PDA

View Full Version : அப்துல் கலாம் தகுதியானவர் அல்ல! - ஞானி.ராஜா
13-08-2008, 08:48 AM
ஞானி என்னும் கி.பழனிச்சாமி எழுதிய எண்ணற்ற எழுத்து மணிகளில் ஒன்றை மன்றத்தில் வெளியிடுவதில் மனம் மகிழ்கிறேன்.

கிடைத்த இடம் : http://kichu.cyberbrahma.com/2007/07/அப்துல்-கலாம்-தகுதியானவர/

இங்கு ஞானிக்கு கிடைத்திருக்கும் பதிவரின் போற்றுதலையும் பின்னூட்ட மரியாதைகளையும், கண்குளிர காணலாம்.
________________________________________________________________________
அப்துல் கலாம் தகுதியானவர் அல்ல! - ஞானி (நன்றி விகடன்)

புதிர் 1: அப்துல் கலாம்..

இணைய தளத்திலும் ஆங்கிலப் பத்திரிகைகளிலும் ‘அடுத்த ஜனாதிபதியாக வரும் தகுதி உடைய ஒரே மனிதர் அப்துல்கலாம்தான்; ஆனால், அவரை நம் கேடுகெட்ட, இழிவான அரசியல்வாதிகள் வரவிட மாட்டார்கள். இளைய தலைமுறையின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் கலாம்’ என்று நடக்கும் பிரசாரம் பெரும் புதிராக இருக்கிறது. இதே கேடுகெட்ட, இழிவான அரசியல்வாதிகள்தான் கலாமை முதலில் ஜனாதிபதியாக்கினார்கள் என்பதையே இந்தப் பிரசாரகர்கள் வசதியாக மறந்துவிடுகிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை, கலாம் ஜனாதிபதி பதவிக்குத் தகுதியானவரே அல்ல! காரணம், அவர் இந்தியாவை மேலும் மேலும் ராணுவமயமாக்கிய விஞ்ஞானத் துறை நிர்வாகி என்பதுதான். அடிப்படை மருத்துவ வசதியும் கல்வியும் இல்லாத கோடிக்கணக்கான ஏழைகள் வாழும் நாட்டில், கோடிக்கணக்கான ரூபாய்களை ராணுவத்துக்குச் செலவிடுவது சமூக விரோதச் செயல் என்பது என் தீர்மானமான கருத்து. வல்லரசு, வல்லரசு என்பதுதான் அவருடைய ஓயாத பல்லவி.

எங்கு சென்றாலும் மாணவ&மாணவிகளைக் கூட்டிவைத்துக்-கொண்டு பேசும் அபாரமான பொதுஜனத் தொடர்பு உத்தியை அவர் வெற்றிகரமாகக் கையாண்டு, இளைய தலைமுறையின் ஹீரோ என்ற பட்டத்தைப் பெற்றார். இது அவருக்கு ஒரு வசதியான முகமூடியாக அமைந்தது, அவ்வளவுதான்!

அவருடன் நேரில் உரையாடிய பிறகு, தங்கள் ஹீரோ வொர்ஷிப் பாவனையிலிருந்து வெளியே வந்துவிட்ட கல்லூரி மாணவர்களை நான் பார்த்தேன். பாரதிதாசன் பல்கலைக்கழக இளைஞர்களுடன் அவரைச் சந்திக்கச் சென்றபோது, சந்திப்புக்கு முன் பரவசமாக இருந்தவர்கள் எல்லாரும், பின்னர் ஏமாற்றம் தெரிவித்தார்கள். சந்திப்புக்குப் பின் அந்த இளைஞர்களை வசீகரித்த வி.ஐ.பி. கிரண் பேடி.

உண்மையில், குழந்தைகளின் பள்ளிக் கல்வி முதல் கல்லூரிக் கல்வி வரை எதுவும் அப்துல் கலாமால் அரை அங்குலம்கூட மாற்றியமைக்கப் படவில்லை. தாய்மொழியில் கல்வி கற்பிக்கப்படலாமா, கூடாதா? தொழிற் படிப்புக்கு நுழைவுத் தேர்வு சரியா, தவறா? நன்கொடை என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் கல்வி நிறுவனங்கள் மீது எப்படி நடவடிக்கை எடுப்பது? சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு, மேற்படிப்பில் தேவையா, இல்லையா? இப்படிக் கல்வி சார்ந்த மிக முக்கியமான எரியும் பிரச்னைகள் எதைப் பற்றியும் அவர் தீர்மானமாகக் கருத்துச் சொன்னதே இல்லை.

தாங்கள் விரும்பும் முஸ்லிம்கள் எப்படி இருக்க வேண்டும் என்று காட்டுவதற்காக பி.ஜே.பி. முன்னிறுத்திய இஸ்லாமியர் அவர். இந்து & முஸ்லிம் பிரச்னை பற்றியும் அவர் கருத்து தெரிவித்ததில்லை. தமிழகத்தில் சுனாமி பாதிப்பை நேரில் காண அவர் வரவில்லை. ஜெயேந்திரர் கைதின்போது அவரை வீட்டுச் சிறையில் மட்டும் வைக்க முடியுமா என்று அவர் அலுவலகத்திலிருந்து அன்றைய தமிழக அரசுக்குப் பல மன்றாடல் கோரிக்கைகள் வந்ததாக, அப்போது பத்திரிகைகளில் வெளியாகியிருக்கிறது.

தற்போதைய ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பல முறை திரும்பப் போட்டியிட விருப்பமில்லை என்று சொல்லி வந்தவர், ஜெயலலிதாவின் மூன்றாம் அணி முயற்சியின் போது, ஜெயிப்பது நிச்சயம் என்று இருந்தால், தயார் என்று சொன்னது அவருடைய சலனத்தை வெளிப்படுத்தியது.

அப்துல் கலாம் எப்படி ஒரு ஐகான் ஆக இளைய சமுதாயத்துக்கு இருக்கிறார் என்பது எனக்கு இன்னமும் புதிர்தான்.

ஆதி
13-08-2008, 09:09 AM
நானும் வாசித்தேன் விகடனில்.. என்ன சொல்றது னு தெரியல..

அமரன்
13-08-2008, 09:11 AM
நான் படித்தவை குறைவு.. எழுத்துப் பற்றி தெரிந்ததும் குறைவு.. பொது வாழ்க்கை தனி வாழ்க்கையோ மனிதன் இப்படி இருக்கட்டும் என்று சொல்வது நன்று. குறிப்பிட்ட மனிதன் இப்படி இருக்கவேண்டும் என்று சொல்லுவது தவறு.

இந்திய ஜனாதிபதி இப்படி இருந்தால் சிறப்பு என்று ஒரு கட்டுரை எழுதி இருந்தால் ஞானி(இவ்வாக்கத்தாரை சொல்லவில்லை). அவர் எழுதியத்துக்கு அமைவாக கலாம் இருக்காரா இல்லையா என்பதை மக்கள் ஆராய்ந்தறியட்டும். வாய் ஜாலம் காட்டி மக்களின் சிந்தனையைக் குறைக்கும் அரசியல்வாதிகளை விட எள்ளளவும் குறைந்ததில்லை இதுபோன்ற கட்டுரைகள்.

ஓவியன்
13-08-2008, 09:13 AM
அந்த ‘ஓ' பக்கங்கள் பல தடவை ‘சீ' பங்கங்களாக எனக்குப் பட்டிருக்கின்றன....

இப்போது ஐயோ(ஓ) பக்கமாகவும்....!!!

அன்புரசிகன்
13-08-2008, 10:07 AM
ஓஓஓஓஓஓஓஓஓ... அப்துல் கலாமுக்கே இந்த நிலை என்றால் பாவம் சிவாஜிராவுக்கு அறிக்கை விட்டதில் நொந்து என்ன பலன்.....

aren
13-08-2008, 10:21 AM
ஞானிக்கு நம் மன்றத்திலேயே பல ஆதரவாளர்கள் இருக்கிறார்களே. அவர் ஏன் இப்படி எழுதமாட்டார். இன்னும் எழுதுவார்.

தீபன்
13-08-2008, 01:53 PM
ஞானி இப்படித்தன் விமர்சிக்க வேண்டும், இப்படித்தான் இருக்கவெண்டுமென்பதுகூட இன்னொரு ஞானிபோல்தான் உள்ளது...!

shibly591
13-08-2008, 01:57 PM
அந்த ‘ஓ' பக்கங்கள் பல தடவை ‘சீ' பங்கங்களாக எனக்குப் பட்டிருக்கின்றன....

இப்போது ஐயோ(ஓ) பக்கமாகவும்....!!!

அதே அதே....

காரணம் எந்த ஊழலும் செய்யாத ஒரே அரசியல் தலைவர்...

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி..

இவரது அக்னிச்சிறகுகள் எங்கும் பரந்திருக்க...இதை ஒரு கட்டுரையாகவே வாசிக்க சகிக்கவில்லை...

மதுரை மைந்தன்
13-08-2008, 02:47 PM
ஞானி தன்னை ஒரு ஞான சூன்யம் என்று இந்தக் கட்டுரையின் முலம் வெளிப்படுத்தியுள்ளார். யாரையும் குறை கூறுதல் எளிது. முதல்வன் படத்தில் வருவது போல இந்த ஞானியை ஒரு நாள் விஞ்ஞானியாகவோ குடியரசுத் தலைவராகவோ இருந்து பார்த்தால் அவரது டங்கு வார் கிழியும்.

இந்த நூற்றாண்டில் இந்தியாவின் தலை சிறந்த விஞ்ஞானி தீர்க்கதரிசி அப்துல் கலாமை விமரிசிக்க இந்த ஞானிக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? ஒரு பேனா கையில் கிடைத்து விட்டால் எழுதுவதற்கு ஒரு பத்திரிகையும் கிடைத்து விட்டால் தான் யாரையும் விமரிசக்கலாம் என்ற அவரின் திமிர் போக்கு வண்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த விமரிசனத்தை வெளியிட்ட ஆனந்த விகடன் பத்திரிகையும் கண்டனத்துக்குரியது.

உதயசூரியன்
13-08-2008, 03:38 PM
அப்துல் கலாம் நல்ல விஞ்ஞானி..
ஆசிரியர்..
நல்லவர்..
இன்னும் பல பல பட்டங்களை பெற தகுதியானவர்..
அவருக்கு நம் அனைவராலும் கொடுக்க பட்ட கவுரவம்.. ஜனாதிபதி.. நம்ம தமிழர்..
பெருமை..

ஆனால் ஜனாதிபதியாக்கி அவரையும் எல்லோரையும் சங்கடபடுத்தியது காலத்தின் கோலம்..
இரண்டாம் முறை.. அவர் ஆசை பட்டார் என்ற போது நொந்தும் போனேன்..
அப்துல் கலாம்.. ஜனாதி பதியாக வேண்டாம்..

ஞானி சொன்ன விதத்தில் தவறாக இருக்கலாம்.. அவர் சொல்ல வந்ததை பரிசீலிக்கலாம்...

இது முழுக்க முழுக்க என் கருத்து தான்.. இதற்கும் கலைஞருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை......

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

மாதவர்
15-08-2008, 11:07 AM
அப்துல் கலாம் தகுதியை பற்றி
பேசுவதற்கு முன்
கண்டிப்பாக இனி குமுத்ததில்
எழுதவே மாட்டேன் !!
என்றவர் ஞானி
ம்ம்ம்ம்
வாழ்க்கையில் நாம் இதுப்போல நிறைய நபர்களை பார்த்துக்கொண்டு வருகிறோம்!

தங்கவேல்
15-08-2008, 02:26 PM
ஞானிக்கு இந்தியாவை வேறு ஏதாவது நாட்டிடம் அடகு வைத்து விட்டால் சந்தோஷம் வரும் போல. ராணுவத்தின் செலவு என்பது நாட்டின் பாதுக்காப்புக்கு என்ற சிறு விஷயம் அவருக்குத் தெரியாமல் போனது வருத்தம் தான். பாகிஸ்தானிடம் இந்தியாவை ஒப்படிச்சிட்டா ஞானி மகிழ்ந்து ஓ... பக்கங்கள் எழுதுவார் போல. கொடுமைடா சாமி...


அப்துல் கலாமைச் சந்தித்த பிறகு மாணாவர்கள் வருத்தம் தெரிவித்தார்களாம். ரஜினியையோ அல்லது திரிஷாவையோ சந்தித்து இருந்தால் அல்லவா செம பூஸ்ட்டில் இருப்பார்கள். இப்படி படித்தவர்களையும், விஞ்ஞானிகளையும் எல்லாக் குழந்தைகளும் சந்திப்பது என்பது ஞானிக்கு கசப்பு தரும் விஷயம் போல.

பென்ஸ்
15-08-2008, 02:48 PM
அப்துல் கலாம் நல்ல விஞ்ஞானி..
ஆசிரியர்..
நல்லவர்..
இன்னும் பல பல பட்டங்களை பெற தகுதியானவர்..
அவருக்கு நம் அனைவராலும் கொடுக்க பட்ட கவுரவம்.. ஜனாதிபதி.. நம்ம தமிழர்..
பெருமை..

ஆனால் ஜனாதிபதியாக்கி அவரையும் எல்லோரையும் சங்கடபடுத்தியது காலத்தின் கோலம்..
இரண்டாம் முறை.. அவர் ஆசை பட்டார் என்ற போது நொந்தும் போனேன்..
அப்துல் கலாம்.. ஜனாதி பதியாக வேண்டாம்..

ஞானி சொன்ன விதத்தில் தவறாக இருக்கலாம்.. அவர் சொல்ல வந்ததை பரிசீலிக்கலாம்...

இது முழுக்க முழுக்க என் கருத்து தான்.. இதற்கும் கலைஞருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை......

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

உங்கள் கருத்தோடு மிக மிக சரியாக ஒத்து போகிறேன் உதயசூரியன்....
கலாம் சிறந்த விஞ்ஞானி...
சிறந்த மனிதர்...
சிறந்த தலைவரும் தான்...
ஆனால் சிறந்த அரசியல்வாதி அல்ல....

அவர் இப்போது இருக்கும் இந்தியாவின் ஜனாதிபதி பதவிக்கு தகுதியானவர் அல்ல...
மாற்றங்கள் வந்து, இந்தியாவின் அரசியல் திருந்தும் போது கலாம் போன்ற ஒருவரை இப்பதவிக்கு நினைத்து பார்க்கலாம்....

அதுவரை ...டி. என். ஷேசன் போன்றவர்கள் மட்டுமே இந்த பதவிக்கு தகுதியானவர்கள்...
இவரை போன்றவர்களை ஜனாதிபதியாக ஒரு அரசியல்வாதியாவது சம்மதிப்பார்களா..????

mukilan
15-08-2008, 03:47 PM
நம் இந்திய அரசியலமைப்புச் சாசனத்தின் படி இந்திய குடியரசுத் தலைவருக்கான அதிகாரங்கள் குறைவு. இல்லவே இல்லை எனச் சொல்லலாம். அவர்கள் கௌரமான பொம்மைகள். அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு பெற்றோர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டே ஆக வேண்டும்.

அப்துல் கலாம் தன்னால் முடிந்த அளவிற்கு தனக்குப் பிடிக்காத சில விசயங்களில் எதிர்ப்பு காண்பித்திருக்கிறார். அவரால் புதிய முயற்சிகளில் இறங்கி இருக்கவே முடியாது. அவர் மட்டுமல்ல இந்தியாவின் எந்தக் குடியரசுத்தலைவராலும் புதிய சட்ட சீர்திருத்தங்கள் கொண்டு வர முடியாது.

இந்திய ராணுவத்திற்கு பணம் செலவழிக்கச் சொல்லி அவர் அரசைக் கேட்டுக்கொள்ளவில்லை. அது நாடாளுமன்றத்தில் பெருவாரியான உறுப்பினர்களால் எடுக்கப்பட்ட முடிவு.

அப்துல்கலாம் அரசியல் வாதி அல்ல! என்பதில் நான் முழுமனதோடு உடன்படுகிறேன். ராஜேந்திர பிரசாத், ராதாகிருஸ்னன், ஆகியோருக்குப் பின் களையின்றி இருந்த இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கு என்று தனி மரியாதை ஏற்படுத்தியவர் அப்துல்கலாம். அதுவரை யார் குடியரசுத்தலைவராக வந்தாலும் எனக்கென்ன என்ற போக்கில் இருந்தவர்கள் எல்லாம் அப்துல்கலாம் எனும் கண்ணியம் மிக்க மனிதர் ஒருவரால் அந்தப் பதவியின் மீதும் அதில் அமரத் தகுதியானவ்ர் மீதும் கவனம் செலுத்தத் துவங்கினர்.

குழந்தைகளையும், மாணவர்களையும் நேசிக்கத் தெரிந்த மனிதர்களைக் குற்றம் சொல்வதால் இவர் பெரிய மனிதராக முயற்சிக்கிறார். எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாகத் தன்னைக் காட்டிக் கொள்வதில் ஞானிக்கு அப்படி ஒரு வெறி. அப்துல் கலாம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல. ஆனால் காரணத்தோடு விமர்சித்தால் காது கொடுக்கலாம். இது போன்று சொல்வதையும் கேட்க வேண்டியது நம் விதி.

ஓ போடுவோம்.!!!!

arun
19-08-2008, 10:35 PM
எப்போதும் எதிர் பதமாக பேசுபவரை பற்றி நாம் என்ன சொல்ல முடியும்

என்னை பொறுத்த வரை அப்துல் கலாம் ஒரு நல்ல மனிதர்,சிறந்த விஞ்ஞானி, ஆனால் அரசியல்வாதி அல்ல

நமது அரசியல்வாதிகளை மீறி அவரால் எதுவும் செய்து விட முடியாது

kulirthazhal
18-09-2008, 09:52 AM
பிறரை கவர உயர்ந்த ஒன்றை விமர்சனம் செய்வது காலம்காலமான நடைமுறை வழக்குதான்.., ஞானி மற்றவர்களை விமர்சனம் செய்ய தனக்கு எந்த அளவுக்கு தகுதி உள்ளது என்று நம்புகிறாரோ அதே செறிவோடு எழுதுவதற்குமுன் தன்னை சுயவிமர்சனம் செய்துகொண்டால் எழுத்துக்களில் கண்ணியம் இருக்கும்...