PDA

View Full Version : நான் என்ன செய்ய பகுதி 2 இன் இறுதிப் பகுதி



தங்கவேல்
23-08-2008, 03:30 AM
டாக்டர் வந்தார். சோதித்து விட்டு

”யார் சார் தங்கம் “ என்றார்.

என் நண்பர் என்னைக் காட்டினார். ஒரு முறை முறைத்தார். எனக்கு வெலவெலத்துப் போய் விட்டது. அந்த மருத்துவமனையின் பொறுப்பு அதிகாரியாக இருந்த எனது தோழியின் நண்பர் அவர்.

முடிந்தது கதை என்று எண்ணி வியர்த்து விறுவிறுத்துப் போய் விட்டது. சட்டை வியர்வையில் நனைந்து விட்டது. லாரா என்னையே குறுகுறுவெனப் பார்த்தபடி இருந்தாள்.

என் நண்பர் நமுட்டுச் சிரிப்புடன் இருந்தார். லாராவின் அக்காவின் பார்வையில் எரிமலை வெடித்தது.

”இரண்டு நாட்கள் இருக்கணும். குளுகோஸ் ஏத்தனும் தொடர்ந்து. அடிக்கடி புலம்பறாங்க. தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார்கள். அதனால் அருகில் இருந்து கவனித்துக் கொள்ள வேண்டும். இரண்டு மாதமாக இவர் சாப்பிடவே இல்லை” என்றார்.

நான் லாராவைப் பார்த்தேன். தலையைக் குனிந்து கொண்டாள்.

மீண்டும் என்னை கொலைகாரனைப் பார்ப்பது போல பார்த்து விட்டுச் சென்றார். கதவருகே சென்றவர் என்னைப் பார்த்தார்.

”நீங்க இங்கேயே இருங்க” என்றார்.

தலையாட்டினேன்.

நர்ஸ் வந்தாள். ஏதோ மருந்தைச் குளுக்கோஸ் பாட்டிலில் ஏற்றினாள். கையில் குளுக்கோஸ் போடப்பட்டது.

லாரா என்னை பெட்டின் மீது அமரும்படி சொன்னாள். அமர்ந்தேன். லாரா தனது வலது கையால் என் வலது கையினைப் பிடித்துக் கொண்டாள். அவள் அருகில் அப்படியே அமர்ந்து இருந்தேன்.

என் நண்பர் விடை பெற்றார். லாராவின் அக்காவும் விடை பெற்றார். விடிய விடிய நான்கு குளுக்கோஸ் பாட்டில்கள் ஏற்றப்பட்டன. லாராவின் கை எனது கையை விடவில்லை. நல்ல தூக்கத்திலும் இறுகப் பிடித்தபடியே தூங்கினாள். கையை மெதுவாக விலக்கினால் முனக ஆரம்பித்தாள்.

நர்ஸ் வந்து நான் கையை எடுக்க முயற்சிப்பதைப் பார்த்துவிட்டு முறைத்தாள். இரவு முழுவதும் விழித்தபடி லாராவின் அருகிலேயே இருந்தேன்.

விடிகாலையில் கண் விழித்தாள் லாரா. என்னைப் பார்த்துச் சிரித்தாள். எழுந்து அறைக் கதவைச் சாத்தினாள். என் அருகில் வந்தாள். தோளில் சாய்ந்து கொண்டாள்.

” லாரா.. நர்ஸ் வரப்போகிறாள் பார். தப்பா நினைக்கப் போறாங்க ” என்றேன்.

“ நினைக்கட்டும். இதுக்குத்தானே இத்தனை நாள் காத்திருந்தேன் “ என்றாள்.

” என்ன லாரா. இரண்டு மாசமா சாப்பிடாமல் இருந்தாயாமே. ஏன் இப்படியெல்லாம் செய்கிறாய் ? “

” உங்களுக்காகத்தான் தங்கம் “ என்றாள்.

இரண்டு நாட்கள் அவளுடன் ஆஸ்பிட்டல் வாசம். அவளுடனே சாப்பிட்டு தூங்கி விழித்தேன்(!!!). என்னை விட்டு ஒரு நிமிடம் கூட விலக மாட்டேன் என்று அடம் பிடித்தாள்.

ஒரு வழியாக வீட்டில் கொண்டு சென்று சேர்த்து விட்டு இருப்பிடம் சேர்ந்தேன்.

இப்போது லாரா எங்கே ?

எங்கோ இருக்கிறாள் நலமாக. அவளைப் பார்த்து கிட்டத்தட்ட பத்து வருடம் ஆகிவிட்டது. இந்தக் கதை எழுத ஆரம்பித்த போது ஏதோ ஒரு வகையில் நான் அவள் மனதினைக் காயப்படுத்தி இருக்கிறேன் என்று தெரிந்தது. அதற்கு நான் என்ன செய்ய ?????

லாராவின் அக்கா என்னுடன் அவள் பேசுவதை தடை செய்ய, லாரா என்னை விட்டு நீங்கினாள். ஆனால் அவள் நினைவுகளோ எழுத்து வடிவத்தில் என்னுடனும் உங்களுடன் பயனிக்கிறது.

அப்படியே இந்தப் பாட்டையும் கேட்டு வையுங்கள். சுகமாக இருக்கும்.

பாடலைக் கேட்க (http://in.youtube.com/watch?v=MMW1FTUBbec)

ஓவியா
23-08-2008, 11:12 AM
பகிர்வுக்கு நன்றி அண்ணா.

1. உங்களுக்காக தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறாள்
2. உங்களுக்காக இரண்டு மாசமா ஏக்கத்தில் சாப்பிடாமல் இருந்துருக்கிறாள்..
3. உங்களுடைய கைகளை தூங்கும் பொழுதும் இறுக்கி பிடித்துருந்தாள்
4. உங்களை விட்டு ஒரு நிமிடம் கூட விலக மாட்டேன் என்று அடம் பிடித்தாள்.


பின் எப்படி (தன் அக்காவிற்க்காக) உங்களை விட்டு அவள் எங்கோ சென்றாள்!!

:eek::eek::eek:

தங்கவேல்
23-08-2008, 02:27 PM
அதான் விதி ஓவியா. அவளின் அக்காவால் வந்த பிரச்சினை. ஆனால் எதற்க்கும் நான் காரணம் அல்ல.

சிவா.ஜி
23-08-2008, 02:30 PM
இன்னுமொரு நல்ல கதை.

சுகந்தப்ரீதன்
24-08-2008, 02:20 AM
இன்னுமொரு நல்ல கதை.என்னது கதையா..?? அப்ப நிசமில்லையா "தங்கம்" ண்ணா..??

ஏன் தங்கம்ண்ணா பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்குதுன்னு இப்பதான் தெரியுது..!!
நீங்க இணைச்சிவிட்ட பாட்டு சுட்சுவேசனுக்கேத்த மாதிரி சூப்பாரா இருக்குதுண்ணா..!!

அடுத்த பகுதியையும் ஆரம்பியுங்கோ...!!

தங்கவேல்
24-08-2008, 02:31 AM
சுகந்தன் இது கதை தான். ஆனால் உண்மையில் நடந்திருக்கும் வாய்ப்புகள் அதிகம்

ஓவியா
24-08-2008, 08:50 AM
அதான் விதி ஓவியா. அவளின் அக்காவால் வந்த பிரச்சினை. ஆனால் எதற்க்கும் நான் காரணம் அல்ல.

ஓ அப்படியா, :)

இது தாங்கள் திருமணம் நடந்தபின் நடந்தவையைகளா?

தங்கவேல்
25-08-2008, 11:38 AM
ஓவியா நீங்கள் வெகு சாதரணமாக கேட்டு விட்டீர்கள். இந்த நிகழ்ச்சிகள் எனது திருமணத்திற்கு முன்பு நடந்தவை.

வயசுக் கோளாறில் தறி கெட்டும் மனதினை அடக்க இயலாமல் எங்கெங்கோ சுற்றி அலைந்து திரிந்து ஒரு வழியாக செட்டில் ஆகும்போது வாழ்க்கை அவனை விட்டுத் தூரப்போய் இருக்கும்.

அம்மாவும், அப்பாவும் சரியில்லை எனில் குழந்தைகள் நட்ட நடு ரோட்டில் நிற்பதும் ஒன்றுதான் , தறிகெட்டுத் திரிவதும் ஒன்றுதான்.

மதி
25-08-2008, 12:12 PM
தங்கவேலண்ணா.. நல்ல விறுவிறுப்பான நடை. அடுத்து என்ன என்று படிக்கத் தூண்டும்.
லாராவிற்கும் உங்களுக்குமான உறவு சிக்கல் எதுவென்று தெரியாவிட்டாலும் பேரிட முடியாத உணர்வுகளுடன் சில உறவுகள் இருப்பதை உணர்கிறேன்.

நல்லதொரு பகிர்வுக்கு நன்றி.