PDA

View Full Version : இவ்வளவு தான் வாழ்க்கை



Keelai Naadaan
17-08-2008, 05:30 PM
நண்பர்களே, எனக்கு பட்டினத்தாரை ரொம்பவும் பிடிக்கும். இவ்வளவு தான் வாழ்க்கை என்பதை இவரை போல வெளிப்படையாக சொன்னவர்கள்
யாரும் இல்லை என்பது என் அபிப்ராயம். நான் மிகமிக ரசித்த பாடல் இது.
பட்டினத்தார் படத்திலே டி.எம்.எஸ் அவர்கள் நடித்து பாடியது இந்த பாடல். படித்துவிட்டு சொல்லுங்கள்.
ஒருசில இடங்களில் எழுத்துபிழை இருக்கலாம். பெரியவர்கள் பொருத்தருள்க.
.......................................................................................................................................................................................

ஒருமட மாதும் ஒருவனுமாகி
இன்பசுகந்தரும் அன்பு பொருந்தி
உணர்வு கலந்து ஒழுகிய விந்து
ஊருசுரோணித மீது கலந்து
பனியுலர் பாதி சிறுதுளி மாது
பண்டியில் வந்து புகுந்து திரண்டு
பதும மருண்டு கடமிமிதென்று
பார்வை மெய் செவி கால் கைகளென்று
உருவமுமாகி உயிர்வளர் மாதம்
ஒன்பதும் ஒன்றும் நிறைந்து மடந்தை
உதரம் அகன்று புவியில் விழுந்து
யோகமும் வாரமும் நாளும் அறிந்து

ஒளிநடை ஊறல் இதழ்மடவாகும்
உவந்து முகமிட வந்து தவழ்ந்து
மடியில் விழுந்து மழலை மொழிந்து
வாயிருப்போமென நாமம் விளம்ப
உடைமணி ஆடை அரைவடம் ஆட
உண்பவர் திண்பவர் தங்களோடுண்டு
தெருவில் இருந்து புழுதி அலைந்து
தேடிய பாலரோடு ஓடியலைந்து
பிஞ்சு வயதாகி விளையாடியே....!

உயர்தருஞான குரு உபதேசம்
முத்தமிழில் கலை கரை கண்டு
வளர்பிறையென்று பலரும் விளம்ப
வாழ்பதினாறு பிராயமும் வந்து
மதன சொரூபன் இவனென ஓத
மங்கையர் கண்டு மருண்டு திரண்டு
வருவிழி கொண்டு சுழியை எறிந்து
மாமயில் போலவர் போவது கண்டு
மனது பொறாமல் அவர் பிறகோடி
தேடிய மாமுதல் சேர வழங்கி
வளமையும் மாறி இளமையும் மாறி
வண்பல் விழுந்திரு இரு கண்களிருண்டு
வயதுமதிர்ந்து நரைதிரை வந்து
வாதவிரோத குரோதமடைந்து
செங்கையில் ஓர் தடியும் ஆகியே....!

வருவது போவது ஒருமுதுகோலும்
மந்தியெனும்படி குந்திநடந்து
மதியுமழிந்து செவி திமிர் வந்து
வாயறியாமல் விடாமல் மொழிந்து
கலகலவென்று மலஜலம் வந்து
கால்மேல் வழி சார நடந்து
கடன்முறை பேசும் என உரை நாவும்
உறங்கி விழுந்து கை கொண்டு மொழிந்து
கடைவழிகஞ்சி ஒழுகிட வந்து
பூதமும் நாலு சுவாசமும் நின்று
நெஞ்சு தடுமாறி வரும் நேரமே...!

வளர்பிறை போல எகிறும் உரோமமும்
சடையும் இருகும்பியும் விஞ்ச
மனமும் இலங்க வடிவும் இலங்க
மாமலை போல் எமதூதர்கள் வந்து
வளைகொடு வீசி உயிர்கொடு போக
மைந்தரும் வந்து பிழிந்தழ நொந்து
மடியில் விழுந்து மனைவி புலம்ப
மாள்கினரே இவர் காலம் அறிந்து
வரிசை கெடாமல் எடுமென ஓடி
வந்திள மைந்தர் குனிந்து சுமந்து
கடுகி நடந்து சுடலை அடைந்து
மானிட வாழ்வென்ன வாழ்வென நொந்து
விறகிட மூடி அழல்கொடு போட
விந்துபிழிந்து முறிந்தினங்கள்
உருகி எலும்பு கருகி அடங்கி
ஓர்பிடி நீரும் இலாத உடம்பை
நம்பும் அடியேனை இனி ஆளுமே...!

ஆதி
17-08-2008, 06:59 PM
சித்தர்களில் முதன்மையானவர் பட்டினத்தார்.. அவரின் பாடலென்றாலே எனக்கொரு தனி மையல்.. இனம்புரியாத ஒரு உள்ளுணர்வு.. ஒரு ஈர்ப்பு ஏற்படும்.. மீண்டும் சுவைக்க பரிமாறிய கீழை நாடன் அவர்களுக்கு என் நன்றிகள்..

இளசு
17-08-2008, 07:40 PM
எளிய இயல்பான தமிழ் வசப்பட்ட பட்டினத்தார்,பாரதி, கண்ணதாசன் வாசித்தால் போதும்.

சந்தம் கெடா, சிந்தை அள்ளும் கருத்துகள் துள்ளும் வரிகளில் வாழ்ந்துவிட்டு வாருங்கள்..

பின், எந்தச் சூழலுக்கும் சொல் புதிது, சுவை புதிதாய் கொட்டித்தர இயலும்..

கருவாவதற்கு முன்னிருந்து கண்மூடும் தினம்வரை சொன்ன இப்பாடலை
கொணர்ந்து பருகவைத்த கீழைநாடனுக்கு நன்றி..

Keelai Naadaan
18-08-2008, 03:58 PM
அவரின் பாடலென்றாலே எனக்கொரு தனி மையல்.. இனம்புரியாத ஒரு உள்ளுணர்வு.. ஒரு ஈர்ப்பு ஏற்படும்..
எனக்கும் அப்படியே...


எளிய இயல்பான தமிழ் வசப்பட பட்டினத்தார்,பாரதி, கண்ணதாசன் வாசித்தால் போதும்.

சந்தம் கெடா, சிந்தை அள்ளும் கருத்துகள் துள்ளும் வரிகளில் வாழ்ந்துவிட்டு வாருங்கள்..
நீங்கள் சொல்வது போல் இவர்களுடைய பாட்டை கேட்டாலோ வாசித்தாலோ போதும். பாடல் எழுத கற்கலாம்.
சந்தத்தைப் பற்றி சொல்லும் போது அருணகிரிநாதர் பாடல்கள் நினைவில் வருகிறது. சந்தங்கள் ரசிக்கும்படி அமைந்திருக்கும்.
ஆனால் பட்டினத்தார் பாடல்கள் போல அருணகிரிநாதர் பாடல்கள் எளிதில் புரிவதில்லை.

பின்னூட்டங்களுக்கு நன்றிகள்