PDA

View Full Version : இருளின் நாயகர்கள்… பகுதி -3



தீபன்
02-09-2008, 12:58 AM
இருளின் நாயகர்கள்…3
[பகுதி-1] (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=17404)[பகுதி-2][பகுதி-4] (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=379492#post379492)

11
கட்டுப்பாட்டறைக்குள் வந்த அதிகாரிகளுக்கு அமலனாலும் ராபர்ட்டாலும் சம்காரம் செய்யப்பட்ட சடலங்களே நிலமையின் விபரீதத்தை விபரித்து வரவேற்பு கூறியது…!

சத்தமின்றி முடிக்கவேண்டிய காரியமாதலால் துப்பாக்கிக்கு பதிலாக கத்திகளையே ரபர்ட்டும் அமலனும் பயன்படுத்தியிருந்தனர்.

மனிதர்களாய் வாழ்வதற்கான போராட்டத்திற்காய் சில மனிதத்தன்மையே இல்லாத செயல்களை செய்யவேண்டிய நிர்ப்பந்தம் அங்கு நிகழ்ந்திருந்தது….

கோரமாயிருந்த காட்சியில் நிலைகுலைந்த அதிகாரிகள் தாமும் குறிவைக்கப்படுகிறோமென்பதை அறியுமுன்னாலேயே காத்திருந்த ராபர்ட்டின் துப்பாக்கிக்கு இலக்காயினர்…!

கட்டுப்பாட்டறையை கட்டுக்குள் கொண்டுவந்த ராபர்ட், எதிரியின் மொழியிலேயே எதிரிகளுக்கு தவறான கட்டளைகளை பிறப்பித்துக்கொண்டு தன் தொலைகருவியில் கதிருக்கு அவ்வப்போது நிலமையை தெருவித்துக்கொண்டிருந்தான்.

திசைதிருப்பப்பட்ட எதிரிகள் நிலைமையை புரிந்துகொண்டு உசாராவதற்குமுன் செய்யவேண்டிய பணிகள் ஏராளமாயிருந்தன…!

மறுபுறத்தில், ரமேசும் ரிச்சட்டும் துரித கதியில் இயங்கவேண்டிய சூழ்நிலை உருவாகிக்கொண்டிருந்தது.

பிரதான முகாம் வலயத்துள் ஏற்பட்ட குழப்பங்கள் அயலிலிருந்த துணைமுகாமினுள்ளும் எச்சரிக்கை அலையை உருவாக்க, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர உதவிப்படை புறப்பட தயாரானது, தமக்கும் ஆப்பு வைக்கப்பட்டுள்ளது என்பதை உணராமல்…!

ஆம், உதவிப்படை வரும்வளியில் சந்தேகத்திற்கிடமில்லாமல் சரியான முறையில் நிலக்கண்ணியை புதைத்துவிட்டு சற்று தொலைவில் இயக்கும் கருவியுடன் ரிச்சட் காத்திருக்க எதிர்வளமாய் ரமேஸ் சிதறும் எதிரிக்கு குறிவைத்து நிலையெடுத்திருந்தான்…!

இரவை பகலாக்கும் வெளிச்சங்களுக்கு மத்தியில் மின்னல்போல் ஆங்காங்கு தீப்பொறிகளாய் துப்பாக்கிகள் சீறிக்கொண்டிருந்தன.

எதிரிகளின் கூக்குரலும் இடையிடையே கேட்ட அவலக்குரல்களும் கொஞ்சம் கொஞ்சமாக சூழ்நிலை விபரீதமாவதை உணர்த்திக் கொண்டிருந்தன.

ஆரம்பத்தில் வேவு அணியொன்றே அகப்பட்டதில் அடம்பிடிக்கிறது என்றெண்ணிய எதிரி, நேரமாக நேரமாக பிரச்சினையின் தார்ப்பரியத்தை உணரத் தலைப்பட்டான்.

ஆனால். நிலமை அதற்குள் அவன் கட்டுபாட்டை மீறி சென்றுவிட்டிருந்தது…!

தளம் புகுந்த புயல்கள் இன்னும் தம் பிரதான ஆட்டத்தை அட ஆரம்பிக்குமுன்னமேயே எதிரிப்படை சின்னாபினப்பட்டு திக்கித் திணறிக்கொண்டிருந்தது….

தமது வீரனா, நுளைந்த வீரனா எனத் தெரியாது சில இடங்களில் தம்மவரையே பலிவாங்கியது குழம்பிய கூலிப்படை..!

குட்டையை வெற்றிகரமாக குழப்பிய நாயகர்கள் அடுத்து மீனைப் பிடிக்கும் ஆயத்தங்களில் இறங்கினர்…!

நேரம் 1 மணி அதிகலை…!

டமார்… டமார்…. டமார்….

புயல்கள் புகுந்த அந்த வலயமே பூகம்பம் வந்தது போலானது…!

12
ஆயுத களஞ்சியமும் எண்ணைக் குதங்களும் ஒருசேர வெடித்து தீப்பற்ற அருகே அலைந்துகொண்டிருந்த எதிரிகள் பலர் சிக்கி சின்னாபின்னமாயினர்…

எஞ்சியவர்கள் சுதாகரித்து ஒன்றுசேர்ந்து ஒழுங்கமையுமுன் உயரத்திலிருந்து அவதானித்துகொண்டிருந்த மதன் தன் இயந்திர துப்பக்கியால் அவர்களை சிதறடித்துக்கொண்டிருந்தான்!

கட்டுப்பாட்டறையின் தேவை தீர்ந்ததை உணர்ந்த ராபர்ட், அதற்கும் சமாதிக்கு ஏற்பாடு செய்துவிட்டு கதிர், அமலன், கார்த்திக்குடன் இணைந்துகொள்ள விரைந்தான்.

அங்கே, ஆளுக்கொரு இராட்சத பறவையை குறிவைத்து தமது கனரக ஆயுதங்களை இயக்கும் மும்முரத்தில் அவர்கள் இருக்க பின்னாலேயே வந்த ஆபத்து வேகமாக அவர்களை நெருங்கிக் கொண்டிருந்தது…..

காலாகாலமாய் தம்மிடத்தில் வந்து தமது மக்களை சதைப்பிண்டங்களாக்கிய சைத்தான்களை சம்காரம் செய்யும் உணர்ச்சியின் உச்சத்தில் மூவரும் இருந்ததால் பின்னால் நெருங்கிய ஆபத்தை உணராதிருந்தனர்!

அதிமுக்கிய தளமென்பதால் அதிவிசேட பயிற்சிபெற்ற எதிரிகளே அக்கிருந்தனர். எந்நிலையிலும் உடனே சுதாகரித்து பதில் நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பயிற்சிகள் சிறப்பாகவே அவர்களுக்கும் போதிக்கப்பட்டிருந்தது.

அத்தகைய எதிரிப்படையின் பதினைந்து வீரர்களைக் கொண்ட சிறிய அணி நிலமையை உணர்ந்து கதிரின் அணியை பின்புறமாக குறி பார்த்துக் கொண்டிருந்தது.

பி்ன்தங்கி வந்த ராபர்ட் நிலமையின் இக்கட்டை புரிந்துகொண்டான்.

இவ்வேளை கதிரை தொடர்பெடுத்து எச்சரிப்பது உசிதமல்ல. உபயோகமுமில்லை.

தானே முடிவெடுத்து தயாரானான்- யாருமே இலகுவில் செய்ய முடியாத அந்த சாகசத்திற்கு!!!

அதற்கு முன்னதாக மதனுக்கு தொடர்பெடுத்த ராபர்ட்,

“மச்சான், கதிராக்களை அவங்க பாத்திட்டாங்க. கதிர் இன்னும் கவனிக்கல. கவனிச்சும் பிரியோசனமில்லை. அவங்க 15 பேருக்குமேல, நான் தான் ஏதாவது பண்ணணும். அதுதான், பாயப்போறன். வெற்றி நமதே!”

“சரி மச்சான், நான் கதிருக்கு அறிவிக்கிறன். கவனம்..” இறுகிப்போன குரலில் பதிலளளித்தான் மதன்.

டமார்….

ஆம், கூட்டமாக இருந்த எதிரிகளை நோக்கி தன்னையே குண்டாக்கி பாய்ந்தான் ராபர்ட்!

தங்கள் பின்னே திடீரென எழுந்த ஒளிப்பிளம்பினால் கதிரின் அணி கவரப்பட்டு திரும்பிய கணத்தில், மதனிடமிருந்து தொலைகருவி அந்த சோக செய்தியை பிரசவித்தது அவர்களுக்கு!

உயிர்களை இழப்பதென்பது அவர்களுக்கு சாதாரண விடயம்தானென்றாலும் அது நடைபெறும் அந்த கணத்தின் உணர்வுகள் ஒருமுறை அந்த உருக்கு உள்ளங்களையும் உலுக்கத்தான் செய்தது!

வெற்றிகரமாய் தொடரும் நடவடிக்கையின் முழுமையான வெற்றிக்காய் முதல் பலியாய் ராபர்ட் தன்னை ஆக்கிக்கொண்டான்.

இக்கட்டு தீர்ந்த கதிரின் அணி எதுவுமே நடவாததுபோல் தன் பணியில் தீவிரமானது!

13
பிரதான தளத்தின் வெடியோசைகள் அதிகரிக்க அதிகரிக்க உதவிப்படை தன் வேகத்தை அதிகரித்தது. சிலநூறு வீரர்கள் அணிவகுத்து கவசவாகனங்களின் பின்னால் கனரக ஆயுதங்களுடன் ரமேஸ், ரிச்சட் நிலையெடுத்திருந்த பக்கமாக முன்னேறினர்.

முதல் வாகனம் கண்ணியை தாண்டிச் செல்ல இரண்டாவது வாகனத்தை இலக்குவைத்து ரிச்சட் கருவியை இயக்க மின்னல் வெளிச்சத்தில் பந்தாடப்பட்டது அந்த இரும்பு அரக்கன்….

இந்த அதிர்வில், அதன் முன்னும் பின்னுமாக வந்த வாகனங்களும் தம் பாதைவிட்டு விலக திடீர் குழப்பத்தில் நிலைகுலைந்து போனது உதவிப்படை!

சில நிமிட இடவெளியில், மாண்டவர்களையும் காயமடைந்தவர்களையும் விட்டுவிட்டு ஏனையவர்கள் தொடர்ந்து முன்னேற முயல ரமேசின் துப்பாக்கி குண்டுகளை சரளமாக துப்ப ஆரம்பித்தது…!

ரமேசை இலக்குவைத்து எதிரிகள் நிலையெடுக்க எதிர்வளமாய் காத்திருந்த ரிச்சட் அப்போதுதான் தன் வேலையை காட்டத் தொடங்கினான்…!

இருபக்க தாக்குதலில் சிக்கிய எதிரிப்படை சற்று பின்வாங்கி இருபக்கமும் குண்டுமழை பொழியத் தொடங்கியது!

மிகவும் பாதுகாப்பாக இருவரும் நிலையெடுத்திருந்ததால் எதிரிகளால் இலகுவாக அவர்களை அடக்க முடியவில்லை.

ஆனால், குண்டுகளின் இருப்பு வேகமாக குறைவடைந்துகொண்டு வந்தமை, நிலமையை இப்படியே தொடர முடியாதென்பதை புலப்படுத்தியது!

முடிந்தவரை போராடுவதென முடிவெடுத்து நடந்து கொண்டிருந்த அந்த துப்பாக்கிச் சமரில் ரமேசின் துப்பாக்கி ஓய்ந்து போனது.

ரிச்சட் தொலைகருவியில் தொடர்பு எடுக்க முயற்சிக்கையில் அழைப்புக்கு அங்கீகாரம் இல்லை.

ரிச்சட் முழுப்பொறுப்பும் தன்னில் விழுந்து விட்டதை உணர்ந்து கொண்டான்.

இன்னும் சில நிமிடங்களாவது உதவிப்படையின் நகர்வை தாமதப்படுத்த வேண்டும்.

உள்ளிருக்கும் அணியினர் தம் மரணம் வரை அழிவை ஏற்படுத்துவார்கள். அதனால் அதன் பிறகே உதவிப்படையை உள்ளே நுழைய அனுமதிக்க வேண்டும்.

இல்லையேல் உள்ளிருக்கும் அணியின் அழிவு விரைவில் நடந்து விடும். அது தாக்குதலின் சிறப்பான வெற்றியை பாதிக்கும், என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும்.

ரமேஸ் இருந்த பக்கமாக நகர்ந்த எதிரிகள் ரமேஸ் விழுந்து கிடந்ததைக் கண்டுபிடித்து வெற்றி எக்காளமிட்டனர் நடக்கவிருக்கும் விபரீதம் அறியாமல்.

செத்த எலியை சுற்றி வட்டமிடும் காகம் போல் செத்தது போல்கிடந்த அந்த புலியைச் சுற்றி வெற்றிக் களிப்பில் திரண்டனர் எதிரிகள்.

தன் துப்பாக்கிக்கு சற்று ஓய்வு கொடுத்து விட்டு நடப்பதை அவதானித்துக் கொண்டிருந்தான் ரிச்சட்.

குப்புறக்கிடந்த ரமேசை எதிரி ஒருவன் புரட்டிப் போட, சரியான தருணம் பார்த்து ரமேஸ் தன்னோடு கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க வைக்க, அந்த இடமே சில நொடிகள் காணாமல் போனது.

ராபர்ட்டைத் தொடர்ந்து ரமேஸ். ரிச்சட் தனது வேலை மேலும் சுலபமாக்கப்பட்டதை உணர்ந்தாலும் ரமேசின் இழப்புக்காய் சில துளி கண்ணீரை உதிர்த்தது அவனின் விழிகள்.

14
பிரதான தளமும் சரி, உதவிக்கு வந்த படையும் சரி சின்னாபின்னமாகி நிலைகுலைந்து நின்ற அந்த சில நிமிட நேரங்களில் ஊடுருவல் அணி தன் வேலையை திறம்படச் செய்து கொண்டிருந்தது.

கதிர், அமலன், கார்த்திக் அணி குறிவைத்த இலக்குகளை நோக்கி எறிகணைகளை ஏவ, சரியான இலக்கினைத் தாக்கி அவை வெடித்துச் சிதறின.

அழித்தே பழக்கப்பட்ட அந்த இரும்பு பறவைகள் தம் அழிவைச் சந்தித்துக் கொண்டிருந்தன.

அந்த தாக்குதல் திட்டத்தின் பிரதான காரியம் அப்பொழுது தான் அங்கு அரங்கேறிக்கொண்டிருந்தது.

ஓடுபாதைகளிலும் தரிப்பிடங்களிலும் என எங்கெல்லாம் நிறுத்தப்பட்டிருந்தனவோ அங்கெல்லாம் தேடித்தேடிச் சென்று மூவர் அணி சங்கார படலத்தை நிகழ்த்திக் கொண்டிருந்தன.

மதனின் கண்காணிப்புப் பணி கைகொடுக்க உயரத்திலிருந்து அவன் அவதானித்துச் சொல்லும் விடயங்களிற்கேற்ப கதிர் தன் தேடி அழிக்கும் படலத்தை விரைந்து செய்துகொண்டிருந்தான்.

ஆனால் அதற்கும் ஒரு ஆபத்து நெருங்கிக் கொண்டிருந்தது.

மதனின் நடவடிக்கைகளை அவதானித்துக் கொண்டிருந்த எதிரி ஒருவன் தன்னவர்களிற்கு அதைக் காட்ட சில துப்பாக்கிகள் மதனை நோக்கி நீண்டன.

குறிவைக்கப்பட்டு விட்டோம் என்ற பின்னும் மதனிடத்தில் எந்தப் பதட்டமும் இல்லை. ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட விடயம் தானே.

ஆனாலும் முடிந்த வரை போராடும் அவன் இயல்பினால் தப்பிக்க என்ன வழி என சிந்தித்தான்.

குண்டுகள் அவனை நோக்கி பாயத்தொடங்க சில குண்டுகள் அவன் உடலைப் பதம் பார்க்க தான் தீர்மானித்தபடி கீழே பாய்ந்தான்.

அவன் குண்டு பட்டு இறந்து தான் வீழ்கிறான் என்ற அசட்டையில் எதிரிகள் அவனை நெருங்க, கிட்ட வந்த எதிரிகள் மீது கையிலிருந்த கைக்குண்டை வீசிவிட்டு காயம் பட்ட உடம்போடு எழுந்து ஓடினான் மதன்.

குண்டுகளால் பட்ட காயமும், மேலிருந்து வீழ்ந்ததால் பட்ட அடியும் அதிகம் ஓட அவனை அனுமதிக்கவில்லை.

தன் காயங்களிற்கு சுயமாய் கட்டுப் போட்டவன் மெதுவாய் நகர்ந்து கதிர் இருக்குமிடத்தை அடைந்தான்.

அங்கே கதிரும் அமலனும் கார்த்திக்கும் ஏறக்குறைய எல்லா இலக்குகளையும் சுட்டுப் பொசுக்கி விட்டு அடுத்து என்ன என்ற திட்டத்தில் இருந்தனர்.

மதனைக் கவனித்த கதிர்,

“என்ன மச்சான், கண்டிட்டாங்களோ? உன்ர தொடர்பே இல்லாமல் போச்சு” என,

“ ஓம், ஆனா ஒரு கை பாத்திட்டு தான் வந்தன்” என பதிலளித்தான் மதன்.

“சரி, வெளியில முதலில் விசயத்தை அறிவிப்பம்” என்றுவிட்டு வெளியில் உள்ளவர்களுடன் தொடர்புக்கு முயன்றான் கதிர்.

15
“அண்ண, நான் கதிர். கேக்குதோ?”

“ஓம் ஓம், என்ன மாதிரி”

“ஓம் அண்ண, …………”

தாக்குதலின் சேத விபரங்கள் கதிரால் மறுமுனைக்கு ஒப்புவிக்கப்பட்டது.

“….. ராபர்ட்டும் ரமேசும் இல்லையண்ணை. மதனுக்கும் காயம்”

கதிரின் அறிவிப்பிற்கு மறுமுனையில் சில விநாடிகள் மௌனம்.

கதிருக்கு தெரியும், எந்த வெற்றியின் இனிப்பும் பழகிய தோழர்களின் இழப்பின் கசப்பை ஜீரணிக்க வைப்பதில்லை என.

“சரி, நீங்க திரும்பி வாங்கோ. மதன் வாறது கஸ்ரம் எண்டால் அவனைக் கவர் எடுக்க விடுங்கோ”

“சரியண்ணை, நாங்க பாத்துக்கிறம்” என்று விட்டு தொடர்பைத்துண்டித்த கதிரின் பார்வை இப்போ மதனின் மேல் திரும்பியது.

“மதன் எங்கள திரும்பட்டாம். உன்ன கவர் எடுக்கட்டாம். முடியுமோ?”

கதிரின் கேள்வியில் நியாயம் இருந்தது. ஏனெனில் திரும்புவதென்பது முகாமுக்குள் ஊடுருவுவது போல் அவ்வளவு சுலபமான ஒன்றல்ல.

எதிரி அலட்சியமாக இருக்கும் போது ஊடுருவுவது வேறு. அவன் விழித்துக் கொண்டு தாக்கும் போது தப்பிப்பது என்பது வேறு. அதிலும் ஏற்கனவே காயப்பட்டவனால் தப்புவதென்பது மிகவும் சிரமம்.

சிலர் தப்பிக்க சிலரை எதிரிகளின் தாக்குதலை தடுக்கும் அரணாக நிறுத்த வேண்டும் என்பது ஒரு தப்பிக்கும் உத்தி. அந்த அரணாக மதனை நிறுத்துங்கள் என்பது வெளியிலிருந்து வந்த ஆலோசனை.

ஆனால் கதிருக்கு அதில் உடன்பாடில்லை. அந்த தாக்குதலுக்கு பொறுப்பானவன் என்ற வகையில் கடைசிவரை நின்று தாக்குதல் செய்ய வேண்டியது தன் பொறுப்பென அவன் நினைத்தான்.

மதனின் நிலைப்பாடு அதற்கு எதிர்மாறாக இருந்தது.

“கதிர் என்னால் தப்ப முடியாது. எப்படியும் சாகப் போறன். அதனால் நான் கவர் எடுக்கிறன். நீங்கள் போங்கோ”

“ இல்லை மதன். இந்தக் காயங்களோட உன்னால கவர் எடுக்கவும் ஏலாது, கார்த்திக், அமலன் இவனையும் கொண்டு நீங்க போங்கோ. நான் றிச்சட்டுக்கு அறிவிக்கிறன். அவனும் உங்களோட இணைந்து கொள்வான். இடையில் மாட்டுப்பட்டா தெரியுந்தானே என்ன செய்ய வேணும் என்பது”

என மட மடவென ஒரு தலைவனாக உத்தரவிட, உத்தரவை மீற முடியாதென்ற யுத்த விதிக்கு அமைவாக மனமின்றி கதிரை விட்டு பின்வாங்கினர் அமலன், கார்த்திக், மதன்.

பின்வாங்கிக் கொண்டிருந்த மதன் திடீரெனக் கத்தினான்,

“நம்மட படப்பிடிப்புக் கருவியை விட்டுட்டு வாறம்”

“அமலன், நீ இவனைக் கூட்டிட்டுப் போ. நான் தான் அதை வைச்சனான். எடுத்திட்டு வாறன்” என்று விட்டு மீண்டும் விரைந்தான் கார்த்திக் களத்தின் மையப்பகுதிக்குள்….

[ஊடுருவல் தொடரும்...] [பகுதி-1] (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=17404)[பகுதி-2][பகுதி-4] (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=379492#post379492)

ஓவியன்
02-09-2008, 02:17 AM
இந்தப் பகுதியில் பல சரித்திர சம்பவங்களை எனக்கு மீள ஞாபக அலைக்குள் சிக்க வைத்து விட்டீர்கள் தீபன்...

எல்லாவற்றுக்கும் நன்றி தீபன்....

முடிவினை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றேன்.....

தீபன்
02-09-2008, 03:31 AM
நன்றி ஓவியன். ஒவ்வொரு பகுதிக்கும் உடனடியாக படித்து பின்னூட்டமிட்டு ஊக்கியமைக்கு.
புதிதாய் என்ன முடிவை நான் சொல்லிவிடப் போகிறேன்...! தெரிந்ததுதானே... ம்ம்ம்... நிறைவுப் பகுதிக்கு நாளை மறுதினம்வரை காத்திருங்கள்.

அமரன்
02-09-2008, 09:10 AM
அதி நுட்பமான உளவு. மதி நுட்பமான திட்டமிடல். தீரமும் வீரமும் கலந்த செயற்படுத்துகை. இக்கட்டான நிலையில் துரிதமாகவும் சுயமாகவும் அனுகூலமான முடிவை எடுக்கும் சமயோசிதம். எல்லாம் ஒருங்கே பெற்ற சிறிதளவான ஆளணியைக் கொண்ட ஒரு போராட்ட அணி சாதிக்கும் என்பது போரியல் நியதி. அதை விதியாக்கும்படியாக இந்தக் கதை. உண்மைச் சம்பவத்தை பிரதானமாகக் கொண்டு கற்பனையை பின்னி பூ வைக்க உங்களுக்கு நன்றாக வருகின்றது தீபன். மற்றவர் பார்வையில் தவறாகத் தெரிவதை, சரியென நிரூபிக்க நீங்கள் கொடுக்கும் தெளிவான விரிவு போரியல் விதிகளுக்குக் கட்டுப்படுவது உங்கள் திறமைக்கு பருக்கைப் பதம்.

தீபன்
03-09-2008, 05:16 PM
நன்றி அமரன். நான் மறைமுகமாக சொல்லும் சில கருத்துக்களையும் நுணுக்கமாக புரிந்து படித்திருக்கிறீர்களென்பது உங்கள் பின்னூட்டத்திலிருந்து தெரிகிறது. மிக்க மகிழ்ச்சி. விரைவில் இறுதிப்பகுதியுடன் சந்திக்கிறேன்.