PDA

View Full Version : என் அன்பு ராட்சஷியே...



Keelai Naadaan
15-08-2008, 05:39 PM
என் அன்பு ராட்சஷியே...

அந்தி வான அழகும்
சிந்தையில் பதியவில்லை
பூத்து குலுங்கும் பூக்களும்
சித்தம் விரும்பவில்லை
தேகம் தழுவும் தென்றலும்
மேனி தேடவில்லை
செய்யும் வேலைகள்
சீராய் முடிவதில்லை

நிலவின் குளிர் ஓளி
தணலாய் தகிக்குது
குளிர்சாதன கருவி
வெந்தணலை மூட்டுது
பணமும் காசும்
பகையாய் தோணுது
படுக்கை விரிப்புகள்
இடுக்கண் கூட்டுது

கற்ற கலைகளிலும்
கவனம் செல்லவில்லை
பார்க்கும் எதிலும்
பார்வை நிலைக்கவில்லை
தூக்கத்தை எல்லாம்
துரத்துது உன் கனவு

மண்ணில் இன்பமெல்லாம்
மங்கையால் வந்தது
பெண்டு பிள்ளையை பிரிந்து
வாழ்வென்ன வாழ்வு -உன் கால்
சுண்டு விரலும் தரும் அமைதி
எந்த சொர்க்கத்திலே உண்டு?

(துணையை பிரிந்து வாழும் தோழர்களுக்காக)

shibly591
15-08-2008, 05:58 PM
பிரிவின் ஆற்றாமையை தத்ரூபமாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்....

வாழ்த்துக்கள்

இளசு
15-08-2008, 06:42 PM
மகாராஜன் உலகை ஆளலாம் - அந்த
மகாராணி அவனை ஆளுவாள்!

ஆள்பவனுக்கும் நாளின் சில கணங்கள்
ஆளப்பட ஆசையிருக்கும்..!

ஆள்பவர்கள் அன்புத்துணை, குழந்தைகளாய் இருந்தால்
ஆபத்தான பக்கவிளைவில்லாத் தூய இன்பம் நிலைக்கும்!


வாழ்த்துகள் கீழைநாடன்!

Keelai Naadaan
16-08-2008, 01:36 AM
ஆள்பவர்கள் அன்புத்துணை, குழந்தைகளாய் இருந்தால்
ஆபத்தான பக்கவிளைவில்லாத் தூய இன்பம் நிலைக்கும்!


வெளிநாடுகளில் பணிபுரியும் பலருக்கு அந்த இன்பம் கிடைப்பதில்லை நண்பரே.

பின்னூட்டம் தந்தமைக்கு தங்களுக்கும், ஷில்பி அவர்களுக்கும் மிக்க நன்றிகள்

சிவா.ஜி
16-08-2008, 04:53 AM
பிரிவு அதுவும், நெஞ்சத்துக்கு நெருக்கமானவரின் பிரிவு தரும் வேதனை மிகப்பெரிது. அதைச் சொல்வதைக்காட்டிலும் உணர்வதில் உள்ள வலி மிக அதிகம். அந்த வலியை நயம்பட, வரிகளில் ஏற்றி வழங்கியிருக்கிறீர்கள். வாழ்த்துகள் மற்றும் எங்களைப்போன்றோரின் வலியுணர்ந்த வரிகளுக்காக நன்றிகள் கீழைநாடன்.

Keelai Naadaan
16-08-2008, 01:51 PM
வலியுணர்ந்த வரிகளுக்காக நன்றிகள் கீழைநாடன்.

நன்றிகள் சிவா. பிரிவின் அனுபவத்தை நானும் ருசித்ததுண்டு.
காதலில் பிரிவு, நெருப்புக்கு காற்றைப் போல அது சிறிய நெருப்பை அணைத்து விடும். பெரிய நெருப்பை மேலும் பரவச்செய்யும் என்பார் கல்கி

அறிஞர்
16-08-2008, 05:04 PM
மண்ணில் இன்பமெல்லாம்
மங்கையால் வந்தது
பெண்டு பிள்ளையை பிரிந்து
வாழ்வென்ன வாழ்வு -உன் கால்
சுண்டு விரலும் தரும் அமைதி
எந்த சொர்க்கத்திலே உண்டு?

(துணையை பிரிந்து வாழும் தோழர்களுக்காக)
பிரிதலின் ஏக்கம் வரிகளில்....

அன்பான ராடசஷி...
அருகில் இருந்தால் இன்பான தொல்லைகள்.
தொலைவில் இருந்தால் நரகப் பாடுகள்....

கலக்குங்க கீழை..

Keelai Naadaan
16-08-2008, 05:33 PM
அன்பான ராடசஷி...
அருகில் இருந்தால் இன்பான தொல்லைகள்.
தொலைவில் இருந்தால் நரகப் பாடுகள்....

உண்மை. மறுக்க முடியாத உண்மை. நன்றிகள் அறிஞரே

அமரன்
16-08-2008, 08:22 PM
திரவியம் தேடி ஓடிக் களைத்து
இரவிலும் தூக்கம் தொலைத்து...
இந்நிலையில் இக்கவியும் சேர்ந்து..

பாடுபொருள் மட்டுமா இராட்சசி
பாடிய விதமும்தான் இராட்சசி..

சந்தேகமே இல்லை கீழை நாடான்..
நீங்கள் ஒரு சிறந்த கவிதைக் கட்டுமான விற்பன்னன்.

பிரிவுவலி - ஆ!காரம்..
பழக்கவலி - ஆகாரம்...

பசியோ இல்லையோ சாப்பிடத்தான் வேண்டும் வாழ்வதுக்கு..

Keelai Naadaan
17-08-2008, 03:55 PM
பாடுபொருள் மட்டுமா இராட்சசி
பாடிய விதமும்தான் இராட்சசி..

பிரிவுவலி - ஆ!காரம்..
பழக்கவலி - ஆகாரம்...

பசியோ இல்லையோ சாப்பிடத்தான் வேண்டும் வாழ்வதுக்கு..
என்னால் புரிந்து கொள்ள முடிகிறது அமரன். சிலரின் பார்வையிலே வெளிநாட்டில் வசிப்பவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்வது போலவும் தாய்நாட்டுப்பற்று அற்றவர்கள் போலவும் பேசப்படுகிறார்கள். அவர்கள் புரிந்து கொள்ளட்டும் அங்கு ஏற்படும் இன்னலை.

lolluvathiyar
28-09-2008, 06:55 AM
கவிதை மிக அருமை, ரசித்தேன். பாராட்டுகிறேன்


(துணையை பிரிந்து வாழும் தோழர்களுக்காக)

அது என்னங்க பிரிந்து வாழ்ந்தா தான் கவிதை அன்பு எல்லாம் கூடி வருமா?

ஓவியன்
28-09-2008, 08:33 AM
வாயைக் கட்டி
வயிற்றைக் கட்டி,
வாழ்வைக் கட்டவென
புலம் பெயர்ந்து விட்டு
பிரிவுத் துயரால்
வேதனை கொண்ட
உள்ளத்தின் உள்ளக்கிடக்கை..!!

பாராட்டுக்கள் கீழை நாடன்..!1

தாமரை
13-01-2009, 12:14 PM
குடும்பம் விட்டுப் பிரிந்து வாழும் ஒரு மனிதனின் இதய விசும்பலைச் ஒரு புகைப்படம் எடுத்து பதிய வைத்திருக்கிறீர்கள் கீழைநாடன்.

நல்ல கவிதை. பலே..

பூத்து குலுங்கும் பூக்களும்
சித்தம் விரும்பவில்லை
தேகம் தழுவும் தென்றலும்
மேனி தேடவில்லை

பூக்களையும், தென்றலையும் என்ற வார்த்தைகள் தட்டச்சுப் பிழையால் பூக்களும் தென்றலும் என்று ஆகிவிட்டது என்று எண்ணுகிறேன், சரி செய்து விடுங்கள்.

mathuran
16-01-2009, 11:54 AM
பணமும் காசும்
பகையாய் தோணுது
படுக்கை விரிப்புகள்
இடுக்கண் கூட்டுது

அருமையாக இருக்கிறது உங்கள் கவிதை நடை. பிரிவின் துயரத்தை அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்.
"பணமும் காசும்
பகையாய் தோணுது...'
என்று எழுதியிருக்கிறீர்கள். பணமும் காசும் ஒன்றுதானே. இந்த இடத்தில் ஏதோ இடிக்கிற மாதிரி இருக்கு. மன்னிக்க வேண்டும் இதில் ஏதாவது தவறாக சொல்லியிருந்தால்...
"பணமும் பதவியும்
பனையாய் தோணுது...'
என்று ஏதாவது மாற்றினால் நன்றாக இருக்குமென நினைக்கின்றேன். தவறெனில் மன்னிக்கவும். சரியெனில் ஏற்றுக்கொள்ளவும்.

Keelai Naadaan
16-01-2009, 04:31 PM
[I][COLOR="Blue"]"பணமும் காசும்
பகையாய் தோணுது...'
என்று எழுதியிருக்கிறீர்கள். பணமும் காசும் ஒன்றுதானே. இந்த இடத்தில் ஏதோ இடிக்கிற மாதிரி இருக்கு. மன்னிக்க வேண்டும் இதில் ஏதாவது தவறாக சொல்லியிருந்தால்...
"பணமும் பதவியும்
பனையாய் தோணுது...'
என்று ஏதாவது மாற்றினால் நன்றாக இருக்குமென நினைக்கின்றேன். தவறெனில் மன்னிக்கவும். சரியெனில் ஏற்றுக்கொள்ளவும்.
பின்னூட்டத்துக்கு மிக நன்றி மதுரன்.
நீங்கள் சொல்வது போல் பணமும் காசும் ஒரே பொருளைத்தான் குறிக்கிறது
ஆனால் சில சமயங்களில் நடைமுறை வழக்கில் ஒரு சோகத்தை சொல்லும் போது காசு, பணம் என்று சொல்வது பரவாயில்லை என நினைக்கிறேன்

ஒரு கண்ணதாசனின் பாடலில்,
ஆயிரம் இருந்தும்
வசதிகள் இருந்தும்.. என்பாரே அது போல.

அதனால் அப்படியே விட்டு விடுகிறேன்.
சுட்டிக்காட்டியமைக்கு மிக நன்றி மதுரன்.

Keelai Naadaan
16-01-2009, 04:37 PM
பின்னூட்டம் தந்த நண்பர்கள் வாத்தியார், ஓவியன், தாமரை அனைவருக்கும் நன்றி.

நேசம்
17-01-2009, 05:42 AM
கவிதை படிப்பவர்களின் மனநிலையை ஒட்டியிருந்தால் அந்த கவிதை இன்னும் அழகாக தோன்றும்.பிரியமானவர்களின் பிரிவு தரும் வேதனை சொல்லும் அழகான வரிகள்.பாரட்டுகள் கீழைநாடன்

Keelai Naadaan
17-01-2009, 04:07 PM
கவிதை படிப்பவர்களின் மனநிலையை ஒட்டியிருந்தால் அந்த கவிதை இன்னும் அழகாக தோன்றும்.பிரியமானவர்களின் பிரிவு தரும் வேதனை சொல்லும் அழகான வரிகள்.பாரட்டுகள் கீழைநாடன்
மிக நன்றி நேசம்.