PDA

View Full Version : எனக்கென ஒரு பிள்ளை



Keelai Naadaan
07-09-2008, 03:48 AM
ட்ரிங்..ட்ரிங்..ட்ரிங்..ட்ரிங் என்ற தொலைபேசி சத்தத்தை கேட்டு கண்விழித்தாள் சுகந்தி. தூக்க கலக்கத்துடன் ஹலோ.. என்றாள்.
"அக்கா ரமேஷண்ணா என்சிட்டாங்களா..ஆ" சிபி கெஞ்சும் மழலை குரலில் கேட்டான்
இன்னும் இல்லடா வந்து எழுப்பு.. வா. என்றாள் சுகந்தி
ஹேங். சரி. தொலைபேசியை வைத்தான்.

அப்பா.. அப்பா.. என்றபடி சிவாவை எழுப்பினான் சிபி.
ஹ¤ம்...என முனகினான் சிவா தூக்க கலக்கத்துடன்
"இத எடுத்துக்கவா" கையில் ஒரு மடித்திருந்த தாளையும் சில தென்னை துடப்பம் குச்சிகளையும் வைத்த படி கேட்டான் சிபி
சிவா அதை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு ம்..ம் என்றபடி கண்ணை மூடிக்கொண்டான்.

சிபி அதை எடுத்துக்கோண்டு ஓடினான். நான்கு வீடு தள்ளியிருக்கும் ரமேஷண்ணா வீடுதான் சிபிக்கு காற்றாடி தயாரிக்கும் தளம். தயாரிப்பாளர் ரமேஷண்ணா தான். நேற்று மாலை வெளிச்சம் மங்கிவிட்டதால் ரொம்ப நேரம் விளையாட முடியவில்லை. "காலையில பேப்பர் கொண்டு வா ஒனக்கு செஞ்சுதர்ரேன்" என சொல்லியியிருந்தான் ரமேஷ். அதனால் அதிகாலை எழுந்தவுடனேயே தளத்துக்கு வந்திருந்தான். இந்த ரமேஷண்ணா முன்பெல்லாம் காலையில் சீக்கிரமே எழுந்துவிடுவான். டீ கடைக்கு போகும்போது சிபியையும் அழைத்து செல்வான். பிஸ்கட், கேக், வரிக்கி ஏதாச்சும் வாங்கி கொடுப்பான். இப்ப ரெண்டு மாசமா கல்யாணம் ஆனதிலிருந்து எழுந்திருக்க லேட் ஆகுது. நேற்று இரவு அப்போது ரிலிஸாகியிருந்த "சூரியன்" படம் பார்த்துவிட்டு வந்த அசதி வேறு.

எல்.கே.ஜி படிக்கும் சிபி, வீட்டிலிருக்கும் நேரத்தை விட ஊர்சுற்றும் நேரம் அதிகம். அதற்கே நேரம் போதாது. அக்கம்பக்கம் உள்ள எந்த வீட்டுக்கும் எந்த நேரமும் போய்வர அவருக்கு அனுமதி இருந்தது.
அவனுடைய குண்டு கண்ணமும், குறுகுறுத்த கண்ணங்களும், சற்று சதை பிடித்த உடலும், தொப்பையும், அவனுடைய மழலை குரலும், அவனது நடையும் யாரையும் மயங்க செய்யும்.
அப்படி மயங்கித்தான் சமீபத்தில் திருமணமாகி வந்த சுகந்தி சிபிக்கு போன் செய்ய கற்று கொடுத்தாள்.

எட்டு மணிக்கு மேல் இருக்கும். சிவா எதையோ தேடிக்கொண்டிருந்தான். மறுபடி ஒருமுறை யோசித்தான்.
"இங்கதான் வச்சேன்".. மேசை மேலிருந்த காகிதங்களை, புத்தகங்களை அடுக்கி வைத்தான்.
மீனா..மீனா.. இங்க டேபிள் மேல ஒரு டிராயிங் இருந்துச்சே பாத்தியா?
நா எதயும் பாக்கல. வச்ச எடத்தில தேடிப்பாருங்க.. என்றாள் மீனா. சமயலறையில் வேளையாக இருந்தாள். வீடு முழுதும் முருங்கைக்காய் சாம்பார் மணம் பரவியிருந்தது.
வச்சா வச்ச எடத்தில இருக்காதெ இந்த வீட்டில.... சிவா கோபமாய் கத்தினான். "ஹே..ப்ளீஸ்ப்பா தேடிப்பாருப்பா... இம்பார்டண்ட் டிராயிங்ப்பா" கெஞ்சவும் செய்தான்.
"ஆமா.. நைட்டெல்லாம் கொட்டகொட்ட முழிச்சுகிட்டு டிவியில கண்டத பாக்கிறது. கைய கால வச்சுகிட்டு நம்மயும் தூங்க விடுறதில்ல. காலையில அதக்காணும் இதக்காணும்னு தேடுறது"
என வசவு பாடிக்கொண்டே மீனா தேடினாள்.

சிபி காலையில எதையோ எடுத்துக்கவான்னு கேட்டானே.. இப்ப அவன எங்க... ஞாபகம் வந்தவனாய் கேட்டான் சிவா
ரமேஷ¤ வீட்டுக்கு போயிருப்பான் என்றவள் வாசலுக்கு வந்து கூவி அழைத்தாள். "சிபீ...டே..சிபீ..ஈ..."
"என்னம்மா".. ரமேஷ் வீட்டு மாடியிலிருந்து குரல் கொடுத்தான் சிபி. முகம் மட்டும் தெரிந்தது. உயரத்தில் பறந்து கொண்டிருந்த பட்டத்தின் கயிறு அவன் விரல் நுனியில் கட்டப்பட்டிருந்தது. மீனாவை பார்த்தவுடன் "அம்மா காத்தாடி..காத்தாடி" வாயெல்லாம் பல்லாய் சிரித்தான். குதித்தான்.
அது போதாதா அவளுக்கு.. "என்னங்க சீக்கிரம் வாங்க அவ(ன்) ஆடுறத பாருங்க." என்றாள். சிவா வெளியில் வந்தான்.
அவன் கொண்டு வந்திருந்த வரைபடம் வாலை ஆட்டிக்கொண்டு காற்றாடியாக பறந்து கொண்டிருந்தது. சிவாவுக்கு "திக்" கென்றது. மனதில் கலவரத்துடன் காற்றாடியை பார்த்தான்.
அய்யோ அந்த வில்சன் சார்கிட்ட பதில் சொல்ல முடியாதே..!!!

"அப்பா காத்தாடி..காத்தாடி". சிபி காற்றாடியைவிட அழகாய் ஆடினான்.
சிவாவின் முகமாற்றத்தை பார்த்த மீனா "அதுவா..?" என கேட்டாள். சிவா முகத்தில் கடுகு போட்டால் கடுகு வெடித்து விடும் போல் இருந்தது.
சிபி இங்க வாடா" என அழைத்தபடி சென்றாள். மாடியில் நின்றிருந்த ரமேஷ் பட்டத்தை இறக்கினான். சிபியை இடுப்பில் அமர்த்தி தூக்கி வந்தாள். அவன் கையில் காற்றாடி இருந்தது.

செல்லம் அப்பா டேபிள்ள இருந்து எதும் பேப்பர எடுத்தியாம்மா...?
ஆமா அப்பாதான் எடுத்துக்க சொன்னாரு.
எப்ப...?
அப்பல
மீனாவுக்கு சிரிப்பை அடக்கமுடியவில்லை. சிவா கோபத்தில் இருந்தான். கஷ்டப்பட்டு அடக்கி கொண்டாள்.

அப்பா இதா தேடுறிங்க...
எந்திரத்தின் படம் வரையப்பட்ட ஏ2 வடிவ அம்மோனியா ப்ரின்ட் வரைபடத்தாள் சதுரமாய் வெட்டப்பட்டு காற்றாடியாய்.
ராஸ்கல்.. இத ஏண்டா எடுத்த..? சிவா கத்தினான்
அப்பல நீங்கதான எட்த்துக்க சொன்னிங்க.. சிபி சினுங்கினான். மீனா முந்தானையால் தன் வாயை மூடிக்கொண்டாள்.
சிவாவிற்கு சிரிப்பு ஒருபுறம். கோபம் ஒரு புறம்.
காற்றாடியை வாங்கி கொண்டு "இனிமே எதையும் சொல்லிட்டுதான் எடுக்கனும். ம்ம்..சரி போ" என்றான் அதட்டலாய்.
"நா அப்பவே சொன்னேன்... அத (காத்தாடிய) நீங்களே வச்சுக்கோங்க". சிபி கோபமாய் மீனாவின் இடுப்பிலிருந்து இறங்கினான். வேகமாய் ரமேஷ் வீட்டுக்கு போனான்.

குழந்தைகளுக்கே உரிய ரோஷம், தன்மான உணர்ச்சி அவனுக்கும் இருந்தது. குழந்தைகள் அவர்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டால் உடனே கூடிவிடுவார்கள். பெரியவர்கள் திட்டிவிட்டால் ரோஷத்துடன் போய்விடுவார்கள். குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பது உண்மையே.
சிவா ரமேஷ் வீட்டுக்கு சென்று வரைபடத்திலிருந்து கிழிக்கப்பட்ட மீதி காகித்ததை வாங்கிகொண்டு வந்தான்.
சிபியும் ரமேஷ¤ம் மாடியிலிருந்த நீர்த்தொட்டி மீது அமர்ந்து அடுத்த தயாரிப்பில் இறங்கினர். அங்கே தான் யாரும் வரமாட்டார்கள். மேலும் அங்கிருந்து பார்த்தால் சாலை முழுதும் பார்க்கலாம்.

"ஏங்க, தொட்டியில தண்ணி இருக்கா பாருங்க, காலையிலதான் மோட்டர் போட்டேன், மாமா பாத்ரூமில தண்ணி வரலைங்கிறார்." என்றாள் சுகந்தி
ரமேஷ் தொட்டியில் பார்த்தான். முக்கால் தொட்டி நீர் இருந்தது. உற்று பார்த்தபோது வெள்ளை நிற நூல்கண்டு ஒன்று தொட்டிக் குழாயில் அடைத்து நூல் நுனி அலைந்து கொண்டிருந்தது.
"இத யார் இங்க போட்டாங்க" ரமேஷ் சலிப்பாய் முனகினான்.
டிரவுசரில் எதையோ தேடிய சிபி யதேச்சையாய் கத்தினான்... கத்தினான் என்பதை விட பதட்டத்தில் அலறினான் என்பதே உண்மை. "அய்யய்யோ! அண்ணா என் நூல்கண்ட காணோம்."
.....................................................

சிவா வீட்டு வாசலில் "பைக்"கில் அமர்ந்த படி ஹாரன் செய்து சிபியை நோக்கி டாட்டா காண்பித்தபடி கையசைத்தான். கனத்த உயரமான சிவாவின் உடலுக்கு அந்த பைக் பொருத்தமாய் இருந்தது.
சிபியும் "டாட்டா" என கையசைத்தான். வழக்கமாக சிவா வேலைக்கு செல்லும் சமயங்களில் சிபியும் ஒரு சுற்று சென்று வருவான். இன்று சிபி ரொம்ப பிஸி.

சிபி பட்டம் விட்ட கதையும் நூல் உருண்டை நீரில் அடைத்த விஷயமும் அக்கம்பக்கம் எங்கும் சுவாரஸ்யமாய் பேசப்பட்டது. இதுதான் என்றில்லை. எங்கொழந்தய அடிச்சிட்டான், எம்பிள்ளைய கிள்ளிட்டான், கிண்ணத்த கிணத்தில போட்டுட்டான், செப்பு வச்சு விளையாட சொம்பை எடுத்துகிட்டான்.. இப்படி ஏகப்பட்ட புகார் வரும். இப்படி பிள்ளைய பாத்ததேயில்ல என்பார்கள். சிலசமயம் அவனே கீழ மேல விழுந்து ரத்த காயங்களுடனும் சிராய்ப்புகளுடனும் வருவான். அவனைப்பற்றி புகார் வரும் போதெல்லாம் 'சிபி இப்படி செய்வியா" என மீனா அதட்டுவாள். நாலு மொத்து மொத்தவும் செய்வாள். ஆனால் உள்ளூர அவளுக்கு சந்தோஷம் பொங்கி வழியும். நாள் தவறாம திருஷ்டி சுத்திப் போடுவாள்.

அன்று மாலை வெகு நேரமாய் சிபியை வீட்டில் காணவில்லை. "விளையாட போயிருப்பான்... வருவான்" என காத்திருந்து பார்த்தாள் மீனா. இன்னும் வரவில்லை.
"சிபீ..சிபீ..ஈஈ" என சத்தமாய் அழைத்தாள்.
" டே சிபிய பாத்திங்கலாடா" அங்கிருந்த சிறுவர்களை கேட்டாள்
"இங்க சிபி வந்தானா..?" சில வீடுகளுக்கு சென்று கேட்டாள்.
எல்லோரும் கை விரித்தனர். பயத்தில் நெஞ்சு படபடவென அடித்தது. கைகால்கள்பரபரத்தது. வயிற்றை கலக்கியது. அழுகை வந்தது. விஷயம் விரைவாய் பரவியது. அங்கிருந்த பிள்ளைகளும் சில பெண்மணிகளும் கூட தேடினார்கள் நேரம் ஓடியது.. "அய்யோ பிள்ள எங்க போனான்"..

சிவாவிற்கு போன் செய்து அழுகிற குரலில் விசயத்தை சொன்னாள்.
"அங்கதான் இருப்பான் தேடிப்பாரு, நான் இப்ப வர்ரேன்" என்றான் சிவா.

ரமேஷ் அருகிலிருந்த ஏரிக்கு அருகே சென்று அங்கிருந்தவர்களிடம் விசாரித்தான். மனசு கேட்காமல் ஏரியில் இறங்கியும் தேடினான். வேறு சில பையன்களும் தேடினார்கள்.

சிபியின் வீட்டு வாசலில் சிலர் கூடிவிட்டார்கள். மீனாவிடம் விசாரிப்பதும், ஆறுதல் சொல்வதுமாயிருந்தார்கள். சிவா வீட்டுக்கு வந்தபோது மணி எழாகியிருந்தது. வாசலில் இருந்த கூட்டத்தை பார்த்து சற்று கலவரமானான். அவனை பார்த்ததும் மீனா வாய் விட்டு அழுதாள். "அய்யோ எம்பிள்ளை பசி தாங்க மாட்டானே..சாப்ட்டானா தெரியலயே" என மடார் மடாரென்று முகத்திலும் நெஞ்சிலும் அடித்து கொண்டாள். சிவா அவளை பிடித்து ஆறுதல் சொன்னான். கலைந்திருந்த அவள் முந்தானையை சரியாய் போட்டுவிட்டான். அவள் உடல் நடுங்கியது. தடவி கொடுத்தான்.
........................................................................................

அவளுக்கு மனதில் ஏதேதோ ஓடியது. நான்கு வருடங்களுக்கு முன்பு, திருமணமாகி ஐந்தாண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத காலம். இந்த மாசம் நின்னுடும்..இந்த மாசம் அதான்.. என ஒவ்வொரு தள்ளிப்போதலையும் மீனா ஆசையாய் சொன்ன நாட்கள். குழந்தைகள் மேல் பாசம் அதிகம் அவளுக்கு. அந்த பிள்ளையார் சிலைய பாருங்களேன் தூக்கி இடுப்பில வச்சுக்கலாம் போல இருக்கு. என்பாள். அந்த தவழ்ற கண்ணன் படத்தை பாருங்களேன் என்ன அழகாயிருக்கு..

மருத்துவத்துக்கு அழித்த காசு இருந்தால் ஒரு சிறிய மருத்துவமனையே கட்டலாம். சிவாவிற்கு உயிரணு செல் குறைவு, நீந்து சக்தி குறைவு, ஏதேதோ காரணம் சொன்னார்கள். மீனாவுக்கு கருக்குழாய் அடைப்பு என்றார்கள். தம்பதிகளுக்கு மருந்து மாத்திரை தந்தார்கள். இரண்டு வருடம் மருத்துவம் பாத்தாச்சு. நம்பிக்கை குறைந்தது. உடலின் எந்த நோயையும் யாரிடமும் சொல்லி ஆறுதலாவது அடையலாம். இதை எப்படி சொல்லமுடியும்.

ஒருமுறை மீனாவின் அண்ணன் மகன் கோபி பக்கத்து வீட்டு குழந்தையை அடித்து விட்டான். அவனை கண்டிக்கும் விதமாக மீனா கோபியை அதட்டியதோடு முதுகில் ஒன்று போட்டாள்.
அப்போது அண்ணி சொன்னாள் "மொதல்ல அவன் தான் அடிச்சான், அப்புறம் தான் கோபி அடிச்சான். இவன ஏன் அடிச்ச" என்றவள் சற்று மெதுவான குரலில், " குதிரையோட கொணம் தெரிஞ்சுதான் ஆண்டவன் அதுக்கு கொம்ப தரல" என முனுமுனுத்தாள். மீனா காதில் கெட்டது.
அவளின் வேதனை சொல்ல தரமல்ல. "அவனுக்கு (கோபிக்கு) எத்தனதடவ டிரெஸ் எடுத்து தந்திருக்கேன் எத்தனதடவ குளிப்பாட்டியிருக்கேன், சாப்பாடு ஊட்டியிருக்கேன். ஒரு அடி அடிச்சதும் அம்மாக்கிட்ட ஓடிட்டான். இதே ஏம்மகனா இருந்தா ஓடுவானா, அடிச்சா கூட அம்மாகிட்டதான வரும் பிள்ளைங்க..... அண்ணி அப்புடி சொல்லிட்டு போறாங்களே நா என்ன அவ்வளவு கொடுமக்காரியா" என அழுதாள். சிவாவுக்கு பெரிய தர்மசங்கடம். அவனால் ஆறுதல் சொல்லமுடியாத நிலை. இனம் புரியாத குற்றவுணர்வு. அவன் எதுவும் சொல்லவில்லை. சில சமயங்களில் சிறுவர்களின் விளையாட்டு சண்டைகள் கூட பெரியவர் மனங்களில் மனகசப்பை வளர்க்கும் என்பது அவனுக்கு தெரியும்.

மற்றொரு சமயத்தில், சிவாவின் சகோதரிக்கும் அவள் கணவருக்கும் சண்டை. அடிக்கடி நடப்பதுதான், அவளை அடிப்பது வழக்கமான ஒன்றுதான். அன்று சிவாவின் கண்ணெதிரே அது நடந்தபோது சிவா கோபத்துடன் திட்டினான். பரஸ்பர வாய்சண்டையில்,
"இனிமே அவள தொட்டுப்பாரு" என்றான்.
"பொண்டாட்டிய தொடாம எப்புடி குடும்பம் நடத்துறதுன்னு ஒங்கிட்டதான் கத்துக்கணும்" என்றான் சகோதரியின் கணவன் பதிலுக்கு.
நரம்பில்லாத நாக்குகள். வரம்பில்லாத வார்த்தைகள். சிவா குறுகி போனான்.
.........................................................

ஒருநாள் சிவாவுக்கு மருத்துவம் பார்த்த டாக்டர் ஒரு குழந்தையை காட்டினார். அதன் தாய் சில தினங்களுக்கு முன் அந்த மருத்துவமனையில் இறந்திருந்தாள். அவளைப்பற்றி அவள் மருத்துவமனையில் பொய்யான தகவல்கள் சொல்லியிருந்தாள். அதனால் இறந்த பிறகு அவளை பற்றி விபரம் தெரியவில்லை.
சிவா குழந்தையை பார்த்தான். பிறந்து எட்டே நாள் ஆன ஆண் சிசு. பூவினும் மென்மையான உடல். இன்னும் தொப்புள்கொடி விழவில்லை. செம்பஞ்சு பாதம். பிஞ்சு கைவிரல்கள். மூடியிருக்கும் கண்கள்.
சிவா இந்த குழந்தைய அனாதை இல்லத்துக்கு அனுப்ப போறேன். அதுக்கு முன்னால ஒங்ககிட்ட காட்டி கேட்கணும்னு தோணுச்சு..... என்றார் டாக்டர்.

ஆனால் அன்று வேண்டாமென வந்து விட்டார்கள். மனசு கேட்கவில்லை.
"இன்னும் கொஞ்ச நாள் பாக்கலாமே" என்றார் சிவாவின் அண்ணன். அவருக்கு இரண்டு பிள்ளைகள்.
எல்லாம் பாத்தாச்சு..என்றான் சிவா.
"அண்ணன் பிள்ளைங்க இல்லயா.. தங்கச்சி பிள்ளைங்க இல்லயா..?" என்றாள் அம்மா
"எனக்குன்னு ஒரு பிள்ள இருக்கா.. நா உரிமயோட அடிக்க அனைக்க எனக்கு ஒரு புள்ள வேணும்..இங்க எல்லாரப் பத்தியும் எனக்கும் தெரியும்" என்றாள் மீனா.

வீட்டு பெரியவர்களுடன், சகோதர உறவுகளுடன் காராசார விவாதங்கள். மனக்கசப்புகள். முற்றிய தடித்த வார்த்தைகள். கண்ணீர்.
எல்லாவற்றையும் மீறி இரண்டு தினங்களுக்கு பிறகு குழந்தையை தூக்கி வந்தார்கள். அந்த சிசுதான் சிபி.

சில நாட்களுக்கு பிறகு சென்னை புறநகர் பகுதிக்கு வீடு மாறினார்கள். சிபி மீனாவின் சொந்தக் குழந்தையென்றே அங்கிருக்கும் பலரும் நினைத்திருக்கிறார்கள்

மணி இரவு எட்டு ஆகிவிட்டது. சிபியை தேடிப்போனவர்கள் எல்லாம் திரும்பி விட்டார்கள்.
சிவா வேதனையில் கோபமாய் கத்தினான். "பிள்ளய பாக்காம என்ன புடுங்கிற வேல ஒனக்கு"
எப்பவும் போலத்தான் விளையாடிக்கிட்டுதான் இருந்தான். எங்க போனான்னு தெரியலயே..என்றபடி மீனா அழுதாள். பூஜையறைக்குள் சென்று கதவை தாழிட்டுக்கொண்டாள்.
சுவர் ஓரமாய் அமர்ந்தாள். கண்களில் நீர் வழிந்தது. "எத்தனையோ வருசத்துக்கப்புறம் இப்பத்தான் நிம்மதியாயிருக்கேன் அது ஒனக்கு புடிக்கலயா..? குருட்டுத்தெய்வமே" மனதில் நினத்தாள்.

ரமேஷ் சிவாவிடம் மெதுவாய் சொன்னான் "போலிஸ்ல கம்ப்ளெய்ண்ட் பண்ணி பாக்கலாமா"
ஒரு ஆட்டோவில சொல்லி தெருதெருவா தேடலாமே..என்றான் சிவா

ரமேஷ் ஆட்டோ ஏற்பாடு செய்ய போனான்.
எங்கயோ தூரத்தில் "சிபி இருக்கான்..சிபி கிடைச்சுட்டான்னு" குரல் கேட்டது.
எல்லோரும் அந்த பக்கத்தை பார்க்க ஒரு பெண்மணி சிபியை தூக்கி வந்தார். அவர் இடுப்பிலிருந்துகொண்டு ஹா..வென...தூக்க கலக்கமாய் கொட்டாவி விட்டார் சிபி.

அக்கா சிபி கிடச்சுட்டான்..னு குரல் கொடுத்தாள் சுகந்தி. பூஜையறையிலிருந்து அவசரமாய் வெளியில் வந்த மீனா சேலை தடுக்கி கீழே விழுந்து மீண்டும் எழுந்து வெளியில் ஓடி வந்தாள்.
சிபியை பார்த்து எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி பரவியது. சந்தோஷமாய் பேசிக்கொண்டார்கள். சில சிறுவர்கள் அவனை பார்க்க ஓடினார்கள்.

அவனை தூக்கி வந்த பெண்மணி உடன் வரும் பெண்ணிடம் சொன்னார்" இந்த ரோடு கடசில பொன்னிம்மா கோயிலு இல்லம்மா, அதுக்கு பின்னால, அங்கன ஒரு புள்ள பட்த்து தூங்குது யாருதுன்னு தெர்லன்னு கடக்கி போன ரெண்டு பொம்பளைங்க பேசின்னு போச்சுங்க. நாமதான் சிபிய காணோம்னு தேடுறமேன்னு அங்க போனேன். போய் பாத்தா புள்ள தூங்கின்கிறான்."
இவன் எதுக்கு அவ்ளோ தூரம் போனான்..?
இது காலு ஒரு எடத்துல நிக்குமா..?
இந்த எந்த பதற்றத்தை பற்றியும் தெரியாமல் ஹ்.ஹா..வென மீண்டும் கொட்டாவி விட்டார் கும்பகர்ண சிபி.
..........................................................

வருடங்கள் பல ஓடி விட்டன. இப்போது சிபி பத்தாவது படிக்கிறான். பள்ளியில் விளையாட்டுப் போட்டிகளில் நான்கு போட்டியில் வென்றிருக்கிறான். அவன் பரிசு பெறும் அழகை காண பள்ளியில் காத்திருக்கிறார்கள் மீனா சிவா தம்பதியினர். அவர்கள் விழிகளில் சிபியைப் பற்றிய எதிர்கால கனவுகள்.

அமரன்
08-09-2008, 09:40 AM
கீழை நாடான்...
கதை எங்கே போகிறது என்பதை ஆராயாமல் அதன் போக்கில், கதையின் நடுவாக நீந்தி போனேன். குழந்தை இல்லாத தம்பதியினரின் அவல ஆழத்தை அடைந்தபோது செயலற்று மூழ்கிப் போனேன்.

அந்த தம்பதியினரின் மேல் அளவு கடந்த அன்பை வைத்திருக்கும் இன்னொரு உயிரின் உணர்வுகள் நினைவுக்கு வந்து கலங்கடித்தது.

சுய நினைவுக்கு வந்து பின்னர் என்ன நடந்தது என்பதை அறிய அதிக நேரம் எடுத்தது. அறிந்ததும் நெஞ்சுக்குள் அதிவேக ரயில். கதைப்பயணம் சுபமான பின்னும் என்னுள் அதன் அதிர்வுகள். வாழ்த்துக்கள்.

வேறுயார்தான் என்னதான் அன்பாக இருந்தாலும் நிலைகுலையும் வேளையில் அன்னைமடி தேடும் பிள்ளை. எனக்கென ஒரு பிள்ளையை ஆணித்தரமாக்க்கிறது.

அநாதரவான பிள்ளைகளை அறியாத வயசில் தத்தெடுக்க வேண்டும். அதை பிள்ளை அறியாவண்ணம் கடைசிவரை காக்க முயல வேண்டும். அப்படிச் செய்பவர்கள் தான் உண்மையான தத்துப் பெற்றோர்கள். அதை வலியுறுத்தும் இதுபோலக் கவிதைகள் நிச்சயமாக வரவேண்டும்.

அதேபோல இருக்கும் தாய்மையை இல்லாத பிள்ளையை நினைத்து அழிக்காமல் தாய்மையின் அருகாமை கிடைக்காத பிள்ளைகளுக்கு கட்டாயமாக அளிக்க வேண்டும்.

Keelai Naadaan
08-09-2008, 05:48 PM
மனமார்ந்த நன்றிகள் அமரன்.
உங்கள் விமர்சனத்தை பார்த்த போது, சொல்ல நினைத்ததை சரியாக சொல்லியிருக்கிறேன் என்ற மனதிருப்தி ஏற்படுகிறது.
மிக்க நன்றி

பென்ஸ்
09-09-2008, 01:17 AM
சம்பவங்களை குழப்பாமல் கொடுப்பது ஒரு கலை...
அதை சரியாக செய்து இருக்கிறிர்கள்...
கரு வலி+மெய்யானது= வலிமையானது
வாழ்த்துகள்...

Keelai Naadaan
09-09-2008, 03:08 PM
தாங்கள் தரும் ஊக்கத்திற்கு மிக்க நன்றிகள் பென்ஸ்.

இளசு
12-09-2008, 07:18 PM
அன்பு கீழைநாடன்,

நீங்கள் பதித்த உடனே படிக்க நினைத்து,
மனம் அமைதியாய் வாசிக்க நேரம் அமையும் வரை விரதம் இருந்து
இன்றுதான் வாசித்தேன்..

ஒரே மூச்சில் வாசித்தேன்..

அந்தத் தாய் மனமாய் மாறி சிபி மேல் அன்பைச் செலுத்திச் சுவாசித்தேன்..

அமரன் சொன்ன கதை நோக்கமும், இனிய பென்ஸ் சொன்ன கதைக் கரு வலிமெய்யும்
சத்திய வாக்கியங்கள்..

நாத்தனார் சொல்லும், மைத்துனன் சொல்லும் - எத்தகைய விஷ ஊசிகள்!

அது எப்படி, இத்தனை பழகிய இதயங்களின் நாக்குகளால்
இப்படி கணத்தில் ரணமாக்கிவிட முடிகிறது?

கோகுலக்கண்ணனின் சேட்டைகளையும் யசோதையின் பாவனைக் கோபம்+ உள்ளூரப் பெருமையும் -
இங்கே சிபி,மீனாவிடம் கண்டேன்.

தேவகியை விட யசோதைக்கே என் அன்பும் அபிமானமும் அதிகம்..

அதை மீனா மீண்டும் ஊர்ஜிதப்படுத்திவிட்டார்.

என் கனிந்த பாராட்டுகள் கீழைநாடன்.

வாய்ப்பு அமையும்போதெல்லாம் எழுத்தோவியம் வரைய உங்களை
அன்புடன் வலியுறுத்தி முடிக்கிறேன்..

நல்ல கதை படித்த என் இதயம் சொல்கிறது - நன்றி நண்பா!

Keelai Naadaan
13-09-2008, 03:52 PM
நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பரே.
உங்கள் விமர்சனம் தந்த போதையில் மனம் ஆனந்த நடனமாடுகிறது.



நாத்தனார் சொல்லும், மைத்துனன் சொல்லும் - எத்தகைய விஷ ஊசிகள்!
அது எப்படி, இத்தனை பழகிய இதயங்களின் நாக்குகளால்
இப்படி கணத்தில் ரணமாக்கிவிட முடிகிறது?
என்ன செய்வது. எல்லோரும் மனிதர்கள் தானே.




கோகுலக்கண்ணனின் சேட்டைகளையும் யசோதையின் பாவனைக் கோபம்+ உள்ளூரப் பெருமையும் -
இங்கே சிபி,மீனாவிடம் கண்டேன்.

தேவகியை விட யசோதைக்கே என் அன்பும் அபிமானமும் அதிகம்..

மகாபாரதம் படித்து கண்ணன், யசோதை, தேவகி பாத்திரங்களை ரசித்தது உண்டு.

ஆனால் ஏனோ இந்த கதையை எழுதும் போது அந்த கதாபாத்திரங்கள் நினைவுக்கே வரவில்லை.
நிதமும் பார்க்கும் தாய்மார்களை பார்த்து தான் இந்த கதையை எழுதினேன்.
காவியங்களில் படித்த தாய்மார்களுக்கு இணையான தாய்மார்கள் இன்றும் நம்மிடையே உண்டு.

குறைகள் இருக்கும் பட்சத்தில் சுட்டிக்காட்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மிக்க நன்றி நண்பரே.

சிவா.ஜி
16-09-2008, 11:53 AM
பிஞ்சுக் குழந்தைகளின் சேட்டைகள்...ரசிக்க ரசிக்க திகட்டாதவை. உங்களின் எழுத்தில் அந்த முதல் பாகத்தை ரசித்துப் படித்தேன். அடுத்த காணாமல் போகும் பாகத்தில், பிள்ளையில்லா பெற்றோருக்கு உறவுகள் கொடுக்கும் காயங்களின் வேதனையை உணர்ந்தேன்.

கடைசியில் குழந்தைக் கிடைத்ததும், வளர்ந்ததுமாய்...அழகான, யதார்த்தமான கதை படித்த திருப்தியடைந்தேன். சிபிக்கு எந்தக்காலத்திலும் அவன் தத்துப்பிள்ளை என்ற உண்மை தெரியாமல் இருக்க வேன்டுமே என மனம் பதட்டப்படுகிறது.

நல்லதொரு கதை. பாராட்டுக்கள் கீழைநாடன்.

(என்னுடைய மகனின் பெயரும் சிபிதான்...நானும் சிவாதான்...அதனால் இந்தக் கதை என்னைக் கவர்ந்ததில் ஆச்சர்யமில்லை..இல்லையா...ஹி...ஹி..ஹி..)

ஐரேனிபுரம் பால்ராசய்யா
16-09-2008, 12:22 PM
குழந்தையின் பாசத்தையும் தாயின் ஏக்கத்தையும் வடித்து வடித்து நீங்கள் கதை எழுதினீர்கள் அதை நாங்கள் ரசித்து ரசித்து படித்தோம். படிப்பவரின் அடிமனதை தொட்டுவிடும் அழகிய கதை.சிபி காணவில்லை என்ற போது படிப்பவரையும் எழுந்து சென்று தேட வைக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. பாராட்டுக்கள்

Keelai Naadaan
16-09-2008, 03:33 PM
(என்னுடைய மகனின் பெயரும் சிபிதான்...நானும் சிவாதான்...அதனால் இந்தக் கதை என்னைக் கவர்ந்ததில் ஆச்சர்யமில்லை..இல்லையா...ஹி...ஹி..ஹி..)
மிகவும் மகிழ்ச்சி.
அருமையான பின்னூட்டம் தந்து தாங்கள் தரும் ஊக்கத்திற்கு மிக்க நன்றி நண்பரே.

Keelai Naadaan
16-09-2008, 03:37 PM
சிபி காணவில்லை என்ற போது படிப்பவரையும் எழுந்து சென்று தேட வைக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. பாராட்டுக்கள்
உங்களுடைய இந்த வரிகளை படித்த போது மனம் மிகவும் மகிழ்கிறது. மிக்க நன்றிகள்

MURALINITHISH
17-09-2008, 08:41 AM
ஒரு பெண்ணுக்குத்தான் தெரியும் குழந்தை இல்லாத அருமை ஆயிரம் குழந்தைகள் இருந்தாலும் தனக்கென்று ஒரு குழந்தைதானே நமதாகும் சாதரணமாக சொல்லபடும் குழந்தை கதை என்று வாசிக்க ஆரம்பித்தால் தத்தெடுப்பு என்னும் அழகிய கருத்தை சொன்ன நண்பருக்கு நன்றிகள் பல

Keelai Naadaan
18-09-2008, 01:37 AM
மிக்க நன்றிகள் முரளி.