PDA

View Full Version : கவரி மா(ம)ன்



அமரன்
24-08-2008, 09:53 PM
வாரத்தின் ஆறுநாட்களும் வேலை. சனி இரவுகள் இளமைக்கான வேளை. இதுதான் சயன் அன் கோவின் தற்போதைய கொள்கை. பட்டப் படிப்பு முடித்த கையோடு தனியார் துறை வேலை நிமித்தம் கொழும்புக்கு வந்து ஒன்றாகி ஒரு வீடெடுத்து தங்கி இருப்பவர்கள் சயன் அன் கோவினர் . இவர்கள் சனிக்கிழமைகளில், சாமம் தாண்டிய பின்னர்தான் உறங்குவார்கள். அப்படித் தூங்கிக்கொண்டு இருந்தபோது "டேய்.... டேய் சயன்.. எழும்படா.. செல்லடிக்குது" என்று கத்தினான் சயனின் நண்பர்களில் ஒருவன்.

சயனின் குறட்டையை வென்று அப்பத்தான் தூக்கத்தை தழுவி இருப்பான். அந்த நேரத்தில் கண்ணாடி ரீப்போவின் மேலாடிய வைப்பிறேட் மோடிலிருந்த சயனின் அலைபேசி இடைஞ்சல் செய்தது. அதனால் ஏற்பட்ட எரிச்சலை சயனை எழுப்பியபோது உணர முடிந்தது. சயனோ ஆழ்ந்த நித்திரையில் இருந்தான். "செல்லடிக்கிறாண்டா...எழும்புடா" என்று அவனுடைய அம்மா எழுப்பும் தோரணையில் நண்பன் தொடர பதட்டத்துடன் வாரிச்சுருட்டி எழும்பினான். நண்பனின் முகத்தை சற்று நேரம் எடுத்து படித்த பிறகு நிலைமையை புரிந்து செல்லை எடுத்துக்கொண்டு விறாந்தைக்கு போனான்..

"அம்மா கதைக்கிறன் தம்பி" என்று தொடங்கிய உரையாடல் முடிவடைந்தபோது ஓடிப் போயிருந்த உறக்கம் அடுத்த நாள் இரவு "நெடூ" நேரமாகியும் வந்தபாடில்லை.

சின்னவயசில் தகப்பனை இழந்த சயனுக்கு எல்லாமே மாமாதான். தமக்கை வேலைக்குப் போறன் என்று சொன்னபோது மறுத்தவன் வீட்டிலேயே கைவினைத் தொழிலுக்கு ஏற்பாடு செய்தான். தான் பார்த்துக்கொண்டிருந்த வாத்தியார் உத்தியோகத்துடன் டியூசனும் கொடுக்கத் தொடங்கினான். தன்னை விஞ்சும் வகையில் ஒழுக்கசீலனாகவும் கல்விமானாகவும் சயனை ஆக்கவேண்டும் என்ற வெறியில் ஓய்வுளைச்சல் இல்லாமல் உழைத்தான். கல்யாணம் வேண்டாம் என்பவனை கட்டாயப்படுத்தி அதுவும் சயனைக் கொண்டே பெண்ணை செலக்ட் செய்து கட்டி வைத்தார்கள்.

கல்யாணத்துக்கு முதல் நல்ல மாதிரி இருந்த மாமி கல்யாணத்துக்குப் பிறகு சுயத்தைக் காட்டத்தொடங்கினாள். மாமாவை அஞ்சு சதத்துக்கு மதிப்பதே இல்லை. தன்னோடு நின்றிருந்தாலாவது பரவாயில்லை பிள்ளைகளுக்கும் இல்லாததும் பொல்லாததும் ஓதினாள்.

மாமாவுடைய கண்ணியம் பெண்கள் வட்டத்தை அவருடன் நெருங்க வைத்தத்து. குடும்பப் பிரச்சினைகளை சொல்லி தீர்வு கேட்கும் அளவுக்கு பெண்கள் அவர்மேல் நம்பிக்கை கலந்த மரியாதை வைத்திருத்தனர். மாமியோ அதை எல்லாம் சந்தேகக் கண்ணோடு பார்த்ததாள். பிள்ளைகளுக்கு நேரடியாக சொல்லாவிட்டாலும் பட்டும் படாமலும் குத்தல் கதைகள் மூலம் சொன்னாள். இரண்டு பிள்ளைகள் அம்மா பிள்ளை. அப்படியே நம்பி நடந்தனர். கடைக்குட்டி மட்டும் அப்பன் பிள்ளை. அவளுக்காகவும் என்னதான் மிதித்தாலும் பிள்ளைகளின் எதிர்காலம் பாழாகிடக்கூடாது என்பதுக்காவும் எல்லாத்தையும் சகித்துக்கொண்டு குடும்பம் நடத்தினார் மாமா.

சயந்தான் தானும் காரணம் என்ற குற்ற உறுத்தலால் தன்னை வருத்தினான். அந்த வருத்தம் தாயுடன் கதைத்ததிகிருந்து அதிகமாகி விட்டிருந்தது.. துக்கம் கண்களில் குடி இருக்க தூக்கம் வராமல் அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தான்.
என்னதான் ஆணாதிக்க சமூகம் என்றாலும் சமயங்களில் பெண்கள் சார்பாகத்தான் சமூகம் பார்க்கிறது. சில சென்சிட்டிவ்வான விசங்களை அவர்கள் சொல்லும் போது மறுபேச்சின்றி நம்பிவிடுகின்றார்கள். மாமா தன்னை தப்பான நோக்கத்துடன் அழைத்தார் என்று ஒருத்தி சொன்னாளாம். அதை பெரும்பான்மையினர் நம்பி மாவைப் பற்றிப் புறணி பேசுகின்றார்களாம். மாமா மனம் உடைந்து மூலைக்குள் முடங்கிக் கிடக்கிறாராம். தாய் சொன்னதிலிருந்து சயனின் மனதுக்குள் பிரளயம்..

ஊரைப் பற்றி அவனுக்கு கவலை இல்லை. அவனது கவலை எல்லாம் மாமாவின் வீட்டைப் பற்றித்தான். வெறும் வாயை மென்ற மாமிக்கு அவல் கிடைத்துவிட்டது. அவளுடைய மகுடிக்கு ஆடும் பிள்ளைகளும் சேர்ந்து விசத்தை கக்குவார்களே.. இனி மாமாவின் நிலை.. அந்த நினைப்பே சயனின் இதயத்தை ஊசிகள் கொண்டு குத்தியது.

மாமாவைப் பார்க்க வேணும்; பக்கத்தில் இருந்த ஆறுதல்படுத்தவேண்டும் போல இருந்ததால் லீவு லெட்டர் எழுதி நண்பனிடம் கொடுத்தான். யாழ்ப்பாணம்-கொழும்பு ட்ரவல் ஏஜென்சிக்குப் போனான். திங்கக்கிழமை காலமைதான் சீட் இருந்தது.. பதிவு செய்தான். தாய்க்கு தகவல் சொன்னான்.. வீட்டுக்கு வந்து நண்பர்கள் வற்புறுத்தலால் மத்தியானமும் இரவும் பேருக்குச் சாப்பிட்டான். துணிமணிகளை சூட்கேசில் அடைத்தான்.. எல்லாத்தையும் ஒரு இயந்திரம் போலவே செய்தான்.

இதோ.. பொழுது விடிஞ்சா பயணம். மணி பன்னிரெண்டு தாண்டியும் நித்திரை வரவில்லை அவனுக்கு.. விறாந்தையில் இருந்த செட்டியில் சாய்ந்திருந்தான். அவனுடைய மனம் அந்தக்கால மணிக்கூட்டின் பெண்டுலம் போல அங்கும் இங்கும் அசைந்து கொண்டிருந்தது. மாமாவைப் பற்றிய நினைப்பு சொட்டுச் சொட்டாய் சொட்டியபடி இருந்தது.. "நாளைக்கு என்னை எப்படிப் பார்ப்பார்.. முகங்கொடுத்துப் பேசுவாரா.. மாட்டார்.. முன்பு போலப் பாரதியாரின் கம்பீர நடை இருக்குமா.. இருக்காது.. தன்னை முன்மாதிரியாகக் கொண்டு வளர்ந்தவன் முன்னால் இப்படி ஒரு பெயருடன் எப்படி வருவார்.. எப்படி நிமிர்ந்து நிற்பார்.. கூடுதலாக என்னை தவிர்க்கப் பார்ப்பார்.. முடியாவிட்டால் நிச்சயமாக தலை கவிழ்ந்து கூனிக் குறுகித்தான் நிற்பார்.. மாமியும் பிள்ளைகளும் இனி அவரை எப்படி நடத்துவார்கள்.."என்றெல்லாம் எண்ணினான்.. அவனுக்குநெஞ்சு வெடித்துவிடும் போல இருந்தது. தலையைப் போட்டு உடைத்துக்கொண்டிருந்தவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை.. இரண்டு மணி அளவில் திடீரென்று செற்றியை விட்டு எழுந்தான். லைட்டை நூர்த்து விட்டு படுக்கைக்குப் போனான்.

மறுநாட்காலை.. ஏர்ப்போட்டுக்கு போவதுக்காக வாசலில் நின்ற வாடகை வாகனத்தில் ஏறியபோது பிடிமானம் பிடிபட மறுக்க படியில் சறுக்கினான்.. பக்கத்தில் வந்த நண்பன் தாங்கிப் பிடித்து "பார்த்துப்போடா" என்றவன் என்ன ஏது என்று எதுவும் கேட்காமல் தோளில் கைவைத்து ஒருமுறை அழுத்தினான்.. வாகனம் புறப்பட்ட போது செல் அழுது வடித்தது. பச்சைபட்டனை தட்டினான்.. "தம்பி.. நான் அம்மா கதைக்கிறனனை.. மாமா... மாமா... இரவு ரண்டு மணிக்கு...." தாயின் தழுதழுத்த குரல் சயனை உடைத்தது. கண்களில் கண்ணீர் துளிர்த்தது..

இளசு
24-08-2008, 11:19 PM
மிக அழுத்தமாக உறவு, சமூகச் சிக்கல்களை பதிவு செய்த கதை.

முதல் மரியாதை படத்தில் நாயகனுக்கும் அவன் மனைவிக்கும் உள்ள சிக்கலான உறவைப்
பாதிச் சொல்லி, பாதி யூகத்துக்கு விடும் திறமையான இயக்கம் காணலாம்.

இங்கும் சயனின் பார்வையில், உணர்வில் - ஒரு கோணம் .
அங்கிருந்து தென்படும் மாமன், மனைவி, பழிசொன்ன பெண், சயனின் தாய் -
என எல்லாரையும் நாமும் பார்த்தோம்.

பசி மறந்ததும்,விளக்கணைப்பதும், தடுக்கி சறுக்குவதுமாய்
நுட்பமான மனப்பிணைப்பைச் சொன்ன விதம் அருமை!

முன்மாதிரியாய் இருந்து வளர்த்தவன் முன்
முழுத் தூய மாமா தோன்றினால் -
வாய்ச் சொற்கள் தேவையின்றி புரிதல் விளைந்திருக்கும்.

மாமன் மடிந்தது சயனைத் தவிர்ப்பதற்காக அன்று!


பாராட்டுகள் அமரா!

சிவா.ஜி
25-08-2008, 04:21 AM
மிக சங்கடமான சந்திப்பு சூழலைத் தவிர்க்கவா அல்லது இதுநாள்வரை உருவாக்கி வைத்திருந்த நல்ல தோற்றம் நலிந்த நிலையை ஏற்க முடியாமலா அந்த மா(ன்)மன் தன் உயிரை மாய்த்துக்கொண்டார்? கதையின் இடையிடையே தூவியிருக்கும் மனச் சிந்தனைகள், விவரிப்புகள் ஒரு கன பரிமாணத்தைக் கொடுக்கிறது. அருமை அமரன். பாராட்டுகள்.

மதி
25-08-2008, 12:09 PM
உறவுகள் விசித்திரமானது. குத்திக் காட்டுவதும் குத்தல் பேச்சுகளுமே வாழ்க்கையாவும் வாடிக்கையாவும் போனது பலருக்கு.

சிக்கலான நிமிடங்களில் சந்திப்பு நேராமல் மாமா தவிர்த்து தவறி விட்டாரோ? நல்ல கதைக்களம். வலிமையான சொற்கள். பாராட்டுகள் அமரன்.

இதைத் தாண்டி என்னுள் தோன்றும் சில:
அடுத்தநாள் காலை மாமாவின் வீட்டினுள் அவன் நுழையும் போது அழுது அரற்றி ஒப்பாரி வைத்துக் கொண்டிருப்பதும் அவன் மாமி தான்.

அமரன்
25-08-2008, 05:21 PM
மாமன் மடிந்தது சயனைத் தவிர்ப்பதற்காக அன்று!
அண்ணா...

நிச்சயமாக மாமாவின் மடிவு சயனை தவிர்க்க அன்று. மூன்றாம் பகுதியில் அவருடைய புகுந்தவீட்டு சூழ்நிலையை தொட்ட பிறகு இருந்த "இனி வாழ்வதை விட மாமா மடிவது மேல் என்று அடிக்கடி நினைத்தான்" என்ற வரிகளை மீள் பார்வையின் போது நீக்கினேன்..

உறவுகள் என்று வரும்போது பக்கம் சாய்ந்து யோசிப்பதுதான் பெரும்பாலும் நடக்கிறது. எந்த விதமான இரத்த உருத்தும் இல்லாத நடிகனைப் பற்றி தன் வரைவுக்கு எதிர்மறையாகக் கேள்விப்பட்டாலே அப்படி இருக்காது என்று மறுத்துரைக்கும் உலகில் உயிரோடு உறவாடும் சொந்தம், அதுவும் பிள்ளைப் பராயத்திலிருந்து பார்த்துப் பார்த்துப் பூரித்த சொந்தம் என்றால்.... அதுதான் சயனை வேறுபக்கம் போக விடவில்லை.

இந்த விசயத்தில், எந்த முகாந்திரமும் இன்றி எந்தப்பெண்ணும் பொய்யாகக் களங்கப்படுத்த மாட்டாள். அப்படிச் செய்தால் அவளுக்கும் சேதம் பாதியோ அல்லது அதுக்கு மேலே இருக்கும்.. இதனால்த்தான் பல வக்கிர குற்றவாளிகள் தப்பிக்கிறார்கள். அந்தப் பெண்ணை புரட்சிப்பெண்ணான் சித்தரிக்க வேண்டியும் சயனை அந்தப்பக்கம் போக விடவில்லை..

(அந்தப்பக்கம் போக விட்டு, திடுக் திருப்பங்களுடன் கிரைம் கதையாக இரண்டாம் பாகத்தை தொடரலாமோ)

உங்கள் ஊக்கம் இன்னும் பல ஆக்கங்களை தரத்தூண்டுகிறது.


மிக சங்கடமான சந்திப்பு சூழலைத் தவிர்க்கவா அல்லது இதுநாள்வரை உருவாக்கி வைத்திருந்த நல்ல தோற்றம் நலிந்த நிலையை ஏற்க முடியாமலா அந்த மா(ன்)மன் தன் உயிரை மாய்த்துக்கொண்டார்? .

மாமன் உயிரை மாய்த்துக்கொண்டார் என்று கதையில் குறிப்பிடவில்லை. அப்படிக் குறிப்பிட்டால் கதையின் தாக்கம் குறைவதாகப் பட்டது. என் நாலாம் வகுப்புச் சமய ஆசான் சொல்வார்.. "தூய்மையான நோக்கத்துடன் என்ன எண்ணுகின்றோமோ அது கண்டிப்பாக நடக்கும்.. அந்த நேரத்திலும் கடவுள் கண்ணுக்குத் தெரிவார்.." இதை இக்கதையில் பிரயோசனப்படுத்த நினைத்து பிரயோகித்தேன்.. (சயனின் மனநிலையை தெரியும்.. மாமாவின் மனநிலை எப்படி இருந்திருக்கும்.. கதையின் தலைப்புக்குள் திறப்பு)

சத்துணவுக்கு மிக்க நன்றி சிவா.


இதைத் தாண்டி என்னுள் தோன்றும் சில:
அடுத்தநாள் காலை மாமாவின் வீட்டினுள் அவன் நுழையும் போது அழுது அரற்றி ஒப்பாரி வைத்துக் கொண்டிருப்பதும் அவன் மாமி தான்.
இதுதான் மதி.. படித்தோமா பதிந்தோமான்னு நில்லாது அங்காலும் சென்று அலசுவது.. யதார்த்தத்தை சுமக்கும், மூன்றாவது பெண்ணியல்பை காட்ட ஏதுவான, கதைக்கு வலுச் சேர்க்கும் வரிகள் நீங்கள் குறிப்பிட்டவை. நன்றி மதி..

விகடன்
26-08-2008, 05:50 AM
"கவரிமான்" தலைப்பிற்கேற்ற சொல்.
தலையங்கத்திலிருந்து அனைத்து வரிகளும் நன்றாக இருந்தது அமரன். தாய் தன் பிள்ளைகளை, தந்தைக்கு எதிராக ஏவிவிடும் கவலைக்குரிய விடயத்தை சொல்லியிருப்பது யதார்த்தம்.
சிறந்தகதை அமர். மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
---------------------------------------------------
ஏன் அமரன்...
செல்லடிக்குது என்று பாதி நித்திரையில் தட்டி எழுப்பி சொல்வதாக சொன்னால் நாம் எதை நினைப்பது.

அமரன்
26-08-2008, 07:01 AM
நன்றி விராடன். பல குடும்பங்களில் அப்படித்தானே நடக்கிறது. சின்ன வயதில் நீங்கள் யாருடைய செல்லம் என்று கேட்டு தன்னைச் சொல்லாத பட்சத்தில் தான் செய்த நல்லதையும் மற்றவர் செய்த துரும்பளவு குழந்தை விரும்பாத செயலையும் சொல்வது கூட இந்த நிலைக்கு இட்டுச் செல்லும். அந்த உணர்வை நீங்கள் அடையவேண்டும் என்பதற்காகவே செல்லடிக்குது என்று எழுதினேன். முதல் செல்லடி வேற.. இரண்டாம் செல்லடி வேற..

MURALINITHISH
26-08-2008, 09:07 AM
இது நாள் வரை மாமன் இவன் மனதில் மாமனிதனாய்
அந்த இடம் அப்படியே இருக்காதானே அவர் இவனை பார்க்கமலே மறைந்தது

dellas
17-01-2011, 03:30 PM
வாழ்த்துக்கள் அமரன். சிக்கலான களம் ஆனால் சிக்கலான கதை இல்லை. கண்ணியமாக வாழும் மாமாவின் மீது பெண் சுமத்திய பழி உண்மையா பொய்யா. ?? கண்டிப்பாக உண்மையில்லை. உண்மையில்லாத ஒரு வதந்தி, அவர் சாவினால் உண்மையாகி விட்டதே. வதந்திகளை எதிர்களையும் தைரியம் இல்லாத ஆண்மகன் எப்படி முன்னுதாரணம் ஆனார்.. கவரிமான் முடியை இழந்தால்தான் உயிர் விடும். இழக்காத முடிக்காக உயிரை விடுவது கோழைத்தனம். நன்றி.

aren
22-01-2011, 06:48 AM
படித்து முடித்தவுடன் மாமா என் மனதில் ஓங்கி நிற்கிறார். அருமையான கதை ஓட்டம், சயனின் மூலமாக ஒரு நல்ல மாமாவின் வெளிப்பாடு அப்படியே தெரிந்தது.

இன்னும் எழுதுங்கள் அமரன்.

M.Jagadeesan
22-01-2011, 09:41 AM
நெஞ்சை நெகிழவைத்த கதை. மாமியிடம் நெருக்கம் இல்லாத காரணத்தால் மாமா
வின் உள்ளம் வேறு பெண்களை நாடியிருக்க வாய்ப்புண்டு. நல்லவர்களையும்
பாலுணர்வு நாசமாக்கிவிடும். மாமாவின் முடிவு சரியானதுதான். மானம் இழந்தபின்
உயிர் வாழ்வதால் என்ன பயன்?

மாமாவைக் கவரிமானுக்கு ஒப்பிட்டீர்கள்.ஆனால் அப்படி ஒரு மான் இனமே கிடை
யாது.இமயமலையில்இருக்கும்ஒருவகைக்காட்டுமாடுதான் "கவரிமா".உடல்முழுவதும் சடைமுடியுடன்இருக்கும்."கவரி"என்றால்மயிர். "மா"என்றால்விலங்கு.இமயமலையில்
கடுங்குளிரில்,பனிப்பொழிவில் வாழும் இந்த மாடு உடம்பில் இருக்கும் மயிர்த்திரளை
இழந்துவிட்டால் குளிர் தாக்குப்பிடிக்க முடியாமல் இறந்துவிடும்.இதைத்தான் வள்ளு
வரும்"கவரிமா"என்று சொன்னார்."கவரிமான்"என்று சொல்லவில்லை."அன்னப்பறவை"
போல "கவரிமானும்" மனிதனுடைய கற்பனையே!

கீதம்
27-01-2011, 09:20 PM
மாமன் மருமானின் உறவின் ஆழம் அத்தனை அழகாகக் காட்டப்பட்டுள்ளது. மனித உறவுகளின் மறுபக்கங்கள் பக்குவம் தவறிப் புரட்டப்படுவதால் எதிர்படும் எதிர்பாராத திருப்பங்களை உள்ளடக்கிய கதை நன்று. பாராட்டுகள் அமரன்.

அமரன்
28-01-2011, 05:39 AM
மீண்டும் எழுதத் தூண்டும் விமர்சனங்கள். கவரிமான் உள்ளிட்ட பயனுள்ள தகவல்கள். நன்றி நண்பர்களே

Nivas.T
25-04-2011, 04:14 PM
பாசத்தின் பிணைப்பு

தடுமாறவைக்கும் எத்துனை உறுதிகொண்ட நெஞ்சாயினும்

அப்படி தடுமாறிய சயன் நிலமை மிகவும் சங்கடம்

நல்ல கதை
நல்ல பாங்கு
அழகான எழுத்தோட்டம்

இராஜேஸ்வரன்
09-04-2012, 05:11 AM
கல்யாணம் வேண்டாம் என்பவனை கட்டாயப்படுத்தி அதுவும் சயனைக் கொண்டே பெண்ணை செலக்ட் செய்து கட்டி வைத்தார்கள்.


ஊரைப் பற்றி அவனுக்கு கவலை இல்லை. அவனது கவலை எல்லாம் மாமாவின் வீட்டைப் பற்றித்தான். வெறும் வாயை மென்ற மாமிக்கு அவல் கிடைத்துவிட்டது. அவளுடைய மகுடிக்கு ஆடும் பிள்ளைகளும் சேர்ந்து விசத்தை கக்குவார்களே.. இனி மாமாவின் நிலை.. அந்த நினைப்பே சயனின் இதயத்தை ஊசிகள் கொண்டு குத்தியது.

தான் பார்த்து கட்டிவைத்த பெண்ணே மாமனின் வாழ்க்கையை நாசப்படுத்துவதை நினைத்து சயன் வருந்துவதை மிகவும் அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

முடிவும் அருமை. பாராட்டுக்கள் நண்பரே.

கலைவேந்தன்
09-04-2012, 05:35 AM
மிக நல்ல கதை. ஆனால் நல்ல முடிவா..? கொஞ்சம் நெருடலைத்தந்தது முடிவு.

தன்மேல் ஏற்பட்ட பழிக்குத்தீர்வு இதுவல்லவே..

இறப்பினால் தன்மேற்சுமத்தப்பட்ட பழி இல்லையென்றாகுமா..?

நின்று எதிர்த்துப் போராடி நிரூபிப்பதில் அல்லவா இருக்கிறது மனிதனின் போராட்டம்..?

ஒரு நல்ல மனிதனைக் கொல்ல அவன்மேல் அவதூறு என்னும் அழுக்குப்போர்வையைப் போர்த்தினாலே போதுமே என்னும் எண்ணம் தீயவர்களின் சொந்தமாகிவிடுமே..

மாமன் தனது பழியைத்துடைத்து அக்களங்கத்திலிருந்து வெளிவர முயலாமல் இப்படி இறந்தது சரியா..?

இவை என் சிந்தனைகள். உங்கள் கதையைக் குறை கூறவில்லை. இப்படி இருந்தது என்பதை சொல்வது மட்டும் கதை இல்லை. இப்படி இருக்கவேண்டும் என்று வழிகாட்டுவதும் கதை என்பதாக நான் எண்ணுகிறேன்.

மனம் கனக்கவைத்த கதை. பாராட்டுகள் அமரன். இலங்கை நடையை வெகுவாக ரசித்தேன்.

நாஞ்சில் த.க.ஜெய்
17-09-2012, 08:25 AM
அருமையான கதை வாழ்த்துக்கள் அமரன்..மாமன் மருமகன் இடையேயான பாசப்பிணைப்பு வரிகளில் இழையோடுகிறது..ஆனால் முடிவு நிதர்சனமான இன்றைய நிலையை முகத்தில் அறைகிறது .

அமரன்
19-09-2012, 08:54 PM
நன்றி நண்பர்களே..

A Thainis
19-09-2012, 09:17 PM
கவரி மா (ம) ன் என் மனதை கரைத்தது, உயிரோடு ஒன்றி உறவாடிய சிறந்த கதை. தாய் மாமன் பண்பும்,

அவன் மீது மருமகன் கொண்டிருக்கும் பாசமும் கதையோடு என்னையும் பிணைத்தது, சோகமமாய் முடிந்தாலும்,

சொல்லியது மரணம் மாமானின் மாண்பை. அழகு படைப்புக்கு வாழ்த்துக்கள் பல அமரன்.