசலாம் என்றனர்.

மாப்பிள்ளையின் அம்மா, “இதப் பாருங்க. எங்களுக்கு பொண்ணை ரொம்பவே பிடிச்சு போச்சு. கோயில்ல வச்சு பாத்திருக்கோம். நல்ல சம்பந்தமா தோணுது. இவ்ளோ உறவுக்காரங்க. என் பையனுக்கும் பொண்ண பிடிச்சிடுச்சு. உங்களுக்கு சம்மதம்னா மேற்கொண்டு பேசலாம்..”

என் பெரிய மாமா, “பொண்ணை ஒரு வார்த்தை கேக்கணும். எங்களும் இந்த சம்பந்தத்துல ரொம்ப திருப்தி. எதுக்கும் வீட்டுக்குப் போய் எல்லோர்கிட்டேயும் கலந்து பேசிட்டு நாளைக்கு சொல்றோம்.”
அந்தம்மா, “ ரொம்பவே சந்தோசம். பையன் இரண்டு மாசத்துல அமெரிக்கா போகப் போறான். நீங்க சம்மதம்னு சொன்னீங்கன்னா கடகடன்னு வேலைய ஆரம்பிச்சு இன்னும் ஒரு மாசத்துக்குள்ள கல்யாணத்தை முடிக்கணும். இப்போ போனா வர்றதுக்கு ஆறு மாசம் மேல ஆயிடும். அதான் இன்னிக்கே பொண்ண பாக்கணும்னு சொன்னோம்.”


எல்லோருக்கும் திருப்தி வர கோயிலில் இருந்து வீடு திரும்பினர்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
“அப்புறம் என்னம்மா ஆச்சு?” கதை கேட்டும் ஆவலில் நான்.

மாப்பிள்ளை பார்க்கும் படலம் முடிஞ்சு அம்மா அப்போது தான் ஊருக்குத் திரும்பி இருந்தார்கள். எப்போதுமே கதை கேட்பதில் ஆர்வமுள்ள நான் அம்மாவை தொந்தரவு செய்து நடந்த விஷயங்களை கேட்டுக் கொண்டிருந்தேன்.

“அப்புறம் என்னடா.. எல்லோரும் வீட்டுக்கு வந்துட்டோம். தேன் முகம் மட்டும் சரியே இல்லை. என்னமோ தெரியல. பையன் நல்ல பையன் தான். லட்சணமா இருக்கான். நல்லா சம்பாதிக்கிறான். நல்ல குடும்பம். வீட்டை விட்டு தொரத்துராங்களோன்னு நினைக்கிறா போல. இதெல்லாம் சகஜம் தானே. இன்னும் ரெண்டு நாள்ல பதில் சொல்றோம்னு அப்புறமா போன் பண்ணிட்டாங்க. இன்னிக்கு இல்லை நாளைக்கு அவகிட்ட பேசிட்டு மாப்பிள்ளை வீட்டுக்காரங்ககிட்ட பேசணும். இங்க தான் உங்கப்பா கடை சாப்பாடு ஒத்துக்கறதில்லேன்னு குதிப்பாரே. அதனால கிளம்பி வந்துட்டேன். இன்னிக்கு இல்லேன்னா நாளைக்கு போன் வரும்.. சரி நீ சாப்பிட்டியா..? வீட்லேயா இல்லை வழக்கம் போல ஹோட்டல்ல தானா…?”

அம்மா வழக்கம் போல் குசலம் விசாரிக்க ஆரம்பித்துவிட்டாள்.

இரண்டு நாள் கழித்து அம்மா மூலம் வந்த செய்தி தேன்மொழி வீட்டை விட்டு வெளியேறினாள்.


- நிறங்கள் இன்னும் மாறும்

சிவா.ஜி
23-09-2008, 07:12 AM
பெண்களின் மனதை அறிந்தவர்கள் யார். தேன்மொழியின் மனதில் காதல் புகுந்துவிட்டதா?...சஸ்பென்ஸ் நல்லாத்தான் இருக்கு. இனி என்ன நடக்கப்போகிறதோ என ஆவலுடன் கவனிக்க வைத்துவிட்டீர்கள் மதி.

பாவம் இந்த நடுத்தர வர்க்கப் பெற்றோர்கள். சில நேரம் பிள்ளைகளைப் படுத்துகிறார்கள். சில நேரம் பிள்ளைகள் அவர்களைப் படுத்துகிறார்கள்.

தொடருங்கோ...கூடவே வரோம்.

மதி
23-09-2008, 07:42 AM
பெண்களின் மனதை அறிந்தவர்கள் யார். தேன்மொழியின் மனதில் காதல் புகுந்துவிட்டதா?...சஸ்பென்ஸ் நல்லாத்தான் இருக்கு. இனி என்ன நடக்கப்போகிறதோ என ஆவலுடன் கவனிக்க வைத்துவிட்டீர்கள் மதி.

பாவம் இந்த நடுத்தர வர்க்கப் பெற்றோர்கள். சில நேரம் பிள்ளைகளைப் படுத்துகிறார்கள். சில நேரம் பிள்ளைகள் அவர்களைப் படுத்துகிறார்கள்.

தொடருங்கோ...கூடவே வரோம்.

சரியா சொன்னீங்க... தொடர்ந்து வாங்க.. :)

ஐரேனிபுரம் பால்ராசய்யா
24-09-2008, 11:14 AM
சின்ன சின்ன குட்டிக்கதைகளை நான் எழுதி வந்தாலும் பெரிய பெரிய கதைகளை (ஐந்து பக்கங்கள் இருந்தாலும்) முழு வீச்சில் படித்து முடிப்பேன். அந்த வகையில் நான் காலச்சுவடு மாத இத்ழில் வரும் சிறுகதைகளை விரும்பி படிப்பதுண்டு, மதி எழுதிய நிறம் மாறிய பூக்கள் கதை காலச்சுவடு மாத இதழில் வெளிவரும் சிறுகதையைப் போல படிக்க சுவராசியமாக இருந்தது. கதையில் போக்கும் சிறந்த நடையும் நயமாக இருந்தது. மீனாட்சியின் கதையை படித்து முடித்ததும் அடுத்து தேன்மொழி கதை . ஒரு பெரிய கூட்டு குடும்பத்தில் நிகழும் நிகழ்வுகளை ஒன்று விடாமல் கதையாக சொல்ல தனித்திறமை வேண்டும் அது மதிக்கு நன்றாகவே கை கூடி வந்திருக்கிறது. என் கரங்கள் காத்திருக்கின்றன மதியின் கரங்களை பிடித்து கை குலுக்க.

மதி
24-09-2008, 12:23 PM
மிக்க நன்றி பால்ராசய்யா..
எல்லாம் மன்றத்தில் எழுதக் கற்றுக் கொண்டது தான். மன்றத்தினருக்குத் தான் நான் நன்றியை சொல்ல வேண்டும். தொடர்ந்து படியுங்கள்.

மதி
17-10-2008, 10:42 AM
சின்ன இளைப்பாறலுக்குப்பின்..
-----------------------------------------------------------------

“நெசமா தான் சொல்றியாம்மா…?”

ஆச்சர்யமான குரலில் அதிர்ச்சி இல்லாமல் கேட்டேன் நான்.
“ஆமாண்டா.. என்னமோ தெரியல. அன்னிக்கு வந்ததிலேர்ந்தே அவ முகம் சரியில்ல. சரி. எல்லாம் சரியாயிடும்னு பார்த்தா இப்போ திடுதிப்புன்னு ஹாஸ்டலுக்குப் போயிட்டாளாம். உன் அப்பாவும் அவளுக்கு நிறைய தடவை போன் பண்ணி பார்த்துட்டார். ஆனா எடுக்க மாட்டேங்கறா. அவ மேல செம கோவத்துல இருக்கார்.”
அதிசயம் தான். தேன் இப்படியெல்லாமா முடிவெடுப்பாள்? தெரியாமல் குழம்பினேன். ஆனாலும் கிறுக்கு புத்தி காரணமில்லாமல் யோசித்தது. ‘ஒரு வேளை இவளும் காதல் அது இதுன்னு மாட்டியிருப்பாளோ?’

வழக்கமான யோசனையினூடே அலுவலகத்துக்கு கிளம்பினேன். நாட்கள் புரண்டோடியது. அவ்வப்போது தேன்மொழியைப் பற்றிய தகவல்கள் அம்மா மூலமும் என்னுடன் தங்கியிருந்த கணேஷ் மூலமும் தெரியவரும். ஏனோ அவளிடம் எனக்கு பேசத் தோன்றவில்லை. எதுவாயிருந்தாலும் நேரில் சந்திக்காமல் வீட்டை விட்டு ஹாஸ்டலில் போய் அவள் தங்கியது என்னையுமறியாமல் அவள் மேல் கடும்கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.
“இன்னிக்கு அக்கா போய் தேன ஆபிஸ்ல பாக்கப் போனாங்கடா… இவங்க வந்தது தெரிஞ்சுக்கிட்டு அவ வெளியில வரலியாம். கடைசியில பாக்காம திரும்பி வந்துட்டாங்க. ரொம்ப பிடிவாதக்காரியா இருக்கா. இது போல எப்பவுமே இருந்ததில்ல. அந்த சம்பந்தம் வேண்டாம்னா சொல்லியிருக்கலாமே.. இப்படியா ஒருத்தி பண்ணுவா..” வழக்கமான தொலைப் பேசி உரையாடலில் அம்மா.

“யே.. குமார் (தேன்மொழியின் தம்பி) போன் பண்ணிருந்தான். யார் கூடயும் அவ பேசறதில்லையாம். மூணு மாசமா சம்பளம் கூட குடுக்கலியாம். அவள பாக்கவும் முடியலியாம். என்ன பண்றானே புரியலியாம். என்னமோ போ.. என் அக்கா தான் அப்படின்னா.. இவளும் இப்படியா.. ஒன்னும் சொல்றதுக்கு இல்லை..” ஏதோ ஒரு நாள் அரட்டையில் கணேஷ்.

கணேஷ் தான் அந்த செய்தியை சொன்னான். “டேய். இப்போ தெரிஞ்சுடுச்சு. அவ யாரையோ அவங்க ஊரிலேயே லவ் பண்ணியிருக்காளாம். அவன தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு அடம் புடிக்கறாளாம். அதனால தான் வீட்ட விட்டு வெளியே போனாளாம்.”

‘நாம் நெனச்ச மாதிரியே இதுவும் லவ் தானா? அதுக்காக வீட்ட விட்டு வெளியே போறதா….ச்சே’

உடனே அம்மாக்கு போன்.

“என்னம்மா இப்படி ஒரு ந்யூஸ்…”

அம்மாவிடமிருந்து பதிலில்லை. ‘எல்லோரும் தெரிஞ்சுக்கிட்டே தான் நடிக்கறாங்களா’

“உனக்கு யாருடா சொன்னா…? அப்படியெல்லாம் இல்லை.”

“இல்ல. அது தானாம். அவ இப்போ எங்க இருக்கா தெரியுமா…? சென்னையில அவ வீட்டில”

“எனக்குத் தெரியாது. அவளப் பத்தி பேசறதே இல்ல. இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும். ”

“கணேஷ் தான் சொன்னான்…”
-----------------------------------------------------------------------------------------------------------------------------
ஹாஸ்டலில் தங்கியிருந்த தேன்மொழி அந்த வாரம் கோயம்புத்தூருக்கு சென்றிருக்கிறாள். அங்கு மீனாட்சி வீட்டில் தங்கியிருக்கிறாள். பிரச்சனை தெரிஞ்சாலும் மீனாட்சி என்ன ஏதென்று கேட்கவில்லை. அவள் பையனுக்கு உடம்பு சரியில்லையென்று பெரியம்மாவும் பெரியப்பாவும் அங்கு தான் இருந்திருக்கிறார்கள்.

நண்பர்களைப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று சொல்லி வெளியே போனவள் மாலை வந்திருக்கிறாள். அதுவரை அவளிடம் எதுவும் கேட்காமலிருந்த பெரியப்பா..

“என்னம்மா.. என்னன்னமோ கேள்விப்பட்டேன். உண்மையா.. வீட்ல நீ இல்லையாமே..”

“எங்கியாவது கோயிலுக்கு போலாமா பெரிப்பா…”

எதையோ சொல்லப் போறாள் என்று பெரியப்பாவும் அவளுடன் கிளம்பி சென்றிருக்கிறார். கோவிலில்,

“பெரிப்பா.. நான் ஒருத்தர காதலிக்கறேன். அவர் வீடும் இங்க தான் இருக்கு. அவங்க வீட்டுக்குப் போக தான் வந்தேன். நீங்க தான் வீட்ல சொல்லணும்..”

அதிர்ந்து போயிருக்கார் பெரியப்பா. ‘ஏற்கனவே என் வீட்ல நடந்த கல்யாணத்தை தான் ஊரே பாத்து சிரிச்சுது. இது வேறயா..’
“என்னம்மா. இப்படி சொல்லிட்ட. எதுனாலும் உங்க அம்மா அப்பாகிட்ட பேசு. பிரச்சனையானா பாத்துக்கலாம். நீ அவங்க வீட்டுக்கு தான் வந்தேன்னு எனக்குத் தெரியாது. சரி.. வா வீட்டுக்குப் போகலாம்.”
பெரிதாய் எதிர்பார்த்திருந்த பெரியப்பாவும் சரிவர பேசாததால் கண்கலங்கி வீட்டுக்கு சென்றிருக்கிறாள் தேன். அங்கு அவளைப் பார்த்த பெரியம்மா என்னவென்று விசாரிக்க பெரியப்பா விஷயத்தைச் சொல்ல பெரியம்மாவும் அரண்டு போயிருக்கிறார்கள்.

“என்னடி.. இப்படி குண்ட தூக்கிப் போடற? ஏற்கனவே இவ கல்யாணத்துனால உறவுக்காரங்க யார் கூடயும் சரியான பேச்சு வார்த்தை இல்லை. என்னங்க.. இவளை நீங்களே கூட்டிட்டு போய் அவ வீட்டுல விட்டுட்டு வந்துடுங்க…”

அவசர அவசரமாக அன்றிரவே வண்டியேறி தேன்மொழியை கூட்டிக்கிட்டு சென்னைக்குப் போய் பெரியப்பா விட்டு விஷயத்தை சொல்லவும் இதுவரை வாழ்க்கையில் அதிகமாய் பொறுப்புகளை சுமக்காதவரும் எதிலும் அதிகம் அக்கறையில்லாதவருமான என் சின்ன பெரியப்பா… தேன்மொழியின் அப்பா அவரைத் திட்டியிருக்கிறார்.

“ஒழுங்கா இருந்த என் பொண்ண கெடுத்ததே நீங்க தான்ய்யா….”


-நிறங்கள் இன்னும் மாறும்.

இளசு
18-10-2008, 12:57 PM
பதினாறும் பெற்ற பெரிய குடும்பக்கதை..

பெரியம்மாக்களிலேயே பெரிய, சிறிய என ஆரம்பிக்க
கதைமாந்தர்களைத் தொடர்ந்திட என் சின்ன மூளை கொஞ்சம் குழற.

ஆனாலும், மதியின் தெளிவான நடை அதை எளிதாக்கி
பின் ஒன்றி வாசிக்க இயன்றது..

நிறம் மாறிய என்பதிலேயே ஒரு மனத்தாங்கல் தெரிகிறதே மதி...


கூட்டமாய் சேர்ந்து அமுக்கும் குடும்பங்களில் -
இப்படி ஒரு வெளி சன்னல் காற்றுக்கு வரவேற்பு கூடுதலாக இருக்குமோ என்னவோ?

மீனாட்சி, தேன்மொழி என இரு களங்களில் கதை நகர்ந்ததில் -
இப்போது அப்பாவி சித்தப்பா ( சிறிய?) பலிகடா ஆவது புதுத் திருப்பம்..

அத்தியாயங்களை ஆச்சரியக்குறி வசனத்துடன் ஆரம்பிக்கும் உத்தி தொடர்வதற்கு சபாஷ்!

உரையாடல்கள், உறவுப் பிணைப்புகள், உள்மனக் கேள்விகளைக்
கோர்வையாய் சொல்லும் திறனுக்கு ஷொட்டு!

மழைநேரச் சிறையிருப்பை மன்றக்கதை எழுத பயன்படுத்திய
நேரமேலாண்மைக்கு வந்தனம்..

அப்பா இக்கதையைப் பாராட்டினார் என்பதில் கூடுதல் பெருமிதம் எனக்கும்..

நல்ல கதையாரிசியராய்ப் பரிமளிப்பதற்கு பின்னூட்டங்களே சாட்சி!

மெகாசீரியல் தயாரிப்பாளர்கள் கண்ணில் படாமல் பார்த்துக்கணும்.. ஹ்ஹ்ஹ்ஹா!:):)

மனமார்ந்த பாராட்டுகள் மதி.. தொடர்க!

மதி
18-10-2008, 03:38 PM
மிக்க நன்றி இளசு அண்ணா...
தங்கள் விரிவான விமர்சனத்திற்கு... முதலில் எழுத ஆரம்பித்துவிட்டேன். ஆயினும் அடுத்தப் பாகங்களைக் கொண்டு போவதில் ஏகப்பட்ட சிக்கல். குழப்பம்.

இப்போ தானே கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிட்டு இருக்கேன்... அடுத்தடுத்த கதைகள் குழப்பங்கள் இல்லாமல் இருக்கும் என்று நம்புகிறேன். :)

மெகா சீரியலா.. ஆள வுடுங்க சாமி.