PDA

View Full Version : பாசக்காரர் (குட்டிக்கதை-2)ஐரேனிபுரம் பால்ராசய்யா
20-08-2008, 09:54 AM
“வர்ற ஆவணி மாதம் பத்தாம் தேதி புதன்கிழமை நாள் நல்லாயிருக்கு, அன்ணைக்கு கல்யாணத்த வெச்சுக்கோங்க ரொம்ப சிறப்பா இருக்கும்" தனது மகளின் திருமண தினத்தை புரோகிதர் பஞ்சாங்கம் பார்த்து சொன்னபோது தேவராஜ்க்கு அது பிடிக்காமல் போனது.

“புரோகிதரே அதே மாசத்துல ஞாயிற்றுக்கிழமை நாள் குறிச்சு குடுத்திடுங்க" என்றார் தேவராஜ்.

"ஞாயிற்றுக்கிழமை நாள் நல்லா இல்ல சார்" புரோகிதர் அங்கலாப்புடனே சொன்னார்.

"பரவாயில்ல அந்த நாளே இருக்கட்டும்" என்றபோது புரோகிதர் மறுபேச்சின்றி அந்த நாளையே குறித்து கொடுத்தார்.

" அப்பா சிற்றியிலெயெ பெரிய மண்டபத்த புக் பண்ணிடவா" என்று கேட்ட தனது மகனிடம் " நம்ம ஊருல இருக்கிற சாதாரண மண்டபமே போதும்" என்றார்.

“என்னப்பா நீங்க நல்ல நாள், நல்ல மண்டபம் எதுவும் வேண்டாங்கறீங்க ஏன்? என்ற தனது சந்தேகத்தை மெல்ல கேட்டான் அவரது மகன்.

"கல்யாண நாள் ஒரு ஞாயிற்றுக்கிழமையா இருந்தா பள்ளிகூடம் போறவங்க, வேலைக்கு போறவங்க எல்லாரும் கல்யாணத்துக்கு வந்து வயிறார சாப்பிட்டுட்டு
வாழ்த்தியிட்டு போவாங்க, ஐந்து கிலோமீட்டர் தூரத்துல இருக்கிற சிற்றியில மண்டபம் புக் பண்ணினா பஸ் ஏறி வர்றதுக்கு சிரமப்பட்டு பாதி பேர் வராம போயிடுவாங்க" என்றபோது தனது தந்தை ஒரு பாசக்காரர் என்பதை புரிந்து கொண்டான் அவரது மகன்.

தீபா
20-08-2008, 10:24 AM
பாசக்காரர் என்பதை இந்த நிகழ்வில்தான் மகன் புரிகிறானோ???

சிற்றி? சிட்டி? ஒண்ணும் புரியலைங்க.

ஐரேனிபுரம் பால்ராசய்யா
20-08-2008, 02:02 PM
இனிய தென்றலின் இதயம் நோக்கி,
சிற்றி என்பது city தான் அதை தமிழில் நகரத்தில் அல்லது பட்டணத்தில் என்று எழுதியிருக்க வேண்டும் ஆங்கிலம் கலப்பதை தவிர்க்க முயற்சி செய்கிறேன்.

Keelai Naadaan
20-08-2008, 03:09 PM
பத்து வரியிலேயே சொல்ல நினைப்பதை அருமையாய் சொல்கிறீர்கள். பாராட்டுக்கள்.

அப்பா பாசக்காரர் தான். ஆனால் அவருடைய நல்ல மனதுக்கு, புரோகிதரை நாள் குறித்து தர கேட்டிருக்க வேண்டியதில்லையே.
அவராகவே முடிவெடுத்திருக்கலாமே எனத்தோன்றுகிறது.

அன்புரசிகன்
20-08-2008, 03:18 PM
இறுதிவரிகள் நன்றாக உள்ளன. நண்பர்கள் சொல்வது போல் ஏன் புரோகிதரை அழைக்கவேண்டும்? மகன் தந்தையை அறிய இந்த சடங்கு தான் தேவைப்பட்டதா???

சொல்லவந்த விடையம் சரி. வந்த விதம் சற்று .....................

arun
20-08-2008, 07:21 PM
பத்து வரியில் ஒரு நல்ல குட்டி கதை
மகனுக்கு அப்பாவை பற்றி கொஞ்சம் லேட்டாக தான் புரிந்து இருக்கிறது

அமரன்
20-08-2008, 10:55 PM
"நல்ல"வுக்கு வலிமை சேர்க்க தேவை இல்லாமல் புரோகிதர் அழைக்கப்பட்டுள்ளார். புரோகிதரை அழைக்க மகன் விரும்பும் போதே இல்லை அப்பா முட்டுக்கட்டை போட்டிருந்தால் கதையும் வலிமை பெற்றிருக்கும். பெரிய விசயங்களை சிறிய விடைகளில் சொல்வது உங்களுக்கு நன்றாக வருகிறது. .

meera
21-08-2008, 03:50 AM
சின்ன வரிகள், ஆழமான கரு.

சில குறைகள் சில இடங்களில். அதை நம் மன்ற மக்கள் சரியாகவே சுட்டிவிட்டார்கள்.

தொய்வின்றி தொடர வாழ்த்துக்கள்.

அக்னி
29-08-2008, 03:31 AM
மற்றவர்களின் திருப்தியும், நிறைந்த வாழ்த்துகளுமே,
நிறைவான வாழ்வைத் தரவல்லவை என்பதை உணர்த்தும் கதை...

எம் வசதியைக் காட்டுவதிலும், மற்றவர் வசதிக்காக என்று நோக்குதல் சிறந்ததே.
ஆனாலும் நமது சமூகம் இதனை அங்கீகரித்துக் கொள்ளுமா?

புலம் பெயர்ந்து வாழும் நம்மவரிடையே,
தவிர்க்க முடியாமையால்,
விழாக்கள், வார இறுதி நாட்களில் கொண்டாடப்படுவது,
பெரும்பாலும் நடைமுறையில் வந்துவிட்டது...

பாராட்டுக்கள் ஐ பா ரா அவர்களே...

இளசு
30-08-2008, 08:28 AM
எல்லாரும் வரணும், சிரமிமின்றி வரணும் -
இந்தக் கூட்டல் மனம் கொண்ட நல்லவரைச் சொன்ன கதை!

பாராட்டுகள் பால்ராசய்யா அவர்களே!