PDA

View Full Version : வேம்புக் கணவன்.......!!!சிவா.ஜி
23-08-2008, 03:41 PM
சூரியன் உதிப்பதற்கு வெகு முன்பே படுக்கையைவிட்டு எழுந்துவிடுபவள்தான் பொன்னுத்தாயி. இருந்தாலும் பூமியின் ஓரத்திலிருந்து தன் வட்டத்தின் விளிம்பை மெள்ள மெள்ளக் காட்டி கதிரவன் வெளிப்படும் அந்த நேரத்தில்தான் வீட்டின் அந்த பழங்காலக்கதவை கிறீச் சத்தத்துடன் திறந்துகொண்டு முற்றத்துக்கு வருவாள். கிழக்குப் பார்த்த அந்த நாட்டு ஓடு போர்த்திய வீட்டுக்கு முற்றம் என்பது, முள்வேலிகளால் பாதுகாக்கப்பட்ட ஒரு பரந்த இடம். சின்ன வேலிப்படலுக்கு அருகில் உயர்ந்து நின்றிருந்த அந்த வேப்பமரத்தின் அடர்ந்த இலைகளினூடே சூரியக்கதிர் காற்றின் இடைவெளிக் கண் சிமிட்டும் அழகை நெஞ்சு நிறைய ரசிப்பாள் பொன்னுத்தாயி.அந்த கண்சிமிட்டலில் ஒரு சுகமுணர்வாள். தினசரி தான் காணும் வெளியுலககாட்சி இதுவாக மட்டுமே இருக்க வேண்டுமென்ற விருப்பத்தாலேயே அந்த நேரங்கழித்த வாசல் திறப்பு.

அவள் கணவனுக்கு மிகவும் விருப்பமான மரம். அதை மரமென்றால் அவன் என்றுமே ஒத்துக்கொண்டதில்லை. குடியானவர்களுக்கு மரம் மட்டைகளும், பயிர் பச்சைகளும் கூட உயிர்கள்தான் என்றாலும், அவள் கணவனுக்கு இந்த மரம் அதற்கெல்லாம் ஒரு படி மேலே. அவன் பிறந்த அன்றுதான், இந்த மரத்தின் விதையும் பூமியை முட்டிக்கொண்டு முதல் தளிரை வெளிப்படுத்தியதாம். அவனுடைய அம்மா சொல்லியிருக்கிறாள். அன்றிலிருந்து இருவரும் இணைந்தே வளர்ந்தார்கள்.

அந்தப்பக்கத்திலெல்லாம் திருமணம் ஆன அடுத்த வருடமே தொட்டில் கட்டுபவர்கள்தான் அதிகம். ஆனால் பொன்னுத்தாயிக்கு சூல்கொள்ள கோள்கள் துணையில்லையா அல்லது நாள்தான் அமையவில்லையா தெரியவில்லை...நான்கு வருடங்கள் ஊரார் வாயில் விழுந்த பின் மரகதத்தைப் பெற்றெடுத்தாள். பசித்தவனுக்கு கஞ்சி கிடைத்தால் உப்பும் உறைப்புமா பார்ப்பான்...? அப்படித்தான் பெண்குழந்தையானாலும் தன்னைத் தாயாக்கிய ஆத்தா என்று மகளைக் கொண்டாடினாள். தன்னை அப்பனாக்கிவள் என்பதை அடுத்ததாக வைத்து, தன் உயிரோடு கலந்துவிட்ட உறவான மனைவியின் குறை நீக்கிய வெகுமதியாகத்தான் அவள் கணவனும் மரகதத்தை கண்ணுக்குள் வைத்து வளர்த்தான். அதுவும் ஒரு வருடம்தான். அவன் ஆயுளும் முடிந்துவிட்டது. சாரைப்பாம்பின் வாலின் விஷம் அவனது உயிரை வாங்கிவிட்டது.

மூத்தவளாகப் பிறந்த குற்றத்துக்காக, பொன்னுத்தாயி அவளுடைய பிறந்த வீட்டில், அடுத்தடுத்த உடன்பிறப்புகளுக்கு ஆயாவாகவும், அம்மாவுக்கு எடுபிடியாகவும், களையறுக்க, நாற்று நட, கதிரறுக்க உழவுத்தொழிலாளியாகவும்தான் தன் வாழ்க்கையை கழித்திருந்தாள். புகுந்தவீட்டுக்கு வந்ததும், அவள் கணவன் அவளை கைக்குள் வைத்து தாங்கினான். அவனும் ஒற்றைப்பிள்ளையாய் இருந்தான். மாமியார் ஒரு மறு அம்மாவாகவே இருந்து மறைந்தாள். தந்தையில்லா பிள்ளையாகத்தான் அவள் கணவனும் வளர்ந்திருக்கிறான். இந்த வீட்டின் சாபமோ..என்னவோ....இப்போது என் மகளும் அப்பனைப்போலவே வளர்கிறாளே என்று எப்போதும் நினைத்துக் கண்ணீர்விடுவாள் பொன்னுத்தாயி.

அவன் இறந்த அந்த நாளை அவள் எப்போது நினைத்தாலும் தலைமுதல் கால்வரை ஒரு நடுக்கம் தோன்றும். ஐந்து வருட தாம்பத்ய வாழ்க்கைதான் அவள் வாழ்ந்தாள். ஆனால் ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்து ஆனந்தப்பட்டாள். கணவன் நல்ல உழைப்பாளி. அதற்கும் மேல் மனைவி மகளிடம் அபரிதமான பாசம் வைத்திருந்தான். அன்று அவள் அழுத அழுகையில் இன்றுவரை அவள் கண்களில் சுரக்க கண்ணீரே இல்லாமல் தீர்ந்துவிட்டிருந்தது.

கணவன் இறந்த துக்கத்தை காலம் மெள்ள கரைத்துக்கொண்டிருந்த அந்த நாட்களில் ஒரு நாள், அந்த வேப்பமரத்தை பார்த்தவளுக்கு அது அவளுடைய கணவனாகத் தோற்றமளித்தது. அவள் கணவனுக்கும் அதற்கும் ஒரே வயது. இருபக்கமும் விரிந்த கிளைகள், ஆசையாய் அவளை அள்ளி அணைக்க காத்திருக்கும் அவளின் கணவனின் கைகளைப்போன்றே தோன்றியது. ஓடிச் சென்று மரத்தைக் கட்டிப்பிடித்துக்கொண்டாள். உடல் சிலிர்த்தது. மனதுக்குள் சொல்லவொனாத நிம்மதி. 'என் புருஷன் என்னைவிட்டு போகல ந்தா...இங்கனக்குள்ளதான் நிக்காக' என்று ஒரு தெம்பு வந்தது.

அன்றிலிருந்து அந்த மரமே அவளுக்கு கணவனாகிவிட்டது. வருடாவருடம் கணவனின் இறந்தநாள் படையலை அந்த மரத்துக்கு கீழ்தான் வைத்தாள். புது வேட்டியை மரத்துக்கு உடுத்தி, அதன் மேல் துண்டை போர்த்தி அழகுபார்த்தாள். மரகதம் அதன் நிழலில் விளையாடும்போதெல்லாம், அவளுடைய அப்பா கூட இருக்கிறார் என்று நிம்மதியாக இருந்தாள். தூக்கம் வராத இரவுகளில் அந்த மரத்தின் வேர்களில் தலைசாய்த்து படுத்து, மடி சுகம் உணர்ந்து உறங்கியிருக்கிறாள்.

மாமியார் இருந்த நாட்களில்,சின்னக்குழந்தையாய் மரகதம் பக்கத்தில் படுத்துக்கொண்டிருக்க, இரவுகளில் கணவனின் நினைவு வரும்போதெல்லாம், வெளியேச் சென்று, அந்த மரத்தைக் கட்டிக்கொண்டு கண்ணீரால் அந்த அவஸ்தையைக் கரைப்பாள்.வெடிப்புவிட்ட செதில்களைத் தடவித்தடவி கணவனின் காய்த்துப்போன கைத்தடவலை உணருவாள். மரத்தோடு காது பொருத்தி, கணவனின் குரலைக் கேட்பாள்.'பொன்னுத்தாயி' என அன்போடு அழைக்கும் அந்தக்குரலை உள்ளுக்குள் உணர்ந்த மாத்திரத்தில் உடலில் ஒரு சிலிர்ப்பு தோன்றும்.

மரகதத்துக்கு அம்மைப் போட்டபோது, மனம் வலிக்க கிளை ஒடித்து இலையை மகள்மீது போர்த்தியபோதும், அப்பனின் ஆதரவுக்கரங்களின் தடவலாகத்தான் அதை நினைத்தாள். ஒரு நாளைக்கு எத்தனை முறையானாலும் சலிக்காமல் அந்த மரத்தைப் பார்த்துக்கொண்டே இருப்பாள். மகளுக்காக அதன் கிளையில் ஒரு ஊஞ்சல் கட்டி, அவள் ஆடுவதை தூரத்திலிருந்து பார்ப்பவளின் கண்களுக்கு, தன் கணவனே மகளை தூக்கி ஆட்டுவதைப்போல தோன்றும்.அந்த மகளும் பெரியவளாகி திருமணத்துக்கு நின்றபொழுது, கொஞ்சமாய் இருந்த ஒரு துண்டு நிலம்தான் கல்யாண செலவாகியது. இருப்பது இந்த ஒரு வீடுதான் . அதையும் தன் கணவன், அவளுக்கேத் தெரியாமல் பொன்னுத்தாயியின் பெயரில் எழுதி, அதை அவள் உயிருடன் இருக்கும்வரை விற்கக்கூடாது என்றும் விதியொன்றை வைத்துவிட்டான். அதை நினைத்து கண்கலங்குவாள் பொன்னுத்தாயி. 'எஞ்சாமிக்கு எம்மேல எம்புட்டு பிரியம்...காலம் போன காலத்துல இந்த கெழவி அல்லல்படக்கூடாதேன்னு அப்பமே எழுதி வெச்சிடுச்சே'
என்று உள்ளுக்குள் உருகுவாள்.

வாய்த்த மருமகன் விஷயத்தில்தான் மோசம்போய்விட்டாள் பொன்னுத்தாயி. வீட்டுப் பத்திரத்திலிருக்கும் வில்லங்கம் தெரிந்ததிலிருந்து இவளைக் கண்டாலே ஆகாது அவனுக்கு. கிழவி எப்ப மண்டையைப் போடறது வீடு எப்ப நம்ம கைக்கு வர்றது என்று ஆத்திரத்துடன் அலுத்துக்கொள்வான். மரகதம் கண்ணீர் விடுவதைத் தவிர எதுவும் செய்ய முடியாதவளாக இருப்பாள்.

வீட்டுக்கு முன்னால் இருக்கும் அந்த இடத்திலேயே, காய் கறிகளைப் பயிரிட்டு அதில் கிடைக்கும் காசில் தன் வயிற்றையும் பாதி நிறைத்துக்கொண்டு, மீதியை மருமகனுக்கு கப்பம் கட்டிக்கொண்டுதான் வந்தாள். அதிலும் வயிறு நிறையாத அந்த சோம்பேறிக்கு வேப்ப மரத்தின் மீது ஒரு கண். நன்கு வளர்ந்த வயதான மரம். நல்ல விலைக்குப் போகும். ஆனால் மாமியாரிடம் அதை சொல்லவில்லை. மரகதம் சொன்னதிலிருந்து மாமியாருக்கு அந்த மரத்தின் மேலிருந்த பதிபக்தி அவனுக்கும் தெரிந்திருந்தது. அவளுக்குத் தெரியாமல்தான் அதை வெட்ட வேண்டுமென தீர்மானித்திருந்தான்.அன்றைக்கு எப்போதுமில்லாத வழக்கமாய், பக்கத்து கிராமத்தில் கட்டிய கூத்து பார்க்கப் போயிருந்தாள் பொன்னுத்தாயி. வீடு திரும்ப. இரவு வெகுநேரம் ஆகிவிட்டது. காலையில் சிறிது கண்ணயர்ந்துவிட்டாள். விழித்துப்பார்த்தவள், சூரிய வெளிச்சம் முற்றம் தாண்டி வீட்டுக்குள் வீரியமாய் விழுந்து கொண்டிருந்ததைக் கவனித்தாள். அப்போதே அவளுக்கு திக்கென்றிருந்தது. அடர்ந்த அந்த மரத்தைத்தாண்டி வெளிச்சம் எப்போதுமே இப்படி வராதே...என்னவாயிற்று என்று அவசரமாய் ஓடிச் சென்று கதவைத்திறந்தவள்..மொட்டையான அந்த அடி மரத்தைப் பார்த்து....

"யப்பே.....யாத்தே....'என பெருங்குரலெடுத்து அலறினாள். அந்த வயதிலும் இளங்குமரியைப்போல பாய்ந்து ஓடி அந்த வெட்டுப்பட்ட அடிமரத்தின் மீது அப்படியே விழுந்தாள். ஈரம் உடலைத் தொட்டதும் நடந்ததை நம்ப முடியாதவளாய் திகைத்து, பின் தெளிந்து கதறினாள்.

"அய்யோ...அய்யோ...எந்த கொடும்பாவி செஞ்ச ஈனக் காரியம் இது...வெட்டுனக் கையில குட்டம் வரக்கூடாதா...அறுத்த கை...அறுந்து விழக்கூடாதா...யாத்தே...என்னை ரெண்டாவது மொறையா முண்டச்சியாக்கிட்டாகளே....அடியே மரகதம்...ஒங்கப்பனைக் கொண்னுட்டாங்கடி....'

"பட்டுத் துணியாட்டம், பாலாடை பதமாட்டம்
பாத்து பாத்து பாசம் வெச்சு பாடையில போனவரே எஞ்சாமி

ஒத்தையில நிப்பாளே பச்சப்புள்ள வெச்சுக்கிட்டுன்னு
முத்தத்துல மரமா காத்துநின்ன எஞ்சாமி

குத்தமென்ன நான் செஞ்சேன்...இப்படி
மொத்தமா மடிஞ்சீங்களே...மவராசா.........."

இருபந்தைந்து வருடங்களுக்குப் பிறகு இன்னொரு இழவு விழுந்த அந்த வீட்டின் ஒப்பாரி, காற்றைக் கடந்து வந்து, பயணம் போய்க்கொண்டிருந்த வேப்ப மரத்தை முட்டியது. வெட்டுப்பட்ட இடத்திலிருந்து இன்னும் காயாத ஈரத்தின் ஒரு சொட்டு 'பொன்னுத்தாயி' என்று கண்ணீராய் மண்ணில் விழுந்தது.


------------------

அமரன்
23-08-2008, 05:28 PM
"வேப்ப மர உச்சியிலே பேய்"னு பேய்க்காட்டுவாங்கன்னு சொன்ன பாட்டுக்கோட்டையார் உயிரோடு இருந்து இதைப் படித்திருந்தால் பாட்டை மாற்றி இருப்பார். அப்படி ஒரு உயிரோட்டம் உள்ள கதை. வாசிக்கத் தொடங்கியது முதலாக எதைப் பற்றி இந்தக் கதை என்று அலைந்தாலும் வேப்ப மரத்தை சுற்றித்தான் கதை என்பதை அதிகம் சுற்றி வந்தேன். மரங்களுக்கும் மனமுண்டு என்று சொன்ன அந்த இறுதி வரிகள் முற்றும் முத்து. இதுவரை சிவாவின் கதைகளில் நான் காணாத வர்ணனை வீச்சை இந்தக்கதையில் உண்டேன். சீரான வேகத்தின் சென்ற கதை ஓட்டத்தில் புதிய உறவுகள் அறிமுகமாகும் போது வேப்ப மர நிழலில் இளைப்பாற முடிந்தது.

வேப்பமரத்துடனான என்னுறவை குளுமை நனைவுகளில் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15743)சொல்லி இருப்பேன். அந்த நிலை இப்போதும்.

மனம்பூராவும் நிறைந்த உணர்வுகளுடன் மனப்பூர்வமான வாழ்த்தும் பாராட்டும் சிவா.

இளசு
23-08-2008, 09:09 PM
ரெண்டாவது முறையா முண்டச்சி ஆயிட்டேனே - என
அந்தத்தாய் அலறியபோது என் இதயமும் அரற்றியது சேர்ந்து!

உலுக்கிய கதைக்குப் பாராட்டுகள் சிவா!

சுகந்தப்ரீதன்
24-08-2008, 02:09 AM
இயல்பான யதார்த்தமான நிகழ்வு..!! படிக்கையில் காட்சிகள் கண்முன்னே தோன்றுகின்றன..!! கிராமத்து மனிதர்களின் மனங்களை ஆழமாய் படம்பிடித்து காட்டிய அண்ணனுக்கு எனது வாழ்த்துக்கள்..!! ஒப்பாரி பாடல்களை உற்றுக்கேட்டால் ஒட்டுமொத்த வாழ்வையும் சொல்லிவிடும்.. ஆனால் இப்போதெல்லாம் அதுவும் அற்றுக்கொண்டே வருகிறது கிராமங்களில்..!!

mukilan
24-08-2008, 02:09 AM
உங்கள் ஒவ்வொரு கதையிலும் சமூகத்திற்கு சேதி சொல்லும் உத்தியைக் கண்டு மனமகிழ்ந்தி நிற்கிறேன் அண்ணா. வேப்பமரத்தினை கணவனாக உருவகப்படுத்தி வாழும் அந்த ஏழைக் கிழவியின் வேதனை நாம் மிகவும் நேசித்தவற்றை இழக்கும் போதுதான் புரியும். உங்கள் வார்த்தைகளிலேயே அதை புரிய வைத்தது இன்னும் சிறப்பு.

இறுதியில் வரும் பாடலும் அந்த இறுதி வரியும் நெஞ்சைப் பிழியும் சோகத்தைக் கண்முன் காட்டி நிற்கின்றன.

சிவா.ஜி
24-08-2008, 04:20 AM
மரங்களுக்கும் மனமுண்டு என்று சொன்ன அந்த இறுதி வரிகள் முற்றும் முத்து.
ஓரறிவோ, ஆறறிவோ...பாசம் வைத்த உயிர் பிரிவதை இன்னொரு உயிரால் தாங்க முடியாது. வேம்பாய் இருந்தாலும், கணவனாய் வரித்துவிட்டபின் அந்த சோகம் கொடிதுதான் அமரன். அழகான முதல் பின்னூட்டமிட்ட ஊக்கப்படுத்திய உங்களுக்கு நன்றி.

சிவா.ஜி
24-08-2008, 04:23 AM
ரெண்டாவது முறையா முண்டச்சி ஆயிட்டேனே - என
அந்தத்தாய் அலறியபோது என் இதயமும் அரற்றியது சேர்ந்து!

இருந்த ஒரே ஆறுதலும் அற்றுப்போன நிலையில் அந்தத் தாயின் கதறலை கேட்டு அரற்றிய இளகிய இதயம் உங்களுடையது. பின்னூட்டமிட்டு நெகிழ்த்திய உங்களுக்கு நன்றி இளசு.

சிவா.ஜி
24-08-2008, 04:28 AM
ஆம் சுபி, இப்போதெல்லாம் ஒப்பாரி பாடல்களே அருகிவிட்டன. இழவு வீட்டில் வீடியோ பார்க்கும் கலாச்சாரம் அதிகமாகிவிட்டது. சோகத்தைக்கூட லேசாக எடுத்துக்கொள்ள பழகிவருகிறார்கள். ஆரோக்கியமான மாற்றமா இல்லை...அடிப்படை உணர்வுகளின் சேதாரமா தெரியவில்லை. நன்றி சுபி.

சிவா.ஜி
24-08-2008, 04:32 AM
நேசித்தது ஆடோ, மாடோ, மரமோ...ஒரு உயிரின் இழப்பு வேதனைதான். ஒப்பாரியாக எழுத ஒரு முயற்சிதான்...ஆனால் முழுமையாகவில்லை முகிலன். இன்னும் கவனிக்க வேண்டும். பின்னூட்ட ஊக்கத்திற்கு நன்றி.

செல்வா
24-08-2008, 07:46 AM
வாழ்க்கையோடு ஒன்றி விட்ட மரம் செடிகள் மற்றும் வளர்ப்புப் பிராணிகள். இந்த வேதனையை நேரடியாகவே அனுபவித்திருக்கிறேன். நகர வாழ்க்கையின் உயிரற்ற வீடியோ கேம்களும். பொம்மைகளுக்கும் மத்தியில் இவை உயிருள்ள பொருளாக நம் உணர்விலும் உயிரிலும் கலந்தவை. உயிர்களின் அறிவுக்கு மட்டும் மதிப்பளிக்காமல் உயிருக்கே மதிப்பளிக்கும் கிராமத்துக் கதையின் நாயகி பொன்னுத்தாயி...
வாழ்க்கை ஓட்டத்தை நன்றாகச் சொல்லும் கதை.... கண்ணாகக் காத்த கணவன் மிக அழகாகச் சூழலைச் சொல்லி அழுத்தமாகச் செல்லும் கதையின் மகுடம்"யப்பே.....யாத்தே....'என பெருங்குரலெடுத்து அலறினாள். அந்த வயதிலும் இளங்குமரியைப்போல பாய்ந்து ஓடி அந்த வெட்டுப்பட்ட அடிமரத்தின் மீது அப்படியே விழுந்தாள். ஈரம் உடலைத் தொட்டதும் நடந்ததை நம்ப முடியாதவளாய் திகைத்து, பின் தெளிந்து கதறினாள்.

"அய்யோ...அய்யோ...எந்த கொடும்பாவி செஞ்ச ஈனக் காரியம் இது...வெட்டுனக் கையில குட்டம் வரக்கூடாதா...அறுத்த கை...அறுந்து விழக்கூடாதா...யாத்தே...என்னை ரெண்டாவது மொறையா முண்டச்சியாக்கிட்டாகளே....அடியே மரகதம்...ஒங்கப்பனைக் கொண்னுட்டாங்கடி....'

"பட்டுத் துணியாட்டம், பாலாடை பதமாட்டம்
பாத்து பாத்து பாசம் வெச்சு பாடையில போனவரே எஞ்சாமி

ஒத்தையில நிப்பாளே பச்சப்புள்ள வெச்சுக்கிட்டுன்னு
முத்தத்துல மரமா காத்துநின்ன எஞ்சாமி

குத்தமென்ன நான் செஞ்சேன்...இப்படி
மொத்தமா மடிஞ்சீங்களே...மவராசா.........."

இருபந்தைந்து வருடங்களுக்குப் பிறகு இன்னொரு இழவு விழுந்த அந்த வீட்டின் ஒப்பாரி, காற்றைக் கடந்து வந்து, பயணம் போய்க்கொண்டிருந்த வேப்ப மரத்தை முட்டியது. வெட்டுப்பட்ட இடத்திலிருந்து இன்னும் காயாத ஈரத்தின் ஒரு சொட்டு 'பொன்னுத்தாயி' என்று கண்ணீராய் மண்ணில் விழுந்தது.

இங்கே மேற்கோள் காட்டிய முடிவுதான். குறிப்பாக ஒப்பாரி...

ஒப்பாரி நீங்களே எழுதியாதா அண்ணா? நல்லா வந்திருக்கு....

நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் அண்ணா.

மின்னிதழுக்குப் பரிந்துரைக்கிறேன். கதை இலாகா கவனிக்கவும்.

poornima
24-08-2008, 08:28 AM
நெகிழ வைத்தீர்கள் சிவா.ஜி எத்துணை அருமையாக எழுதுகிறீர்கள்..பெண் அழுவதின் வேதனைகளை பெண்ணாய் உணர்ந்து எழுதுகையில் வார்த்ததகள் கட்டுக்கடங்காமல் கொட்டும்.கரை மீறி வரும்.. இங்கு அந்த துக்கம் முழுமையாக
உங்கள் எழுத்தில்..

அந்த ஒப்பாரி.. ஒப்புக்கு ஆற்றுமா வேதனையை..

நெகிழும் உணர்வில் நனைந்தேன் நான்.. பாராட்டுகள் சிவா.ஜி

விகடன்
24-08-2008, 09:49 AM
கணவன் மீதான பாசத்தினையும், பெண்கள் திருமணத்தின் பின்னர் கொள்ளும் அற்ப ஆசைகளின் நிமித்தம் கணவன் பிறந்தபோது துளிர்விட்ட அந்த வேப்பம் மரத்தினை அவரிழந்த பின்னரும் அவராக பாவித்து வந்தமையும் , வேப்பமரத்தின் மீதினில் அபரிமிதமான அன்பை வெளிப்படுத்தி வந்தமையும் சொல்லிச்சென்ற கதை அருமையிலும் அருமை.
சொத்துக்காக சொந்தங்களை சூறையாடும் அற்பப் பிறப்பினை சில வரிகளில் சொல்லிச் சென்றிருக்கிறீர்கள்.

ஒரே ஒரு கவலைதான்....
பொறுமையாக ஒவ்வோரடியும் நிதானத்துடன் கொண்டு செல்லப்பட்ட கதை திடீரென்று முறிந்து முடிந்துவிட்டது அந்த வேப்பமரத்தின் கதையினைப் போன்று.

நல்லதோர் கதை. பாராட்டுக்கள் சிவாஜி.

மன்மதன்
24-08-2008, 09:52 AM
கிராமத்தின் இயல்பை சொல்லும்
ஒரு அத்தியாயம்..

வெகு இயல்பாக சொல்லப்பட்ட கதை..

சிவா.ஜியின் கதை சொல்லும் விதம் கவர்ந்து விடுகிறது
கதையின் களமும் கூட..

இது ஒரு முத்திரை கதை..!!

ஒத்த பிள்ளையை அதுவும் பொட்டப்புள்ளையை பொன்னுத்தாயின் கையில கொடுத்துவிட்டு அவனும் அவசரமாய் இறந்துவிட்டான். அந்தப்பக்கத்திலெல்லாம் திருமணம் ஆன அடுத்த வருடமே தொட்டில் கட்டுபவர்கள்தான் அதிகம். ........அதுவும் ஒரு வருடம்தான். அவன் ஆயுளும் முடிந்துவிட்டது. சாரைப்பாம்பின் வாலின் விஷம் அவனது உயிரை வாங்கிவிட்டது.

.


வார்த்தை அமைப்பை இன்னும் யதார்த்தமாக கையாள வேண்டும் ..குறிப்பாக மேற்குறிப்பிட்ட பாராவில் முதல் வரிகளை நீக்கியிருக்கலாம். பாராவின் கடைசி வரியில் அதே வரிகள் வருகின்றன..

பொன்னுத்தாயி பெயர் நிறையமுறை வருகிறது.. அதையும் கவனிக்க வேண்டும்..


பாராட்டுகள் சிவா.ஜி..

சிவா.ஜி
24-08-2008, 10:02 AM
அருமையான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. அந்த இடத்துக்குத் தேவைப்படுவதால், ஒப்பாரி எழுத நானே முயற்சி செய்தேன். நன்றாக வந்திருந்தால் திருப்தி. மிக்க நன்றி செல்வா.

சிவா.ஜி
24-08-2008, 10:04 AM
நெகிழும் உணர்வில் நனைந்தேன் நான்.. பாராட்டுகள் சிவா.ஜி
பெண்களின் துயரம் அதிகமாகும்போது அது கண்ணீராகவோ இல்லை வெள்ளெமென பாயும் வார்த்தைகளாகவோ இருக்கும். அதில் சிறிதை மட்டுமே இங்கே வெளிப்படுத்தினேன். பாராட்டுக்கு மிக்க நன்றி பூர்ணிமா.

சிவா.ஜி
24-08-2008, 10:07 AM
சிறுகதையல்லவா விராடன். முடித்துத்தானே ஆகவேண்டும். உண்மையில் அந்த உணர்வுகளுக்குள் என்னைக் கொண்டு சென்றபோது நானே ஒரு நிமிடம் பொன்னுத்தாயாக மாறி கலங்கினேன். ஊக்கம் தரும் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

சிவா.ஜி
24-08-2008, 10:10 AM
வார்த்தை அமைப்பை இன்னும் யதார்த்தமாக கையாள வேண்டும் .


மிக்க நன்றி மன்மதன். எழுத்து ஓட்டத்தில் இதை கவனிக்கவில்லை. சில மாற்றங்களைச் செய்கிறேன். சுட்டிக்காட்டியமைக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி.

விகடன்
24-08-2008, 10:58 AM
எமக்கும் வேப்பம் மரத்திற்கும் சிறுவயதுப்பழக்கம் அதிகம் சிவா. வேப்பெண்ணை எடுபதற்காக நான் பாடசாலை விட்டு வந்ததன் பின்னர் மரத்தினடியில் குந்தியிருந்து வேப்பங்கொட்டை பொறுக்குவேன். அப்போது எனக்கு வெறும் நான்கு, ஐந்து வயதுதான் இருக்கும். அதன் பின்னர் நாட்டு சூழ்நிலையால் இடம்பெயர்வு, புலம்பெயர்வென்றாகி வேப்பம் மரத்தையே மருந்துக்குக்காணும் நிலையில் மாறிவிட்டோம். அழகான அந்த ஞாபகங்களை எனக்குள் தூண்டிவிட்டது உங்கள் கதை.

அப்போது எழுத நேரம் கிடைக்கப்பெறாததால் இப்பொழுது எழுதுகிறேன்(பகிர்கிறேன்).

சிவா.ஜி
24-08-2008, 11:02 AM
ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் இனிப்பான நினைவுகள். வேப்பங்காயானாலும், இப்போது நினைக்கும்போது இனிக்கும். அதுதான் அந்த நாட்களின் நினைவுகளின் வீரியம். பகிர்ந்துகொண்டதற்கு நன்றி விராடன்.

MURALINITHISH
26-08-2008, 08:42 AM
வேம்பு கணவன் என்றது வேம்பாய் கசப்பானோ என்று வந்தேன் கணவனே வேம்புகுள் இருக்கிறான் கதையில் கதையே ஆனாலும் அவள் கதறிய கதறலில் மனதும் கலங்கி போனதே உண்மை

சிவா.ஜி
26-08-2008, 06:39 PM
இருமுறை இழந்தவளின் துக்கமல்லவா....கதறித்தான் தீர்க்கவேண்டும் கிழவி. தேடிப்படித்து, ஊக்கப்படுத்தும் உங்களுக்கு மனம்நிறைந்த நன்றி முரளி.

Keelai Naadaan
27-08-2008, 02:53 PM
பொண்ணுத்தாயின் துயரம் மிகவும் அருமையாய் சொல்லப்பட்டிடிருக்கிறது.
சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு சென்னையிலும் நிறைய மரங்கள் இருந்தன. வீடுகளில் ஒவ்வொரு மரத்துக்கும் ஒரு கதை சொவார்கள்.
மேலும் ஓலை வீடுகளின் மேல் கொடிகள் படர்ந்திருக்கும். இப்போது எல்லாம் கனவு போல் ஆகிவிட்டது.
கிராமத்து வசனம் இயல்பாய் இருக்கிறது. இன்னும் அதிகமாய் கொடுத்திருக்கலாம் என்பது என் அபிப்ராயம்.

சிவா.ஜி
27-08-2008, 03:04 PM
பின்னூட்ட ஊக்கத்திற்கு மிக்க நன்றி கீழைநாடன். துயரத்தை அதிகம் சொல்ல முடியவில்லை. அதனால்தான் தேவையான அளவு மட்டும் எழுதினேன். ஆனால் நீங்களும், விராடனும் சொன்னதைப் பார்த்துவிட்டு மீண்டும் வாசித்தேன். இன்னும் சேர்த்திருக்கலாமென்றே தோன்றுகிறது. முயல்கிறேன். நன்றி.