PDA

View Full Version : சாமா வீட்டில் தீபாவளி.....!!!(நாடகம்)



சிவா.ஜி
17-08-2008, 04:34 PM
காட்சி-1

ஒரு நடுத்தர பிராமணக்குடும்பத்தின் வீடு. தீபாவளிக்காக உறவுப்பட்டாளங்கள் வந்திறங்கியிருக்கும் சமயம். ஆறிலிருந்து அறுபது வரை அல்லோலகல்லோலப்படுத்திக்கொண்டிருக்கும் நேரத்தில்....வாங்க உள்ள போய் பாக்கலாம்......

சாமா சாஸ்திரிகள்: அடியே பர்வதம்.(தீர்க்க தரிசனத்தோடத்தான் இவளைப் பெத்தவா பேர் வெச்சிருக்கா, உண்டிச் சுருங்குதல் பெண்டிர்க்கு அழகுன்னு யாராச்சும் இவகிட்ட சொல்ல மாட்டாளோ.?)
சீக்கிரம் வாடி. காபி கேட்டு எத்தனை நாழியாறது? இன்னுமா போட்டு முடிக்கல?

பர்வதம்: (பேருக்கேத்தார்போல அசைந்து அசைந்து வந்துகொண்டே) ஏன் இப்படி கத்தறேள். வந்திண்டிருக்கேனோன்னோ...இந்த ஆத்துல இப்பபாத்திரத்துல காப்பி வெச்சாக் கட்டுப்படியாறதில்ல....அண்டாவுலன்னா வெக்க வேண்டியிருக்கு....பட்டணத்துல இருக்கோம்கறதுக்காக இத்தனை மனுஷாளா தீபாவளிக் கொண்டாட நம்ம ஆத்துக்கு வருவா. நேக்கு முடியல.( காபியை நங்கென்று சாமாவுக்கு அருகில் இருந்த முக்காலியில் வைத்தாள்)

(காபியை சப்புக்கொட்டி குடித்துக்கொண்டிருக்கும் அவரைப் பார்த்து)

பர்வதம்: ஆம்படையா கஷ்டத்தை சொல்லி புலம்பிண்டிருக்காளே, என்ன ஏதுன்னு கேப்பமேன்னு தோன்றதா இந்த பிராமணனுக்கு....

சாமா: என்னை என்னடி பண்ணச் சொல்றே...நானா அவாளையெல்லாம் வாங்கோ வாங்கோன்னு லெட்டெர் போட்டு வரச் சொன்னேன். இப்படி எல்லாருமா வந்து பிராணனை வாங்குவான்னு நான் கண்டேனா?

பர்வதம்: (தோளில் முகவாயை இடித்துக்கொண்டே)க்கும்....இப்படி விட்டேத்தியா பேசறதுல ஒண்ணும் குறைச்சலில்லை...(சொல்லிக்கொண்டே கூடத்தைத் தாண்டி ரேழியில் பார்த்துவிட்டு...) அய்யோ அய்யோ கடங்காரா...நோக்கு சங்கு சக்கரம் விட எங்காத்து ரேழிதான் கெடைச்சுதா...?

(வாண்டு ஒன்று தரைச் சக்கரத்தை வீட்டுக்குள் இருக்கும் ஒரு பகுதியிலேயே பற்றவைத்து விட்டதைப் பார்த்துப் பதறி ஓடினாள் பர்வதம்)

சாமா தடுமாறி நாற்காலியில் இருந்து விழுந்து எழுந்து கால்களிரண்டும் பரத நாட்டியம் ஆடியபடியே கத்தினார்.

சாமா: அடியே..பர்வதம், இப்படி ஆத்துக்குள்ளாற ஓடாதேன்னு நோக்கு எத்தனை தரம் சொல்லியிருக்கேன். அந்தக்காலத்து வீடு...ஏதாச்சும் ஆச்சுன்னா உங்க தோப்பனார் வந்து கட்டிக்கொடுப்பாரா?

(தகப்பனாரைப் பற்றிக் குறிப்பிட்டதும், மெக்ஸிகோ காளைச் சண்டையில் தாக்குவதற்காக ஓடி வரும் காளையைப்போல, மறுபடியும் முறைத்துக்கொண்டு ஓடி வந்தாள். இந்தமுறை கீழே விழுந்து விடாமல் இருக்க சாமா பக்கத்திலிருந்த தூணைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார்.)

பர்வதம்: என்ன என்ன சொன்னேள்....? காலட்சேபம் பண்ணிண்டிருக்கற ஒங்களுக்கு பதினைந்து சவரனையும் போட்டு, அந்தக்காலத்திலயே ரெண்டாயிரம் ரூபா ரொக்கமும் கொடுத்தார் எங்கப்பா. அவரையா கொறை சொல்றேள்?

சாமா:ரெண்டாயிரம் கொடுத்துட்டாராம்...பெரிய ரெண்டாயிரம். மாங்குடி ஜமீன்தாரோன்னா உங்கப்பா...
(சண்டை பெரிதாவதற்குள் கிச்சுவின் எண்ட்ரி)

கிச்சு: மாமி , மாமா...நல்லாக்கீறிங்களா? இன்னாது வூடே எஸ்ஜிபிஷன் கணக்கா கீது. இம்மாம் ஆளுங்க கீறாங்க? எதனா பஜனைகிளாஸ் நடத்துறியா மாமு?

பர்வதம்: வந்துட்டான் உங்களோடப்பொறந்தவளோட சீமந்தப்புத்திரன். தமிழை சீமெண்னை ஊத்திக் கொளுத்தறதுக்காகவே...வாடா அம்பி...நன்னாருக்கியா?

கிச்சு: அத்த ஏன் கேக்கற மாமி? கூட இருந்த பசங்கள்லாம் தீவாளிக்கு ஊருக்குப் போய்ட்டானுங்க. தனியா பேஜாரா இருந்துச்சி. அதான் உங்க வூட்ல தீவாளி வரைக்கும் தங்கிட்டு போலான்னு வந்தேன்.

சாமா: அது சரி. இங்க இருக்கற கூட்டம் போறாதுன்னு இவன் வேறயா மெல்ல முனுமுனுத்தார்.

பர்வதம்: வாடா..நீ மட்டும் தான் பாக்கியா இருந்தாய். அவனெங்கே உன் கூட ஆமாம் போடற விச்சு பய?

விச்சு: த்தோ வந்துண்டே இருக்கேன் மாமி.



காட்சி -2


சாமா சாஸ்திரிகளுக்கு, இனாமாகக் கிடைத்த பட்டாசுகளையும், கிராமத்திலிருந்து வந்தவர்கள் கொண்டு வந்த பட்டாசுகளையும் வாண்டுகள் இப்போதிருந்தே வெடித்துக்கொண்டு தீபாவளியைக் கொண்டுவந்துவிடுகிறார்கள். ஒரு சிறுவன் பாட்டிலில் வைத்த ராக்கெட் சீறி மேலே போவதற்குப் பதிலாக தரை மார்க்கமாய்ப் பாய்ந்து ஒரு மாமாவின் பஞ்சக்கச்சத்தில் நுழைந்துவிட...மாமா ஆடிய பரதநாட்டியத்துக்கு அவருடைய சகதர்மினி நட்டுவாங்கம் சொல்ல...இன்னொரு முன் ஜாக்கிரதை முத்தண்ணா வாளியில் தண்ணீர் கொண்டுவந்து பஞ்சக்கச்ச மாமா மேல் ஊற்ற அதுவரை பரதநாட்டியமாக இருந்த அவரது நாட்டியம், ரெயின் டேன்ஸாகிவிட...ஒரே அதகளமாய் இருக்கிறது.

போதாததற்கு, விச்சு வாங்கிக்கொண்டு வந்த நமீதா வெடி ஒவ்வொரு ஆடையாய் (பட்டாசுமேல் சுற்றப்பட்ட காகிதம்தான்)உரித்தெறிந்து கலர்கலராய் வெடித்து சிதறுவதைப் பார்த்த தாத்தா...ஓடிச்சென்று உரிந்த காகிதங்களை எடுத்து நமீதாப் படங்களை சேகரித்துக்கொள்கிறார்.அடுப்படியில் பலகார தயாரிப்பும், தீபாவளி லேகிய தயாரிப்பும், மாமிகளின் கைவண்ணத்தில் உருவாகிக்கொண்டிருக்க..பலகாரத்தில் சிலதை ஒரு வாண்டுக்காக்கா கொத்திக்கொண்டுபோக..."அய்யோ பகவானுக்கு படைக்கறதுக்கு முன்னால தொடப்ப்டாதே...இந்தக் கடங்காரன் தூக்கிண்டு ஓடறானே " என்று ஒரு ஒல்லிமாமி எட்டிப்பிடிக்க...பர்வதம் மாமி வந்து சாப்பாடு தயார் என்று பிராமனாள் கிளப்புக் கடையில் பலகை வைத்து அறிவிப்பதைப்போல அறிவிக்க அனைவரும் அமைதியாகிறார்கள்.


இரவு நேரம். அனைவரும் உறங்க இடம் இல்லாதததால் கூடத்திலேயே படுத்துக்கொண்டார்கள். அப்போது கிச்சு....

கிச்சு: இன்னாது மணி இன்னும் ஒம்போதுகூட ஆவல...அதுக்குள்ள தூங்கறீங்க. நான் பஜார்லருந்து குசேலன் படம் சிடி கொண்டாந்திருக்கேன் யாரெல்லாம் பாக்க வறீங்க?

பல்லுபோன ஒரு பாட்டி:நாராயணா...நாராயணா....நண்னா இருப்பேடா அம்பி. பகவான் கண்ணனை தரிசிக்கலாமோன்னோ..போடுடா சீக்கிரமா.

விச்சு: பாட்டி இது கண்ணனோட குசேலன் இல்லை...எங்க அண்ணனோட குசேலன். சூப்பர் ஸ்டார் படம்.

பாட்டி: அட கஷ்டகாலமே...என்ன எழவையோ போட்டுப்பாத்து தொலைங்கோ...நானும் அப்படி ஓரமா உக்காந்து பாக்கறேன். நயன்தாரா கூட ரெண்டு பாட்டுக்கு ஆடறாளாமே....

தாத்தா ஒருத்தர் வெற்றிலையை இடித்துக்கொண்டிருக்கிறார். கிச்சு அவரைப் பார்த்து முறைத்து,

கிச்சு: இன்னா பெர்சு...அத்த கொஞ்சம் இஸ்டாப்பண்றீயா...சவுண்ட் எபெக்ட் குடுக்குறாரு அக்காங்..

இடித்துக்கொண்டிருந்தவர் கிச்சு சொல்வதைக் காதில் போட்டுக்கொள்ளாமலேயே மேலும் வேகமாக இடிக்கிறார். படார் படார்...உரலுக்குள்ளிருந்து வெடிச்சத்தம் கேட்டதும், அப்படியே மல்லாக்க சரிகிறார் தாத்தா..பாட்டி தன் மணாளனுக்கு என்னவாச்சோன்னு குடு குடு வென்று ஓடுகிறாள். கிச்சுவும், விச்சுவும் கூட ஓடிப்போய் பார்க்கிறார்கள். அதற்குள் உரலுக்குள்ளிருந்து புகை வருவதைப் பார்த்துவிட்டு

பாட்டி: ஈச்வரா...எந்த கடங்காரனோ இதுக்குள்ள கேப்பு வெடியைப் போட்டு வெச்சிருந்திருக்கானே...ஏண்ணா...ஒங்களுக்கு ஒண்ணும் ஆகலையே? தாத்தாவைத் தூக்கி மடிமேல் போட்டுக்கொள்கிறார் பாட்டி.

கிச்சு: த்தோடா...பெர்சுங்க லவ் சீன் காமிக்கறாங்க.

அதற்குள் பர்வதம் அங்கே வந்து

பர்வதம்: என்ன சத்தம் இங்கே...ம்..எல்லாரும் படுத்து தூங்குங்க. நேக்கு காலம்பற நேரத்தோட எழனும்.இந்தக் கூட்டத்துக்கு காப்பி போட நேக்கு ஒரு மணிநேரமாச்சும் ஆகும். விடிஞ்சா தீபாவளி. எல்லாரும் கங்காஸ்நானம் பண்ண எத்தனை நாழியாகறதோ....?சீக்கிரம் படுங்க.என்று அதட்டிவிட்டு வாயை அகலத்திறந்து கொட்டாவி விட்டுக்கொண்டே போகிறாள்.

விச்சு: டே கிச்சு...மாமி கொட்டாவி விடறச்சே எனக்கு டிஸ்கவரி சேனல் பாக்கிற மாதிரியே இருக்குடா.

கிச்சு: அடப்போடா...தலீவர் பட்த்த பாக்க முடியலன்னு எனக்கே பேஜாராக்கீது...இவன் ஒர்த்தன்..



காட்சி- 3


அனைவரும் உறங்கிக்கொண்டிருக்கிறார்கள். கிராமத்திலிருந்து வந்தவர்கள் காற்றோட்டமாக இருக்கட்டுமென்று கதவைத் திறந்துவைத்து தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். திறந்திருக்கும் கதவின் வழியே ஒரு உருவம் நுழைகிறது. கூடத்தில் அத்தனை உருவங்கள் படுத்திருக்குமென்று கொஞ்சமும் எதிர்பார்க்காத அந்த உருவம் முதல் அடியை பாட்டியின் முதுகில் வைத்தது.

பாட்டி "ஈச்வரா....." என்று அலறிக்கொண்டெழ..படுத்திருந்த அத்தனைபேரும் படபடவென்று எழுந்து நிற்கிறார்கள் கிச்சு ஓடிப்போய்
விளக்கைப் போட்டான். அனைவரும் பாட்டியைப் பார்க்க பாட்டி அந்த திருடனின் கால்களை கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறார்.

திருடன் பேயறைந்ததைப்போல விழித்துக்கொண்டு நிற்கிறான். கிச்சுவும் விச்சுவும் ஒரு கிராமத்து மாமாவும் ஓடிச் சென்று அவனைப் பிடித்துக்கொள்கிறார்கள்.

விச்சு: பாட்டி விட்டுடுங்கோ...நாங்கதான் பிடிச்சிண்டிருக்கோமில்ல.

பாட்டி: கடங்காரன் நன்னா என் முதுகை மிதிச்சித் தொலைச்சிட்டான். பல்லுவேற இல்லை..இல்லன்னா நன்னா கடிச்சி வெச்சிருப்பேன்.

கிச்சு: இப்ப இவனை இன்னா பண்றது...கட்டி வெக்கலாமா, இல்லாங்காட்டி போலீஸாண்ட சொல்லாமா?

பஞ்சக்கச்ச மாமா: இந்த படவாவை நன்னா மொத்தி கட்டி வெய்யுங்கோ...அப்புறம் போலீஸைக்கூப்பிட்டு சொல்லிப்ப்டலாம்..திருட வந்தவன் பரிதாபமாக விழித்துக்கொண்டிருக்கும்போது சாமா மாமா வருகிறார்.

சாமா: என்ன இந்த நேரத்துல கலாட்டா...யாருடா அம்பி இந்தப்பையன்...எதுக்கு அவனை எல்லாருமா சேர்ந்து பிடிச்சி வெச்சிருக்கேள்?

விச்சு: மாமா எல்லாரும் தூங்கறச்சே இந்த ராஸ்கல் நம்ம ஆத்துக்குள்ல திருட வந்தான். நல்லவேளை பாட்டியை மிதிச்சுட்டான். அவ போட்டக்கூப்பாடுல நாங்கள்லாம் எழுந்துனுட்டோம்.

சாமா: மொதல்ல அவனை விடுங்கடா....ஏண்டா அம்பி..நானே காலட்சேபம் பண்ணித்தான் ஏதோ ஜீவனத்தை நடத்திண்டிருக்கேன். இந்த ஆத்துல நோக்கு என்னடா கிடைக்கும். பாத்தா நல்ல பையனாட்டமா இருக்கே...ஏதாவது வேலை செய்யப்ப்டாதோ...நோக்கு எதுக்கு இந்த புத்தி?

ஆதரவான குரலைக் கேட்டதும் கண்களில் கண்ணீர் வர..சாமாவைப் பார்த்து..

திருட வந்தவன்: சார்..வீட்டுல இருக்கறவங்கப் பேச்சைக் கேக்காம, பசங்களோட சுத்திக்கினிருந்தேன். அவனுங்க பேச்சைக் கேட்டுதான் சார் இந்த வேலையைப் பண்ணேன். மொத வாட்டியே மாட்டிக்கிட்டேன் என்னை மன்னிச்சுடுங்க சார்.

சாமா: அடடா மொத போனியே எங்காத்துலதானா? அமெச்சூர் ஆர்டிஸ்ட்டா நீ? அதான் எக்குத்தப்பா மாட்டினுட்டே..உன் பேர் என்னடா அம்பி?

கிச்சு: இன்னா மாமா நீ பேரு அட்ரஸெல்லாம் கேட்டுக்கினு. நல்லா நாலு சாத்து சாத்தி தொரத்தாம..டீடெய்லு கேட்டுக்கினு கீறே?

சாமா: செத்த சும்மா இருடா பிரம்மஹத்தி. நீ சொல்லுடா அம்பி..

திருட வந்தவன்: என் பேரு அந்தோனி சார்.

சாமா: ஆஹா...பெரிய மஹானோட பேராச்சே...உலகத்துக்கே நல்லது சொன்னவரோட பேரை வெச்சுண்டு நீ இப்படி இருக்கலாமாடா அம்பி? சரி விடு இனிமே இந்தக் காரியத்தை செய்ய மாட்டியோன்னோ?

அந்தோனி: கண்டிப்பா செய்ய மாட்டேன் சார். என்னை மன்னிச்சு விட்ருங்க சார்.

சாமா: ம்ஹீம் அதெல்லாம் விட மாட்டேன். எங்காத்துக்கு வந்துட்டே. விடிஞ்சா தீபாவளி. நீயும் எங்க எல்லாரோடையும் இருந்து தீபாவளியைக் கொண்டாடிட்டுப் போ. பர்வதம்...அந்த புது வேட்டி சட்டையில ஒரு செட்டை எடுத்துண்டு வந்து இந்தபிள்ளையாண்டானுக்கு குடு.

பஞ்சக்கச்சமாமா: கிச்சு மாமா...இவனையெல்லாம் இந்த மாதிரி ட்ரீட் பண்ணப்படாது...போலீஸண்டை பிடிச்சிக் கொடுக்கனும்

சாமா: பிடிச்சிக் கொடுத்து...? பஞ்சத்துக்கு திருடினவனை பரம்பரைத் திருடனாக்கனுமா? லோகத்துல யார்தான் தப்பு செய்யல? வால்மீகியே திருடனாய் இருந்துதானே திருந்தி ராமாயணத்தை எழுதினார். இவன் திருந்திப் பொழைக்க ஒரு சந்தர்ப்பம் கொடுப்போமே...என்னடா அம்பி திருந்தி ஒன்னோட பெத்தவாப் பேச்சைக்கேட்டு நல்லவனா இருப்பியோன்னோ...?

அந்தோனி: நிச்சயமா இருப்பேன் சார்!

சாமா: இன்னும் என்னடா அம்பி சார்...மாமான்னே கூப்பிடு...

அந்தோனி கண்ணீர்மல்க அவர் காலில் விழுகிறான்.

இளசு
17-08-2008, 07:30 PM
அன்பு சிவா

மன்றத்தில் நாடகம் எழுதிய முதல்வர் நீங்கள். சிறப்பு வாழ்த்துகள்.

அதிக பாத்திரங்கள் இருந்தாலும் கும்பகோணம் கடைபோல் ஓர் ஒழுங்காய் அடுக்கிய
சாமர்த்தியத்துக்கு அடுத்த பாராட்டு.

ரெயின் டான்ஸ், கிருஷ்ணாயில் தமிழ், நமீதா படம், பாக்கு உரலில் கேப்பு -
என கதைக்களனுக்கு ஏற்ற நகைச்சுவைத் தூவலுக்கு மூன்றாவது பாராட்டு.

தீபாவளி நேரம்; மதநல்லிணக்கம், மனிதம் குறிக்கும் மன்னிக்கும் மனம், தவறைத் திருத்து/ தண்டித்துத் தப்பு ஆக்காதே
என்ற நல்ல எண்ணம் சொல்லும் முடிவு..

அசத்தலான நாடகத்துக்கு அடுக்கடுக்காய் பாராட்டுகள்!


வாழ்த்துகள்!

செல்வா
18-08-2008, 12:04 AM
ஆஹா... ரொம்ப நாளா எதிர்பார்த்துட்டுருந்தது வந்து சேர்ந்துருச்சு. உங்க மடிக்கணிணி பிரச்சனையால மன்றத்தில எங்கள எல்லாம் ரொம்பவே காயவிட்டுட்டீங்க அண்ணா....

ஒரு நாடகத்தை பார்த்து இரசிப்பது மிக எளிது.. ஆனால் அதே நாடகத்தை வாசித்து இரசிப்பதென்பது மிக கடினமான காரியம். காட்சிகளைச் சொன்னால் மட்டும் போதாது அந்தச் சூழலை வாசகரின் கண்முன் கொண்டு வரவேண்டும். நாடகத்தில் நடிக்கும் ஒவ்வொரு பாத்திரங்களின் தனித்தன்மையும் அவற்றின் அங்க அசைவுகள் சேட்டைகள் இவற்றை எழுத்தில் கொண்டுவரவேண்டும்.
இத்தனையோடு நல்ல கருத்து நல்ல காட்சியமைப்பு இன்னும் எத்தனையோ இருக்கின்றன.
அத்தனையும் அருமையாகக் கைவந்திருக்கிறது அண்ணா. தமிழில் வெளிவந்த பல நாடகப் புத்தகங்கள் வெற்றிபெறாததற்கு இவைச் சரியாக அமையாததுவும் ஒரு காரணம்.

மிக மிக வியந்தேன் அண்ணா.... அருமையான முதல் படைப்பு. இந்தப் படைப்பு இன்னும் பலரை எழுதத் தூண்டும் என்பது திண்ணம்.

கருத்தைப் பற்றி இளசு அண்ணாவே சொல்லிவிட்டார்கள். வாய்விட்டுச் சிரிக்க வைத்தது. அதிகாலை மூன்று மணிக்கு தூக்க கலக்கத்தில் வாசிக்க ஆரம்பித்தேன் தூக்கம் போன இடம் தெரியவில்லை.

உங்க கையைப் பிடித்து வாழ்த்துச் சொல்ல மனம் பரபரக்கிறது.....
வாழ்த்துக்கள் அண்ணா .... இன்னும் நிறைய எழுதுங்கள்.

தீபாவளிச் சிறப்பிதழுக்குப் பரிந்துரைச் செய்கிறேன்.

மதுரை மைந்தன்
18-08-2008, 12:19 AM
நல்ல நகைச் சுவை நாடகம். மேலும எழுதுங்கள். வாழ்த்துக்கள்

mukilan
18-08-2008, 12:33 AM
சிவா அண்ணாவின் நகைச்சுவைப் பரிமாணம்.

திகில் கதைகளில் திருப்பங்கள் என்றால் நகைச்சுவை நாடகத்தில் அள்ளித் தெளித்த நகைச்சுவைத் துணுக்குகள். பர்வதமலை போலா மாமி! யவனியக்காவின் ஜாலியாய் இளைக்கலாம் வாங்க படிக்கச் சொல்லணுமே!

சிறுவர்கள் வால்த்தனம் இல்லாத தீபாவளி சந்தோசமாகவே இராதே!

மாற்று மதமாக இருந்தாலும் அந்தச் சிறுவனை மதித்து தன் குடும்பத்தில் ஒருவராக தீபாவளி கொண்டாடச் சொன்ன சாமா மாமா மரியாதை பெற்று விடுகிறார். இனி அந்தப் பையன் திருடவே மாட்டான்.

மறுபடியும் ஒரு தேர்ந்த படைப்பாளியை நிரூபணம் செய்திருக்கிறீர்கள் அண்ணா.

சிவா.ஜி
18-08-2008, 04:13 AM
முதல் முயற்சிக்கு, மன்றத்தின் முதல்வரின் முத்தான, சத்தான பின்னூட்டம் கிடைத்ததில் உற்சாகம் பன்மடங்காகிறது. மனம்நிறைந்த நன்றி இளசு.

சிவா.ஜி
18-08-2008, 04:15 AM
மிக மிக வியந்தேன் அண்ணா.... அருமையான முதல் படைப்பு. இந்தப் படைப்பு இன்னும் பலரை எழுதத் தூண்டும் என்பது திண்ணம்.


செல்வா....நீங்கள் ஒரு தேர்ந்த நாடகாசிரியர் என்பது தெரியும். உங்களிடமிருந்தே இந்தப் படைப்புக்கு பாராட்டுக் கிடைத்திருக்கிறதென்றால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க நன்றி. மற்றவை நேரில்.

சிவா.ஜி
18-08-2008, 04:16 AM
நல்ல நகைச் சுவை நாடகம். மேலும எழுதுங்கள். வாழ்த்துக்கள்

மிக்க நன்றி மதுரைவீரன். உங்களைப்போன்றோரின் ஊக்கம் மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கிறது.

சிவா.ஜி
18-08-2008, 04:18 AM
அன்பு முகிலன், பரீட்ச்சார்த்த முயற்சியில் இதை எழுதினேன். உங்களின் பாராட்டுக் கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் சொல்ல வந்ததை மிகச் சரியாகக்கோடிட்டுக்காண்பித்துவிட்டீர்கள். ஒரு திருடனை திருடனாகவே வைத்திருப்பதில் சமூகத்துக்கும் பங்கிருக்கிறது. அப்படி வேண்டாமே என்ற என் எண்ணத்தை இதில் பதித்தேன். மிக்க நன்றி.

poornima
18-08-2008, 07:45 AM
அன்பு சிவா.ஜி நண்பருக்கு,
உங்களது இயல்பான நகைச்சுவை எழுத்துக்களுக்கு என் வந்தனம். இதுபோலவே ஓரங்க நாடகங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதிப் பழக திரைக்கதை அமைக்கும் உத்தியும்
பிடிபட்டு விடும்.. பாராட்டுகள்..

உரைநடையில் சுத்த இலக்கணம் என்பதை மட்டும் விடாப்பிடியாய் வைத்துக் கொள்வோரின் ஸ்கிரிப்டுகள் எவ்வளவு நன்றாய் இருந்தாலும் சொதப்பலாகி விடுகின்றன..உங்களுக்கு அந்த யுக்தியும் தெரிந்திருக்கிறது.

மதி
18-08-2008, 08:18 AM
நாடகத்துலேயும் கலக்க ஆரம்பிச்சீங்களா? நல்லதொரு களத்தில் புகுந்து விளையாடி இருக்கிறீங்க. அதுலேயும் வசனங்கள அற்புதமாய் அந்த வீட்டையே கண்முண் நிறுத்துகின்றன. அதிகமான வர்ணனைகள் இல்லாமலும் இது போல் செய்ய முடியுமா?

சொல்ல வந்த கருத்து மெச்சத்தக்கது. விளையாடுங்க...சிவாண்ணா

சிவா.ஜி
18-08-2008, 11:24 AM
அன்பு சிவா.ஜி நண்பருக்கு,
உங்களது இயல்பான நகைச்சுவை எழுத்துக்களுக்கு என் வந்தனம். இதுபோலவே ஓரங்க நாடகங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதிப் பழக திரைக்கதை அமைக்கும் உத்தியும்
பிடிபட்டு விடும்.. பாராட்டுகள்..


நன்றி பூர்ணிமா. உங்கள் வாழ்த்துகளும் பாராட்டும் என்னை இன்னும் ஊக்கப்படுத்துகிறது.

சிவா.ஜி
18-08-2008, 11:26 AM
சொல்ல வந்த கருத்து மெச்சத்தக்கது. விளையாடுங்க...சிவாண்ணா

முதல்முயற்சியாய் எழுதியது மதி. ஏதேனும் ஒரு கருத்து இல்லாத வெறும் நகைச்சுவையாய்க் கொடுக்க விரும்பவில்லை. பார்ப்போம்....நகைச்சுவை இன்னும் சரிவர கைவருமா என்று. மிக்க நன்றி மதி.

தீபா
18-08-2008, 02:19 PM
நல்லவேளை பாட்டியை மிதிச்சுட்டான்.

இந்த வரிகளைக் கண்டதும் சிரிப்பு தாங்கமுடியலை.

முதல் நாடகம் போட்ட உங்களுக்கு என் மனமாழ்ந்த பாராட்டுக்கள்.

அன்புடன்
தென்றல்

சிவா.ஜி
18-08-2008, 02:22 PM
முதல் நாடகம் போட்ட உங்களுக்கு என் மனமாழ்ந்த பாராட்டுக்கள்.

அன்புடன்
தென்றல்
உங்களைப்போன்ற முதல்வரிசை விமர்சகர்களின் பாராட்டு பெறுவதில் மனம் தித்திக்கிறது. நன்றி தென்றல்.

அமரன்
18-08-2008, 04:33 PM
மன்றத்தின் முதல் நாடகம் என்ற பெருமையை பெற்ற இந்த நாடகத்தின் ஆசிரியர் சிவா எனக்கு நாடகக் களத்தில்தான் நெருக்கமானார். ஆச்சரியமாக இருக்கிறதா? இவருடைய நாடக அனுபவப் பகிர்வுப் பதிவுகள் சில மன்றத்தில் உள்ளனவே.

நாடகத்தை கண்முண் அரங்கேற்றும் எழுத்து வளமை. நகைச்சுவை கலவை. கருத்துச் சுளை எல்லாம் சேர்ந்து சுவையைக் கூட்டுகின்றன. மனமாரப் பாராட்டுகிறேன் சிவா.

சிவா.ஜி
19-08-2008, 04:29 AM
ஆம் அமரன். அந்தப்பதிவைப்பார்த்துதானே...நீங்களும் என்னுடனான ஒரே அலைவரிசையில் வந்தீர்கள். பின்னூட்ட ஊக்கத்திற்கு மிக்க நன்றி அமர்.

Keelai Naadaan
19-08-2008, 05:54 PM
கதை முழுவதும் நகைச்சுவை இழையோடியிருப்பதால் புன்சிரிப்புடன் படித்தேன். அதிலும் குறிப்பாக இந்த வரிகளை ரசித்தேன்.

பர்வதம்: வந்துட்டான் உங்களோடப்பொறந்தவளோட சீமந்தப்புத்திரன். தமிழை சீமெண்னை ஊத்திக் கொளுத்தறதுக்காகவே...?

கதையின் முடிவும் ஏற்கும் வண்ணம் இருந்தது. ஒருமுறை திருடி மாட்டிய ஒருவனை பொதுமக்களே அடித்து துன்புறுத்தியதை பார்த்தேன்.
மிகவும் சங்கடமாயிருந்தது. உங்கள் நாடகம் ஆறுதல் தருகிறது. பாராட்டுக்கள்

பாரதி
19-08-2008, 11:17 PM
உரையாடல்களில் நகைச்சுவை மிகவும் நன்றாக இருக்கிறது. வட்டார வழக்கில் படிப்பதால் இன்னும் சுவை கூடுகிறது. முதல் படைப்பே "தீபாவளி" அல்லவா....!

இனிய வாழ்த்தும் பாராட்டும் சிவா.

சிவா.ஜி
20-08-2008, 04:06 AM
உங்களின் பின்னூட்ட ஊக்கத்திற்கு மிக்க நன்றி கீழைநாடன். நல்ல எழுத்தாளர்களின் பாராட்டு உற்சாகத்தைத் தருகிறது.

சிவா.ஜி
20-08-2008, 04:07 AM
உரையாடல்களில் நகைச்சுவை மிகவும் நன்றாக இருக்கிறது. வட்டார வழக்கில் படிப்பதால் இன்னும் சுவை கூடுகிறது. முதல் படைப்பே "தீபாவளி" அல்லவா....!

இனிய வாழ்த்தும் பாராட்டும் சிவா.

தீபாவளி என்றாலே உற்சாகமும், களேபரமும்தானே...அதனால்தான் இந்தக்கருத்தை தேர்ந்தெடுத்தேன். மிக்க நன்றி பாரதி.