PDA

View Full Version : இருளின் நாயகர்கள்… பகுதி -4 (நிறைவு)



தீபன்
04-09-2008, 03:06 AM
இருளின் நாயகர்கள்…4

[பகுதி-1] (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=17404)[பகுதி-2] (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=379492#post379492)[பகுதி-3] (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=379836#post379836)

16
ரமேசின் வெடிப்போடு குலைந்து போன உதவிப்படை மீண்டும் ஒன்று சேர்ந்து நகரத்தொடங்க அதை தடுக்க முயற்சித்த ரிச்சட்டை அவன் தொலைகருவி தாமதிக்க வைத்தது.

“ரிச்சட், சண்டை போதும். திரும்பு. அமலன் கார்த்திக் மதன் எல்லைக்கு வாறாங்கள். அவங்களோட சேர்ந்து கொள்”

“கதிர் நீ….”

“நானும் வாறன், அவங்களுக்கு கவர் எடுத்துக் கொண்டு வாறன்”

“சரி கதிர். கவனம்”

கவனம் என்று சொன்னாலும் இத்தனை ஆண்டு போர் அனுபவத்தில் ரிச்சட்டுக்கு தெரியாததல்ல கவர் எடுப்பதென்பது ஏறக்குறைய தற்கொலைத் தாக்குதலிற்கு ஒப்பபானது என்று.

உதவிப்படை ரிச்சட்டை மறந்து தளத்தை நோக்கி முன்னேற பதுங்கியிருந்த ரிச்சட், எதிரிகள் அகன்ற பின் தாம் ஊடுருவிய எல்லை வேலியை நோக்கி விரையத் தொடங்கினான்.

தளத்தினுள்ளோ, கார்த்திக்கின் வேலை அவ்வளவு சுலபமானதாக இருக்கவில்லை.

தளம் முழுவதும் பகல் போன்ற வெளிச்சத்தில் எதிரிகள் அங்குமிங்குமாக உலாவிக்கொண்டிருந்தனர். இறந்த காயமடைந்த படையினரை அகற்றிக் கொண்டு, பதுங்கியிருக்கும் ஊடுருவிய அணியை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

சற்றுத் தள்ளி வெடித்துச் சிதறிய ஆயுதக்களஞ்சியமும் எண்ணைக்குதங்களும் விமானங்களும் இன்னமும் எரிந்துகொண்டிருந்தன.

சண்டை ஓயவில்லை என்பதைப் போல அவ்வப்போது துப்பாக்கிகள் சடசடத்துக் கொண்டிருந்தன. எதிரிகள் என நினைத்து எதிரிகள் எவரைச் சுடுகிறார்களோ…!?

தாக்குதலிற்கு வரும் போது எதிரிகளின் சீருடையுடனேயே வந்திருந்த ஊடுருவல் படைக்கு அதுவே இப்போது உதவியாக, எதிரி வீரனைப் போலவே சகஜமாக கார்த்திக் தான் படப்பதிவு கருவி பொருத்திய இடத்தை நோக்கி நடந்தான்.

யுத்தத்தின் பரபரப்பில் இருந்த எதிரிகள் தமக்கு மத்தியில் தம்மைப் போலவே தம் எதிரி சகயமாக நடந்து வருவான் என எதிர்பாராததால் கார்த்திக் எந்த ஆபத்தும் இன்றி தன் இலக்கை அடைந்தான்.

ஆனால் அங்கு ஏற்கனவே ஒரு எதிரி வீரன் அந்த கருவியை எடுத்து அதை பரிசோதிப்பதில் உள்ள அபாயத்தை உணராமல் பரிசோதித்துக் கொண்டிருந்தான்….

அந்த வீரனின் அருகில் சென்ற கார்த்திக் அவன் மொழியிலேயே அவர்களது ஆட்களைப் போலவே பேச ஆரம்பித்தான்.

“என்ன இது, என்ன பண்ணுகிறாய்?”

“இது இங்க பொருத்திக் கிடந்தது. அதுதான் எடுத்துப் பிரித்துப் பாக்கிறேன்”

“எங்க, கொண்டா பாப்பம்…”

கார்த்திக் கேட்ட தோரணை அவனுக்கு சந்தேகத்தை வரவழைக்க “நீ யார்” என்ற அவன் கேள்வி அவன் வாயை விட்டே நழுவு முன் அவன் முகத்தில் இறங்கிய இடி அவனை மயக்கமுற வைத்தது...

17
துரிதமாக செயற்பட்ட கார்த்திக், கருவியை அப்படியே கொண்டு செல்வது ஆபத்து என்பதால் நிகழ்வைப் பதிவு செய்த நினைவுச் சில்லை மட்டும் கழற்றி எடுக்க எண்ணி கருவியை பிரிக்க முயன்றவனிற்கு அப்போது தான் தோன்றியது அதை எப்படி கையாளவேண்டும் என்று.

ஆம். சண்டையில் சில வேளை அக்கருவி எதிரியின் கையில் சிக்கலாம் என்பதால் அந்நடவடிக்கையின் உத்திகள் எதிரியின் கைக்கு அதன் மூலம் போய்விடுவதை தடுக்கும் உத்தி அதில் இருந்தது.

யாரும் விடயந்தெரியாமல் அக்கருவியை பிரிக்க முயன்றால் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள சிறியரக குண்டு கருவியையும் கருவியை பிரிக்க முயன்ற எதிரியையும் சிதறடிக்கும் ஏற்பாடு அதில் வைக்கப்பட்டிருந்தது.

நிதானமாக அதை கையாண்டு நினைவகத்தை தனியாக்கி விட்டு மீண்டும் கருவியை பழையபடி அமைத்தான் கார்த்திக்- பின்னர் வரும் எதிரிக்கு சிறு பொறியாக..!

வேலையை முடித்துக்கொண்டு கார்த்திக் பழைய உத்தியிலேயே திரும்ப, எல்லா நேரமுமா எதிரி முட்டாளாகவே இருப்பான்….

சந்தேகப்பட்ட சில வீரர்கள் கார்த்திக்கை நோக்கி நகர, தப்பமுடியாதென்ற தார்ப்பரியம் கார்த்திக்கிற்கு நன்றாகவே புலப்பட்டது.

அப்போதும் அவனுக்கு தப்பமுடியாதே என்ற கவலை வரவில்லை. தன்னிடம் இருக்கும் நினைவுச்சில்லை தம்மவர் யாரிடமாவது ஒப்படைக்க முடியுமா என்பதே அவன் கவலையாக இருந்தது.

நெருங்கிய எதிரிகள் மேலும் அருகில் வந்தால் எதுவும் செய்ய முடியாதென்று உணர்ந்த கார்த்திக்கிற்கு சற்றுத் தொலைவில் கதிர் நிலையெடுத்திருப்பது நினைவிற்கு வந்தது.

அங்கு சென்றால் இருவரில் ஒருவராவது தப்பலாம், அப்படித் தப்புகையில் தப்புபவன் நினைவுச்சில்லை கொண்டுபோய் சேர்க்கலாம் எனக் கணக்கிட்டு கதிரின் பக்கமாய் ஓடத்தொடங்கினான்.

கார்த்திக்கின் ஓட்டம் எதிரியின் சந்தேகத்தை நிவர்த்தி செய்ய அவர்களின் துப்பாக்கி அதற்கான பதில்களை சொல்லத்தொடங்கின.

சராமாரியாக பாய்ந்த குண்டுகள் உடம்பெங்கும் சல்லடையாக்க, குற்றுயிரான நிலையில் கதிரை அடைந்தான் கார்த்திக்.

கார்த்திக்கின் நிலையை உணர்ந்த கதிர் மேலும் தாமதிக்க அவகாசமின்றி அவர்களை நோக்கி வரும் எதிரிகளை நோக்கி தன் துப்பாக்கியை இயக்கினான்.

எதிர்பாராத தாக்குதலில் தடுக்கப்பட்ட எதிரிகள் சற்று நிதானித்து நிலையெடுத்து குண்டு மழை பொழியத் தொடங்க,

“மச்சான், என்னால முடியாது. இந்தா இதைக் கொண்டே சேர்க்கணும். நான் இஞ்ச பாத்துக்கிறன். நீ போ” என்றான் கார்த்திக்.

கார்த்திக்கின் சொல்லில் கதிருக்கு உடன்பாடில்லை என்றாலும் அவர்களுக்கு இருந்த தேவை அவன் சொன்னதை விட வேறு உபாயம் இல்லை என்பதை சுட்டி நின்றது.

தன் கரமிருந்த ஆயுதத்தை கார்த்திக்கிடம் ஒப்படைத்த கதிர் கார்த்திக் எதிரிகளைத் தடுத்து சமராடிக்கொண்டிருந்த கணங்களை சாதகமாக்கிக் கொண்டு எல்லையை நோக்கி விரைந்தான்.

18
எல்லை வேலியில் முன்னதாக வந்திருந்த ரிச்சட், அமலன் குழுவின் வரவிற்கு காத்திருப்பதா அல்லது தனியே தப்பிப்பதா என சிந்தித்துக் கொண்டிருந்தான்.

சிலவேளை, காத்திருப்பு முதலுக்கே மோசமாகி விடலாம். தப்பித்தால் சிலவேளை அதுவே ஏனையோர் தப்பிப்பதை சிக்கலாக்கியும் விடலாம்.

என்ன செய்வதென யோசித்தவன் முடிவில் காத்திருக்க தீர்மானித்தான்.

ஒன்றாக வந்தோம், தப்பியவர்கள் எல்லோரும் ஒன்றாகவே போவோம். என்பதே அவன் நிலைப்பாடாக இருந்தது.

மேலும் தான் காத்திருப்பது, காயப்பட்டு வரும் தம்மவர்களை கொண்டு சேர்க்கவும் அவசியப்படலாம் எனவும் தன்னை சமாதானப்படுத்திக் கொண்டான்.

சில நிமிடங்களில் அமலனும் மதனும் ரிச்சட்டை அடைந்தனர். மதன் ஏறக்குறைய மயக்க நிலையில் இருந்தான்.

“என்ன மச்சான், மதனுக்கு கடுமையோ?”

ரிச்சட்டின் கேள்விக்கு அமலன் மௌனமாக ஆம் என தலையாட்டினான்.

“கெதியாப் போகணும். இல்லாட்டா பிரியோசனம் இல்லை”

என தொடர்ந்த அமலனின் பதிலில் ஒரு முடிவிற்கு வந்த ரிச்சட்,

“மச்சான் நீ தாமதிக்காத, மதனை கூட்டிக்கொண்டு போ. நான் கார்த்திக்கையும் கதிரையும் இருந்து பாத்திட்டு வாறன்” என்றான்.

தீவிர சிந்தனையில் இருந்த அமலன்,

“சரிடா. கவனம், கனநேரம் நில்லாத. அவங்கள் வராட்டா நீ திரும்பிடு”

என்று விட்டு வேகமாக மதனைத் தூக்கிக் கொண்டு எல்லை வேலியை நோக்கி நடந்தான்.

எதிரிகள் உலாவல் இப்போது முகாமின் மத்திய பகுதியையும் தாண்டி எல்லைகளையும் நோக்கி திரும்பியிருந்தது.

இன்னும் சில நிமிடங்களில் தப்பிக்காவிட்டால் பிறகு வாய்ப்பே இல்லை.

ரிச்சட்டின் இதயம் வேகமாக அடித்துக் கொண்டிருந்தது. தூரத்தே அமலன் வெற்றிகரமாக மதனுடன் வெளியேறிக்கொண்டிருந்தான்.

தாக்குதலின் வெற்றி தந்த பூரிப்பு இருந்தாலும் கார்த்திக் கதிர் நிலமை தெரியாத விபரீத கணங்கள் ரிச்சட்டைக் குடைந்து கொண்டிருக்க, கதிரதிடமிருந்து தொலைகருவி அழைப்பை சொல்லியது.

ஆவலுடன் அழைப்பை உயிர்ப்பித்த ரிச்சட்,

“ரிச்சட், அங்க என்னமாதிரி? அமலன், மதன் வந்திட்டாங்களோ. இங்க கார்த்திக்கும் போயிட்டான். நான் தான் தப்பி வாறன். எனக்காக பாக்க வேணாம். நீங்க போங்கோ. முடிஞ்சா வருவன்”

என்ற கதிரின் குரல் இதயத்தை பிசைவது போலிருந்தது.

“சரி கதிர். மதனை தூக்கிகொண்டு அமலன் போட்டான். நான் மட்டும்தான் இருக்கிறன். நீ வா… நான் காத்திருக்கிறேன்…” என்ற ரிச்சட்டை நோக்கியும் சில எதிரிகள்…..

19
தப்பித்து வந்து கொண்டிருந்த கதிரின் மனக்கண்ணில் சில விநாடிகளின் முன் நிகழ்ந்த கார்த்திக்கின் மரணம் மீண்டும் உணர்வலைகளைக் கிளப்பிவிட்டிருந்தது...

கதிர் தப்பித்த சில நிமிடங்களிலேயே கார்த்திக்கின் துப்பாக்கி அமைதியாகி விட்டது.

இருந்த குண்டுகள் தீர்ந்த நிலையில் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற கொள்கைப் பிடிப்பில் நஞ்சை அருந்தி மல்லாந்து கிடந்த கார்த்திக்கின் உடலைச்சுற்றி எதிரிப்படைகள் கூடிநின்று செய்த ஈனத்தனமான செயல்கள் ஏற்படுத்திய கொந்தளிப்பு இன்னும் கதிரில் அடங்கவில்லை…..

எதிரிகளிடத்தில் இன்னும் சில குழப்பங்கள் தீர்ந்தபாடில்லை. எத்தனை பேர் வந்தார்கள், இன்னும் எத்தனை பேர் உள்ளே உள்ளார்கள்? என்ற குழப்பத்தில் தள அதிகாரிகள் தலை காய்ந்து கிடந்தார்கள்.

கதிர் வேகமாக தப்பிக்கும் முயற்சியில் இறங்கினான்.

தாக்குதலின் ஆரம்ப காட்சிகள் பதிவு செய்யப்பட்ட நினைவகச் சில்லை எப்படியும் வெளியே கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற பொறுப்பும் அவன் தப்பிக்க வேண்டிய அவசியத்தை அவனுக்கு வலியுறுத்திக் கொண்டிருந்தது.

ரிச்சட் இருக்கும் இடம் நோக்கி அண்மித்த கதிருக்கு அங்கு பெரும் அதிர்ச்சியே காத்திருந்தது.

ரிச்சட் இருக்க வேண்டிய இடத்தில் சில எதிரி வீரர்கள் நின்று கொண்டிருந்தனர். மறைவாக ஒதுங்கிய கதிர் ரிச்சட்டை தொலைகருவியில் உயிர்ப்பித்தான்.

சில நொடிகளில் ரிச்சட்டின் குரல் கிசுகிசுப்பாக கேட்டது.

“கதிர் எனக்கு கிட்ட எதிரிகள் நிக்கிறாங்கள். என்னட்ட ஆயுதம் இருக்கு. நான் நீ வரும் வரை தாக்காமல் காத்திருந்தன். நான் இப்ப தொடங்கிறன், நீ மற்றப்பக்கமா தப்பிப் போ…”

“ரிச்சட் வேண்டாம். பொறுமையா இரு. சில நேரம் அவங்கள் போயிடுவாங்கள். கொஞ்சம் பொறுத்துப் பார்க்கலாம்”

“இல்ல கதிர், நேரம் போகப்போக இன்னும் வருவாங்கள். பிறகு இருவருமே தப்பேலாது. நீ போ, முடிஞ்சா நானும் தப்புறன்”

கதிரின் மூளைக்குள் மின்னலாக அந்த திட்டம் புலப்பட்டது.

“சரி ரிச்சட், ஆனா ஒண்டு, கண்ட பாட்டுக்கு சுடாத. அவங்கள் உன்னை நெருங்காமல் பார்த்துக்கொள். வெளியால போய் நான் உனக்கு கவர் எடுக்கிறன்”

கதிரின் திட்டம் ரிச்சட்டுக்கு புரியவில்லை. ஆனாலும் சரி என்று விட்டு தாக்குதலை ஆரம்பித்தான்.

மிக கிட்ட இருந்து வந்த தாக்குதலில் அலறிக் கொண்டு ஓடிய எதிரிகள் சற்று தள்ளி நிலையெடுத்து சுட ஆரம்பிக்க அவர்கள் பின்னால் கதிர் மெதுவாக ஊர்ந்துகொண்டிருந்தான் எல்லையை நோக்கி….

வெற்றிகரமாக வேலியை தாண்டிய கதிர் வெளியே அவசர தேவைக்காய் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களில் இருந்து தேவையானதை எடுத்துக் கொண்டு மீண்டும் எல்லைக்குள் நகர்ந்தான்…

கதிர் பின்னாலிருந்து நிலையெடுத்து எதிரிகளை தாக்கத் தொடங்கினான்.

இருபுறமும் இருந்து வந்த சன்னங்களில் சிக்கிக் கொண்ட எதிரிகள் மெதுவாக பின்வாங்க, கதிரின் திட்டத்தை புரிந்து கொண்டு அதை வாய்ப்பாக்கி ரிச்சட்டும் மறுபுறமாய் எல்லை நோக்கி நகர்ந்தான்.

எதிரிகள் மீண்டும் உசாராவதற்குள் எல்லையை தாண்டிவிட்ட ரிச்சட்டும் கதிரும் வேகமாக பின்வாங்கி பாதுகாப்பான பகுதிக்குள் நுழைந்தனர்.

ஆதவனும் இருட் போர்வைக்குள் ஒளி பரப்பி நுழைந்தான்...

20
அதிகாலை வேளை…!

வழமைக்கு மாறான வெடி ஓசைகளோடு பொழுது புலர்ந்துகொண்டிருந்தது.

உள் நுழைந்த கொமோண்டோ படை வெற்றிகரமாக தாக்கியழித்து திரும்பிய பின்னும் அவர்கள் மூட்டிய தீ இன்னும் தளத்தில் எரிந்துகொண்டிருந்தது.

அன்னியனின் நிலத்தில் இருந்த அந்த தளத்தின் வெளியேயும் தப்பியவர்களிற்கு ஆபத்து காத்திருந்தது.

ஆனாலும் முன்னேற்பாட்டோடு தயாராய் இருந்த தாக்குதலாளிகளை ஊடுகடத்தும் குழு, அவர்களை பாதுகாப்பாக தமது பகுதிக்குள் கொண்டு போய் சேர்த்தது.

எழுவராய் போன அணி மூன்று உயிர்களை விலையாகக் கொடுத்து வெற்றிக் கனியோடு நால்வராய் திரும்பியது.

அன்றைய செய்திகள் அனைத்தும் நள்ளிரவின் நாசத்தையே நவில ஒட்டு மொத்த படை வலுவில் பெரும்பாதிப்புக் கொண்ட எதிரி தலைமை தடுமாறி நிற்க தாக்கிய தேசத்தின் செய்திகளோ இப்படியிருந்தது-

“எதிரியின் தளத்தினுள் இனம்தெரியாதோர் நுழைந்து தாக்கியதில் பெரும் நாசம்……..” என்று துல்லியமான சேத விபர பட்டியலுடன் தொடர்ந்தது செய்தி.

அரசியல் தேவைகள் சாதனைகளையும் சொந்தம் கொண்டாடவிடாது தடுக்க சரித்திரம் படைக்க சடலமானவர்கள் ஏற்க ஆளில்லாமல் எதிரிகளிடமே விடப்பட்டனர்.

சிதறிய ராபர்ட்டும் ரமேசும் காயங்களுடன் கார்த்திக்கின் உடலும் எதிரிகளால் பொதிசெய்யப்பட்டு பொசுக்கப்பட்டன.

மரணம் என்பதே நடுக்கமாக இருக்கும் பலரிடையே அதையும் தாண்டி மரணத்தின் பின்னும் தம் உடலங்கள் மரியாதை செய்யப்படாது என்று தெரிந்தும் மரணித்த மறவர்கள் அவர்கள்…

இறப்புக்களை விட அந்த இறப்புக்களின் இழப்புகளையும் தாங்கிக் கொண்டு தொடர்ந்து தாக்குதலை முன்னெடுக்கும் வீரர்கள் அவர்கள்….

பழகுகையில் சாதாரணமாகத் தான் இருப்பார்கள். ஆனால் பாய்கையில் தான் தெரியும் இவர்கள் பலம்.

ஆம்,

தாம் சார்ந்தவர்களின் உரிமைக்காய் தங்கள் வாழ்வுரிமையை இழக்கத் தயாரானவர்கள் இவர்கள்.

அந்த மனோபலமே இவர்களின் மாபெரும் பலம்.

உரிமைக்கான போராட்டத்தின் அவசியத்திற்காய் நடந்த அந்த உரிமை கோரப்படாத சாதனைகாய் வெளிப்படாமலே வெந்துபோன நாயகர்களுக்காய், வெற்றிப் பூரிப்போடு வேதனை பூக்களையும் காற்றலையில் வீசிக்கொண்டிருந்தது அந்த கந்தக தேசம்…



ஊரறியாமலே உண்மைகள் கலங்கும்
ஒரு பெரும் சரித்திரம் ஊமையாய் உறங்கும்
வேருக்கு மட்டுமே விழுதினைப் புரியும்
வெடிமருந்தேற்றிய வேங்கையைத் தெரியும்.

சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய
சந்தன மேனிகளே!
உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்
ஆரை நினைத்தீரோ!
நீங்கள் யாரை நினைத்தீரோ..!

வாசலில் காற்றென வீசுங்கள்
உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.

வென்றிடவே கரும் வேங்கைகளாகிய
வீரக் கொழுந்துகளே!
உம்மைக் கொன்றவர் மீதினில் குண்டெனப் பாய்கையில்
என்ன நினைத்தீரோ!

தாயகத் தாகங்கள் தாங்கிய நெஞ்சினில்
சாவைச் சுமந்தவரே!
உங்கள் தேகங்கள் தீயினில் வேகின்ற நேரத்தில்
ஆரை நினைத்தீரோ!

தாலாட்டுப் பாடியே தன் முலையூட்டிய
தாயை நினைத்தீரோ!
உங்கள் காலாற தோள் மீது தாங்கிய தந்தையின்
கையை நினைத்தீரோ!

நாளும் விடுதலைத் தீயில் குளித்திடும்
நாயகனை நினைத்தீரோ!
உங்கள் தோளைத் தடவியே சென்றிடு என்றவன்
சோகம் நினைத்தீரோ!
[நன்றி: கவிஞர் புதுவை இரத்தினதுரை]

******************************************************

வெற்றிகளைக் குவித்து விட்டு வெற்றிக்காய் தோழோடு தோழ் நின்று போரிட்ட சில தோழர்களை பலிகொடுத்து, அந்த தழும்புகள் ஆறுமுன்னேயே அடுத்த பணி அவர்களை அழைத்தது…!

மதன் காயம் ஆறும் வரை பிரிவு மாற கதிர் தலைமையில் அமலன் ரிச்சட் உள்ளடக்கி புதிய குழு உருவானது.

வெற்றிக் களிப்பையும் இழப்பின் துயரையும் துடைத்து விட்டு இறுதி வெற்றிக்கான பயணத்தில் அடுத்த வெற்றிக்கான ஆயத்தங்களில் மீண்டும் இறங்கினர் அந்த,
இருளின் நாயகர்கள்….!

[ஓய்ந்தது] [பகுதி-1] (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=17404)[பகுதி-2] (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=379492#post379492)[பகுதி-3] (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=379836#post379836)

ஓவியன்
04-09-2008, 03:25 AM
முடிவு தெரிந்ததே என்றாலும்...
முடிவை நெருங்கையில் பதற வைத்துவிட்டது தீப் உங்கள் எழுத்துக்கள்...

சாவு நெருங்கையில்
நாம் பதறுகையில்
இவர்கள் சாவை நெருங்கையில்
சாவு பதறும் தீப்..!!

நன்றியும் பாராட்டுக்களும் தீப்..!!

மறத்தமிழன்
04-09-2008, 06:19 AM
அருமை தீபன்,
இருளின் நாயகருக்கு முன்னால் இருள் தோக்கும்.

காற்றோடு காற்றாகி
கலந்து போனவர்கள்!
கடலென்ன தரையென்ன
காவியங்கள் படைத்தவர்கள்!
விடுதலை வேள்விக்காய் தம்மை
விறகாய் எரித்தவர்கள்!
வீறு கொண்டு தமிழினம் எழ
வெடியாய் வெடித்தவர்கள்!
சாகும் தேதி தெரிந்தும்
சலனமின்றி திரிந்தவர்கள்!
கணப்பொழுதும் பிரியாமல்
கந்தகத்துள் வாழ்ந்தவர்கள்!
வாழத்துடிக்கும் தமிழினத்திற்கு புது
வரலாறு வகுத்தவர்கள்!
சாவு என்ற ஏட்டிற்கு புது
சரித்திரம் சேர்த்தவர்கள்!
மாற்றானின் பலத்தையெல்லாம்
மண்ணுக்குள் புதைத்தவர்கள்!
எச்சமின்றி எதிரியை அழிக்க
எரிமலையாய் பொங்கியவர்கள்!
பூவாய் வாழ்ந்து
புயலாய் எழுந்தவர்கள்!
புன்முறுவலோடு புறப்பட்டு
பூகம்பமாய் வெடித்தவர்கள்!
மண்ணுக்கான மரணம் என
மகிழ்வாய் ஏற்றவர்கள்!

என்ன கவிதைப்பகுதியில் தந்திருக்கலாமா? இதுவும் பொருத்தமான இடம்தானே!

நன்றி!! தீபன் அற்புதமான படைப்பு. உங்கள் சமூகச் சிக்கல்களையும் கொண்டு வாருங்கள் வெளியே!!

தீபன்
04-09-2008, 10:03 AM
முடிவு தெரிந்ததே என்றாலும்...
முடிவை நெருங்கையில் பதற வைத்துவிட்டது தீப் உங்கள் எழுத்துக்கள்...

சாவு நெருங்கையில்
நாம் பதறுகையில்
இவர்கள் சாவை நெருங்கையில்
சாவு பதறும் தீப்..!!

நன்றியும் பாராட்டுக்களும் தீப்..!!
நன்றி ஒவி...


அருமை தீபன்,
என்ன கவிதைப்பகுதியில் தந்திருக்கலாமா? இதுவும் பொருத்தமான இடம்தானே!

என்ன மறத் தமிழரே, இப்பிடி போட்டுடைக்கிறீரே.... நல்ல கவிதை. நன்றி உங்கள் கவிதைப் பின்னூட்டத்திற்கு..!

அமரன்
05-09-2008, 07:15 AM
கன்னியர் கடைக்கண் காட்டிவிட்டால் மாமலையும் கடுகாம் மண்ணின் வேந்தர்களுக்கு என்றார் பாரதிதாசன். அண்ணன் கடைக்கண் காட்டிவிட்டால் மாமலையும் கடுகாம் நம் மண்ணின் மைந்தர்களுக்கு என்பேன் நான். மனத்திடம் மிக்க அவர்களின் காத்திருப்பெல்லாம் தலைமையின் ம் என்ற வார்த்தைக்கே. அந்தக்குணம் இருந்தாலே போதும் எதிலும் சுலபமாக வென்றுவிடலாம். அருமையான கதை நிறைவானது. தீபனின் எழுத்து ஆளுமையில் திகட்டாத விருந்து .

தீபன்
05-09-2008, 01:03 PM
நன்றி அமரன். பின்னூட்டமிட்டு ஊக்கமளித்தமையோடு பக்கச் சீரமைப்பு செய்து உதவியமைக்கும். ஆமாம், அந்த ம் என்ற வார்த்தைக்கே இப்போதும் காத்திருப்பு... விரைவிலேயே ம் வெளிப்படும். விடியல் புறப்படும்.