PDA

View Full Version : இரங்குதல்



ஆதி
26-08-2008, 08:34 AM
கிடுக் கிடுகென
கிளைதாவி
கீச் கீசென
இருப்பை தெரியப்படுத்தி
வால்தூக்கி
படகென கீழிறங்கி
துளி உகிர்களால்
தரை கிளறி
சின்ன சின்ன துள்ளல்களொடு
இரை பொறுக்கிய
சிட்டுக்குருவி
எதேச்சியாய் வந்து விழுந்த
எதோ ஒன்றின் பேரிரைச்சலில்
தெறித்து பறந்த
சிறக்கடிப்புகளை
பதுக்கி வைத்திருக்கிறது மனது
அதன் அச்சத்திற்கான
அனுதாபங்களுடன்..

நாகரா
26-08-2008, 08:53 AM
"காக்கை குருவி எங்கள் சாதி" என்று மாகவி பாரதி சுட்டும் ஒருமையுணர்வை உயிரிரக்கத்தை மிகவும் மென்மையாய் அழகாய் எடுத்துச் சொல்லும் அசத்தல் கவிதைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நன்றியும் ஆதி

ஓவியன்
30-08-2008, 11:50 AM
எப்போதும் வலியவனவற்றின் பல அசைவுகள்
எளியவனவற்றை அஞ்சி ஒடுங்கச் செய்கின்றன...

எளியவற்றைப் பயமுறுத்தும் வலியவற்றை நோவதா, இல்லை
அஞ்சி ஒடுங்கும் எளியவற்றின் மேல் அனுதாபம் கொள்வதா...??

பிச்சி
01-09-2008, 11:05 AM
சின்ன விசயங்களையும் கவிதையாக்கும் உங்களை வாழ்த்துகிறேன்.

அன்புடன்
பிச்சி

இளசு
01-09-2008, 12:40 PM
இருத்தல் - இனவிருத்தி முழுமை வரை!

இதுவே உயிரிகளின் ஒரே தாரக மந்திரம்!

இருத்தலுக்கு -
உண் அல்லது உண்ணப்படு!
இது இயற்கை தந்த மாறாவிதி!

பதுங்குதலும், ஒதுங்குதலும், பாய்தலும், முயங்குதலும்
எல்லாம் இவ்விரு விதிகளுக்காகவே!

மற்ற உயிர்க்கு இரங்குதல் மட்டுமே
மனிதம் முயன்று கண்ட மூன்றாம்நிலை!


பாராட்டுகள் ஆதி!