PDA

View Full Version : என் இதய நண்பன்...



poo
02-08-2003, 03:38 PM
தொலைபேசியில் (விளையாட்டாய்) நட்பாகி... இரண்டாண்டுகளுக்கு மேல் கண்களால் சந்திக்காமல் குரல்வழியே உறவாடி....ஆத்ம நண்பர்களாய்.. இதயத்துக்குள் நெருக்கமாக பயணிக்கையில்.. காலதேவனால் அயல்நாடு செல்ல வேண்டிய கட்டாயம்.. கடைசிகாலங்களில் சிலமுறைமட்டுமே பார்த்து.. பிரிவையெண்ணி அழுது பிரிந்துசென்ற என் நண்பனுக்கு நாளை பிறந்தநாள்..

(அயல்நாட்டில் அவன் கஷ்டப்படுகிறனென்பது இன்னொரு சோகம்!)



கண்ணாமூச்சி ரே..ரே...
காலம் இப்படித்தான்
இணைத்தது
உன்னையும் என்னையும்..

அறிமுகம் வேறாயிருந்தாலும்
ஆழமான நட்புக்குத்தான்
வேர் விட்டேன்..

பொய்யும் புரட்டும்
சிறியதாய்..பாதகமில்லாமல்...
பொய்மையும் வாய்மையிடத்து..
வள்ளுவன் வாக்கை
உள்ளத்தில் வைத்தே
உன்னிடம் என் இதயத்தை
வைத்தேன்..

உன் இதயம் இரும்பால்
வடிக்கப்பட்டிருந்தால்
என் நட்பு நொறுங்கியிறுக்கும்..
நல்லவேளையாய்..
ஈரங்களின் மறுபதிப்பாய்..
மௌனங்களின் மொழியாய்..
பூக்களின் வாசமாய்..
ராகங்களின் ஸ்வரமாய்..
இப்படி இத(ய)மாய்
உன் இதயமிருந்ததால்
இன்று இனிய
இத(மான)ய நண்பனாய் நீ..

இணைந்து பிறக்கவில்லை..
இதயங்கள் இணைந்தபின்
வருந்தவில்லை..

உன்னோடு குரல்சேர்த்து
நடைபோட்ட நாட்கள்
என்னை ஏங்கவைக்கின்றன
கரம்கோர்த்து நடவா தூரத்தில்
உ(எ)னை வைத்தபின்..

பறிமாறிக்கொள்ள
பல விஷயங்களிருந்தும்
பக்கமில்லாததால்
பரிதவிக்கிறது என் பரிதாப மனது..

வளமான உன் வாழ்க்கைக்கு
வழிசொல்ல வார்த்தைகளில்லை..
தோள்கொடுக்க தோளில்லாமலில்லை..

காலதேவனின்
காட்சிகள் சிலநேரங்களில்
கொடூரமாகத்தான்...
உன்னை கடல்கடத்தி
எங்கள் காலத்தை
கடத்த மறுக்கிறானே..

காதல் வெள்ளத்தில்
நீ நீந்துவதை
கண்டுமகிழ கண்கள்
காத்துக்கிடக்கின்றன...
உன் கனவுகளை
கலக்க கனிவாயொரு துணையில்லாமல்
கலங்குவாயென நினைக்கையில்
கண்ணீர் துளிகள்
கரைபுரளாமலில்லை..

உன் நிழலைக் காணாமல்
குரலால் இணைந்த கனம்
இன்றும் இதயத்தில்
இனிதாய் இம்சை செய்கிறது
இப்படி ஒரு உறவில்
கருவாகாமல் போயிருந்தால்
நம் நட்பு கள்ளமில்லாமல்
பிறந்து கண்ணியமாய்
நடைபோட்டுக் கொண்டிருக்காதென
நினைக்கையில் கண்கள்
பனிக்க கரங்களை கூப்புகிறேன்
தொலைபேசியை நோக்கி...

உன் ஒவ்வொரு பிறந்தநாளும்
எனக்குள் இடியை இறக்குவதாய்..
ஆம்.. பிரிந்திருக்கும்
வருடங்களின் கணக்கில்
இன்னொன்றை
இணைத்தால் தாங்குவதற்கு
இதயமென்ன இடிதாங்கியா?!!...

உனக்கு வாழ்த்துக்கள்
கூறப்போவதில்லை..
இன்றுமட்டும்
வாழ்த்துபவர்களுக்கு
இந்த நாளை நான் விட்டுவிடுவதால்..
உன்னை ஒவ்வொரு நாளும்
வாழ்த்தும் மனமாய் நானிருப்பதால்...

உனக்கு சிறப்பான வாழ்த்துக்கள்
கூறப்போவதில்லை..
சிறந்தவனாய் விளங்க வேண்டுமென
சிந்தையில் என்னாளும்
உன்னை சிந்தித்துக் கொண்டிருப்பதால்..

அருகிலிருந்தபோது
அலைகழித்தோம்
தொலைவில் போனபின்
தொங்குகிறோம்..
ஏங்கி ஏங்கி
கண்கள் வீங்கவேண்டுமென
நம் நட்பு சாபமிட்டுவிட்டதுபோலும்..
ஆனாலும்
அதற்கொரு நன்றி...
தொலைவில் உனை வைத்து
உறவுகள் இல்லாத நிலையில்
உனை தைத்து
எனை நினைக்கும் நிமிடங்களை
இன்னமும் கூட்டியமைக்கு....


சந்தோஷ தினத்தை
சாகடித்துவிட்டதாய்
உளறியிருந்தாய்..
சத்தம்போட்டு
நானழ உனக்கு விருப்பமா..

கலங்காதே நண்பா..
காலம் மாறும்
அடுத்தமுறை இணைவது
நம் கரங்கள்தாம்...

karavai paranee
03-08-2003, 04:58 AM
கரங்கள் இணையும்வரை
மெளனமாய் நானும் என்நண்பனின் நினைவில்

நன்றி பூ அவர்களே இந்த நேரத்தில் என் நண்பன் ஒருவனையும் நினைவுக்கு தந்தமைக்கு

இக்பால்
03-08-2003, 10:06 AM
எனக்கும் பிறந்த நாள்தான். இதை எனக்கும் கற்பனை செய்து

பார்த்துக் கொள்ளட்டுமா என் அன்புத் தம்பி பூ அவர்களே!

உண்மையிலேயே பாசமாக இருக்கிறது.-அன்புடன் அண்ணா.

இ.இசாக்
03-08-2003, 05:49 PM
என் அன்பு பூ
நட்புக்கு மரியாதை உம்கவிதையால்
வாழ்க நட்புடன்

lavanya
04-08-2003, 06:24 AM
நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்லதாய் ஒரு நிதர்சன கவிதை தந்தமைக்கு
தம்பிக்கு பாராட்டுக்கள்

poo
04-08-2003, 03:54 PM
எனக்கும் பிறந்த நாள்தான். இதை எனக்கும் கற்பனை செய்து

பார்த்துக் கொள்ளட்டுமா என் அன்புத் தம்பி பூ அவர்களே!

உண்மையிலேயே பாசமாக இருக்கிறது.-அன்புடன் அண்ணா.


அப்படி தாங்கள் செய்தால் எனக்குத்தானே மரியாதை.. ஆகட்டும் அண்ணா!!

சேரன்கயல்
04-08-2003, 05:07 PM
பூப் போல ஒரு கவிதை...
நானும் எங்கோ ஒரு நாட்டில் இருந்தபடி என் நண்பர்களை நினைத்துக் கொண்டேன்...
நட்பின் வாசம் என் மனமெங்கும் பூத்திருக்கிறது...

இக்பால்
05-08-2003, 04:47 AM
பூ தம்பி...முதலில் இந்த கவிதை எனக்குத்தானோ என்று கற்பனை செய்து

நீங்கள் யாராக இருக்கும் என ஒரு ஆராய்ச்சி செய்தது என்னவோ

உண்மைதான்.-அன்புடன் அண்ணா.

Narathar
07-08-2003, 07:28 AM
நட்பின் வாசம் கம கமக்கிறது
உங்கள் கவிதையில்......................

gankrish
07-08-2003, 10:03 AM
பூ உன்னை விட்டால் இந்த மாதிரி கவிதை யாரால் எழுத முடியும். எனக்கு ஒரு நண்பன் துபாயில் இருக்கிறான். அவனுக்கு இதை அனுப்புவேன். நிச்சயம் அவன் ரசிப்பான். (கவலைபடாதே நான் எழுதினாதாக கூறமாட்டேன்... ஹீ.ஹீ.. :lol: :lol: )

`நண்பனே எனதுயிர் நண்பனே
நீண்ட நாள் உறவு இது..
இன்று போல் என்றும் தொடருமே'
இந்த பாட்டு ஞாபகத்திற்க்கு வருது.

(பி.கு. என் பிறந்த நாள் Marchல் வருது)

surya2003
07-08-2003, 05:28 PM
நட்பு பற்றிய மிக இயல்பான சம கால கவிதை.. மிகவும் அருமை

nalayiny
09-08-2003, 05:02 PM
கிறங்கி ரசித்த கவிதைகள் வாசையில் இதுவும்

இளசு
04-09-2003, 12:31 AM
நிஜ உணர்வுகளை வடிக்கும்
இதுபோன்ற கவிதைகள்
எழுப்பும் இதமான அதிர்வுகளே அலாதிதான்.

பாராட்டுகள் தம்பிக்கு!

poo
03-08-2004, 06:52 AM
தொடமுடியாத தூரத்தில்
நீயிருந்தாலும்...
ஒரே வானிற்கு கீழ்தான்
நாமிருக்கிறோமென
நித்தம் நித்தம்
நெஞ்சை தேற்றுவது
இன்னும் எத்தனை நாட்களுக்கு??!!..


***** என் இதய நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!! *****

பாரதி
03-08-2004, 07:35 AM
அன்பு பூ...
உங்களுடன் சேர்ந்து உங்களின் இனிய நட்பை பெற்ற நண்பருக்கு தமிழ்மன்றத்தின் சார்பில் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

thempavani
03-08-2004, 09:09 AM
அப்பப்பா...என்ன வார்த்தைகள்...என்ன வார்த்தைகள்...

மனதில் ஒரு கோவிலே கட்டியிருப்பார் போலும் அண்ணன் பூ...

அண்ணா.. தங்கள் நண்பருக்கு எனது வாழ்த்துக்களும் இறைமன்றாடல்களும்...

kavitha
03-08-2004, 11:33 AM
அவருக்கும் சேர்த்து வாழ்த்துகள் பூ...
கொடுத்துவைத்தவர் உம் நண்பர் ( நாங்களும் தான் :))

மன்மதன்
03-08-2004, 12:07 PM
அருமையான கவிதை பூ.. நட்புக்காலம் சிறப்புடன் இருக்க வாழ்த்துக்கள்..

அன்புடன்
மன்மதன்

karikaalan
03-08-2004, 01:11 PM
பூ Ji

உம்மைப்போன்ற நண்பனைப் பெற அவர் என்ன தவமிருந்தாரோ!

வாழ்த்துக்கள்.

===கரிகாலன்

poo
04-08-2004, 06:12 AM
என் நண்பனை நம் நண்பனாய் நினைத்து வாழ்த்தியமைக்கு நன்றிகள் நண்பர்களே!!!