PDA

View Full Version : மின்சார மன்னன் (அ.மை. - 34)



இளசு
01-09-2008, 09:19 PM
அறிவியல் மைல்கற்கள் - 34

மின்சார மன்னன்


அலெசாண்ரோ வோல்டா (Alessandro Volta) 1745 -1827


--------------------------------------
அ.மை. 33 : தடுத்தாண்டவர் இங்கே
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16912
--------------------------------------------------------



ஒரு பட்டனைத் தட்டினா....!? என்னென்ன நடக்கணும்?

விஞ்ஞானத்த வளக்கப்போறேண்டி பாடலில்
என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம் போடும் பட்டியல் எத்தனை!

அத்தனையும், அதையும் தாண்டியும் - பட்டனைத் தட்டினால்
வரும் மின்சக்தியால் இன்று நம் வாழ்வில்!

இன்று மின் தடை என்றால் கொந்தளிக்கும் அளவுக்கு
நம் வாழ்வில் பின்னிப்பிணைந்துவிட்ட மின்சாரம்..

அணுசக்தி மூலமாவது அதிகம் செய்து சேமிக்க நாம் துடிக்கும்
இன்றியமையாத பொருளாதார முன்னேற்றச் சாரம்..

இதைச் சேமித்து பயன்படுத்த முதல் படி அமைத்தவரே
இந்த 34வது மைல்கல் நாயகர்!

---------------------------------------------------------------------



வடக்கு இத்தாலியில் ஒரு வாழ்ந்து கெட்ட பெரிய குடும்பம்.
அக்குடும்பத்தில் 1745-ல் பிறந்தார் வோல்டா.

படிப்பு முடித்து, பிழைப்புக்காக பள்ளி ஆசிரியர் ஆனார்.
பணி - கணக்குக் கற்பிப்பது.
பாசம் - அறிவியலில், குறிப்பாய் மின்சாரத்தில்!



அவர் ஊரில் ஒருவீட்டில் முதல் இடிதாங்கி அமைக்கப்பட்டது.
பல்வேறு உலோகங்கள், பொருட்களின் மின்பண்புகளை அவர்
தீவிரமாய் ஆராய்ந்தார். நிலைமின்சாரம் ( Static Electricity) பற்றி
பல கட்டுரைகள் எழுதினார்.

ஒருமுறை சீண்டினால் கொஞ்சம் மின்சாரம் ஒருமுறை மட்டும் பாய்ச்சும்
கலன் அமைத்தார் - அதற்கு electrophorus எனப் பெயரிட்டார்.

சீமான்களை, சீமாட்டிகளை அழைத்து அக்கரூவியைக் காட்டி,
இன்ப 'அதிர்ச்சிகள்' கொடுத்து பிரபலமானார்.

ஆனால், கவனமாய்க் கட்டிய தீக்குச்சிக் கட்டடத்தை கணத்தில் கலைப்பதுபோல்
நேரமெடுத்து சேமித்த மின்சாரம் நொடிக்குள் தீர்ந்துவிடும் இவ்விளையாட்டால்
என்ன பயன் என யோசித்தார்.

அதிக அளவில் மின்சேமிப்பு.. பின் வேண்டும் நேரம் அதில் இருந்து மின்வரவு..
இப்படி ஒரு கருவியே வோல்டாவின் கனவு!


மின் -முன்னோடி!

வோல்டா மின்(சேமிப்புக்)கலன் - பேட்டரியை வடிவமைத்த கதை அறியும் முன்
அவர் முன்னோடி கால்வானி ( Luigi Galvani) பற்றி அறிவது அவசியம்.

தவளையின் காலை பித்தளைக் கொக்கியில் மாட்டித் தொங்கவிட்டால்
அதன் தசை ( செத்தபின்னும்) துடிப்பதைக் கண்டு சொன்னவர் கால்வானி.

துடிப்புக்குக் காரணம் - தசைகொண்ட நரம்பின் மின்பண்பு என்றார் கால்வானி.
வோல்டா அதை மறுத்து, மாட்டப்படும் உலோகக் கம்பியின் மின் தாக்கமே என்றார்.
இரு வேறு உலோகக் கம்பிகள் தசையைத் தொட்டால், அது இன்னும் அதிகம் துடிப்பதைக் கண்டார்.

மின்சாரத்துக்கும் உலோகத்துக்கும் உள்ள உள்ளுறவை வோல்டா தெள்ளக் கண்டார்!

நாம் உணவுச் சுவை அறிய மட்டும் பயன்படுத்தும் நாக்கு, வோல்டாவுக்கு இன்னொரு
பண்பறிந்து சொல்லி பெருமை கொண்டது.. ஆம்..!
பல உலோகப் பட்டைகளைத் தம் நாவின் நுனியில் வைத்து வைத்து ,
வந்த மின்னதிர்வின் அளவைக் கொண்டு, இன்னும் இவ்வுறவை அளந்தார்.
துத்தநாகம் ( Zinc), வெள்ளி(Silver) - மின்பண்பில் முதல் இரண்டு இடம் என (நாவால்) உணர்ந்தார்.

எலக்ட்ரிக் ஈல் எனப்படும் மீன் போலவே ''டார்பெடோ'' என்ற மீனும்
தன்னைத் தாக்குபவரை மின் அதிர்ச்சி கொடுத்து விரட்டும் - எனக் கேள்விப்பட்டார் வோல்டா.

டார்பெடோ மீனை ஆராய்ந்தார் - மாறி மாறி வேறு வேறு வகை வட்டில்கள் (discs)
அடுக்கப்பட்ட அங்கமே மீனின் மின்சேமிப்பு வங்கி எனக் கண்டவுடன்..
வோல்டா சிந்தையில் பேட்டரிக்கான பொறி உருவாகிவிட்டது..

துத்தநாகம், வெள்ளியால் ஆன வட்டில்களை முப்பது முப்பதாய் மாறி மாறி அடுக்கி,
இடையில் தோல் தட்டுகளை இட்டு,
அவை இட்ட தொட்டியை உப்புநீரால் நிரப்பி
மேல்-அடித் தட்டுகளை கம்பியால் பிணைத்தார்.

இது ஒரு முறை மட்டும் அதிர்ச்சி தரும் புஸ்வாண வேடிக்கைப் பொறி (ஸ்பார்க்) இல்லை..
தொடர்ந்து மின்சக்தி கிடைத்தபடியே.........................

ஆம், உலகின் முதல் பேட்டரி உருவாக்கப்பட்டுவிட்டது நண்பர்களே!




1799-ல் இச்சாதனையை வோல்டா நிகழ்த்திய நேரம்.
அவர் நாட்டை நெப்போலியன் ஆக்கிரமித்ததும் நடந்தது.
சாதகமான அரசியல் சூழல் வரும் வரைக் காத்திருந்து, நெப்போலியன் பின்வாங்கியபின்
1800 -ல் உலகுக்கு இதை வோல்டா அறிவித்தார்.

அடுத்த ஆண்டே நெப்போலியன் இவர் நாட்டை மீண்டும் பிடித்தாலும்,
தோற்ற நாட்டின் அறிவுத்தோன்றலான வோல்டாவை பாரீசுக்கு அழைத்து
பிரபுத்துவமும், பெரும்பணமும் அளித்து கவுரவித்தான்.

அதன்பின் , 1827-ல் மறையும் வரை வோல்டாவுக்கு பேரும் புகழும்
பல நாட்டு விஜயம், விருதுகள் எனவும் தொடர..
கெட்டு, பின் வாழ்ந்த குடும்பம் எனப் பெருமிதம் நிரம்பிய வசந்தம்தான்.

அந்த வசந்த நாயகரை நினைவுகூர இம்மைல்கல்லருகே சற்றே நின்று, பின்
பயணம் தொடர்வோம்... தொடர்ந்து வாருங்கள் நண்பர்களே!

நன்றி!

ஷீ-நிசி
02-09-2008, 01:34 AM
மிக சிறப்பான கட்டுரை....

பகிர்ந்தமைக்கு நன்றி இளசு ஜி!

aren
02-09-2008, 02:12 AM
வாவ்!!! இன்னொரு அருமையான பதிவு.

மின்சாரம் கட் என்று வெறுத்திருக்கும் நேரத்தில் பாட்டரி பற்றிய கட்டுரை.

தொடருங்கள் இளசு. இவை அனைத்தும் புத்தகவடிவில் பார்க்க ஆசை.

ஓவியன்
02-09-2008, 04:10 AM
வோல்டாவின் பெருமைக்கு பரிசாகத்தானே இன்றும் மின்னழுத்தத்தின் அளவினைக் குறிக்க
“வோல்ட்” என்ற அலகினை நாம் பயன்படுத்தி வருகிறோம், இல்லையா அண்ணா..??

மீளவும் முன்னர் எப்பவோ படித்த பெளதீகவியல் பாடங்களை அசை போட வைத்த அரும்பதிவு...

அழகான, அருமையான கட்டுரைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் அண்ணா..!! :)

தீபா
02-09-2008, 06:31 AM
சரியான நேரத்தில் எழுந்த சரியான கட்டுரை.

எளியமுறையில் அறிய முடிந்தது..

நன்றி திரு.இளசு அவர்களே!

poornima
02-09-2008, 06:35 AM
எளிய தமிழில் இனிய நடையில் அறிவியல் கட்டுரைகளைத் தர
மிகச்சிலராலேயே முடியும்..

சிறுகதை,தொடர்கதை எனத் துவங்கி நாவல்கள்,கட்டுரை,திரைவசனம் என்று
பல்நோக்கில் பயணித்தாலும் சுஜாதாவை ஆழமாக அடையாளம் காட்டியதில்
அவரின் எளிய தமிழ் அறிவியல் கட்டுரைகளுக்கு முக்கியப் பங்கிருக்கிறது..

எளிமைப்படுத்துகிறேன் என்று மேலோட்ட ஜல்லி அடிக்காத விஷயங்களை அடி
நாதமாய்க் கொண்டுசெல்லுதல் என்பதும் ஒரு கட்டுரையின் வெற்றிக்கு
இன்றியமையாததாகிவிடுகிறது..

தமிழ்மன்ற சுஜாதாவிற்கு என் வந்தனங்கள்- பாராட்டுகள்

mukilan
02-09-2008, 03:30 PM
மின்சார கண்ணனை எதிர்பார்த்த எனக்கு மின்சார மன்னனின் தரிசனம். வோல்ட் என்ற அலகினை ஏன் பயன் படுத்துகிறார்கள் என்ற கேள்விக்கு பதில் கட்டுரை படிக்க ஆரம்பித்ததுமே கிடைத்து விட்டது. மனித குலம் உய்ய வழிவகுத்த மாபெரும் மனிதன் அவன். அவன் பெயரில் அழைப்பதுதான் சரி.

அவருக்கு மின்கலன் அமைக்க டார்பெடோ மீன் மாதிரியாய் இருந்ததென்பது சுவாரசியமான தகவல்.

பறவையைக் கண்டான் விமானம் கண்டான்.
டார்பெடொ கண்டான் மின்கலன் கண்டான்.:D

தாமதமாக வந்து விட்டதால், நான் பேச நினைப்பதெல்லாம் நண்பர்கள் ஏற்கனவே பேசிவிட்டனரே!

எளிமையான நடை. ஆமாம் பிறர் புரிந்து கொள்ளத்தானே எழுதவேண்டும். எட்டிக்காயாய் கசந்த அறிவியலை சுவையாகத் தரும் உங்களுக்கு தமிழ்மன்ற சுஜாதா- பொருத்தமான பெயர் அண்ணா.

இளசு
05-09-2008, 06:04 PM
மிக சிறப்பான கட்டுரை....




நன்றி ஷீ... தொடர்ந்து ஆதரவு தாருங்கள்!



இவை அனைத்தும் புத்தகவடிவில் பார்க்க ஆசை.

அன்பின் ஆரென்
உங்கள் ஊக்கமும், பாரதியின் உதவியும் இருக்க, நிச்சயம் நடக்கும்!
நன்றி!!


வோல்டாவின் பெருமைக்கு பரிசாகத்தானே இன்றும் மின்னழுத்தத்தின் அளவினைக் குறிக்க
“வோல்ட்” என்ற அலகினை நாம் பயன்படுத்தி வருகிறோம், இல்லையா அண்ணா..??




மிகச்சரி ஓவியன்.

Voltaic pile - இதுதான் நம் நாயகர் வடிவமைத்த முதல் பேட்டரி.
அதன் நன்றிதான் அவர் பெயரை மின்னழுத்தத்துக்கு பெற்றுத்தந்தது.



சரியான நேரத்தில் எழுந்த சரியான கட்டுரை.

எளியமுறையில் அறிய முடிந்தது..



நன்றி தென்றல்..
தொடர்ந்து வீச வருக!!


..

எளிமைப்படுத்துகிறேன் என்று மேலோட்ட ஜல்லி அடிக்காத -
விஷயங்களை அடிநாதமாய்க் கொண்டுசெல்லுதல் என்பதும் ஒரு கட்டுரையின் வெற்றிக்கு இன்றியமையாததாகிவிடுகிறது..



நன்றி பூர்ணிமா..
உங்களின் கருத்தை உள்வாங்கி, அதன்படி எழுதும் முனைப்பைத் தந்துவிட்டீர்கள்.

சுஜாதா சூரியன்.
நான் சில்லுக்கண்ணாடி.
எனவே கூசுகிறேன்.


மனித குலம் உய்ய வழிவகுத்த மாபெரும் மனிதன் அவன். அவன் பெயரில் அழைப்பதுதான் சரி.

அவருக்கு மின்கலன் அமைக்க டார்பெடோ மீன் மாதிரியாய் இருந்ததென்பது சுவாரசியமான தகவல்.

பறவையைக் கண்டான் விமானம் கண்டான்.
டார்பெடொ கண்டான் மின்கலன் கண்டான்.:D



அழகான பின்னூட்டம் முகிலா..

மீனைக் கண்டான்.. மின்கலன் சமைத்தான்!

ரசித்தேன்.. பாராட்டுகள்!

தொடர்ந்து ஊக்க வேண்டுகிறேன். அனைவருக்கும் நன்றி..

----------------------------------

அடுத்த நாயகர் ஆராய்ந்தது :

ஒளி - அலையா? துகளா?

பாரதி
06-09-2008, 02:38 PM
பொதுவாக வங்கியில்தான் வட்டி வழங்குவார்கள். ஆனால் மீனின் வட்டில் உண்டான மின்வங்கியை குறித்த சேதி தந்து இன்ப அதிர்ச்சியை தந்தது இப்பதிவு.

மின்னாற்றலில் மறுக்க, மறக்க, மறைக்கவியலாத ஒரு பெயரை தந்த அற்புத அறிவியலாளரை அறியத்தந்தமைக்கு இந்த மைல்கற்கள் உதவியது குறித்து மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

மிகப்பெரும்பான்மையான மக்களின் வாழ்வில் தவிர்க்கவியலாத மின்கலத்தை தந்த அலெசாண்ரோ வோல்டாவை நினைவு கூர்ந்த அண்ணனின் மேலுமொரு அருமையான பதிவு! தொடருங்கள் அண்ணா.

செல்வா
06-09-2008, 02:45 PM
நான் என்ன சொல்ல ... அதான் எல்லாரும் சொல்லிட்டாங்களே....

நன்றிகள் பல அண்ணா... தொடர்ந்து தொடருங்கள்... நாங்களும் தொடர்கிறோம்...

மின்னழுத்தத்திற்கும் மின்னோட்டத்திற்குமான வித்தியாசத்தை விளக்க முடியுமா அண்ணா அழகு தமிழில்...

இளசு
23-09-2008, 08:23 PM
மின்னாற்றலில் மறுக்க, மறக்க, மறைக்கவியலாத ஒரு பெயரை தந்த அற்புத அறிவியலாளரை அறியத்தந்தமைக்கு இந்த மைல்கற்கள் உதவியது குறித்து மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.



மிக்க நன்றி பாரதி..

உன் இடையறா ஊக்க சக்திதான் இத்தொடரின் முக்கிய உந்து!


தொடர்ந்து தொடருங்கள்... நாங்களும் தொடர்கிறோம்...

மின்னழுத்தத்திற்கும் மின்னோட்டத்திற்குமான வித்தியாசத்தை விளக்க முடியுமா அண்ணா அழகு தமிழில்...

நன்றி செல்வா..


எலக்டான்கள் அதிகம் உள்ள இடத்திலிருந்து, அவை குறைவாய் உள்ள இடத்துக்குத் தொடர்ந்து பாய்ந்தபடியே இருக்கின்றன..

அடையமுடியா ஒரு சமநிலை வேண்டிய இடையறாத் தேடல் பயணம் அது..

அதுவே மின்னோட்டம்.

இரு உலோகங்கள் அருகருகில் இருந்தால், எலக்ரான்கள் அதிகம் உள்ள உலோகத்திலுருந்து அவை அடுத்த உலோகத்துக்குப் பாயும்.இது மின்னோட்டம். மின்சக்தி.

அப்படி பாயும் அளவு.. இரண்டுக்கும் உள்ள எலக்ட்ரான் ஏற்றத்தாழ்வைப் பொருத்து, மின் அழுத்தம் கூட, குறையப் பாயும்.

எது என் எளிய அறிவுக்கு எட்டியது..

இத்துறை வல்லுநர்கள், அறிந்தவர்கள் மேலும் விளக்கினால் மகிழ்வேன்!

shibly591
23-09-2008, 11:52 PM
பயனுள்ள ஒரு கட்டுரை..

மின்னியல் எனக்கு கொஞ்சம் அலர்ஜி...ஆயினும் இந்தக்கட்டுரை சிறப்பாக இருக்கிறது..

தெரியாத விடயங்கள் பலவற்றை கற்றுக்கொள்ள உதவியரமக்கு நன்றிகள் அண்ணா...

சிவா.ஜி
28-09-2008, 06:21 AM
வேறுபட்ட சிந்தனையுடையவர்களுக்கு மீனைக் கண்டால் மின்கலம் தோன்றுகிறது.(நமக்கெல்லாம் வறுவல்தான் கண்ணுக்கு முன் வரும்...ஹி...ஹி...)

மின்சாரத் தடையால் அவதிப்படுவோர் அலெக்சான்ட்ரோ வோல்டாவை இந்த சமயத்தில் மனதார நினைத்து நன்றி கூற வேண்டும். நானும் கூறுகிறேன் அந்த மின்சார மன்னனுக்கும், எங்கள் மன்ற மன்னனுக்கும்.

அருமையான படைப்பு இளசு. வாழ்த்துகள்.

பென்ஸ்
28-09-2008, 06:37 AM
கொடுங்காற்று மரங்களை சாய்க்க
நான் வசிக்கும் நகரின் பகுதியில் பல இடங்களில் மின் தடை
மின் தடையை கண்டிராத இவர்களுக்கு இது ஒரு அதிற்ச்சி (கரண்ட் அடிச்சா கூட இப்படி ஷாக் ஆவாங்களான்னு தெரியாது)
இங்கு இருக்கும் இந்திய நண்பர்களுக்கு இந்த் மின் தடை ஒரு பெரிய பொருட்டாக தெரியலை....
(வாரம் இருமுறை மிந்தடை கொடுத்து எங்களை எந்த சூழ்நிலையையும் சமாலிக்க வைத்த இந்திய மின்சார வாரியத்திற்க்கு நன்றி சொல்லாம் போல)

பூர்னிமா, ஓவி, முகில்ஸ் எல்லோரும் நான் சொல்ல வேண்டியதை சொல்லிடாங்க .. அதுனால சம்பந்தம் இல்லாம பேசிட்டு போறேன்).

Narathar
29-09-2008, 10:16 PM
அருமையான பதிவு இளசு அவர்களே....

மின்சாரத்தை கண்டுபிடித்த வோல்டாவை விட மின் குமிழை கண்டறிந்த தோமஸ் அல்வா எடிசன பிரபலமானது எப்படி?

அதற்கான காரணிகள் என்ன இளவலே?

இளந்தமிழ்ச்செல்வன்
20-10-2008, 10:37 PM
வழக்கம் போல் அழகாய், எளிதாய் ஆர்வம் தூண்டும் விதமாய் எழுதி எங்களை அசரவைத்துவிட்டு தெரிந்தவர்கள் இன்னும் சொல்லுங்கள் என்றால் என்ன சொல்வது.

மீன் விசயம் புதியதுதான்.

நன்றி இளசு அவர்களே.