PDA

View Full Version : புத்தத் தென்னையுஞ் சித்தார்த்த மனிதரும்



நாகரா
30-08-2008, 11:19 AM
உலர்ந்த கீற்றுகள்
எக்கணத்திலும்
கீழே விழத் தயாராய்த்
தாழ்ந்து கிடக்கின்றன

பசிய கீற்றுகள்
இன்னும் இன்னும்
மேலெழும் துடிப்போடு
உயிர்த்து ஆடுகின்றன

தென்னை
வேரூன்றி நிற்கிறது
மண்ணில்

கீழே விழுவன
மேலெழுவதையும்
மேலே எழுவன
கீழ் விழுவதையுந்
தெளிந்த
புத்தனைப் போல்

சித்தார்த்த மனிதர்
இளநீர் பருகியும்
தேங்காய் உண்டும்
உளிபடாத
கற்களைப் போல்
இன்னும்
தெளிவின்றி

பிச்சி
26-09-2008, 02:19 PM
விரைவில் சித்தார்த்தர் புத்தனாகி அமர்வார்.. :) ஃபெண்டாஸ்டிக் கவிதை.. நிறைய எழுதுங்க சார்.

அன்புடன்
பிச்சி

ஓவியன்
27-09-2008, 07:18 AM
போதி மரத்தின் கீழ் சித்தார்த்தருக்கு முன்னரும் பின்னரும் எத்தனை பேர் அமர்ந்திருப்பார்கள்...
ஆனால்
ஒரு சித்தார்த்தன் தான் புத்தனானார்....
மற்றவர்கள் சதா மனிதர்களாகவே, இன்னமும்
தத்துவங்கள் பிடிபடாமல், சிற்றின்ப பலன்களை நாடிய படி...

நல்லதோர் பாடம் சொன்ன நாகரா அண்ணனுக்கு நன்றிகள் பல...!!

kulirthazhal
28-09-2008, 02:37 PM
சித்தாந்த கவிகளை ரசிக்கிறேன், சித்தாந்தங்களை புரிந்துகொள்ள முயல்கிறேன். எனினும் சித்தாந்தங்கள் என்றும் புதியவை. எழுதிவைக்கப்படுபவையை முந்திச்செல்ல முயல்பவை, மேலும் தேடுவோம் மீண்டும் மீண்டும்........

நன்றி!!!!!

இளசு
18-10-2008, 12:32 PM
புதுவையில் ஒரு கல்லறைச் சுவர் வாசகம்:

இன்று இவர்! நாளை நீ!!

இல்லம் வந்து குளித்து, உடன் சுவர்த்தகராறுக்கு
அடுத்த வீட்டுக்காரருடன் மல்லுக்கு நிற்பவன் மனிதன்..

நீர்க்குமிழி வாழ்க்கை
நேற்றிருந்தவர் இன்றில்லை என்னும் பெருமை கொண்டது உலகு
என்றான் அய்யன் வள்ளுவன்..

யட்சன் கேட்ட கேள்விக்கு சரியான பதிலாக
மனிதனின் இந்த மனப்பாங்கையே சொன்னான் தருமன்..

நிலையாமை, வீடுபேறு, நிர்வாணம், சூன்யம்,அந்தகாரம் -
என பிறப்பின் வேரறுப்பையே போற்றும் நம் சாத்திரங்கள்..

ஆனாலும்.............
உயிர்ப்பு உள்ள இறுதி நொடி வரை
சாசுவதம் என்ற மாயநூலில் ஆடாத பதுமை எத்தனை நம்மில்?

அப்படி ஆடுவதில் தவறென்றால்,
தடுத்தாளும் சூத்திரதாரி கரம் ஏன் சும்மா இருக்கவில்லை?

யோசிக்க வைத்த கவிதை!

பாராட்டுகள் நாகரா அவர்களே!