PDA

View Full Version : மனக் கண்ணாடி..!வசீகரன்
18-08-2008, 08:06 AM
இன்று என் அறை கண்ணாடி என்னை
ரொம்பவே விகாரமாக காட்டியது..!

எவ்வளவுதான் தலையை வாரினாலும்..
முகப்பூச்சு இட்டாலும்...
என்ன செய்தாலும் அதற்க்கு
என்னை பிடிக்கவேஇல்லை
போலும்.. என்னை அழகாகவே காட்டவில்லை..,

நான் என்ன செய்து பார்த்தும்..
அது என்னை அழகாக ஏற்று
கொள்ள மறுத்தது..,

எப்போதும் என்னை
புன்னகையாக பார்த்துசிரிக்கும்
புருவங்களை உயர்த்த வைக்கும்...

என்னுடன் ரொம்ப நேரம்
பேசிக்கொண்டிருக்கும்...
ஆடும்.. பாடும்... சிரிக்கும்...!

ரொம்ப சகஜமாக சந்தோசமாக
அன்றைய தினம் நடந்த
சுவையான நிகழ்வுகளை
நான் சொல்ல மௌனபுன்னகையுடனே
நான் பேசுவதை
கேட்டுக்கொண்டிருக்கும்..!

ஏனோ... இன்று என்னை...
என்னை அதற்க்கு பிடிக்கவில்லை..!

என்னுடன் பேச மறுக்கிறது...
என்னை வேற்று மனிதனை
போல் பாவிக்கிறது...

வெற்று பார்வை பார்க்கிறது...!

எனக்கு கோபம் முற்றுகிறது...
அதை முறைக்கிறேன்..

என்னுடன் அதுவும் போட்டி போடுகிறது...

நான் உஷ்ண மூச்சு
விடுவதாக என்னை அது சித்தரிக்கிறது...

என்னை... என்னை
ரொம்பவே விகாரனாக
பிரதிபலிக்கிறது...!

சீ... போ... என அதை பழித்துவிட்டு

அறையை விட்டு
வெளியேற எத்தனிக்கிறேன்.,

அக்கணம் அறையிலிருந்த
கைபேசி சப்திக்கிறது..!

என் உணர்வுகள் அறுகிறது...
வேக வேகமாக சென்று அதை எடுக்கிறேன்

எதிர்முனையை செவிமடுக்கிறேன்.,

மறுமுனையில்.. நான் கேட்ட செய்தி
எனக்குள்..ஆச்சரிய விதைகளை விதைக்கிறது..,

உணர்வுகள் மாறுகிறது... காட்சிகள் மாறுகிறது..

திடீரென என் மீது எனக்கு ஆசை அதிகரிக்கிறது..,

மெல்ல மனதுக்குள்ளேயே
ஒரு வெற்றி சிரிப்பு
அடக்க நினைத்தும் உதட்டை கிழித்து..
ஓரங்களில்...வெளிப்படுகிறது..,

மிகப்பெரிய வேதியல் மாற்றம்
மனதிற்குள் நிகழ்ந்து
என் உடலை உற்சாகம் கொப்புளிக்க
செய்ய சொல்கிறது...!

நான் அதிக சந்தோஷத்தை
வெளிகொட்ட வேண்டி இருந்தது...
மனம் கடகடத்தது..!.

இனி இந்த அறையில் இருப்பது
சாத்தியமில்லை...
எத்தனித்தேன்...!

விருட்டென்று அறையை விட்டு கடக்கிறேன்..!

வேகமாக வாசற்படியை கடந்த்..!!!

ஏனோ ஒரு நிமிடம்
அப்படியே நின்றேன்.!

விருட்டென திரும்பினேன்
என் அறை கண்ணாடியை
இப்போது பார்த்தேன்..,

அடேயப்பா... எவ்வளவு மகிழ்ச்சி...!
எவ்வளவு ஆர்வம்...
எத்தனை அழகு....
கண்களில் எவ்வளவு வெளிச்சம்...!

இவ்வளவு நேரம் இதை எங்கு வைத்திருந்தது..!

இப்போது என்னை ரொம்பவே
அழகனாக காட்டியது அந்த கண்ணாடி..!

என் அகத்தை காட்டும்
அந்த மாயக் கண்ணாடி..!

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
18-08-2008, 08:45 AM
அட. ரொம்பவே சூப்பருங்க!

சுகந்தப்ரீதன்
18-08-2008, 11:45 AM
ஆமாம்...மாப்ல.. அந்த மாயக்கண்ணாடி யாரு..??
அலைபேசியில உன்னை அழைச்ச என் தங்கச்சிதானே...??

சின்ன விசயத்தைக்கூட கலக்கலா கவிதையில செதுக்குறீங்களே.. எப்படி..??

வசீகரன்
18-08-2008, 11:57 AM
ஆமாம்...மாப்ல.. அந்த மாயக்கண்ணாடி யாரு..??
அலைபேசியில உன்னை அழைச்ச என் தங்கச்சிதானே...??

ஆமாங்க மச்சான்..! எப்படி இம்புட்டு கரீட்டா சொல்லுறீங்க..!

சின்ன விசயத்தைக்கூட கலக்கலா கவிதையில செதுக்குறீங்களே.. எப்படி..??

எல்லாம் உங்கள மாதிரி கவி பேரரசுகள பாத்துதான் மாப்ள..!

poornima
18-08-2008, 01:41 PM
காதலித்துப் பார்
காக்கைக் குருவி கூட
உன்னைக் கவனிக்காது
உலகமே உன்னை உற்றுப்
பார்ப்பதுபோல் திரிவாய்..

காதலித்துப் பார்
உன் பிம்பம் பட்டு
கண்ணாடி சிதறும்
-கவிப்பேரரசின் வரிகள் நினைவாடலில்...

கைப்பேசி அழைப்பில்
கண்ணாடியின் பிம்பம்
மாறிப்போனதில்
அழகாய் தெரிகிறீர்கள்
நீங்களும் உங்கள் காதலும்

பாராட்டுக்கள்..

சிவா.ஜி
18-08-2008, 02:19 PM
அலைபேசி அழைப்பில் அழகனான நாயகன். அலைவழி குரலனுப்பி, அழகூட்டிய தேவதை...அகம் காட்டிய கண்ணாடி....அசத்தலான வரிகள் வசீகரன். மனதை பிரதிபலிப்பதுதானே முகம்? வாழ்த்துகள் வசீ.

ஷீ-நிசி
18-08-2008, 02:39 PM
அதர்க்கு

அதற்கு!


கண்ணாடியில் மாற்றமில்லை... அதே கண்ணாடிதான்....
முகத்திலும் மாற்றமில்லை.. அதே முகம்தான்...

ஆனாலும் சில நேரம் கவலை, சில நேரம் ஆனந்தம் என்று மாறி மாறி பிரதிபலித்துக்கொண்டே இருக்கிறது, அந்த கண்ணாடியும், இந்த முகமும்... இரண்டுக்கும் நடுவே மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் நம் மனம்!

அமரன்
18-08-2008, 03:35 PM
அந்தக் கண்ணாடி
கடைசியில் காட்டியது -
உன் முகமல்ல வசீகரா..
உன்னை
வசீகரித்தவள் முகமடா..

ஒவ்வொரு மனிதனும் கண்ணாடிதானாம். அதை ஆணித்தரமாக்க இன்னொரு ஆதாரம் இந்தக்கவிதை. காதல் நெடுந்தூரப் பயணம் என்பதை சொல்லாமல் சொல்லும் கவிதையும் கூட..

வசீகரன்
19-08-2008, 06:49 AM
கைப்பேசி அழைப்பில்
கண்ணாடியின் பிம்பம்
மாறிப்போனதில்
அழகாய் தெரிகிறீர்கள்
நீங்களும் உங்கள் காதலும்

பாராட்டுக்கள்..

நன்றி மேடம் உங்கள் பின்னூட்டம் ரொம்ப
அழகாக இருக்கிறது...!

வசீகரன்
19-08-2008, 06:53 AM
அசத்தலான வரிகள் வசீகரன். மனதை பிரதிபலிப்பதுதானே முகம்? வாழ்த்துகள் வசீ.

நாம் என்னதான் மறைக்க நினைத்தாலும் அகத்தில் இருப்பது
என்னவென்பதை புறம் காட்டிக்கொடுத்து விடும்..!
அப்படியான ஒரு ஊடகம்தான் கண்ணாடி... இல்லையான்னா..!

வசீகரன்
19-08-2008, 06:55 AM
அதற்கு!


கண்ணாடியில் மாற்றமில்லை... அதே கண்ணாடிதான்....
முகத்திலும் மாற்றமில்லை.. அதே முகம்தான்...

ஆனாலும் சில நேரம் கவலை, சில நேரம் ஆனந்தம் என்று மாறி மாறி பிரதிபலித்துக்கொண்டே இருக்கிறது, அந்த கண்ணாடியும், இந்த முகமும்... இரண்டுக்கும் நடுவே மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் நம் மனம்!

மிகச்சரியாக சொன்னீர்கள் அண்ணா..! எழுத்து பிழையை சுட்டி காட்டியமைக்கு நன்றி,

நாகரா
19-08-2008, 06:57 AM
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்

என்ற திருக்குறளை நினைவுறுத்தும் உம் கவிதை அருமை, வாழ்த்துக்கள் வசீகரன்

வசீகரன்
19-08-2008, 07:01 AM
அந்தக் கண்ணாடி
கடைசியில் காட்டியது -
உன் முகமல்ல வசீகரா..
உன்னை
வசீகரித்தவள் முகமடா..

ஒவ்வொரு மனிதனும் கண்ணாடிதானாம். அதை ஆணித்தரமாக்க இன்னொரு ஆதாரம் இந்தக்கவிதை. காதல் நெடுந்தூரப் பயணம் என்பதை சொல்லாமல் சொல்லும் கவிதையும் கூட..

அப்படியா... இது புதுமையாக இருக்கிறதே...! நானும் இந்த கண்ணோ டத்தில் பார்க்கவில்லையே..
{அமரரின் பொன்னான பின்னூட்டம் காணவே இந்த கவிதையை எழுதினேன் என்பதும் மறுக்கமுடியாத
உண்மை}
மிக்க நன்றிகள் அமரரே..!

poornima
19-08-2008, 07:04 AM
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்

என்ற திருக்குறளை நினைவுறுத்தும் உம் கவிதை அருமை, வாழ்த்துக்கள் வசீகரன்

தொடர்புடைய அழகிய குறளை எடுத்தாண்டமைக்கு நன்றி நாகரா
அவர்களே..

எங்கு எதைப் பற்றி எழுதினாலும் இலக்கியத்தில் எங்கேனும் ஓரிடத்தில்
அது இல்லாமல் இல்லை.

திருக்குறள் காட்டும் கண்ணாடி நவீனம். வசீகரன் காட்டும் கண்ணாடி
பின் நவீனம்..

வசீகரன்
19-08-2008, 07:05 AM
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்

என்ற திருக்குறளை நினைவுறுத்தும் உம் கவிதை அருமை, வாழ்த்துக்கள் வசீகரன்

ஆஹா... இதற்கும் குறள் உள்ளதா...!
மிக்க நன்றி அண்ணா..!

இளசு
25-08-2008, 06:11 AM
எண்ணங்கள் அழகானால்.... ஏனையவும் அழகாகும்.

உங்கள் ஒரு வரிக் கையெழுத்தே இக்கவிதையின் சாரமும்!

வாழ்த்துகள் வசீகரன்..

----------------------------------------------

நாகரா அவர்களின் குறள் - மிகச் சிறப்பான மேற்கோள்.

-------------------------------
ஷீ சொன்ன எழுத்துப்பிழை - அதர்க்கு = அதற்கு இன்னும்
கவிதையில் இருக்கு. சரி செய்ய எடிட்டுங்கள் வசீகரன். நன்றி.