PDA

View Full Version : குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் பொம்மைகள்...!!!



செல்வா
02-08-2008, 10:35 PM
அவரும் நானும் ஒரே இடத்தில் தான் பிறந்தோம்.
பிறந்தோம் என்பதை விட கருவாகி உருவானோம் என்பது தான் சரியானது.

ஒரே மண்ணில் ஒரே பானைத் தண்ணீரில் பிசையப்பட்டு, ஒரே கரத்தால் அச்சில் வார்க்கப்பட்டு், ஒரே சூளையில் சுடப்பட்டு ஒரே குப்பி வர்ணத்தில் வனப்புப் பெற்றோம்.
இத்தனையும் இருவருக்கும் பொதுவாக இருந்தாலும். வடிவத்தில் தான் வித்தியாசம். நான் அங்கி போர்த்தியவனாய் கரத்தில் சிலுவை ஏந்தியிருந்தேன். அவரோ இடையில் ஆடையணிந்து கரத்தில் சூலம் ஏந்தியிரந்தார்.

எங்கள் வடிவம் வெவ்வேறாக இருந்தாலும் நாங்கள் பிறந்த இடம் ஒன்று தானே. எனக்கு முன்னால் பிறந்தவர் அவர் என்பதால் அவரை அண்ணன் என்று பாசத்தோடு அழைக்கும் உரிமையை எனக்குக் கொடுத்திருந்தார். அண்ணன் என்றுச் சொன்னாலும் அவர் எனக்கு ஒரு நண்பன் போன்று தான் அதனால் தான் அத்தனை அன்யோன்யம் எங்களுக்குள்.

அண்ணனை நாளெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல அத்தனை அழகாக இருப்பான். கையில் தான் சூலம் ஆனால் கண்களில் தெரியும் கனிவும், அன்பும், பாசமும் வேறு யாரிடத்தும் காணமுடியாது.
முதலில் அண்ணனைத்தான் அழகுபடுத்திக் காயவைத்திருந்தனர். நான் வரும்போது காய்வதற்கு இடமில்லாமல் இருந்தது. அண்ணன் ஒதுங்கி எனக்கு இடம் கொடுத்தார். ஒருமுறை வெயில் படுவதற்கு இடமில்லாமல் போக தன் சூலம் பிடித்த கரத்தில் என்னைக் கிடத்தி தனக்குக் கிடைத்த வெயிலை எனக்கும் பகிர்ந்தளித்தார் அண்ணன்.

சிலநாட்களில் அண்ணனைக் கொண்டு சென்றுவிட்டனர். எனக்கு மிகுந்தக் கவலையாக இருந்தது அண்ணனைப் பிரிவது. ஆனால் கவலை தீர்வதற்குள் அடுத்த இரண்டு நாளில் என்னையும் கொண்டுச் சென்றுவிட்டனர். அன்றிலிருந்து எனது கால் தரையில் பட்டதே கிடையாது. என் உடல்மீது வெயில் பட்டதும் கிடையாது.
என்னைப் பூக்களால் அலங்கரித்து பட்டாடையுடுத்தி தலைக்கு தங்க கிரீடம் வைத்து முன்னால் அலங்கார விளக்குகள் வைத்துப் சுற்றிலும் கண்ணாடி வைத்துப் பூட்டி விட்டனர்.

சுகமான ஒருச் சிறையாகத்தான் எனக்கு அதுத் தோன்றியது. தனியாக இருக்கும் நேரத்தில் அவ்வப்போது அண்ணனின் ஞாபகம் எனக்கு வருவதுண்டு. அப்போதெல்லாம் அண்ணனை இனிமேல் பார்க்கவே முடியாதோ எனத் தோன்றும்.

அந்த ஏக்கத்திற்கும் ஒரு நாள் விடிவு வந்தது.
ஒரு நாள் இரவு பலர் கூடி வந்து என்னை என் கண்ணாடிக் கூண்டிலிருந்து இறக்கி சிறிய மரத்தால் செய்யப்பட்ட பல்லக்கில் ஏற்றினர். நான்குபேர் நான்கு பக்கமிருந்துத் துக்கிக் கொண்டு முன்னேச் செல்ல சுற்றிலும் பலர் தாளக்கருவிகளைத் தட்டியபடி பாடிக்கொண்டு வந்தனர்.
எனக்கு நான் இருந்த கண்ணாடிக் கூண்டிலிருந்து வெளியே வந்ததே புதிதாக இருந்தது. இரவுநேரக் குளிர்ச்சியானக் காற்று என் முகத்தில் மோதியது. உடல் சிலிர்ப்பதாகத் தோன்றியது எனக்கு.
இப்போது ஒரு ஆற்றைக் கடந்து என்னைச் சுமந்துச் சென்றார்கள். சிறிது தூரம் தென்னந்தோப்புகள் வழியாகச் சென்ற பின் தூரத்தில் ஒருக் கல்மண்டபமும் அதன் நடுவே சிறு அறையும் அதைச்சுற்றி விளக்குகளுமாக அந்த இடம் பிரகாசமாக இருந்தது. அங்கேயும் சிலர் அமர்ந்தபடி பாடல்கள் பாடிக்கொண்டிருந்தனர்.

என்னைத் தூக்கிச் சென்றவர்கள் அந்த மண்டபம் இருக்கும் இடத்தை நெருங்கியதும் இருகுழுவினரும் பாடுவதை நிறுத்திவிட்டனர். இவர்கள் இங்கிருந்தபடி அவர்களைப் பார்த்து உற்சாகமாகக் கையசைக்க அவர்களும் அங்கிருந்தபடியே பதிலுக்குக் கையசைத்து வாழ்த்துத் தெரிவித்தனர். இதனால் என்னைத் தூக்கி வந்தவர்கள் சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டனர். அந்த இடைவெளியல் நான் அந்த மண்டபத்தின் உள்ளே இருந்த சிறு அறையை உற்று நோக்கினேன். எனக்கு நன்கு பரிச்சயமானவர் அங்கே ஒளிவெள்ளம் சூழ இருந்தது போல் தோன்றிது. அண்ணனாக இருக்குமோ என்ற சந்தேகம் தோன்றியது.

சந்தேகமே இல்லை அண்ணனே தான்… “அண்ணா … அண்ணா..” என்றுக் கூப்பிட்டேன். தியானத்தில் இருந்த அண்ணன் சட்டென்று கலைந்து என்னை நோக்கிப் புன்னகை புரிவதுப் போல் தோன்றியது. நானும் பதிலுக்குப் புன்னகைத்தேன். அதற்குள் பயணம் துவங்கிவிட்டது. மண்டபம் தாண்டியதும் மறுபடி பாடல்கள் துவங்கியது. திரும்பி வரும் போதும். இதே போன்று இருகுழுக்களும் மரியாதையோடும் பாசத்தோடும் நடந்து கொண்டனர். எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. அண்ணனைப் பார்த்த ஆனந்தம் ஒருபுறம். அண்ணனும் பக்கத்தில் தான் இருக்கிறார் அதோடு அவரைச் சேர்ந்தவர்களும் என்னை வணங்குபவர்களும் மிகுந்த நட்போடு இருக்கின்றனர் எனவே அண்ணனை அடிக்கடிச் சந்திக்கலாம் என்ன ஆறுதல் மனதுக்கு நிறைவாக இருந்தது.

அதன்பிறகு வருடந்தோறும் அண்ணனைப் பார்க்கும் அந்த நாட்களுக்காக நான் காத்திருக்கத் துவங்கினேன். வருடத்தில் மூன்று நான்கு நாட்கள் தான் என்றாலும் அந்த நாட்களில் நான் அடையும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

சிலவருடங்கள் இப்படியே மகிழ்ச்சியாக்க கழிந்தது. ஆனால் அந்த வருடம் என்னவென்றுத் தெரியவில்லை. ஆற்றைக் கடந்து அண்ணன் இருக்கும் ஊருக்குத் திரும்பும் சாலைக்கு அருகில் வந்தனர். வந்தவர்கள் மேலேச் செல்லாமல் நின்று விட்டனர். அண்ணனைச் சந்திக்கும் ஆவலோடிருந்த எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது என்னாயிற்று எனப் பார்த்தேன். கீழே சிறிய வாக்கு வாதம் நடந்து கொண்டிருந்தது என்னைத் தூக்கிவந்தவர்களுக்குள்.

“எல்கைப் பிரச்சனை நடக்குதுடே… அங்க போகவேணாம்…” ஒரு வயதானவர் சொல்லிக்கொண்டிருந்தார்.

“ஏன் போவப்படாது… வருசந்தோறும் போறது தானே …” ஒரு இளைஞன் சத்தமாய்ச் சொன்னான் .. சொன்னான் என்பதை விட இரைந்தான் என்பதே உண்மை.

“லேய் ஏற்கெனவே பிரச்சனைல இருக்கு… இன்னும் எதுக்கு தேவையில்லாதப் பிரச்சனை…” அவர் முடிக்கவில்லை அதற்குள்.

“நம்மாளுவ அங்க இருக்காவளே… அவங்க பாக்கவேணாமா… ஒண்ணும் ஆகாது ஓய்… நாம பாட்டுக்கு போய்ட்டு வந்துடப்போறோம்”
என்று கூறிக்கொண்டு அவன் முன்னால் போக அவனோடு தொடர்ந்து இன்னும் சிலர் போக… என்னைச் சுமந்திருந்தவர்களும் தொடர்ந்து போகவாரம்பித்தனர்.

எனக்கு அண்ணனைப் பார்க்கப் போகும் உற்சாகம் சுத்தமாக வடிந்துவிட்டது. அதற்குப் பதிலாக ஏனோ மனது கலக்கமாகவே இருந்தது.

வழக்கத்திற்கு மாறாக இன்று மண்டபத்திற்கு அருகேச் செல்லும் போது இரண்டு குழுவுமே பாடலை நிறுத்தவில்லை… மாறாக இன்னும் சத்தமாகப் பாடத்துவங்கினர்.

வழக்கமான நட்பு முகமோ… கையசைப்புகளோ எதுவுமே இல்லை… என்னை மரியாதையோடு பக்தியாகப் பார்த்தவர்கள் முகத்தில் ஒருவித பயத்தையும் அருவருப்பையும் உணர்ந்தேன். ஏன் என்பது எனக்குத் தெரியவில்லை.

அண்ணனைப் பார்த்தேன் சாந்தமும் அமைதியும் நிறைந்த அண்ணனின் முகம் கூட கலக்கமடைந்திருப்பதாகத் தோன்றியது எனக்கு.

இவர்கள் ஆளாளுக்குப் பாட்டு பாடுகிறேன் என்று போடும் கூச்சல் என்னால் சகிக்க முடியவில்லை. இதுவரை இவர்கள் பாடல் இனிமையான கீதமாகத்தான் என்காதுகளை வருடும் இன்றோ நாராசமாக இருந்தது. இவர்கள் மட்டுமல்ல அண்ணனைச் சுற்றியிருப்பவர்கள் பாடும் பாடல்களில் கூட பலநேரங்களில் நான் மனம் லயித்து மயங்கியதுண்டு.
இப்பொதோ இருகூட்டமும் பாடுவதாகவேத் தோன்றவில்லை. இசையின் மென்மை இருகுழுவிடமும் இல்லை. கூச்சலிடுவதுப் போல் தோன்றியது. வழக்கமாகக் காணும் மரியாதையோ… பக்தியோ… மனங்கவரும் இசையோ மருந்துக்கும் இல்லை. ஏதோக் காட்டு மிருகங்களின் கூட்டத்திற்கு நடுவே இருப்பதாக உணர்ந்தேன்.

நல்ல வேளையாகச் சற்றுத் தூரம் சென்றதும் இந்தக் கூச்சல் நிறைவுப் பெற்றது. அண்ணனை நினைத்தும் கவலையாக இருந்தது. எப்படித்தான் அந்தக் கூட்டத்தின் கூச்சலைத் தாங்குகிறாரோ என்று.

சிறிது நேரம் தான் என் நிம்மதி மறுபடியும் மண்டபத்தை நெருங்கும் போதுக் கூச்சலிட ஆரம்பித்து விட்டனர். இப்போது மண்டபத்திலிருந்துச் சிலர் வந்து முன்னால் இருந்தவர்களை நிறுத்திப் பேசினர்…
அவர்கள் பேச… இவர்கள் பதிலுக்குப் பேச… சிறிது சிறிதாக வாக்குவாதம் வலுத்தது.

இப்போது மண்டபத்திலிருந்த மற்றவர்களும் வந்துச் சேர்ந்துக் கொள்ள வாக்குவாதம் முற்றிச் சற்று நேரத்தில் கைகலப்பு ஆரம்பித்தது. திடீரென்று கற்கள் இங்குமங்கும் பறந்தன. என்னைத் தாங்கியிருந்தவர்கள் கீழேப் போட்டு விட்டு ஓடினர்.

ஒரு கல் பறந்து வந்து என் முகத்தைத் தாக்கியது. என் தலை உடலிலிருந்து பிரிந்து விழுந்தது. முகத்தில் பாதி பிய்ந்துப் போய்விட்டது.
எங்கும் ஒரே கூச்சலும் அலறலுமாய்… கேட்டுக் கொண்டிருந்தது.

சற்று நேரம் கழித்துச் சத்தமெல்லாம் அடங்கிவிட்டதுப் போல் தோன்றியது. ஏதோப் புயலுக்குப் பின்வரும் அமைதி என்பார்களே அப்படி இருந்தது. ஆனால் அப்போது எனக்குத் தெரியவில்லை அதுப் புயலுக்குப் பின்னால் வரும் அமைதியல்ல அடுத்து வீசவிருக்கும் புயலுக்கு முன்னால் வரும் அமைதி என்பது.

சிறிது நேரத்தில் இன்னுமொரு கூட்டம் மறுபக்கத்திலிருந்து ஓடி வந்தது. என்னைத் தூக்கிப் போகத்தான் வருகின்றனர் எனக் காத்திருந்தேன். வந்தவர்களோ கம்புகளோடும், கட்டைகளோடும் வந்தனர். என்னையும் தாண்டி மண்டபத்தை நோக்கி ஓடினர்.
மண்டபத்தை நோக்கி அவர்கள் போவதைப் பார்த்த என் மனம் திடுக்குண்டது. அய்யோ அண்ணன் என நான் எண்ணுவதற்குள். பெருஞ்சத்தத்துடன் என்னருகே வந்து விழுந்தார் அண்ணன்.

கை கால்கள் இல்லாமல் உடல் சிதைந்தவராக அண்ணன் விழுந்திருந்தார். அவரது தலையும் தனியாகக் கழன்று விழுந்திருந்தது. நல்லவேளையாக எனது முகத்தைப் போல் அவரது முகத்திற்கு எதுவும் ஆகவில்லை. அந்த நிலையிலும் அண்ணன் என்னைப் பார்த்து புன்னகைப் புரிந்துகொண்டே தான் இருந்தார். அவரது முகத்தின் கனிவிலோ பாசத்திலோ எந்த மாறுதலும் இல்லை.

சிறிது நேரத்தில் கூச்சல் குழப்பம் எல்லாம் அடங்கிவிட்டது. வண்டிகள் வந்து நிற்கும் ஓசைக் கேட்டது. இரவு முழுவதும் பூட்ஸ் கால்கள் இங்குமங்கும் ஓடும் ஓசைக் கேட்டுக் கொண்டிருந்தது.

நாங்கள் இருவரும் நிலத்தில் வீழ்ந்தபடியேக் கிடந்தோம். காலம் ஓடியது. மழையும் வெயிலும் மாறி மாறி எங்களை வாட்டியது. எங்களைச் சுற்றிப் புதர் மண்டியது. மழைநீர் அடித்து வந்த மணலால் என் உடலில் பாதி மூடியது. எங்கள் பொலிவும் குறைந்து விட்டது.

இப்போதெல்லாம் மண்டபத்தில் பாடல்கள் எதுவும் கேட்பதில்லை. என்னைச் சுமந்தவர்களும் இந்தப்பக்கம் வருவதாகக் காணோம்.

ஒரு நாள் இரவு நல்ல மழை பெய்தது. மறுநாள் காலையில் சூரியன் சுள்ளென்று எரிந்து கொண்டிருந்தான். எங்களுக்கு அருகில் பேச்சுக்குரல்கள் கேட்டது. உற்றுக் கவனித்ததில் சிறுகுழந்தைகளின் பேச்சும் சிரிப்பும் கலகலப்பாக இருந்தது. பலகாலமாகப் பாடல்கள் கேட்காத என் காதுகளுக்குள் அவர்கள் மழலை தேனாகப் பாய்ந்தது.

என் அருகில் ஒரு குரல்…
“ஏய் இங்கப் பாரு பொம்மை….”

“ஐயே… பொம்மக்க தலை ஒடஞ்சிருக்கு…”

“இந்த பொம்மையும் கை காலு ஒண்ணும் இல்ல…”

“ஒண்ணு செய்யலாம் இரு அந்த பொம்மக்க தலை எடுத்து இந்த பொம்மக்குள்ள வைக்கலாம்… அப்டின்னா சரியாயிரும் பாரு..’

சிறிது நேரத்தில் மணலில் பாதிப் புதைந்து கிடந்த எனது உடலை எடுத்து அண்ணனின் தலையை எனது உடலோடுப் பொருத்தி நேராக நிற்க வைத்தனர்.

“ஹே…ய்………..” உற்சாகக் கூச்சல் கூட்டத்திலிருந்து எழுந்தது. சிலக் குழந்தைகள் பூக்கள் பறித்து வந்து என்னைச் சுற்றிப் பரப்பி அழகு பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது தூரத்திலிருந்து ஒருச் சத்தம் கேட்டது…

“லேய்… பிள்ளையளா… சனியனுவளே எங்கபோய் தொலஞ்சிய… சாப்பிட வாங்க எல்லாரும்…’

“அம்மா இங்க வந்துப் பாருங்க அழகானப் பொம்மை…”

“அங்க என்ன பொம்மை…. அடக் கழுதையளா… லேய் தொடாதுங்கல… அத யாரும் தொடப் புடாது…. போங்கல போங்கல இங்க வரக்கூடாது..
தொட்டாப் பாவம்…கெடச்சுரும் ….. போங்க எல்லாரும்….”

என்னிடமிருந்த உற்சாகம் சட்டென வடிந்தது…

"பாவமெல்லாம் இல்லீங்க…
பெரியவங்க நீங்க எங்கள வைத்து விளையாடுறத விட இந்தக் குழந்தைங்க நல்லாத் தான் விளையாடுறாங்க. எங்களுக்கு இந்தக் குழந்தைகளோட விளையாட்டுப் போதுங்க…"

நான் சத்தமாய்த் தான் சொன்னேன் ஆனால் அதைக் கேட்கத்தான்
அங்கே யாரும் இல்லை….

இளசு
02-08-2008, 11:18 PM
அன்பு செல்வா

மனிதத்தை, இணைந்து வாழும் நல்லிணக்கத்தை வலியுறுத்த வடிக்கப்பட்ட கதைகளில் நான் படித்த மிகச்சிறந்த கதைகளில் ஒன்று இது.

எழும் உன்னத உணர்வுகள் உனக்குச் சொல்கின்றன - நன்றியும் வாழ்த்தும்!

பாரதி
03-08-2008, 01:31 AM
படித்தவுடன் சொல்லத்தோன்றுவது - ரொம்ப நல்லாருக்கு செல்வா..!

மதி
03-08-2008, 02:59 AM
அழகான கற்பனை செல்வா..நினைத்ததை தெளிவாக சொல்லியதில் வென்றிருக்கிறீர்கள்....

வயதாக ஆக..பல நேரம் மனிதம் மதம் பிடித்துத் தான் போகிறது.
வாழ்த்துகள்

சிவா.ஜி
03-08-2008, 04:38 AM
நஞ்சில்லாத பிஞ்சுகளின் நல்லவைகளில் குறைந்த சதவீதமேனும் பெருசுகளுக்கு இருந்தால்...மூளியாகப் போயிருக்காது பொம்மைகளும், நம்பிக்கைகளும். அழகான நடையில் நல்ல கருத்து சொன்ன கதை. செல்வா...கிரேட். வாழ்த்துகள்.

விகடன்
03-08-2008, 06:01 AM
அண்ணன் தம்பி என்று சொல்லி இறுதிவரை அவர்களை பற்றி சொல்லாமலே கதையை முடித்துவிட்டீர்களே...

ஏதோ ஆன்மீகம் என்ற பெயரில் மனித இனம் ஒன்றோடு ஒன்று அடிபட்டு அழிவதை சொல்லிவைத்திருக்கிறீர்கள். (அப்படித்தாங்க எனக்கு புலப்படுகிறது.)
----------------------------------------------------
பொம்மைகளாக உருவம் பெற்றது ஒரு தாய் வயிற்றில் என்று சொல்லி கதையினை ஆரம்பித்ததும் இறுதியில், மழலைகளின் கையில் சொற்ப நேரம் அகப்பட்டதிலுண்டான மகிழ்ச்சியையும் சொல்லி வைத்திட்டமை அருமையே.

எந்த வித பேதமும் எதனிடத்திலும் பார்க்காத குழந்தைகளைப்போல் அனைவரும் இருந்துவிட்டால் இந்த பூமி எல்லோரிற்குமே சொர்ர்க்க பூமி என்று சொல்லிவைத்துவிட்டு சென்றிருக்கிறீர்கள்.

சிந்தனையை தட்டிவிடும் நல்லதோர் கதை. பாராட்டுக்கள் செல்வா.

செல்வா
03-08-2008, 06:43 AM
எழும் உன்னத உணர்வுகள் உனக்குச் சொல்கின்றன - நன்றியும் வாழ்த்தும்!
இரவு இரண்டு மணியாகிவிட்டது. இந்தக்கதையை பதித்து முடிக்கும் போது. முதல் முறையாக கொஞ்சம் விவகாரமான விசயத்தைக் கையாண்டதால் ஒரு கலக்கம் இருந்து கொண்டே இருந்தது. சரியாகச் சொல்லியிருக்கிறேனா... என்ற ஒரு பயம்.

காலையில் வந்துப் பார்த்ததும். கிடைத்த முதல் பின்னூட்டமே முத்தானப் பின்னூட்டம். மிக்க நன்றி அண்ணா....
ரொம்ப மகிழ்ச்சியா இருக்கிறேன்.


படித்தவுடன் சொல்லத்தோன்றுவது - ரொம்ப நல்லாருக்கு செல்வா..!

ரொம்ப நன்றி அண்ணா....


வயதாக ஆக..பல நேரம் மனிதம் மதம் பிடித்துத் தான் போகிறது.
வாழ்த்துகள்
சரியாகச் சொன்னீர்கள். விவிலியத்தில் கூட ஓரிடத்தில் வரும். குழந்தையைப் போல் மாறாதவர்கள் விண்ணரசில் இடம்பிடிக்க முடியாது என்று. குழந்தையைப் போல் என்றால் குழந்தை மனத்தைப் போல்.
வாழ்த்துக்களுக்கு நன்றி மதி.


நஞ்சில்லாத பிஞ்சுகளின் நல்லவைகளில் குறைந்த சதவீதமேனும் பெருசுகளுக்கு இருந்தால்...மூளியாகப் போயிருக்காது பொம்மைகளும், நம்பிக்கைகளும். அழகான நடையில் நல்ல கருத்து சொன்ன கதை. செல்வா...கிரேட். வாழ்த்துகள்.
மொத்தக் கதையையும் மூன்று வரியில் அடக்கி விட்டீர்களே. நன்றி அண்ணா.



எந்த வித பேதமும் எதனிடத்திலும் பார்க்காத குழந்தைகளைப்போல் அனைவரும் இருந்துவிட்டால் இந்த பூமி எல்லோரிற்குமே சொர்ர்க்க பூமி என்று சொல்லிவைத்துவிட்டு சென்றிருக்கிறீர்கள்.
சிந்தனையை தட்டிவிடும் நல்லதோர் கதை. பாராட்டுக்கள் செல்வா.[/COLOR]
சரியாகச் சொன்னீர்கள் விராடன். வாழ்த்துக்களுக்கு மிகுந்த நன்றிகள்.

Keelai Naadaan
17-08-2008, 01:36 AM
ஒரே மண்ணில், ஒரே கரத்தால் வார்க்கப்பட்ட சகோதர சிலைகள்.....அருமையான பார்வை. பாராட்டுக்கள் செல்வா.
கலவரத்தை அழகாய் வர்ணித்திருக்கிறீர்கள். நிச்சயமாய் அந்த சிலைகளுக்கு உயிர் இருந்தால் எத்தனை வருத்தப்பட்டிருக்கும்...!!
மனிதர்களுக்குள் தான் கலவரம். கடவுளர்களுக்கு இல்லை. குழந்தைகளுக்கும் இல்லை. தலையை மாற்றிவைத்து வணங்கவும் அவர்கள் தயார்.
குழந்தைகளுக்குள் பக்தி உண்டு. பெரியவர்களிடத்தில் பக்தியை விட மத உணர்வும், யார் பெரியவன் என்ற உணர்வும் தானே அதிகம்...?
சரியாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
சிறந்த படைப்பு. வாழ்த்துக்கள் செல்வா.

இளசு
17-08-2008, 06:21 AM
பெரியவர்களிடத்தில் பக்தியை விட மத உணர்வும், யார் பெரியவன் என்ற உணர்வும் தானே அதிகம்...?


அவர்கள் பெரியோர்களா?

மனித நல்லிணக்கத்தைக் காலந்தோறும் வெறிக்கோடரி கொண்டு
பிளந்துகொண்டே இருக்கும் இவர்கள் பெரியவர்களா?

செல்வா
17-08-2008, 11:24 AM
ஒரே மண்ணில், ஒரே கரத்தால் வார்க்கப்பட்ட சகோதர சிலைகள்.....அருமையான பார்வை. பாராட்டுக்கள் செல்வா.

நன்றி கீழைநாடன். தங்கள் பாராட்டுக்களுக்கு.

Keelai Naadaan
17-08-2008, 04:06 PM
அவர்கள் பெரியோர்களா?

மனித நல்லிணக்கத்தைக் காலந்தோறும் வெறிக்கோடரி கொண்டு
பிளந்துகொண்டே இருக்கும் இவர்கள் பெரியவர்களா?
இல்லை நண்பரே. அவர்கள் பெரியோர் இல்லை.
ஆனால், வயதில் பெரியவர்கள். அவர்களையும் அப்பா என அன்புடன் அழைக்கும் குழந்தைகள் இருப்பார்கள். அவர்களிடம் இவர்களும் அன்புடன் நடந்து கொள்வார்கள்.

உங்களின் கோபம் நியாயமானது.

மதுரை மைந்தன்
18-08-2008, 11:18 AM
அன்பு செல்வா,

அருமையான உங்களது இந்தக் கதையைப் படித்து மகிழ்ந்தேன் மேலும் எழுதுங்கள். வாழ்த்துக்கள்