PDA

View Full Version : மதுரகன் காதல் கவிதைகள் 1



மதுரகன்
17-08-2008, 06:42 PM
என்ன செய்யும் என்கண்கள்

உன்கண்கள் காதலை உமிழ்ந்துகொண்டிருந்தன
என்கண்களுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை
காதலை கண்களினால் வெளிப்படுத்தும் ஆற்றலை இன்னமும் நான் பெற்றுக்கொள்ளவில்லை

சன செருக்கடியான புகையிரதங்களில் புதைக்கப்பட்டிருந்த
பொழுதுகளிலும் தனிமையில் உன்னை நோக்கி
நெருங்கிக்கொண்டிருந்தேன்.

சன சந்தடியற்ற வீதிகளிலும் உன்னுடைய ஒவ்வொரு
உணர்வுகளிலும் நான் பரிணமித்துக்கொண்டிருந்தேன்.

கார்த்திகை மாதத்தில் பூத்துக்கொண்ட பூவொன்று மழைக்கால
இரவுப்பொழுதுகளில் விழித்திருப்பதைப் போன்றது
நீ கொண்ட காதல் என்பது எனக்குப்புரியாமல் இல்லை..

எந்த அளவில் இந்த உணர்வுகளைப்பற்றிக்கொள்வது
என்பதில்தான் நான் இன்னமும் முழுமைபெறவி்ல்லை

இன்னமும் உன் கண்களில் காதல் உமிழப்பட்டுக்கொண்டுதான்
இருந்தது..
இன்னும் சில நாட்களில் அதுவும் தோற்றுப்போகக்கூடும்
பலமுறை முழுமை பெறாத கவிதைகளுடன் கிழித்துப்போடப்பட்ட
என்னுடைய காகிதங்கள்போல்..

சில நாட்களில் எதுவேண்டுமானாலும் நிகழலாம்

இன்றுவரை உன்னைக்கடந்து நான் போகும்போது
நான் மென்று விழுங்கும் உமிழ்நீரில் கரைந்துபோகிறது
உன்மீதான எனது காதல்..

என்னசெய்வது வார்த்தைகளைத்தவிர வேறு எந்த
ஊடகத்தாலும் காதலை வெளிப்படுத்தும் ஆற்றல் என்னிடம் வசப்படவில்லை..

நான் உருண்டு கொண்டிருக்கும் புல்வெளிகள் விரைவில் வசந்தகாலத்தை நிறைவு செய்துகொள்ளக்கூடும்

இன்னமும் ஒவ்வொருநாள் காலையிலும்
நான் சுவாசிக்கும் புதிய காற்றில் உன்வாசம் கலந்துதான் இருக்கிறது..

என்ன செய்ய என் கண்களோ தலையணையுறைகளை
நனைப்பதிலும் வேறேதும் புரிவதில்லை..

poornima
18-08-2008, 07:29 AM
//புகையிரதங்களில்// = ?

//என்னசெய்வது வார்த்தைகளைத்தவிர வேறு எந்த
ஊடகத்தாலும் காதலை வெளிப்படுத்தும் ஆற்றல் என்னிடம் வசப்படவில்லை..
//
இவ்வளவு செய்ய வைக்கும் உங்கள் கண்களால் காதலை மட்டும்
வெளிப்ப்படுத்த முடியவில்லையா என்ன..?

கண்ணீரால் தலையணை உறைகளில் எழுதும் கவிதைகளை விட
கண்களால் கொஞ்சம் உங்களை கவர்ந்தவரிடம் பேசியிருக்கலாமோ என்ற
எண்ணம் தோன்றாமலில்லை..

பாராட்டுகள்

சுகந்தப்ரீதன்
18-08-2008, 11:15 AM
இன்றுவரை உன்னைக்கடந்து நான் போகும்போதுநான் மென்று விழுங்கும் உமிழ்நீரில் கரைந்துபோகிறது
உன்மீதான எனது காதல்.... அந்த அவஸ்தையை அழகாகவே சொல்லியிருக்கிறீர்கள்... பாவம் பாவையால் உங்கள் பார்வை படும்பாடு... என்னதான் செய்யும் கண்கள்... ஒன்று நேராய் பார்த்து கண்ணடிக்கும்.. இல்லையேல் கண்ணீர் வடிக்கும்...!! வீரனையும் கோழையாக்குவது பாவையின் பார்வைதானே நண்பரே..!! ஆரம்பமே அருமையாக இருக்கிறது.. தொடருங்கள்..!!

மதுரகன்
18-08-2008, 05:02 PM
நன்றி பூர்ணிமா..
சுகந்தப்ரீதன் உங்களது பின்னூட்டல்கள்தான் எம்மைத்தொடர்ந்து எழுத தூண்டுகின்றன..
மன்றத்தில் எனது ஆரம்பகாலங்களில் தொடர்ந்து கவிதை எழுதிவந்த நான் பின்னூட்டல்கள் குறைவடையும் போதெல்லாம் பதிப்பிடுவதை நிறுத்திக்கொள்ளுவேன் ஆனால் இப்போது என்ன நடந்தாலும் தொடர்ந்து பதிப்பிடுவதாக முடிவெடுத்துள்ளேன்..
நன்றி

மதுரகன்
18-08-2008, 05:05 PM
எவ்வளவு தூரம்தான் விலகிச்சென்றாலும் மீண்டும்
மீண்டும் வந்து கால்களைத்தழுவிச்செல்லும் அலையைப்போல
அவ்வப்போது என் மரத்துப்போன இதயத்தை
வருடிச்செல்லும் உன்னைப்பற்றிய நினைவுகள்

இன்னமும் எனக்குவரும் கடிதங்களிலெல்லாம் உனது
பெயரை எதிர்பார்த்திருக்கும் என் கண்களில்
காத்திருக்கின்றது நமது காதல்

இன்றும் புதிதாக வெளிவரும் ஒவ்வொரு காதல் கவிதைப்
புத்தகங்களின் தலைப்புக்களையும் படிக்கும்போது
அவ்வப்போது தலையைக்காட்டி அமர்ந்து
கொள்கிறது நமது காதல்

ஒவ்வொரு மழைக்கால இரவுகளிலும்
தனிமையில் கழிக்கப்படும் பொழுதுகளிலும்
எமது காதல் கதையின் சிதறிப்போடப்பட்ட அத்தியாயங்கள்
என் உயிரை வலிக்கச்செய்கின்றன

என்னுடைய உடைமைகளெல்லாம் மறைந்துபோன
எம் காதலின் மறக்கமுடியாத சில பாகங்களை
அவ்வப்போது உரசிச்செல்ல

என் பழைய நாட்குறிப்புகளில் கவிதைகளாக
புதைந்து கிடக்கும், நீயும் நானும் சேர்ந்து
செதுக்கிய காதல் உணர்வுகள் என்னை
உணர்வுகளுக்குள் மூழ்கடித்து கொன்றுவிட முயல்கின்றது.

எவ்வளவு தூரம்தான் சென்றுவிட்டாலும்
திரும்பிப்பார்க்கின்றபோது கண்ணில் வீழ்ந்த தூசிபோல
உறுத்திக்கொண்டிருக்கும் இந்த சலனங்கள்
மறக்கமுடியாதவை

காத்திருக்கிறேன் காதலுடன்
நமக்காக காத்திருக்கும், கடற்கரை மரத்தடியில்
அமைந்திருக்கும் சீமெந்துக்கதிரை,
சூரியனால் அடைமுடியாத அந்த இருள் சூழ்ந்த நடைபாதை
பூக்களுடன் காத்திருக்கும் என் வீட்டுப்பூஞ்செடி
என் கண்களில் நிறைந்திருக்கும் கண்ணீர்த்துளிகள்..

poornima
19-08-2008, 06:57 AM
//எவ்வளவு தூரம்தான் சென்றுவிட்டாலும்
திரும்பிப்பார்க்கின்றபோது கண்ணில் வீழ்ந்த தூசிபோல
உறுத்திக்கொண்டிருக்கும் இந்த சலனங்கள்
மறக்கமுடியாதவை //

அழகு...

//என் பழைய நாட்குறிப்புகளில் கவிதைகளாக
புதைந்து கிடக்கும், நீயும் நானும் சேர்ந்து
செதுக்கிய காதல் உணர்வுகள்//

இன்னும் அழகு...

சீமெந்துக்கதிரை = ?

ஒரு சின்ன வேண்டுகோள்

உங்கள் தமிழின் சில வார்த்தைகள் எனக்குப் புரிபடுவதில்லை.அதனாலேயே அந்த கவிதையைப் படிக்கும்போது அதன் வீச்சு முழுவதுமாக என்னைத் தாக்குவதில்லை. பழகிய வார்த்தைகளே கவிதைக்குப் பலம் என்று நினைக்கிறேன்.
(நம்ம் அறிவு அவளவுதான் :-) )

தொடரட்டும் உங்கள் காதலாயாணம்

தீபா
19-08-2008, 08:41 AM
அழகு கவிதைகள். தொடருங்கள்...

அறிஞர்
19-08-2008, 01:37 PM
என்ன செய்யும் என்கண்கள்


உன்கண்கள் காதலை உமிழ்ந்துகொண்டிருந்தன
என்கண்களுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை
காதலை கண்களினால் வெளிப்படுத்தும் ஆற்றலை இன்னமும் நான் பெற்றுக்கொள்ளவில்லை.


கண்ணீரால் தலையணை உறைகளில் எழுதும் கவிதைகளை விட
கண்களால் கொஞ்சம் உங்களை கவர்ந்தவரிடம் பேசியிருக்கலாமோ என்ற
எண்ணம் தோன்றாமலில்லை..

பாராட்டுகள்
காதலை வெளிப்படுத்தாமல்... பல காதல்கள் அழிந்து போகிறது..
வெளிப்பட்டுத்தும் ஆற்றல் வளரட்டும்.....
காதல் வெல்லட்டும்.

மதுரகன்
19-08-2008, 06:45 PM
நன்றிகள் பூர்ணிமா தென்றல் அறிஞர்
உங்கள் ஊக்கப்படுத்தல்களுக்கு...


உங்கள் தமிழின் சில வார்த்தைகள் எனக்குப் புரிபடுவதில்லை.அதனாலேயே அந்த கவிதையைப் படிக்கும்போது அதன் வீச்சு முழுவதுமாக என்னைத் தாக்குவதில்லை. பழகிய வார்த்தைகளே கவிதைக்குப் பலம் என்று நினைக்கிறேன்.


உங்களுக்குப்புரியாத வார்த்தைகளை என்னிடம் கேட்டால் கூறிவிட்டுப்போகிறேன்..
அதற்கு உங்கள் அறிவை ஏன் குறைப்பட்டுக்கொள்கிறீர்கள்..

நான் பயன் படுத்தும் வார்த்தைகள் உண்மையில் சாதாரண பாவனையில் உள்ளவைதான்..
என்னுடைய ஆசையும் எளிமையாக கவதைகள் படைப்பதுதான் ஆனால் எனது சொற்கோர்வைகள் உங்களை குழப்பலாம் அது காதல்கவிதைகளுக்கு என்று ஒரு மயக்கம் தேவை அதற்காக செதுக்கப்பட்டது..

மற்றபடி சிக்கலான இடங்களை சுட்டிக்காட்டினால் பின்பு அவற்றைத்தவிர்க்க உதவியாக இருக்கும்..

நன்றிகள்..