PDA

View Full Version : மரப்பா(பூ)ச்சிகள்..!



பூமகள்
09-08-2008, 11:47 AM
மரப்பா(பூ)ச்சிகள்..!!



ஒவ்வொரு மே மாத
வரவேற்பும்..
எதிர்வீட்டு வாசலில்
தூங்கும் மரத்தின்
பூக்களின் சிரிப்போடு
ஆரம்பிக்கும்..!

ஆடிக்காற்றில் தலையசைத்து
கிளையாடும் போது
மழலையின் புதுச்சட்டை
குதூகலமாகவே தோன்றும்..!

மரங்களோடான பந்தம்
நெஞ்சில்
மனோரஞ்சிதமாக
மணம் வீசும்..!

மதிய உணவின்
மயக்கத்தில்
கண் மூடிய நேரம்....

உடல் செதுக்க..
கிளைகள் கை நீட்டி
ஆதரவு தேடும்
அபயக்குரல்..

மரமழலை அழுகை
கேட்டு ஓடி வெளிப்பட..
கண்ட காட்சி..
சாலையோர மரம் ஒன்று..
கிளையிழந்து கொண்டிருந்தது..

மற்றொரு மரம்
தூக்குக் கைதியின்
இறுதி நிமிட மௌனத்தில்
அமைதி காத்தது..

ஆடிக்காற்றின் வீச்சு
புயலாகக் கூடாதா..??
வெட்டுவோர்
அதை நிறுத்தகூடாதா..??

கண்ணுக்கு முன்
ஓர் அநீதி
கேப்பார் யாருமில்லையா..??

அடிமரத்தில் கோடாறியின் அடி..
அடிவயிற்றில் வலியுண்டாக்கியது..
கையறு நிலையில்
பலவாறாக மனம் ஏங்கியது..

வஞ்சியொருத்தியின்
வஞ்சக நெஞ்சொன்று..
வேர் அறுக்கும் கட்டிடமென
நஞ்சை விதைத்ததாம்..

சாலையோர மரங்கள்..
சாவுக்கு போராடி
குற்றுயிராய் கிடக்க..
அடுத்த வீட்டம்மா வந்தார்..

அறக்கிவிடப்பட்ட கிளை
தன் வாசல் விளக்கை உடைத்ததென
கூப்பாடு போட்டு ஓடி மறைந்தார்..

சுயநலப்பேய்களே...
எங்கள் அழுகை உங்கள்
காதுகளுக்கு எட்டவில்லையா?- என
மரம் கதறியது
என்னுள்ளும் எகிறவைத்தது...

மரவுடலின் ஒவ்வொரு
பாகமும் அறுந்து மண்ணில்
இறுதி மூச்சு விடுவதைப்..
பார்த்த கண்கள் கலங்கியது..

தட்டிக் கேட்க முடிவெடுத்து..
தந்தையிடம் முறையிட..

காரணமின்றி இரு உயிர்களை
பலி வாங்க ஏது காரணம்..?
சாலையோர மரமொன்றை வீழ்த்தினால்..
பத்து மரம் தப்பாமல் வைத்தாகனும்..

அரசாங்க அறிக்கையோடு
அப்பா எதிர்க்க...

குடிதண்ணீருக்கே அல்லாடியவர்
தாம் வைத்ததாய் கதை சொன்னார்...
எங்கள் மரமென உரிமை பேசினார்..

ஈருயிர் பலி தின்ற
ரத்தம் அவர்கள்
எச்சிலில் தெறித்தது..

தந்தை மனம் கனத்து
மனிதரல்லவென
வெறுத்துத் தகர்ந்தார்..

சுற்றியிருந்த மற்றோர்
மூடிய கதவுகளுக்குள்
ஒளிந்தபடி பேடிகளாயினர்..

நல்லவை கேட்க கூட
நாதியில்லையா நாட்டில்??
பத்துக்கு மேல் ஆளிருந்தும்..
ஒருவர் கேட்டதில் பலமில்லை...!

பதறிய மனம்..
பதைப்போடே..
மரம் பார்த்து கதறியது..

கலங்குகையில் தலை கோத - இனி
இலைக்காற்றின் இதமில்லையே...!
இறுதி அஞ்சலி செலுத்த கூட
இமைகளுக்கு இயலவில்லையே..!

"சுத்தக் காற்றின்றி
மூச்சடைத்து சாவாய்"-என
மரந்திண்ணும் மனிதப்பூச்சிகளுக்குச்
சாபமிட்டது மனம்...!!

இளசு
09-08-2008, 01:18 PM
ஒரு கதையை கவிதைக்குள் புகுத்தும் உத்தி என்றும் ஜெயிக்கும்..

இக்கவிதை போல..

ஒரே சிக்கல் - சொற்சிக்கனம் கைமீறலாம்..

மரத்த மனிதம் மரத்தை அழித்தால்
வறளும் இயற்கை வாட்டி அழிக்கும்..

நெஞ்சு பொறுக்குதில்லையே..
இந்த ஈரமற்ற மனிதரை நினைத்துவிட்டால்..

பாராட்டுகள் பாமகளுக்கு!

பூமகள்
09-08-2008, 02:57 PM
சொற்சிக்கனம்.. எனக்கு இன்னும் சரியாக வசப்படவில்லையெனக் கருதுகிறேன் பெரியண்ணா...
கவிதை பெரிதெனச் சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள்...

புரிகிறது... வார்த்தைச் சிக்கனத்தை கை கொள்ள முயற்சிக்கிறேன்..

காலையிலிருந்து உண்டான மனவுளைச்சல் தான் இப்படைப்புக்குக் காரணம்..!

ஈரமற்றவர் மனம் என்று ஈரம் சொரியுமோ??!!

மிகுந்த நன்றிகள் பெரியண்ணா. :)

நாகரா
09-08-2008, 05:23 PM
வெட்டப்படுபவை மரங்களல்ல
மனிதத்தின் வேர்கள்!
உலர்ந்திருப்பவை விறகுகளல்ல
மனித நெஞ்சங்கள்!
ஆன்ம நேயத்தைச் சுடச் சுட உணர்த்தும்
நெடுங்கவிதை!
கொடுமை பெரிதென்றால்
அதைக் கடுமையாய் எதிர்க்கும் குரலும்
நீண்டு உரத்து ஒலிக்க வேண்டுமல்லவா!
வாழ்த்துக்கள் பூமகளே!

அமரன்
10-08-2008, 02:21 PM
கொடி படர தேர்கொடுத்து
வடிவானான் பாரி..
கொடுத்த தேரோ
மரத்தாலானது பாரீர்..

ஆடிக்காத்து ஓலம்
அபயம் கேட்கும் குரலல்ல
அபாயம் சொல்லும் குரல்.

பாராட்டுகள் பூமகள்.

பென்ஸ்
10-08-2008, 06:39 PM
ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன் பூமகள்....

காலையில் கண்ட சம்பவம் மனதை அளுத்த எளுந்த வலிகளின் வரிகள்....
ஆனால் மனதில் குழப்பமான சிந்தனைகள்,
அதுவே வரிகளை அதிகரித்து விட்டதா... இல்லை
வலிகளை குறைக்க வரிகள் அதிகரித்து விட்டதா...!!!!

வலியோடு இந்த கவிதை குழந்தையை பிரசவித்து கொடுத்துவிட்டாய்...
கையில் இருந்து அழும் இந்த குழந்தையை தாலாட்ட எனக்கு ஒப்பாரியை தவிர எதுவும் தெரியவில்லை....

பாராட்டுகள்...

பூமகள்
13-08-2008, 06:37 AM
நாகரா அண்ணாவின்
வருத்தம் தோய்ந்த
மர நேசம்
மகிழ வைக்கிறது..!


பாரியின் தேர்
குறித்த மூன்றாம் கோணம்..
அமரரின் சிந்தையின்
துலங்கலை விளக்குகிறது..

வலி சொரிந்த மனம்
படித்த வரிகளை
உணர்ந்த பென்ஸ் அவர்களின்
கருத்தாழம்.. சொக்க வைக்கிறது..

ஒப்பாரி மனதின் சுமை
குறைக்க வைக்கிறது..

ஓர் இனிய செய்தி..!!

ஓர் மரம் தப்பிற்று...

மனதில் பாதி நிம்மதி..
மன்றத்தில் பகிர்வதில் முழுதாகுமென நம்புகிறேன். :)

அனைவருக்கும் எனது நன்றிகள்.. :)

செல்வா
13-08-2008, 08:20 PM
வெட்டப்பட்ட மரம் வெடித்துக்கிளம்பிய வலி...
அதிலும் ஒரு ஆறுதல் ஒன்றேனும் தப்பித்ததே என...

சிறுவயதில் சுற்றிச் சுற்றி ஊஞ்சலாடி ஏறி தவழ்ந்து விளையாடிய மரமொன்று வெட்டப்பட்டதின் வலி நினைவிற்கு வருகிறது. நினைவலைகளிலும் வரலாம்...

வாழ்த்துக்கள் கதைகளை கவியாக்கும் பூக்கவிக்கு.

பிற படைப்புகளைப் போலல்லாது எழுத்துப்பிழைகள் இடறுகிறதே! சற்றுக் கவனிக்கக் கூடாதா?

ஷீ-நிசி
17-08-2008, 05:32 AM
ஒவ்வொரு மே மாத
வரவேற்பும்..
எதிர்வீட்டு வாசலில்
தூங்கும் மரத்தின்
பூக்களின் சிரிப்போடு
ஆரம்பிக்கும்..!

தூங்கும் மரத்தின் என்று எழுதிவிட்டு
அடுத்த வரி பூக்களின் என்று எழுதியிருப்பது கவிதை படிப்பதற்கு சற்று தடுமாறுகிறது...

அதாவது மரத்தின் பூக்களின்... இரண்டுமே தொடர்ந்து 'ன்' ல் முடிவது....


இப்படி இருக்கலாமோ...

ஒவ்வொரு மே மாத
வரவேற்பும்..
எதிர்வீட்டு வாசலில்
உறங்கும் மரத்தின் புன்னகையாம்
பூக்களின் அசைவுகளோடு
ஆரம்பிக்கும்!


__________

மற்றபடி கவிதை சொல்லும் சேதி மரந்திண்ணி களை அசைக்குமானால்.. அதுவே கவிதையின் வெற்றி,,


மரந்திண்ணி அழகிய வார்த்தை... இனி பழகிய வார்த்தையாய் மாறும்! வாழ்த்துக்கள்!

அறிஞர்
21-08-2008, 02:21 PM
அருமை பூமகள்....

இயல்பாய் நடக்கும் சம்பவம் உம் க(வி)தைக்குள்.....