PDA

View Full Version : என் கிராமம்எஸ்.எம். சுனைத் ஹஸனீ
26-08-2008, 05:09 PM
வேளைக்கு ஒன்றென்ற
திரிகோணக் கோட்பாடுகளில்
விஜயமிட்ட அரசுப் பேருந்துகளெல்லாம்
சிற்றுந்துகள் வரவில்
கவனிப்பாரற்றுப் போயின

யார் என்ன எந்த வீட்டுக்கென்ற
புதியவருக்கான குசலங்களும்
மாயமாய் மறைந்து விட்டிருந்தன

அமெரிக்கர்கள் அணிந்த
வேட்டி சட்டையாய்
ஒவ்வொரு கிராமத்தானுடனும்
ஒட்டாமல் பயணிக்கின்றன
அவர்களின் நாகரீக உடைகள்

புதியன புகுதலும் பழையன கழிதலும்
ஏறக்குறைய எனதூரைப் பார்த்தே
எழுதியதை போல்
பிரம்மாண்ட மாற்றங்கள்

வானம் மட்டும் மாறாமல்
விரிந்து காட்சியளிக்கிறது

தெரு முகப்பிலிருந்து
அதன் கடைசிச் சுவரை
எட்டிய பார்வைகளெல்லாம்
இடைப்பட்ட கட்டிடங்களில் மோதி
அறுந்து விழுமளவில்
விசாலங்கள் விலகிப் போயிருந்தன

தெருவுக்கு ஒன்றென்ற
குப்பைத் தொட்டி வழமை ஒழிந்து
அனைத்து வீடுகளின் முகப்பில்
ஒவ்வொன்று முளைத்திருக்கின்றன

பெருசுகள் கதை பேசிக் கழித்த
திண்ணைகளெல்லாம்
ஜப்பானியப் பெயர்களைத் தாங்கிய
நவீன வாகனங்களின்
நிறுத்தலிடமாய்ப் போனது

வீட்டுக்கு ஒரு மரம் வளர்த்தவர்கள்
தெருவிற்கு ஒரு மரம் வளர்க்கிறார்களாம்
அம்மைக்கு என்றாலும்
ஆட்டுக்குட்டிக்கு என்றாலும்
அம்மையப்பன் வீட்டில்தான்
அரைமணி நேரம் கெஞ்சி
இலை பிடுங்கிச் செல்கிறார்களாம்

என்னைப் போலவே
ஏதேனும் விசேஷமென்றால்
வந்து செல்கிறார்கள்
என் சிநேகிதர்களும் என்றான்
என் பால்ய சிநேகிதன் ஒருவன்

ஒட்டிய உறவாடிய மணலில்
மூன்றாமவனாய் இறங்கி
அப்படியே திரும்பியும் வந்தேன்.


எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

நாகரா
26-08-2008, 05:25 PM
ஈர இருதயம் மறந்ததால் வந்த
இயந்திர கதி நரகத்தை
அப்படியே படம் பிடித்திருக்கும்
உம் கிராமக் கவிதை அபாரம்

வாழ்த்துக்கள் ஹஸனீ.

இளசு
26-08-2008, 06:16 PM
படக்காட்சி...!

சுந்தரராமசாமியின் கதைகளில் வரும் கிராமக் காட்சி போல் நேர்த்தி!

விலகிய நம் மனப்பிம்பம் இன்னும் அந்நாட்களில்!
மாறியது கிராமம் மட்டுமா? நாமும்!

மாறாதது அம்மைக்கு இலை தேடும் வழக்கம் போல் சில..
அதில் இரட்டைக் குவளைகள் இல்லாதவரை மகிழ்ச்சியே!


வாழ்த்துகள் ஜூனைத்!

தீபா
26-08-2008, 06:31 PM
அருமை அருமை. அருமை.... (கொஞ்சம் ஓவராத்தான் போய்ட்டேன்)

இப்படி வளர்ச்சியில் செல்லும் கிராமத்தில் வளராத பையனா (:D)

உங்கள் கவிதைகளின் பிரம்மாதமே சப்பையாக எழுதாமல் நீங்கள் அடுக்கும் சொற்களும் கட்டும் நடையும், தலைப்பை எடுப்பாக எடுத்துக்காட்டும் வித்தையுமே!

அட போங்க... எந்த வரியை எடுத்துக்காட்டறாது? எல்லாமே கலக்கல்.

வாழ்த்த வார்த்தையில்லாமல்
தென்றல்.

சாலைஜெயராமன்
26-08-2008, 07:54 PM
வேளைக்கு ஒன்றென்ற
திரிகோணக் கோட்பாடுகளில்
விஜயமிட்ட அரசுப் பேருந்துகளெல்லாம்
சிற்றுந்துகள் வரவில்
கவனிப்பாரற்றுப் போயின

ஒட்டிய உறவாடிய மணலில்
மூன்றாமவனாய் இறங்கி
அப்படியே திரும்பியும் வந்தேன்.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

சட்டென்று பிறந்தமண்ணில் அன்னியனான நடத்தப்பட்டதாலா அல்லது ஒட்ட முடியாததாலா என்று புரிந்து கொள்ள இயலா மனப்பாங்கை இன்றைய நாகரீக வளர்ச்சியின் அவமான நிகழ்வுகளை மிக அழகாக கவிதையாக்கியது மிக அருமை.

கிராமமாய் இருந்த பிறந்த மண் நாகரீகச் சாயம் பூசி நுனி நாக்கு ஆங்கிலத்தால் இன்று ஆக்கிரமிக்கப்பட்டது வளர்ச்சியா அழிவா அறிந்து கொள்ள இயலவில்லையே ஹஸன். உறவுகள் பிரிந்ததும் ஒட்டாத புதிய உறவும் பொருளாதார வளர்ச்சியாலா அல்லது அது ஏற்படுத்திய பிரிவினையாலா. அமெரிக்காவும், சிங்கப்பூரும் கீழை நாடுகளும் ரொம்பத்தான் நம் நாட்டில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏக்க உணர்வை கவிதையாக்கி உங்கள் உணர்வுகளை நாங்களும் அறிந்து கொண்டோம் சுனைத் ஹஸனி.

ஒரு சந்தேகம். அது என்ன திரிகோணக் கோட்பாடு

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
27-08-2008, 04:22 PM
கிறித்துவத்தில் திரித்துவ கொள்கை என்று ஒரு கோட்பாடு உண்டு. திரி என்றால் மூன்று. மூன்று வேளைக்கு மூன்று பேருந்துகள் எங்களுர்க்கு வருமென்பதால் கொஞ்சம் வார்த்தை ஜாலத்திற்காக திரி கோண கோட்பாடு என்று கூறியிருக்கிறேன். மற்ற படி வேறு அர்த்தமெல்லாம் ஒன்றும் இல்லை. பழமை விட்டு போன கிராமத்தை அப்படியே மிகைக்காமல் கூற முற்பட்டேன் இந்த கவிதையில். நன்றாக வந்திருந்தால் சந்தோஸம். இல்லையென்றால் இன்னும் எழுத பழகிக் கொள்கிறேன். மிக்க நன்றி ஜெயராமன் ஐயா தங்களின் அப்பட்டமான விமர்சனத்திற்கு.

மிகை உற்சாகம் அளித்த தென்றலுக்கும் வாழ்த்திய இளசு அண்ணா மற்றும் நாகரா ஐயா அவர்களுக்கும் மிக்க நன்றி.

மறத்தமிழன்
29-08-2008, 06:33 AM
என் கிராமம் என்ன பாவம் செய்தது
இன்னும் கிராமமாகவே இருப்பதற்கு?
என்னில் பிறந்தவரெல்லாம் நவீனம் கருதி
நாடுவிட்டு நாடு சென்று
ஓய்வுக்கு மட்டும் வருவராம்.
நான்மட்டும் பழமை பேணி வழமைபோலவே
பட்டிக்காடாய் இருக்கணுமாம்.
என்ன நியாயம் இது?
நகரம் நோக்கி ஓடுபவர்கள் ஓடாதிருந்தால்
நானேன் நவீனம் போர்த்தி நளினம் காட்டப் போகிறேன்..!?

நல்ல கவிதை நண்பரே. எனக்குமுள்ள ஆதங்கம்தான். ஆனால், தவறு கிராமத்திலல்லவே. நம்மில்தானே.

பிச்சி
01-09-2008, 09:50 AM
வாவ் சூப்பார்ப்.. அப்படியே வார்த்தைகள் அமர்ந்து விளையாடுகிறாது.

அன்புடன்
பிச்சி