PDA

View Full Version : இருளின் நாயகர்கள்… பகுதி -1தீபன்
29-08-2008, 02:04 AM
(சில ஆண்டுகளுக்குமுன் ஈழத்தில் வெளிவந்த வேடிக்கை என்னும் மாதாந்த பல்சுவை சஞ்சிகையில் ஒரு பக்க த்ரில் தொடர் என நான் எழுதிவந்த சிறு தொடரானது காலப்போக்கில் ஈழத்துக்கே உரித்தான பண்பாக அச் சஞ்சிகை குறுகிய காலத்தில் நின்று போனதால், என் தொடரும் 9 அங்கங்களுடன் அப்படியே நின்றது. சரி, அதை மன்றிலாவது பதிவேற்றி கதையை முடிக்கலாம் என எண்ணி மிகுதி 11 அங்கங்களையும் ஒரே மூச்சில் எழுதி முடித்து விட்டேன். ஆனால் தட்டச்சுவதுதான் பெரும் பாடாய் இருக்கிறது. ஒவ்வொரு அங்கமும் ஒரு பக்க தொடர் என்பதால் மிக சிறிதாக இருப்பதால் ஐந்து அங்கங்களை இணைத்து மொத்தம் நான்கு பகுதிகளில் கதையை முடிக்க உள்ளேன். தொடருக்குள் நுழையலாமா...?)


இருளின் நாயகர்கள்…1
[பகுதி-2] (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=379492#post379492)[பகுதி-3][பகுதி-4] (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=379836#post379836)

[இதில் வரும் உரையாடல்கள் உண்மையில் குறியீட்டு பாசையிலேயே இடம்பெற வேண்டும். ஆனால், படிப்பவர்களுக்கு விளங்கவேண்டுமென்பதற்காக சாதாரண உரையாடல்போலவே எழுதியுள்ளேன். மேலும் இது முற்றிலும் கற்பனை கதையே.]

1
நேரம் இரவு 9.30

இருளின் அரசாட்சி.

நிலவு கூட அன்று முழுநாள் விடுமுறை எடுத்துக் கொண்டது.

சில்லென்று வீசும் காற்றில் நேரம் ஆக ஆக ஈரம் அதிகமாகிறது.

சர்....சர்.... என்று சீறியபடி இருளை ஊடுருவியபடி கருமை வர்ணத்தில் அது செல்கிறது.

சற்றுத் தொலைவில் பகல் தெரிகிறது.

அடடா... அது பகலல்ல... செயற்கை விளக்குகளால் ஒளியூட்டப்பட்ட பகுதி.

வேகமாக வந்த கரும் வாகனம் ஒளியின் எல்லையில் தன்னை நிலைப் படுத்தி கொள்கிறது. சற்று நேரம் எந்த அசைவுமில்லை.

மயான அமைதி.

அவ்வப்போது சில சில் வண்டுகளின் ரீங்காரம் அமைதியை குலைக்கிறது.

திடீரென சர்க் என்ற ஒசையுடன் வாகன கதவு திறக்கிறது.

இருளோடு இருளாக மறைவோடு மறைவாக திமுதிமுவென உள்ளிருந்து ஏழு உருவங்கள் வெளியேற...

அவற்றின் கரங்களிலும் உடம்புகளிலும் ஏராளம் பொருட்கள்.

முகம் தெரியாதபடி கறுப்பு சாயங்கள் முகத்தை விகாரப்படுத்தியிருந்தன.

வெளியேறிய உருவங்கள் தரையோடு தரையாக குனிந்தபடி நகர்கின்றன.

உஷ்... என்ற சீறலில் இரண்டாவதாக நகர்ந்த உருவம் சலனமடைய சட்டென சுதாகரித்துக் கொண்ட அடுத்த உருவம் மின்னல் வேகத்தில் செயற்பட்டது.

கை மின்வளக்கொளியில் இரண்டு துண்டான நிலையிலும் துடித்துக் கொண்டிருந்த அந்த சர்ப்பம் கோரமாக தெரிந்தது.

எந்தவித உணர்வுமின்றி உருவங்கள் தொடர்ந்து நகர்ந்தன. வாய்ப்பான ஒரு மரமறைவில் ஒன்று கூடின.

அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி அவை ஆராய முயன்றன.

சற்று தொலைவில்,

மின்னொளியில் பல மனிதர்கள் இவர்களை நோக்கி...

2
வந்து கொண்டிருந்த மனிதர்களும் சாதாரணமாகப்படவில்லை.

ஒவ்வொருவர் உடலும் சில நூறு கிலோ எடைகளை தாங்கியே வந்தன.

சிறுசலனங்களின் அரவம் கேட்டே அவை வந்திருக்க வேண்டும்.

விளக்கொளியைப் பாய்ச்சி ஆராய்ந்தபின் வந்தவழியே அவை திரும்பி நடக்க, இதற்குள் தம்மை ஆசுவாசப்படுத்தி கொண்ட ஏழு உருவங்களும் மறைவுகளில் இருந்து வெளிப்பட்டன.

முன்னால் வந்த உருவம் விரலினால் காட்டிய சைகைகளுக்கேற்ப மின்னலென மற்றைய உருவங்கள் செயல்பட்டு தத்தமக்கென ஒதுக்கப்பட்ட இலக்குகளை நோக்கி நகரத் தொடங்கின.

இரவைப் பகலாக்கும் விளக்கொளியில் உடலை துரும்பாக்கும் எடைகளுடன் மூர்க்கத்துடன் நிழல்களின் மறைவுகளூடே நகர்வுகள் நடந்து கொண்டிருந்தன.

குழுவின் தலைவன் தன் தொலை கருவியை உயிர்ப்பித்தான்.

"ராபர்ட், முடிஞ்சுதா"

என்ற தலைவனின் கேள்விக்கு நகர்வுகளினுடே மின்சாரம் பாய்ச்சப்பட்ட வேலியை அதற்குள் அண்மித்து விட்ட ராபர்ட் என தலைவனால் விழிக்கப்பட்ட அவ் உருவம்

"ஒரு நிமிடம் பொறுங்கள்" என பதிலளித்தது.

சில விநாடிகளின் ராபர்ட் மின்வேலியை கச்சிதமாக துண்டித்து உள்ளே நுழைய வழியேற்படுத்தினான்.

மீண்டும் தொலை கருவிகளின் உதவியோடு ஆங்காங்கே நிலைபெற்றிருந்த ஏனைய உருவங்கள் ஒவ்வொன்றாக உள்நுழைந்து தம்மை நிலைப்படுத்திக் கொண்டன.

இறுதியாக ராபர்ட்டும் உள் நுழைந்து பழையபடி மின்வேலியை சீர்படுத்திவிட்டு முன்சென்றவர்களின் தடயங்களை அழித்தபடி பின்புறமாக நகர்ந்தவண்ணம் தன் நிலையை அடைய,

சுற்றிச் சுழன்ற தேடுதல் வெளிச்சம் அவனை நோக்கி வீசியது.......

3
வீசியது வெளிச்சம் மட்டும்தான்....

கண்காணிக்கும் விழிகளோ தூக்கத்தில்.....!

தன்னைக் கடந்து சென்ற ஒளிவாய்க்காலில் தன் சுற்றுப்புறத்தை இலகுவாக அவதானித்த ராபட், அதற்கிடையில் மற்ற அறுவரும் தம்மை உருமறைத்துக் கொண்டதை எண்ணி தம் நகர்வு சரியான திசையில் நடைமுறை ப்படுத்தப்படுவதை புரிந்து கொண்டான்.

மீண்டும் தலைவனின் தொலைகருவி ராபட்டை உசுப்பியது.

"ராபட், ஏதாவது பிரச்சனையா....?"

"இல்ல கதிர், சேச்லைட்டில் மாட்டுபட்டுபோனன். ஆனால் அவங்கள் கவனிக்கல. தப்பிட்டம். உங்கட பொசிசன் ஓகேயா...?"

"ஓகே ராபட். இன்னும் அரை மணித்தியாலத்துக்கு எந்த மூவிங்கும் வேணாம். அடுத்திருக்கிற பொயின்ரில 10.30க்கு பிறகுதான் ஆள் மாறுவாங்கள். அந்த நேரத்தில் ரமேசும் ரிச்சட்டும் இடப்பக்கமாயிருக்கிற கட்டிடத்துக்குள் நுழைவாங்கள்"

"கதிர், நாம் முதல் போட்டபடி இல்லையே திட்டம்"

"ஓமோம். சின்ன மாற்றம். நிலமை அப்படி தானிருக்கு. உள்ளுக்கயிருந்து கடைசியா வந்த தகவல்படிதான் திட்டத்தில் மாற்றம்...எல்லாம் வெல்லுவம்...."

"ஓகே, அப்ப ரமேசையும் ரிச்சாட்டையும் அடுத்த நிலையில விட்டுட்டு நாம 5 பேரும்தான் உள்ள போப் போறமோ"

"ஓமடா, வெளியவும் 2 பேரிருந்தாதான் விசயம் முடி யும். இம்முறை அவர்கள் கொஞ்சம் உஷார். வெளியிலும் ஆக்களை கூட்டிடி போட்டாங்கள்"

"சரி கதிர், ரமேசும் ரிச்சாட்டும் அவங்கட நிலைக்கு போனபிறகு சொல்லு, அதுவரை நான் இந்த பாழாபோன நுளம்புகளோட சண்டைபோடபோறன்"

என்றவாறு தன் தொலைகருவியை அணைத்த ராபட் காரிருட்டில் ஒரு மரமறைவை தேடி சிறிது நகர்ந்தான்.

இருளை துளாவிய அவன் கைகளை காற்று தழுவிச்சென்றது.

இரண்டடி வைத்து மூன்றாவது அடி வைக்க அவன் இடக்காலில் ஏதோ இறக்கம்...... ஒரு அங்குலமளவு கால் மண்ணில் புதைந்தது போலுணர்வு....

அதே நேரம் மீண்டும் தேடுதல் வெளிச்சம் அவனை நோக்கி திரும்பத் தொடங்கியிருந்தது....

4
ராபர்டின் இதயத்துடிப்பு அதிகரிக்க தொடங்கியிருந்தது, சந்தேகமேயில்லை! நிலக்கண்ணிதான்! சற்று அசைந்தாலும் வெடித்துவிடும்.

அசையாவிட்டால் நோக்கி வரும் வெளிச்சத்தில் மாட்டிவிடும் அபாயம்!

எவ்வளவுதான் அவதானமாக இருந்தும் சில சறுக்கல்கள் தவிர்க்க முடியாததாகி விடுகின்றன.

சற்று தொலைவில் தன்னை ஸ்திரமாக நிலைப்படுத்திக் கொண்டிருந்த கார்த்திக், ராபர்ட்டின் இக்கட்டை உணர்ந்து கொண்டவனாய் திடீர் முடிவெடுத்து செயற்படலானான்.

வெளிச்சம் ராபட்டை அண்மிக்கும் தருணம், சிறு கல்லொன்றை தம் அணியினர் நிலையெடுக்காத பக்கம் நோக்கி எறிந்து சிறு சலசலப்பை ஏற்படுத்தினான்.

கண்காணிக்கும் விழிகள் விழிப்பாயிருந்தாலும் அதன் கவனம் சத்தம் வரும் திசைக்கு ஈர்க்கப்பட்டால் ராபர்ட்டை வெளிச்சத்தில் பார்ப்பது தவிர்க்கப்படும் என்பதுதான் கார்த்திக்கின் கணிப்பு.

கணிப்பு தவறவில்லை.

அசம்பாவிதமின்றி வெளிச்சம் ராபர்ட்டை மீண்டும் கடந்தது.

ஆனாலும் காலடியிலிருந்த ஆபத்து நீங்கவில்லை.

வேகமாக ராபர்ட்டை நோக்கி நகர்ந்த கார்த்திக் நிலமையை உணர்ந்து ராபர்ட்டின் காலடியில் குழி பறிக்க தொடங்கினான்.

விசேட பயிற்சிகள் பெற்றவர்களாதலால் விரைவாக சூழ்நிலையை தம்வசம் கொண்டு வந்தனர் கார்த்திக்கும் ராபர்ட்டும்.

செயலிழக்க செய்யப்பட்ட நிலக்கண்ணியை உருமறைத்து வைத்து விட்டு மீண்டும் வெளிச்சம் தம்மை நோக்கி வருமுன்னே தகுந்த நிலைகளுக்கு அவதானமாக முன்னேறினர்.

மொத்த திட்டத்தையும் பாழாக்ககூடியதான பதட்டமான சூழல் நிலவிக் கொண்டிருந்தபோதும் எதுவித பதட்டமுமின்ற நடந்து கொண்டிருந்த ஒவ்வொரு அசைவுகளையும் தன் ஒளிப்பதிவு கருவிக்குள் சிறைப்பிடித்து கொண்டிருந்தான் மதன்.

கடிகாரமுள் 10.30 நெருங்கி கொண்டிருந்தது.

கண்காணிப்பு கோபுரத்திலும் அசைவுகள் புலப்படதொடங்கியிருந்தது.

அடுத்த கட்ட நகர்வுக்கு தயார்படுத்தி கொண்டது ஊடுருவிய குழு!.

5
காவலர்கள் கடமைமாறும் விடயத்தில் கவனமாயினர்.

வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட ஊடுருவல்குழு வெகுவேகமாக தரையோடு தரையாக முன்னேறியது.

முதலில் தென்பட்ட இடதுபுறமாய் அமைந்திருந்த களஞ்சிய அறைபோல் காணப்பட்ட கட்டடத்துள் ரிச்சட்டும் ரமேசும் நுழைய அவர்களை தாண்டி கொண்டு ஏனையவர்கள் மேலும் முன்னோக்கி நகர்ந்தனர்.

திட்டப்படி 11 மணிக்குள்ளாக அவர்கள் தங்கள் இறுதி இலக்கினை அடைந்துவிட வேண்டியிருந்தது.

இருப்பது இன்னும் அரைமணிநேரம் தான். அடையவேண்டிய இலக்குகளோ ஒவ்வொருவருக்கும் பலநூறு மீட்டர்களில் இருந்தது.

பல வெட்ட வெளிகள், தடையரண்கள், மின்வேலிகள் என ஏராளமான தடைகள் .

இருளரசனிற்கு துணையாக நிலவு விடுமுறை எடுத்துக்கொண்ட நாளானாலும் கூட செயற்கை நிலவுகளாய் சுழன்றடிக்கும் தேடுதல் வெளிச்சங்கள் ஏற்படக்கூடிய அபாயங்களை கட்டியம் கூறி நின்றன.

இருட்போர்வைக்கு தோதாக தம்மை உருமறைத்திருந்த போதிலும் தரையோடு தவளும் போது சீருடையை மீறி ஊறிவரும் ஈரமும் கூடவே ஊர்ந்துவரும் உயிரினங்களும் உடலில் அசைவை ஏற்படுத்தி எதிரிக்கு வெளிக்காட்டும் அபாயமும் இருந்தது.

ஆனாலும் சாதாரண மனித உடல்களை கொண்டவர்களாக அவர்கள் இல்லை.

எறும்புக்கடிக்கும் சில்லிடவைக்கும் ஈரலிப்பிற்கும் இசைவாக்கப்பட்ட இரும்பு உடல்கள் ஆதலால் வெளித்தெரியாத அசைவுகளுடன் வேகமாக நகர்ந்தன உருவங்கள்.

அவ்வப்போது ஒளிப்படக் கருவி மட்டும் மேலே எட்டிப்பார்த்து சுழன்றபடி இருந்தது.

இவ்வளவு அபாயங்களுக்கிடையிலும் இதன் அவசியத்திற்கு அவர்கள் கொடுத்த முக்கியத்துவம் அவர்களின் உறுதியை புலப்படுத்தியது.

வினாடிகள் நிமிடங்களாக நிமிடங்கள் மணித்துளிகளை நோக்கி விரைந்து கொண்டிருந்தன.

பல ஏக்கர் விஸ்தீரணமுள்ள அந்த எதிரியின் வலயத்துள் வெறுமனே ஏழு பேர்மட்டும் கொண்ட இந்த கொரில்லா கொமாண்டோக்குழு என்ன செய்யப்போகிறது.?

[ஊடுருவல் தொடரும்...] [பகுதி-2] (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=379492#post379492)[பகுதி-3][பகுதி-4] (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=379836#post379836)

அக்னி
29-08-2008, 02:28 AM
பொருத்தமான தலைப்பு.
விறுவிறு ஆரம்பம்.

இருளுக்குள் ஒளிரும் விழிகள்,
என்ன செய்யப்போகின்றன்..?

பாராட்டுக்கள் தீபன்...

எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கின்றேன் அடுத்த பாகத்திற்காக...

ஓவியன்
29-08-2008, 02:57 AM
தலைப்பிலேயே கதைக் கரு ஓரளவுக்கு புரிந்தது எனக்கு....

விறு, விறுவென நகரும் வரிகள்
உங்கள் கதையின் பலம்..!! :)

தொடர்ந்து ஊடுருவுங்கள், நானும் கூடவே வருகிறேன்..!! :)

அமரன்
29-08-2008, 08:22 AM
முறுகிய விறகில் பற்றிய தீயாக விறுவிறுப்பு. தங்கு தடையின்றி கொட்டும் பெற்றோல் வார்த்தைகள் தீயைக் கங்காகக் கூட அனுமதிக்கவில்லை. ஈரமும் வீரமும் தீரமும் உரமும் கலந்த களம். நச்சுப் பாம்புகளை வெட்டி எறிவதுக்கான பயணம் என்பதைக் கட்டியம் கூறும் சீறிய சர்ப்பத்தை மூர்க்கத்துடன் வெட்டித்தொளித்த நிகழ்வு. வளமையுடன் தொடரட்டும் 'உறங்காதகண்மணி'களின் பயணம். நாங்களும் உறுதுணையாக வருகிறோம்.

தமிழ் ரசிகன்
29-08-2008, 09:47 AM
பொறுத்தமான தலைப்பு. விறுவிறுப்பு. என்ன செய்ய போகிறார்கள். எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம். வாழ்த்துக்கள்.

தீபன்
30-08-2008, 11:10 AM
நன்றி அக்னி, ஓவியன், அமரன், தமிழ் ரசிகன். எல்லோருமே எந்த கதை சொல்கிறேனென தெரிந்து கொண்டே கதை கேக்கிறாங்களே...! இது அது இல்ல.... நம்புங்கப்பா.....
ஆழமான விமர்சனத்திற்கு விசேட நன்றிகள் அமரனுக்கு.
விரைவில் அடுத்த பகுதியோடு சந்திக்கிறேன்.

tamilambu
30-08-2008, 03:20 PM
இது அது இல்லாட்டி....
அப்ப இது எது?

கலக்கிறிங்க நண்பரே....

மறத்தமிழன்
30-08-2008, 06:48 PM
நல்ல தொடர். திரில் ஆக இருக்கு. தில்லும் இருக்க வேணும். கதைகள் எல்லாம் கற்பனைதான். இருந்தும் அதற்கான கரு அன்றாட வாழ்வில் இருந்து தான் எடுக்கிறோம் என்கிறார்கள் பெரிய எழுத்தாளர்கள். நீங்களும் அப்படியா ? நான் வேறுபடுவேன் என்று வழமையை போல அடம்பிடிப்பீர்களா?
எதுவாகிலும் தொடரட்டும் உங்கள் பணி. எட்டும் வரை இயங்குங்கள்.

விகடன்
31-08-2008, 06:25 AM
ஒவ்வோர் உரையாடலின் போதும் அவர்கள் நிற்கும் நிலைகளையும், நிலமைகளையும் சொற்களால் வர்ணித்து, போனது ஏழுபேர் கொண்ட குழு அல்ல,பார்வையிடப்போன என்னுடன் சேர்த்து எட்டுப்பேர் கொண்ட குழு என்பதை மனதில் தோற்றுவிக்கும் வகையில் எழுதியிருக்கிறீர்கள்.
பாராட்டுக்கள் தீபன்

உங்களுடைய தொடரில் இன்னோர் வரவேற்கத்தக்க விடயமும் உண்டு...
அதாவது,
இரு வேறு திரிகளில் ஒரே ஆக்கம் பகுதிகளாக பிரித்து இடப்படும்போது வாசகர்களுக்கு அதை தேடிப்பிடித்து படிப்பதில் ஏற்படும் தாமத்தத்தால் அந்த பதிவிலிருக்கும் ஈடுபாடு நலிவுற ஏதுவாக அமையலாம்.
அதையே, ஒவ்வோர் பாகத்திலும் அதற்கு முந்திய திரியின் மற்றும் அடுத்த திரியின் இணைப்பை கொடுப்பதால் வெகு இலகுவாக கதையின் விறுவிறுப்பில் தொய்வேதுமின்றி படிக்க ஏதுவாக அமையும்.
அந்தவகையில் அடுத்த பாகத்திற்கு அளிக்கப்பட்ட சொடுக்கி வறவேற்கப்படவேண்டியதே.

தீபன்
01-09-2008, 02:11 AM
இது அது இல்லாட்டி....
அப்ப இது எது?

கலக்கிறிங்க நண்பரே....
இது அதுவல்ல. அதுதான் இது. பாராட்டுக்களிற்கு நன்றி நண்பரே.

கதைகள் எல்லாம் கற்பனைதான். இருந்தும் அதற்கான கரு அன்றாட வாழ்வில் இருந்து தான் எடுக்கிறோம் என்கிறார்கள் பெரிய எழுத்தாளர்கள். நீங்களும் அப்படியா ? நான் வேறுபடுவேன் என்று வழமையை போல அடம்பிடிப்பீர்களா?

அது பெரிய எழுத்தாளர்களுக்குத்தானே... இது அன்றாட வாழ்வில் நடக்கும் விடயங்களிலிருந்து பெறக்கூடிய கருவல்லவே.. அசாத்திய வாழ்விலிருந்தே பெற்றுக்கொண்டேன்...! (இப்ப சொல்லுங்க, அடம்பிடித்தேனா...!?)

ஒவ்வோர் உரையாடலின் போதும் அவர்கள் நிற்கும் நிலைகளையும், நிலமைகளையும் சொற்களால் வர்ணித்து, போனது ஏழுபேர் கொண்ட குழு அல்ல,பார்வையிடப்போன என்னுடன் சேர்த்து எட்டுப்பேர் கொண்ட குழு என்பதை மனதில் தோற்றுவிக்கும் வகையில் எழுதியிருக்கிறீர்கள்.

நன்றி விராடன். உங்கள் எண்ணத்தை தொடரும் பகுதிகளிலும் பூர்த்தி செய்வேனா என தெரியவில்லை. ஆனாலும் முயற்சிக்கிறேன்.

kampan
11-09-2008, 03:41 PM
கதையை கதையாக இல்லாமல் விதையாக விதைத்திருக்கிறீர்கள் எம் மனதில். உம்மையில் இது கதையாக வாசிக்கும் போதே எம் மனம் பதைபதைக்கிறதே?

வாழ்த்துக்கள் தீபனே

தீபன்
13-09-2008, 12:41 AM
கதையை கதையாக இல்லாமல் விதையாக விதைத்திருக்கிறீர்கள் எம் மனதில். உம்மையில் இது கதையாக வாசிக்கும் போதே எம் மனம் பதைபதைக்கிறதே?

வாழ்த்துக்கள் தீபனே
நன்றி கம்பரே. ஆமாம், கதையை கதையாக இல்லாமல் இன்னும் உரமாக படிப்பதற்கு பின்வரும் இணைப்பை சொடுக்குங்கள்.

http://www.tamilnaatham.com/articles/2008/sep/special/sriindrakumar20080912.htm

அண்மையில் தினக்குரல் பத்திரிகையில் பிரசுரமான ஒரு உண்மைக் கட்டுரை.