PDA

View Full Version : மணி என்றொரு நண்பன்....!!



சிவா.ஜி
20-08-2008, 07:31 PM
சாலா...தேக்கே நஹி ஜாத்தா நைக்கா...."

"கஷாலா மானூஸ் துமி....."

"எந்து ஒரு மனுஷனானு....ச்சே...."

"என்னா மனுஷன்யா இவனெல்லாம்? மாடுமாதிரி மேல இடிச்சிட்டு போறான்"

ஹிந்தி, மராட்டி, மலையாளம், தமிழ் என அத்தனை மொழிகளிலும் திட்டு வாங்கிக்கொண்டேதான் தள்ளாடி, தடுமாறி போய்க்கொண்டிருந்தார்கள் அந்த பியர் அருந்தும் உணவுவிடுதிலிருந்து வெளியேறிச் சென்ற மும்பைக் குடிமகன்கள்.

அந்த விடுதிக்குள்தான் நண்பனின் வற்புறுத்தலால் சேகரும் நுழைந்தான். இருவரும் உள்ளே நுழைந்ததும், அந்த மெல்லிய வெளிச்சத்துக்குப் பழக்கப்பட சிறிது நேரமெடுத்தது அவர்களுக்கு. மெல்ல அந்த இடம் அவுட் ஆஃப் போகஸிலிருந்து தெளிவாவதைப்போல, புலப்படத்தொடங்கியதும், மூலையிலிருந்த, இருவர் மட்டுமே நேருக்கு நேர் அமரக்கூடிய, அந்த மேசையில் சென்று அமர்ந்தார்கள்.

கோவையிலிருந்து ஆறு வருடத்துக்குப் பிறகு மும்பை வந்திருந்தான் சேகர். மும்பையில் ஒரு தனியார் நிறுவனத்தில் தொடர்ந்து பத்து வருடங்கள் பணிபுரிந்துவிட்டு, கோவைக்கே திரும்பச் சென்றுவிட்டான். இப்போது மீண்டும் மும்பை வந்தது, வெளிநாடு செல்லும் ஆசையில். செய்தித்தாள் பார்த்து விண்ணப்பித்திருந்த வேலைக்காக நேர்முகத்தேர்வுக்கு அழைத்திருந்தார்கள். அந்தேரி பகுதியில் இருக்கும் அந்த அலுவலகத்துக்கு நாளைதான் போக வேண்டும். செம்பூர் அவனுக்குப் பழக்கமான இடமென்பதாலும், நிறைய தமிழர்கள் வாழும் இடமென்பதாலும் அங்கேயே ஒரு தங்கும் விடுதியில் அறையெடுத்து தங்கினான்.

மாலையில் அறையிலிருந்து கீழிறங்கி கடைத்தெருவுக்குள் நுழைந்தவன் சதீஷைப் பார்த்தான். தன்னுடன் ஒரே நிறுவனத்தில் முன்பு ஒன்றாகப் பணிபுரிந்தவன். இவனுக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகளான பிறகும் சதீஷ் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமலிருந்தான். கேட்டால் அக்கா, தங்கை திருமணங்கள், அப்பாக் கடன் என்று எதையெதையோ சொன்னானேத்தவிர அதனால் அவனுக்கு எந்த வருத்தமும் இருப்பதாய்க் காட்டிக்கொள்ளவேயில்லை. அவனது வற்புறுத்தலுக்காகத்தான் இப்போது இந்த பியரகத்தில்.

நுரையால் கோப்பை வழிந்துவிடாமல், பக்குவமாக அந்த பணியாளன் ஊற்றிக்கொடுத்த சில்லென்றிருந்த பியர், மும்பையின் அந்த ஏப்ரல்மாத கசகசப்புக்கு இதமாகத்தானிருந்தது. இலவச இணைப்பாகக்கிடைத்த மசாலா அப்பளத்தை கடித்துக்கொண்டே கோப்பையைக் காலி செய்துகொண்டிருந்தார்கள். இரண்டு பாட்டில்களுக்குப் பிறகு, சதீஷ் புலம்பத்தொடங்கிவிட்டான். வழக்கமான செண்டிமெண்ட் புலம்பல்கள். இதுதான் லிமிட் என்று நிறுத்திக்கொள்ள முனைந்த சேகரை வற்புறுத்தி இன்னுமொரு பியரை வரவழைத்துவிட்டான்.

இருக்கையில் அமர்ந்திருந்த சதீஷ் லேசாகச் சரியத்தொடங்கியிருந்தான். அப்போது அவனைக் கடந்துபோன ஒருவன் இவன்மேல் மோதிக்கொள்ள, போதையிலிருந்த சதீஷ் அவனை நெட்டித்தள்ளிவிட்டான். தள்ளப்பட்டவன் தடுமாறி விழ இருந்து பக்கத்து மேசையில் முட்டி நின்றுகொண்டான். ஆத்திரத்துடன் திரும்பி சதீஷை ஓங்கி அறைந்துவிட்டான். சேகர் அதிர்ச்சியில் அமர்ந்துவிட்டான். இதற்குள் அவனோடு வந்திருந்த மற்ற இருவரும் சேர்ந்து சேகரையும் சேர்த்து தாக்கத் தொடங்கினார்கள். அப்போதுதான் மணி உள்ளே நுழைந்தான்.

"ஆயியே தாதா...பைட்டியே" என்று அந்த உணவகத்தின் உரிமையாளரான ஏதோ ஒரு ஷெட்டி அவனை மரியாதையுடன் அழைத்தார். அவரது அழைப்பைக் கண்டுகொள்ளாமல் தாக்கிக்கொண்டிருந்தவர்களைப் பார்த்து சத்தமாக அதட்டினான். அதற்குள் அந்த அறை முழு வெளிச்சத்துக்கு வந்துவிட, அதட்டிய மணி சேகரைப் பார்த்ததும்...

"டே சேகர்....எப்படா மும்பை வந்தே...சாலா....பாத்து எவ்ளோ நாளாச்சு"

ஓடி வந்து கட்டிக்கொண்டான். தாக்கிக்கொண்டிருந்தவர்கள், மெள்ள அங்கிருந்து நழுவினார்கள். மணி, உரிமையாளரைப் பார்த்து,

"ஷெட்டி சாப் இது என்னோட நன்பன். சில்லுன்னு ரெண்டு..(கூட சதீஷையும் பார்த்தவன்) மூணு பியர் கொண்டுவரச் சொல்லுங்க.." உத்தரவிட்டுவிட்டு, சேகரிடம் திரும்பி,

"என்னடா அப்படி பாக்குற? அடையாளம் தெரியலையா? நான் மணிடா....." என்றதும் சேகர்,

"டே....உன்னைத் தெரியாதாடா? திடீர்ன்னு பாத்த ஷாக்குல அப்படியே நின்னுட்டேன். அதான்"

"ஆமா....ஷாக்காத்தான் இருக்கும். அப்ப ஜெயிலுக்குப் போனவன் எப்ப வெளியில வந்தான்னு நினைச்சிருப்பே"

சேகரின் குடியிருப்பில் பக்கத்து ஃப்ளாட்டில் இருந்தது மணியின் குடும்பம். இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள், ஆதிரை...மணியின் அப்பா தமிழாசிரியர், அதனால் அழகான தமிழ்பெயரையே தன் பிள்ளைகளுக்கு வைத்திருந்தார். மணிமாறன், நெடுங்கிள்ளி, ஆதிரை. அம்மாவும் ஆசிரியைதான். கண்டிப்பான கணித ஆசிரியை. மணி சேகரோடு கராத்தே வகுப்பிலும் தோழன். இருவரும் மிக நெருக்கம்.

சேகரைவிட இரண்டு வயது இளையவன். அப்போதுதான் கல்லூரிப்படிப்பை முடித்திருந்தான். அமைதியானவன். இவனுக்கு நேரெதிர் நெடுங்கிள்ளி. அடாவடியாக நடந்துகொள்வான். உள்ளூர் மராட்டிய நன்பர்கள் அதிகம். இவனளவுக்கு தமிழை சுத்தமாகப் பேசமாட்டான். பெரும்பாலும் மராட்டிதான். ஒரு சமயம், கராத்தே வகுப்பில் சேகரும், மணியும் பழுப்புப் பட்டை வாங்கி ஒரு வாரம் ஆகியிருந்த நேரத்தில், ஆதிரையை ஏதோ ஒரு மராட்டிப்பையன் சீண்டிவிட்டான். அதற்கு மணியின் அண்ணன் அந்தப்பையனை வெளுத்துவிட்டான். அடுத்தநாள் அடி வாங்கிய பையன், அவனது நன்பர்கள் சிலருடன் வந்து, குடியிருப்புக் கட்டிடத்துக்கு கீழே விடியற்காலையில் நின்றுகொண்டு, பால் வாங்க கீழே இறங்கிய மணியின் அண்ணனைத் தாக்கினார்கள்.சத்தம் கேட்டு மணியும் கீழே இறங்கிப்போவதற்குள், நெடுங்கிள்ளி எக்குத்தப்பாக நெற்றிப்பொட்டில் அடி பட்டு இறந்துவிட்டான்.

மணிக்கு சடாரென்று வந்த ஆத்திரத்தில், அதில் ஒருவன் தலையைக் கல்லில் மோதியதில், அவனும் இறந்துவிட்டான். பிறகு போலீஸ், கோர்ட் எல்லாம் முடிந்து சிறைக்கு கொண்டுபோய்விட்டார்கள். மூத்தவன் இறந்துவிட, இளையவனும் சிறைக்குச் சென்றுவிட மிகவும் உடைந்துபோனார்கள் அவனது பெற்றோர்கள்.

சேகரும் அந்த வேலையை விட்டுவிட்டு கோவை வந்துவிட்டான். இதோ இப்போது ஆறு வருடங்களுக்குப் பிறகு மணியை சந்தித்திருக்கிறான்.

"எப்படா ஜெயில்லருந்து வந்த? அப்பா அம்மா, ஆதிரை எல்லாம் நல்லாருக்காங்களா? ஆதிரைக்கு கல்யாணம் ஆயிடிச்சா?"

சேகரின் கேள்விகளை காதில் வாங்கிக்கொண்டு, ஒரு ஆயாசப் பெருமூச்சை வெளிப்படுத்தினான் மணி.

"அப்பா நல்ல வக்கீலை ஏற்பாடு பண்ணியிருந்ததால,அவரும் தற்காப்புக்காக செஞ்ச கொலைன்னு வாதாடி ரெண்டு வருஷம் மட்டும் ஜெயில் தண்டனை கிடைக்கிற மாதிரி செஞ்சுட்டார்.ஒன்றரை வருஷத்திலேயே வெளியில வந்துட்டேன். அப்பா இதையே நினைச்சு நினைச்சு இறந்துட்டார். ஜெயிலுக்குப் போய்ட்டுவந்தவன், கொலைகாரன் இப்படி படிக்காமயே பட்டமெல்லாம் சேந்து போயிட்டதால, நம்ம ஏரியா அரசியல்வாதி என்னை அவன்கூட வெச்சுக்கிட்டு அவனுக்கு வேண்டியதையெல்லாம் சாதிச்சுக்கிட்டான். ஒரு கட்டத்துல அவன்கிட்டருந்து பிரிஞ்சி வந்து....இப்ப இவங்கள்ளாம் கூப்பிடறமாதிரி தாதாவாயிட்டேன். நல்லா படிச்சி, பெரிய பதவிக்கு வருவான்னு நினைச்சிக்கிட்டிருந்த என் வாழ்க்கை இப்படி போன துக்கத்துல, அம்மாவும், ஆதிரையும் ஊருக்கே போய்ட்டாங்க. ரெண்டு வருஷத்துக்கு முன்னாலதான் ஆதிரைக்கு கல்யணமாச்சுன்னு கேள்விப்பட்டேன். எனக்கு சொல்லக்கூட இல்லை. அது சரி எப்ப வந்தே, எதுக்கு வந்த?"

மணியின் கதையைக்கேட்டு மனம் வருந்தினான் சேகர். எத்தனை நல்ல குடும்பம். தவறான சேர்க்கையால், அண்னன் உயிர்விட்டான், அண்னனுக்காக கொலை செய்து தம்பி ரத்த வாழ்க்கையை தத்தெடுத்துக்கொண்டான், அப்பா இறந்து குடும்பமே சிதறிவிட்டதே..ஏறியிருந்த லேசான போதைகூட இறங்கிவிட்டது. தான் வந்த வேலையை சொன்னான். மணி தன் அலைபேசி எண்ணை அவனிடம் கொடுத்து ஏதாவது உதவி தேவையாயிருந்தால் தன்னை தொடர்புகொள்ளுமாறு சொன்னான்.


அப்படி ஒரு சந்தர்ப்பம் சேகருக்கு ஏற்பட்டது. நேர்முகத்தேர்வில் தேர்வானதும் அவனது பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக்கொண்டு, இரண்டு வாரங்களுக்குப் பிறகு வந்து மருத்துவ சோதனை மேற்கொள்ளவேண்டுமென சொல்லி அனுப்பினார்கள் அந்த வேலைவாய்ப்பு நிறுவனத்தார். வெளியில் வந்தவனுக்கு ஒரு அழைப்பு அவனது கைப்பேசி எண்ணுக்கு வந்தது. ஏற்கனவே விண்ணப்பித்திருந்த இன்னொரு நிறுவனத்திலிருந்து. சென்று பார்த்தான். அப்போதே நேர்முகத்தேர்வை நடத்தி, வேலையை உறுதி செய்து கடிதமும் கொடுத்துவிட்டார்கள். உடனே பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்குமாறு சொன்னார்கள்.

இதற்கு முன்னால் அவன் தேர்வாகியிருந்த வேலையைவிட மிக அதிக சம்பளம் இந்த வேலைக்கு. நல்ல பேர்பெற்ற நிறுவனமும் கூட. இதைவிட்டுவிட சேகருக்கு மனமே இல்லை. உடனே அந்த பழைய நிறுவனத்துக்குப்போய் பாஸ்போர்ட்டை திருப்பிக்கேட்டான். மறுத்துவிட்டார்கள். வற்புறுத்திக்கேட்டதற்கு பத்தாயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு பாஸ்போர்ட்டை வாங்கிக் கொள்ளச் சொன்னார்கள். இவனுக்கு ஆத்திரமாக வந்தது. அடாவடித்தனம் செய்கிறார்கள். அனாவசியமாய் எதற்கு இவர்களுக்கு இத்தனை பணம் கொடுக்கவேண்டும். அதே சமயம் அவனிடம் அத்தனைப் பணம் அந்த சமயம் இல்லை. உடனே மணியை அழைத்தான். விவரம் சொன்னான். சேகரை அங்கேயே இருக்கும்படி சொல்லிவிட்டு, ஒரு மணி நேரத்தில் ஆட்களுடன் வந்து சேர்ந்தான்.

வேலைவாய்ப்பு நிறுவனத்தார் ஆடிப்போய்விட்டார்கள். அப்படி ஒரு மிரட்டல் மணியிடமிருந்து. அலுவலகத்தையே துவம்சம் செய்துவிடுவதாகச் சொன்னதும், மறுபேச்சு பேசாமல் சேகரின் பாஸ்போர்ட்டைக் கொடுத்தார்கள். வாங்கிக்கொண்டு திரும்ப வரும் வழியில் சயானில் ஒரு பிரபல பெண்கள் கல்லூரி அருகில் வண்டியை நிறுத்தி, எதிரிலிருந்த பெட்டிக்கடைக்குப் போனான் மணி. கடைக்காரரிடம் ஏதோ பேசியதும், அவர் அவனை கடைக்கு வலப்பக்கம் வரச் சொன்னதை காரிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தான் சேகர்.

வலப்பக்கமிருந்த அந்த திறப்புக்கு அருகில் மணி சென்றதும் கடைக்காரர் ஒரு தீப்பெட்டியை கையில் எடுத்துக்கொண்டு மணியை நாக்கை நீட்டச் சொன்னார். மணியின் நாக்கு வெளியே நீண்டதும், அதனருகே அந்த தீப்பெட்டியைக் கொண்டுபோய் லேசாகத் திறந்தார். சற்று நேரத்திலேயே மணியின் உடலில் சிறு உதறலைக் கவனிக்க முடிந்தது. பணத்தைக் கொடுத்துவிட்டு திரும்ப வந்து காரில் அமர்ந்து ஓட்டத்தொடங்கியதும், என்னதான் நடந்தது என்று தெரிந்து கொள்ளும் ஆவலில்,

"மணி என்னடா நடக்குது? நாக்கை எதுக்கு நீட்டினே?" என்றதும், சேகரைப் பார்த்து கோணல் வாயுடன் ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு, லேசான குழறலுடன்

"அதுக்குப் பேர் ஸ்நேக் பைட். 500 ரூபாய் ஒரு கடிக்கு. அந்த தீப்பெட்டிக்குள்ள ஒரு சின்ன பாம்பு இருக்கும். அது நாக்குல கடிச்சா 24 மணி நேரத்துக்கு போதை குறையாம இருக்கும். அந்தக் கடை ஒரு ஸ்பெஷல் கடை. பாத்திருப்பியே எத்தனை பொண்ணுங்க, பையனுங்க அங்க நின்னுக்கிட்டிருந்தானுங்கன்னு. எல்லாம் போதைக்கு வந்தவங்கதான். நீ அந்தக் கடைக்காரன்கிட்ட ஒரு ரூபா நோட்டைக் குடுத்து சாக்லேட் கேட்டா ஒரு ரூபா சாக்லேட் குடுப்பான். அதே ஒரு ரூபா காயினைக் கொடுத்துக் கேட்டா உன் முகத்தைப் பார்ப்பான். நீ சைகையால் சம்மதம்ன்னு சொன்னா...வேற ஒரு சாக்லேட் குடுப்பான். அது போதைமருந்து கலந்த சாக்லேட். அங்க ஒரு சின்னப் பையன் இருந்தானே...அவன் அப்புறமா அந்த சாக்லேட் வாங்கினவனுக்குப் பின்னாலேயே வந்து 50 ரூபா வாங்கிட்டுப் போயிடுவான். எல்லாம் போலீஸ்கிட்டருந்து தப்பிக்கத்தான்"

"அடப்பாவி, ஏண்டா உனக்கு இந்தப் பழக்கமெல்லாம்? ஒடம்பு என்னத்துக்காகறது.." உண்மையான அக்கறையுடன் கேட்ட சேகரைப் பார்த்து, கண்களில் கண்ணீர் மல்க,

"இப்படி அக்கறையா கேக்க எனக்கு யார் இருக்காங்கடா? ....என் வாழ்க்கை இப்படின்னு ஆயிடிச்சு. கத்தி எடுத்தவனுக்கு கத்தியாலத்தான் சாவுன்னு எனக்கும் தெரியும். வெளியிலத்தான் ரொம்ப தைரியமா இருக்கிற மாதிரி காமிச்சுக்கறேன். ஆனா உள்ளுக்குள்ள எப்பவுமே மரணபயம் இருந்துகிட்டே இருக்கு. அந்த பயம் தெரியாம இருக்கத்தான் இந்த சனியனை யூஸ் பன்றேன். சரி விட்றா என்னைக்கு ஊருக்கு கிளம்பற? போகும்போது எங்கம்மா அட்ரஸ் தரேன் தயவுசெஞ்சி எனக்காக ஒரு வாட்டி எங்க ஊருக்குப் போய் அவங்களைப் பாத்து ஆறுதல் சொல்லுடா.நான் இங்க நல்லாத்தான் இருக்கேன்னு சொன்னா கொஞ்சமாவது சந்தோஷப்படுவாங்க"



வந்த வேலை முடிந்து விட்டதால், சேகர் அடுத்த நாளே கிளம்பிவிட்டான்.பெட்டியையெல்லாம் எடுத்துக்கொண்டு, வாடகையை செட்டில் செய்துவிட்டு கடைவீதிக்கு வந்து ஆட்டோ பிடிப்பதற்காக நின்றான். பக்கத்தில் ஒரு கூட்டம். யாரோ கீழே விழுந்து கிடப்பது தெரிந்தது. அவனுக்குள் எழுந்த ஆர்வத்தில் கூட்டத்துக்குள் நுழைந்துப் பார்த்தான்.

ரத்தசகதியில் செத்துக்கிடந்தது மணி. இவனையும் யாரோ இவனது எதிரிகள் விடியற்காலையிலேயே கொன்றுபோட்டிருக்கிறார்கள். நேற்றுதான் சொன்னான்...சொன்னதைப்போலவே அவன் எடுத்த கத்தி அவனையே சாய்த்துவிட்டது. மனதில் ஒரு பெரும் சுமையை உணர்ந்தான். மணியோட அம்மாவைப் பார்த்தால் என்ன சொல்வது. நிச்சயம் இவன் இறந்துவிட்டதை சொல்லப்போவதில்லை என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டான்.

mukilan
20-08-2008, 07:56 PM
கத்தி எடுத்தவனுக்கு கத்தியால்தான் மரணம் என்றாலும் கத்தி எடுக்கும் முடிவு அவன் எடுத்ததில்லையே. சமுதாயம்தான் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையையும் எப்படியெல்லம் திசை திருப்புகிறது?

வழக்கம் போல உங்கள் யதார்த்த நடை அண்ணா. தேவையற்ற வர்ணனைகள் இல்லாமல் காட்சியமைப்புக்கு மட்டும் தேவையான அளவான விவரிப்புகள். ஸ்நேக் பைட், மசாலா அப்பளம், போன்ற சமாச்சாரங்கள் கதையில் யதார்த்தத்தோடு நன்கு ஒட்டிக் கொள்கின்றன. மணி போன்ற மணியான மனிதர்கள் திசை திரும்பக் காரணாமான விதியை எப்படி புரிந்து கொள்வது?

மதி
21-08-2008, 02:02 AM
வாழ்க்கை சில நேரம் நம்மையும் மீறி நம்மை செலுத்துகிறது என்பதற்கு உதாரணம் மணி. எப்படி இருக்க வேண்டியவன் இப்படி ஆயிட்டான்னு மனசு பதறுது.

கத்தி எடுத்தவர்கள் எல்லாம் மனத்தில் எப்போதும் ஒரு பயத்துடனே இருக்கிறார்கள் போல. அழகான தெள்ளிய நடைக்கு வாழ்த்துகள் சிவாண்ணா..

meera
21-08-2008, 02:44 AM
அண்ணா, கதையின் நாயகன் போலவே நானும் ஒரு சுமையை உணர்ந்தேன். எதார்த்தமான நடை மற்றும் முடிவு.

தொடர்ந்து படைக்க வாழ்த்துகள் அண்ணா.

சிவா.ஜி
21-08-2008, 04:13 AM
மணி போன்ற மணியான மனிதர்கள் திசை திரும்பக் காரணாமான விதியை எப்படி புரிந்து கொள்வது?
புரியாத புதிர்தான் முகிலன். சந்தர்பங்கள் ஒரு மனிதனை ஆதிக்கம் செலுத்தும்போது,என்னவெல்லாமோ நிகழ்ந்துவிடுகிறது. முதல் பின்னூட்டமிட்டு உற்சாக ஊர்வலத்தை தொடங்கி வைத்த அன்பு இளவலுக்கு நன்றி.

சிவா.ஜி
21-08-2008, 04:15 AM
வாழ்க்கை சில நேரம் நம்மையும் மீறி நம்மை செலுத்துகிறது என்பதற்கு உதாரணம் மணி.
மிக மிக உண்மை மதி. சில நேரங்களில் நமது வாழ்க்கை நம் கைகளில் இருப்பதில்லை. என்னதான் உறுதியோடு இருந்தாலும், வாய்க்கும் சந்தர்பங்கள் அதனை இளக்கிவிடுகிறது. நன்றி மதி.

சிவா.ஜி
21-08-2008, 04:16 AM
அண்ணா, கதையின் நாயகன் போலவே நானும் ஒரு சுமையை உணர்ந்தேன். எதார்த்தமான நடை மற்றும் முடிவு.

தொடர்ந்து படைக்க வாழ்த்துகள் அண்ணா.

வாங்க மீரா. பாத்து நாளாச்சு. பின்னூட்ட ஊக்கத்துக்கு ரொம்ப நன்றிம்மா.

MURALINITHISH
21-08-2008, 09:20 AM
சில நேரங்களில் நம் வாழ்க்கையை நாம் முடிவெடுக்க முடிவதில்லை காலங்களும் நேரங்களும்தான் முடிவெடுக்கின்றன

செல்வா
21-08-2008, 09:46 AM
கதையின் கனம் வாசிப்பு முடித்ததும் மனதில் ஏறிக் கொள்கிறது.


அண்னனுக்காக கொலை செய்து தம்பி ரத்த வாழ்க்கையை தத்தெடுத்துக் கொண்டான்.

சோகத்தையும் தாண்டி இரசிக்க வைத்த வரிகள்.
ஒரேயடியாக சூழ்நிலையையின் மீதும் பழி போட்டுவிட முடியாது. வாழ்க்கையின் பலநேரங்களில் நமக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வழிகள் தெரியும் ஆனால் எதைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதைப் பொறுத்தே நமது வாழ்க்கை இருக்கிறது.

நல்ல கதை கொடுத்தமைக்கு நன்றிகள் அண்ணா.

தீபா
21-08-2008, 10:48 AM
நான்கு வெவ்வேறான சம்பவங்கள். பூமாலையாகக் கோர்த்து அதற்கொரு முடிவு.

நிச்சலனமான வாழ்வுச்சகதியில் சலனமேற்படுத்தும் மராட்டிக் கூட்டத்தினரை கவனமேற்கொண்டு நடவடிக்கை எடுக்க மான உணர்ச்சியில் மழுங்கிய மூளை இடம் கொடுக்காததன் விளைவு, அங்கங்கு அறைந்து சிதறிய நீர்த்துளிகளாய் சிதறிப் போனது குடும்பம். எடுக்கும் முடிவுக்கேற்பத்தான் விளைவுகளும் ஏற்படும். நீதிகள் மேகங்களாய், பொழிவிடம் தேடி அலைவதில்லை. மானுடம் காத்திருக்கவேண்டியிருக்கிறது துளிகளுக்காக.

மணி நல்லவனா ? கெட்டவனா? துர்பாக்கிய சூழ்நிலை அவனை அப்படி ஆக்கியிருக்கலாம். பிந்தைய விளைவுகளுக்கு எண்ணாதவன் எப்படி நல்லவனாக இருக்கமுடியும். தாதாக்களுக்கு இப்படி ஒரு பிண்ணனி நிச்சயம் இருக்கும். அது நியாயப்படுத்துதலுக்கான வலுவான காரணிகள். அது நியாயமன்று. அடுத்தவன் உணர்வில் நுழையவே அனுமதியில்லாத பொழுது, அவன் உயிரை எடுக்கமட்டும் அனுமதியுண்டா என்ன

சேகர் இறுதியாக என்ன செய்தான்? இது வாசகர் கண்ணோட்டத்தில் முடிவிலியாக விட்டுவைக்கப்பட்டிருக்கிறது. மணி இறந்தபின்னர், அவன் யாரென்று தெரியாது என்று விலகினால், அது " அவரவர் வாழ்வு அவரவருக்கு" என்று முடிவாகும், மாறாக சடலத்தை ஏற்க, " சமுதாயம் நிரண்டும்"

இது இருதிசை குத்தீட்டி. தோலைக்கிழிப்பது உறுதி.

ஆதி
21-08-2008, 11:10 AM
மிக அழகான தொடக்கம் அண்ணா, கதை ஓட்டமும் எங்கும் இடறாமல் எனக்கே தெரியாமல் என்னை வயமாக்கியது.. முடிவுதான் அண்ணா சப்பு போச்சு.. மணியை கொன்றிருக்க வேண்டாம் அண்ணா..

மணியின் அம்மாவை சென்று சேகர் பார்த்து நலம் விசாரித்து அவர்களுக்கு புடவை பணம் என்று கொஞ்சம் மணி கொடுத்தாக கொடுத்துவிட்டு விடை பெற்ரு கொண்டு சேகர் திரும்பி செல்கையில் அவன் நினைத்துப் பார்ப்பதாக இந்த கதையை நகர்த்தி இருந்தால் இது ஒரு நல்ல திரைக்கதையாகி இருக்கும் அண்ணா..

பாராடுக்கள் சிவா அண்ணா..

அக்னி
21-08-2008, 02:39 PM
நீ கத்தி தூக்கியவனா...
உன் தோழனுக்கும்
நீ அடியாள் என்ற அடையாளம்தான்...

என்று சொல்லத் தோன்றுகின்றது...

பாராட்டுக்கள் சிவா.ஜி...

சிவா.ஜி
22-08-2008, 06:20 AM
[QUOTE=ஆதி;377331] முடிவுதான் அண்ணா சப்பு போச்சு.. மணியை கொன்றிருக்க வேண்டாம் அண்ணா..
/QUOTE]

அழகான பின்ன்னூட்டத்துக்கு நன்றி ஆதி. நேற்று பார்த்தவன் இன்று இறந்ததுதான் இந்தக்கதையில் முக்கிய சம்பவம். அவனெடுத்த கத்தி அவனையே கொன்றுவிட்டதைத்தான் சொல்லியிருக்கிறேன். நீங்கள் சொன்ன முடிவும் நன்றுதான். நன்றி ஆதி.

சிவா.ஜி
22-08-2008, 06:26 AM
சரியாக சொன்னீர்கள் அக்னி. நன்பனென்ற அடையாளமிழந்து அடியாளாகி விடுகிறான். பின்னூட்ட ஊக்கத்திற்கு நன்றி.

அமரன்
22-08-2008, 10:51 AM
இது கதையல்லா.. திரைக்கதை.. வாசிக்கும்போது காட்சிகள் விரிவதை தடுக்க இயலவில்லை. காட்சிக்கோர்ப்பை எழுத்தால் கச்சிதமாக செய்த சிவாவுக்கு வெற்றிமாலை..

கராத்தே ஒரு தற்காப்புக் கலை மட்டுமல்ல.. நல்லதொரு தியான வழியும்கூட. கோபத்தை கட்டுப்படுத்துவதே கராத்தேயில் முதலாவது பாடம். காராத்தே மாணவன் மணி கலைக்கு துரோகம் செய்ததுக்கு தண்டனையே இருவருட சிறைவாசம். அந்த வாசம் தந்த வாழ்க்கை.. ஆதலால் விதியை சபிக்க ஒப்பவில்லை. மதியை சபிக்கவே ஒப்புகிறது. (பரசுராமன் சாபம் ஏதாவது இருக்கலாமோ..)

யாருக்குத் தெரியும் அரசியல்வாதியைப் போல நண்பனும் தன்னை அடியாளாக பயன்படுத்தினானே என்ற உணர்வுதான் மணியின் உயிரைப் பறித்திருக்கலாம்.. உயிர்நண்பனல்லவா..

திருத்தி வழிப்படுத்தாது விருத்துக்கு வழிகோலும் சேகர் மாதிரி ஒரு உயிர் நண்பன் எனக்கு கிடைக்காமல் இருக்கட்டும்.

தமது உட்பயத்தை தூங்கவைக்க ரவுடிகள் போதைகளை உட்கொள்வது சிறந்த மனவியல் தர்க்கம். திரைகளில் அவற்றை தவிருங்கள் என்று சொல்பவர்கள் மறைமுகமாக வன்முறையை எதிர்க்கும் நல்லவாதிகள்தான்..

பாராட்டுகள் சிவா..

ஐரேனிபுரம் பால்ராசய்யா
22-08-2008, 01:56 PM
இனிய நண்பர் சிவா.ஜி அவர்களுக்கு,
மணி என்றொரு நண்பன் கதையில் தெளிந்த நீரோடையைப்போல யதார்த்தம் மிகவும் தாராளமாகவே வழிந்தோடியது. . சமுதாய அவலங்களை படம் பிடித்திருந்தது. கதையின் போக்கு யதார்த்த நடையில் இருந்ததால் பாராட்டுக்கள்

பூமகள்
22-08-2008, 02:17 PM
கதையின் காட்சிகள்.. திரைக்கதையை விஞ்சுகின்றன..

சேகர் போன்ற நண்பர்கள்.. "விட்டுட்டு வா.. வேறு நல்ல தொழில் செய்யலாம்.."என்ற ஒற்றை வார்த்தை கூட உதிர்க்காதது ஆச்சர்யமே...!!

அமரன் சொன்னது போல..

கோபம் குறைக்காத சண்டை.. கொலை.. அவர்கள் மதி கெட்டதையே உணர்த்துகிறது..

மாறியதற்கான காரணம் சொல்லப்பட்டாலும்..
கெட்டுச் சீரழிவது எளிது.. மீறி நல்லவர்களாக இருப்பவர் தானே சாதனை..??!!

அவ்வகையில் மணி.. நல்ல ஆசிரியர்களின் புதல்வனாகியும் சராசரி மனிதரினும் தாழ்ந்து விட்டது வேதனையே..


கதையில் இப்படி பல கேள்விகளும் பதில்களும்.. மாறி மாறி சிந்தனையை ஆக்ரமித்தாலும்..

இறுதியில் தெரிவது சிவா என்கிற சிறந்த கதையாசிரியர்.. திரைக்கதை அமைக்குமளவு கதையின் கரு இருப்பது சிறப்பு..

ஆயினும்.. கொஞ்சம் உறுத்துவது...

பீர்... ஸ்நேக் பைட்.. இத்தியாதி இத்தியாதி டாஸ் மார்க் சமாச்சாரங்கள்.... இதில் ஸ்நேக் பைட்.. நான் அறிந்திராத ஒன்று...

அதிக வன்முறைக் காட்சிகளுடன் குடிக்கார தாதா பற்றிய ஒரு படம் பார்த்த உணர்வு..

மனசை வருடவில்லையே.... என்ற சிறு வருத்தம்..

இரு பக்க என் கருத்துகளும் இதுவே...

நிறைகளை நிறைவாக பாருங்கள்.. குறைகளை குண்டுமணி அளவுக்கு பாருங்கள் என்ற சிறு வேண்டுகோள்..

மொத்தத்தில் அருமையிலும் அருமை..

பாராட்டுகள் சிவா அண்ணா.

அக்னி
22-08-2008, 02:32 PM
பீர்... ஸ்நேக் பைட்.. இத்தியாதி இத்தியாதி டாஸ் மார்க் சமாச்சாரங்கள்....

இவையெல்லாம்தான்,
மணியின் இன்றைய நிலையையும், அன்றைய நிலையையும்
மிகத் துல்லியமாக வேறுபடுத்திக் காட்டுகின்றன.

இவற்றைத் தவிர்த்துக் கதையை நகர்த்தியிருந்தால்,
கதை யதார்த்தமாக இருந்திருக்காதே...

வருடிப் போகும் கதைகள்,
சில சமயங்களில், அவசியம் கருதி, நெருடிப் போவதில் தப்பிருப்பதாகத் தோன்றவில்லை.


இதில் ஸ்நேக் பைட்.. நான் அறிந்திராத ஒன்று...

அப்போ,
மீதமெல்லாம் நன்றாகத் தெரியுமோ மலரின் சகோதரியே... :lachen001:

அந்தப் பாம்புச் சண்டை பற்றி நானும் அறிந்ததில்லை.
சிவா.ஜி கொஞ்சம் விளக்குவீர்களா..?

தீபா
22-08-2008, 02:42 PM
அந்தப் பாம்புச் சண்டை பற்றி நானும் அறிந்ததில்லை.
சிவா.ஜி கொஞ்சம் விளக்குவீர்களா..?

அவர் Snake Fight பற்றி சொல்லவில்லை Snake Bite பற்றிச் சொல்லுகிறார் என்பதுதான் நான் படித்தது.... :)

அன்புரசிகன்
22-08-2008, 02:50 PM
படித்து முடிக்கும் போது நெஞ்சு கனக்கிறது அண்ணா.... உங்களின் திறமைக்கு உள்ள எடுத்துக்காட்டுக்களில் இந்த கதையும் சேர்கிறது.

அக்னி
22-08-2008, 03:00 PM
அவர் Snake Fight பற்றி சொல்லவில்லை Snake Bite பற்றிச் சொல்லுகிறார் என்பதுதான் நான் படித்தது.... :)
அதுதான் கூகிளாண்டவர் கூட எனக்கு உதவவில்லையோ...
(உதவியிருந்தாலும் வாசிச்சு புரிஞ்சுட்டாலும் என்று யாரு சவுண்டு குடுக்கிறது...)

இப்படியான விடயங்களில் சிவா.ஜி கற்பனையாக இதுவரை தந்ததில்லை.
அதனாற்தான் அவரிடம் விளக்கச் சொல்லிக் கேட்டேன்.

இனியும் விளக்கம் தந்தாலே, தெளிவாகும்.

நீங்கச் சொல்லுறீங்களா... நீங்கச் சொல்லுறீங்களா... சிவா.ஜி நீங்களாச்சும் சொல்லுறீங்களா...
(என்னை இங்கிருந்து நீங்கச் சொல்லிடாதீங்க...)

Keelai Naadaan
22-08-2008, 03:40 PM
நல்ல விறுவிறுப்பான கதை. எந்த மாதிரியான சூழ்நிலையிலும் நிதானமாய் செயல்பட வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தும் கதை.

ஆதி
22-08-2008, 03:47 PM
.

நீங்கச சொல்லுறீங்களா... நீங்க சொல்லுறீங்களா... சிவா.ஜி நீங்களாச்சும் சொல்லுறீங்களா...
(என்னை இங்கிருந்து நீங்கச் சொல்லிடாதீங்க...)

அக்னி snake bite என்பது போதை உண்டாக்க கூடிய வழி முறை.. இந்த பழக்கம் எகிப்த்தியர்களிடம் இருந்ததாக வரலாறுகள் கூறுகின்றன.. அபின், கஞ்சா, மது இவையெல்லாம் போதைதராத நிலையில் மனிதர்கள் இந்த வகை போதையை நாடி போகிறார்கள்.. அதாவது போதை பழக்கத்துக்கு அடிமையாகி இந்த வகை போதை வஸ்துக்களால் போதைதர இயலாது என்கிற நிலைக்கு மூளை மழுங்கலாகும் போது இவ்வாறான பழக்கத்து மக்கள் போகிறார்கள்.. நாக்கில் பாம்பு கடிப்பதால் போதை உடனடியாக மூலைக்கு ஏறும் அதன் வீரியமும் அதிகமாக இருக்கும்..

சிவா.ஜி
22-08-2008, 04:09 PM
கதை சொல்லவந்த கருத்தை சரியாகப் புரிந்துகொண்ட உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி கீழைநாடன் அவர்களே.

சிவா.ஜி
22-08-2008, 04:09 PM
அக்னியின் கேள்விக்கு ஆதியின் சரியான பதில். சின்ன விளக்கம். நான் மும்பையில் இருந்தபோது எங்கள் குடியிருப்பில் இளைஞர்கள் மத்தியில் போதைப் பழக்கம் தலைவிரித்தாடியது. எங்கள் இளைஞர் அமைப்பின் மூலம் அதனை எதிர்த்து நிறைய வேலைகள் செய்தோம். அந்த சமயத்தில் பார்த்தறிந்த சில போதைப்பழக்கங்களில் இதுவும் ஒன்று. இரவு விடுதிகளுக்குப் போவதற்கு முன், இந்த பாம்புக்கடியை ஏற்றிக்கொண்டு போகும் பழக்கம் உயர்தர குடும்பத்து வாலிபர்களிடம் இருந்தது. சயான் என்ற இடத்தில்தான் அந்தக் கடை இருந்தது. இரவுமுழுதும் கடுமையான ஆட்டத்தில் களைப்பு தெரியாமலும், மிதக்கும் உணர்வை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளவும் வாலிபர்கள் இந்த உச்சகட்ட போதையை ஏற்றிக்கொள்வார்கள்.

அது ஒரு பிரத்தியேகமான பாம்பு. தாழம்பூவில் இருக்கும் குட்டியான பூநாகம் போல இருக்கும். வெளிநாட்டிலிருந்து தருவிப்பார்கள். அது சிறிய அளவில் இருக்கும்வரைதான் அதன் விஷம் போதை...பெரிதானால்....மரணம். கொஞ்ச காலத்துக்குத்தான் அதனை பயன்படுத்துவார்கள். ஆனால் இந்தக் கடிபோதையைப் பயன்படுத்துபவர்கள் கொஞ்ச காலம்தான் உயிரோடு இருப்பார்கள்.

சிவா.ஜி
22-08-2008, 04:17 PM
அமரன், பூமகள் இருவரின் ஆதங்கமும் சரியானதுதான். நன்பன்தான்...ஆனாலும் முற்றிலும் தாதாவாகிவிட்டவன். அதுமட்டுமல்ல, மிக நல்ல ஒரு வேலை கிடைக்கும் நேரத்தில், அது ஒரு காரணத்தால் தடைபடுவதை ஏற்றுக்கொள்ளமுடியாத ஒரு பதட்டம், இழந்துவிடுவோமோ.... என்ற பயம், அந்த நேரத்தில் மணியை நாடவைத்தது. மேலும், எல்லா நன்பர்களுமே சினிமாவில் வரும் நன்பர்கள் போல இல்லை. நிறையபேர் திருத்த முற்படமாட்டார்கள், எதார்த்தத்தை அப்படியே ஏற்றுக்கொள்வார்கள்.

அதேபோல பூ, சில கதைகளுக்கு அதன் களத்தைக் காண்பிக்க உண்மையை சொல்ல வேண்டியிருக்கிறது. அதனால்தான் இந்த பியர், ஸ்நேக்பைட் எல்லாம். மிக அருமையான பின்னூட்டங்களுக்கு நன்றி பூமகள் மற்றும் அமரன்.

சிவா.ஜி
22-08-2008, 04:18 PM
மிக்க நன்றி அன்பு. எப்போதும்போல உங்கள் பின்னூட்டம் உற்சாகத்தை தருகிறது.

சிவா.ஜி
22-08-2008, 04:20 PM
இனிய நண்பர் சிவா.ஜி அவர்களுக்கு,
மணி என்றொரு நண்பன் கதையில் தெளிந்த நீரோடையைப்போல யதார்த்தம் மிகவும் தாராளமாகவே வழிந்தோடியது. . சமுதாய அவலங்களை படம் பிடித்திருந்தது. கதையின் போக்கு யதார்த்த நடையில் இருந்ததால் பாராட்டுக்கள்

உங்களைப்போன்ற மிக நல்ல கதாசிரியரின் பாராட்டைப் பெறுவது, மனதுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. மனமார்ந்த நன்றி பால் ராசய்யா அவர்களே.

பூமகள்
22-08-2008, 05:54 PM
வருடிப் போகும் கதைகள்,
சில சமயங்களில், அவசியம் கருதி, நெருடிப் போவதில் தப்பிருப்பதாகத் தோன்றவில்லை.
புரிகிறது அக்னி ஐயா புரியாமல் சொல்லவில்லை நான்.. :icon_ush::rolleyes:
.
என்னைப் போல் பலருக்கும் புரியாதவை தெரிந்ததே.. என்ற அச்சம் கலந்த கவலையே நெருடலுக்கு காரணம்..:icon_ush::confused:

அப்போ,
மீதமெல்லாம் நன்றாகத் தெரியுமோ மலரின் சகோதரியே... :lachen001: என்னைப் போயி...... என்னைப் போயி...............

இப்படி கேட்க எப்படி மனசு வந்ததுனா??? ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........................... :traurig001::traurig001:

அந்தப் பாம்புச் சண்டை பற்றி நானும் அறிந்ததில்லை.
சிவா.ஜி கொஞ்சம் விளக்குவீர்களா..?ஹீ ஹீ... :D:D

அக்னி அண்ணா போற ட்ராக் புரிஞ்சிருச்சே.... :rolleyes: :p:aetsch013::cool:
சிவா அண்ணா... ரெடி ஸ்டார்ட் ம்யூசிக்......:icon_rollout:

பூ ஜூட்..!! :p:cool: :lachen001::lachen001: