PDA

View Full Version : அலைகள்



தாமரை
25-08-2008, 04:05 AM
அலைகள் சற்று இரைச்சலாக பேசிக்கொண்டிருந்தன. நாலு வீடுகளில் வேலை செய்யும் வேலைக்காரிகளே வாய் மூடாமல் ஊர்க்கதை பேசிக் கொண்டிருக்கும் பொழுது, ஊரே அவர்கள் முன் ஆயிரம் காட்சிகள் அரங்கேற்றம் செய்யும் அவைகளுக்குப் பேசவா விஷயங்கள் இல்லாமல் போய் விடப் போகின்றன..

வத்சலா தலையைக் குனிந்தவாறு உட்காந்திருந்தாள். அவளுக்கு அருகே சற்றுத் தள்ளி வின்சென்ட் அமர்ந்திருந்தான்.

இருவருக்கும் இடையில் கனத்த மௌனம் திரையாய் இருந்தது.

வத்சலாதான் மௌனத்தைக் கலைத்தாள்.

வின்சென்ட், நீங்கள் மிகவும் நல்லவர். பொறுமையும் அன்பும் நிறைந்தவர். எந்த ஒரு பெண்ணுமே உங்களைப் போன்ற ஒரு கணவன் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

அப்புறம் என்ன வத்சலா, என் காதலை ஏற்றுக் கொள்ள உனக்கு என்ன தயக்கம்?

புரிஞ்சுக்கோங்க வின்சென்ட், எனக்கு ஒரு தங்கை இருக்கிறாள். என்னுடைய இந்த சுயநலத்திற்கு அவளோட வாழ்க்கை பலியாயிடக் கூடாது.

உங்கள் நல்ல மனதிற்கு உங்களை புரிந்து கொண்டு வாழும் ஒரு நல்ல மனைவி கிடைப்பாள். தயவு செய்து என்னை தொந்தரவு செய்யாதீர்கள்...

உனக்காக நான் எத்தனை வருடம் வேண்டுமானால் காத்திருக்கத் தயார்.. உன் தங்கையின் கல்யாணம் முடிந்த பின்னால் வேண்டுமானால் நாம் திருமணம் செய்து கொள்ளலாம், வின்சென்ட் சொல்லிக் கொண்டே போக..

வேணாம் வின்சென்ட், இதை மறந்திடுங்க.. சொல்லிவிட்டு வத்சலா எழுந்து பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடக்கத் தொடங்கினாள்..

-------------------------x-----------------------------x---------------------x---------------

கொஞ்ச தூரத்திற்கு அப்பால் ஒரு படகு மறைவு..

வாத்சல்யா, கொஞ்சம் யோசி.. என் குடும்பச் சூழ்நிலை அப்படி...

என்ன விஜய் புரிஞ்சுதான் பேசறீங்களா? இப்படி அவசரப்பட்டா எப்படி?

என்ன செய்வது வாத்ஸ், அம்மாவின் உடம்பு ரொம்ப சீரியஸா இருக்கு. அவங்களுக்கு எனக்கு கல்யாணம் பண்ணிப் பார்க்கணும்னு ரொம்ப ஆசை..

அம்மாவிடம் உண்மையைச் சொல்லி விட வேண்டியது தானே.

சொல்லலாம் ஆனாலும் அம்மா கல்யாணத்திற்கு உடனே ஏற்பாடு செய்யச் சொல்வாங்க..

உடனே எப்படிச் செய்ய முடியும் விஜய், வீட்ல அக்கா இன்னும் கல்யாணம் ஆகாம இருக்கிறா, இந்த நிலையில எனக்குக் கல்யாணம் அதுவும் காதல் கல்யாணம் என்றால் அவ வாழ்க்கை வீணாயிடாதா?

அதுக்கு இப்ப என்ன செய்யறது வாத்ஸ், உனக்கு அக்கா வாழ்க்கை, எனக்கு அம்மாவின் ஆசை..

ஆமாம் விஜய், ரொம்ப யோசிச்சுதான் இந்த முடிவிற்கு வந்திருக்கேன்.. உங்க அம்மாவின் விருப்பப்படி ஒரு நல்ல பெண்ணா பார்த்து திருமணம் செஞ்சுக்குங்க. அதுதான் நமக்கு முன்னால இருக்கும் ஒரே வழி..

வாத்ஸ் இதெப்படி முடியும்..

இல்லை விஜய், நம்ம காதலால நாம யாரையும் சந்தோஷமா வச்சுக்க முடியலை... அப்படிப்பட்ட காதல் அழிஞ்சே போயிடட்டும்..

வாத்ஸல்யா திட்டமாக சொல்லி விட்டு எழுந்து பேருந்து நிறுத்ததை நோக்கி நடந்தாள்.


--------------------x---------------------x----------------------x----------------x--------------
பேருந்து நிறுத்தத்தில்

என்ன அக்கா, இங்க நின்னுகிட்டு இருக்கே...

வாத்ஸல்யா, வத்சலாவின் கைகளைப் பிடிக்க,

சும்மா ஃபிரண்ட்ஸோட வந்தேன்.. வத்சலா சற்றுத் திரும்பி கண்ணில் தூசு விழுந்தாற் போலக் கண்களைத் துடைத்துக் கொள்ள...

வாத்ஸல்யாவும் துடைத்துக் கொண்டாள்.

தூரத்தில் அலைகள் புதியக் கதையை தங்களுக்குள் இரைச்சலிட்டு விவாதித்துக் கொண்டிருந்தன

சிவா.ஜி
25-08-2008, 04:13 AM
அலைகளின் இரைச்சலுக்கு அளித்த வர்னனை ஆஹா ரகம். அக்காவுக்காக, தங்கை, தங்கைக்காக அக்கா. இடையில் காதல் விளையாடும் சதுரங்கம். அழகான முடிச்சு. தங்களைத் தோழிகளாய் நினைத்து ஒருவருக்கொருவர் எண்ணங்களை பகிர்ந்துகொண்டால் நல்ல தீர்வு கிடைக்குமே? இயல்பான கதை. பாராட்டுகள் தாமரை.

தாமரை
25-08-2008, 04:17 AM
அலைகளின் இரைச்சலுக்கு அளித்த வர்னனை ஆஹா ரகம். அக்காவுக்காக, தங்கை, தங்கைக்காக அக்கா. இடையில் காதல் விளையாடும் சதுரங்கம். அழகான முடிச்சு. தங்களைத் தோழிகளாய் நினைத்து ஒருவருக்கொருவர் எண்ணங்களை பகிர்ந்துகொண்டால் நல்ல தீர்வு கிடைக்குமே? இயல்பான கதை. பாராட்டுகள் தாமரை.

இப்படி இருந்திருந்தால் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதுதானே கதைகளின் நோக்கமே!.. சில கதைகள் தீர்வுகளை நேரடியாகச் சொல்லி விடலாம். சில கதைகள் இப்படி வாசகர்கள் மனதில் தீர்வுகளைத் துளிர்க்க வைக்கலாம் அல்லவா?

சிவா.ஜி
25-08-2008, 04:25 AM
நிச்சயமாக தாமரை. சொல்லும் கதைகளிலேயே எல்லாவற்றையும் சொல்லிவிட்டால், வாசிப்பவரின் கோணத்தை தெரிந்துகொள்ள வாய்ப்பில்லாமல் போய்விடும்.

விகடன்
25-08-2008, 04:49 AM
கதையின் ஆரம்பத்தில் "எனக்கு ஒரு தங்கை இருக்கிறாள். என்னுடைய இந்த சுயநலத்திற்கு அவளோட வாழ்க்கை பலியாயிடக் கூடாது." என்றொரு வரி வருகிறதே... இதற்கு என்ன அர்த்தம் அண்ணா

தாமரை
25-08-2008, 05:21 AM
காதலென்று வரும்பொழுது, அந்தக் காதல் தன்னுடைய சுக வாழ்வை மட்டுமே கருத்திற் கொண்டது என்று பலர் கருதிக் கொள்ளுகிறார்கள். வின்சென்டின் காதலை ஏற்றுக் கொள்வது சுயநலம் என்று கருதுகிறாள் வத்சலா. இவள் காதலித்தால் அது வாத்ஸல்யாவின் மணத்திற்கும், மணவாழ்க்கைக்கும் இடையூறு விளைவிக்கும் என்ற எண்ணத்தினால்..

பேருந்து நிறுத்தத்தில்

என்ன அக்கா, இங்க நின்னுகிட்டு இருக்கே...

வாத்ஸல்யா, வத்சலாவின் கைகளைப் பிடிக்க,

படிச்சீங்க தானே!

விகடன்
25-08-2008, 06:07 AM
படிச்சேங்க அண்ணா.
அப்ப அது தங்கை இல்லை. அக்கா என்று வரவேண்டும்.

தங்கை என்று இருந்ததால், அந்த கதாபாத்திரத்திற்கு இயலாமை என்றொரு கொடை இருக்கிமோ என்னமோ என்று சிந்தித்திருந்தேன். ஆனால் கதையில் இறுதிவரை அவர் பற்றி ஒன்றுமே காணவில்லை. அதுதான் கேட்டேங்க.

தாமரை
25-08-2008, 06:13 AM
சரி உங்களுக்காக கதையின் மூன்று காட்சிகளுக்கு இடையே கோடு போடறேன்.

முதல் காட்சி அக்கா வத்சலாவிடம் வின்சென்ட் காதலைச் சொல்ல, தங்கையின் எதிர்காலம் கருதி அக்கா வத்சலா மறுக்கிறாள்

இரண்டாவது காட்சி, காதலன் விஜய் திருமணத்திற்கு அவசரப்பட அக்கா வதசலாவின் எதிர்காலம் கருதி தங்கை வாத்ஸல்யா விஜயின் காதலை தியாகம் செய்கிறாள்

மூன்றாம் காட்சி, அக்காவும் தங்கையும் பார்த்துக் கொள்கிறார்கள்.

வத்சலா அக்கா. வாத்ஸல்யா தங்கை..

அப்போ வத்சலா சொன்ன, எனக்கு ஒரு தங்கை இருக்கிறாள். என்னுடைய இந்த சுயநலத்திற்கு அவளோட வாழ்க்கை பலியாயிடக் கூடாது

என்பது சரிதானே!..

அக்கா இன்னும் காதலிக்க ஆரம்பிக்கலை, தங்கை ஏற்கன்வே காதலிக்கிறாள் என்பதுதான் உங்களின் குழப்பமா?

அக்காவின் குழப்பம், தான் காதல் மணம் புரிந்தால், தங்கையைப் பெண் பார்க்க வருபவர்கள், அக்கா காதல் மணம் புரிந்தவள் என்பதைக் காரணம் காட்டி நிராகரிக்கக் கூடும் என்ற அச்சம்..

தங்கையின் குழப்பம், தான் காதல் மணம் புரிந்து கொண்டால் அதைக் காரணம் காட்டியே அக்கா ஏளனத்திற்கு ஆவாளோ என்று..

குறையொன்றுமில்லை....

இளசு
25-08-2008, 06:17 AM
அலைகள் இரைவதற்கு இப்படி ஒரு வியாக்கியானமா? அசந்தேன்!

இன்று அவ்வலைகள் இன்னும் கூடுதலாய், இறைஞ்சலில் இரையும்!

நல்மனச் சகோதரிகள் வாழ்க!

பாராட்டுகள் தாமரை!

ஆதி
25-08-2008, 08:59 AM
அலைகள் என்றால் அப்படி ஒரு மோகம் எனக்கு..

சென்னையில் இருந்த தருணங்களில்.. கல்லூரிக்கும் அலுவலக்கத்திற்கும் மட்டம் போட்டுவிட்டு.. கடற்கரை சென்றுவிடுவேன்..

மொட்டை வெயிலில்.. சுட்ட மணலில்.. இ(ஷ்)ட்ட அலைகளிடம்.. கிட்ட சென்று அமர்வேன்.. பெருவாய் திறந்து.. "ஸ்" என்ற ஒலியுடன் சீரிப்பாய்ந்து.. பொத்தென்று முட்டி தேயவிழும் அலைகளில்.. நானும் கொட்டி போவேன்..

கொட்டும் மழையில்.. நனையும் அலைகளில் நனைந்தவாறு.. சாம்பலுற்ற கடலில்.. அதில் சரியும் மேகத்தோடு சிந்திக்கொண்டிருப்பேன்..

அதனால்தான் அலைகள் னு தலைப்ப பார்த்ததும்.. கவிதையாக இருக்கும் உள்ள வந்தேன்.. கதையாக இருக்க.. அலைகளுக்காக வாசித்தேன்.. முதல் வரியே என்னை முழுசா உள்ள இழுத்திருச்சு.. ஒரே கடற்கரை.. இரு வேறு விதமாய்.. காதலுக்கு நிகழும் ஒரே முடிவு.. தங்கைக்காய் தமக்கை.. தமக்கைக்காய் தங்கை.. என்றந்த மீன்நாறும் மணலில்.. தான்விட்டிழக்கும் காதலை.. தவழ்ந்து செல்லும் காற்று.. அது தழுவிக் கொள்ளும் அலைகளுமே அறியும்.. அவ்வெப்ப நிமிடங்களில்.. அன்றந்த அலைகள் இன்னும் அதிகமாய் ஆவியாகி இருக்கும்.. தங்கையும் தமக்கையும் தமக்குள் பகிர்ந்திருந்தால்.. ஒரு கல்யாண மேடையில் தாலியாயிருக்கும் காதல்.. பகிராததால்.. அதே கரை மேடையில் ஊழிமுடித்துக் கொண்டது காதல்.. என்னத்தான் இருந்தாலும்.. தன்னால் மற்றவரின் வாழ்க்கை பாதிக்கப் படவில்லை என்கிற கொள்ளை திருப்தியில் நல்ல உறக்கம் அடையும் மனது..

வாழ்த்துக்கள் அண்ணா...

MURALINITHISH
25-08-2008, 09:42 AM
ஊரே அவர்கள் முன் ஆயிரம் காட்சிகள் அரங்கேற்றம் செய்யும் அவைகளுக்குப் பேசவா விஷயங்கள் இல்லாமல் போய் விடப் போகின்றன..


உண்மைதான் அதே மாதிரி அக்காவும் தங்கையும் பேசி கொண்டிருந்தால் இருவரின் வாழ்க்கையும் அவர்கள் விரும்பும் விதத்தில் அமைந்திருக்கும் ஆனால் எல்லாம் நம் கையில் இருந்தால் :lachen001::lachen001::lachen001:

தீபா
25-08-2008, 03:43 PM
வாழ்வலைகள்..

காதல் வலையில் சிக்கித் தவிக்கும் அலைகள். முடிவும் அருமை

நல்ல கதை.

அன்புடன்
தென்றல்

அமரன்
25-08-2008, 04:07 PM
அலைகள் அளவில் மாறுபட்டாலும் இயல்பில் மாறுபடுவதில்லை. சிலநேரங்களில் எண்ண அலைகளும் அந்த மாதிரி அமைந்து விடுகின்றன. காதல் தீண்டத்தகாத ஒன்றாக இன்றளவிலும் இருப்பது வேதனை. சகோதரத்துவம் சில விசயங்களுக்கு திரை போடுவது நம் சமூகத்துக்கு சாபக்கேடு. அக்கா தங்கைக்கிடையான பேச்சு எல்லையை மேற்கத்தைய நாகரிகத்திலிருந்து கடன்வாங்கலாம் நமது நவநாகரிக நங்கைகள். அக்கா தங்கை இருவருமா நண்பிகளுடன் கடற்கரைக்கு வந்தார்கள்..

என்ன ஆச்சுண்ணா.. அலைபோல் வருகிறது உங்களிடமிருந்து பதிவுகள்..:icon_b:

தாமரை
25-08-2008, 04:31 PM
அலைகள் அளவில் மாறுபட்டாலும் இயல்பில் மாறுபடுவதில்லை. சிலநேரங்களில் எண்ண அலைகளும் அந்த மாதிரி அமைந்து விடுகின்றன. காதல் தீண்டத்தகாத ஒன்றாக இன்றளவிலும் இருப்பது வேதனை. சகோதரத்துவம் சில விசயங்களுக்கு திரை போடுவது நம் சமூகத்துக்கு சாபக்கேடு. அக்கா தங்கைக்கிடையான பேச்சு எல்லையை மேற்கத்தைய நாகரிகத்திலிருந்து கடன்வாங்கலாம் நமது நவநாகரிக நங்கைகள். அக்கா தங்கை இருவருமா நண்பிகளுடன் கடற்கரைக்கு வந்தார்கள்..

என்ன ஆச்சுண்ணா.. அலைபோல் வருகிறது உங்களிடமிருந்து பதிவுகள்..:icon_b:

பாசங்களில் இது ஒரு சின்ன வழுக்கல் அமரன். தன்னுடைய சந்தோஷம் இதுதான் என்று சொன்னால் மற்றோர் அதற்காக தங்களை வருத்திக் கொள்வார்களே என்று தன் மனம் தனக்கென விரும்புவதை மறைத்தே பழக்கப்பட்ட மனங்கள்.

அம்மா உன்னோட ஆசையைச் சொல்லு என்று கேட்டு என்றாவது உண்மையான பதிலைப் பெற்றிருக்கிறீர்களா? ஏன் இந்தக் கேள்வி.. பயமா சந்தேகமா?

அமரன்
25-08-2008, 04:39 PM
அம்மா உன்னோட ஆசையைச் சொல்லு என்று கேட்டு என்றாவது உண்மையான பதிலைப் பெற்றிருக்கிறீர்களா? ஏன் இந்தக் கேள்வி.. பயமா சந்தேகமா?
வாஸ்தவந்தான்... கேட்டிருப்போம்.. பெற்றிருக்க மாட்டோம்.. பிள்ளைகளுடைய பருவம் மாற மாற அம்மாக்களின் ஆசைகளும் மாறும். ஆனால் எல்லாப் பருவத்திலும் மக்கள் நலம் முன்னிலை வகிக்கும். இது பலமா? பலவீனமா என்பதுதான் எனது சந்தேகம்..

பூமகள்
26-08-2008, 06:08 PM
அலை கரை தொட்டு மணல் மேட்டின் எல்லைக் கோட்டை தாண்டுவதில்லை...

அக்கா தங்கை உறவும் தன் எல்லை கடந்து வந்ததுமில்லை..

அலைபாயுதே திரைப்படத்தில் அக்கா-தங்கை உறவை அழகாக அலைபாய விட்டிருப்பார் மணிரத்னம்...

எதார்த்தங்கள் எல்லா வடிவிலும் இருக்கும்..

இது மற்றொரு மாறுபட்ட எதார்த்த கதை..

பல வீடுகளில் இத்தகைய இறுக்கமான பாசம் மனதில் வைத்த உறவுகளைக் காணலாம்..

நல விசாரிப்புகளோடு நின்று விடும் பந்தம்.. இடைவெளிகள் விழுந்த இறுகிய பாச உறவுகள்..

சொல்லாமலே செய்து பார்க்கும் பாசம் அது...

சில நேரங்களில் இப்படியான சில சறுக்கல்களில் விழும் பந்தம்.. ஆனால் ஜெயித்தது.. காதலை விட.. மறைந்து இருக்கும் பாசம்..!!

என்னவென்று பாராட்ட.....

அற்புதம்..

வாத்ஸல்யா, வத்சலா பெயர் குழப்பி.. தெளிவித்த விதம்.. வித்தியாசமான கதையோட்டம்..

புதிய பாணி..(எனக்கு)

பாராட்டுகள் தாமரை அண்ணா. :)

தாமரை
02-09-2008, 10:08 AM
படிச்சேங்க அண்ணா.
அப்ப அது தங்கை இல்லை. அக்கா என்று வரவேண்டும்.

தங்கை என்று இருந்ததால், அந்த கதாபாத்திரத்திற்கு இயலாமை என்றொரு கொடை இருக்கிமோ என்னமோ என்று சிந்தித்திருந்தேன். ஆனால் கதையில் இறுதிவரை அவர் பற்றி ஒன்றுமே காணவில்லை. அதுதான் கேட்டேங்க.

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=339336&postcount=25

யவனிகாவோட இந்தக் கவிதை உங்கச் சந்தேகத்தைத் தீர்க்கும்..

தாமரை
02-09-2008, 10:12 AM
சில நேரங்களில் இப்படியான சில சறுக்கல்களில் விழும் பந்தம்.. ஆனால் ஜெயித்தது.. காதலை விட.. மறைந்து இருக்கும் பாசம்..!!

என்னவென்று பாராட்ட.....



கதையின் உட்கருத்து புரிந்து எழும் விமர்சனங்கள் தனிதான்.

poornima
02-09-2008, 10:22 AM
சகோதரிக்காக உதறப்படும் காதல்.. புதிதில்லை தான்..
யாருக்காகவுமே கவலைப்படாமல் தன் காதலே சகலம் என்று எல்லாவற்றையும்
உதறிப் போகும் காலகட்டத்தில் இப்படிப்பட்ட கதைகள் அவசியமாகத் தான்
இருக்கின்றன..

எதையோ வேகமாய் சொல்லவந்து பின் அடபோப்பா இப்ப சொல்ற மாதிரி இல்லை எனத் திரும்பிப் போகும் அலைகள் நாள்தோறும் சந்திக்கும் பலதரப்பட்ட
சம்பவங்களில் ஒன்றாய் இந்த கதையும்..

நல்ல காதல் யாருக்காகவும் எவ்வளவு நாளானாலும் காத்திருக்கும்.சகோதரிகள்
விரைவில் அவர்கள் துணையுடனே சேரட்டும் என்றே மனம் விரும்புகிறது..

காதல் என்பது பரஸ்பரம் மதித்தல் - விட்டுக் கொடுத்தல் - சமயத்தில்
காதலையே - பாலகுமாரன்..

அலைகளை அனுப்பித்த தாமரைக்குப் பாராட்டுகள்

ஐரேனிபுரம் பால்ராசய்யா
04-09-2008, 02:05 PM
அலையின் போக்கு அடிக்கடி மாறும், அதுபோல் காதலின் போக்கும் மாறுகிறது கண்ணீருடன். காதல் நிறைய சந்தர்ப்பங்களில் விட்டுக்கொடுக்கப்பட்டிருக்கிறது. நினைவுகள் மட்டும் படித்துறைகளில் படிந்து கிடக்கும் பாசிகள் போலெ மனதுக்குள் நிறைந்து கிடக்கும். தெளிவான கதையில் பெயர்கள் தான் சற்று தடுமாற வைத்தது. பாராட்டுக்கள்.

தாமரை
04-09-2008, 02:53 PM
பெயர்கள் இடறினால் படிப்பவரின் கவனம் சற்று கூர்மையாகும் என எண்ணியே அப்படிப் பெயர்களை வைத்தேன் பால் அவர்களே!

மேலோடுப் பார்த்தால் இரு பெண்களின் கதை. ஆனால் இளசு மாதிரி சற்று நிதானித்துப் பார்த்தால்

உட்கருத்தாய் வைத்திருப்பது.. அலைகளின் இரைச்சல் அவை தங்களுக்குள் பேசிக் கொள்ளும் ஊர்க்கதைகள். நாம் அலைகளைப் பார்த்து இரசிப்பது போல அலைகளும் நம்மைப் பார்த்து ரசித்தால் என்ற கற்பனை..

அலைகள் நம்மிடம் என்னவோ வந்து சொல்லிச் செல்கின்றன என்று எண்ணிக் கூர்ந்து கேட்டால் ஆயிரக்கணக்கான கதைகள் கிடைக்கும்..
ஏனென்றால் அவைக் கோடிக்கணக்கில் உணர்வுப் பெருக்குகளை கண்டு கொண்டிருக்கின்றனவே!

அந்த அலைகளின் பார்வையில் இரு காதல் ஜோடிகளை வைக்க ஆசை. வாசகர்களை காண வைக்க ஆசை, அதனால்தான் கொஞ்சம் கவன ஈர்ப்பாக ஒரே மாதிரி சட்டென கண்களில் படும் பெயர்.