PDA

View Full Version : இருளின் நாயகர்கள்… பகுதி -2



தீபன்
31-08-2008, 03:26 AM
இருளின் நாயகர்கள்…2
[பகுதி-1][பகுதி-3][பகுதி-4] (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=17404)

6
ஏறக்குறைய நான்காயிரம் வீரர்கள் சுழற்சி முறையில் நிலைகொண்டிருக்கும் உயர் பாதுகாப்புத் தளம் அது.

இரவு பகல் வித்தியாசமின்றி இயங்குநிலையில் இருக்கும் இந்தத் தளதத்தினுள் நுழைந்த அந்தச் சிறிய கொமாண்டோ குழுவுக்கு அங்கு என்ன வேலை...?

அப்படி எதைத்தான் இந்தச் சிறு குழு சாதித்து விடப்போகிறது...?

கேள்விகள் ஐயத்தை எழுப்பினாலும் அவர்களின் நகர்வுகள் நோக்கத்தை, இலக்கை புலப்படுத்தத் தொடங்கியிருந்தன.

ரமேசும் ரிச்சர்ட்டும்முன்னதாகவே தமது நிலையை ஸ்திரப்படுத்திக் கொள்ள ஏனைய இருவரும் படுவேகமாக அத்தளத்தின் மையத்தை நோக்கி முன்னேறினர்.

எதிரியின் விழி வீச்சுக்குள் சிக்காது இயற்கையின் இடர்களுக்கும் ஈடுகொடுத்து நகரும் உருவங்கள் சாதாரண மனிதர்களாகத் தோன்றவில்லை.

மையத்தை நெருங்கி ஒரு கட்டடத்தின் பின்புறமாகப் பதுங்கிக் கொண்ட கதிர் தன் ஏனைய சகாக்களின் நிலையை அறிய முற்பட்டான்.

கதிருக்கு ஈடுகொடுத்து அமலனும் அவன் கூடவே வந்து சேர்ந்து விட்டான். கார்த்திக்கும் ராபர்ட்டும் இன்னும் 50 மீட்டர்களுக்கு அப்பாலேதான் வந்து கொண்டிருந்தனர்.

அவர்களுக்குப் பின்னே மதன் தன் படப்பிடிப்புப் பணியை மேற்கொண்டவாறு நகர்ந்து கொண்டிருந்தான்.

இன்னமும் சில நிமிடங்கள் இப்படியே இருந்து விட்டால் போதும். அவர்கள் அனைவரும் உரிய இலக்கில் தம்மை நிலைப்படுத்திக் கொண்டுவிட முடியும்.

ஆனால் திட்டமிட்டபடியே எல்லாம் நடந்து விடும் என்றால் எல்லோராலும் எதையும் செய்துவிடமுடியுமே.....!

ஆம்.

மூன்று பேரும் வெட்ட வெளியில் ஊர்ந்து கொண்டிருக்க தூரத்தே ஒரு ஜீப் வண்டி வெளிச்சத்தை கக்கியபடி அவர்களை நோக்கி சீறிக் கொண்டு வந்துகொண் டிருந்தது....

7
நேரமும் நெருங்கிகொண்டிருந்தது. ஜீப் வடிவில் அபாயமும் நெருங்கிக் கொண்டிருந்தது.

வெட்ட வெளியில் கிடந்த கார்த்திக், ராபர்ட், மதனிற்கு எதுவுமே செய்யமுடியாத நிலை.

பாதுகாப்பாய் நிலையெடுத்த ஏனையவர்களாலும்கூட எதுவும் செய்யவியலாத செயலற்ற நிலை.

ராபர்ட் முடிவெடுத்து விட்டான். எதிரியின் பார்வையில் எப்படியும் தப்பமுடியாது. தம்மை எதிரி பிடித்தால் திட்டம் முழுதாகவே பிசுபிசுத்துவிடும்.

எதிரிக்கு முன்பாக தாமே முந்திக் கொண்டால் ஓரளவேனும் திட்டம் வெற்றியடைய சாத்தியமுண்டு.

மனக்கணக்கை வேகமாக போட்டு முடித்த ராபர்ட் கதிரை தொலைகருவியில் உயிர்பித்தான்.

"கதிர், வேறவழியில்லை..... தொடங்கட்டா?”

கதிரின் பதில் நிதானமாக வந்தது,

"வேண்டாம், நீங்க அப்படியே படுத்துகிடங்க, எதிரி கண்டால் உடனே நாங்க தொடங்கிறோம். பிற்பாடு நீங்களும் சேர்ந்து கொள்ளுங்கள்"

கதிரின் திட்டம் கடைசிவரை பொறுமை காப்பதாகவே இருந்தது.

கிடைக்ககூடிய ஒரு சதவீத வாய்ப்பைக்கூட பயன்படுத்துவதென கதிர் முடிவெடுத்திருந்தான். அவன் எண்ணம் வீண் போகவில்லை.....

தங்களின் படைபலத்தில், பாதுகாப்பு முறைகளில் அதீத நம்பிக்கை கொண்டிருந்த எதிரியானவன் தங்கள் அருகில், தங்கள் மத்தியில் எதிர்குழு ஊடுருவியிருக்கும் என எதிர்பார்காத தன்மையால், அலட்சியமாக ஜீப் வண்டி இவர்களை கடந்து போனது.

ஜீப் வண்டியின் அரவம் ஓய்ந்ததும் ராபர்ட்டும் கார்த்திக்கும் விரைவாக முன்னேறி கதிரின் இடத்தை அடைந்தனர்.

மதனும் விரைவில் அவர்களுடன் தன்னை இணைத்து கொண்டான்.

அடுத்த நகர்வு தான் இரகசியமானதும் இறுதியானதும் அபாயகரமானதுமாக இருந்தது.

அந்த நகர்வும் வெற்றிகரமாக முடிந்து விட்டால் திட்டம் பூரண வெற்றியானதிற்கு சமன். ஆயினும் அது அவ்வளவு சுலபமானது இல்லை.

நள்ளிரவை அண்மித்த அந்த திகிலான இரவு இன்னும் சில மணி நேரங்களில் நடைபெறப்போகும் பெரும் நாசத்தை எதிர்பார்த்து நடுங்கிக் கொண்டிருந்தது.

ஊடுருவல்படை தம் இதயத்தினுள் குடிவந்துவிட்டதை உணராத எதிரிகள் வழமை போல் தம் கலகலத்த களியாட்ட நிகழ்வுகளோடு ஒன்றிப் போயிருந்தனர்.

கதிர் தமது இறுதிகட்ட நகர்வை அமுல்படுத்த ஆரம்பித்தான்.

நாயகர்கள் மீது பட்ட காற்றால் நள்ளிரவுக்கும் குளிரெடுக்க தொடங்கியது.

8
கதிர் உத்தரவுகளை துரிதமாக வழங்கத் தொடங்கினான்.

தொலை கருவி மூலம் ரமேசையும் ரிச்சட்டையும் தயார்ப்படுத்தியவன் மேற்கொண்டு தாம் ஐவரும் நகர வேண்டிய இலக்குகளை பற்றி விபரிக்கத் தொடங்கினான்.

"ராபர்ட், நீ கட்டுப்பாட்டறைக்கு சென்றாக வேண்டும். பாதுகாப்பு பலமாக இருக்கும். ஆனால் பிரதான இலக்கு அதுதான். அங்கிருந்து தான் எமது வேலை தொடங்க வேண்டும்”

"சரி கதிர், ஆனால் அந்தப்பகுதிக்கு நான் மட்டும் போதுமா?”

"போதாது, அதற்காக அமலனும் உனக்கு துணையாக இருப்பான். ஆனால் அவன் கட்டுப்பாட்டறைக்கு பின்புறமாக வருவான். நீ தொடங்கியதும் உனக்கு துணையாக அவனும் இணைந்து கொள்வான். கார்த்திக்கும் மதனும் கண்காணிப்பு கோபுரத்துக்கும், எரிபொருள் தாங்கியையும் சென்றடைய வேண்டும். ராபர்ட் தொடங்கியதும் நீங்களும் தொடங்க வேண்டியதுதான்.”

"சரி, நமக்கு வர வேண்டிய ஆயுத விநியோகம் அந்த இடத்திற்கு வந்துவிடும் தானே?”

"ஓமோம்! இந்தநேரம் நம்மாக்கள் அதை செய்து முடித்திருப்பினம். ஆனா இன்னும் அவையள் தொடர்பெடுக்கேல்ல... இருக்கிறத கொண்டு தொடங்குவோம். நான் களஞ்சிய அறைப்பக்கம் நகர்கிறேன்."

இங்கே நிலை கொண்ட ஐவரணியும் தத்தம் இறுதி இலக்குகளை நோக்கி நகரத் தொடங்க முன்னதாக நிலை கொண்டு விட்ட ரமேசும் ரிச்சட்டும் அடுத்த நிமிடங்களில் தொடங்கப் போகும் அதிரடிக்காக தம்மைத் தயார்படுத்தி கொண்டிருந்தனர்.

திட்டம் ஆரம்பித்தபின் கிடைத்த தகவல்படி கதிரின் உடனடி மாற்றத்தினால் அவர்களின் இலக்கு தீர்மானிக்கப்பட்டதால் அந்த இலக்கினைப்பற்றி உற்று ஆராயவேண்டிய தேவை அவர்களுக்கிருந்தது.

எதிரிகளின் மேலதிக உதவி வழங்கும் படையின் பிரிவு தங்கியுள்ள தொகுதி மாற்றியமைக்கப்பட்டமையே திட்டத்திலும் உடனடி மாற்றம் ஏற்படுத்த வேண்டிய நிலையை தோற்றுவித்தது.

ஆம், உள்புறம் தாக்குதல் தொடங்கியதும் உதவிப்படை செல்கையில் அவற்றை தாக்கி அவர்களின் நகர்வை தாமதப்படுத்துவதே ரமேசினதும் ரிச்சட்டினதும் பணி. அதற்கு தோதான இடத்தை இருட்டின் மத்தியில் அவர்கள் தேடிக் கொண்டிருந்தனர்.

இவர்களின் நடமாட்ட அரவம் கேட்டு கட்டிடத்துள் இருந்த சில உருவங்கள் சுடுகலன்களுடன் வெளிப்புறமாக நகரத் தொடங்கின.

ரமேசும் ரிச்சட்டும் எதையும் உணராதவர்களாக தமது பணியை நிறைவேற்றுவது தொடர்பான முயற்சியில் வீச்சாயிருந்தனர்.

தட்.. தட்.. தட்..

பூட்ஸ் ஒலி அருகில் கேட்க தொடங்கியிருந்தது.....

9
நெருங்கி வந்த பூட்ஸ் ஒலிகள் ரமேசினதும் ரிச்சட்டினதும் செவிகளை எட்டி உசார்ப்படுத்தியது.

உரிய நேரத்துக்கு முன் சண்டையை தொடங்குவதும் உரிய நேரத்துக்கு முன் சண்டையை தொடங்காமல் விடுவதும் போர்க்களத்தில் பேரிளப்பை ஏற்படுத்திவிடும் என்பது போரியல் பாடநெறியில் அவர்களுக்குப் போதிக்கப்பட்டிருந்தது.

ஆபத்து தங்களைத் தேடிக்கொண்டிருந்த போதும் ரமேசும் ரிச்சட்டும் துப்பாக்கிகளுடன் நம்பிக்கையையும் கையில் பிடித்துக் கொண்டிருந்தனர்.

மூச்சுவிடும் சலனம் கூட இன்றி அமைதிக்கே அமைதியை கற்பித்துக் கொண்டிருந்தன அந்த இரு சிறுத்தைகள்.

நெருங்கி வந்த எதிரிப்படை மின்விளக்கொளியை சுற்றிலும் வீசி சல்லடை போட்டது.

வலைக்குள் மாட்டாத மீன்களாய் ஒளிபுக முடியாத ஒளிவான பகுதிக்குள் பதுங்கிக் கொண்டன இரு உருக்களும்.

சல்லடையிட்டுச் சலித்ததில் சலித்துப் போன எதிரிப்படை மீண்டும் தம்மிடம் திரும்பின.

நின்றுவிட்ட மூச்சை மீளசெயற்படவிட்டனர் ரிச்சட்டும் ரமேசும். வாகான இடம்தேடி நிலையெடுத்துக் கொண்டனர்.

இதற்கிடையே கண்காணிப்பு கோபுரத்தையும் அதற்கருகே அமைந்திருந்த எரிபொருள் தாங்கியையும் நோக்கி கார்த்திக்கும் மதனும் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தனர்.

விரைவிலேயே கண்காணிப்பு கோபுரத்தை அடைந்த மதன் அங்கு ஒரு சிப்பாய் இருப்பதை அவதானித்துவிட்டான்.

காவலுக்கு இருந்த அந்தக் காவலன் தூக்கக் கலக்கத்தில் தூங்கிவளிந்து கொண்டிருந்தான்.

மதனுக்குத் தன் வேலை சுலபமென புரிந்தது.

சாதாரண சிப்பாய் போல் தன்னை மாற்றிக் கொண்டு சகஜமாக கண்காணிப்புக் கோபுரத்தில் ஏறத் தொடங்கினான்.

காவலுக்கு இருந்தவன் விழிப்பதாய் தெரியவில்லை.

இந்த நாடகத்தைக் கவனித்துக் கொண்டிருந்த கார்த்திக் மதன் விட்டுச் சென்ற ஒளிப்பதிவு கருவியை உயிர்பித்து நடக்கும் நிகழ்வுகளை பதிவு செய்யத் தொடங்கினான்.

காவலனை மதன் அண்மிக்கவும் அவன் திடுக்கிட்டு விழிக்கவும் நேரம் சரியாக இருந்தது.

கடமை மாறும் நேரம், அதுதான் அடுத்த பணிக்குரியவன் வருகிறான் என எண்ணிய காவல் சிப்பாய் கடமை நேரத்தில் தூங்கிய தன் தவறை எப்படிச் சமாளிப்பது என்ற குழப்பத்தில் இருந்ததினால் வந்தவன் புதியவன் என்ற உண்மையை உணராமலிருந்தான்.

பணிநேரத்தில் உறங்கியதற்கும் உண்மை நிலையை உணரத் தவறியமைக்கும் உடனடியாகவே அதற்கான விலையை அவன் கொடுக்க நேரிட்டது.

யுத்ததர்மத்துக்கிசைவான அந்தக் கோரக் காட்சியை கார்த்திக்கின் கரத்திலிருந்த கருவி எந்தவித உணர்ச்சியுமின்றி பதிவு செய்து கொண்டிருந்தது.

10
மையப்பகுதிக்குள் நுளைந்த ஐவரும் தத்தம் இலக்குகள் நோக்கி விரைய கதிரின் கரத்திலிருந்த தொலைகருவி மீண்டும் உயிர்பெற்றது.

“அண்ண, நாங்கதான். உங்களுக்கான அயுதங்கள் ரெடி. கட்டுப்பாட்டறைக்கு போகுமுன் முன்னுள்ள அறைக்குள்ளும் களஞ்சிய அறைக்குள்ளும் உருமறைப்பு செய்து வைக்கப்பட்டுள்ளது. நாங்க கிளம்பிறம்.”

ஒற்று வேலைக்காகவே எதிரியோடு எதிரியாய் இயங்கும் அவர்கள் பணி அத்தோடு முடிந்தது.

கதிர் விடயத்தை ராபர்ட்டுக்கும் அமலனுக்கும் தெரியப்படுத்திவிட்டு தாக்குதலுக்கான நேரத்தை எதிபார்த்து காத்திருந்தான்.

எரிபொருள் தாங்கி நோக்கி நகர்ந்த கார்த்திக், மதனின் படப்பிடிப்பு கருவியை வாகான ஓரிடத்தில் இயங்கும் நிலையில் பொருத்திவிட்டு தன்னிலக்கு நோக்கி விரைந்தான்.

இதுவரை யாவும் திட்டமிட்டபடியே நடக்க,

புதிய சரித்திரம் படைக்கும் நிமிடங்களை நோக்கி வினாடிகள் கடந்து பயணப்பட்டுகொண்டிருந்தன.

முன்னரே நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளில் கொண்டுசென்ற நேரக்கணிப்பான் குண்டுகளை பொருத்திய அணி ராபர்ட்டையும் மதனையும் விட்டுவிட்டு சற்று தள்ளியிருந்த இராட்சத பறவைகளின் கூட்டைநோக்கி முன்னேறின.

மரணத்தோடு விளையாடும் அந்த மறவர்களின் நோக்கம் இப்போது தெளிவாகவே புலப்பட்டது.

காலைக்கடன் முடிப்பதுபோல் தினசரி தம்பரப்பில் வந்து எச்சங்களை இட்டுச்செல்லும் அந்த இராட்சத பறவைகளின் ஆங்காரத்துக்கு தகுந்த தண்டனை வழங்கவே அந்த அணி இங்கு நுழைந்துள்ளது.

கொண்டுசென்ற வெடிபொருட்களெல்லாம் தகுந்த இலக்குகளில் பொருத்தப்பட உள்ளேயே பெற்றுக்கொண்ட மேலதிக கருவிகளை சுமந்தவண்ணம் தீபாவளியை ஆரம்பிக்க தயாராயின அந்த உருவங்கள்.

டட்…டட்….டட்……

கதிரின் கருவியிலிருந்து பாய்ந்த சிவப்பு பொறிகளில் அகப்பட்டு சில காவல் உருவங்கள் சரிய சலசலப்பு சடுதியில் கருக்கொண்டது.

சில கணமேனும் தாமதமின்றி கண்காணிப்பு கோபுரத்திலிருந்த மதனின் குறியில் முக்கிய புள்ளிகள் ஒவ்வொன்றாய் சரியலாயின.

தூங்கிவளிந்த முகாம் துறுதுறுவென சுறுசுறுப்பாகியது….

ஆரவாரமான ஆணைகள் ஆங்காரமாக வெளிப்பட்டன…!

என்ன நடக்கிறது… எங்கு நடக்கிறதென்ற தெளிவின்மை பதட்டத்தைகொடுக்க எதிரிகள் இலக்கின்றி படைக்கலன்களுடன் அலையத் தொடங்கினர்……

தூக்கம் கலைந்த அதிகாரிகள் கட்டுப்பாட்டறை நோக்கி விரைய அங்கு…….

[ஊடுருவல் தொடரும்...] [பகுதி-1][பகுதி-3][பகுதி-4] (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=17404)

ஓவியன்
31-08-2008, 03:48 AM
கதைக் கருவின் வேகம், எப்படித் தீபன் உங்கள் வரிகளிலும்....??
விறு, விறுவென கதை நகர்த்தும் வேகம்+விவேகம் கண்டு பிரமித்தேன்..!!

பாராட்டுக்கள், அடுத்த பாகங்களுக்காகக் காத்திருக்கின்றேன்...!! :)

தீபன்
01-09-2008, 02:13 AM
கதைக் கருவின் வேகம், எப்படித் தீபன் உங்கள் வரிகளிலும்....??
விறு, விறுவென கதை நகர்த்தும் வேகம்+விவேகம் கண்டு பிரமித்தேன்..!!

பாராட்டுக்கள், அடுத்த பாகங்களுக்காகக் காத்திருக்கின்றேன்...!! :)

நன்றி ஓவியன். இதில் என் பங்கு எதுவுமில்லை. சொல்லப்படும் விடயம் அப்படி...!:icon_b:

அமரன்
01-09-2008, 07:28 AM
சொல்ல வந்ததை நெளிவு சுழிவுகளுடன் அழகாகவும் ஆழமாகவும் சொல்கின்றீர்கள். சொல்லும் விடயமோ அல்லது சொல்லும் விதமோ ஏதோ ஒன்று ஆழமாக ஊடுருவி விடுகிறது. கண்காணிப்புக் கோபுரத்தில் பார்த்தேன். ஏறிய மதனுக்குப் பதிலாக ரமேஷ் இருக்கான்.

தொடரட்டும் உங்கள் ஆழ ஊடுருவல்.

தீபன்
01-09-2008, 09:20 AM
ஏலே... இந்த குசும்புதானே வேணாங்கிறது... நன்றி தவறை சுட்டியமைக்கு. திருத்தி விட்டேன். கால இடைவெளி விட்டு எழுதியதால் அடிக்கடி இப்படி என் மறதியால் வரும் முரண்கள் இருக்கக்கூடும். தொடரும் பகுதிகளில் அப்படியில்லாமல் இருக்க முயற்சிக்கிறேன். ஆனாலும் என் தவறே, என் ஆக்கத்தை நீங்கள் எவ்வளவுதூரம் ஆழமாக படித்துள்ளீர்களென்பதை நான் அறிந்துகொள்ள உதவியுள்ளது... அது, என் தவறுக்கு கிடைத்த வெற்றியாக நான் கருதலாம்தானே...! அடுத்த பகுதி நாளை....!