PDA

View Full Version : ஒரு காதல் நடக்கிறது (நண்பனின் LOVE)Nanban
01-08-2003, 06:42 AM
ஒரு காதல் நடக்கிறது......

கூடு திரும்பும்
அவசரப் பறவைகள்
இறக்கை மறந்து
விமானத்திற்குக்
காத்திருக்கும்.....

வண்டிகளின்
வரவு பார்த்து
ஆயாசத்துடன்
தவம் செய்கின்றனர்
சாலைகளில் -
கால்களை
மறந்த மனிதர்கள்....

வண்டிகள் வராதா என்று
சலிப்புடன் நிற்பவர்கள்
மத்தியில்,
வந்த வண்டியையும்
விட்டு விட்டு
காதல் வளர்த்து
நடந்தோம்.

குமரி செல்லும்
தேசீய சாலையில்
வாகனங்களின்
இரைச்சலும், புகைச்சலும்
கேடயமாகியது -
நம்
கொஞ்சும் மொழிகளுக்கும்,
தோள் மீது வீழ்ந்த கைகளுக்கும்.

உடைத்துப் பிளந்து,
நீரூற்றி, சேறாக்கி,
விதைத்து, முளைக்காமால்,
என் புன்னகைப் பூக்கள்
செழித்து வளர்ந்தது -
உன் நெருக்கம்
என் மீது வீசிய
ஈரநெருப்பு மூச்சால்.

அமர்ந்து பேச இடமில்லாத
கள்ளிக் காட்டில்
ஒரு பெண்ணின் காதல்
ஜெயித்தது -
சிசுவாக மரணிக்காமால்...

குடை ராட்டினமாய்
சுழன்று திரும்பிய
வாழ்க்கையில்
பழைய பாதைகள்
மீண்டும் கால்களுக்குக் கீழே...

மனிதர்கள் தவமியற்றா
சாலைகளில்,
இரண்டு, மூன்று, நான்கென
சக்கரங்கள் கூடிப்போன
சாலைகளில்,
அன்று புசித்த மெழிகளின்
மௌன எச்சத்தை
நுகர்ந்து கொண்டே
நடக்கிறேன் -
கையில் ஒரு ஊன்றுகோலுடன்....

poo
01-08-2003, 06:53 AM
உணர்வுகளை அசைபோட்டபடி நடந்து செல்லும் காதலை...

நண்பனுக்கு பாராட்டுக்கள்!

gankrish
01-08-2003, 10:59 AM
நண்பா கவிதை அருமை. அனுபவித்து எழுதியுள்ளீர்.

Nanban
01-08-2003, 01:52 PM
மிக்க நன்றிகள்....
காதல் காலங்கள் கடந்தாலும்
காதல் உணர்வுகள் கடந்து போவதில்லை...
அசை போட்டுக் கொண்டே
நடக்க வேண்டியது தான்.....

இ.இசாக்
01-08-2003, 03:31 PM
காதல் மனித மீட்சிக்கான ஊற்று
அதற்கு ஊன்றுகோல் வயது பிரட்சினையல்ல
என்பதை சிறப்பாக சொன்ன நண்பன் அவர்களுக்கு
வாழ்த்துக்கள்.

இளசு
01-08-2003, 11:51 PM
வண்டியை தவறவிட்டு
காதல் வளர நடந்த காலங்கள்...

கல்வெட்டுக் கோலங்கள்..

நண்பனின் கவிதைக்கு
நெகிழ்ச்சியான பாராட்டு!

Nanban
02-08-2003, 11:04 AM
அன்பு நண்பர் இளசுவிற்கு,

இந்த மன்ற ஆரம்ப காலத்தில் எழுதப் பட்ட கவிதை ஒன்று - நடராசன் நடக்கிறான் - என்ற கவிதையின் பாதிப்பு தான் இது. எளியவனாகத் தொடங்கி, வலியவனாக வளர்ந்து, பின்னர் தேய்ந்து தன்னைக் காத்துக் கொள்ள ஏக்கமும், மூச்சும் வாங்கிக் கொண்டு, ஓட்டமும், நடையுமாக நடராசன் கடற்கரைச் சாலையில் செல்வதைப் படித்த பொழுது, அவன் மனதில் எதை நினைத்துக் கொண்டு நடப்பான் என்று தோன்றிய கற்பனை தான் இது. என்ன நினைப்பான்? - ஷேர் மார்க்கெட், தலைநகரத்தில் நிகழும் அரசியல் சதிகள், மும்பையில் (அல்லது தேசத்தின் ஒரு மூலையில்) வெடிக்கப் போகும் குண்டுகளைப் பற்றி, தன்னைப் போல வயதான கிழம் தட்டிய சினிமா ஹீரோக்கள் எல்லாம் எப்படி சின்னச் சின்ன புள்ளைகளை வளைத்துப் பிடித்து விடுகின்றனர்... இப்படியெல்லாம் நினைவுகள் அலை மோதி பின்னர் இறுதியாக, ஆறுதலாக, தன்னையும் ஒரு ஹீரோவாக சில காலம் - வாழ்வின் அதி முக்கிய காலத்தில் - உலாவ விட்ட தன் அன்புக் காதலியைத் தான் பலரும் நினைக்கின்றனர்.......

சில பாதிப்புகள் உடனே படைப்புகளாக மாறி விடுகின்றன, சிலதிற்கு சில காலம் பிடிக்கின்றது....

நன்றி நண்பரே.....

இளசு
04-09-2003, 12:45 AM
அன்பு நண்பர் இளசுவிற்கு,

இந்த மன்ற ஆரம்ப காலத்தில் எழுதப் பட்ட கவிதை ஒன்று - நடராசன் நடக்கிறான் - என்ற கவிதையின் பாதிப்பு தான் இது.
சில பாதிப்புகள் உடனே படைப்புகளாக மாறி விடுகின்றன, சிலதிற்கு சில காலம் பிடிக்கின்றது....

...

அன்புள்ள நண்பனுக்கு,
நானும் கவிஞனென்று எண்ணி இருந்த காலம் ஒன்றுண்டு...
இளங்கன்று பயமறியாது என்பதைப்போல...
:)
உண்மையான கவிஞர்கள் இங்கே உலவக்கண்டு
என் வேடம் கலைந்தது கண்கூடு.!

சொந்தக் கருத்து, கற்பனை எனக்கில்லை.
இந்த நடராசன் என்றோ நான் படித்த கருத்து.
சொல்லடுக்கி தந்தது மட்டுமே என் வேலை..

உங்களையும் என்னையும் பாதித்த
அந்த ஆதிப்படைப்பாளிக்கு நன்றி!

சேரன்கயல்
04-09-2003, 05:12 AM
வாழ்க்கையின் ஓட்டத்தில் இயைந்து ஓடி அல்லது இயந்திரமாய் ஓடி,
மூச்சுவிடும் இடைவெளிகளில் ஒளிர்ந்து மறையும் மின்னல்கள்...ஓய்வுக்காய் தலைசாய்க்கும்போது ஓங்கி அழுகின்றன ஊமையினைப் போல்...மின்னல் வந்து போன காலம் கடந்து இடியாக மனதிற்குள் பல எண்ணப் போராட்டங்கள்...வறண்டுபோன ஆசைகளும் உணர்வின் வீச்சுகளும் முடமாகிப் போகும்போது ஊன்றுகோள்களும் இந்த நினைவுகள்தான்...
சுயம் விழித்த இரவுகளில் மனம் வெதும்பி மௌனத்தை கத்திக்கொண்டிருந்த எனது வாயடைத்த ஆன்மாவை உங்கள் கவிதை படம் பிடித்தது போன்று உணர்ந்தேன்...
நன்றி நண்பா நண்பன்...பாராட்டுக்கள்...

karavai paranee
04-09-2003, 01:32 PM
வாழ்த்துக்கள்
அன்று புசித்த மொழிகளின்
மெளன எச்சத்தை
எமக்கும் நுகரவைத்துவிட்டீர்கள்
நன்றி

இக்பால்
05-09-2003, 01:26 PM
காதல் நடக்கிறது...
ஆமாம் ...
ஊன்றுகோல் ஊன்றி நடக்கிறது.
ஊன்றுகோல் கொடுக்கும்
கூடுமான தைரியத்தில்...
ஊக்கமாகவே நடக்கிறது.
கவிதை அருமை.
அதற்குப் பிறகு உள்ள உரையாடலில்...
ஊன்றுகோலின் உபயோகத்தைக் காண்கிறேன்.
-அன்புடன் இக்பால்.

Nanban
06-09-2003, 10:56 AM
ஊன்றுகோல் காதலுக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று அறியும் பொழுது, மனம் நிறைவாக இருக்கிறது....

sri
07-09-2003, 02:11 AM
புரியிறது போலவும் இருக்கு, புரியாதது போலவும் இருக்கு
மொத்தத்தில நல்லா இருக்கு

இக்பால்
07-09-2003, 03:06 PM
அதற்குத்தானே ரசிகர்கள் அதிகம்...-அன்புடன் அண்ணா.

இ.இசாக்
07-09-2003, 04:51 PM
அன்புள்ள நண்பனுக்கு,
நானும் கவிஞனென்று எண்ணி இருந்த காலம் ஒன்றுண்டு...
இளங்கன்று பயமறியாது என்பதைப்போல...
:)
உண்மையான கவிஞர்கள் இங்கே உலவக்கண்டு
என் வேடம் கலைந்தது கண்கூடு.!


அண்ணனே வேடம் கலைந்தது என்று சொன்னால் இந்த சின்னவனின் நிலை என்னவோ
காலம் தான் பதில் சொல்லவேண்டும்

nalayiny
08-09-2003, 07:03 AM
ஒவ்வொருவருடத்திலும் ஒவ்வொரு வகையான மொழிக்கையாளல் நளினம் தம்பால் ஈர்க்கும் தன்மை கவிதையோடு ஒன்றி வாசகனையும் தம்மூடு அழைத்துப் போகும் தன்மை இப்படியாக ஒவ்வொருவாடமும் வித்தியாசமான தன்மைகள் இருக்கிறது. அதற்காக யாரும் தங்களை குறைத்துக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை.உங்கள் கவிக்குழந்தைகள் கோவித்துக்கொள்ள போகிறார்கள்.

இத்தகையதொரு காதல் கவிதையை இதுவரை நான் வாசித்தது கிடையாது.

இவை என்னை மிகவும் கவர்ந்த வரிகள். வித்தியாசமான சிந்தனை வரவு.

உடைத்துப் பிளந்து,
நீரூற்றி, சேறாக்கி,
விதைத்து, முளைக்காமால்,
என் புன்னகைப் பூக்கள்
செழித்து வளர்ந்தது -
உன் நெருக்கம்
என் மீது வீசிய
ஈரநெருப்பு மூச்சால்.

அமர்ந்து பேச இடமில்லாத
கள்ளிக் காட்டில்
ஒரு பெண்ணின் காதல்
ஜெயித்தது -
சிசுவாக மரணிக்காமால்...

Mr.பிரியசகி
13-09-2003, 10:01 PM
நண்பரே.... உங்கள் கவிதைகளில் என் மனம் கவர்ந்த வரிகள்

அமர்ந்து பேச இடமில்லாத
கள்ளிக் காட்டில்
ஒரு பெண்ணின் காதல்
ஜெயித்தது -
சிசுவாக மரணிக்காமால்

உங்கள் கவிதைக்கு இந்த சிறியவனின் பாராட்டுகள்...

நன்றி

balakmu
13-09-2003, 11:28 PM
அன்பு நண்பரே!!

காலங்கள் மாறலாம்
வாலிபங்கள் போகலாம்
வயதும் கூடலாம் ஆனால்
அழியாதது காதல்!!

தலைப்பு மட்டும் ஏன் ஆங்கிலத்தில்???

- அன்புடன் பாலா -

balakmu
13-09-2003, 11:32 PM
வேகமானவர் என்ற பட்டத்திற்கு நன்றி!!!

வேகத்தோடு விவேகமும்
வேண்டுமென்று விரும்புகின்றேன்

- அன்புடன் பாலா -

gans5001
15-09-2003, 09:55 AM
வண்டிகள் வராதா என்று
சலிப்புடன் நிற்பவர்கள்
மத்தியில்,
வந்த வண்டியையும்
விட்டு விட்டு
காதல் வளர்த்து
நடந்தோம்.

இப்படிப்பட்ட இனிய கணங்கள்தான் கவிதையாய் காதலை இன்னமும் வாழ வைத்துக்கொண்டிருக்கிறது

Nanban
15-09-2003, 11:03 AM
அன்பு நண்பரே!!

காலங்கள் மாறலாம்
வாலிபங்கள் போகலாம்
வயதும் கூடலாம் ஆனால்
அழியாதது காதல்!!

தலைப்பு மட்டும் ஏன் ஆங்கிலத்தில்???

- அன்புடன் பாலா -

எழுத்துரு பிரச்னை தான். சில சமயங்களில் F12 Key வேலை செய்வதில்லை. அந்தக் கவிதை எழுதிய சமயத்தில் வெளியில் எழுதி வெட்டி ஒட்டினாலும், தலைப்புப் பெட்டி ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டதால், வேறு வழி இல்லாமல், ஆங்கிலத்தில் தலைப்பிட்டு சமர்ப்பணம் செய்ய வேண்டியதாயிற்று. இன்னும் கூட F12 key வேலை செய்வதில்லை. ஒவ்வொரு முறையும் முரசு எடிட்டரில் அச்சாக்கி பின்னர் வெட்டி ஒட்டும் வேலையைத் தான் செய்கிறேன். அதுவும் கூட சில சமயங்களில் கருத்து தெரிவிப்பதற்கு தாமதமாகிவிடுகிறது...

இளசு
15-09-2003, 11:04 PM
தமிழில் நீங்கள் தந்த தலைப்பை தந்துவிட்டேன் நண்பன் அவர்களே..
(அடையாளம் தெரிய அடைப்புக்குள் பழைய தலைப்பும் இருக்கிறது.
கொஞ்ச காலம் போனபின் அதை நீக்கிவிடுகிறேன்.)

இதுபோல் மீண்டும் பிரச்னை வந்தால் உடனே சொல்லுங்கள்.
நீங்கள் சொல்லும்விதம் மாற்றி உதவுகிறேன். நன்றி.

Nanban
16-09-2003, 06:31 AM
மிக்க நன்றி. F12 keyம் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டதே!

இக்பால்
16-09-2003, 07:11 AM
இளசு அண்ணா...
எனக்கு ஒரு பிரச்னை. இங்கே QUICK REPLY-ல் 'ன்' வேலை செய்கிறது.
ஆனால் முரசு எடிட்டரில் வேலை செய்ய மாட்டேன் என்கிறது.

நண்பர் நண்பனுக்கு F12 KEY வேலை செய்வதால் சந்தோசத்தைப்
பாருங்கள்.

-அன்புடன் தம்பி இக்பால்.