PDA

View Full Version : குண்டுவெடிப்பில் இறந்துபோன அவன்...shibly591
07-08-2008, 05:38 PM
நேற்று மாலை சந்தையில் வெடித்த
குண்டுவீச்சில் அவனும் இறந்துபோனான்...
அவனோடு சேர்த்து
மூன்று குழந்தைகள்
எட்டு பெண்கள்
நான்கு வயோதிபர்கள்
ஏழு ஆண்கள்...

குண்டை வெடிக்க வைத்ததே அவன்தானாம்...
அவன் ஒரு தீவிரவாதியாம்
போலிஸ் வலைவிரித்த முக்கிய புள்ளியாம்
இதுவரை பலகொலைகள் செய்தவனாம்...
இவைகளை உண்மையென்றே நானும் நம்புகிறேன்...

அவனை நல்லவனென்றவர்கள்
அவன் சடலத்தின் மீது
கல்லையும் மண்ணையும் எறிந்துகொண்டேயிருக்கின்றனர்..
எனது பங்கிற்கு நானும் இரண்டு கற்கள்

சிலவேளை அவன் குற்றமற்றவனாகக்கூட இருக்கலாம்..
என்ன செய்ய....
பதற்ற சூழலில் எல்லாமே நம்பவேண்டும்..

அவன் பற்றி எனக்கு இன்றுதான் தெரியும்

பலமுறை கண்டிருக்கிறேன்
ஓரிரு முறை பேசியதாகவும் ஒரு ஞாபகம்...
சடங்கிற்காக அவன் பெயர் கேட்டு
பின் சடுதியாய் மறந்து போன எனக்கு
அவன் பற்றி இன்றுதான் தெரியும்..

படிப்பை பாதியில் விட்டுவிட்டு
கடையொன்றில் கூலி வேலை செய்தவன்
விசுவாசமாவென்று அவன் முதலாளி அடிக்கடி
சொல்லக்கேட்டிருக்கிறேன்..
பெரிய உயரமில்லை
சற்று கறுப்பு
பார்ப்போர்களை வசீகரிக்கும் காந்தக்கண்கள்
இவை தவிர்த்து இன்னபிற இன்றுதான் அறிந்துகொண்டேன்...

சந்திகளில் நின்று சிகரெட் பிடித்தவனில்லை
பெண்களை கண்டால் எள்ளி நகைத்தவனில்லை
அவனைத்திட்டும் எவருக்குமே
அவன் இன்சொல் சொன'னதில்லை

அந்தக்கூட்டத்தில் வேறு யாரேனும்
குண்டு வைத்திருக்கலாம்
அல்லது குண்டு வைத்தவன் தப்பித்து ஓடியிருக்கலாம்...
எது எப்படியோ
அவன்தான் குற்றவாளியென்று எல்லோரும்
சொல்வதை நானும் நம்புகிறேன்...

அவன் பற்றி எனக்கு இன்றுதான் தெரியும்..

இனி அவனை மறந்து விடுவோம்

சுகந்தப்ரீதன்
09-08-2008, 09:53 AM
இறந்தவன் எழுந்து வந்தா இனி வாதாடப்போகிறான் நான் நல்லவனென்று..?? என்ற நம்பிக்கையில்தானே வாரிப்பூசப் படுகிறது சேறும் சகதியும் ஆளும் வர்க்கத்தால் அவ்வப்போது..!!

இறந்தவன் எழுந்து வரப்போவதில்லை.. ஆனால் நிச்சயம் பிறந்து வருவான்.. அப்போது அவனும் மறந்து போயிருப்பான்.. எல்லோரையும் போலவே எல்லாவற்றையும்..!!

ஷிப்லி வலிகளை நீங்கள் வரிகளில் வடிக்கும்விதம் கண்டு வியக்கிறேன்.. கவிதையில் முதல் வரியிலேயே இயலாமையில் எழுந்த உணர்வு வெளிப்பட்டு விடுகிறது.. அதே உணர்வுடன் யதார்த்தாமாய் உண்மையை ஊருக்கு சொல்லி சென்றிருக்கிறீர்கள்..!!

தொடரட்டும் உமது முயற்ச்சி.. அதற்கு எனது வாழ்த்துக்கள் நண்பரே..!!

rajatemp
09-08-2008, 01:13 PM
அருமையான பதிவு ஷிப்லி அவர்களே

இயலாமையை தெரிவித்த விதம் அருமை

அமரன்
09-08-2008, 02:19 PM
நிதர்சனம்..

நம்ப வைக்க ஒரு காரணம்..
நம்ப ஒரு காரணம்..
யாரை சொல்ல குற்றம் ..!

இளசு
09-08-2008, 02:43 PM
சூழல்களே இங்கே திரைகள்..
அவசர அவசியங்கள் - தூரிகைகள்..

எழுதப்படும் ஓவியங்கள்..
எவை நிஜம்? எவை கற்பனை?
எவர் அறிவார் இதை?

மறந்தும் மறுபடி நினைக்கவிடாது..
மறுநாளும் மறுமறுநாளும் நாம்
காணும் புதுப்புதுக் கோலங்கள்..
காலம் அழிக்கும் கோலங்கள்...!


பாராட்டுகள் ஷிப்லி!

ஓவியன்
09-08-2008, 02:53 PM
இப்படித்தான் ஷிப்லி என்னோடு இளையவனாக கல்வி கற்ற ஒரு மாணவனும் இலங்கையில் இறந்து போனான்...

யாரோ எறிந்த குண்டினால் இறந்தான் என்றவர்கள் சிலர்...
இல்லை, அவன் வைத்திருந்த குண்டினால் இறந்தான் என்றவர்கள் பலர்...

சிலரிலும் பலரின் பலமதிகமென்பதனால்....
இன்றும் அந்தக் குற்றமற்றவன் குற்றவாளியாக...!!

உங்கள் கவிதை நாயகனைப் போலவே...

அக்னி
09-08-2008, 03:13 PM
என்னிடமிருந்தும் ஒரு நினைவுச் சிதறல்...

இராணுவ இலக்கை நோக்கி வெடித்த குண்டு...
குண்டு வெடித்ததால்,
வெடித்தன சிப்பாய்களின் துப்பாக்கிகள்...
வீழ்ந்தன பல உயிர்கள்,
சிறுசும் பெரிசுமாகப் பேதமின்றி...

எல்லாம் ஓய்ந்த பின்னர்,
தற்கொலைத் தாக்குதல் என்றனர்...
தற்கொலையாளியின் உடல்
கண்டெடுக்கப்பட்டது என்றனர்...

தீவிரவாதி என்ற முத்திரை குத்தி
பிணக்கிடங்குக்கு அனுப்பிவைக்கப்பட்டது
வயதான ஒரு மாதுவின் உடலம்...

கடைக்குச் சென்ற தாயை
எதிர்பார்த்தபடி பிள்ளைகளும்,
சமையலுக்கு நேரமாகியும்
வராத மனைவிக்காய்க் கணவனும்,
காத்திருந்தனர் பசியுடன்...

ஆனால்,
பிணமாகக் கூட வரமுடியாத நிலையில்
அவள்...

நாளை இவர்களும்
தீவிரவாதிகள் ஆக்கப்படலாம்...
இல்லை ஆகலாம்...