PDA

View Full Version : தேடுதல் எப்பொழுதும் துரத்துகிறது.Nanban
01-08-2003, 11:42 AM
தேடுதல் எப்பொழுதும் துரத்துகிறது.

நேற்று வந்த பாராட்டுக் கடிதம்...
படிக்க உதவும் மூக்குக் கண்ணாடி...
வாசித்துக் கொண்டிருக்கும் வார இதழ்...
எழுதுவதற்கு கூர் தீட்டிய பென்சில்....

எல்லாவற்றையும் தேடித்தேடி
எரிச்சலாகிப் போகும் மனது,
தேடியது கிடைத்ததும் -
சாந்தமாகி வெட்கப் படும்
தேடும்போது போட்ட கூச்சலுக்காக.

ஒவ்வொன்றிற்கும் ஒரு இடம் -
பழக்கப் படுத்திக் கொள்ளுங்கள்
மனைவியின் மந்திரம் ஒலிக்கிறது
மனதிற்குள் பதியாத வாக்கியமாய்.

'ஒவ்வொன்றிற்கும் ஓரிடம் ' -
ஆலயம் செல்லும் வழியிலே,
வாக்களித்தபடி,
மனைவியிடம் கேட்டேன் -
'எதைத் தேடி இங்கு வந்தாய்?'
'இதென்ன கேள்வி -
இறைவனைத் தான்.'

'ஒவ்வொன்றிற்கும் ஓரிடம்
உனக்கு மட்டும் செல்லுபடியாகாதா?
தேடுதலில் நீயும் தானிருக்கிறாய் -
எங்கே வைத்தோம் என்று மறந்துவிட்டு.'

'அட, போ, நாத்திகமே '
வைது விட்டு தேடிப்போகிறாள் படியேறி -
காலியான இதயத்தைச் சுமந்து கொண்டு.

இ.இசாக்
01-08-2003, 03:41 PM
கவிதையில் கருத்தை விதைத்து சித்து வேலை செய்யும்
கவிஞர் நண்பன் அவர்களே
தொடருங்கள்...

Tamil_Selvi
01-08-2003, 05:49 PM
மிகவும் அருமையாக இருக்கிறது உங்கள் கவி அண்ணா.

பாராட்டுக்கள்!

- தமிழ்ச்செல்வி

பாரதி
01-08-2003, 06:17 PM
இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகிறார்
ஞானத் தங்கமே..!
அவர் ஏதுமறியாரடி
ஞானத் தங்கமே......!

nalayiny
01-08-2003, 06:24 PM
தேடியது கிடைத்ததும் -
சாந்தமாகி வெட்கப் படும்
தேடும்போது போட்ட கூச்சலுக்காக.

ரசித்து படித்த வாசகம். பாராட்டுக்கள்.

இளசு
01-08-2003, 11:40 PM
மிக வலுவான ஒரு கருத்தோவியம்
நண்பனுக்கு கைவந்த படிம ஓவியம்..

பாராட்டுகள்.

Nanban
02-08-2003, 03:48 AM
ரசித்து படித்த நண்பர்களுக்கு நன்றி....

அதிலும் பாரதி எழுதிய வரிகளுக்கு மிக்க மிக்க நன்றி. நம்முடைய சிந்தனைகளும் அத்தனை உயர்ந்த கவிகளுக்கு ஈடானது என்று அறியும் பொழுது, நன்னம்பிக்கைப் பிறக்கிறது.... மேலும் சிந்திக்க, எழுத தூண்டுகிறது.......

வாசிக்கும் பொழுதே, அதை ஒத்த கருத்துடைய, பிரபலமான கவிஞர்கள், சிந்தனையாளர்கள், அறிஞர்கள் எழுதிய கருத்துகளைத் தருவதன் மூலம், நம் சிந்தனைகளும் பரந்துபடும். இந்த ஆக்கபூர்வமான யோசனையை எல்லோரும் ஏற்பார்ப்பார்களாக.......

Nanban
02-08-2003, 04:40 AM
மிகவும் அருமையாக இருக்கிறது உங்கள் கவி அண்ணா.

பாராட்டுக்கள்!

- தமிழ்ச்செல்வி

மிக்க நன்றி, தமிழ்ச் செல்வி அவர்களே, அண்ணா என்று அழைத்தமைக்கு. பொதுவாகவே நான் உறவுமுறை கூறி யாரையும் அழைப்பதில்லை. ஏனெனில், ஒவ்வொரு உறவு முறையிலும், ஒரு தேவை, ஒரு சார்பு இருக்கிறது. காதல் புனிதமானது என்று நாம் கூறிக் கொண்டாலும், அதிலும் ஒரு தேவை - காமம் என்ற தேவை - இருக்கிறது. நண்பன் என்ற தொடர்பில் மட்டுமே எந்த ஒரு தேவையும், சார்ந்திருத்தலும் இல்லாத உறவு இருக்கிறது....

அதனாலேயே தான், எப்பொழுதுமே, எல்லோரையுமே நண்பர்களாகத் தான் பார்க்கிறேன தவிர, உறவுகளாக அல்ல......

Mano.G.
02-08-2003, 04:47 AM
தேடும் போது கிடைக்காது,
அப்போழுதுதான் அதன் தேவையின் மகத்துவம் நமக்கு தெரியும்
அதே போல தேவையற்றபோது நம் முன்னே நிற்கும் அது
அப்பொழுது அதன் மகத்துவம் கடுகினும் சிறிதாகிவிடும்
இது வோ கடவுளின் நியாதி.

மனோ.ஜி

Nanban
02-08-2003, 10:36 AM
உண்மைதான் மனோஜி....

தன்னை
இவன் அறிந்து கொள்ளட்டும் என்று
'அவன்' விரும்பினால் மட்டுமே
'அவனை'
இவன் அறிந்து கொள்ள முடியும்....

தந்திரக்கார மனிதர்கள்
தாங்கள் அறிந்து விட்டதாக
அறிவித்து விடுகின்றனர்...
காவி கட்டி
காட்டின் அருகே
குடிசை போட்டு
காமத்தில் இருந்து
அரசுக் கட்டில் வரை
அனைத்தையும்
விலைபேசும் வல்லமை பெற்று
வலிதாகி வளர்ந்து விடுகின்றனர்...

விளம்பரத்திலே தான்
வாழ்க்கையைக் காணும்
மக்கு மனிதனும்
மடை திறந்த வெள்ளமாய்
பக்தியைக் கொட்டி
பின்னர்
வியர்வை வழிய உழைத்ததை
வியர்வை வழியாமல்
சம்பாதிக்கும் வழி தேடி
வியர்வை சிந்தா
சாமிகளின் பாதத்தில்
சரணடையச் செய்து கிடக்கிறான்....

'நான் கொடுப்பதை
யாராலும்
தடுக்க முடியாது -
நான் தடுத்ததை
யாராலும்
கொடுக்க முடியாது'
இறைவன் அமைதியாகப்
புன்னகை பூக்கிறான்
இடைத் தரகன்
வைத்துக் கொள்ளாத
ஒரு எளிய அன்பர்
தன்னை நேருக்கு நேராய்
வணங்கி நிற்கும் வேளையிலே......