PDA

View Full Version : பாட்டி



ஆதி
25-08-2008, 06:01 PM
வெற்றிலை மணக்கும்
வார்த்தைகளும்
சுருக்கிய உதட்டின்
முத்தங்களும் இல்லாமல்
சுடுமணலில் வதங்கிய மலராய்
காய்ந்து கிடக்குறது மனது..

அரிளி பூப்பறிக்கும்
கைகளின் வாசம்
என் அடி நாசியில்
உன் ஸ்பசிகங்களொடு
சுற்றிக் கொண்டிருக்கிறது..

மகம்புள்ள வரப்போரான்
மகம்புள்ள வரப்போரான் என்று
ஊரெங்கும் வார்த்தை உதிர்த்து
கண்விரித்து நீ பார்த்திருந்த
பாதைகள் மட்டுமின்று
மிச்சமிருக்கின்றன..

மாடு பிடித்து உன்னோடு சென்ற
மேச்சல் நிலங்களில் மாடுகள்
மேய்ந்த மிச்ச புல்லாய்
எஞ்சி கிடக்கிறது
என் நினைவுகள்..

ஊருக்கு செல்கையில் எல்லாம்
உன் பேரனா என்று
விசாரிப்பவர்களில்
உன் அடையாளம் கண்டு
கொஞ்சம் மகழ்ச்சியும்
கொஞ்சம் கண்ணீருமாய்
தளும்புகிறது என் பதில்..

அமரன்
25-08-2008, 06:21 PM
ஈழத்தில் எமக்கு அம்மம்மாவின் அம்மாதான் பாட்டிமுறை. பாட்டி என்று அழைப்பது அரிது. ஆச்சி என்று அழைப்பது பெரிது..

பாட்டிக்கும் எனக்கும்தான்
முதல் ஒற்றுமை.
இருவருக்கும் வாய் பொக்கை.

அதிலே தொடங்கியது
இறுக்கமான பிணைப்பு..

விபரம் தெரிஞ்சபோது
கூட்டில் இருந்த மைனாக்குஞ்சுக்கு
நாக்கில் இரைவைத்து
கொத்தக் கொடுப்பார் அய்யா..

வளைந்த என் புருவ வில்லை
மேலும் வளைப்பாள் அம்மா.
ஆச்சியும் உனக்கு - தான்
சப்பித்தான் சாப்பாடு தந்தா..

பாட்டி வடை சுட்ட கதையை
ஆச்சிதான் உனக்குச் சொன்னா..
நீட்டிய காலில் இருத்தி-அவதான்
உனக்கு குளிக்க வார்த்தா..

இந்தக்கவிதை படித்ததும்
வெத்தலை பாக்கு வாசனை
எனக்கும் அடித்தது..
ஆச்சியும் வெத்தலை போடுவா

சின்ன உரலில் -அவள்
பாக்கிடித்த சத்தம்தானாம்-என்
முதல் இசைக்கு தாளலயம்..

மனமார்ந்த நன்றி ஆதி..

அனுராகவன்
26-08-2008, 05:18 AM
ஆகா அருமையான கவி!!
என் பாராட்டுக்கள் ஆதி ..

இளசு
26-08-2008, 06:33 PM
என் ''ஆயா''வை அன்போடு சில நிமிடம் நினைக்கவைத்த,
கண்கள் பனிக்கவைத்த கவிதை!

நன்றி ஆதி!

அமரனின் பின்னூட்டம் - ஆழ் உரம்!

சிவா.ஜி
26-08-2008, 06:48 PM
அந்தக்கிழவியின், பலநாள் சோப்பு காணாத முடைநாற்ற தோப்பைக்குள் எப்படித்தான் இத்தனைப் பாசத்தைப் பொத்தி வைத்திருந்தாளோ....வயிற்றுப் பிள்ளைகளின் வாரிசுகள் நூறுக்கும்...ஆறா பாசத்தை அள்ளி வழங்கினாள் என் பாட்டி.

வட்டார வழக்கில் அவள் சொல்லும் முன்னிரவுக் கதைகளில் மூழ்கி, பிளந்த வாய் காலையில் வலிக்கும். இட்டிலி விற்றுவிட்டு கூடைக்குள் துணிபோட்டு வெயில் படாமல் வாங்கிவந்துதரும், அவித்த கிழங்கின் சுவையை இன்னும் மறக்காமல், சேமித்து வைத்திருக்கிறது மூளையின் ஒரு செல்.

பாட்டியின் அந்த முதுமை எழுதிய ‘முக'வரிகளுடன் நினைத்துப்பார்க்க வைத்துவிட்டது ஆதியின் இந்தக்கவிதை. பிரமாதம் ஆதி. மனமார்ந்த பாராட்டுகள்.

தீபா
27-08-2008, 02:47 AM
நல்ல கவிதை. திரு.ஆதி. பாட்டிக்குக் கவிதைபடைத்த சிலரில் நீங்களும் ஒருவராகிறீர்கள்

சில பிழைகள். நல்ல சோறுண்ணும்போது இடறும் கற்களைப் போல.. கவிதையைப் பொறுத்தமட்டில் பிழையின்றி சமைத்துவிடுங்கள்.

அன்புடன்
தென்றல்

தீபா
27-08-2008, 02:49 AM
கலக்கிறீங்க திரு.அமரன். சில வரிகளில் சொக்கினேன்.

poornima
27-08-2008, 10:40 AM
//ஊருக்கு செல்கையில் எல்லாம்
உன் பேரனா என்று
விசாரிப்பவர்களில்
உன் அடையாளம் கண்டு
கொஞ்சம் மகழ்ச்சியும்
கொஞ்சம் கண்ணீருமாய்
தளும்புகிறது என் பதில்..
//

மிச்சமாய் எச்சமாய் தொடரும் அங்க அடையாளங்கள் மட்டுமே நிலைநிறுத்திக்
கொண்டிருக்கின்றன தலைமுறை சுவடுகளை..

நான் தொடர்ந்தேன்.. தான் தொடர்வேன் என்ற மகிழ்ச்சி நிலைக்கையில் தான் சந்தோஷமாக மரணத்தை கூட வாடாப்பா என்று வரவேற்கும் மனநிலைக்குப்
போகிறார்கள் தாத்தாக்களும் பாட்டிகளும்..

அம்மா-அப்பா பிடிக்காமல் வளரும் பிள்ளைகள் இருக்கலாம்..
தாத்தா-பாட்டியை வெறுத்தொதுக்கும் தலைமுறைகள் உண்டா என்ன..?

ஆதி கவிதை வரிகளிலும் அமரன் தொடர்ந்த வரிகளிலும் மானசீகமாய் வந்து
மனசுக்குள் சிரிக்கிறாள் பொக்கைவாயாய் பூவாய் விரித்து பாட்டி...