PDA

View Full Version : நடு நிலைக்காதல்



ஆதி
18-08-2008, 01:00 PM
மாதமெலாம்
முதல் தேதியைத்
மூச்சிறைக்க துரத்தியோடும்
நடுத்தர வர்க்கத்தின் நம்பிக்கைகள்
நாமிருவரும்..

ஆண்டாண்டுக்கு முன்
ஏழரை மணி பேரூந்தில்
ஆரம்பித்த நம் காதல்
இன்னும் கடைசி
இருக்கை காதலாகவே உள்ளது..

வண்ணப்புடவை அணிந்த
வெள்ளைப் பட்டாம் பூச்சியாய்
அருகு வந்தமர்ந்து
என் மனசுக்குள் பறப்பாய்
ஒவ்வொரு காலையும்..

கடல் தரித்த கரையில்
மணல் வருத்த கடலையை
கொறித்தவாறு
சிரித்து பேசி
சிறிது சிந்தி
சிறிது வாழ்ந்து
சிறிது நொந்து
மேலுமொரு பிரிவை நோக்கி
முற்றும் நம் சந்திப்புகள்..

அடிப்படை அவசியங்களின்
அடைப்பு குறியில்
அடங்கி முடிந்துவிடும்
நமதாசைகள்..

சிகையாழியின்
மிதம்மீறிய நரை வெம்மையில்
தட்பமிழக்கிறது
தம்பதிகளாகும் கனவுகளும்..

பாக்கிகளின் நிழல் விழுந்து
கருப்புற்றிருக்கும் பொருள் நிலா
ஊதிய ஏற்றத்திலும்
போதிய வெளிச்சம் பெறாமல்
தார்க் காகிதமாகிறது
தாறுமாறான விலை நீட்சியால்..

poornima
18-08-2008, 01:37 PM
அடடே மத்யமர் குடும்ப காதல் கதையா இது.. பாராட்டுக்கள்...

விடியாமலே நீள்கின்றன கல்யாணக் கனவுகள் இல்லையா..?

//ஏழரை மணி பேரூந்தில்
ஆரம்பித்த நம் காதல்//
இன்னும் ஏழரையாகவே இருப்பதுதான் வருத்தற்குரியது.

//பாக்கிகளின் நிழல் விழுந்து
கருப்புற்றிருக்கும் கல்யாண நிலா
ஊதிய ஏற்றத்திலும்
போதிய வெளிச்சம் பெறாமல்
அஞ்சனச் சிமிழாகிறது
அத்யாவசிய பொருட்களின் விலை நீட்சியால்..//

உவமைகளும் - உவமானங்களும் வெகு ஜோர் ஆதி அவர்களே..

தீபா
18-08-2008, 01:40 PM
நல்லா இருக்குங்க.

ஆதி
18-08-2008, 05:13 PM
நன்றி பூர்ணிமா, நன்றி தென்றல்..

கவிதை இன்னும் கொஞ்சம் மாற்றியிருக்கிறேன்.. நேரமிருந்தால் படித்துப்பார்க்கவும்..

இளசு
18-08-2008, 05:21 PM
ஒரு கையாலாகத்தன நோய் பீடித்த
நாள்பட்ட ஜோடியை
அச்சாக கண்முன் நிறுத்திய கவிதை!

பொருளாதாரத்திலே பொருள்தானா தாரமின்று?

கேள்வி கேட்ட காலத்தைவிட
இப்போது இன்னும் பணவீக்கம்,
இன்னும் விலகிவிட்ட கானல்நீர் தொலைவுகள்..

நரை வெம்மை உறிஞ்சிய கனவுக்குளிர்ச்சி..

அழகான சொல்லாடல்கள் ஆதி! பாராட்டுகள்!

பூர்ணிமாவின் விமர்சனம் சுஜாதா முத்திரைகளுடன் ஜொலிக்கிறது!

ஆதி
18-08-2008, 05:41 PM
நரை வெம்மை உறிஞ்சிய கனவுக்குளிர்ச்சி..

அழகான சொல்லாடல்கள் ஆதி! பாராட்டுகள்!

பூர்ணிமாவின் விமர்சனம் சுஜாதா முத்திரைகளுடன் ஜொலிக்கிறது!


இந்த வரிகளை படித்த பல நண்பர்கள் புரியவில்லை என்றார்கள்.. நீங்கள் அழகாக பொருளோடு சுருக்கி பொழிவுற செய்துவிட்டீர்கள் நன்றி அண்ணா..

பின்னுட்டத்திற்கும் பாராட்டிற்கும் மீண்டும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்..

யவனிகா
18-08-2008, 05:44 PM
இளசு அண்ணா எனக்கு முந்தியே பின்னூட்டம் போட்டாச்சு...நான் சொல்ல வந்ததை...

அக்காக்கு மிச்சம் என்ன இருக்கு...

பாராட்டுகள் மட்டுமே...வாழ்த்துக்கள் ஆதி.

அறிஞர்
18-08-2008, 10:35 PM
வாழ்த்துக்கள் ஆதி...

நடுத்தர வர்க்கத்தின் பாடுகளில் இதுவும் ஒன்றாகி போனது...

அமரன்
19-08-2008, 06:23 PM
ஆதியின் கவிதைகள் என்றாலே சொல்வளமையும் கருவலிமையும் நிச்சயம் என்பது மன்றப் பிரசித்தம்.

ஆண்டாண்டு காலமாக இடரும் இது போன்ற விசயங்கள் இருக்கும் வரை இந்த மாதிரிக் கவிதைகளும் வந்து கொண்டே இருக்கும். வாசகன் மனங்களை ஆண்டுகொண்டே இருக்கும்.

அழகிய ஒப்புமைகளை சிலாகிப்பதா? அழுத்தும் மூட்டையை விலாவரிப்பதா? என்ற எனக்குள் இருக்கும் குழப்பம் ஆதிக்கு பரிசு.. வாழ்த்து.. பாராட்டு எல்லாமே..



பாக்கிகளின் நிழல் விழுந்து
கருப்புற்றிருக்கும் பொருள் நிலா
ஊதிய ஏற்றத்திலும்
போதிய வெளிச்சம் பெறாமல்
தார்க் காகிதமாகிறது
தாறுமாறான விலை நீட்சியால்..


அந்தப்பக்கமாய் வெளிச்சம்
என்ற நம்பிக்கையில்தான்
தலைமுறைகள் தாண்டியும்
உயிர்ர்புடன் உள்ளது
இவ்வகை வாழ்க்கை.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
19-08-2008, 07:12 PM
எனக்குத் தெரிந்த வரை ஏழ்மைக் காதலை இவ்வளவு உசத்தியாய் யாரும் வரைந்ததில்லை. கவிதை அருமை. பாராட்டுக்கள்.

அக்னி
20-08-2008, 02:22 PM
ஒரு காலைப் பேரூந்தின்
வியர்வை வாசத்தில்
வளர்ந்த காதல்...

ஒரு கடலைச் சுருளுக்குள்
தினம் விருந்துண்டு
மகிழ்ந்த காதல்...

அந்தக் கடலோரத்தில்,
கால்கள் அழுத்திய
மணலில் கசிந்த ஈரம்..,
இந்தக் காலவோட்டத்தில்
நசிக்கப்படும் மனங்களிலும்...

கசியும் கண்ணீரையும்
ஒட்டிய மணலையும்
தட்டிவிட மட்டுமே முடிகிறது...

பாராட்டுக்கள் ஆதி...
அழகுப் பின்னூட்டங்கள் தந்தவர்களுக்கும் பாராட்டுக்கள்...

ஷீ-நிசி
20-08-2008, 02:30 PM
சிகையாழியின்
மிதம்மீறிய நரை வெம்மையில்
தட்பமிழக்கிறது
தம்பதிகளாகும் கனவுகளும்..

என்ன வரிகள்!! ஆச்சரியமாக உள்ளது! வாழ்த்துக்கள்!

arun
20-08-2008, 06:46 PM
நடுநிலைக் காதலை கண்முன் நிறுத்துகிறது தங்களது கவிதை பாராட்டுக்கள்

சுகந்தப்ரீதன்
21-08-2008, 12:51 PM
விலைவாசி ஏற்றம் எப்படியெல்லாம் தனிமனிதனை பாதிக்கிறது என்பதை மிக அழகாக ஒருகாதல் தம்பதிகளை கொண்டு கவிதையில் வடித்தவிதம் அருமை ஆதி..!! வாழ்த்துக்கள்...!!